கீற்று

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: June 27, 2012
பார்வையிட்டோர்: 9,646 
 

அவர்களை எதிர்பார்த்து இருந்தேன். அந்த நல்ல நாள் இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்கவில்லை. வெள்ளிக்கிழமையன்று எனது வீட்டின் கதவைக் கியூ போலீசார் தட்டினர். ஐயா கூப்பிடுகிறார் என்று ’அன்புடன்’ வெள்ளை வேனில் அள்ளிப்போட்டுப் பறந்தனர்.

நாளும் அதிகரிக்கும் விலையேற்றம், நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க ஆட்சியாளர்கள் பல பாதுகாப்பு வால்வுகளை வைத்துள்ளனர். மக்களைத் திசைத் திருப்ப அரசியல்வாதிகளுக்கு பயன்படும் இந்த வால்வுகளில் ஒன்றுதான் “தீவிர வாதம்”. இந்த வார்த்தையை தங்கள் நலனுக்கு வசதியாக அவரவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். பணமும், பதக்கங்களும், புகழும், பதவி உயர்வுகளும் பெற தினவெடுத்த சில காவல்துறை அதிகாரிகள் துடிப்பார்கள். ஊடகங்களும் தமிழ்நாட்டில் ’தீவிரவாதிகள் பயிற்சிமுகாம்’ என்று பதைபதைத்து ஊகங்களை தங்கள் பங்கிற்கு வாரி அள்ளி விட்டனர்.

வெள்ளை வேன் என்னை சித்ரவதை முகாமில் கொண்டுபோய் சேர்த்தது. காவல்நிலையத்தின் பரந்த மாநாட்டு அறையில் பத்தடிக்கு பத்தடி தள்ளி பதினைந்து தோழர்களுக்குமேல் சுவரைப் பார்த்த வண்ணம் குந்தி வைக்கப்பட்டு இருந்தனர். அந்த இடத்தில் மயான அமைதி நிலவியது. கண்விழிகளை உருட்டினாலும், கழுத்தைத் திருப்பினாலும் லாடங்கள் பதித்த பூட்ஸ் உதைகள் சரமாரியாக விழுந்தன. காவலுக்கு இருந்த பாய்ஸ் கண்கொத்திப் பாம்பாக ’கவனித்து’ உதைத்துக் கொண்டிருந்தனர். என்னை அழைத்துச் சென்றவன் போகிறப்போக்கில் நாலு உதைகள் உதைத்து உட்கார வைத்தான்.. ஒரே பார்வையில் ஓராயிரம் விசயங்கள் புரிந்தன. மாநிலம் எங்கும் இருந்தும் தோழர்களைப் பிடித்து வந்துள்ளனர். ஒருசில நாட்களாக இந்த அடக்குமுறை நடைபெறுகிறது.

சில தோழர்கள் வலியில் முனகிக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் என்னை நான் உறுதிபடுத்திக் கொள்ள மனதளவில் தயார் செய்ய முயன்று கொண்டிருந்தேன். இப்படி அசையாமல் ஒரே இடத்தில் பார்வையை சுவரில் பதித்தபடி உட்காரும் பொழுது சிறிய காலடி சத்தம்கூட மனத்தைத் துணுக்குறச் செய்தது. ஈக்களும், கொசுக்களும் பறக்கும், ரீங்காரமிடும் மெல்லிய சத்தங்கள்கூட பயமுறுத்தின.. இரவு மெல்ல கவிழ்ந்து இருள் பரவியது.

ஜீப் வரும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் சிலரின் உடலை நடுங்கச் செய்வதை என்னால் பார்க்க முடியாவிடினும் உணர முடிந்தது.

ஒரு தோழரை இழுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றனர். தொடர்ந்து . . . அடிஉதைகள் . . . அலறல்கள். எனது உடல் வேர்வையில் நனைந்து சில்லிட்டது. அந்தத் தோழரிடம் விசாரணை முடித்து இழுத்து வந்து போட்டனர். வலியில் முனகியபடி இருந்தார்.

இன்னும் இருவரை அழைத்துச் செல்வதை உணர்ந்தேன். அய்ய்யோ.. அம்ம்மா.. என்ற அலறலுடன் அடி உதைகள் விட்டு விட்டு கேட்டன. சித்ரவதைகளை அனுபவிப்பதைக் காட்டிலும் அதைக் காண்பதும், கேட்பதும் பெரும் மன அழுத்தத்தையும், உளைச்சலையும் தருவித்தன.

என் முறையும் வந்தது. ஏட்டு ஒருவன் அழைத்து சென்றான். “உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே..” என்று அறிவு அறியுறுத்தினாலும் மனத்தின் பயம்தான் வென்றது. அங்கே கண்ட காட்சி ஒருகணம் என்னைத் திகைக்க வைத்தது!
தோழர்களை அரை நிர்வாணமாக்கி அடித்து உதைத்து சித்ரவதை செய்து கொண்டிருந்தனர். உடல் முழுவதும் லட்டி கொம்புகளின் தடயங்களாக, இரத்த விளாறுகளாக இருந்தன.

“டேய், நான் சொல்றத ஒழுங்கா செய்யணும். இரண்டு பேரும் இரண்டு கைகளாலும் ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி கன்னத்துல ஓங்கி ஓங்கி அறையணும். உண்மை சொல்றவரைக்கும் இப்படி அடிச்சிக்கணும்.”

பலவித சித்ரவதைகளையும் ஒருவகையாக சமாளித்த தோழர்களுக்கு இதைக் கேட்டதும் துணுக்குற்றனர். எல்லா உறவுகளுக்கும் எல்லையும், வரையறையும் உண்டு. அதைத் தாண்டும் பொழுது அந்த உறவுகளுக்குள் முரண்கள் தோன்றி பிணக்காக மாறும் வாய்ப்பு உண்டு. தோழமை, தோழர் என்கின்ற உறவு இதையெல்லாம் தாண்டி ஒருபடி மேலானது. அதைத் தான் அந்த அதிகாரி தனது சித்ரவதையின் கச்சாப் பொருளாக இங்கு பயன்படுத்தினான்.

ஒரே கட்சிக் குழுவில் செயல்பட்டு படிப்படியாக வளர்ந்த அவர்களின் தோழமையை, நட்பை வன்முறையால் சிதைத்தான். அந்த மனவேதனையில் அவர்களைத் தன் விருப்பப்படி ஆட்டுவிக்க முடியும் என்று நினைத்தான். தோழர்களின் கண்களில் கண்ணீர் துளிர்த்து தாரையாக வழிந்தன.

“ஆரம்பிங்கடா … இன்னா ஒவ்வொருத்தன பார்த்திட்டு நிக்கிறீங்க .. பாய்ஸ் நீங்க ரெடியா?”

“எஸ் சார்!”

தோழர்களைச் சுற்றிலும் சிறிது இடைவெளி விட்டு அரசாங்கச் செலவிலும், இலஞ்சப் பணத்திலும் முறுக்கேறிய உடல்களை மேலும் முறுக்கேற்றி இந்த கூட்டுக் குரலின் சொந்தக்காரர்களான பாய்ஸ் காட்டினர்.

தங்கள் எதிரிகள் தங்களை சித்ரவதை செய்வதை அவர்கள் உணர்த்து புரிந்து கொள்ள முடிந்தது. தனது தோழனை தானே அடிப்பதை அவர்களால் செரிமானம் செய்ய முடியவில்லை.

ஒருவரை ஒருவர் மெதுவாக கன்னத்தில் அறைந்து கொண்டனர்.

“டேய், பலமா அடிங்கடா!”

பலமாக அடிப்பது போல மெதுவாகத்தான் அறைந்து கொண்டனர். மனம் ஒவ்வாமல் செய்தனர்.

“இன்னாங்கடா.. மாமா மச்சான் விளையாட்டா விளையாடுறீங்க ..? ” என்று கிண்டல் செய்து பாய்ஸ் என்றார்.

அடுத்த நொடியில் பாய்ஸ்களின் இரும்பு லாடங்கள் பதித்த பூட்சுகள் சுற்றிலும் உடலில் எங்கு அடிவிழும் என்று தெரியாத அளவிற்கு உடலெங்கும் மாறி மாறி கண்மண் தெரியாமல் உதைகள் விழுந்தன. தோழர்கள் தடுமாறி விழுந்தாலும் அவர்கள் விடவில்லை. உதைத்த இடங்கள் இரத்த விளாறுகளாய் வீங்கின.

“போதுமாடா.. உண்மைய சொல்லலன்னா மிதிச்சே கொன்னுடுவேன்.”

வேறு வழியின்றி ஒரு தோழர் முதலில் பலமாக இன்னொரு தோழரை அறைந்தார். இன்னொருவரும் பலமாக அறையாமல் தயங்கிக் தயங்கி அடித்தார்.

அந்த போலீஸ்அதிகாரி திரும்பி என்னை கவனிக்கும்படி இன்னொரு அதிகாரிக்கு ஆணையிட்டார். சரமாரியாகப் பாய்ந்த லத்திக் கம்புகள் எனது உடலின் அனைத்து இடங்களையும் பதம் பார்த்தன. அலறித் துடித்தேன்.

என்னிடம் அதிகாரி விசாரணையைத் தொடங்கினார். பெயர், சாதி என்று கேட்டு கொண்டு வந்து எனது இயக்கச் செயல்பாடுகளைக் கேட்டார். நான் பட்டும் படமாலும் பதில் கூறிக் கொண்டு வந்தேன். தலைமறைவாகியுள்ள சில தோழர்களின் பெயரைக் கூறி அவர்களைத் தெரியுமா, அவர்கள் இருப்பிடங்கள் பற்றிக் கேட்டு என்னை நோட்டம் விட்டார்.

எனக்குத் தெரியாது என்று கூறினேன். அந்த அதிகாரி மிகவும் கோபமானான்.

“இவனையும் அவனுங்கக்கூட சேருங்கடா … பாய்ஸ்.”

காட்டுக் கத்தலாகக் கத்தினான்.

“மூணு பேரும் மாறி மாறி அடிச்சிக்கணும்.. வட்டமாய் நின்னுக்கினு அடிச்சிக்க.. எவன் சரியாக அடிக்க வில்லையோ அவனை கவனிகங்க பாய்ஸ்!”

நாங்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி அறைந்தோம். எனது கண்களைப் பார்த்த அந்தத் தோழரின் பார்வையை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை! அந்தக் கண்களில் தெறித்த ஒளிக் கீற்றுகளும், தோழமையும் இன்னும்கூட பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றன. அந்தப் பார்வையை மறக்க முடியுமா? அந்த கண்கள் ஆயிரம் செய்திகளைத் புதைத்து வைத்திருந்தன ..

அலுவலக வேலை இடம் மாற்றலால் அப்பாவுடன் எங்கள் குடும்பமும் இடம் பெயர்த்தது. அந்த இடத்தில் ஒன்றாம் வகுப்பில் புதிய பள்ளியில் இடையில் சேர்க்கப்பட்டேன். என்னைச் சேர்த்து விட்டு அப்பா வேலைக்குப் போய் விட்டார். மதிய உணவுக்கு மணி அடித்தவுடன் மாணவர்கள் அவரவர் சாப்பாட்டுக் கூடைகளை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

அம்மா மதிய உணவு எனக்குக் கொண்டுவர நேரமாகிக் கொண்டிருந்தது. எனக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. பையன்கள் பாத்திரத்தைப் திறந்துச் சாப்பிட ஆரம்பித்தனர். உணவுகளின் வாசனை எனது பசியை இன்னும் அதிகமாக்கியது. எனக்கு அழுகைஅழுகையாக வந்தது. அப்பொழுது ஓர் ஆதரவுக் கரம் என்னைத் தொட்டது. தனது மதிய உணவை அந்தச் சின்னப்பையன் எனக்கும் பகிர்ந்தளித்தான். பிறகு அம்மா உணவு கொண்டு வந்தவுடன் அதையும் புதிய நண்பனுடன் ஜோடிப் போட்டுக் கொண்டு சாப்பிட்டேன்.

இப்படி ஆரம்பித்த எங்கள் நட்பு பள்ளி, கல்லூரி வரை நீண்டது. எங்கும் எங்கள் இருவரையும் சேர்ந்துத் தான் பார்க்க முடிந்தது. படித்து முடித்தும் தொழிற்சாலை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். பல இடங்களில், பல சமூகப் பின்னனிகளில் இருந்து வந்தவர்களை அந்த தொழிற்சாலை “தொழிலாளி” என்றப் ஒற்றை அடையாளத்திற்குள் சமைத்து உட்செரித்துக் கொண்டது. எப்படி பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் பொருட்கள் ஒருங்கிணைந்து பயன்மிகு பண்டமாக மாறுகிறதோ அதன் வழி நாங்கள் அனைவரும் இணையும் புள்ளியாக தொழிற்சங்கம் இருந்தது.

இளம் இரத்தம்! தொழிற்சங்கப் பணிகளில் செயல் ஊக்கத்துடன் செயல்பட்டேன். புதிய உறவுகள் விரிந்தன. புதிய புதிய சிந்தனைகள், தத்துவங்கள் அறிமுகமாயின. தேடுதல்கள் தொடர்ந்தன! தொழிற்சங்கம் கம்யூனிசத்தின் பாலப்பள்ளி என்பது எனக்குப் புரிந்தது. சமூகத்தின் முரண்களை, அதன் இயக்கங்களை நோக்கி எனது கவனம் குவிந்தது. அது என்னை அந்த இயக்கத்துடன் இணைக்க வழி காட்டியது நான் இயக்கத்தில் சேர்ந்தவுடன் அவனையும் அதில் இணைத்தேன். ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டிய அவன் பின் படிப்படியாகப் புரித்து கொண்டு வேகமாக இயக்கப்பணி ஆற்றினான். முழு நேர ஊழியனாக இயக்கத்தில் வளர்ந்தான்.

அவனைத் தான் இன்று இப்பொழுது இந்த சித்ரவதை முகாமில் பார்க்கிறேன். என் பலம்-பலவீனத்தைப் புரிந்த நண்பன்! தோழன்! அவன் என்னை அடிப்பானா? அல்லது நான்தான் அவனை அடிப்பதா? தயக்கமும், மனவேதனையும் மேலோங்கியது. நான் அவனை முதலில் சந்தித்த பொழுதிருந்த அதே பார்வை! பரிவு! தோழமை உணர்வு!

“சார்…. சார்…. இவர் புதியதாக இப்பத்தான் இயக்கத்திற்கு வந்தவர். அவருக்கு ஏதும் தெரியாது” என்று என் தோழன் இழுத்தான்.

அந்த உளவு அதிகாரியின் முகத்தில் எக்காளச் சிரிப்பு தாண்டவம் ஆடியது.

“பாய்ஸ்.. இவனை ரூமுக்கு கூட்டிப் போய் விட்டுடுங்க. அய்யாதான் சீனியர். அவருக்குத்தான் எல்லாமும் தெரியும் போல . . அவரை கவனிப்போம்!”

என்னை மாநாட்டு அறைக்கு அழைத்துச் சென்று சுவரைப் பார்த்த வண்ணம் அமரச் செய்தனர்.
சிறிது நேரத்தில் எழுந்த தோழனின் அலறல் ஒலி என் உடலைத் தூக்கி வாரிப்போட்டது. என் உடல் முழுவதும் நடுக்கம் சில்லிட்டுப் பரவியது. சில மணி நேரம், விட்டு விட்டு அந்த சித்ரவதையின் வலி, அலறல் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்த அலறல் இப்பொழுதும் கூட காதின் அருகில் ஓலிப்பது மாதிரி சில நேரங்களில் கேட்கிறது.

நானும் அவனும் சம காலத்தில் இயக்கத்தில் இணைந்தவர்கள். அவனுக்குத் தெரிந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் எனக்கும் தெரியும். கொஞ்சம் கூட குறைய இருக்கலாம். அவ்வளவு தான்! எனக்கு ஏதுவும் தெரியாது புதியதாக இணைந்தவன் என்று ஏன் என் தோழன் பெரிய பொய்யைச் சொன்னான். உடுக்கை இழந்தவன் கைபோல் அங்கே என்பதா? இன்று வரையிலும் இந்த கேள்விக்கு விடை தெரியவில்லை.

இருள் வடியும் நேரத்தில் இரத்தக் கூளமாக அந்தத் தோழனை அள்ளிக் கொண்டு வந்து கிடத்தினர். நீண்ட நேரம் தெறிக்கும் வலியில் துடித்து, அரற்றிக் கொண்டிருந்தார். அவரின் முகம், உடல் எங்கும் வீங்கி இரத்தக் காயங்களுடன் இருந்தன. அவரைப் பார்த்து கொண்டிருந்த எனது நெஞ்சு வெடித்து விம்மியது.

அந்த இருளிலும் தோழனின் கண்கள் பிரகாசமான ஒளி கீற்றுகளை அள்ளி வீசியது.
அதற்குப் பின்பு ஆண்டுகள் பல கடந்து விட்டன. என்னை மறுவார்ப்பு செய்ய முடியாததால் இயக்கத்திலிருந்து என்னை நானே உதிர்த்துக் கொண்டேன். அலுவலகம், வீடு என்று சுருங்கிப் போன வாழ்க்கையில் அந்தத் தோழனின் நினைவு மட்டும் மனதுக்குள் தங்கியிருந்தது. இப்போது எங்கே இருக்கிறானோ? என்ன ஆனானோ?

அலுவலகத்திற்கு அவசரமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தேன். என்னை முந்திக்கொண்டு பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்றனர். அவர்களை சொகுசுகார் ஒன்று வேகமாக முந்திக்கொண்டு செல்ல முயன்றது. ஒருகணத்தில் விபத்து நடந்தது. இரண்டு இளைஞர்களும் இரத்த வெள்ளத்தில் தூக்கி எறியப்பட்டனர். அதற்குள் இளைஞர்களை சுற்றி கூட்டம் கூடி விட்டது. நான் அந்தக் கூட்டத்திற்குள் செல்லமுயன்றேன். அந்த இளைஞர்கள் உடல் முழுவதும் அடிப்பட்டு இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது.

ஒரு இளைஞன் தன்னை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படிக் கதறிக் துடித்து வலியில் அழுதான். கூட்டம் வேடிக்கை பார்த்ததே ஒழிய உதவவில்லை. கூட்டத்தின் பின்னால் இருந்த ஒருவர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக உதவி செய்தால், சாட்சிக், கோர்ட்டுனு . . நம்மை அலைக்கழிப்பார்கள் என்று முணு முணுப்பது கேட்டது. இந்த கலேபரத்தில் சொகுசுக்கார் முதலாளி நைசாக வண்டியுடன் நழுவப் பார்த்தார். நானும், இன்னொருவரும் அவர் சட்டையை பிடித்து அவர் ஓடிபோய் விடாமல் பார்த்துக் கொண்டோம்.

நொடிகள் நிமிடங்களாய்க் கடந்தன. இன்னும் கும்பல் வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் நின்றது. அப்பொழுது ஒருவர் எல்லாரையும் விலக்கிக் கொண்டு முன்னேறிச் சென்றார். அவர் முன் கையெடுத்தார். இன்னும் சிலரும் அவருடன் இணைந்து கொண்டனார். அடிப்பட்ட இளைஞர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதற்குள் காவல் துறையினர் வந்து விட்டனர். ஒவ்வொருவரும் காவலர்களிடம் நடந்ததைக் கூறிக்கொண்டு இருந்தனர். நான் கார் முதலாளியை காவலரிடம் ஒப்படைத்து விட்டு கிளம்பினேன்.

போகும் வழியில் அந்த மருத்துவமனை இருந்ததால் என்ன ஆயிற்று என்று தெரிந்துக கொள்ளும் ஆர்வத்தில் உள்ளே சென்றேன். அதற்குள் விபத்துக்கு உள்ளானவரின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்து வரவழைத்தார். அந்த இளைஞர்களுக்கு தேவையான முதல் உதவிகளை செய்து கொண்டு இருந்தார். மருத்துவர் இரத்தம் அதிகம் வெளியேறுவதற்குள் விபத்துக்குள்ளானவரைக் கொண்டு வந்ததற்கு அவரிடம் நன்றி பராட்டினார். அங்கு வந்த காவலரிடம் அவர்களை ஒப்படைத்து விட்டு நழுவினார்.

அவரை எங்கோ பார்த்து இருக்கின்றேன். எங்கு என்பது நினைவில் வரவில்லை. அதற்குள் அருகில் வந்த அந்த நபர் என்னை அடையாளம் கண்டு நலம் விசாரித்தார். எனது புருவம் கேள்விக் குறியாய் வளைந்தது. அவர் கண்ணாடியைக் விட்டுச் நேசமுடன் சிரித்தார்.

எனக்கு பகீர் என்றது. இந்த ஆண்டுகளில் அவரின் தோற்றம் கொஞ்சம் மாறிப்போய் இருந்தது மீசையும் இல்லாமல் இருந்ததால் உடனடியாகப் பிடிபடவில்லை. எனது நண்பனை, தோழனை அறிந்து கொண்டதும் துணுக்குற்றேன்.

இரண்டு நாட்களுக்கு முன்புகூட சில தினசரிகளில் அவரது புகைப்படத்துடன் “தலைமறைவாய் இருக்கும் தீவிரவாதி” என்று செய்தி வந்திருந்தது.

சைகைக் காட்டிவிட்டு கூட்டத்துடன் கூட்டமாக சென்று மறைந்தார். அவரின் கண்களும், அவர் சென்ற பாதையும் ஒளிந்துக் கொண்டிருப்பதாக பட்டது .

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *