கச்சிதமாக ஒரு கொலை

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 11,230 
 

ராஜதுரை தீவிரமாக யோசித்தான்.

சீக்கிரம் சந்தானத்தை கொலை செய்துவிட வேண்டும், ஆனால் அதற்கு நன்றாக திட்டமிடல் வேண்டும். மிகுந்த எச்சரிக்கை வேண்டும். மாட்டிக்கொண்டு ஜெயில், கோர்ட், கேஸ் என்று லோல்பட்டு கேவலப்படக் கூடாது. இது புது அனுபவம், முதல் கொலை.

சந்தானத்தை கொலை செய்துவிட்டால் சுளையாக ஒன்பது கோடிகள் கிடைக்கும். சத்தமில்லாமல் ஒதுங்கி விடலாம். இந்தப் பணம் எப்படி வந்தது என்பது பற்றி ராஜதுரைக்கும், சந்தானத்திற்கும் மட்டுமே தெரியும். எனவே போலீஸ் ராஜதுரையை மோப்பம் பிடிக்க முடியாது. இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள், நண்பர்கள் என்பதுவரை கண்டுபிடிக்கலாம். அவ்வளவுதான்.

சந்தானம் மிகவும் நல்லவர். நேர்மையானவர். ராஜதுரையை மிகவும் நம்பி அந்த ஒன்பது கோடிகளை அவனிடம் விட்டு வைத்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் ராஜதுரையின் தூண்டுதலின் பெயரிலேயே அந்த தவறை செய்யத் துணிந்தார்.

தற்போது தன் மகளை பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். வருகிற இருபத்தி நான்காம்தேதி பெங்களூர் திரும்பிவிடுவார். அதைத் தொடர்ந்த ஒரு வாரத்திற்குள் ராஜதுரையிடமிருந்து தன் பங்கான ஒன்பது கோடிகளை வாங்கிச் செல்வதாக சொல்லியிருக்கிறார்.

ஒன்பது கோடியா!? ஒரு ரூபாய்கூட தராமல், அவரைக் கொலை செய்துவிட வேண்டும். கொலை செய்யாமல் அவரை ஏமாற்ற நினைத்தாலும், கண்டிப்பாக போலீசிடம் சென்று உண்மையைச் சொல்லிவிடுவார். எனவே கொலை ஒன்றுதான் தீர்வு.

நடந்தது இதுதான்….

நான்கு வருடங்களுக்கு முன்பு சந்தானம் பெங்களூர் டாட்டா நகரில் தன் வீட்டிற்கு அருகில், மூவாயிரத்து இருநூறு சதுர அடியில் ஒரு நிலம் வாங்கினார். நிலத்தை சென்றமாதம் இரு வேலையாட்கள் மூலமாக அஸ்திவாரம்போட தோண்டிக் கொண்டிருந்தபோது, பெரிதாக ‘டோங்’ என்று கடப்பாரை இடிபடும் சத்தம் கேட்டது. சந்தானம் இடிப்பதை நிறுத்தச்சொன்னார். அது என்னவென்று போய்ப் பார்த்தபோது ஒரு பெரிய பித்தளைப் பானையின் கழுத்து தென்பட்டது.

சந்தானம் அப்பாவியான அந்த இருவரையும் மறுநாள் வரச்சொல்லிவிட்டு, உடனடியாக ராஜதுரைக்கு போன் செய்து, விஷயத்தைச் சொன்னார். ஜெயநகரில் குடியிருக்கும் ராஜதுரை ஆர்வம் உந்த தன் காரில் சந்தானத்தின் வீட்டிற்கு விரைந்து வந்தார். இருவரும் அந்த நிலத்திற்கு சென்று கவனமாக அந்தப் பித்தளைப் பானையை எடுத்து காரின் டிக்கியில் வைத்துமூடி, ராஜதுரையின் வீட்டையடைந்து மெதுவாக திறந்து பார்த்தால்….உள்ளே ஏகப்பட்ட வைரக் கற்களும், வைர மாலைகளும், தங்கக் காசுகளும் இருந்தன.

சந்தானத்திற்கு பயத்தில் உடல் வியர்த்தது.

“எனக்கு பயமா இருக்கு ராஜா, பேசாம அரசாங்கத்துகிட்ட இதை ஒப்படைச்சுடலாம் இப்பவே போலீசுக்கு போன் பண்ணலாம்.”

“டேய் உனக்கு என்ன பைத்தியமா? நல்லவேளை என் வீட்டில் யாரும் இல்லை. எல்லாரும் திருச்சி போயிருக்காங்க…நாளைக்குதான் வருவாங்க.”

“அதுனால?”

“இத பார்றா….இப்பதான் உன் மூத்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி சிங்கப்பூர்ல செட்டில் ஆகியிருக்கா, இன்னமும் இரண்டு பெண்கள் கல்யாணத்துக்கு தயாரா இருக்காங்க. தடபுடலா அந்தக் கல்யாணங்களை நீ நடத்த வேண்டாமா?….பம்பாய்ல எனக்குத் தெரிந்த மிகப்பெரிய வைர, தங்க வியாபாரி சேட்டு ஒருத்தர் இருக்காரு…நம்பிக்கையான ஆளு. அவர்கிட்ட நாம இவைகளை கொஞ்சம் கொஞ்சமா நல்ல விலைக்கு வித்து பணமா மாத்திக்கலாம். இது உன்னோட நகைகள்…நான் வித்து தரதுனால, எனக்கு இருபது உனக்கு எண்பது பர்சென்ட் என்று பணத்தை மொத்தமாக கடைசியில் பிரித்துக் கொள்ளலாம், நீ தைரியமா இரு, சில வைர நகைகளை எடுத்துக்கொண்டு நாளைக்கே நாம் மும்பை போகலாம்.”

இருவரும் அடிக்கடி மும்பை சென்றதில், கடந்த ஒன்பது மாதங்களில் சந்தானத்தின் பங்கு ஒன்பது கோடியாக சேர்ந்துவிட்டது.

அதில் ஒரு ரூபாய்கூட அவரிடம் தருவதற்கு ராஜதுரைக்கு விருப்பமில்லை. அதனால்தான் இந்தக் கொலைத் திட்டம்.

பெங்களூர் விவேக்நகர். நிழலான நடவடிக்கைகளுக்கு பேர்போன இடம்.

மாலை நான்கு மணி. ஆட்டோவிலிருந்து இறங்கிய ராஜதுரை அங்கிருந்த குடிசைகளின் பக்கம் மெல்ல நடந்தான். மீன் குழம்பு வாசனை தூக்கியது. அங்கு நின்றிருந்த சில இளம்வயது பெண்கள் தங்களின் மார்பு விலக ராஜதுரையைப் பார்த்து உதட்டை ஈரப்படுத்தி அழைத்தனர்.

லுங்கி பனியனில் இருந்த ஒரு வஸ்தாது வாயில் பீடியுடன் “என்ன சார்…எதாச்சும் வேணுமா?” என்றான்.

“கொக்கி குமார் வீடு எது?”

“சார் அவரு பெங்களூரை விட்டுப்போய் ரெண்டு வருஷமாச்சு…பரவால்ல எதுவானாலும் என்கிட்ட சொல்லுங்க….நான் கச்சிதமா முடிச்சுத் தரேன், என்ன நீங்க நம்பலாம்.”

இரண்டு பேரும் ஒரு ஆட்டோவில் ஏறி அல்சூர் பேகம்மஹால் எதிரில் உள்ள ஹோட்டலில் இறங்கிக் கொண்டனர்.

உள்ளே சென்று அமர்ந்ததும், ராஜதுரை வாட் 69 விஸ்கி ஆர்டர் செய்தான்.

“உன் பேரென்ன?”

“மல்டி மணிகண்டன்.”

“அது என்ன மல்டி…?”

“நீங்க என்ன வேலை சொன்னாலும் கச்சிதமா முடிப்பேன். ஆள் கடத்துவது, கை, காலை உடைப்பது தொடங்கி கொலைவரை. அது அதுக்கு ரேட்டு மாறும். பல வேலைகள் செய்வதால மல்டி என்று பசங்க செல்லமா சொல்றாங்க.”

இருவருக்கும் இரண்டாவது பெக் வந்தது.

“இதபாரு மல்டி, என்னோட பேரு காண்டீபன்…இங்க எம்ஜி ரோட்ல ஸ்டாண்டர்ட் சார்டர்ட் பாங்க்ல ஒர்க் பண்றேன்.”

விசிட்டிங் கார்ட் எடுத்துக் கொடுத்தான். அதை ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு மணிகண்டன் தன் சட்டைப்பையில் வைத்துக் கொண்டான்.

“டாடா நகர்ல சந்தானம்னு ஒரு வயதான ஆளை கொலை பண்ணனும்…எவ்வளவு கேட்கிற?”

“அவரு வி ஐ பி இல்ல. வயசானவரு வேற….ரேட் கம்மிதான்…ரெண்டு லட்சம் ஆகும்.”

“அவரு தினமும் காலைல ஐந்தரை மணிக்கு வாக்கிங் போகிறவரு…அப்ப முடிச்சிடு.”

“நல்ல ஐடியா…ஜன நடமாட்டம் இருக்காது…நான் ஒருத்தனே பைக்ல போயி தூக்கிருவேன்.”

“சரி நாளைக்கி கரெக்டா பதினோரு மணிக்கு என்னோட பாங்க் வந்து லாபில வெயிட் பண்ணு…நானே லாபிக்கு வரேன்..உனக்கு ஐம்பதாயிரம் கேஷ் அட்வான்ஸ் தரேன். அப்புறம் உன்னை கூட்டிச்சென்று டாட்டா நகரில் உள்ள சந்தானம் வீட்டை காண்பிக்கிறேன்.”

மறுநாள்.

சரியாக பத்தரை மணிக்கே பாங்க் லாபியில் வந்து காத்திருந்தான் மணிகண்டன். பதினோரு மணிக்கு பாங்க் உள்ளேயிருந்து லாபிக்கு வந்தான் ராஜதுரை. மணிகண்டன் அருகில் சென்று அவனை ஒட்டி அமர்ந்தான். தன் பாக்கெட்டில் தயாராக வைத்திருந்த ஐம்பதினாயிரம் ரூபாய்க்கான ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்துக் கொடுத்தான்.

“இத பாரு மல்டி, இது நான் வேலை பாக்கிற இடம். அடிக்கடி நீ இங்கு வருவதோ அல்லது போன் பேசுவதோ வேண்டாம். புரியுதா? சரி வா, சந்தானம் வீட்டைக் காண்பிக்கிறேன்.”

வெளியில் வந்து ஒரு ஆட்டோ பிடித்து சென்றனர். சந்தானம் வீட்டை நன்கு பார்த்துக்கொண்டான் மணிகண்டன்.

“அவரு வர்ற இருபத்தினாலாம் தேதி சிங்கப்பூர்ல இருந்து வராறு. ஒரு வாரத்துல தூக்கிரு. இரண்டாம்தேதி பதினோரு மணிக்கு பாங்க்ல வந்து மிச்ச பணத்த வாங்கிக்க…கண்டிப்பா எனக்கு போன் பண்ணாத. கவனமா செயல்படு. சரியா?”

“இது எனக்கு ரொம்ப சுலபமான வேல…கவலையே படாதீங்க சார். கச்சிதமா முடிச்சிட்டு ரெண்டாம்தேதி நான் வரேன். பணத்தோடு ரெடியா இருங்க.”

இருபத்தியேழாம் தேதி காலை ஆறு மணிக்கு பெங்களூர் குளிரில் தலையில் மப்ளருடன் சந்தானம் வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது மணிகண்டனால் வெட்டி சாய்க்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க இறந்தார்.

மறுநாள் பேப்பரில் பார்த்து அதைத் தெரிந்துகொண்ட ராஜதுரை, ஒன்பதுகோடி வரவிற்காக, ஐம்பதாயிரம் செலவில் ஒரு கொலை நிறைவேற்றப் பட்டதை எண்ணி நிம்மதியடைந்தான்.

இரண்டாம் தேதி.

காலை பத்தரைமணிக்கு வங்கி வந்து காத்திருந்தான் மணிகண்டன். மணி ஒன்றாகியும் காண்டீபன் வரவில்லை. சட்டைப்பையில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்துப் பார்த்தான். அதில் இருந்த வங்கி எண்ணுக்கு மொபைல் மூலமாக அடித்து, “காண்டீபன் ப்ளீஸ்” என்றான். “ஆமா காண்டீபந்தான் பேசுகிறேன்…நீங்க யாரு?” குரல் வித்தியாசமாக இருந்தது.

“சார் நான் மணிகண்டன். உங்களுக்காக லாபியில் காத்திருக்கிறேன்.”

நேர்த்தியான உடையில் ஒருவர் வந்து, “எஸ்…ஐயாம் காண்டீபன். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றார்.

மணிகண்டன் அதிர்ந்தான். விசிட்டிங்கார்டை எடுத்துக் காண்பித்தான்.

“ஆமா இது என்னோட கார்டுதான். இது எப்படி உங்களுக்கு கிடைத்தது? நான் உங்களைப் பார்த்ததுகூட கிடையாதே!”

“சார் இந்த கார்டை ஒருத்தர் எனக்கு தந்து, அவரு பேரு காண்டீபன்னு சொன்னாரு. போனதடவ நான் இங்க வந்தப்ப அவரு பாங்குக்குள்ள இருந்து வந்து என்னயப் பார்த்தாரு.”

“நான் இங்க அசெட்ஸ் மானேஜர். என்னப் பாக்க தினமும் நிறையப்பேரு பாங்க் வருவாங்க. அதுல ஒருத்தரு என் கார்டை உங்ககிட்ட கொடுத்து என்பேரைச் சொல்லி உங்களை எமாத்தியிருக்காரு. பாங்க் விசிட்டர்ஸ் ரூம் உள்ள இருக்கு. அங்கிருந்து வெளிய வந்து லாபில இருந்த உங்களைப் பாத்திருக்காரு. நீங்க அவரு பாங்க்ல வேலை செய்யறாருன்னு நம்பிட்டீங்க போல. உங்கள போக்குகாட்டி ஏமாத்திட்டாரு.”

மணிகண்டனுக்கு அப்போதுதான் தான் சுத்தமாக ஏமாற்றப்பட்டு, தன் மூலமாக ஒரு கொலையும் அரங்கேற்றப்பட்டுள்ள உண்மை உரைத்தது.
இதை வெளியே சொல்லி நியாயம் கேட்கவும் முடியாது.

‘நானே ஒரு தரைடிக்கெட்டு. என்னையே ஒருத்தன்…ச்சே. அந்த நாய எங்க பார்த்தாலும் அவன் தலையைச் சீவ வேண்டும்’ என்று கறுவிக்கொண்டான்.

காண்டீபன் என்கிற பெயரில் மல்டி மணிகண்டனை ஏமாற்றி, சந்தானத்தை சாமர்த்தியமாக கொலைசெய்து ஒன்பதுகோடிகளை சுருட்டிக்கொண்ட ராஜதுரை, தன் புத்திசாலித்தனத்தை எண்ணி தன்னையே மெச்சிக்கொண்டான்.

Print Friendly, PDF & Email

3 thoughts on “கச்சிதமாக ஒரு கொலை

  1. ஸ்டோரி ஐஸ் குட் பட்….அநியாயம் ஜெய்க்கறது தப்பு …. ஷீட் ஸ்டோரி ஜி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *