ஒல்லிக்குச்சி கில்லாடி!

 

அவன் பெயர் பிரவீன் குமார் ஜெயின். வயது 26. அப்படித்தான் அவன் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டான். உண்மையில் அவனைப் பார்த்தால் 16 அல்லது 17-க்கு மேல் மதிக்க மாட்டீர்கள். இங்கு நான் பார்த்தவர்களிலேயே ரொம்பவும் ஒல்லியாக, மிகவும் நேர்த்தியாக உடை அணிந்திருந்தவன் இவன்தான். கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக இங்கே வந்திருக்கிறான்.

அவன் மேல் 6 வழக்குகள் இருந்தன. உள்ளே இருந்த காலத்தில் 3 வழக்குகளில் குற்றத்தை ஒப்புக்கொண்டான். புனையப்பட்ட வழக்குகளில் தான் நிரபராதி என்று வாதிட்டு, பரிசுத்தமாக்கப்பட்டவனாக வெளியே விடப்பட்டான்.

உள்ளே இருந்த 13 மாத காலத்திலும் எனக்குப் பல வேலைகளைச் செய்து வந்தான். ருசியான ஆலு பரோட்டாக்களையும் மசாலா டீயையும் சாப்பிடக் கொடுத்து வைத்தவனாக இருந்தான்.

அவனையும் அவனது இயல்பையும் அறிந்திருந்த நான் அவனுக்கு ‘திருந்தி வாழ்’ என்றெல்லாம் அறிவுரைக்கவில்லை. வெளியே போனதும் என்ன செய்வதாகத் திட்டம் என்று மட்டும் கேட்டேன். அவன் தனது தொழிலை மாற்றிக்கொள்ளப் போவதில்லையாம். ஆனால், இனிமேல் மாட்டிக்கொள்கிற மாதிரி தொழில் செய்ய மாட்டானாம். படு சமர்த்தன். ஆசி அளிப்பதைத் தவிர, நான் வேறு என்ன செய்ய முடியும்? 2 வருடங்களாக அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. ஒரு நாள் உள்ளூர் செய்தித்தாளில் அந்த விஷயம் வெளியாகி இருந்ததைப் பார்த்தேன். திருமண மண்டபத்தில் திருடப் போய் கையும் களவுமாகப் பிடிபட்டிருந்தான். போலீஸ் போட்ட போடில் மேலும் 6 குற்றங்களை ஒப்புக் கொண்டான். திருடிய நகைகளை என்ன செய்தான் என்பதையும் சொல்லிவிட்டான்.

பிரவீன் மேல் 19 வழக்குகளைப் போட்டுத் தீட்டிவிட்டார்கள். பிறகு ஒரு சமயம் உண்மையைச் சொல்ல முன்வந்தபோது வழக்குகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்றான். எது எப்படியோ? ஆளற்ற தீவில் தனியாளாக மாட்டிக் கொண்ட ராபின்சன் குரூசோவுக்கு எல்லா வகைகளிலும் உதவியாக இருந்த வெள்ளி என்பவனைப் போல் எனக்கு இந்த பிரவீன் வாய்த்திருந்தான்.

நான் எழுதிக்கொண்டு இருக்கும்போது எனக்குப் பின்னால் வந்து நின்றுகொள்வான். நான் ஆங்கிலத்தில் எழுதுவதில் சிலவற்றை மொழிபெயர்த்துச் சொல்லுமாறு ஆவலாகக் கேட்பான். அவன் திருமண மண்டப ஸ்பெஷலிஸ்ட். ஜெயின் மற்றும் மார்வாடி கல்யாணங்கள்தான் அவனது இலக்கு. பந்தாவாக உடை அணிந்து கொண்டு பெண் வீடா, மாப்பிள்ளை வீடா என்று எவரும் சந்தேகப்படாதபடி கூட்டத்தில் புகுந்துவிடுவான். கண்ணுக்குத் தெரியாத ஆவி போல எங்கும் நுழைந்து தேட்டை போடுவான். காவல் துறை இப்போதுதான் கைரேகைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதில் தீவிரம் காட்டத் தொடங்கி இருந்ததால் பழைய வழக்குகளிலும் இவனைத் தொடர்புபடுத்தியது. சிறைக்குள் நிற்க நேரமில்லாமல் சுற்றிக்கொண்டு இருப்பான் பிரவீன்.

அவன் எனக்கு உணவு பரிமாறுகிறபோது கவனித்திருக்கிறேன். எப்படி இவ்வளவு ஒல்லியாக இருக்கிறான் என்று ஆச்சர்யப்பட்டுக் கேட்டிருக்கிறேன். அப்போதுதான் அவன் அந்த உண்மையைச் சொன்னான். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை போலீஸூக்கும் தெரியுமாம். ஒல்லிப்பிச்சானாக இருப்பதால் பூட்டப்பட்ட கை விலங்கு அப்படியே இருக்க… இவன் நழுவிவிடுவானாம். கையில் மாட்டினால் கழற்றிக்கொள்கிறான் என்பதாலேயே அவனது கணுக்காலிலும் ஒரு தளையைப் பூட்டி வைப்பார்களாம். ஒரு நாள் நீதிமன்றத்தில் இருந்து அவன் திரும்பி வந்தபோது அவனது கண்களில் கண்ணீர் திரண்டிருந்ததைக் கவனித்தேன்.

மறுநாள் என்னிடம் வந்தான். ஒரு கான்ஸ்டபிளிடம் இருந்து என்கவுன்டர் ஒன்றில் அவனைத் தீர்த்துக் கட்டச் சதி நடப்பதாகத் தெரிந்துகொண்டானாம். பெரும்பாலும் திருட்டு வழக்கில் சிக்குபவர்களை என்கவுன்டரில் போட்டுத்தள்ளும் வழக்கம் இல்லை. ஆனால், இவன் ஒரு முக்கியப் புள்ளியின் வீட்டில் கை வைத்துவிட்ட விஷயம் இப்போதுதான் போலீஸூக்குத் தெரியுமாம். அந்த வழக்குக்கான வாரன்ட் எப்போது வருகிறதோ அப்போதே அவனை போலீஸ் இழுத்துக் கொண்டு போய்ச் சுட்டுத்தள்ளிவிடும்.

3 நாட்கள் ஆயிற்று. பெங்களூரு நீதிமன்றத்தில் இருந்து அவனுக்கு ஒரு வாரன்ட் வந்து சேர்ந்தது. நேரில் ஆஜராக வேண்டும். விலங்குகளிலிருந்து நழுவிவிடுபவன் என்று பாவம், கன்னட காவல் துறையினருக்குத் தெரியாது. விலங்கு பூட்டி அழைத்துக்கொண்டு போகும் வழியில் நழுவிவிட்டான்.

எனக்கென்னவோ பிரவீன்தான் தான் சென்னையில் இருக்கும் விவரத்தை பெங்களூரு போலீஸூக்குத் தெரிவித்திருப்பான் என்று தோன்றுகிறது!

- 14-01-09 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)