அஞ்சலி அய் லவ் யூ…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்  
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 27,897 
 

நான் ஏன் திருடக் கூடாது?

வேறு வழி இல்லாமல் எனக்கு அந்த எண்ணம் தோணுச்சு.

கேட்கறதுக்கு அதிர்ச்சியா இருக்கும். ஆனா உங்களுக்கும் என்ன மாதிரி அழகான காதலி இருந்தால் அதுதான் தோணும்.

இந்த உலகம் அநியாயங்க. ஒரு பக்கம் நினைச்சுப் பார்க்க முடியாத அளவிற்குத் துட்டு வச்சுருக்கானுங்க. இன்னொரு பக்கம் என்ன மாதிரி அன்னக் காவடிங்க. ஒவ்வொரு நாளும் வாழ்க்கைய நடத்துவதற்குள்ள டங்குவார் அறுந்து போவுது.

உண்மையிலே நம்மள ஒருத்தர் படைச்சிருந்தா ஏன் இவ்வளவு வித்தியாசம் வச்சிருக்கணும்?இப்படி சொல்லிட்டேன்னத்‌ தவிர எனக்குக் கடவுள் பக்தி ஜாஸ்திங்க. இல்லன்னா என்ன மாதிரி ஒரு ஆளுக்கு அம்புட்டு அழகுல ஒரு பொண்ணு மாட்டி இருக்குமா?

அத பத்தி பேசினாலே எனக்கு ஜிவ்வுனு உடம்பில ரத்தம் பாய்துங்க. தக்காளிப் பழம் மாதிரி செக்கச் செவேல்னு இருக்கும். கண்ணு ரெண்டும் கருப்பு திராட்சை மாதிரி அலைமோதும். நானும் முருகேசனும் குட்டி கடையில நின்னு டீ குடிச்சுக் கொண்டு இருப்போம். அது தூரத்தில நடந்து வரும்போதே எனக்குத் தெரியும். நாங்க இருக்குற பக்கந்தான்‌ வரும். கொஞ்சம் கூட என்ன பாக்காது.

ஆனா, எங்களைத் தாண்டி அஞ்சடி போனவுடனே அப்படியே புறா மாதிரி கழுத்த வளச்சி ஒரு லுக்கு விடும் பாருங்க. கூடவே தன்னோட புருவங்களைத் தூக்கி பட்டுனு விடும். “என்ன விஷயம், சொல்லு?” அப்படின்னு கேக்குற மாதிரி இருக்கும். நான் அத்தோட செத்தேன். ஏதாவது பேசணும்னு நினைப்பேன். அதுக்குள்ள கழுத்தைத் திருப்பிகிட்டு போயிடும். இதெல்லாம் மொத்தமே ஒரு சில வினாடிகள் தான் நடக்கும். அப்படி ஒரு கிக். கொஞ்ச நேரம் ஆன பிறகுதான் நார்மலுக்கு வருவேன்.‌

அட அது பேரை சொல்வலியே உங்க கிட்ட, அஞ்சலி.

“அட என்ன மாமு அது அஞ்சலி, ஆறெலின்னு” முருகேசன்.

“ஊத்தை வாயை மூடுடா” என்று சத்தம் போட்டேன் .

முருகேசும் நானும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா வளர்ந்தோம். ஒன்னாவே ஸ்கூலுக்கு போனோம் . அதே மாதிரி ஒன்னாவே பாதியிலேயே படிப்பை நிறுத்திக்கிட்டோம். இப்ப நாங்க ரெண்டு பேரும் பிரைவேட்டா எலக்ட்ரிக் வேல செய்யறோம். கடையெல்லாம் கிடையாது. ஏதாவது வேலை இருந்தா செல்போன்ல கூப்பிடுவாங்க, இல்லன்னா இங்க கடைங்கள்ல சொல்லுவாங்க. சமயத்துல நல்ல சில்லறையா மாட்டும். இல்லன்னா டீ கடையில அக்கவுண்ட் தான்.

அஞ்சலிய பத்தி முருகேசுதான் முதன் முதல்ல எனக்குச் சொன்னான். மச்சான் நம்ம ஏரியால செம ஃபிகரு வந்திருக்கு, ஸ்டெல்லா மேரிஸ்ல படிக்குதுன்னு.

மறுநாள் காலையில் டீ கடையில நிக்கும்போது அவளைப் பார்க்கிற வரைக்கும் முருகேசு சொன்னத நான் பெருசா எடுத்துக்கல. பார்த்தவுடனே ஆடிப்போயிட்டேன். அடேயப்பா. கொள்ளை அழகு. நல்லா நெடுநெடுன்னு வளர்த்நி. புசுபுசுன்னு அலை அலையா முடி. கழுத்து சங்கு மாதிரி. சரி போதும். இதுக்கு மேல என் ஆளப்பத்தி நீங்க தெரிஞ்சுகிறது நல்லா இல்ல.

அஞ்சலி ஸ்டெல்லா மேரிஸ்ல படிக்கறதா முருகேசு சொன்னான்னு சொன்னேன் இல்ல. அது பொய். ஒருநாள் பஸ்ல கூடப் போனோம். ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் பஸ் ஸ்டாண்டிலதான் இறங்குச்சு. ஆனால் காலேஜ்க்கு உள்ளே போகாமல் தாண்டி பக்கத்துல ஒரு சந்துல உள்ள போச்சு. எங்கடா போதுன்னு பின்னாலேயே போனோம். உள்ளே போய் பிள்ளையார் கோயிலாண்ட லெப்டில திரும்பி மூனாவது பில்டிங்ல படி ஏறி இரண்டாவது மாடிக்கு போச்சு. என்னடான்னு பாத்தா அது டெய்லரிங் சொல்லிக் கொடுக்கிற இடம். வாரத்துல நாலு நாள் அங்க வந்து படிச்சுது.

“மச்சான் என்னடா காலேஜ் படிக்கிறான்ன?”

“எனக்கு என்னடா மாமே தெரியும். பஸ் ஸ்டாப்புல இறங்கினத வச்சி காலேஜின்னேன்”.

எனக்கு ஒரு விதத்தில் நிம்மதியா இருந்தது. என்ன மாதிரி எட்டாங்கிளாஸ்க்கு காலேஜ்ல்லாம் செட் ஆகுமா?

அவ கிளாஸ் முடிச்சுட்டு வர வரைக்கும் பக்கத்துல டீக்கடையில் டீ, சிகரெட், பிஸ்கட்ன்னு‌ நேரத்தை ஓட்டினோம். டீக்கடையில மாட்டியிருந்த ரசம் போன அழுக்கு கண்ணாடியில் அப்பப்பா என் தலை முடியச் சரி பண்ணிக்கிட்டேன்.

பன்னிரண்டே முக்கால் மணிக்கு கிளாஸ் முடிச்சிட்டு இறங்கி வந்துச்சு. எங்கள கவனிச்சா மாதிரியே தெரியல. அது பாட்டுக்கு நடந்து போச்சு. நாங்க கொஞ்சம் இடைவெளிவிட்டு ஃபாலோ பண்ணோம். பஸ் ஸ்டாப்ல தள்ளி பின்னால நின்னுக்கிட்டோம். திரும்பிப் பார்க்கிற மாதிரி தெரியல. முருகேசு அப்பப்ப சத்தமா பேசி கவனத்தைத் திருப்ப முயற்சித்தான்.

பஸ் வந்தது. ஏறப் போகும்போது ‌ கழுத்த என் பக்கமா வளச்சி ‌ சிரிச்சா. சிலிர்த்துப் போச்சு.

காலையில அவளைப் பார்க்கிறது, பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போய் வழி அனுப்பறது என தினசரி வழக்கமாயிடுச்சி.

முருகேசு அஞ்சலியோட செல்போன் நம்பர கேளுடான்னு‌ சொன்னான். கேட்கறதுக்கு எனக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. நல்ல வேலயா எனக்கு அந்த சிரமம் கொடுக்காமல் அவளே தந்துவிட்டாள்.

ஒரு நாள் காலை டீ கடையில நின்னுகிட்டு இருந்த போது,

நேராக என்னிடத்தில் வந்து,

“ஹலோ. நீங்கதான் எலக்ட்ரிஷன் பெருமாளா?”

எனக்குப் பதிலே வரல. ஒரே கூச்சமா ஆயிடுச்சு

“ஆ…மா..” என்றேன். காற்றுதான் வந்தது.

“எங்க வீட்டுல கொஞ்சம் எலக்ட்ரிக் வேலை இருக்குது. செய்ய முடியுமா?”

“ம். சரி”.

“சாயந்திரமா வாங்க.

செல்போன் நம்பர் தரீங்களா?”

வானத்துல இருக்கிற நிலாவ நாம எப்படிடா தொடரறதுன்னு யோசிக்கும்போது நிலாவே இறங்கி வந்து நம்ம கைய புடிச்சு கூட்டிட்டு போற மாதிரி இருந்தது.

இதுக்கு அப்புறம், தினம் மூணு வேளை ‌போன் பண்ணறதும் அடிக்கடி ‘என்ன பண்ற’ அப்படின்னு மெசேஜ் அனுப்பறதும் ரெண்டு பேருக்கும் வாடிக்கையாச்சு.

எனக்கு அது மேல எக்கச்சக்கமா லவ் ஆயிடுச்சு. எப்ப பார்த்தாலும் எனக்கு அது நெனப்பு தான். எங்க அம்மா கூட அப்பப்ப திட்டும். என்னடா வரவர உன் போக்கே சரியில்லன்னு.

முருகேசு தான் அப்பப்போ கேப்பான்,

“மாமே இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே ஒட்டிக்கின்னு இருக்கப் போறா ?”

“என்னடா பண்ண சொல்ற?”

“எங்கேயாவது கூட்டிட்டு போடா?”

“எங்கடா போகறது?”

“சினிமா, மால், பீச் பார்க்ன்னு எவ்வளவு இடம் இருக்கு

ஒருநாள் தயங்கித் தயங்கி கேட்டேன் ..

“எங்கேயாவது போலாமா?”

“எதுக்கு?”

“சும்மா உட்கார்ந்து பேசறதுக்கு தான்”.

“எங்க வீட்டுக்கு வாங்க.”

“உங்க அம்மா இருக்காங்களே?”

“அவங்க பாட்டுக்கு உள்ள இருக்கப் போறாங்க. நாம ஹால்ல உட்க்கார்ந்து பேசலாமே”‌.

எனக்கு என்ன பதில் சொல்லறதுன்னு தெரியல. இருந்தாலும் சரின்னு சொல்லிவிட்டேன்.

முருகேசு தலையில் அடிச்சுகிட்டான்.

இப்போ என்னோடத் தினசரி அட்டவணையில அவ வீட்டுக்கு போற வேலையும் சேர்த்துக்கிட்டேன்.

என்ன பொறுத்த வரைக்கும் அஞ்சலிய தினமும் பார்க்கிறது, பேசுறது, போன்ல மெசேஜ் அனுப்புறது இதுவே சந்தோஷமா இருந்தது. ஆன முருகேசுக்கு இது எதுவும் சரிப்பட்டு வரல.

“மாமே இப்படியே போச்சுன்னா லவ் செட் ஆகாது. ஒரு நாள் உடைஞ்சிடும்”.

“நான் அப்படியெல்லாம் நடக்காது. எங்களது தெய்வீக காதல்”ன்னு‌ வாதாடினேன்.

யோசிச்சுப் பார்த்தா அவன் சொன்ன மாதிரி இன்னும் ஃபுல்லா செட்டாவாத மாதிரி தான் தோணுச்சு.

“மச்சான் இப்ப நான் என்ன பண்ணட்டும்?”

“அடுத்த தடவை அவ வீட்டுக்கு போகும்போது கட்டிப்புடிச்சு அய் லவ் யூ அஞ்சலின்னு சொல்லிடு”.

எனக்கென்னமோ அது ஒரு விபரீதமான யோசனையா தோணுச்சு.

“நான் அப்படி ஏதாவது பண்ணப் போய், அதுக்கப்புறம் இனிமே என்ன பாக்காதீங்க, பேசாதீங்கன்னு சொல்லிட்டா என்னடா பண்றது?”

“மன்னிச்சுக்கோ. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டேன். நான் உன்னை சீரியஸா உயிருக்குயிரா லவ் பண்றேன். இனிமே இந்த மாதிரி நடக்காது ரொம்ப சாரி சாரின்னு கண்ல தண்ணியோட மன்னிப்பு கேட்டுடு”.

முருகேசு சொல்ற மாதிரி செய்யறதா வேண்டாமான்னு‌ யோசனை இருந்துச்சு. சரி வாய்ப்பு கிடைச்சா செஞ்சி பார்ப்போமே என்ற துணிச்சல் வந்தது.

கூடிய சீக்கிரமே எனக்கு அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தது.

ஒரு நாள் அஞ்சலி கிட்ட இருந்து ஒரு போன் வந்தது. அவள் குரல்ல ஒரு பதட்டம்.

‌”கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா? உன்கிட்ட பேசணும்” என்றாள்.

எனக்கு ஒரு பக்கம் உற்சாகமும் இன்னொரு பக்கம் என்னவா இருக்கும் அப்படிங்கற ஆவலும் கூடிடுச்சு.

வீட்டுக்குள் நுழைந்தவுடன் அவள் என்னை நெருங்கி வந்தாள்.

எனக்கு என்னமோ ஆயிடுச்சு. உடம்புல மூலை முடுக்கெல்லாம் ரத்தம் ஜிவ்வென பாய்ந்தது. கட்டிப் பிடித்து விடலாமா என்று யோசித்தேன்.

அவள் இன்னும் நெருங்கி அருகில் வந்தாள். குறைஞ்ச இடைவெளி. பெண் வாசம் புதிது எனக்கு. அவ்வளவு நெருக்கத்திலே இதுவரைக்கும் பொம்பிளை பிள்ளைங்களோட இருந்ததில்லை

அவளை அணைக்க கைகளை கொண்டு செல்ல,

“பெருமாள் அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ணா தான் காப்பாத்த முடியும்னு டாக்டர் சொல்லிட்டாரு. 25 ஆயிரம் ரூபாய் ஆகுமாம். உன்கிட்ட இருக்குமா” என்றாள்.

அதிக சூடான இரும்பு கம்பியைப் பச்சை தண்ணில முக்கினால் சூடு புஸ்ன்னு ஆவியாக போகுமே அதேமாதிரி எல்லாம் போச்சு.

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தேன்.

இன்னும் நெருக்கமாக அவன் அருகே வந்தாள். கிட்டத்தட்ட என்னை ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளது சூடான மூச்சுக்காற்றை உணர்ந்தேன். என் சட்டை பட்டனை பிடித்துக்கொண்டு “அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க வலியில” என்று சொல்லிக்கொண்டே அதைச் சுற்றிக் கொண்டே இருந்தாள்.

“அம்மாக்கு என்ன?”

“அவங்களுக்கு வயித்துள்ள கட்டி.”

முருகேசிடம் நடந்ததை சொன்னபோது,

“25 ஆயிரம் ரூபாய்க்கு எங்கடா போறது? வேலை கொடுக்கிறவன்கூட நம்மள நம்பி அய்நூறு ரூபா அட்வான்ஸ் தர மாட்டேங்குறான்”.

“மச்சான் எதாவது வழி சொல்லுடா”.

“உன் லவ்வு ரொம்ப காஸ்ட்லிடா. பேசாம அவள மறந்துட்டு வேற ஆள பாரு”.

“அடி செருப்பால நாயி. உருப்படியா வழி சொல்லுடான்னா”.

“மாமே இந்த ஊர்ல எவனும் நம்மள நம்பி காசு கொடுக்க மாட்டான்”.

“என்ன பண்றது?”

“ஒன்னும் பண்ண முடியாது. எங்கேயாவது போய் திருடினா தான் கிடைக்கும்”.

அவன் வேடிக்கைக்காகச் சொன்னானா இல்லை சீரியசாக சொன்னானா என்று எனக்குத் தெரியாது. அஞ்சலியை எப்படியாது அடையணும்கிற நோக்கத்தில இருந்த நான், முருகேசு சொன்னதை சீரியஸாக எடுத்துக் கொண்டேன்.

நான் ஏன் திருடக் கூடாது?

நான் தீர்மானித்தவுடன் முருகேஷ் கிட்ட சொன்னேன்.

“டேய் பெருமாளு பைத்தியமாடா நீ”.

“ஆமாண்டா. அவ மேல ஒரு பைத்தியம் ஆயிட்டேன். அவ கேட்டத செய்யலைன்னா என் மேல அவ வச்சிருக்கற நம்பிக்கை போயிடும்டா”. இதைச் சொல்லும்போது அவள் என்னிடம் நெருங்கி நின்றது அந்த கணநேர உடலின் உரசல் நினைவுக்கு வந்து என்னை ஏதோ செய்தது.

அடுத்த இரண்டு நாட்கள் இதைப் பற்றியே பேசி ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டோம்..

அடையார்ல மெயின் ரோட்டில இருந்து உள்ள போறச் சாலையில் இரண்டாவது குறுக்கு தெருவுல அமைந்திருக்கிற அந்த வங்கி சரியான இடம் என்று நான் சொன்னேன். கிளை சிறியதானாலும் பெரும் செல்வந்தர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி.

காலை 11 மணிக்கு ஆளரவமற்ற இடம். வங்கிக்குள் சென்று புதிய கணக்கு தொடங்க வேண்டும் என்கிற சாக்கில் உள்ளே சென்று அங்கே எத்தனை பேர் இருக்கிறார்கள், சிசிடிவி கேமரா எங்கெங்கு பொருத்தப்பட்டுள்ளது என்று முருகேசு நோட்டமிட்டான். வங்கியின் நீண்ட முன்பகுதி, பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த கவுண்டர்கள். அவர்களுக்கு அந்தப்பக்கம் இருந்த கொஞ்ச இடம் என மொத்தமாக எல்லா இடங்களையும் கண்காணிக்கும் வகையில் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது.

வங்கி ஊழியர்கள் 4 பேர் இருந்தார்கள். வங்கிக்கு வெளியே காவலாளி ஒருவன் இருந்தான். அவனும் அவ்வப்போது உள்ளே செல்வதும் ஊழியர்களுக்கு ஏதாவது சிறு உதவி செய்வதுமாக இருந்தான். வாசலில் மேலே ஒரு கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆக வங்கிக்குள் அல்லது வங்கிக்கு வெளியே 50 மீட்டர் வரை குற்றம் நிகழ்த்தினால் முகம் பதிந்து விடும்.

நான்கு நாட்களாக முழுவதுமாக ஆராய்ந்தோம். வங்கிக்கு யார், எப்படிப்பட்டவர்கள், எப்படி வருகிறார்கள் , என்கிற விவரங்களைச் சேகரித்தோம்.. வங்கி வாசலில் கார் நிறுத்தும் வசதி இல்லாததால் பெரும்பான்மையானவர்கள் அங்கே இறங்கிக் கொண்டு டிரைவரை வேறு இடத்தில் பார்க் செய்ய அனுப்பி விடுகின்றனர். தானே ஓட்டி வருபவர்கள் சாலையிலே ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி வங்கிக்கு நடக்கின்றனர். வங்கியில் வாடிக்கையாளர்களின் வருகை காலை பத்திலிருந்து பதினொன்று வரை அதிகமாக இருந்தது. சுமாராக 10 நிமிடத்திற்கு ஒருவர் என வந்தார்கள். 11 மணிக்கு பிறகு கூட்டம் இல்லை. சராசரியாக 25 நிமிடத்திற்கு ஒருவர் எனக் கணக்கிட்டேன். ஆக 11 மணியிலிருந்து 11.30 வரை தக்க தருணம் என்று முடிவு செய்தோம். அந்த நேரத்தில் இரண்டு மூன்று பேர் வந்து பணம் எடுத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். ஒருவர் இளைஞர். ஒருவர் வயதானவர். இன்னொருவர் பெண்மணி.

குறிப்பிட்ட நாளில் அந்த வயதானவரோ அல்லது அந்த பெண்மணியோ வந்தால் அவர்களை மடக்கி பணத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடிவிடலாம் என்று முடிவு செய்தோம்.

அந்த நாள் வந்தது. ஏதோ வழக்கம்போல எலெக்ட்ரிக்கல் வேலைக்குச் செல்வது போலச் சென்றோம். டீ கடை குட்டியோட மோட்டார் சைக்கிள கடன் வாங்கிட்டு வந்தோம்.

எதற்கும் இருக்கட்டும் என்று முருகேஷ் கத்தி ஒன்றை எடுத்து வந்தான்.

“இது எதுக்குடா” என்றேன்

“இருக்கட்டும்டா. கைல பொருள் இருக்கிறது நல்லது. ஏதாவது மாட்டினாகூட இத காட்டிட்டு தப்பிச்சுக்கலாம்”.

எனக்குச் சிரிப்பு வந்தது.

“மச்சான் ப்ரொபஷனல் மாதிரி ஆயிட்டோம்டா நாம்”.

“எத செஞ்சாலும் ஒழுங்கா செய்யணும் டா”.

அப்போது அந்த கார் வந்து தெருவிலே நின்றது. நாங்கள் எதிர்பார்த்த அந்த முதியவர் இறங்கினார். வங்கி இருந்த தெருவிலேயேே திரும்பி நடந்து சென்றார். ஒல்லியாக உயரமாக இருந்தார்.

“ஈஸியான டார்கெட்” என்றான் முருகேசு.

“அது சரி இவரு பணம் எடுக்க வந்திருக்காரா இல்லை பணம் கட்ட வந்தருக்காரான்னு எப்படித் தெரியும் ?” என்று கேட்டேன்.

“நான் அதெல்லாம் கவனிச்சிட்டேன். பார்த்த ரெண்டு தடவையும் பணம் எடுக்கத்தான் வந்தார். மேலும், பணம் கட்டப் போறாருன்னா சீக்கிரம் வந்துடுவாரு. பணம் எடுக்கறார்னா பத்து நிமிஷம் ஆகும். ஏன்ன இந்த பாங்குல ஆபீஸர் கையெழுத்துப் போடணும். அதுமட்டுமில்லாம நடந்து போறத கவனி. சாதாரணமாக போறாரு. எந்தவிதமான பதட்டமும் தெரியல”.

முதலில் முருகேசு போய் அவர் மீது இடித்து விட்டு சாரி சொல்லுவான். அவரது கவனம் திரும்பும்போது நான் அந்த கவரை பிடுங்கிக் கொண்டு ஓடி பைக்க எடுக்கணும். முருகேசு அவரை தாக்கிட்டு ஓடி வந்து வண்டியில ஏறிப்பான். வண்டி பின்னால நம்பர் பிளேட்டில் டெம்பரரியா ஒரு கர்சிப் கட்டிடனும். மெயின் ரோடுக்கு போகும் போது அதை அவுத்துடனும். இதுதான் எங்கத் திட்டம்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து அவர் திரும்பி வந்தார். வலது கையிலிருந்த பிரவுன் பேப்பர் கட்டு. பணம் தான் என்று உறுதி செய்தது.

முருகேசு போய் அவர் மீது இடித்தான்.

“டேய் கவனிச்சு வரமாட்டியா” என்று கோபமாக கத்தினார்.

“சாரி சார்” என்றான்

நான் பண கவரை பிடுங்க அருகில் சென்றபோது காலை தூக்கி என் வயிற்றில் ஓங்கி ஒரு உதை உதைத்தார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் நிலைகுலைந்து கீழே விழப் போனேன்.

எதிர்பார்த்ததைவிடக் கொஞ்சம் பலசாலியாக இருந்தாரு. தன் கையிலிருந்த பணக் கவரை பத்திரமாக பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டு, ரெண்டு கையால் முருகேசன பிடிச்சு அப்படியே ஒரு திருப்பு திருப்பி பின்பக்கத்திலிருந்து கிடுக்குப்பிடி போட்டு கழுத்தை இருக்கி அமுக்கினார். முருகேசு டோட்டலா லாக் ஆய்ட்டான். எப்படியாவது திமிறிக்கொண்டு வெளியே வரணும்னு பார்த்தான். முடியலை. முருகேசு தப்பிக்க வழியே இல்லை. இதற்கிடையில் அவர் “ஹெல்ப் ஹெல்ப்” என்று கத்தினார்.

இப்போது எங்களுக்குப் பயம் வந்துடுச்சு. முருகேசு என்னை பார்த்து

“பெருமாளு பெருமாளு சீக்கிரம் வா. என் இடுப்பிலிருந்து பொருள எடு” என்று கத்தினான்.

வேகமாகச் சென்று அவன் இடுப்பிலிருந்த கத்தியை எடுத்தேன்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தேன்.

முருகேசு “ஓங்கி குத்துற மாதிரி காட்டுடா” என்று கத்தினான்.

நானும் குத்துவது போல வேகமா கையை ஓங்கினேன்.

எதிர்பார்த்தது போலவே பெரிசு பதட்டம் ஆயிடுச்சு. பிடி தளர்ந்தது‌. அந்த சிறிய இடைவெளியில் முருகேசு தன்னை விடுவித்துக் கொண்டான். அவரது காலை இடறி விட்டான். அவர் தடுமாறி முன் பக்கமாக என்னை நோக்கிச் சரியத் தொடங்கினார். குத்துவது போல கைய முன்னால் வேகமா கொண்டுபோன நான் இதை எதிர்பார்க்கவில்லை. அந்த ஏழு இன்ச் கத்தி எந்த வித சிரமமும் இன்றி அவருடைய மார்பின் இதய பகுதிக்குள் சர்ரென்று இலகுவாக நுழைந்தது. முதலில் ஒரு துளி ரத்தம் தெறித்து என் முன்னங்கையில் விழுந்தது. ஒரு நொடி இடைவெளிவிட்டு மெதுவாகக் ‌கசியத் தொடங்கி பிறகு குபுகுபுவென கொட்டத் தொடங்கியது. அவர் அப்படியே கீழே விழுந்தார்.

“என்னடா குத்திட்ட.? சும்மா பயங்காட்றான்னு தானே சொன்னேன்”

“டேய் எல்லாமே கண்ட்ரோல் இல்லாம ஃபாஸ்டா நடந்துடுச்சிடா”.

“சரி சரி வா முதல்ல இங்கிருந்து கிளம்பலாம்”.

மோட்டார் சைக்கிளை அவன்தான் ஓட்டினான்.

“முருகேசு அந்த ஆளுக்கு ஒன்னும் ஆகியிருக்காது இல்ல”.

“ஒன்னும் ஆகி இருக்காது ஹாஸ்பிடல் போய்ட்டு கால் அவர்ல வீட்டுக்கு போயிடுவான் பாரு”.

“டேய் பணத்தையும் எடுக்காமல் வந்துட்டேன்டா”.

“ஆஹாஹா‌. மாமு அய்யா உஷாருடா”.

“என்னடா சொல்ற?”

“ஷர்ட்ட தூக்கி பாருடா”.

இடுப்பில் அந்த பிரவுன் கவர் கவர்ச்சியாய் சிரித்தது.

குட்டி கடைய தாண்டும்போது,

“ஏடா முருகேசு வண்டி வேணும்டா”.

“குட்டி இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடறோம்”.

அஞ்சலி வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் அவங்க அம்மாவுக்கு ஆப்ரேஷன்னு ஆஸ்பத்திரிக்குப் போய் இருக்காங்க என்று சொன்னாங்க.

“உன் ஆளுக்கு போன் பண்ணுடா. பணம் அரேஞ்ச் பண்ணிட்டேன்னு சொல்லு”.

அஞ்சலிக்கு போன் பண்ணேன். நாட் ரீச்சபிள் என்று வந்தது.

வண்டியை குட்டிகடைல விட்டுட்டு ஆளுக்கொரு டீ சாப்பிட, முருகேசு சிகரெட் பத்த வச்சி கிட்டு,

“அவளுக்கு திரும்ப ட்ரை பண்ணுடா”.

மீண்டும் நாட் ரீச்சபிள்.

“இப்ப என்னடா பண்ணலாம்?”

“தெரியல நீயே சொல்லு மச்சான். பயமா இருக்குடா. அந்த ஆளு செத்துகித்துப் போய் இருப்பானா?”.

“ஒன்னும் ஆயிருக்காது. நாம

ஊர்ல இருக்கறது நல்லதல்ல. அரியலூரு போயிடலாம். அங்க கொஞ்ச நாளு மறைஞ்சு இருக்கலாம்”.

எக்மோர் இரயிலடி. பல்லவன் எக்ஸ்பிரஸ் பிடிக்கக் காத்திருந்தனர்

ட்ரெயின் இன்னும் வரவில்லை. அஞ்சலிக்கு பல முறை முயற்சித்தும் நாட் ரீச்சபிள் என்றே வந்தது. இருவரும் ஒதுக்குப் புறமாய் இருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டனர்.

இன்ஸ்பெக்டர் முத்தமிழ் புதிதாக ஒரு வாரத்துக்கு முன்னால் அடையார் ஸ்டேஷனுக்குவந்தவர். பெரிதாக இதுவரை கேஸ் எதுவும் சிக்கவில்லை. வந்ததெல்லாம் ரெண்டு பிக்பாக்கெட், ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு, ஒரு ஈவ் டீசிங் என எல்லாம் சொத்தை.

சலிப்போடு அன்றைய தினத்தந்தியை மூன்றாவது முறையாக எடுத்துப் புரட்டத் தொடங்கினார்.

தொலைபேசி அழைத்தது.

அடையாரில் இரண்டாவது அவின்யூவில் முதல் குறுக்குத் தெருவில் வங்கி ஒன்றின் அருகில் யாரோ ஒருவரைக் கத்தியால் குத்தி விட்டார்களாம்.

முத்தமிழ் சிலிர்த்துக் கொண்டு எழுந்தார். விரைந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த போது சிறு கூட்டம் சேர்ந்து இருந்தது. எல்லோரையும் விலக்கிவிட்டு அருகில் சென்று பார்த்தபோது அந்த பெரியவர் மல்லாக்க விழுந்து கிடந்தார். உடலில் இனி ஒரு சொட்டு கூட இல்லை என்பதுபோல அவரைச்சுற்றி ரத்தம் குட்டை போல் தேங்கி இருந்தது. ஈக்கள் மும்முரமாக மொய்த்துக் கொண்டிருந்தன. இதயப் பகுதியில் அந்தக் கத்தி அட்டென்ஷனில் நின்றிருந்தது ஆம்புலன்ஸ் தடயத் துறை, போட்டோகிராபர் மோப்ப நாய் என்று அந்த இடம் கூடுதல் பரபரப்பு ஆனது.

மோப்ப நாய்களில் ஒன்று இங்குமங்கும் ஊர்ந்து கொண்டு செல்ல இன்னொன்று விளக்குக் கம்பத்தில் வேறு எதையோ தேடியது.

அந்தப் பகுதி இணை ஆணையர் ஜீப்பில் வந்து இறங்கினார். முத்தமிழ் சல்யூட் அடித்தார்.

“என்னாச்சு? ஆளு இருக்காரா ?”

“செத்துட்டாரா சார்.எ கிளியர் கேஸ் ஆஃப் மர்டர் ஃபார் கெயின்”.

“யாரு முதல்ல தகவல் சொன்னது?”

“பேங்கில் இருந்துதான் சார் போன். 40 ஆயிரம் ரூபாய் வித்ரா பண்ணிகட்டு ஒரு பிரவுன் கலர் பேப்பர்ல சுத்தி எடுத்துகிட்டு வெளியே வந்திருக்கிறார். காருக்கு போம்போது யாரோ ஸ்னாட்ச் பண்ணிருக்காங்க. தடுக்க பாத்திருக்காரு. கத்தியில் குத்தி இருக்காங்க”.

“சஸ்பெக்டஸ யாராவது பார்த்திருக்காங்களா?”

“இதுவரைக்கும் ரிப்போர்ட் ஆகலைங்க சார்”

“ஓ அப்படியா. நீங்க அடையாறுக்கு புதுசு இல்ல?”

“ஆமாங்க சார்”.

“குட். சீக்கிரமா சஸ்பெக்ட்ஸ அரெஸ்ட் பண்ணுங்க”.

“எஸ் சார்”.

முத்தமிழுக்கு மொத்தமே ஒரு மணி நேரத்தான்‌ தேவைப்பட்டது குற்றவாளி யோட முகத்தை தெரிஞ்சுக்க.

வங்கிக்குள் சென்றார். ஊழியர்கள் பதட்டத்தோடு நின்று கொண்டிருந்தார்கள். அந்த வங்கியின் மேனேஜர் நடுத்தர வயது பெண். இளமை இன்னும் மிச்சமிருந்தது.

“மேடம் உங்களுடைய ஒத்துழைப்பு தேவை”.

“எஸ் சார். சொல்லுங்க சார்”.

“இவர் யாருங்கற விவரத்தை முதல்ல சொல்லுங்க. இன்னைக்கு காலையில இங்க யாராவது சந்தேகப்படும் படியாக அதாவது புதிய வாடிக்கையாளர் போல வந்தாங்களா?”

“இல்லைங்க சார்”.

இதற்குள் ஒரு ஊழியர் அந்த பெரியவரின் விவரங்களைக் கொண்டுவந்து கொடுத்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கான சிசிடிவி ஃபுட்டேஜ்களின் பதிவுகளை வாங்கிக் கொண்டார். கான்ஸ்டபிளிடம் கொடுத்து ஆராயச் சொன்னார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னால் ஒரு இளைஞன் உள்ளே நுழைவதும் இங்கும் அங்கும் கேமராக்களை பார்ப்பதும், கவுண்டரில் போய் ஏதோ பேசுவதும் பிறகு மொத்த இடத்தையும் கண்களால் அளவெடுப்பதையும் ‌ வெளியே வரும்போது வாசலில் நிமிர்ந்து கேமராவை பார்ப்பதும் விசுக்கென்று நடந்து செல்வதும் பதிவாகியிருந்தது.

அவன் படத்தை நாலஞ்சு பிரிண்ட் போட்டு வாங்கிக் கொண்டார்.

வங்கி காவலாளியை அழைத்து “இவன பார்த்த ஞாபகம் இருக்குதா?” என்றார்.

காவலாளி யோசித்தார்.

“ரெண்டு நாளைக்கு முன்னால் இங்கே வந்திருக்கான்”.

“ஆங் ஞாபகம் வந்துச்சுங்க. ரெண்டு பேருங்க. ஒருத்தன் அங்கியே நின்னுகிட்டு இருந்தான்” என்று அந்த சந்தின் முனையைக் காட்டினார்.

முத்தமிழின் வேலை எளிதாக்கி விட்டது. அந்த இளைஞனின் படத்தின் பிரதிகளை 2 கான்ஸ்டபிளகடம் கொடுத்து பக்கத்தில் இருக்கிற கடையில, ஆட்டோ ஸ்டாண்ட்ல விசாரிக்கச் சொன்னார். கண்ட்ரோல் ரூமுக்கு படத்தை அனுப்பி, அனைத்து காவல் நிலையங்களுக்கும், பீட்ல இருக்குற எல்லா போலீஸ்காரர்களுக்கும் அனுப்பி அலர்ட் செய்யச் சொன்னார்.

மதுரையிலிருந்து வந்த வைகை எக்மோர் ஸ்டேஷனுக்குள் கம்பீரமாக நுழைந்தது. அரை மணி நேரத்திற்குள் பல்லவனாக மாறி திருச்சிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தது‌.

அஞ்சலிக்கு மீண்டும் முயற்சித்தேன்.

இந்த முறை, முதல் ரிங்லேயே எடுத்துடுச்சி.

“எங்க போன நீ? ரெண்டு மூணு நாளா உன்ன காண்டாக்ட் பண்ணா எடுக்கவே இல்லையே”.

“உனக்கு பணம் அரேஞ்ச் பண்ணிட்டு இருந்தேன்”.

“பணம் எனக்கு வேண்டாம் பெருமாளு”.

“ஏன்?”

“எனக்கு பணம் கிடைச்சிடுச்சு.”

“எப்படி?”

“எங்க ஓனர் பையன் கிட்ட கேட்டேன்”.

“ம்”.

“உடனே அவங்க அப்பா கிட்ட வாங்கி கொடுத்தூட்டான்”.‌

“அவன் ஏன் உனக்கு தரணும்?” எரிச்சலுடன் கேட்டேன்.

“அவன் உன்ன மாதிரியே என் ஃபிரண்டு பெருமாள்”.

எக்மோர் ஸ்டேஷனில் பீட்டிலிருந்த போலீசார் கண்களில் ஒரு பெஞ்ச் மீது உட்கார்ந்திருந்த முருகேசும் பெருமாளும் தென்பட்டனர். அவர்களை நோக்கி நடந்து வந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *