Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

22 வயது

 

ஒரு நிமிடம் கழிந்திருந்தால் அவன் அந்தச் சிக்கலில் இருந்து தப்பியிருக்கலாம். இது அவனுடைய முதல் வேலை. இன்னும் இரண்டு நாட்களில் அவனுக்கு 22வது வயது பிறக்கிறது. வேலையில் சேர்ந்த ஒரு வருடத்தில் அலுவலகத்தில் அவன் ஓடம்போல மிதந்துகொண்டிருந்தான். யாரும் எவரும் எதற்கும் எப்பவும் அவனை உபயோகித்துக்கொள்ளலாம். அவனுக்கு ஒதுக்கப்பட்ட அடைப்புக்குள் இருந்து யன்னல் வழியே பார்த்தால் ரொறொன்ரோவின் சிஎன் கோபுரம் தெரியும். துக்கமான சமயங்களில் அப்படி பார்ப்பான். அவனுடைய அன்றைய துக்கம் வெள்ளிக்கிழமை விடுப்பு எடுப்பது எப்படி என்பதுதான். அவனுடைய 22வது பிறந்த நாளை நண்பர்களுடன் கழிப்பதாக அவன் வாக்கு கொடுத்திருந்தான்.

அவன் மின்தூக்கி வாசலை அணுகவும் அவனுடைய கம்பனி தலைவர் மின்தூக்கியிலிருந்து வெளியேறவும் சரியாக இருந்தது. அவனுடைய தோளைப்பிடித்து தன்னுடைய அலுவலக அறைக்கு அழைத்துப் போனார். பிரம்மாண்டமான மேசை, பிரம்மாண்டமான கம்பளம், பிரம்மாண்டமான திரைச்சீலை. மேசையில் வட்டமாக ஒளிவீசும் பாரமான விளக்கு. இருபது வருடங்களுக்கு பின்னர் அப்படியான ஓர் அறையிலிருந்து வேலை பார்க்கவேண்டும் என்பதுதான் அவனுடைய வாழ்க்கை லட்சியம். தலைவர் அவனுக்கு பெரிய உபகாரம் செய்வதுபோல மெல்லிய சிரிப்போடு அவனிடம் பொறுப்பான ஒரு வேலையை ஒப்படைப்பதாகச் சொன்னார். உண்மையில் அது ஒரு தூதுவனின் பணிதான், அதுவும் கொஞ்சம் அதிகம். ஒரு சேவகன் என்றும் சொல்லலாம். அரசர் காலம் என்றால் ஒரு புறாவின் வேலை. பிரச்சினை என்னவென்றால் அவனுடைய பிறந்த தினம் ஏற்கனவே அவனை நோக்கி தன் பயணத்தை தொடங்கிவிட்டதுதான்.

பெய்ஜிங் விமானநிலையத்தில் போய் இறங்கியதும் அட்லாண்டிக் சமுத்திரதிற்கு மேல் பறந்தபோது ஏதோ ஒரு தருணத்தில் அவன் வயது 21 இலிருந்து 22க்கு மாறிவிட்டது ஞாபகத்துக்கு வந்தது. அது ஒருவருக்கும் தெரியாது. பக்கத்து இருக்கை நடுத்தரவயதுப் பெண்மணிகூட அறியவில்லை. ஒரு வாழ்த்தும் இல்லை. வரவேற்பில், நீளமான கறுப்பு ஓவர்கோட் அணிந்த ஒருத்தர் அவனுடைய பெயர் எழுதிய அட்டையை தூக்கி பிடித்துக்கொண்டு காத்து நின்றார். முதல் பார்வையில் அது ஒரு பெண் என்பது அவனுக்கு தெரியவில்லை. ஹலோ என்று சொன்னான். வரவேற்க வந்த பெண்ணுக்கு அவனாகவே அவளைக் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி. மெல்லிசாக சிரித்துக்கொண்டு வியர்வையில் ஈரமான கையை நீட்டி கைகொடுத்தாள். அவன் சந்திக்க வந்த நிறுவனம் எப்படியோ தேடிப்பிடித்து ஒரு சொல்கூட ஆங்கிலம் பேசாத சீனப்பெண்ணை அவனுக்கு சாரதியாக நியமித்திருந்தார்கள். அவன் என்ன சொன்னாலும் அந்தப் பெண் சத்தம் எழுப்பாமல் எல்லா பற்களையும் காட்டி ஒரு சிரிப்பு சிரித்தாள். அதுதான் பதில். காரில் இரண்டு மணிநேரப் பயணம். அந்தச் சிரிப்பை தவிர சாரதியின் வாயிலிருந்து வேறு ஒரு சத்தமும் கிளம்பவில்லை.

சீனாவில் எங்கே பார்த்தாலும் ஆளை வசீகரிக்கும் விளம்பரங்கள் காணப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு விளம்பர உலகமாகவே அது மாறிக்கொண்டு வந்தது. நவீன ஆடையலங்காரங்கள், காலணிகள், ஆபரணங்கள், கார்கள், டிவிக்கள், கம்புயூட்டர்கள் என்று சகலதுக்கும் விளம்பரம்தான். சீன ஆண்களும், பெண்களும் இந்த விளம்பரங்களில் தோன்றவில்லை. வெள்ளைக்கார ஆண்களும், பெண்களும்தான் காணப்பட்டார்கள். வெள்ளைக்காரத் தம்பதிகள் ஒரு பொருளை பாவிக்கிறார்கள் என்றால்தான் அது விற்பனையாகும் போலும். ஆகவே சீனா முழுக்க பொன்கூந்தல் வெள்ளைக்காரிகள் கூந்தலை விரித்தும் சிரித்தும் விளம்பரத் தட்டிகளை நிறைத்தார்கள்.

கார் வேகம் பிடித்து ஓடியது. அந்தப் பெண் மிகவும் அனுபவப்பட்ட சாரதிபோல லாவகமாகவே காரை ஓட்டினாள். மூன்று நாலு மைல் கடந்ததும் காருக்குள்ளிருந்து ‘கிர்ர்க் கிர்ர்க்’ என்று ஒரு சத்தம் எழுந்தது. சுற்றுமுற்றும் பார்த்தான், ஒன்றுமில்லை. திடீரென்று சத்தம் நின்று இரண்டு நிமிட அமைதிக்கு பிறகு மீண்டும் கிர்ர்க் கிர்ர்க் என்ற சத்தம் கேட்டது. இப்படியே சத்தம் நிற்பதும் தொடங்குவதுமாக இரண்டு மணிநேர பயணத்தை இம்சையாக்கியது. காரிலே ஏதோ பழுது என்று அவன் நினைத்துக்கொண்டான். சாரதியை கேட்டால் அவளுக்கு பதில் தெரிந்திருக்கும். ஆனால் அதை எந்த மொழியில் அவளிடம் கேட்பது?

அன்று அவன் முக்கியமாக சந்தித்தது கம்பனி நிர்வாகிகளை. அதற்கு கர்ஸன் லீ என்பவர் உதவியாக இருந்தார். அவரே மற்றச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். அவர்களுடைய அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் இருந்ததனால் சாரதிப்பெண் அங்கேயெல்லாம் அவனை அழைத்துச் சென்றாள். கூடவே கிர்ர்க் கிர்ர்க் சத்தமும் விடாமல் துரத்தியது. இரவு களைத்துப்போய் ஹொட்டலுக்கு வந்து உணவருந்தியபோது அந்த சாரதிப் பெண்ணை நினைத்துக்கொண்டான். அழுக்கு மேலங்கியை அணிந்தபடி ஒரு சின்னச் சிரிப்புடன் அவள் தன் கடமையை செய்தாலும் அந்தச் சத்தத்தை நினைத்தபோது அவனுக்கு கிலி பிடித்தது. அடுத்தநாள் மேலும் சிலரை மரியாதைக்காக அவன் சந்தித்தாகவேண்டும். அவர்களுடைய முகவரிகளை ஏற்கனவே சாரதிப் பெண்ணிடம் கொடுத்திருந்தான். காலை நல்லாக அமையவேண்டும் என மனதுக்குள் வேண்டிக்கொண்டு கணினியை திறந்து தலைவருக்கு அன்றைய அறிக்கையை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு படுத்து தூங்கினான்.

மறுநாள் சாரதிப்பெண் சொன்ன நேரத்துக்கு வந்தாள். காரிலே பிரயாணம் செய்தபோது மறுபடியும் கிர்ர்க் கிர்ர்க் சத்தம் எழும்பி அவனுக்கு எரிச்சலை உண்டுபண்ணியது. அந்த மர்மத்தை எப்படியும் துலக்கவேண்டும் என்று நினைத்தான். பெரிய அதிகாரியை சந்தித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று அதை பத்திரப்படுத்திவிட்டான். லீயை தன்னுடன் மதிய உணவு அருந்தும்படி அழைத்தபோது அவர் ஒப்புக்கொண்டார். உயர்தரமான உணவகத்துக்குச் சென்று உணவுக்கு ஆணை கொடுத்தார்கள். அவனுக்கும் சேர்த்து லீ உணவை ஓடர் பண்ணியதும் அல்லாமல் ‘அதைச் சாப்பிடுங்கள், இதைச் சாப்பிடுங்கள்’ என்று வேறு உபசாரம் செய்தார்.

பரிசாரகன் முன்னே வர, சாரதிப்பெண் தயக்கமாக பின்னே வந்தாள். தன் மொழியில் லீயிடம் என்னவோ சொன்னாள். லீ அதை மொழிபெயர்த்தார். அவளுக்கு பத்து நிமிடம் அவகாசம் வேண்டுமாம், மதியம் சாப்பிடவில்லை என்கிறாள். அவனுக்கு பெரிய அவமானமாகிவிட்டது. அந்தப் பெண்ணை பற்றிய நினைப்பே இல்லாமல் அவன் தன்னுடைய மதிய உணவை முடித்தது குற்றமாகப் பட்டது. அந்த அநீதியை சரிக்கட்டும் விதத்தில் அவளையும் உண்பதற்கு அழைத்தான். அவள் மறுப்பு சொல்வாள் என்று எதிர்பார்த்தான். மாறாக அந்தப் பெண் உடனே சம்மதித்து நீண்ட மேசையின் ஓரத்தில் அமர்ந்து தனக்கு வேண்டிய உணவு வகைகளுக்கு ஆணை கொடுத்தாள்.

லீ கைப்பெட்டியை தூக்கிக்கொண்டு விடைபெற்று போய்விட்டார். இப்பொழுது எதிர்பாராத ஒரு விபத்தாக அவனும் அவளும் மட்டுமே அங்கே இருந்தார்கள். அவன் உணவை முடித்துவிட்டாலும் அதே மேசையில் அதே நாற்காலியில் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான். சாரதிப்பெண் குச்சிகளினால் விளையாட்டுப்போல உணவை அள்ளி உண்டவள் பாதியில் எழுந்து மேலங்கியை கழற்றினாள். அப்பொழுது அவனுக்கு கிடைத்த அதிர்ச்சி அவனுடைய 22 வயது வாழ்க்கையில் முன்னோருபோதும் கிடைக்காதது. அவள் மெல்லிய புகைபோன்ற ஆடை அணிந்திருந்தாள். பளபளவென்று மினுங்கிய மென்மயிர் தெரியும் கைகள். அவளுடைய ஆடை இடையில் ஒட்டிச் சுருங்கி, தொடையிலே பிரிந்து, சட்டென்று கீழே அருவிபோல விழுந்தது. சிறிய மார்புகள். ஓர் அழுக்கு மேலங்கி இப்படி துரோகமான காரியம் செய்ததை நினைத்து ஆச்சரியப்பட்டான். அது அவள்தானா என்பதை உறுதிசெய்வதுபோல அவள் முகத்தை மீண்டும் பார்த்தான். அவள் பேரழகி. அவனுக்கு வயது 22.

வழுவழுப்பான முழங்கால்கள் தெரிய கால்களை மடித்து நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தாள். நீண்ட குதிச் சப்பாத்துகளில் ஒன்றைக் கழற்றிவிட்டு மற்றதை நீட்டியிருந்த காலில் அணிந்திருந்தாள். தேர்ந்த இசை நடத்துனர் குச்சி பிடிப்பதுபோல கைகளில் உணவுக் குச்சிகளைப் பிடித்திருந்தாள். அவன் மனதுக்குள் என்னவோ பொங்கி வெளியே வரமுயன்றுகொண்டிருந்தது. சும்மா இருந்த இருதயம் நோவு எடுக்கத் தொடங்கியது. அவனுடைய கண்கள் திடீரென்று இவ்வளவு பெரிதாகியதைப் பார்த்து அந்தப் பெண் சற்று தடுமாறினாள். உணவை எடுக்காமல் வாய்க்கு கிட்ட வெறும் குச்சிகளைப் பிடித்துக்கொண்டு இவனை நோக்கி என்ன என்பதுபோல பார்த்தாள். அந்த தருணத்தை சமாளிக்க அவன் கைகளினால் ‘அவள் அழகாயிருக்கிறாள்’ என்றான். பெண்ணுக்கு அது புரிந்துவிட்டது. பலபேர் அவளிடம் அதைச் சொல்லியிருக்கலாம். நெஞ்சிலே கைவைத்து குனிந்து நன்றி என்றாள்.
‘உனக்கு மணமாகிவிட்டதா?’ என்று கேட்டான்.
அவள் இல்லை என்றாள்.
‘காதலன்?’
‘இல்லை.’
‘ஏன்?’ என்று கேட்டான்.
பழுப்பு கண்களை கொஞ்சம் கீழே நிறுத்தி அவள் மெல்லிய சிரிப்பு சிரித்தாள். ‘என்னை ஒருவரும் விரும்பவில்லை.’

சீனப்பெண் வேகமாகச் சாப்பிடுவதுகூட பார்ப்பதற்கு அழகுதான். இரண்டு குச்சிகளை வைத்துக்கொண்டு சிந்தாமல் இத்தனை உணவு வகைகளிலும் ஒன்றை ஒழுங்காக தெரிவு செய்து வாய்க்குள் லாவகமாக வைத்தபடி அந்தப் பெண் இவனை பார்த்தாள். அவளுடைய தலைமுடி தோள்களுடன் நின்றுவிடும்படி வெட்டப்பட்டிருந்தது. அவள் அழகு ஒவ்வொரு நிமிடமும் கற்பனை செய்யமுடியாத விதமாக கூடிக்கொண்டே போனது.

அவள் இனிப்பு பதார்த்தத்தை ருசிக்க ஆரம்பித்ததும், தான் அமர்ந்திருக்கும் முறையை மாற்றினாள். ஒருகாலைத் தூக்கி மற்றக்காலை குறுக்காக வெட்டிப்போட்டு இருக்கையில் பின்னால் சாய்ந்து அமர்ந்து கிண்ணத்தில் இருந்த இனிப்புடன் விளையாடிக்கொண்டு, அன்று முழுக்க அவளுக்கு நேரம் இருப்பதுபோல, சாவதானமாக உண்ண ஆரம்பித்தாள். அவள் தொடைகள் வெட்டிய இடத்தில் முக்கோணமாக வெண்மை நிறைந்திருந்தது. அவனால் கண்களை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. அவை மீண்டும் மீண்டும் அங்கே போய் அதே இடத்தில் நின்றன. அவன் உடம்பு முழுவதும் இச்சை நிறைந்துவிட்டது. அவனே ஆச்சரியப்படும்படி, ஆரோ சொல்லித் தந்ததை செய்வதுபோல ‘நீ தேவலோகத்துப் பெண்போல இருக்கிறாய்’ என்று சைகையில் சொன்னான். அவள் சிரித்துவிட்டு ‘நீ பொய் சொல்கிறாய்’ என்றாள். ஒரு சின்னக் கரண்டியால் இனிப்பை குட்டி குட்டியாக வெட்டி சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். இவன் மறுபடியும் சைகையால் அவள் சாப்பிடுவது அவனுக்கும் வேண்டும் என்றான். அவள் எழுந்தாள். அவளுடைய கால்கள் ஓவர்கோட் இல்லாமல் நீண்டு தெரிந்தன. கழற்றிவிட்ட நீண்ட குதிச் சப்பாத்தை கால்களால் தேடி அணிந்துகொண்டாள். கரண்டியால் தான் சாப்பிட்ட இனிப்புவகையை அள்ளிக்கொண்டு ஓர் உலக சாதனைக்கு புறப்பட்டதுபோல மேசையை ஆகக்கூடியதூரமாக சுற்றி வந்து அவனுக்கு முன்னால் நின்றாள். அவன் தன்னுடைய 22 வயது வாயை திறக்க அவள் கரண்டியால் ஊட்டிவிட்டாள். மறுபடியும் ஒன்றுமே நடக்காததுபோல அவள் நடந்துபோய் தன் ஆசனத்தில் அமர்ந்தாள்.

அவன் நினைத்ததிலும் பார்க்க கூடிய ஆச்சரியம் அடைந்தான். மொழி இல்லாமல் ஒரு பெண்ணுடன் பழகுவது எத்தனை சுலபம். ஒருவித தயக்கமும் இல்லாமல் பேசவும் முடிந்தது. உண்மையில் மொழி ஒரு தடைதான். அதன் உச்சத்தை உடனேயே பரிசோதிப்பது என்று தீர்மானித்தான். ‘எனக்கு நீ வேண்டும்’ என்றான். அவள் நாணமாகப் புன்னைகைத்துவிட்டு நகராமல் இருப்பாள் அல்லது புரியாததுபோல நடிப்பாள் என்று நினைத்தான். அவள் மெதுவாக எழுந்து தன் உடையை இழுத்து நேராக்கினாள். அவன் நாற்காலியில் அப்படியே நிலைமாறாமல் உட்கார்ந்திருந்தான். தன்னையறியாமல் தான் பறந்துவிடக்கூடும் என்று பயந்ததுபோல நாற்காலியின் கைப்பிடிகளை இறுகப் பற்றிக்கொண்டான். குதிக்கால் சப்பாத்து அணிந்திருந்தாலும் சீனப் பெண்கள்போல கால் விளிம்புகளால்தான் அவள் நடந்தாள். அவனுடைய இருதயம் நெஞ்சு எலும்புகளை இடிக்கத் தொடங்கியது. உதட்டுச் சாயம் பூசும்போது கண்ணாடிக்குமுன் சாய்வதுபோல அவள் இடையில் வளைந்து தயங்கி தயங்கி அவனை நெருங்கினாள்.

இருவருமே எதிர்பாராத ஒன்று அப்போது நடந்தது. கழற்றிவைத்த அவளுடைய பழைய கோட்டிலிருந்து ‘கிர்ர்க் கிர்ர்க்’ என்ற சத்தம் எழுந்தது. இவன் திடுக்கிட்டு துள்ளி எழுந்தான். முதலில் யாரோ புகைப்படம் எடுக்கிறார்கள் என்று சந்தேகித்தான். ‘என்ன, என்ன சத்தம்?’ என்று கேட்டான். அவன் குரல் அவனுக்கே கொஞ்சம் வெட்கத்தை தந்தது. அவனைப் பார்த்து அவள் ஆச்சரியப்பட்டாள். சரியாக அந்த நேரம் பரிசாரகன் சாப்பிட்டு முடித்த பிளேட்டுகளை அகற்ற வந்திருந்தான்.

சற்று ஆங்கிலம் தெரிந்த பரிசாரகனிடம் அந்தச் சத்தம் எங்கேயிருந்து வருகிறது, ஏன் தன்னை துரத்துகிறது என்று கேட்டான். அவன் குரலில் இருந்த பதற்றம் இருவரையும் ஆச்சரியப்படுத்தியது. பரிசாரகன் அந்தப் பெண்ணுடன் பேசத்தொடங்கினான். அவளும் ஏதோ சொன்னாள். அவனுக்கு திருப்தியில்லை, மீண்டும் ஏதோ கேட்டான். அவள் சொன்ன பதில் பரிசாரகனை முற்றிலும் மாற்றியது. அவன் குரலில் முந்தியில்லாத மரியாதை ஏறியது. அவள் வேறுவழியின்றி நாற்காலியில் மடித்து வைத்த மேலங்கியை தூக்கி அதன் பைகளுக்குள் கையை நுழைத்து இரண்டு போத்தல்களை வெளியே எடுத்து மேசைமேல் வைத்தாள். அதற்குள்ளே இரண்டு ஆரோக்கியமான பளபளக்கும் சிள்வண்டுகள் இருந்தன.

சீனாவில் சிள்வண்டுகளை பழக்கி சண்டைக்கு விடுவார்கள். ஆயிரம் வருடங்களாக சிள்வண்டுச் சண்டைகள் பிரபலம். சில விடுதிகளில் இந்த சண்டையை நடத்துவார்கள். நிறைய வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு பந்தயம் கட்டுவார்கள். சாரதிப்பெண் புகழ் பெற்ற சிள்வண்டு வளர்ப்பு கிராமத்திலிருந்து வருபவள். அவற்றை வளர்த்து சண்டைக்கு விடுவதுதான் அவளுடைய தொழில். அவள் சிள்வண்டு வளர்ப்பில் சீனாவில் அறியப்பட்ட நிபுணர். இவை எல்லாவற்றையும் பரிசாரகன் சொன்னான்.

அந்த உணவகத்தில் வேலை செய்தவர்களும், விருந்தினரும், சும்மா நின்றவர்களும் அந்த சண்டைக்கார சிள்வண்டுகளை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்கள். நிறையக் கேள்விகள் கேட்டார்கள். ஒரு பத்திரிகைக்காரர் நாலைந்து காமிராக்களை கழுத்தில் தொங்கவிட்டபடி படங்கள் எடுக்க வந்தார். அவரைத் துரத்தவேண்டியிருந்தது. மிகச் சொற்ப நேரத்தில் அவள் ஒரு சினிமா நடிகையைப்போல பிரபலமாகிவிட்டாள். பரிசாரகன் சுற்றி நின்றவர்களை கலைந்து போகும்படி வேண்டிக்கொண்டான்.

விமான நிலையத்துக்கு அவனை சாரதிப்பெண் ஓட்டிப்போனபோது அசௌகரியமான மௌனம் சூழ்ந்தது. மேலங்கி தரித்தவுடன் அவள் ஒரு சாதாரண பெண்ணாக மாறிவிட்டாள். அடிக்கடி கண்ணாடி வழியாக அவனைப் பார்த்தாள். அந்த அருமையான தருணம் தாண்டிவிட்டது. அவளை அழகியாக கருதுவதா, சாரதியாக கருதுவதா அல்லது சிள்வண்டு நிபுணியாக கருதுவதா என்பதில் அவனுக்கு குழப்பம் ஏற்பட்டது. ஒருகாலத்தில் அவன் வேலை செய்யும் கம்பனிக்கு அவன் தலைவர் ஆகலாம், அல்லது கனடாவின் பிரதமர் ஆகலாம், அல்லது இன்னும் உயர்ந்த உலக ஸ்தாபனத்தில் ஒரு பெரிய பதவிகூட வகிக்கலாம். ஆனால் இனி ஒரு காலத்திலும், அவன் என்ன பதவி வகித்தாலும் ஒரு பெண் எழுந்து வந்து கொடுக்க நினைத்த, ஆனால் வீணாகிப்போன முத்தத்தை அவன் மிஞ்சிய வாழ்நாளில் திரும்பப் பெறப்போவதில்லை. அந்த எண்ணம் அவனை சங்கடப்படுத்தியது. காரிலிருந்து அவன் இறங்கியபோது அவளும் இறங்கினாள். கனடாவிற்கு கொண்டு போவதற்காக பத்திரப்படுத்திய இரண்டு 100 யுவான் நோட்டுகள் அவனிடம் இருந்தன. அவளுக்கு ஏதாவது செய்யவேண்டும்போல தோன்றியது. ஒரு 100 யுவான் நோட்டை அவளிடம் கொடுத்து நன்றி என்றான். அவள் இடுப்பு வரைக்கும் குனிந்து அவர்கள் மொழியில் என்னவோ சொன்னாள்.

மூன்றாவது முனை டிக்கட் கவுண்டர் பெண் ஆங்கிலத்தில் பேச ஆசைகொண்டு சாதாரண விசயத்தையும் நீண்ட நீண்ட வசனங்களில் பேசினாள். பயணிகள் தங்கும் அறையில் விமான அறிவித்தலுக்காக, பிருட்ட வளைவுகளுக்கு ஏற்றமாதிரி வடிவமைத்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து அவன் காத்திருந்தான். அப்பொழுது அவனுக்கு இரண்டாவது முறையாக ஓர் ஆச்சரியம் கிடைத்தது. சாரதிப்பெண், ஓட்டமும் நடையுமாக கண்களால் யாரையோ தேடியபடி நீண்ட மேலங்கி அசைய வேகமாக நடந்தாள். இவனைக் கண்டதும் சிறிது நின்று மூச்சுவாங்க அழகான ஆங்கிலத்தில் ‘உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்’ என்றாள். அவன் வாய் அவனையறியாமல் திறந்துகொண்டது. எழுந்து நின்று ‘உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?’ என்றான். ‘தெரியும், மன்னிப்பு கேட்க வந்திருக்கிறேன்’ என்றாள். தாயினுடைய சப்பாத்தை அணிந்து டக்குடக்கென்று நடக்கும் சிறுமியின் நடைபோல அவளுடைய ஆங்கிலம் கனமானதாக இருந்தது; அதே சமயம் கவர்ச்சியாகவும் இருந்தது. அவளுடைய மார்பு மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்ததை அவள் அணிந்திருந்த ஓவர்கோட்டினால் கூட மறைக்கமுடியவில்லை. அமருங்கள் என்றான். எதிரில் பல இருக்கைகள் வெறுமனே இருந்தாலும் அவள் பக்கத்திலே நெருக்கமாக அமர்ந்தாள்.

‘உங்கள் பெயர் என்ன?’ என்றான். அவள் ‘பார்பறினோ’ என்றாள்.
‘ஆங்கிலம் பேசத் தெரிவது குற்றமா? எதற்காக அதை மறைக்கவேண்டும்?’
‘கம்பனி விதி அது. நான் கம்பனி ரகஸ்யங்களை சொல்லிவிடக்கூடும் என்று பயந்தார்கள்.’
‘அவ்வளவுதானா?’
‘உங்களைப்போன்ற வாடிக்கையாளரிடம் எதாவது உபயோகமான தகவல் அகப்படலாம். அவர்களிடம் அதைச் சொல்லவேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.’
‘என்னிடமிருந்து உங்களுக்கு ஏதாவது விசயம் கிடைத்ததா?’
‘கிடைத்தது, ஆனால் நான் அதை அவர்களிடம் சொல்லப்போவதில்லை.’
‘ஏன்?’
‘நீங்கள் எனக்கு ஓர் உபகாரம் செய்யவேண்டும். நான் சிள்வண்டு வைத்திருந்ததை அவர்களிடம் சொல்லக்கூடாது.’
‘சொன்னால்?’
‘என் வேலை போய்விடும். சாரதி வேலை இல்லாவிட்டால் என் எதிர்காலம் நின்றுவிடும்.’
‘உங்களுக்குத்தான் சிள்வண்டு வருமானம் இருக்கிறதே.’
‘சாரதி வேலையை வைத்துத்தான் என்னுடைய வாடிக்கையாளர்களைப் பிடிக்கிறேன். இது போனால் இரண்டுமே போய்விடும்.’ அவள் முகம் உண்மையில் கலவரமானதாக மாறியது.
‘ஓ அப்படியா? என்னுடைய விமானத்துக்கு போதிய நேரம் இருக்கிறது. ஓவர்கோட்டை கழற்றிவிட்டு சாவகாசமாக உட்காரலாமே.’ கட்டளையை நிறைவேற்றுவதற்காக அவள் எழுந்து நின்று ஓவர்கோட்டை கழற்றினாள். அவள் கை மென்மயிர்கள் வியர்வையில் பளபளத்தன. மெல்லிய ஆடை துடையின் ஈரத்தில் ஒட்டிப்பிடித்து நின்றது. அவள் பேரழகி. அவனுக்கு வயது 22. கண்களை அவனால் மற்றப் பக்கம் திருப்ப முடியவில்லை. பக்கத்து ஆசனத்தில் பட்டென்று முட்டுவதுபோல உட்கார்ந்தாள். அவனுடைய மார்புச் சத்தம் அவளுக்கு கேட்டுவிடுமோ என்ற பயம் அவனுக்கு ஏற்பட்டது.
‘ஒரு வழி இருக்கிறது’ என்றான்.
அவளுடைய வாய் அவனுடைய முகத்துக்கு சமீபமாக இருந்தது.
‘உணவகத்தில் நீங்கள் எனக்கு ஏதோ தருவதற்காக எழுந்து நடந்துவந்தீர்கள். வளைந்தீர்களே ஒழிய ஒன்றுமே தரவில்லை. அதைத் தந்தால் நான் முறைப்பாடு செய்யமாட்டேன்.’ அவன் வசனத்தை முடிக்கக்கூட இல்லை. அவள் அப்படியே சாய்ந்து அவன் மார்பை தன் பக்கவாட்டு மார்புகளால் அழுத்தி கைகளால் கழுத்தை வளைத்து அவன் உதட்டில் நீண்ட முத்தம் ஒன்றை பதித்தாள். அவளுடைய நாக்கு தபால்தலை ஒட்டப்போவதுபோல கொஞ்சம் வெளியே வந்திருந்தது. அந்த முத்தம் ஒரே சமயத்தில் கன்னத்தையும், மேல் உதட்டையும், காதையும் தொட்டது. அவனுக்கு செய்வது என்னவென்று தெரியவில்லை. பிருட்ட வளைவில் செய்த இருக்கையில் அவன் உட்கார்ந்திருந்தாலும் அவன் அங்கே உட்காரவில்லை.

ஒரு சிறுகுழந்தை செய்வதுபோல கண்களை கைகளால் மூடிக்கொண்டு அவள் எழுந்து நின்றாள். பின்னர் தன் பழைய கோட்டை மாட்டினாள். அப்படி மாட்டியதும் அவள் சாதாரண தோற்றம் கொண்டவளாக மாறிப்போனது அதிசயமாகத்தான் இருந்தது. கொசுறு கொடுப்பதுபோல இன்னொரு சின்ன முத்தம் தந்துவிட்டு புறப்படுவதற்கு தயாரானவள் சற்று நின்று யோசித்தாள். இறுதியில் ஏதோ வார்த்தைகளுக்கு விடுதலை கொடுப்பதுபோல தயங்கி ‘எனக்கு கனடாவுக்கு வர விருப்பம்’ என்றாள். ஏன் என்றான் அவன். ‘அங்கே எத்தனை பிள்ளைகள் வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்கிறார்கள்.’ அவன் ஒன்றுமே பதில் சொல்லவில்லை. நடந்துகொண்டே திரும்பி கையசைத்தபோது அவள் ஓவர்கோட்டில் இருந்து ‘கிர்ர்க் கிர்ர்க்’ என்ற சத்தம் எழுந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பக்கென்று சிரித்தார்கள். அவன் நெஞ்சிலிருந்து ஒரு கையளவு சதையை அவள் பிய்த்துக்கொண்டு போனாள்.

பூமியின் மறுபாதியிலிருந்து ரொறொன்ரோவுக்கு விமானத்தில் பயணம் செய்த அத்தனை மணி நேரத்திலும் அவன் நாவில் ஓர் இனிப்பு கரைந்து கொண்டிருந்தது. புறப்பட்டுப் போனபோது இருந்த அவன் இப்போது இல்லை. இருபது குதிரைகள் ஓடிமுடித்த தரை போல இருதயம் சற்று அமைதியானது. அவன் மனமோ விமானம் பறந்த உயரத்திலும் மேலாகப் பறந்தது. ஏனென்றால், அவனுக்கு 22 வயது தொடங்கி மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. ஏனென்றால், அவனுடைய கோட் பையில் மாவோவின் படம்போட்ட நூறு யுவான் சிவப்பு நோட்டு ஒன்று மிச்சமாக இருந்தது. ஏனென்றால், உடுத்தி முடித்த அழுக்கான உடைகள் எல்லாம் தாறுமாறாக அடைக்கப்பட்ட அவனுடைய பெட்டியில் கையொப்பமிடப்பட்ட 30 மில்லியன் டொலர் அணு உலை ஒப்பந்தத்தின் மூலமும், மூன்று நகல்களும் இருந்தன. ஏனென்றால், அவன் உதட்டிலே சூடான சீன முத்தம் ஒன்று இருந்தது, கொஞ்சம் குளிர்ந்துபோய்.

-2011-03-17 

தொடர்புடைய சிறுகதைகள்
என் வாழ்க்கையில் நான் பல பருவங்களைக் கடந்து வந்திருக்கிறேன். பருவங்கள் என்றால் கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்று நீங்கள் நினைக்கலாம். அல்லது மேல்நாடுகள்போல இலையுதிர், பனி, இலைதுளிர், கோடை என்றும் எண்ணலாம். நான் சொல்வது வயதுப் பருவம். ...
மேலும் கதையை படிக்க...
"என் ராஜ்யத்திலுள்ள நாடு அநேக மலைகளாலும் அடர்ந்த காடுகளாலும், நீர்த்தேக்கங்களாலும் சூழப்பட்டு கவலைதரும் நெருக்கத்திலிருக்கிறது. இப்படியான நாட்டில் பெய்யும் மழையில் ஒரு துளியேனும் ஆற்றின் வழியேகி மனிதனுக்கு பயன்தராத வகையில் சமுத்திரத்தை அடைவது மகாபாபமாகும்." - இலங்கை அரசன் பராக்கிரமபாகு (கி.பி.1153-1186) சூளவம்சம்: ...
மேலும் கதையை படிக்க...
முன்குறிப்பு:- நான் ஆபிரிக்காவில் ஐ.நா.வுக்காக வேலை செய்தபோது நடந்த கதை இது. ஊரும், பேரும் சம்பவங்களம் முற்றிலும் உண்மையானவை. அதற்கு நான் கொஞ்சம் உப்பு-புளியிட்டு, கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து மணம் கூட்டியிருக்கிறேன். வேறொன்றுமில்லை. தயவுசெய்து கதை முடிந்தபிறகே பின்குறிப்பைப் படிக்கவும். --- அவருடைய ...
மேலும் கதையை படிக்க...
ஓணானுக்குப் பிறந்தவன்!
அவனைப் பிடித்துவிட்டார்கள். கிரேக்க தேசத்தின் பாட்ரா எல்லையில் இரவு 2 மணிக்கு. அவன் நின்ற இடம் இதற்கு முன்னர் லட்சக்கணக்கான பயணிகள் நின்று நின்று பள்ளம் விழுந்து தேய்ந்துகிடந்தது. அவன் உயரம்கூட ஓர் அங்குலம் குறைந்தே காணப்பட்டது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு ...
மேலும் கதையை படிக்க...
நிக்ஸன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது நடந்ததென்று ஒரு கதை சொல்வார்கள். பிரான்ஸ் தேசத்திலிருந்து மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சமையல் கலைஞரை வெள்ளை மாளிகைக்கு நியமித்தார்கள். உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து பல தலைவர்களும் வருவார்கள். விதம் விதமான விருந்துகள் எல்லாம் அங்கே தயார் ...
மேலும் கதையை படிக்க...
தேசம் மிக முக்கியம். அவளை எந்த தேசத்தவள் என்று கேட்கிறார்கள். அவளுக்கே அது தெரியாது. தகப்பன் இலங்கையைச் சேர்ந்தவர், தாய் மலையாளம். பிறந்தது துபாய், படித்தது இங்கிலாந்து, இப்போது வேலை பார்ப்பது அமெரிக்காவில். அம்மாவில் அவளுக்கு எப்போதும் கோபம். அவள் யார், என்ன ...
மேலும் கதையை படிக்க...
நாளுக்கு நாள் சூரியனின் உயரம் குறைந்து வந்தது. இரவின் நீளம் அதிகரித்தது. முந்திய இரவில் மெல்லிய பனித்தூறல் இருந்தது. ரொறொன்ரோவின் புகழ்பெற்ற மனநல மருத்துவர் ஒருவரைத் தேடி கணவனும் மனைவியும் வந்தார்கள். அதுவே முதல் தடவை அவர்கள் அங்கே வந்தது. வரவேற்புப் ...
மேலும் கதையை படிக்க...
மகா சமுத்திரத்தில் மிதக்கும் இரண்டு சிறு மரத்துண்டுகள் தற்செயலாக ஒரு கணம் தொட்டு மீண்டும் பிரிவது போல யதேச்சையாக சில சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இவை சமயங்களில் பாரதூரமான விளைவுகளக்கும் காரணமாகி விடுகின்றன. இவற்றின் பெறுபேறுகளை முன்கூட்டியே சொல்லும் வல்லமை யாருக்கு ...
மேலும் கதையை படிக்க...
'சிலம்பு' செல்லப்பா என்று முகத்துக்கு முன்னாலும், 'அலம்பல்' செல்லப்பா என்று முதுகுக்குப் பின்னாலும் அழைக்கப்படும் செல்லப்பாவை நான் முதன் முதலில் நாலு வருடங்களுக்கு முன்புதான் சந்தித்தேன். மறக்க முடியாத சந்திப்பு அது. பல வருடங்களாக வெளிநாடுகளிலேயே உத்தியோகம் பார்த்துவந்த நான், ஒரு ...
மேலும் கதையை படிக்க...
சிவசம்புவை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் கொழும்பு வீட்டுக்க அப்பாவைப் பார்க்க அடிக்கடி வருவார். மெலிந்த உயரமான உருவம்; முன்னத்தம் பல்லிலே கதியால் போட மறந்ததுபோல ஒரு பெரிய ஓட்டை கரைபோட்ட வேட்டிதான் எப்பவும் கட்டிக்கொண்டிருப்பார். தலைமுடி ...
மேலும் கதையை படிக்க...
தாமரை பூத்த தடாகம்
பருத்திப் பூ
விழுக்காடு
ஓணானுக்குப் பிறந்தவன்!
வையன்னா கானா
அடைப்புகள்
பவித்ரா
யதேசசை
‘சிலம்பு’ செல்லப்பா
வசியம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)