Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வேட்டை நாய்

 

அவனுடைய பிரச்சினை எப்போது ஆரம்பித்தது என்றால் அவன் தனக்கென்று சொந்தமாக ஒரு வேட்டை நாய் வாங்க தீர்மானித்தபோதுதான். கடந்த ஏழு வருடங்களாக அவன் வேட்டைக்கு போகிறான். அவனுக்கு அது இயல்பாக வந்தது. துப்பாக்கியை தூக்கிப் பிடித்து குறிபார்த்து சுடும்போது வேறு எதிலும் கிடைக்காத ஓர் இன்பம் அவனுக்கு கிடைத்தது. அவனுடைய நண்பன் ஒருவன் கொடுத்த ஆலோசனையில் பறவை வேட்டைக்கு தோதான ரெமிங்டன் துப்பாக்கி ஒன்றை 420 டொலர் கொடுத்து வாங்கியிருந்தான். அப்பொழுது அதிர்ஷ்டவசமாக அவனுக்கு நடாஷா பழக்கமாகியிருக்கவில்லை. ஆனால் வேட்டை நாய் வாங்கப் போனபோது அவளும் வந்தாள். அவளுக்கு என்ன வேட்டை நாயைப் பற்றி தெரியும்; ஆனால் டொலரின் அருமை நன்றாகத் தெரியும்.

நாயின் சொந்தக்காரர் இரண்டு நாய்க்குட்டிகளைக் காட்டினார். இரண்டுமே உயர்ந்த வகை, சீஸ்பீக் ஜாதி என்றார். ஒன்றின் விலை 1000 டொலர்; மற்றது 800 டொலர். எதற்காக விலையில் வித்தியாசம் என்று கேட்டதற்கு 1000 டொலர் நாயின் மரபுத்தொடர் உத்தமமானது; இரண்டாவது கொஞ்சம் குறைபாடுள்ளது என்றார். அவன் முடிவெடுக்கமுடியாமல் தடுமாறி நின்றபோது நடாஷா அவனை மலிவு நாயை வாங்கும்படி தூண்டினாள். அப்படித்தான் அவன் தன் வேட்டை நாயை தெரிவு செய்தான். இப்பொழுது யோசித்துப் பார்த்தபோது அது முட்டாள்தனமான முடிவு என்பது தெரிந்தது.

நடாஷாவைப்போல ஒரு கஞ்சத்தனமான பெண்ணை அவன் தன்னுடைய 27 வயது வாழ்நாளில் சந்தித்தது கிடையாது. நாலு வருடங்களுக்கு முன்னர் அவர்களுடைய நட்பு தொடங்கியது. காதல் பிறக்கும்போது மின்னல் தெறிக்கும் என்று சொல்வார்கள். அவனுக்கு அப்படி ஒன்றும் நடக்கவில்லை. வழக்கமான உணவகத்தில் அன்று நெருக்கமான கூட்டம். அவன் ஒரு மேசையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தான். ஓர் ஒல்லியான பெண் தன் உணவுத் தட்டை தூக்கிக்கொண்டு அவன் மேசைக்கு வந்து ஒரு மரியாதைக்காக அங்கே உட்காரலமா என்று வினவினாள். மிகவும் சாதாரணமாகத் தோன்றிய பெண். பார்த்தவுடனேயே மறந்துவிடக்கூடிய முகம். அவன் தாராளமாக என்றான். நன்றி சொல்லிவிட்டு அவள் தன்னை மடித்து, கால்களை லேசாக விரித்து உட்கார்ந்தாள். ஒரு டொல்ஃபின் மீன் பரிசு கிடைத்ததும் சிரிப்பதுபோல சிரித்தாள். அவளுடைய ஒல்லித் தேகம், பயிற்சி செய்து உடம்பை பேணியதால் உண்டான மெலிவு அல்ல. பட்டினியால் உண்டான மெலிவு. அவளுக்கு முன்னாலிருந்த பேப்பர் தட்டில் ஆகமலிவான, ஆரோக்கியம் குறைந்த உணவு பரிமாறப்பட்டிருந்தது. அவள் உடுத்தியிருந்த விதம், பேசிய உச்சரிப்பு, நடந்த தோரணை எல்லாமே அவள் அமெரிக்கப் பெண் அல்ல என்பதை உறுதிப்படுத்தியது. உற்று நோக்கியபோது அவளை முன்பே பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது.

ஒரு சப்பாத்து கடையில் ஒவ்வொரு சப்பாத்தாக அளவு பார்த்து, தெரிவு செய்து அதற்குமேல் ஏறி நின்றாள். இடைக்குமேல் உடம்பை திருப்பி வலது கால் குதியை பார்த்தாள்; பிறகு மற்றப் பக்கம் உடலை வளைத்து இடது கால் குதியை பார்த்தாள். இரண்டு கால்களையும் தட்டி அதன் சத்தத்தை கேட்டு ரசித்தாள். நடந்து பார்த்தாள். அந்த நடையில் ஒரு புதிய அசைவு சேர்ந்துகொண்டது. இடுப்பிலே கையை வைத்துக்கொண்டு போக்குவரத்து பொலீஸ்காரன்போல நடு வழியில் நின்றாள். முன்காலை மாறி மாறி நீட்டி சப்பாத்தின் நுனிகளை ஆராய்ந்தாள். இனி ஆராய்வதற்கோ, சரி பார்ப்பதற்கோ ஒன்றும் இல்லை என்ற நிலையில் அந்த சப்பாத்துகளை தூக்கி குழந்தைபோல அணைத்தாள். அந்தக் காட்சி அவன் மனதில் பதிந்துபோயிருந்தது.

திடீரென்று அவளிடம் ‘நீங்கள் அந்தச் சப்பாத்தை வாங்கினீர்களா?’ என்றான். அவள் ஒரு பறவை தலையை தூக்குவதுபோல தூக்கி சாய்வாக அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். ‘நேற்று என்னை கடையில் பார்த்திருக்கிறீர்கள்’ என்றாள். அவன் ஆமாம் என்று சிரித்தான்.

‘என்னுடைய கால் அளவு பதினொன்று. இங்கே அமெரிக்காவில் எங்கே தேடினாலும் எனக்கு குதிச்சப்பாத்து வாங்குவது கடினம். என்னுடைய நாட்டிலே என் காலுக்கு அளவெடுத்து செய்து தருவார்கள். இங்கே அதை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.’

அவளுடைய உச்சரிப்பு வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு வார்த்தையாக அவள் தன் நாட்டு மொழியில் சிந்தித்து பிறகு அதை ஆங்கிலத்தில் மாற்றிப் பேசினாள். அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவள் வாயில் நின்று இளைப்பாறி வந்ததால் சற்று ஈரப்பசையுடன் இருந்தன.
‘நீங்கள் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அந்தச் சப்பாத்தில் ஏறி நின்றபோது உயரமாகவும், வசீகரமாகவும் தோன்றினீர்கள். இறுதியில் அதை வாங்கினீர்களா?’

‘சப்பாத்து எனக்கு பிடித்துக்கொண்டது. 11 சைஸ் சப்பாத்து கிடைப்பது கடினம். மிகவும் அபூர்வமாக அது பொருந்தியது. என்னுடைய பாதங்கள் நீளமானவை. ஆனால் சப்பாத்தின் விலை மிக அதிகம். அது வாங்கும் காசிற்கு இரண்டு தண்ணீர் நிரப்பிய பிரா வாங்கிவிடலாம். ஆகவே நான் வாங்கவில்லை.’

உங்களுடைய தாய்மொழி பிரெஞ்சா?

இல்லை, உக்ரெய்ன் மொழி. எனக்கு ரஸ்ய மொழியும், பிரெஞ்சு மொழியும், ஆங்கிலமும் தெரியும். ஆனால் ஒவ்வொரு மொழியிலும் 1000 வார்த்தைகளுக்குமேல் தெரியாது என்று சொல்லிவிட்டு சிரித்தாள். ஆரோ நெருக்கமாக அடுக்கி வைத்ததுபோல மணிமணியான பற்கள். அவள் விடைபெற்றபோது பரிசாரகியிடம் ஓர் அட்டைப்பெட்டி கேட்டு வாங்கி அதிலே மீதி உணவை அடைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

இப்படித்தான் தற்செயலாக அவர்களுடைய நட்பு நாலு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்தது. அவனுக்கு அவளிடம் பிடித்தது அவளுடைய ஒளிவு மறைவில்லாத வெளிப்படையான தன்மை. தன் மனதிலே பட்டதை அப்படியே பட்டென்று பேசிவிடுவாள். பிடிக்காத விசயம்கூட அவள் பேசி முடித்ததும் பிடித்துப் போகும்.

ஒருநாள் திடீரென்று அவளைப் பார்த்து ‘நான் உன்னைக் காதலிக்க முடிவெடுத்திருக்கிறேன்’ என்றான். ‘மிகச்சரியான முடிவு. அதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்’ என்றாள். ‘உன்னுடைய சம்மதம் இல்லாமல் நான் எப்படிக் காதலிக்கமுடியும்?’

‘அப்படியா? அவ்வளவு சுலபமாக என்னை காதலிக்க முடியாது. சில நிபந்தனைகள் இருக்கின்றன. எங்கள் நாட்டு வழக்கப்படி நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு ரகஸ்யத்தை பரிமாறிக்கொள்ளவேண்டும். அந்த ரகஸ்யம் எங்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்தது. அப்பொழுதுதான் அதன் பவித்திரத் தன்மை கெடாது. சிலபேர் தங்கள் மார்புகளிலும், கைகளிலும் காதலை பச்சை குத்திக் கொள்வதுபோல நாங்கள் ரகஸ்யத்தை பரிமாறி அதை உறுதி செய்கிறோம்’ என்றாள். ஆயிரம் வார்த்தைகளை இருப்பில் வைத்துக்கொண்டு இப்படி நீளமாகவும், தர்க்கமாகவும் பேசினாள்.

‘சரி, நீ ஒரு ரகஸ்யம் சொல்லு’ என்றான். ‘அது எப்படி? நீதான் முதலில் காதலைச் சொன்னாய். நீதான் ரகஸ்யத்தையும் சொல்லவேண்டும்’ என்றான் அவள்.

‘மாமாதான் எனக்கு எல்லாம். 17 வயதில் என்னை விமானத்தில் ஏற்றி அமெரிக்காவுக்கு தனியாக அனுப்பினார். முதல் விமானப் பயணம் என்பதால் வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டுதான் இருந்தேன். ஆம்ஸ்டர்டாமில் விமானம் மாறவேண்டும். ஐந்து மணிநேர இடைவெளி, நான் காத்திருந்தேன். அப்பொழுது பெரிய உதடுகள் கொண்ட கறுப்பு பெண் ஒருத்தி தன் குழந்தையை தூக்கிக்கொண்டு வந்து என்னருகே அமர்ந்தாள். கமரூனுக்கு பயணம் செய்வதாகவும், அவளுடைய விமானம் இரண்டு மணிநேரம் தாமதம் என்றும் சொன்னாள். சிறிது நேரத்தில் பாத்ரூம் போகவேண்டும், தன்னுடைய குழந்தையை பார்த்துக் கொள்ளமுடியுமா என்று கேட்டாள். நானும் சம்மதித்தேன். அரைமணி நேரமாகியும் அவள் திரும்பவில்லை. நான் பதற்றத்தில் இருந்தபோது குழந்தை கைகால்களை ஆட்டி என்னைப் பார்த்து சிரித்தது. என்னுடைய விமான அறிவித்தல் இரண்டாவது தடவையாக ஒலித்தது. நான் குழந்தையை விமானக்கூட இருக்கையில் நீளவாக்காகக் கிடத்திவிட்டு விமானத்தைப் பிடிக்க ஓடினேன். அதற்கு பிறகு என்ன நடந்தது என்று தெரியாது. இப்பொழுதும் சில வேளைகளில் அந்த குழந்தையின் ஞாபகம் வரும். இந்த ரகஸ்யத்தை முதன்முதல் உனக்குத்தான் சொல்கிறேன்.’

நடாஷா அவனைத் துளைப்பதுபோல வெகுநேரம் பார்த்தாள். அந்தப் பார்வையில் கனிவு இல்லை. ரகஸ்யத்தை சொன்னது தவறு என்று அவனுக்கு பட்டது. ஆனால் இனி ஒன்றுமே செய்யமுடியாது. அவள் தன்னுடைய ரகஸ்யத்தை சொல்ல ஆரம்பித்தாள்.

‘எங்கள் கிராமத்து வீட்டில் நானும் அம்மாவும் மட்டுமே தங்கியிருந்தோம். சொந்தக்காரர்கள் என்று எப்போதாவது யாராவது வருவார்கள். அம்மா மற்ற வீடுகளுக்குப்போய் துப்புரவுப் பணி செய்தாள். எதற்காக அதைச் செய்கிறாள் என்று ஒருநாள் கேட்டேன். ‘அவர்களிடம் எங்களிலும் பார்க்க அதிக பொருட்கள் இருக்கின்றன’ என்றாள். எப்போதும் என்மீது அன்பைச் சொரிந்தபடியே இருக்கும் அம்மா ஒருநாள் அதிகாலை என்னை எழுப்பினாள். அப்போது எனக்கு 13 வயது நடந்துகொண்டிருந்தது. நான் பூப்படைந்து சில மாதங்கள் ஆகியிருந்தன. குளிருக்கான மேலங்கியை தரித்துக்கொண்டு அவசரமாக வெளிக்கிடச் சொன்னாள். புதிய கையுறையை அணியலாமா என்று கேட்டேன். அவள் ஆம் என்றாள். பனி மூடிய பாதையில் பஸ்ஸிலே மூன்று மணிநேரம் பிரயாணம் செய்தபோது அம்மா என் எதிர்காலம் பற்றி நிறையப் பேசினாள். எல்லாமே மர்மமாக இருந்ததால் ஒருவித உற்சாகமும் பயமும் ஒரே சமயத்தில் தோன்றி இதயம் படபடவென்று அடித்தது. ஒரு பஸ் நிறுத்தத்தில் இறங்கி 10 நிமிடதூரம் நடந்தோம். இப்படி சாகசமான நாளை என் வாழ்க்கையில் நான் அனுபவித்ததில்லை. அம்மா அடிக்கடி மணியை பார்த்தாள். ஓரு கட்டிடம் வந்ததும் என்னை நிற்கச் சொன்னாள். அது ஒரு தபால் நிலைய மையம். அம்மா சொன்னாள் ‘நீ தயாராக இரு. இப்போது பார்க்கப்போவதை என்றென்றைக்கும் ஞாபகத்தில் வைத்திரு.’ என் நெஞ்சு அடிக்கும் வேகம் நிமிடத்துக்கு நிமிடம் கூடியது. நான் குளிரில் கால்களை மாற்றி மாற்றி வைத்து நடுங்கியபடி நின்றேன். சிறிது நேரத்தில் ஆட்கள் ஒவ்வொருவராக வெளியே வந்து தபால் வண்டிகளை ஓட்டிச் சென்றார்கள். மீசை வைத்த குண்டான மனிதர் ஒருவர் வந்து ஒரு தபால் வண்டியில் ஏறி அதை ஓட்டிச் சென்றார். அம்மா என் புஜத்தைக் கிள்ளி ‘அந்த மனிதரை வடிவாகப் பார். அவர்தான் உன் அப்பா’ என்றாள். என்னுடைய அப்பா அவருடைய 13 வயது மகள், புதுக் கையுறை அணிந்துகொண்டு அவரைப் பார்ப்பதற்காக 200 மைல்கள் பயணம் செய்ததையும், பத்தடி தூரத்தில் நிற்பதையும் அறியாமல் கடந்து போனார். அதன் பின்னர் நாங்கள் வீடு நோக்கிய பயணத்தை தொடங்கினோம். திரும்பும்போது அம்மா ஒரு வார்த்தை பேசவில்லை.’

‘ரகஸ்யத்தை சொன்னதற்கு நன்றி. இன்னும் வேறு ஏதாவது ரகஸ்யம் இருக்கிறதா?’ என்றான்.
‘இருக்கிறது. அது அடுத்த காதலனுக்கு. ஒரு ஆளுக்கு ஒரு ரகஸ்யம்தான்’ என்றாள்.
அப்படியா என்று அவன் நடாஷாவின் அம்மா செய்ததுபோல அவளுடைய எலும்பு புஜத்தைக் கிள்ளினான். பிறகு அப்படியே அணைத்துக்கொண்டான்.

காதலிக்க முடிவெடுத்த பிறகு இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழத் தீர்மானித்தார்கள். அவளிடம் எல்லா நற்பண்புகளும் இருந்தன. ஆனால் அவளுடைய சிக்கன முறைகளை அவனால் தாங்க முடியவில்லை. உணவு விசயத்தில் அவை உச்சத்தை எட்டின. உக்ரெய்னில் வாழ்ந்தபோது அவள் அனுபவித்த வறுமை கொடியது. அடுத்தவேளை உணவு என்ன, எங்கேயிருந்து, எப்போது கிடைக்கும் என்று தெரியாமல் வாழ்ந்திருக்கிறாள். அமெரிக்காவின் மலிவு உணவு அவளைப் பைத்தியமாக்கியது. உணவைப் பற்றி அவள் சிந்திக்காத நிமிடம் இல்லை. மலிவு விலை நாளில் சந்தைக்குப் போய் முழுக்கோழிகளை வாங்குவாள். அவை ஐம்பது சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். அவற்றை வீட்டுக்கு கொண்டுவந்து ஆழ்குளிரில் புதைத்து வைத்து வேண்டியபோது எடுத்துச் சமைப்பாள். சில கோழிகள் அவை உயிருடன் இருந்த காலத்திலும் பார்க்க ஆழ்குளிரில் இருந்த நாட்களே அதிகம். அவற்றின் ருசியும் இந்தப் பூமியில் வேறு எங்கும் கிடைக்காத ஒரு ருசி. மெலிந்த கொடிபோன்ற தோற்றம் மெல்ல மெல்ல மறைந்து தண்ணீரில் ஊறவைத்ததுபோல அவள் உடம்பு ஊதியது. ஒடுங்கியிருந்த இடை நிரம்பி எங்கே மார்பு முடிகிறது, எங்கே இடை தொடங்குகிறது என்று அவன் தடுமாறும்படி ஆகிவிட்டது.

செப்டம்பர் பிறந்ததும் அவன் வேட்டை உரிமத்துக்கு விண்ணப்பம் செய்வான். ஞாயிறு காலைகளில் வேட்டைக்குப் போவது அவனுக்கு முக்கியம். அவன் 800 டொலர் கொடுத்து வாங்கிய வேட்டை நாய்க்கு ஹன்டர் என்று பெயர் சூட்டியிருந்தான். ஒரு நாளைக்கு ஆறு வாத்துக்களுக்கு மேலே சுடக்கூடாது. அதுதான் சட்டம். அவன் வேட்டை நாய் வாங்கியது முழுக்க முழுக்க வாத்து வேட்டைக்காகத்தான். அவனும், நண்பர்களும் வேட்டைக்கு போனார்கள். வாத்தைச் சுட்டவுடன் நாய் குளத்துக்குள் தாவிப் பாய்ந்துபோய் செத்துப்போன வாத்தை மென்மையாக வாயில் கவ்வி இழுத்து வந்து எசமானின் காலடியில் போட்டுவிட்டு அவனுடைய இடது பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளும். உடம்பில் ஓடும் தண்ணீர் வழிந்து நாயை சுற்றி தேங்கி நிற்கும், ஆனால் நாய் அசையாது. அடுத்த வேட்டுச் சத்தம் வரும்வரைக்கும் அப்படியே காத்திருக்கும். இதையெல்லாம் ஒரு வேட்டை நாய் செய்யும், அவனுடைய ஹன்டர் செய்யாது.

வேட்டை நாயை அன்பு காட்டி வளர்க்கக்கூடாது என்பதால் அவன் கண்டிப்புடன் வளர்த்தான். பயிற்சியாளர் திறமான பயிற்சிகள் கொடுத்திருந்தார். வேட்டுச் சத்தம் கேட்டதும் உறைந்துபோன தண்ணீரில் ஹன்டர் பாயும். எண்ணெய்ப் பிடிப்பான அதன் தோலில் தண்ணீர் ஒட்டுவதில்லை. செத்த வாத்து மிதந்து கொண்டிருக்கும்போதே வேகமாக நீந்திச் செல்லும். முக்கால்வாசித் தூரத்தை கடந்ததும் வந்த காரியத்தை மறந்து மீண்டும் திரும்பி வந்து அவன் பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும். எப்படி முயற்சி செய்தாலும் அதற்கு தன்னுடைய உத்தியோகம் வாத்தை வாயிலே கவ்வி வரவேண்டும் என்பது தெரியவில்லை. இருபது வீதம் கழிவு விலையில் வாங்கியதாலோ என்னவோ மீதம் இருபது வீதம் தூரத்தை அது கடப்பதே இல்லை. ‘அதற்கு கொடுத்த விலைக்கு சரியாக வேலை செய்கிறது. இப்பொழுது அது வீட்டு நாயும் அல்ல, வேட்டை நாயும் அல்ல’ என்று நண்பர்கள் கேலி செய்தார்கள். பயிற்சிக்காரரோ ஹன்டரை எந்தக் காலத்திலும் பழக்கமுடியாது என்று கைவிட்டுவிட்டார்.

அவனுக்கு நடாஷா மீது கோபம் பொங்கி வரும். வீட்டுக்கு அதே கோபம் குறையாமல் திரும்புவான். நடாஷா ஒரு கிராமத்து மனைவிபோல வாசலில் காத்திருப்பாள். அது அவனுக்கு பிடிக்கும். பெரிய மார்புகள், மாதாகோயில் மணிகள்போல மேலும்கீழும் ஆட அவனிடம் ஓடி வருவாள். அவன் கோபத்தை மறந்து அவளுடைய பருத்த புஜங்களுக்குள் அடங்கிவிடுவான்.

அவளுக்கு எப்பவும் ஆரம்பத்தில் இருந்தே துவங்கவேண்டும். ஒவ்வொரு அறையாக நின்று நின்று முத்தமிட்டுக் கொள்வார்கள். அவள் 17 சைஸ் ஆடையை 18 சைஸ் உடம்பில் அணிந்திருப்பதால் உடம்பு சிறைபூட்டியதுபோல காட்சியளிக்கும். சதைக்கூட்டம் வெளியே தள்ளும். அவள் உடையை உடம்பில் இருந்து பிரித்து விட்டுக்கொண்டு இருப்பாள். படுக்கையில்கூட அவள் காலணியை கழற்றுவதில்லை. என்ன என்பான். அவள் வாய் திறக்காமல் தோள்மூட்டுகளால் சைகை செய்வாள். முயக்க மூர்க்கம் நெருங்க நெருங்க அவள் கைவிரல்கள் எல்லாம் போய் அவன் முடிக்குள் மறைந்துவிடும். பிரெஞ்சு, ரஸ்யன், உக்ரேய்ன் என்று பல மொழிகளிலும் கூவி சத்தமெழுப்புவாள். ஹன்டர் பக்கத்திலே உட்கார்ந்து இது என்ன வேட்டை என்பதுபோல அதிசயமாகப் பார்க்கும்.

ஒருநாள் நடாஷா கலவி முடிந்த பிறகு தலைமயிரை விரித்து அதற்குமேல் படுத்து, சப்பாத்து கழற்றாத கால்களை பின்னியபடி, தட்டைக்கூரையை பார்த்துக்கொண்டு வெகுநேரம் யோசித்தாள். திடீரென்று ‘நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாம் மணமுடித்துக் கொள்வோம்’ என்றாள். எப்படி இந்த அற்புதமான யோசனை தோன்றியது என்றான் அவன். அவள் சொன்னாள், ‘என்னுடைய அம்மா என்னிடம் ஒன்றுமே கேட்டதில்லை. இன்றைக்கும் முழங்கால்களில் உட்கார்ந்து இன்னொருவர் வீட்டை சுத்தம் செய்கிறாள். ஒன்றே ஒன்றுக்காகத்தான் அவள் வாழ்நாள் முழுக்க காத்திருக்கிறாள். திருமண ஆடையில் ஒரு புகைப்படம். இந்த சின்ன ஆசையைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை.’

அவர்கள் பதிவுக் கல்யாணம் செய்து, திருமண ஆடையில் படம் பிடித்து தாயாருக்கு அனுப்புவது என்று தீர்மானித்தார்கள். அவள் பல வருடங்களாகப் பார்த்து பார்த்து ஏங்கிய குதிச் சப்பாத்தை அவன் திருமணப் பரிசாக வாங்கிக் கொடுத்தான். திருமண ஆடையை, ஒரு நாள் வாடகைக்கு 75 டொலர் கொடுத்து, அவள் வாங்கினாள். பதிவுக் கல்யாணம் முடிந்த கையோடு, இரவல் ஆடையில், புதிய சப்பாத்தை அணிந்து, பூச்செண்டை ஏந்தியபடி இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

மிசூலாவின் வீதிகளில் அந்த புதுமணத்தம்பதியினர் கைகோத்துக்கொண்டு நடந்தனர். குதிச்சப்பாத்தில் அவள் கூடிய தூரத்தைப் பார்த்தாள். ஒரு கையால் கவுனை சற்று தூக்கியபடி அவன் மேல் சாய்ந்து அவள் நடந்தபோது ஒரு கணம் அழகாகக்கூட தென்பட்டாள். வீதியிலே சிலர் நடப்பதை நிறுத்திவிட்டு அவர்களை திரும்பிப் பார்த்தனர். சிலர் திருமண வாழ்த்துச் சொன்னார்கள்.

அதற்கு பிறகு நடந்தது ஒருவரும் எதிர்பாராதது. தபால்வண்டியை ஓட்டிக்கொண்டு ஒரு மீசைக்கார மனிதர் சென்றார். அவன் ‘அதோபார், உன்னுடைய தகப்பனாக இருக்கலாம்’ என்றான். அவள் கையைப் பறித்துக்கொண்டு நடுவீதியில் நின்று கத்தினாள். ‘நீ மோசமானவன். நான் சொன்ன ரகஸ்யம் பவித்திரமானது. நீ அதை கேலிப்பொருள் ஆக்கிவிட்டாய்.’ பல கண்ணீர் துளிகள் ஒரே சமயத்தில் தோன்றின. தன் இரு கைகளாலும் வாடகை அங்கியை தூக்கிக்கொண்டு, 11 சைஸ் சப்பாத்தில் வேகமாக நடக்கத் தொடங்கினாள். ‘நடாஷா, நடாஷா , என் அன்பே’ என்று கத்தியபடியே அவன் பின்தொடர்ந்தான்.

அவர்களுடைய வீட்டுக்குள் புயல் போல நுழைந்துகொண்டு பெரும் ஓசையோடு கதவைச் சாத்தினாள். ‘ஒரு பச்சைக் குழந்தையை ஏர்போர்ட்டில் தனிய விட்டுவிட்டு ஓடிவந்த கோழை நீ’ என்றாள். ‘மன்னித்துக்கொள்’ என்றான் அவன். ‘நீ கேவலமான ஆள். அற்பன். நான் அவசரப்பட்டுவிட்டேன்.’ நிலைமை முழுநாசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அதை எப்படியும் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘கோவிக்காதே, என் செல்லம்’ என்று கன்னத்தை தொடப்போனான். நடாஷா அவனைப் பிடித்து தள்ளினாள். அவன் தடுமாறி கீழே விழுந்ததும் பாய்ந்து, 75 டொலர் வாடகைக்கு எடுத்த கல்யாண ஆடையை சிரைத்துப் பிடித்தபடி, அவன் மேலே ஏறி உட்கார்ந்தாள். பன்றி இறைச்சி போன்ற வெள்ளைத் தொடைகளும், தொக்கையான முழங்கால்களும், அவன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிக் கொடுத்த பென்சில் குதிச் சப்பாத்துகளும் அவன் கண்களுக்கு வெகு சமீபத்தில் தெரிந்தன. அவளை உதறிவிட்டு அவனால் இலகுவாக எழுந்திருக்க முடியவில்லை. மல்யுத்தத்துக்கு தயாரான ராட்சத தவளைபோல கால்களைப் பரப்பி அவன்மேல் பாரமிறக்கியிருந்தாள். அவளுடைய உக்ரேய்ன் உதடுகள் கோபத்தில் துடித்தன. முகம் அவனை நோக்கி வளைந்தபோது ஒரு மிருகம் குனிந்து முகர்ந்து பார்க்க தயாராவதுபோல அவனுக்கு பதற்றமேற்பட்டது.

கோபத்தை அதற்குமேல் அவளால் எடுத்துப்போக முடியவில்லை. கழிவு விலையில் வாங்கிய வேட்டை நாய்போல பாதியிலே பரிதாபமாக என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள். நசுங்கிப்போய் இருந்த நிலையிலும் அவனுக்கு அவளைப் பார்க்க சிரிப்பாக வந்தது. அவனுடைய வாழ்நாள் முழுக்க அவள்தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். அப்பொழுது அவர்களுக்கு மணமாகி 45 நிமிடங்கள் கழிந்தது நினைவுக்கு வந்தது.

- 2009-09-16 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த வெள்ளைச் சுவரில் கறுப்பு அம்புக்குறிகள் நிறைய இருந்தன. அந்த அம்புக்குறிகளைத் தீட்டியவன் அதிலேயே லயித்திருந்தவனாக இருக்கவேண்டும். அளவுக்கு அதிகமாகவே வரைந்திருந்தான். அவற்றைப் பார்த்தபடியே அவள் நடந்தாள். இப்படியே பக்கவாட்டாக வழி காட்டிக்கொண்டு வந்த அம்புக்குறி திடீரென்று ஓர் இடத்தில் வளைந்து ...
மேலும் கதையை படிக்க...
கனகசுந்தரி
இப்படி ஓர் அவமானம் கனகசுந்தரிக்கு அவளுடைய 15 வயது வாழ்க்கையில் நடந்தது கிடையாது. இதற்கு எல்லாம் காரணம், கறுப்பு ரீச்சர்தான். மற்றவர்கள் விமலா ரீச்சர் என்று அழைத்தாலும், அவளுக்கு அவர் கறுப்பு ரீச்சர்தான். எதற்காகத் தன் மீது வன்மம் பாராட்டுகிறார் என்று ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு ஒரு ஒன்றுவிட்ட அக்கா இருந்தாள். வெகு காலத்திற்கு முன்பு சொற்ப நாட்களே அவளுடன் நான் பழகநேர்ந்தாலும் என்னால் அவளை மறக்கமுடியாது. கொஞ்சக் காலம் சென்ற பிறகு அவர்கள் எங்கோ நாங்கள் எங்கோ என்று பிரிந்து விட்டோம். பிறகு அவள் என்ன ...
மேலும் கதையை படிக்க...
கடிதத்தைப் பிரிக்கும்போதே அவனுக்குக் கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்புக் கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே அதைக் கட்ட வேண்டும் என்று இறுதிக் கடிதம் வந்திருக்கிறது. கடந்த இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
கனடாவுக்கு வந்து இறங்கிய முதல் நாள் அவருடைய மருமகள் வத்ஸலா ஒரு பொய் சொன்னாள். அவள் எதற்காக சொன்னாள் என்பது இன்றும் மர்மமாகவே இருந்தது. யாரைக் காப்பாற்றுவதற்காகச் சொன்னாள். அல்லது யாரைப் பழிதீர்க்கச் சொன்னாள். அதுவும் காதலித்து கல்யாணம் செய்துகொண்ட தன் ...
மேலும் கதையை படிக்க...
மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளைமுடி ஆடுகள்
கனகசுந்தரி
உடும்பு
புவியீர்ப்புக் கட்டணம்
சுவருக்குள்ளே மறையும் படுக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)