வெண்ணிற இரவுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 16,210 
 

ல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன், கிட்டதட்ட நான்கு ஆண்டுகள் பேருந்தில் தான் கல்லூரிக்குச் சென்று வருகிறேன். அதுவும் அரசு பேருந்தில் தான்.

தினமும் அதே கூட்ட நெரிசல், முதலில் பழக்கமில்லாத முகங்கள் , நாட்கள் செல்ல செல்ல அறிமுகமானது. முதலில் லேசான புன்னகையுடன் ஆரம்பித்த சிநேகம் போக போக நலம் விசாரிப்பது வரைக்கும் சென்றது.

அரைமணி நேர பயணம், கூட்டம் அதிகமாக இருந்தால் எரிச்சலாகவும் கூட்டம் இல்லாத நாட்களில் வசதியாகவும் இருக்கும்.

நடத்துனரும் அவ்வப்போது படிப்பை பற்றியும் விசாரித்து கொள்வார். “படியில் நிக்காதிங்கபா” என்று வாஞ்சையுடன் அறிவுரை சொல்வார். இருந்தும் அது தான் வசதியாக இருந்தது. அப்படி பயணிக்கையில் நம் தலை கோதும், காற்றும் ஆடை உறசும் காற்றும் வேறு எங்கும் கிடைக்காது.

மாலையும் அதே அரைமணி நேர பயணம் ஆனால் அனுபவம் வேறு, அறிமுகமான முகங்கள் அதிகம் இல்லாத பேருந்து, ஜன்னல் ஓரத்தில் இருக்கை எனக்கு பிடித்த பாடல்களை நான் மட்டும் கேட்டபடி வீடு செல்லும் சூரியனை பார்த்த படியே ஒர் ரம்யமான பயணம்.
மாலை வீடு வந்து சேர்ந்ததும் , பெரிதாக ஏதும் வேலை இருக்காது அதனால் நண்பர்களுடன் ஊர் சுற்றிவி்ட்டு வந்து சாப்பிட்டு விட்டு எனது லேப்டாபுடன் (Laptop) கலந்துரையாடிவிட்டு தூங்க செல்வேன்.

இவ்வாறாக நாட்கள் சென்று கொண்டு இருந்தது. வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் வழக்கமான நடவடிக்கைகளுடன் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது.

***

ரு நாள் தூங்க சென்று கண்ணை மூடிய சிறிது நேரத்தில் கண்விழித்தேன், நான் கண்மூடும் முன் பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் துளி கூட சம்பந்தமே இல்லை.

எனது படுக்கை அறை முழுவதும் அப்போது தான் நிறம் பூசிய இடம் போல் வெள்ளை நிறத்தில் பளிச்சிட்டது.

எனது கைபேசி நேரம் காலை 6.30 என காட்டியது, நான் மெதுவாக எழுந்து எனது அறையை விட்டு கீழிறங்கி வந்தேன் வீட்டின் தோற்றமும் முழுவதுமாக மாறியிருந்தது.
வீட்டில் யாரும் இல்லை, நான் டி.வி.டி பிளையரை இயங்க செய்து பாடலை படிக்க செய்துவிட்டு நான் குழிக்க சென்றேன். வந்து பார்த்தேன் உணவு மேஜையில் எல்லாம் தயாராக இருந்தது.
இசை கேட்ட படியே நானும் சாப்பிட்டு முடித்தேன், மதிய வேளைக்கான உணவும் பாத்திரத்தில் அடைக்கப்பட்டி வைக்கப்படிருந்தது. அதையும் எடுத்து எனது பையில் வைத்து கொண்டு நான் கல்லூரிக்கு செல்ல வாசல் நேக்கி திரும்பினேன்.

***

டேய் மணி 7 ஆகுது எந்திரிடா, என்ன இன்னைக்கு “காலேஜ்க்கு லீவா” என்று அம்மா கேட்டார்கள்.

சுய நினைவு வந்தவனாய் இல்ல போகனும் என்று சொல்லி அவசரமாக கிழம்ப தயாரானேன். பேருந்தில் போகும் போது தான் நினைத்து கொண்டேன் நான் கண்டது அனைத்தும் கனவு என்று.
அது கனவு என்றாலும் வந்த காட்சிகளும் நன்றாக இருந்தன முக்கியமாக எனது அறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.எனக்குள் சிரித்துக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

கல்லூரியில் எட்டு மணி நேரம் வழக்கம் போல் கழிந்தது.மீண்டும் மாலை பயணம் வீடு, அதே வழக்கமான நடைமுறை.

இரவு தூங்க போகும் முன் நினைத்து கொண்டேன் நேற்று வந்த கணவு இன்றும் வந்தால் நான்றாக இருக்கும் என்று.

***

வாசல் கதவை திறந்து வெளியில் வந்தேன், தெருவும் வித்தியாசமாகவே காட்சி அளித்தது. அழகாக இருந்ததால் ரசித்தபடியே பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தேன்.

சூரியன் மேகமூட்டத்துடன் மிதமான வெளிச்சத்தை வெளியிட்டுக் கொண்டிருந்தது. நிறுத்தத்தில் பேருந்திற்காக நான் மட்டுமே காத்திருந்தேன்.

நேரம் காலை 8.20 , பேருந்து என்னை நோக்கி வந்தது, அதில் யாருமே இல்லை, இருந்தும் ஏறினேன்.

கூட்டமே இல்லாததால், கடைசிவரிசை இறுக்கையில் அமர்ந்து கொண்டேன் 25 நிமிடபயணித்திற்கு பிறகு கல்லூரியில் இறக்கிவிடப்பட்டேன்.

சிறிது தூரம் நடந்துதான் எனது டிப்பார்ட்மெண்டிற்கு செல்ல வேண்டியதிருக்கும். நான் போகும் போது ஆள் நடமாட்டமே இல்லை வெறும் நிசப்தம் மட்டுமே நிலவியது காற்று வீசும் ஒலி மட்டுமே கேட்டது.

இதையெல்லாம் கடந்து , வழக்கம் போல் வகுப்பறைக்கு சென்று எனது இடத்தில் அமர்ந்தேன். இங்கே பழக்கப்பட்ட முகமாக யாருமே இல்லை. ஆசிரியர்களும் அவ்வாரே யாரையுமே அடையாளம் தெரியவில்லை, இருந்தும் அந்நியமாக தெரியவில்லை.

வழக்கம்போல் நேரம் யாருக்கும் நில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. வகுப்பு ஆரம்பித்த சிறிது நேரத்திற்கு பிறகு வாசலில் ஓர் பெண் ஒருவம் வந்து நின்றது.

தாமதமாக வந்ததற்கு காரணம் சொல்லி கொண்டிருந்தாள் அழகாக. அவள் முகம் மட்டும் சிநேகமாக பட்டது. பின்பு அவள் உள்ளே அனுமதிக்கப்பட்டாள்.

பார்த்தது சில நொடிகள் தான் இருந்தும் அவளது உருவம் மனதில் பதிந்தது. நீல நிற சுடிதார் அணிந்திருந்தாள், அதில் வெள்ளை கற்கலும் சேர்த்து நெய்யப்படிருந்தது. அவள் நடந்து சென்ற போது அந்த கற்களின் மேல் விழும் ஒளி வகுப்பறை எங்கும் பிரதிபளித்தது.

அவளது உடை ஆடம்பரமாக இல்லை ஆனாலும் அதில் ஓர் ஈர்ப்பு இருந்தது அவள் கண்களில் இருந்த சாந்தம். நேருக்கு நேராக அவள் பார்த்தது என்னவோ ஒரு நொடி தான் ஆனால் எனக்குள் ஊடுருவி இருந்தாள்.

அவளை பார்த்ததாலோ என்னவோ? அன்றய பொழுது நல்லபடியாக கடந்தது.

பின்பு வழக்கம் போல் மாலை வீடு வந்ததேன் , அதே விநோத பயணம், யாரும் இல்லாத பேருந்தில் நான் மட்டும். சின்ன வித்தியாசம் மாலை பேருந்தில்

” காற்றுகுள்ளே வாசம் போல் வந்த எனக்குள் நீ
காட்டுக்குள்ளே மழையை போல் வந்த உனக்குள் நான்…… “
என்று யுவன் சங்கர் ராஜாவின் குரல் காற்றில் பரவியது.

இப்போது வீட்டில் யாருமே இல்லை, உணவு மட்டும் தயாராக இருந்தது சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டேன்.

***

டேய் மணி 7 ஆகுது என்று அப்பவின் குரல் கேட்டு கண்விழித்தேன். அட நடந்ததெல்லாம் கனவு என்று முடிவுக்கு வந்தேன்.

கல்லூரிக்கு சென்றாலும் எனது சிந்தனை முழுவதும் கனவை ஆராய துவங்கியது. அந்த ஆராய்ச்சிக்கு கிடைத்த பதில்கள்,

கனவில் நடப்பது நிஜம் போலவே தெரிந்தாலும், அதில் எதிர்கொள்ளும் காட்சிகளும் வேறு முக்கியமாக “அவள்” .

மிக முக்கியமாக கனவு , தொடர்ச்சியாக நிகழ்கிறது அதாவது ” நேற்று விட்ட இடத்தில் இன்று துவங்கும்”.

சற்றே குழப்பமாக இருந்தாலும் நான் ரசிக்கவே செய்தேன். நான் இரட்டை வாழ்கை வாழ்கிறேன் கனவில் ஒன்று, நிஜத்தில ஒன்று.

எல்லோருக்கும் இது போல் நடக்குமா?? என்ற கேள்வி எனக்குள்

யாருக்கு நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? உனக்கு நடக்கிறது வாழ்ந்துதான் பாறேன் என்று கட்டளையிட்டது மனது. இவ்வாறாக ஒரு முடிவுக்கு வந்தவனாக மாலை வீடு வந்தேன் நினைவில் அவள் மட்டுமே இருந்தாள்.

இன்று வருவாளா?? மாட்டாளா? வந்தாள் பேசுவாளா? இப்படி கேள்விகள் பல. சரி பதில்களை காலையில் உணரலாம் என்று படுக்கை அறை நோக்கி சென்றேன்.

***

வெள்ளை உலகம், விநோத பயணம், பழக்கமில்லா முகங்களுடன் பழகிய வகுப்பறை. இன்று அவள் சீக்கிரமே வந்திருந்தால். பச்சை வண்ண சுடிதாரில் வெள்ளை பூக்களுடன் கொள்ளை அழகுடன் வந்திருந்தால்.

வகுப்பறையின் இரு மூலைகளை இணைக்க குறுக்காக ஒரு கோடு போட்டால் அதில் நானும் அவளும் சந்தித்து கொள்வோம்.

பலமுறை எதர்சையாக நான் திரும்பும் போது அவளது பார்வையை உணர்ந்திருக்கிறேன். அனேக முறை எங்களது பார்வைகள் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

பல நாட்கள் கடந்தன அவளிடம் பேசியதே இல்லை. பேசுவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.

***

ப்படி அவளுடன் பேசலாம் என்று யோசித்த படியே நிஜம் கடந்து போனது. என்று எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்தேன்.

***

ன்றும் எங்களது பார்வைகள் மோதிக்கொண்டன. மதியம் அனைவரும் லேப் – க்கு (Lap) அழைத்து செல்ல பட்டோம் காரணம் பிரக்டிகள்ஸ் (Practical).

வழக்கத்திற்கு மாறாக அகரவரிசையில் கம்பியூட்டரின் முன் அமரச்சொன்னார்கள். எனக்கு அருகில் இருந்த இடத்தில் அவள் வந்து அமர்ந்தாள் ஒரு சிநேக புன்னகையுடன். எனது இதயம் பல மடங்கு வேகமாக துடித்தது.

சிறிது நேரம் கழித்து நான் உங்க பெயர் என்ன என்றேன்??

யாழினி என்றாள்

என் பெயர் என்று நான் சொல்ல எத்தனிக்கும் போதே
உங்க பெயர் எனக்கு தெரியும் என்றாள்

எனக்கும் உன் பெயர் தெரியும் உன் குரலை கேட்கனும்னு தான் உன்னிடம் கேட்டேன் என்றேன்.

மிக மிக மெலிதாக சிரித்தாள் கம்பியூட்டரை பார்த்தபடியே

***

லேப் -யில் நடந்ததை நினைத்த படியே எனது நிஜம் நகர்ந்தது. நிஜத்தில்தான் சுவாரஸ்யமாக ஏதும் நடக்கவில்லை கனவிலாது நடக்கட்டுமே.

அது கனவில் நடப்பதும் நல்லதுதான் நிஜத்தில் ஒரு முறை நினைத்துக் கொள்ளலாம். அதுவே நிஜத்தில் நடந்தால், கனவில் வராமல் போகலாம் அல்லவா.

எப்படியோ வாழ்கை சுவரஸ்யமானால் சரி என்று நினைத்துக் கொண்டேன்.

***

ரட்டை வாழக்கை எனக்கு பிடித்துப்போனது, யாழினியிடம் லேப் -யில் ஆரம்பித்த சிநேகம், கைபேசி எண் வரை சென்றிருந்தது. நிஜத்திலும் அளவாக படித்து நல்ல மதிப்பெண்களையும் பெற்றிருந்தேன்.

இந்த கனவை பற்றி எனது நெருங்கிய நண்பன் ஒருவனிடம் மட்டும் சொல்லியிருந்தேன். அவனிடமும் முழுவதுமாக சொல்லவில்லை.

குறிப்பிட வேண்டிய விசயம், இந்த கனவானது இரவில் மட்டுமே வருகிறது. பகலில் தூங்கினாலும் கனவு உலகம் காணகிடைப்பதில்லை. அதன் காரணம் தெரியவில்லை அதனால் நான் பகலில் தூங்குவதைதே நிறுத்திவிட்டேன்.

***

நிஜத்தில் என்ன நடந்தாலும் அது கனவை பாதித்ததில்லை ஆனால் கனவு என்னை நினைவில் பாதித்தது.

ஓர் நாள் யாழினியிடம், ஏதோ கோபமாக பேசிவிட்டேன், அவளும் கோபமாக சென்றுவிட்டாள்.
அன்றிலிருந்து இரண்டு நாட்கள் அவள் வரவே இல்லை.அன்று சனிக்கிழமை , மதிய பொழுதில் , வீட்டில் , எனது அறையில்,

“ஆறுயிரே மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
ஆறுயிரே என்னை மன்னிப்பாயா மன்னிப்பாயா
சொல்லடி என் சகியே
நீயில்லாத இராத்திரியோ காற்றில்லாத
இரவாய் ஆகாதோ “
என்று எனது செல்போனில் ஏ.ஆர். ரகுமானை பாடவைத்துவிட்டு நான் படுத்திருந்தேன், தூங்கிப்போனேன்.

நான் இருந்தது ஒரு மலை முகட்டில் உள்ள ஒர் புல்வெளியில். அது மாலைப்பொழுது சூரியன் தனது கீற்றுகளை சிவப்பாக வீசிக்கொண்டு மலையின் பின்னே மறைய முயற்சி செய்து கொண்டிருந்தது.

யாழினி என்னை நோக்கி சூரியனின் ஒளி கீற்றுகளின் மீது கால் பத்தித்து நடந்து வந்துகொண்டிருந்தாள். வந்ததும் பேச துவங்கினாள் நான் வராதது உனக்கு அவ்வளவு வருத்தமா என்றாள்

ஆமா, ஏன் போன??
சும்மா, நான் வரலைனா நீ என்ன செய்றனு பாக்கத்தான்..
பாத்தாச்சா?? சந்தோஷமா??
ம்ம்ம்ம்ம்.. பார்த்துட்டேன், இப்ப நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்.
என்ன??
இதே யாழினியாவே உன் நிஜழ்க்கையுலும் வரப்போரேன்.
நிஜமாவா???

ஆமா, நிஜமா உன்னோட நிஜத்துக்குள் வரப்போரேன் என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கு நிற்காமல். சூரியனை நோக்கி நடக்க துவங்கினாள்.

நானும் கண்விழித்தேன், பாடலும் சரியாக அப்போது தான் முடிந்தது.

***

நாட்கள் மிக மிக மெதுவாக நகர்ந்தது, இரண்டாம் ஆண்டு முடிந்தது. கொஞ்ச நாட்கள் விடுமுறை. பின்னர், மீண்டும் , அதே கல்லூரி, வகுப்பறை மட்டும் வேறு. வழக்கம் போல் பேருந்தின் படிக்கட்டுகளில் தலைகோதும் காற்றுடன் பயணம்.

இப்போதேல்லாம் கனவுகள் வருவதே இல்லை, நான் காரணம் தேடவும் முயற்சிக்கவில்லை. ஓர் நாள் காலை, பேருந்தைவிட்டிறங்கி, கல்லூரிக்குள் நடந்து போய்க்கொண்டிருந்தேன்.

எனது டிப்பார்ட்மெண்ட் கட்டிடத்தை நெருங்கும் போது, பின்னால் இருந்து ஒரு குரல்.

“எக்ஸ்கியூஸ் மீ”

நான் திரும்பினேன் ,

“ஃபர்ஸ்ட் இயர் கிலாஸ் ரூம்-க்கு எப்படி போகனும் ” என்று ஒரு பெண் கேட்டாள்.
ஒரு நொடி செயலற்று தான் போனேன். காரணம் யாழினி, கனவில் பார்த்த அதே பச்சை நிற சுடிதாரில் வந்திருந்தால்.

பின்னர் சுதாரித்து, மேலே போய் வலது பக்கம் திரும்புங்க என்று சொன்னேன்.

அன்று சொன்னது போல் நிஜத்திலும் வந்துவிட்டாள் யாழினி…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *