விண்ணோடும்,முகிலோடும்…

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 23,863 
 

சென்னை மாகாணம் தமிழகத்தின் அடையாளம். நமது பிரமாண்ட வளர்ச்சியின் நிரூபணம். ஆந்திராவில் இருந்து பிரித்தோமா? இல்லை பாதியை நாம் தாரை வார்தோமா? என்ற எந்த பூர்விகமும் நமக்கு தெரியாது. மதகந்தராஜாவின் பெயரும், சென்னியப்ப நாயக்கரின் பெயரும் மாறி மாறி சூட்டபட்டது. எல்லா மாநில மக்களும் பாதுகாப்பாக வாழும் நகரம் என்று பெருமைபட்டு கொள்ளலாம்.

எப்போதும் நெரிசலும், பரபரப்பும் என்று இருக்கும் சென்னை நாளை விடுமுறையும் கூட. இந்த நகரம் தன் உடல் எடையை கொஞ்சம் குறைத்து கொள்ளும். சற்று ஒய்வு எடுக்கலாம், நிதானித்து மூச்சு வாங்கலாம்.! ஆண்டுதோறும் சில பண்டிகை நாட்களில் கிட்டும் விடுப்பு இது.

பண்டிகை காலங்களில் பல இலட்ச மக்கள் இங்கிருந்து புறப்படுவார்கள். பறவைகள் இரையை தேடி வருவது போல் மீண்டும் இங்கே தான் திரும்ப வேண்டும். நாளை தீபாவளி என்பதால், இன்று மாலையே நானும் பயணப்படுகிறேன். பேருந்துகளும், ரயில்களும் பலுதூக்கும் வீரர்களாக காட்சி அளிக்கிறார்கள்.

விண்ணோடும்,முகிலோடும்2

சென்னையின் பிரதான ஆடை கடைகளின் விளம்பர பைகளை கையில் பற்றிக்கொண்டு பேருந்துக்காக ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம். எதை யாரிடம் திருடுவது என்று தங்களின் தீபாவளி கனவுகளோடு கள்வர்கள் ஒருபுறம், சாமானியனை கள்வன் என வெறித்து பார்க்கும் காவல்துறை நண்பர்கள் மறுபுறம். இந்த இரவின் நாயகர்களாய் மக்கள் புடைசூழ வலம் வரும் டிக்கெட் தரகர்கள் என காட்சிகள் மாறிக்கொண்டே இருக்கிறது.

தொலைகாட்சிகளுக்கு ஆண்டுதோறும் தீபாவளியின் முந்தைய இரவுக்கான தலைப்பு செய்திகளும் கிட்டியது. இந்த விடுமுறைக்காக சென்னையை பிரிவதில் எந்த வருத்தமும் இங்கு இல்லை. ஆனால் இந்த நகரம் மூன்று நாட்கள் மேல் எங்களுக்கு விடுமுறை தருவது இல்லை.

மீண்டும் சென்னை, வாழ்கையை வாழாமலே நகர்த்த கற்றுகொண்டோம். இங்கே எங்கள் ரசனைகளை மறப்போம், பிடித்தவற்றை தள்ளிவைப்போம், அனைவரும் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியாக நடிப்போம். பணம் பண்ண மட்டும் நன்கு அறிந்து கொண்டோம். எனவே கனம் இல்லாத இதயத்தோடு தான் இன்று செல்கிறோம், மீண்டும் திரும்பும் போது எங்கள் உறவுகளின் இதயங்களை அள்ளிக்கொண்டு சுமையோடு தான் வருவோம்.இது ஓர் தொடர்க்கதை தான்.

இதோ மெல்ல பேருந்தில் தொடங்கியது என் பயணம். எறும்புகள் போல வரிசையாக பேருந்துகள் மெல்ல பேருந்து நிலையத்தை விட்டு வெளியேறுகிறது. நகரின் மைய பகுதிகளை கடப்பது இரவில் நமக்கு எரிச்சல் ஊட்டும் ஓர் அனுபவம் தான். இதோ சென்னையின் நெரிசல் பகுதிகளை கடத்து, வனம் கொண்ட எல்லை வழியே சென்று கொண்டு இருக்கிறேன்.

இது இந்த நகரை பற்றிய கதை அல்ல, பயணங்களை பற்றியது.

இன்றைய பயணமும் ஒரு அழகான பயணமாக இருக்கலாம். ஜன்னல் இருக்கை, அழகான இரவு எங்கள் மேல் மெல்லிய போர்வையை விரிக்கிறது. அந்த இருளில் அங்கும், இங்குமாய் இருக்கும் நட்சத்திரங்களோடு பேசி கொண்டு இருந்த என் தோழி என் அருகே வந்தாள்.

நிலவு தான் அது, என் சிறிய பிராயத்தில் வீட்டின் ஜன்னலில் தினமும் நான் சிறை வைத்த நிலவு தான். வீடு வரை நிலவும் என்னுடன் பயணப்படும். என் பயணம் எங்கு நிற்குமோ, அங்கே நிலவும் ஒய்வு எடுக்கும்,மீண்டும் தொடங்கி என்னிடம் பேசி கொண்டே வரும். சில தனிமையான பயணங்களில் நிலவு என்னிடம் பல மெய்சிலிர்க்கும் கதைகளை கூறி இருக்கிறது. அதனிடம் இன்று நான் ஒரு கதை சொல்ல இருக்கிறேன்.

ஓரிரு ஆண்டுகளாய் நிலவை நான் பிரிந்த கதை இது, நிலவும் அறிந்த ஒன்று தான். நிலவின் வெண்ணிறம் அவளின் முகத்தை நினைவுபடுத்துகிறது, அதை நிலவிடம் கூறினேன், ஏளனமாய் நிலவும் சிரிக்கிறது என் தனிமையை எண்ணி.! முந்தைய என் பயணத்தில் நிலவிடம் நான் பேசவில்லை, நிலவும் கூட அவளின் கண்களை கண்ட மாத்திரம் தன்னை அவ்வபோது மேகத்திற்குள் ஒளித்து கொண்டது. அவளின் முழு முகத்தை கண்டதால் வெட்கி எங்கோ சென்று விட்டது, அன்று அமாவாசை தான் திடிரென வந்துவிட்டதோ என்று கூட நம்பினோம்..!

அந்த பயணம் ஏதோ அழகான நதியில், அன்னபடகில் நாங்கள் மட்டும் பயணிப்பதாய் எண்ணினோம். நதியின் அலைகளில் நிலவின் பின்பம் பல நூறாய் தெரிய, அவள் பரவசப்படும் அழகை கண்டு இமைகளை மூடாதவன் போல அவளை பார்த்து கொண்டே பரவசப்பட்டேன்.

காற்றும் மெல்ல ஜன்னல் வழியே வந்து அவள் கூந்தலை என் மேல் பரவிவிட்டு மேலும் காதலிக்க சொன்னது. இரவோ, மெல்லிய மயக்கத்தை அவள் மேல் தூவி என் தோளில் சாய செய்தது. அந்த இரவில் வானத்தை நாங்கள் பார்த்த போது விண்மீன்கள் ஒன்றோடு ஒன்று மோதி முத்தமிட்டு கொண்டன. எங்களை தவிர யாரும் அங்கே கண் விழிக்கவில்லை.

அவளது கை விரல்களும், எனது கை விரல்களும் எங்களை அறியாமல் பிணைந்து களவி கொண்டு இருந்தது. நான்ஆணாக,அவள் பெண்ணாக பிறந்ததன் உளி உணர்ந்தோம். அட்லாண்டாவின் குளிரை அவள் மூச்சு காற்றில் நான் உணர.. எனது உடல் தீயாய் கொதித்தது, நெருப்பின் சுவை என் உதட்டில் இருந்து கொண்டு என்னை எரித்து கொண்டு இருந்தது..!

அந்த மலர் என்னை பார்த்தது, எனது நிலை உணர்ந்து எனக்கு மகரந்த வாசம் அளிக்க என் அருகில் வந்தது. இமைகள் திறந்திருந்தும் விழிகளை மூட செய்த அந்த ஒரு முத்தம் நட்சத்திரமாய் தோன்றியது. அந்த நொடி முதல் ஆகாயம் தனில் புகைப்படமாய் தொங்குகிறது. இன்றும் என் கண்களுக்கு அழகிய நினைவாய் தெரிகிறது,

அதோ..! அந்த முத்தத்தின் ஸ்பரிசத்தில் ஏற்பட்ட மயக்கத்தில் இருவரும் வார்த்தைகள் பேச முடியாமல் எங்களை பார்த்து கொண்டே வந்தோம். அப்போது தான் அவள் கண்கள் பேசியதை என் கண்கள் கேட்டது. அந்த மொழி தமிழை விட இனிமையான ஒன்று. அந்த கருவிழிகள் இரண்டும் வட்டம் இட்டு நின்றது, இமைகளை ஒரு முறை திறந்து மூடினாள். அந்த வார்த்தை என் கண்கள் வழியாக நன்றாக கேட்டேன்.

அவள் கைகளை பற்றிக்கொண்டேன். அந்த இதமான குளிர் காற்றில் சிக்கிய அவள் மெல்ல என் தோல் மேல் சாய்ந்து தூங்க தொடங்கினாள். மேலும் அன்றைய நாள் எங்களை விட்டு பிரிய மனம் இல்லாமல் இரவு தயங்கி கொண்டே மெல்ல விலகி சென்றது. எங்களை காணும் ஆசையில் பகலானது சூரியனை உதிக்க சொல்லி கொண்டிருந்தது.

ஏனோ கதையை நிறித்து விட்டு, அந்த இரவை பற்றி பேச வேண்டாம் என்று நிலவிடம் கோரிக்கை வைத்தேன்… நிலவும் அமைதியாக பின் தொடர்ந்தது..! மரங்களின் பின், மலைகளின் உச்சி, மேகங்களின் உள்ளே என என்னுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே வந்தது…! ஜன்னல் வழியே ஈரப்பதமோடு கலந்து வந்த தென்றல்காற்று என் கைகளை தீண்டியது, அவளின் விரல் தான் உரசியதோ என்று விழித்து கொண்டேன் அந்த நடுநிசியில். நிலவு மெல்ல சிரித்து கொண்டே என் அருகில் வந்து அவளின் நினைவுகளை மேலும் தொடர சொன்னது, என்னாலும் மறக்க முடியாத மற்றொரு இரவின் கதையை நிலவிடம் கூறினேன். இந்த முறை இரவின் அழகை ரசிக்க இருவரும் நடந்து சென்றோம் எங்கள் நகரின் அமைதியான வீதிகளில்..!

அவளோடு நான் களித்த முதல் இரவு அது தான், தேனிலவு இல்லை என்றாலும் அதை விட ரம்யமான மயக்கும் பொழுது. நடந்து கொண்டே பேசி சென்றோம், முதலில் பேச வார்த்தைகள் இல்லாமல் கவிதைகளை கடன் கேட்டோம். பிறகு நங்கள் பேசிகொண்ட வார்த்தைகளை கவிதைகள் இப்போதும் இரவல் கேட்கிறது.. புவிஈர்ப்பு விசை மறந்துவிட்டோம், கால்கள் மிதந்து கொண்டிருக்க கூடும்.

விண்ணோடும்,முகிலோடும்

கடல் அலையும்,அதன் கரையும் தொட்டு தடவி, பிரிந்து சென்று ஊடல் புரியும். எங்கள் தோள்களும் மீண்டும் மீண்டும் அவ்வாறாக காதல் புரிந்தது. மெல்ல அவள் கைகளை பற்றினேன் இப்போது. அவளை விட அவள் கைகள் என்னை மிகவும் காதல் புரிந்திற்க வேண்டும், ஏனெனில் அவள் கைகள் என்னை பிடித்திர மாத்திரம் ஆயிரம் காதல் கூறியது.

சில நிமிடங்களில் யாரோ எதிரே வருகிறார்கள் என்று நினைத்து பட்டாம்பூச்சி சிறகைப்போல படபடத்து கொண்டு பிரித்து கொள்வோம்,சேர்த்து கொள்வோம்…!!

மெல்ல என் தோல் மேல் அவள் சாய்ந்து கொண்டு என் கரங்களை இறுக பிடித்து கொள்வாள். உலகின் மொத்த பலமும் என் தோள்களில் இருந்தது அந்த நொடி. அந்த நம்பிக்கை அவள் கண்களில் தெரிந்தது..!

அந்த இரவை அங்கே நிறுத்திவிட முயன்றும் முடியவில்லை. மெல்ல பிரிந்து சென்றோம். மனம் இல்லாமல் ராட்டினம் ஏறிய குழந்தை போல அவள் இல்லத்தை சுற்றி கொண்டு இருந்தேன்…!!

அவள் இல்லத்தின் மாடியின் மாடத்தில் இருந்து என்னை பார்க்க வருவாள். அப்போது எங்கள் இடைவெளியை ஆயிரம் முத்தங்கள் கொண்டு நிரப்பினோம்..! அதை கண்ட நிலவு நாணம் கொண்டு மேகத்திற்குள் ஒழிந்ததை அதனிடம் நினைவு படுத்தினேன்..!

நிலவிடம் இந்த இரு கதைகளோடு முடித்து கொள்ளும் முன் அவளை வசை பாடினேன். எனக்கு வலியும், இன்பமுமாய் நினைவுகளை கொடுத்து விட்டு எங்கோ சென்ற அவளை திட்டி தீர்த்தேன். என்னை மறந்து விட்டு வாழும் அவளை என்ன செய்வது என்று நிலவிடம் வினவினேன் , மேலும் நினைவுகள் தொடர விரும்பவில்லை. நான் தூங்க செல்ல சில மணி துளிகளே இருந்தது..! இன்றைய பொழுதின் கடைசியாக நிலவு எனக்கொரு கதை கூற தொடங்கியது.. நான் அறிந்திடாத கதை அது..!

உலகின் மற்றொரு எல்லை பகுதி அது, அங்கும் நிலவை மக்கள் கொண்டாடி மகிழ்வர். நிலவு அந்த மக்களின் இன்பங்களை மட்டுமே பார்த்து கொண்டு இருந்தது. அங்கே அழகிய பெண் ஒருத்தி நிலவு விழும் முற்றத்தில் நின்றுகொண்டு இருந்தாள். மிக அழகான பெண் அவள், ஆதலால் அழகே குழந்தையாய் பிறந்திருந்தது..

அவள் கைகளில் இருந்த அந்த மழலை நிலவை தன் புன்னகையால் அழைத்தது.. அவள் நிலவை காட்டி குழந்தையை தூங்க சொன்னாள். சற்று நிலவிடம் விளையாடிய குழந்தை, மெல்ல தூங்கியது.! அந்த குழந்தைக்கு முத்தம் கொடுத்து தூலியில் படுக்க செய்து விட்டு வீட்டின் முற்றத்திற்கு மீண்டும் வந்தாள்.

வானில் ஒரு நட்சத்திரத்தை தேடி கொண்டு இருந்தாள்., ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒவ்வொவொரு காதலர்களின் புகைப்படமாக தோன்றியது. இவளது உரிமையான நட்சத்திரத்தை ஆவலுடன் தேடி கொன்டிருந்தாள். அந்த நட்சத்திரம் இவளை கண்டு சிரிக்கும் போது, இவள் கண்கள் சிரிக்காமல் நீரை வார்த்தது. அந்த நட்சத்திரம் முதல் முத்தத்தை, காதலை, அந்த பேருந்து பயணத்தை நினைவு படுத்தியது..!!

அந்த தேவதை தன் கண்ணீர் வரும் நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டு தவித்து ஓடினாள்..! அழும் குழந்தையை அள்ளி, கொஞ்சி தேற்றினாள். கதைகளும், தாலாட்டுகளும் சொல்லி தூங்க செய்தாள்.

தன் இளவரசன் தூங்கும் அழகை சற்று நேரம் ரசித்து விட்டு, மீண்டும் மாடம் நோக்கி வந்தாள். ஏதோ யோசித்தவளாய், நட்சத்திரத்தை தேட தொடங்கினாள். ஆனால் இப்போது வாசல் அழைப்புமணி ஒலித்தது, அலுவலகம் சென்று திரும்பிய கணவன் வந்துவிட்டான்.

கதவை திறந்த இவளிடம் செயற்கையான புன்னகை உதிர்த்து விட்டு, மாடி சென்றான். உடைகளை மாற்றிவிட்டு, துங்கி கொண்டிருந்த குழந்தைக்கு கடமையுடன் முத்தத்தை கொடுத்தான். உணவு மேஜைக்கு வந்தவன், வேகமாக கொறிக்க தொடங்கினான். உணவின் ருசியோ, பெயரோ பொருட்படுத்தாமல் வேலையை முடித்து விட்டு மாடி படுக்கை அறைக்கு சென்று இவளின் பெயரை உரக்க கூறினான், இவனது அடுத்த தேவைக்கு. இவளின் விருப்பமோ, நிலையோ இவனுக்கு பொருட்டல்ல, தனது தேவை முடிந்ததும் தூங்க சென்றான்.

நித்திரை கொள்ளாமல் தவித்து கொண்டிருக்கும் இவள், மனதில் மின்னல் ஒளி போல் வந்து போகும் அந்த பழைய நினைவுகளை நினைத்து கொள்ளவும் முடியாமல், மறக்கவும் முடியாமல் துடித்தாள். கண்ணீர் சூழ்ந்து இருந்த கண்களுக்குள் தூக்கம் வர, மெல்ல உறங்க தொடங்கினாள்.

இது இவளின் தொடர்கதை தான். இவள் யாரிடமும் தன் கதைகளை கூற முடியாது, நினைத்து கொள்ள முடியாது. இவளை பற்றி என்ன நினைக்கிறாய் என்ற கேள்வியோடு நிலவு கதையை முடித்து கொண்டது.

அவள் யார் என்று புரிந்தும், புரியதவனாய் குழம்பி நின்றேன். என் துயரம் இங்கே தோற்றுப்போனது., அவளுக்கு நான் அளித்த சாபங்கள் என்னை திட்டி தீர்த்தன. இவள் என்னை விட்டு சென்றது இவள் குற்றமென்றால், என் குற்றமும் இங்கே உள்ளது.

எங்களின் உரிமையான நட்சத்திரத்தை எங்கேயாவது கடலின் அடியில் விழுந்து மடிய சொன்னேன். நினைவுகளை வேறு உலகம் தேடி செல்ல கட்டளையிட்டேன். அவள் மேல் நான் வைத்த காதலை அவனிடம் குடிப்பெயர சொன்னேன். அவள் கணவனின் வேறேதும் சோகமோ, துக்கமோ இருந்தால் என்னிடம் தஞ்சம் அடைய கேட்டுக்கொண்டேன்.

அவள் என்னை மறக்க வேண்டும். அவளிடம் இருந்த என்னை வேருடன் பிடுங்கி எடுத்துக்கொண்டேன். இப்போது அவளிடம் எடுத்துக்கொண்ட நினைவுகள் என்னுள் இரட்டிப்பானது. இனி அவள் அழ மாட்டாள் என்ற நம்பிக்கையோடு தூங்க சென்றேன். அதை உறுதி செய்ய அவளை நோக்கி நிலவு புறப்பட்டது,இந்த பண்டிகை பயணமும் ஓர் உன்னத கதையாக முடிந்தது..!!

Print Friendly, PDF & Email

3 thoughts on “விண்ணோடும்,முகிலோடும்…

  1. அருமையான பயணக்கதை ஆசிரியரே… எனக்கும் கூட இரவு பயணம் என்றால் மிகவும் பிடிக்கும் அதும் என்னவருடன் என்றால் சொல்லவே வேண்டாம் … அருமை…எங்களின் இனிய பயண நினைவை நினைக்க வைத்தது ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *