விடிஞ்சா கல்யாணம், முடிஞ்சா காதலி!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 6,561 
 

(தலைப்பை மறுமுறை வாசியுங்கள் நகைப்பு அடங்கி விடும்)

ஊரெங்கும் மணநாள் வாழ்த்து சுவரொட்டிகள், அந்த சுவர்களுக்கே மனதில் ஜோடி பொருத்தம் ஒட்டவில்லை பிறகு எனக்கு எப்படி பிடிக்கும், மணவீட்டின் தெருவெங்கும் ப்ளெக்ஸ் நிற்க மனமில்லாமல் நிற்கிறது, அதில் சிரிப்பவர்களையும் சிரிப்பதாய் நடிப்பவர்களையும் பார்த்து எனக்கு கோவம் வருகிறது, ஒருவழியாக அந்த வீட்டை நெருங்கிவிட்டேன், சற்று நடுக்கம் வருகிறது, அந்த வாழைமர நுழைவுவாயில், இயற்கையாக பழுக்க காத்திருந்த வாழைமரம் பாதியிலே வெட்டப்பட்டு இருமர வாழைத்தார் பூக்களும் வழுக்கட்டாயமாக கட்டிவைக்கபடுவது ஏற்பாட்டு திருமணத்தை எதிரொலித்தது.

வந்த வேலையை விட்டுவிட்டு என் எண்ணகளுடன் அலை பாய்கிறேன். யாருக்கும் தெரியாமல் அந்த திருமண பந்தலில் நுழைந்து விட்டேன், நான் அவ்வளவு நேர்த்தியாக பதுங்கி செல்கிறேனா? இல்லை யாரும் பார்த்தும் கண்டுகொள்ள வில்லையா என்று எனக்கே புரியாத அளவுக்கு அந்த வீடு பரபரப்பாக இருந்தது. ஒரு வழியாக, இல்லை…இல்லை., பல வழியாக வர வேண்டிய மணப்பெண் அறைக்கு வந்து விட்டேன். பரிதவிக்கும் என் எண்ணங்களால் பல கோணங்களில் அவளை தேடுகிறேன். கொடுத்துவைத்த அந்த பெட்ரூமின் டியூப்லைட் நினைக்கும்போதெல்லாம் அவளை பார்த்து கண் அடிக்கிறது. சொரணை வரும்போதெல்லாம் அந்த பேனோ டாப் VIIEWவில் அவள் அழகில் மயங்குகிறது. சில சமயம் மின்சாரம் இல்லாதபோது கூட மயக்கம் குறைவதில்லை.

கண்ணோரம் கலைந்த மை அவள் அழகை சீர்குலைக்க முயற்சித்து தோற்றிருந்தது, ஆணாக பிறந்ததுக்கு ஆக்சிஜனாக பிறந்திருந்தால்கூட அவள் சுவாசநாளங்களில் சுகித்து சுத்தமாகிருக்கலாம், செவ்விதழ் ரேகையின் மேடுபள்ளங்களை கடக்க, கலைத்து உமிழ்நீராகிறேன். அவள் பெருமித புன்னகை பொலிவில், அணிந்திருந்த பொன்நகைகள் மங்கி மறைந்து கொண்டன. கழுத்தில் கனத்த முடிச்சுடன் முடித்து கொள்வோம் ஏனென்றால் கீழும் பருவமேடுகளில் எந்தமிழுடன் நான் பயணித்தால் அவள் கற்பு கலங்கபட்டு விடுமோ என்ற பயத்தில் தமிழுக்கும் எனக்குமே பெரும் பொறாமை போராட்டமே நடக்கிறது. மொத்தத்தில் மணக்கோலத்தில் அவளின் தோற்றம் அறை வெளிச்சத்திலும் பிரகாசித்தது.

அந்த அதிபிரகாச திருப்தி புன்னகையிலும் எனக்கு ஏதோ சந்தேகம் உணர்வு பிறக்கிறது, அது, நள்ளிரவு நேர, அலங்கார, ஆபரண, மணக்கோல படுக்கை என சந்தேகம் வளர்கிறது.அந்த சந்தேகத்தை கொலை செய்ய எதயோ தேடுகிறேன்,பரபரக்கிறேன்,பரிதவிக்கிறேன்.. என் சந்தேகம் வென்றது அது என்னையும் கொன்றது, அய்யோ! மறுக்கிறேன் நான் உணர்ந்ததை, பார்ப்பதை…. , அவள் வலதுகை விரல்கலின் பிடியில் இருந்து அந்த கத்தி குற்ற உணர்ச்சியில் ரத்த கண்ணீர் வடித்து விடாபிடியாக விலகி கீழே விழுந்து கூர் மழுங்கி தற்கொலை செய்து கொள்கிறது.

அந்த கத்தி மட்டும் என்ன விதிவிலக்கா? அவளை தீண்டினால் இறந்துவிடுவாள் என்று அதற்கு தெரியாது, தெரிந்திருந்தால், என்னை போன்றே தீண்டாமல் இருந்திருக்கும், அதுவும் அழகில் மயங்கி அவள் ஒத்துழைப்போடு அவளை தொட ஆசை கொண்டு அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டதுதான் அதன் தற்கொலைக்கும் காரணம். இடதுகை மணிக்கட்டில் இரத்தம் துளி துளியாக சொட்டுகிறது.

அந்த சொட்டுகள் ஒவ்வொன்றும் என் தலையில் கொட்டுகிறது, உடலை தாண்டி உயிரிலும் அவள் பெயரை வெட்டுகின்றன. அவள் என் காதலை ஏற்க மறுத்தபோது நான் செய்ய நினைத்தது, அவள் இன்று செய்து கொண்டது என் மூளையை முடங்க செய்கின்றன, என் இதயத்தை இடறி விட்டவள் இப்போது இறந்துகொண்டிருக்கிறாள், உயிர் வாங்கும் அவள் நிம்மதி பெருமூச்சு என்னை புயலென புரட்டி போடுகிறது. கதவை உடைக்கிறேன், ஜன்னலை நெளிக்கிறேன், புக முயல்கிறேன் இறுதியில் கதறுகிறேன், கூப்பாடு போடுகிறேன் யாரும் வரவில்லை, என்னால் எந்த பாதிப்பும் நிகழவில்லை, அவளால் பாதிப்புக்குள்ளானதை தவிர, என்னால் ஏன் அவளை காப்பாற்ற முடியவில்லை?

அய்யோ! மறந்துவிட்டேன்.., நான் இறந்ததை., இப்போதுதான் ஞாபகம் வருகிறது தலை, உடல், மூளை, இதயம்.. ஒன்று மட்டும் புரிகிறது நான் உளறிகொண்டிருக்கிறேன். இறந்ததை மறந்து இறந்து கொண்டிருக்கிறேன். கண் முன்னே காதலி உயிர் கடந்து கொண்டிருக்கிறது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

விடிஞ்சா கல்யாணம் கடைசியா ஒருமுறை காதலியை, அடுத்தவன் மனைவி ஆவதற்குள் காண நினைத்தற்கு தண்டனையா? இல்லை என் காதலியாகவே அவள் வாழ்க்கையை முடித்துகொண்டது என் சிந்தனையா? எது எப்படியோ என்னவள் இறப்பிற்கு நானே காரணமானாலும் இறப்பை மட்டுமாவது நான் சொந்தம் கொண்டாடினாலும் இத்தனை நாள் தன் காதலை மறைத்து வைத்தவள், மரணத்தில் எதை மறைத்து வைத்திருக்கிறாளோ அது அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

இறந்ததால் இரந்து கேட்டுகொள்கிறேன் தயவுசெய்து காதலில் சேர சாதலை விரும்பாதீர்கள், அவளும் நானும் இருந்தபோதும் சேரவில்லை, அவள் இருந்து நான் இறந்த போதும் சேரவில்லை, இருவரும் இறந்த பின்னும் காதல் சேர்க்கவில்லை. ஆதலால் காதல் இறந்தபின்னும் கண்டிப்பாக சேர்க்காது., முடிந்தால் சேர்ந்து வாழுங்கள், இல்லையேல் பிரிந்து காதலியுங்கள். காதலுக்காக சாகாதீர்கள், சாகடிக்காதீர்கள்.

Print Friendly, PDF & Email

1 thought on “விடிஞ்சா கல்யாணம், முடிஞ்சா காதலி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *