வானவில் காலம்

 

அலைபேசி இனிய பாடலொன்றை வழியவிட்டதில் புகைப்படத்திலிருந்து தன்னிலைக்கு வந்தான் ரிஷி. அழைத்தவள் நந்தினி. இவள் எதற்கு?? யோசித்தவாறே எடுத்தவன், “சொல்லு” என்றான்.

“நான் நந்தினி பேசறேன்”

“ம்ம்.. சொல்லு”.

“உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”.

“என்ன??”

போன்ல வேணாம். நேர்ல சொல்லறேன். இன்னக்கி சாயந்திரம் அஞ்சு மணிக்கு நாம வழக்கமா சந்திக்கிற பீச்சுக்கு வரமுடியுமா?”

“அஞ்சு மணிக்கா? நான் முக்கியமான ஒருத்தரை மீட் பண்ணணுமே”.

“ஓ.. அப்படியா!” ஏமாற்றம் தொனித்தது அவள் குரலில். “அப்போ நாளைக்கு?”

சற்றே யோசித்தவன், “இல்ல, இன்னக்கே பாக்கலாம். என்னோட வேலைய முடிச்சிட்டு கால் பண்றேன். அதுக்கப்பறம் கிளம்பிவா. வழக்கமா சந்திக்கற இடத்துல இரு” சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான்.

வந்த வேலை சீக்கிரமே முடிந்துவிட மாலை 5.10-க்கு நந்தினியை அழைத்தவன், “என்னோட வேலை முடிஞ்சிடுச்சு. நான் சரியா அஞ்சரை மணிக்கு அங்க இருப்பேன், வந்துரு” சொல்லிவிட்டு தன் பைக்-கை கிளப்பினான்.

ரிஷி, சிறந்த ஓவியன். புகைப்படக்கலைஞனும் கூட. ஓவியத்தின் மேல் தீராத காதல் அவனுக்கு. ஓவியம் என்றால் ரிஷி-தான் என்று சொல்லுமளவுக்கு வரவேண்டும் என்பதை லட்சியமாய்க் கொண்டிருப்பவன். தான் எடுத்த படங்களை எல்லாம் ஓவியமாகத் தீட்டி சரிபார்த்துக் கொள்வான். தற்போது அவனைத்தேடி வாய்ப்புக்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.

நந்தினி, நன்றாகப் பாடுவாள். நல்ல குரல் வளம். கொஞ்சம் போல வரையவும் வரும் அவளுக்கு. ரிஷியின் ஓவியங்கள் என்றால் கொள்ளைப்பிரியம். அவள் வரையும் ஓவியங்களை முதலில் ரிஷியிடம்தான் காட்டுவாள். அவனும் திருத்தங்கள் சொல்வான். ஓவியம் தவிர பொது விஷயங்கள் நிறைய பேசுவார்கள்.

இப்படி போய்க்கொண்டிருந்தபோதுதான், தன்னையும் அறியாமல் ரிஷியின் மேல் காதல் கொண்டிருப்பதை உணர்ந்த நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம், ரிஷியின் காதலும் அதில் அவன் தோற்றதும் இன்னமும் அந்தப் பெண்ணின் நினைவிலேயே அவனிருப்பதும்தான். இவற்றை ரிஷியே பலமுறை சொல்லியிருக்கிறான்.

ஐந்தரை மணிக்கு பீச்சுக்கு வந்த ரிஷி, நந்தினிக்காக காத்திருக்கத் தொடங்கினான். பெருகிவரும் வெண்ணிற அலைகள் முன்னோக்கி வர அவன் நினைவுகளோ பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

நந்தினியை முதன்முதலாக அவன் சந்தித்தது இந்த இடத்தில்தான். நீண்டநாட்களாய் அவர்களிடையே பாலமாக இருந்த இணையம் அவர்களை கடற்கரையில் சந்திக்க வைத்தது ஒருநாள். அந்த முதல் சந்திப்பில் அவன்தான் ரிஷி என்பதை நம்பமுடியாமல் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்ட நந்தினியை நினைத்து மலர்ந்தவனின் முகம் சட்டென்று மாறியது. காரணம், நந்தினி அவனிடம் சொன்ன காதல்.

ஒருநாள் தொலைபேசியில் அழைத்தவள், “ரிஷி! உங்க கிட்ட நான் ஒன்னு சொல்லணும்..” என்றாள் தயக்கமான குரலில்.

“சொல்லு நந்தினி! என்ன விஷயம்” என்றவனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள்.

“நான் உங்களை விரும்பறேன் ரிஷி. உங்க கூடத்தான் வாழணும்னு ஆசைப்படறேன்” என்று மனதிலுள்ளதை பளிச்சென்று சொன்னாள்.

இதைக் கேட்டுத் திகைத்துப் போனான் ரிஷி. சற்றே அதிர்ந்தவன், “தெளிவா சொல்லறேன் கேட்டுக்கோ நந்தினி. எம்மனசுல இன்னொருத்திக்கு இடம் கிடையாது”.

அவன் பேச்சை இடைமறித்தவள், “அப்போ கல்யாணமே பண்ணிக்க மாட்டீங்களா?”

“நா அப்படி சொல்லலையே! நிச்சயம் பண்ணிக்குவேன் ஆனா, அது காதல் கல்யாணமில்ல. உனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்ததே தப்பு” என்றான்.

“நான் உங்களை விரும்பறது தப்புங்கறீங்களா?”

“தப்புன்னு சொல்லல. காதலிக்கிற உரிமை எல்லாருக்கும் இருக்கு. என்னை எத்தனையோ பேர் விரும்பறதா சொல்லறாங்க. அவங்களை எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? உனக்கும் ஓவியத்துல இஷ்டம்ங்கற ஒரே காரணத்துனாலதான் உங்கிட்ட பேசிட்டு இருக்கேன். இல்லைன்னா பேசக்கூட மாட்டேன். நல்லா தெரிஞ்சுக்க” என்றான்.

திகைத்துப் போயிருந்தாள் நந்தினி.

அவன் தொடர்ந்தான். “என் கவனம் இப்போ ஓவியம் மேலதான் இருக்கு. அதுல பெரிய ஆளா வரணும். இதுக்கு நடுவுல வேற எதும் வர நான் அனுமதிக்க மாட்டேன். இனி என்னிடம் பேசறதும் பேசாமலிருப்பதும் உன்னிஷ்டம்” சொல்லிவிட்டு துண்டித்தான்.

அதன்பிறகும் அவர்கள் சந்திப்பு தொடர்ந்தது. அப்பொழுதெல்லாம், பேச்சு ஓவியத்தைப் பற்றியதாக மட்டுமே இருந்து வந்தது. நந்தினியின் பேச்சில் வித்தியாசமிருப்பதாகவே பட்டது ரிஷிக்கு. மனதளவில் சுருங்கிப் போக ஆரம்பித்தான். இன்று அவளாகவே அழைக்க, மறுப்புச் சொல்லாமல் வந்து உட்கார்ந்திருக்கிறான்.

நேரம் போய்க் கொண்டே இருந்தது. சற்று நேரம் கழித்து அவள் வருவது தெரிந்தது. அருகில் வந்த நந்தினி அவனுக்கெதிரே மணலில் அமர்ந்தாள்.

“சொன்ன நேரத்துக்கு எப்பவுமே வரமாட்டியா? யூ ஆர் வேஸ்டிங் மை டைம்” கோபத்தில் கத்தினான்.

“இது பீச். இங்க உங்களுக்கு முன்னாடி வந்து வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது. பல பிரச்சனைகள் இருக்கு. புரிஞ்சுக்கோங்க” நிதானமாய் சொன்னாள் நந்தினி.

“சரி சொல்லு. என்ன பேசணும் எதுக்காக என்ன வரச் சொன்ன?”

“அவசரப்படாதீங்க. உங்க நேரத்தை நான் அதிகமா எடுத்துக்க போறதில்ல. பதினைஞ்சு நிமிஷம் போதும்”.

“சரி சொல்லு” வாட்சைப் பார்த்தவாறே கேட்டான்.

சற்றே மெளனித்தவள், அனைத்தையும் சொல்லிவிடுவது என்ற முடிவோடு ஆரம்பித்தாள்.

“ரிஷி! என்னைப் பத்தி நீங்க என்ன வேணா நினச்சிருக்கலாம். தப்பா கூட நினைச்சிருக்கலாம் மத்த பொண்ணுங்க மாதிரிதான் இவ அப்படின்னு. உங்க கிட்டஅதிகமா உரிமை எடுத்துகிட்டது என் தப்புதான். அம்மா, அப்பா போனதுக்கு அப்பறம் தாத்தாதான் என்ன வளத்தார். அவரும் இறந்ததுக்கு பிறகு, யாருமே இல்லாத உலகமா தெரிஞ்சுது எனக்கு. ஓவியக் கண்காட்சில உங்க ஓவியம் எனக்கு ரொம்ப பிடிச்சது. அத பாத்துட்டுதான் உங்களுக்கு மெயில் பண்ணினேன். அதுக்கப்பறம் உங்களோட அறிமுகம். விளையாட்டா நான் வரைஞ்ச படங்களை ஒருநாள் உங்க கிட்ட காட்டினப்போ திருத்தங்கள் சொல்லி வரைய ஊக்குவிச்சீங்க. எனக்கு வாழ்க்கைல ஒரு பிடிப்பு கெடச்ச மாதிரி இருந்துச்சி. அது என்னை தீவிரமா ஓவியத்துல கவனம் செலுத்த வச்சிது. உங்களை முன்மாதிரியா வச்சிதான் நான் வரைய ஆரம்பிச்சேன். நிறைய கத்துகிட்டேன் கூடவே… காதலையும் தான்”.

சொல்லிவிட்டு சற்றே நிறுத்தினாள் நந்தினி. அவன் அவளையே பார்த்தபடி இருந்தான்.

“உங்களை விட்டுட்டுப் போன காதலி மேல இன்னமும் நீங்க வச்சிருக்கற காதல்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. எல்லாத்தையும் இழந்துட்டு நின்ன எனக்கு உங்களோட அறிமுகம்தான் வாழ்க்கைல ஒரு பிடிப்பை தந்துச்சி. உங்ககிட்ட ஓவியம், அன்பு, பாசம், காதல் இதெல்லாம்தான் எதிர்பார்த்தேன். அதைத் தரமுடியாதுங்கும்போது எதிர்பாக்கறது தப்புதான். என்னால நீங்க டிஸ்டர்ப் ஆகறதை நான் விரும்பல. எனக்கு உங்களோட ஓவியம் முக்கியம். அது மேல ரொம்ப மதிப்பு வச்சிருக்கேன். அதுக்கு என்னால எந்த பாதிப்பும் வந்துரக்கூடாதுன்னு நினைக்கறேன்”.

தொடர்ந்தவளை இடைமறித்த ரிஷி, “உன்னால பாதிக்கப்படறேன்னு நான் சொன்னனா?” சூடாய்க் கேட்டான்.

அவனை அழுத்தமாய்ப் பார்த்தவள், “உங்க ஓவியத்துல முதல் மாதிரி இப்போ உணர்வுகள் வெளிப்பட மாட்டேங்குது. எப்பவும் போல இயல்பா இருக்கமாட்டேங்கறீங்க. இது ரொம்ப நாளா இருக்கு. இது என்னாலதாங்கற ஒரு குற்ற உணர்ச்சி எனக்குள்ள இருந்துட்டே இருக்கு. அதுவுமில்லாம இப்பல்லாம் என்னோட ஓவியங்கள்ல நீங்க அக்கறை காட்டறது இல்ல. தவறுகளை சுட்டிக்காட்டறது இல்ல. எனக்கு அது வேணாம். எப்பவும் போல இருக்கற ரிஷிதான் எனக்கு வேணும். எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு காமிச்சது ஓவியம்தான். எனக்கு அது வேணும். உங்களை நேசிக்கறத விட ஓவியத்தை அதிகம் விரும்பறேன். அது இல்லாம நானில்லை. எப்பவும் போல குறைகளை திருத்துவீங்கன்னு நம்பறேன் ரிஷி. இனி காதல் பத்தி பேச மாட்டேன். அது என் மனசோடவே இருந்திட்டுப்போகட்டும். இது என் காதலின் கடைசி வர்ணங்களைத் தொட்டு நான் வரைஞ்சது. இந்தாங்க” என்றபடி அவன் கையில் அந்த ஓவியத்தைத் தந்தவள், அவனை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினாள்.

திகைத்துப் போய் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷியின் கரங்களில், தன் தலைவனைப் பிரிந்து தனிமையில் வாடும் பெண்ணொருத்தியை, மரக்கிளையில் தனித்து அமர்ந்திருக்கும் மணிப்புறா ஒன்று தலைசாய்த்துப் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது.

- மே 2008 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)