வனவாசம் போகும் இராமர்கள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 22, 2012
பார்வையிட்டோர்: 13,100 
 

“ஜோதி!” குசுனியிலிருந்து அம்மா கத்துவது கேட்டது. “சே! இவங்களுக்கு வேற வேலயே இல்ல”. எனக் குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. காதில் எதுவும் விழாதது போல ரூம் கதவைச் சாத்தி விட்டுப் படுக்கையில் விழுந்தேன்.

இந்த அம்மாவுக்குச் சமீப காலமாய் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அதுவும் அவர் வேலைக் குச் செல் வதை நிறுத்திவிட்டு வீட்டிலிருந்ததிலிருந்துதான் ரொம்பவும் மோசம். “ஜோதி, காலையிலேயே எழுந் திருச்சிரு. ஜோதி, இன்னிக்கு நீ சமை. ஜோதி, அந்தத் துணியெல்லாம் துவச் சுடு. ஜோதி, அப்பாவுக்குச் சுடு தண்ணி ஊத்திக்கொடு. ஜோதி, காலை அமுக்கிவிடு.” சே!

அம்மா வேலைக்குச் சென்ற சமயங்களில் இப் படியா என்னை வேலை வாங்குவார். அப்பொழுது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். நான் படித்த ‘போலி டெக்னிக் கல்லூரி’ பகாங்கில் என்பதால் ஆறு மாதத் திற்கு ஒருமுறைதான் கோலாலம்பூரில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு வர முடியும். அப்போதெல்லாம் விடு முறை என்பதால் எல்லா வேலைகளையும் நான் செய்ய முற்படு வேன். ஆனால் அம்மா விடமாட்டார். காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பார் என்றே தெரியாது. எல்லா வேலைகளையும் முடித்து விட்டு வேலைக்குக் கிளம் பியிருப்பார். பத்தாதற்கு வீட்டுக்கு வேறு போன் பண்ணி “எதுவும் செய்ய வேண்டாம். நல்லா ஓய்வெடு” என்பார்.

அப்படிப்பட்ட அம்மாவுக்குத்தான் இப்போது என்ன ஆனது என்றே தெரியவில்லை. காலையில் எழுந்ததில் இருந்து படுக்கும் வரை ஏதாவது வேலை செய்துகொண்டே இருக்க நான் என்ன ரோபோட்டா? கேட்டால், இத்தனை நாட்கள் நான் செல்லமாக வளர்ந்து விட்டேனாம். இப்போது வயது ஏறி விட்டதாம், குடும்ப பொறுப்புகளை ஏற்றுப் பழக வேண்டுமாம். மண்ணாங் கட்டி!

வயது ஏறினால் குடும்ப பொறுப்புகள் மட்டும் தானா என்ன? மற்றக் கனவுகளும் ஆசைகளும் இருக் காதா? வயது மாற்றத்திற்கு ஏற்ப அவை மாறுபடாதா? பதினெட்டு வயதுவரை மழையில் நனைய வேண்டும், சைக்கிள் ஓட்ட வேண்டும், நான் மட்டும்தான் அழகாக இருக்க வேண்டும் என்ற கனவு. பிறகு, கல்லூரியில் படிக்க வேண்டும், அந்த வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்க வேண்டும் என்ற கனவு. அனுபவித்தாயிற்று…இப்போது என் கனவுகள் மாறுப்படுகின்றன. நான் மற்றப் பெண்களைப் போல் வேலைக்குச் செல்ல வேண்டும். அதுவும் தனியாக எங்காவது தங்கி. என்னுடன் படித்த தோழிகளில் சிலர் அப்படித்தான். படிப்பு முடிந்தவுடன் வீட்டை விட்டு வெளியேறித் தூரமாக தங்கி வேலை செய்கின்றனர். அவர்களுடன் பேசும்போது ஏக்கமாக இருக்கும். எனக்கும் அந்த வாழ்க்கைக் கிடைக் காதா என்று.

காரணம் வேலைக்குச் செல்லும் நேரம் தவிர, மற்ற நேரம் அவர்களின் ராஜ்யம்தான். என்னைப் போல இத் தனை மணிக்கு இந்த வேலை செய்ய வேண்டும் என்ற சிறைக்குள் இல்லை அவர்கள். இஷ்டப் படி ஆடை உடுத் தலாம். பிடித்த நேரத்தில் பிடித்த விஷயங்களைச் செய்ய லாம். தியேட்டரில் வெளியாகும் எந்தப் படத்தையும் விட்டு வைப்பதில்லை யாம் அவர்கள். நான் டிவி முன் உட் கார்ந்தால் போதும். “டிவி பார்த்து பழகாதே, அதே பழக்க மாயிடும், வேலை செய்யத்தோணாது” எப்படி அம்மாவால் இப்படிச் சொல்ல முடியுமோ தெரியாது. அவரைப் போலவே நான் ஆக முடியுமா? ஆனால், அதே என் தம்பியென்றால் பார்க்க வேண்டுமே, காலையில் சோபாவில் படுத்தால், இரவுவரை அவன் பார்க்கும் சேனலைத் தான் அனைவரும் பார்ப்பார்கள். கேட்டால், தூரமாகத் தங்கி வேலை பார்க்கிறானாம். இரண்டு நாட்கள்தான் வீட்டில் இருக்கிறானாம். ஆனால் ஐந்து நாட்கள் அவன் அங்கே எப்படி ஜாலியாக இருக்கிறான். அது போதாதா! என் வீட்டின் முன் வீட்டில் கூட ஒருவர் தங்கி வேலை செய்கிறார். மிஸ்டர் மனோகர் என்று. மலாயா பல்கலைக் கழகத்தில் விரிவுரைஞராகப் பணிபுரிகிறாராம். வயது நாற்பதுக்கு மேல் இருக்கும். இன்னும் திருமணமாகாத தால்தான் ‘மிஸ்டர் மனோகர்’ என்று அழைப்பதை விரும்பு வதாகக் கூறுவார். அவரின் வாழ்க்கைதான் எவ்வளவு சுதந் திரமானது. சனி, ஞாயிறு என்றால், சரியாகப் பதினொன்று அல்லது பதினொன்றரைக்கு மேல்தான் ஜன்னல்கள் திறக்கப்படும். தினமும் ஓர் ஊர்க்கார பெண்மணி வந்து, வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு சமைத்து வைத்து விட் டுப் போவார். அவர் தினமும் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு வருவார். புத்தம் புதுப் புத்தகங்கள். எட்டு மணிக்கு ‘டிவி’ சத்தம் கேட்பதற்கு முன்பும், இரவு ஒரு மணிக்கு மேல் அந்தச் சத்தம் ஓய்ந்த பின்பும் அவற்றைப் படிப்பாராம். அவருடன் பேச, பழக ஆரம்பத்திலிருந்து கொஞ்ச நாட்களாக நான் மறந்தே போயிருந்த என் வாசிப்புப் பழக்கம்; மீண்டும் தொற்றிக் கொண்டு விட்டது.

நானொன்றும் எல்லா நேரங்களிலும் புத்தகங்க ளைப் படித்துக் கொண்டு இருக்க வேண்டுமென்று ஆசைப் படவில்லையே. படிப்பதற்குக் கொஞ்சமாவது நேரம் வேண் டும் என்றுதானே ஏங்குகிறேன். இப்போதெல்லாம் எனக்கு எங்கு நேரம் இருக்கிறது? நேரமே இருப்பதில்லை. அம்மா வின் முரட்டுக் குரலில் ஐந்து மணிக்கு எழும் எனக்கு இரவு பத்து மணிவரை கூட ஓய்வு கிடைப்பதில்லை. எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, படுக்கையில் விழும்போது காய்ச்சல் கூட வந்துவிட்டிருக்கும். பிறகெங்கே படிப்பது, பாடல் கேட்பது எல்லாம்…? வழக்கம் போல இவற்றை யெல்லாம் சிந்தித்த பிறகு விழியோரங்களிலிருந்து கண்ணீர் வழிந்து ஓடியது. “ஜோதி, சீக்கிரம் கீழே வா. வந்து தம்பி யோட ‘யூனிபோர்மை’ துவைச்சுப் போடு.” என் கோபம் அதிகரித்தது. இன்று என்ன ஆனாலும் சரி, நான் என் வேலையைப் பார்க்கப் போகிறேன். எனக்கு அடுக்கி வைக்க நேரமில்லாததால் இப்போதெல்லாம் கலைந்து போய் கிடந்த புத்தகக் குவியல்களிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தேன். பாரதிதாசனின் குலவிளக்கு. முதல் பக்கத்தைத் திறந்தேன். “மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திடல் வேண்டும்”.

புத்தகத்தை வேகமாய்த் தூக்கி எறிந்து விட்டுக் கீழே இறங்கினேன். தம்பி ஹாலில் கால் மேல் கால் போட் டுக் கொண்டு ‘டிவி’ பார்த்துக் கொண்டிருந்தான். அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு ஒய்யாரமாய்ப் படுத்திருந்தார்.

நான் ஆணாகவே பிறந்திருக்கலாம்… என் தம் பியைப் போல, அப்பாவைப் போல, ஏன் அந்த மிஸ்டர் மனோகர் போல சுமைகளில்லாத, சுதந்திரமான வாழ்க்கை வாழலாம். என் தம்பியும் மிஸ்டர் மனோகர் போல தனியாகத்தான் பூச்சோங்கில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி வேலை செய்கிறான். அங்கும் ஜாலியான வாழ்க்கை, இங்கு வந்தாலும் ராஜ கவனிப்பு. எனக்கும் மலாக்காவில் வேலை கிடைத்தது. போக விட்டார்களா? நான் பெண் பிள்ளையாம், அவ்வளவு தூரம் தனியாகப் போய்த் தங்கக் கூடாதாம். படிக்கும் போது ‘ஹாஸ்டல்’ பரவாயில்லையாம். இப்போது வீடு வாடகைக்கு எடுத்துத்தங்க வேண்டும் என்பதால், வேண்டாமாம். ஏதாவது ஆகிவிடுமாம். என் சம்பளம் ஒன்றும் தேவையில்லையாம். படிக்க வைப்பது வரை அவர்கள் பொறுப்பாம். இனி திருமணம்தானாம். வெங்காயம்…!

திருமணம் என்று சொன்னவுடன் ஞாபகம் வருகிறது. இந்தப் பேச்சு ஆரம்பித்துச் சென்ற மாதம் நிச்சயம் நடந்ததிலிருந்துதான் அம்மாவின் அதட்டல்கள் இன்னும் அதிகமாகிப் போயின. எனக்குத் திருமணம், பிறகு அதனை யொட்டிய வாழ்க்கை இதைப்பற்றியெல் லாம் பெரிதாக ஞானம் ஒன்றும் கிடையாது. ஆனால் இருவரில் யாருக்காவது நோய் வந்துவிட்டாலோ, இல்லை ஏதாவது பிரச்சனை என்று வந்து விட்டாலோ, என் அப்பாவும் அம்மாவும் ஒருவருக் கொருவர் துணையாகவும், ஆறுதலாகவும் இருப்பதைப் பார்த்து ஆண் பெண் பந்தத்திலும் அன்பிலும் நல்ல அபிப்ராயம் எனக்குண்டு. எனக்கென்னவோ, வாழ்வில் அனுபவிக்க இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பதாய் பட்டது. எந்த வட்டத்துக் கொள்ளும் மாட்டாமல், கண் ணில் படும் அப்பாவி ஆண் களைக் கிண்டலடித்துப் பிறகு அவர்களைச் சுத்தமாய் மறந்து போவதும் சந்தோஷமாய் தான் இருந்தது.

இந்த நந்தாவை எங்கள் வீட்டில் ஒன்றும் தேடிப் பிடிக்கவில்லை. நான் அடிக்கடி சென்று கலந்து கொள்ளும் ஓவிய வகுப்பில் என்னைப் பார்த்துவிட்டு அவர்தான் வந்து பெண் கேட்டார். அதுவும் என்னிடம் ஒரு நாள் கூட பேசிய தில்லை. எனக்குத் தெரியாமலேயே வேறு யார் யாரிடமோ விசாரித்து, என் அப்பாவிடமே பேசி, வந்து நிச்சயத்தையும் முடித்து விட்டுப் போய்விட்டார். இந்த இரண்டு மாதங்களில் என்னிடம் ‘போனில்’ கூட பேச ஆரம்பித்துவிட்டார். அதென்னமோ அலுவலகத்தில்தான் வேலை பார்க்கிறார். ஆனால், கண்டிப்பான ஆசிரியர் போலவே பேசுவார். அதனால், அவரிடம் பேசுவதற்கு ஆர்வம் இல்லாதது போலவே தயக்கமும் இருப்பதில்லை. அப்பா ஏதாவது சொல்லும் போது மாங்கு மாங்கு என்று தலையாட்டுவதைப் போலவே அவரும் பேசும்போது தலையாட்டிக் கொள் வேன். திருமணத்திற்கு பிறகு, நான் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும், படிக்க வேண்டும் என்று தயங்கித் தயங்கிச் சொன்னபோது ஒன்றுமே யோசிக்காமல் சரி என்று சொன்னதில் எனக்கும் அவரைக் கொஞ்சமாய்ப் பிடித்து தான் போனது. அதோடு அவர் தனியாகத் தங்கி வேலை செய்வதால் தனிக்குடித்தனம் என்றும் வேலைகள் அதிகமாக இருக்காது என்றும் எனக்குப் பிடித்த பொழுது போக்கு களைச் செய்யலாம் என்றும் கூறியிருந்தார். என்னவோ திருமணத்திற்கு முன்புதான் ஆண்கள் இப்படியெல்லாம் சொல்வார்களாம். பிறகு சுயநலவாதிகளாக மாறிவிடுவார் களாம். ஏற்கெனவே குடும்பமும் குடித்தனமுமாய் ஆகி விட்ட தோழிகள் கூறியிருந்த தால் நான் அதுவரை காத் திருக்காமல் இப்போதாவது என் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் சின்னதாய்ப் போராடிக் கொண்டிருக் கிறேன். என்ன செய்வது, பெண்ணாய்ப் பிறந்தாயிற்று. துவைத்த துணி களைக் காய வைத்துவிட்டு, அம்மாவிடம் சென்றேன்.

அடுத்த வேலையைச் சொல்ல வாய்த்திறப் பதற்கு முன் நான் சொல்லி முடித்தேன். “அம்மா, நான் வீணை புக் ஸ்டோர்க்கு போய்ட்டு வர் றேன்மா. கொஞ்சம் புக்லாம் வாங்கணும். ரொம்ப நாளாச்சு அங்க போய்”. வழக்கம் போலவே தடுத்தார், “என்ன விளை யாடுறியா? இனிமே முன்ன மாதிரி அங்க இங்க தனியெல்லாம் போக வேண்டாம். படிச்சதெல்லாம் போதும். இன்னும் என்ன புக் வாங்கப் போற?” என் பொறுமை சிதறியது. ஒன்றுமே பேசாமல், எவ்வளவு வேகமாய் என் கெரிஸ் ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பினேனோ தெரியாது; என் மனம் கஷ்டமாக இருக்கும் போது, நான் வந்து அமரும் தண்டாயுதபாணி கோயில் வெளியே வந்து அமர்ந் திருந்தேன். மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. எங்காவது அப்படியே ஓடிப்போய்விடலாமா என்றிருந்தது.

தொலைபேசி அலறியது. வீட்டிலிருந்துதான். அடைத்துப் போட்டேன். இருபது தடவைகள் அழைத் திருப்பார்கள். நான் தீர்க்கமாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். திருமணமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். முதலில் இந்த நந்தாவை அழைத்துச் சொல்ல வேண்டும். பிறகு, படித்து முடித்து வாங்கிய சான்றிதழ் களைத் தூக்கிக் கொண்டு எங்காவது போய் வேலைக் கேட்க வேண்டும். அங்கேயே தங்கிவிட வேண்டும். மிஸ்டர் மனோ கரைப் போல ஆசைப் பட்டவைகளை எல்லாம் செய்ய வேண்டும்.. நினைத்துக் கொண்டிருக்கும்போதே தொலை பேசி மீண்டும் அலறியது. அட, நந்தா! பேசினேன். மனதில் நினைத் ததைச் சொல்லும் முன் அவரே பேசினார், “ஹலோ, ரொம்ப வேலயா இருக்கிங்களா? கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா?”. கண்டிப்பாக அம்மா எதுவும் சொல்லியிருக்க மாட்டார். நான் பெண்ணாயிற்றே. இப்படி வீட்டை விட்டு வந்தது தெரிந்தால், பிறகு திருமணமே நின்றுவிடுமே! பிறகேன் இப்படி வீட்டுக்குக் கூப்பிடுகிறார்? இப்படி யெல்லாம் கூப்பிட்டதில்லையே.

எனக்கு லேசாய் நடுக்கம் ஆரம்பித்தது. “ஹலோ, ஜோதியா, நான் நந்தா பேசுறேன். தப்பா நினைக்கலனா, கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா, ப்ளீஸ்”. எனக்கு என்னவோ போலிருந்தது. அவர் இப்படியெல்லாம் உடைந்து போன குரலோடு என்னிடம் பேசியதில்லை. அதோடு, ஓவிய வகுப்பில் ஒன்றாகப் படித்தபோதே அனாவசியமாக என்னிடம் பேசாதவர். நிச்சயம் ஆகிவிட்ட பின்பும் நான் மனதில் ஆசைப் பட்டதைப் போல வெளியே அழைக் காதவர். அவர் ஏன் என்னை வீட்டுக்கு ….? குரல் வேறு சன்னமாக இருக் கிறது. எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. சற்று முன்பு வீட்டில் உண்டான பிரச்சனை மறந்து , இந்தப் பிரச் சனையே மனதை ஆக்ரமித்திருந்தது. அவர் போனை வைத்து விட்டிருந்தார். போகலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தோடு ஸ்கூட்டரில் அமர்ந்து, அவர் வீட்டுக்கே போய் சேர்ந்தேன். அந்த ஸ்டார் அடுக்குமாடி வீட்டில் இரண்டாவது மாடியில் இருக்கிறார். ஒரு வித பதற்றத்தோடு கதவைத் தட்டியபோது , “கதவு பூட்டல, திறந்து கீழே கிடக்கற சாவிய எடுத்து, கேட்ட திறந்திட்டு வாங்க”, அதே சன்னமான குரலில் பேசினார். சொன்னது போல் செய்தேன்.

உள்ளே நுழைந்தவுடனேயே ஏதோ துர்நாற்றம்கப்பென்று முகத்தில் அறைந்தது. செய்வதறியாமல் அவரைப் பார்த்தபோது அதிர்ச்சியாய் இருந்தது. சோபாவில் எடுத்த வாந்தியில், நகர திராணியற்று, சரிந்து கிடந்தார். கண்கள் லேசாய் சொருகியிருந்தன. கையில் தொலைபேசி எப்போது கீழே விழுவோமோ என்ற நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது. “மன்னிச்சிடுங்க. எனக்கு உடம்பு சரியில்லை. கொஞ்சம் உதவி…”

அவர் சொல்லி முடிக்கும் முன்னே, நான் செயல் பட்டேன். அவரை மெல்லமாய்த் தூக்கி அமர வைத்து விட்டு, வாந்தியைத் துடைத்தேன். சுடுதண்ணீர் போட்டு அவரைக் குளிப்பாட்டினேன். எவ்வளவு கேட்டும் மருத்துவமனை வர மறுத்துவிட்டதால், அவர் ஏற் கெனவே வாங்கி வைத்திருந்த காய்ச்சல் மாத்திரைகளைக் கொடுத்தேன். கலைந்து போய்க் கிடந்த படுக்கையைத் தட்டிப் போட்டுப் படுக்க வைத்தேன். “வீட்டுல சொல்லிட் டிங்கதானே…” அவருக்கே விளங்காத குரலில் அவர் கேட் டதற்குப் பதில் சொல்லும் முன்பே உறங்கிப் போனார். தொலைபேசியை எடுத்துப் பார்த்தேன். அறுபது மிஸ்ட் கால்கள். “ஹேய் மாடு, என்னாச்சு உனக்கு. வீட்டுக்கு வா. அம்மா அழறாங்க. அப்பா உன்ன தேடி எங்கெங் கேயோ போயிகிட்டிருக்கிறார்”. தம்பிதான் மெசேஜ் அனுப்பியிருந் தான். உறங்கிக் கொண்டிருந்த அவரைப் பார்த்தேன். இன்னும் சாப்பிடக் கூட இல்லை. விட்டு விட்டுச் செல்ல மனம் வரவில்லை. அப்பாவுக்கு அழைத் தேன். ஒரு முறை அம்மாவுக்கு வயிற்றில் கட்டி என்று ஆப்பரேஷன் செய்தபோது தேம்பித் தேம்பி அழுத, கலங்கிய குரலுடன் பேசினார். “என்னம்மா? என்னடா? எங்க போன? அம்மா என்ன சொன்னாங்க? என்கிட்ட சொல்ல வேண்டிதானே. இப்ப எங்க இருக்க? அப்பா உன்னதாம்மா தேடிக்கிட்டு இருக்கேன். இப்ப எங்க இருக்க?” கலங்கிய குரலோடு கேட்ட அப்பாவிடம் தேம்பித் தேம்பி அழுதவாறே மன்னிப்புக் கேட்டுவிட்டு, தோழி வீட்டில் இருப்பதாகவும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடுவதாகவும் கூறிவிட்டு அரைமனதோடு போனை வைத்தேன். போய்விடலாமா என்ற எண்ணத் தைக் குழந்தையைப் போல உறங்கிக் கொண்டிருந்த அவர் முகத்தைப் பார்த்தவுடன் மாற்றிக்கொண்டு வீட்டைச் சுத்தப்படுத்தினேன். இந்த அழுக்குக் கொட்டாயில் எப்படித் தான் இருக்கிறாரோ தெரியவில்லை. வீட்டைத் தூய்மையாகப் பெருக்கி, துடைத்து, கழிவறையைக் கழுவி, வாந்தி சிந்திய உடைகளை எல்லாம் துவைத்துப் போட்டு, கீழே அமைந்திருந்த சின்ன ரெஸ்டாரண்டில் அவருக்குச் சாப்பாடு வாங்கி வந்தபோது விழித்து விட்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் கொஞ்சம் குழம்பி, பிறகு தெளிந்து “அய்யோ, ரொம்ப நேரம் ஆயிட்ட மாதிரி இருக்கே வீட்டுக்குப் போகலயா?” என்று குற்ற உணர்வோடு நெளிந் தார். “வீட்ல சொல்லிட்டேன். ஒன்னும் சொல்ல மாட்டாங்க. மொதல்ல சாப்டுங்க” முதலிலெல்லாம் காணாமல் போயி ருந்த ஒருவித பயம் மீண்டும் தொற்றிக் கொள்ள, அவருக்குச் சாப்பாட்டைப் பரிமாறினேன்.

அடுத்த இரண்டு மாத்திரைகளை மறுத்துவிட் டார். மீண்டும் தூங்கி விடுவாராம். இரவு சாப்பிட்டுக் கொள்கிறாராம். அவர் பேசாமல் மருந்து சாப்பிட்டுத் தூங்கியே இருக்கலாம். என்ன பேசுவது என்று தெரியா மல் கையைப் பிசைந்து கொண்டிருந்த என்னைப் பார்ப் பதும் கீழே குனிவதுமாக இருந்த அவரைப் பார்க்கும்போது இப்படித்தான் தோன்றியது எனக்கு.

அதற்குக் காரணம், வெட்கமோ, நாணமோ கிடை யாது. அதென்னவோ எனக்கு ஆண்களிடம் என்று தனியாக வெட்கமோ, நாணமோ வந்ததில்லை. காதலித்திருந்தால் இருந்திருக்கும் போல. தெரியவில்லை. ஆனால் ஆண் களோடு சரிக்குச்சமம் எல்லா உரிமைகளும் வேண்டும் என்ற போட்டி, இல்லை பொறாமை என்று கூடச் சொல்ல லாம்; எப்போதும் உண்டு. அதற்குக் காரணம் சிறுவயதிலி ருந்தே பெண்பிள்ளை, பெண்பிள்ளை என்று கூறி எனக்கும் என் தம்பிக்கும் இடையே அதிக வேறுபாடுகளுடன் உரிமை காட்டி வளர்த்த விதம்தான். ஆனால், இப்போது அவரைப் பார்க்க முடியாமல் ஏற்பட்ட தர்மசங்கடத் திற்குக் காரணம் அவருடைய நாணம்தான். அதென் னவோ அப்படி ஒரு நாணத்துடன் என்னைப் பார்ப்பதும் கீழே பார்ப்பதுமாய்த் தடுமாறினார். ஒருவேளை உடைமாற்றத்தைக் கவனித்திருக் கலாம். இல்லை வீட்டின் சூழ்நிலை மாறியிருப்பதைக் கவனித்திருக்கலாம். அல்லது இதுபோல் தனிமையில் இல்லாமல் இருந்திருக்கலாம்… எந்தப் பெண்ணோடும்…! “நான் கிளம்புறேன்”,. அதற்குமேல் இருப்புக் கொள்ளாமல் நான் எழுந்தேன். “இல்ல கொஞ்ச நேரம் இருங்க…. இல்ல பரவால்ல கிளம்புங்க…. வீட்ல தேடுவாங்கல…. நன்றி…. மன்னிச்சிடுங்க…” திக்கித் திக்கி குழந்தையைப் போல் உளறிய அவரைக் காண பாவமாய் இருந்தது. உட்கார்ந் தேன். “உங்க வீட்ல சொல்லிட்டீங்களா? உடம்பு முடிய லன்னு” நான்தான் கேட்டேன். என்ன செய்வது, விடடால் தான் அவர் ஊமைச் சாமியார் ஆகிறாரே!

“இ, இல்ல. சொன்னா கவலப்படுவாங்க. பாவம், அம்மாவும் தங்கச்சியும்தான் இருக்காங்க. வரவும் முடியாது. தம்பிதான் லீவு முடிஞ்சு மலாக்கா போயிட்டான்ல…”

சொல்லிவிட்டு, நானே எதிர்பாராத நேரத்தில் என் கண்களை உற்றுப் பார்த்தார். எனக்கு ஒரு மாதிரியாய் ஆயிற்று. இதென்ன, இதான் நாணமோ! இப்பொழுது நான் கையைப் பிசைய ஆரம்பித்திருந்தேன். ஆச்சரியமாய் இருந்தது. அவர் பேசிக்கொண்டே இருந்தார். என் கண்களைப் பார்த்து….

“நான் பெண்ணாவே, பிறந்திருக்கலாம். இப்படித் தான் தோனும் இந்த நோய் வர நேரங்கள்லயும், நேரம் காலம் தெரியாம வேலைகள்ல மூழ்கிப் போய், சாப்பிடக்கூட மறந்துபோய் கிடக்கும்போது! இந்தக் கே.எல்க்கு நான் வந்து 11 வருஷம் ஆச்சு!. எஸ்.பி.எம் முடிச்சுட்டுப் படிக்க வந்தேன். அப்ப ஃபரன்ஸோட தங்க ஆரம்பிச்சு, குடும் பத்தைப் பிரிந்து இப்பவரை வனவாசம் போன ராமர் மாரி தனியாத்தான் வாழ்க்கை. ‘டாய்லெட்’ பாத்திங்களா எப்படி இருந்ததுனு? போகும்போதே குமட்டும். மருந்து ஊத்தரதோட சரி. கழுவக்கூட ‘டைம்’ இருக்காது. ஏன்னா வேலை அப்படி. எனிடைம் கால் வரும். உண்மையா, இந்த ஓவர் டைம் செய்தாகணும்னு கட்டாயம் இல்ல. இந்தத் தனிமைய விரட்டத்தான் வேலைகள்ல என்ன மூழ் கடிச்சுக்கிட்டேன். ஜோதி உங்களுக்குத் தெரியுமா, சில சமயம் அத்தன மணி வரை வேலை செஞ்சுட்டு, ஜேம்ல மாட்டி பசியோடு நொந்து நூலா போய் வீட்டுக்கு வருவேன். ஆறுதலா நாலு வார்த்தை கேட்கவும், தண்ணீ கொடுக்கவும் கூட யாருமில்ல தெரியுமா? பசி வயிற்றைக் கிள்ளும். அசதில கீழே இறங்கிப் போய் வாங்குனாதான் சாப்பாடு. இல்லனா இல்ல. என் வீட்ட நான் எவ்ள ‘மிஸ்’ பண்வேன் தெரியுமா. ஆறுநாள் இங்கப் படர கஷ்டத்துக்கெல்லாம் சேர்த்து வீட்டுக்குப் போகும் ஒரு நாள் ராஜ மரியாதை கிடைக்கும். ஆனா நிரந்திரமில்லாத ஒன்னுன்னு மனசுக்குத்தோனறனால அதுல மகிழ்ச்சியடையாது மனசு. வீட்ல தங்கச்சிங்களப் பார்க்கும் போது பொறாமையாக்கூட இருக்கும்.”

ஏதேதோ பேசவேண்டும்போல் தோன்றிப் பேச வராமல் நா தழுதழுத்தது. முதலில் அவரும் அந்த நிலையில்தான் அமைதியாக இருந்தாரோ.

நான் என்னையறியாமல் சிரித்தேன். அதற்குள் என் கைத்தொலைபேசி அலறவும், வீட்டு நினைவு வந்தது. “அய்யோ, மணி ஒம்போதாச்சு, வாங்க போய் விட்ட றேன்.” அவர் எழவும் மறுத்துவிட்டு, நானே கிளம்பி னேன். மீதமிருந்த மாத்திரைகளைத் தந்துவிட்டுக் கிளம் பும்போது, மனமே இல்லை அதென்னவோ, அங்கேயே, அவருடனேயே இருக்க வேண்டும் போல் ஓர் உணர்வு…. புதிதாய் இருந்தது. என்னவென்று சொல்லமுடியாத பலவித உணர்வுகளின் கலவையுடன் வீட்டில் இறங்கிய போது, கோபம் பொங்க அம்மா ஓர் அறைவிட்டார். வலிக்கவே இல்லை….!

Print Friendly, PDF & Email

1 thought on “வனவாசம் போகும் இராமர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *