ரிங் டோன்

 

மன்னன் திரைப்படத்தில் வரும் .”அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்று பாடலுடன் சிவாவின் கைப்பேசி ஒலித்தது.

“சொல்லு மா, நான் இங்கதான் ரவி வீட்டுல இருக்கேன்” மறுமுனையில் சிவாவின் தாய் “காலையில சரியா சாப்பிடாமயே கிளம்பிட்டே சிவா. ரவி வீட்டுல ஏதாவது சாப்பிடு. இல்லைன்னா வெளியில ஏதாவது சாப்பிட்டுக்கோப்பா. மறந்திடாதே, பசி தாங்கமாட்டே நீ” என்றார்.

“நான் எவ்ளோ சாப்பிட்டாலும் உனக்கு நான் சரியா சாப்பிடாத மாதிரிதான் தெரியும்மா. நான் பாத்துக்கறேன். நீ கவலைப்படாதே”

“சரிப்பா. எப்போ வீட்டுக்கு வருவே நீ?”

“மத்தியானம் ரெண்டு மணிக்கு வந்திடறேன்மா. இன்னும் பத்து நிமிஷத்துல கார்த்தி வந்திடுவான். பதினோறு மணிக்குதான் சினிமா. பாத்துட்டு நேரா வந்திடுறேன்”

“சரிப்பா, பாத்துக்கோ” அழைப்பைத் துண்டித்தார் சிவாவின் தாய்.

“என்னடா சிவா, அம்மாவுக்குத் தனியா ரிங் டோன் வெச்சிருக்கே? எல்லாருக்கும் இப்படிதானா?” என்று சிவாவைக் கேட்டான் ரவி. அதற்கு சிவா, “ஆமாடா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரிங் டோன். யாரு கூப்பிடறாங்கன்னு உடனே தெரிஞ்சுடும்ல. அதான்” என்றான்.

“அது சரி, அஞ்சலிக்கு என்ன ரிங் டோன்?”

சிவா, ரவி, கார்த்தி, அஞ்சலி ஆகிய நால்வரும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அஞ்சலியை ஒருதலையாக காதலித்துக் கொண்டிருக்கிறான் சிவா.

“அஞ்சலிக்கு ஒரு ஸ்பெஷல் ரிங் டோன் வெச்சிருக்கேன்டா. கேட்கறியா?” என்று சிவா சொல்லி தன் கைப்பேசியில் ஒரு பாடலைப் போட்டான். அந்த பாடல் இது தான் – “அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி” என்ற டூயட் திரைப்படத்தில் வரும் பாடல்.

“அருமையான பாட்டு. எல்லாம் சரி, ஆனா நீ வீட்டுல இருக்கும்போது இந்த பாட்டைக் கேட்டா, உன் வீட்டுல சந்தேகப்படமாட்டாங்களா?”

“நான் வீட்டுக்கு போன உடனே சைலன்ட் மோடுல என் மொபைலை வெச்சிடுவேன். யாருக்கும் தெரியாது”

“எதுக்குடா இந்த பொழப்பு உனக்கு? நல்லாதானே இருந்தே நீ?” என்று ரவி சொல்லும்போது, நண்பன் திரைப்படத்தில் வரும் “என் ஃப்ரெண்டப் போல யாரு மச்சான்” என்ற பாடலுடன் சிவாவின் கைப்பேசி ஒலித்தது. கார்த்திதான் அழைத்திருந்தான். திரையரங்கிற்குத் தான் நேரடியாக வந்துவிடுவதாகச் சொன்னான் கார்த்தி.

“டேய் ரவி, கார்த்தி தியேட்டருக்கு நேரா வந்துடறானாம். நாம கிளம்பலாமா?” என்று சிவா கேட்க, அதற்கு சரி என்பது போல் தலையசைத்தான் ரவி.

ரவியின் வண்டியில் இருவரும் திரையரங்கை நோக்கி செல்லத் தொடங்கினர். ரவிதான் வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தான்.

“டேய் சிவா, உன் லவ்வை அஞ்சலிகிட்ட சொல்லிட்டியாடா?”

“இன்னும் இல்லைடா. எப்படி சொல்றதுன்னு தெரியலை”

“நேரா போய் சொல்ல வேண்டியதுதானேடா. இதுக்கு ஏன் யோசிச்சிட்டு இருக்கே?”

“என்ன பதில் சொல்லுவாள்னு தெரியலைடா. முடியாதுன்னு சொல்லிட்டா கஷ்டமா இருக்கும். அதான் கொஞ்சம் பயமா இருக்கு”

“அதுக்காக சொல்லாம இருந்தா அவள் உன்னைப்பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கான்னு எப்படி தெரியும்? தைரியமா போய் சொல்லுடா”

“தைரியம்தான் வரவே மாட்டேங்குதுடா”

“லவ் பண்ண தைரியம் இருக்கு. அதை லவ் பண்ற பொண்ணுக்கிட்ட சொல்றதுக்கு தைரியம் இல்லையா?”

“டேய், நீயும் லவ் பண்ணி பாரு. அப்பத்தான் அந்த கஷ்டம் உனக்குத் தெரியும்” என்று சிவா சொல்லி முடிக்க, திரையரங்கை வந்து சேர்ந்தனர் இருவரும்.

திரையரங்கத்தின் வாசலில் “சிவா, நீ இங்கயே இறங்கிக்கோ. கார்த்திக்குக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துடு. நான் வண்டியை பார்க் பண்ணிட்டு வந்திடறேன்” என்று சொல்லிவிட்டு, சிவா வண்டியிலிருந்து இறங்கியதும், வண்டி நிறுத்தும் இடத்திற்குச் சென்றான் ரவி.

டிக்கெட் வாங்குவதற்கு கவுன்டரை நோக்கி நடந்து செல்லும்போது, அங்கு அஞ்சலி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தான் சிவா. எதிர்பாராத சந்தோஷம் அவனுக்கு.

கருப்பு கலர் டீ ஷர்ட்டும், நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்திருந்தாள். கையில் ஒரு சின்ன கருப்பு நிற ஹேண்ட் பேக், வலது உள்ளங்கையில் கைப்பேசி இருந்தது.

அப்போது ஏதோ ஒரு அழைப்பு அஞ்சலியின் கைப்பேசிக்கு வந்தது. அந்த அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தாள் அஞ்சலி.

அந்த சமயம் வண்டியை நிறுத்திவிட்டு சிவாவை நோக்கி வந்தான் ரவி. சிவா அஞ்சலியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பதையும் பார்த்தான்.

நேராக சிவாவிடம் வந்து, “டேய் சிவா, ஒரு ஐடியாடா. என்ன நடக்குதுன்னு பாப்போம்.

என்ன சொல்றே நீ?” என்றான் ரவி. அதற்கு சிவா, “என்ன ஐடியா? என்ன விஷயம்?” என்றான்.

தன் யோசனையை சிவாவிடம் சொல்லிவிட்டு நேராக அஞ்சலியை நோக்கி நடந்தான் ரவி. அவள் தன்னை உடனே பார்த்துவிட முடியாதபடி, அவள் பின்னால் சென்று நின்றான்.

“ஹாய் அஞ்சலி. வாட் எ சர்ப்ரைஸ்” என்றான் ரவி. யாரது தன்னிடம் பேசுவது என்று திரும்பிப் பார்த்தாள் அஞ்சலி. அங்கு ரவியைப் பார்த்தவுடன் அஞ்சலி, “ஹாய் ரவி, எதிர்பார்க்கவே இல்லை உன்னை இங்கே பார்ப்பேன்னு” என்றாள்.

இரண்டு நிமிடம் பேசியிருப்பார்கள் ரவியும், அஞ்சலியும். அப்போது பம்பாய் திரைப்படத்தில் வரும் “கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை” என்ற பாடலுடன் அஞ்சலியின் கைப்பேசி ஒலித்தது.

கைப்பேசியை எடுத்துப் பார்த்த அஞ்சலியின் முகம் ஒரு புதுப்பொலிவோடு மலர்ந்ததைக் கவனித்தான் ரவி. சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த சிவாதான் அஞ்சலியை அழைத்திருந்தான். அடுத்த சில நொடிகளிலேயே அந்த அழைப்பைத் துண்டித்தான் சிவா.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ரவி, “சரி அஞ்சலி, அப்பறமா பாப்போம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான். நடந்த விஷயத்தை சிவாவிடம் ரவி சொல்ல, சிவாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். காற்றில் பறப்பதுபோல் உணர்ந்தான்.

“டேய் ரவி, ரொம்ப தேங்க்ஸ்டா. உன்னோட இந்த ஐடியாவாலதான் எனக்கு அஞ்சலியோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுது. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்டா” என்று ஆனந்தத்துடன் சொன்னான் சிவா.

“ஃப்ரெண்ட்ஸ் மத்தியில என்னடா தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு. ரெண்டு பேரும் நல்லா இருந்தா சரிதான். இனிமேலாவது தைரியமா போய் அவள்கிட்ட உன் லவ்வை சொல்லு” என்று ரவி சொல்லும்போது சிவாவின் கைப்பேசி “அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி” என்ற பாடலுடன் ஒலித்தது. முகம் முழுதும் மகிழ்ச்சியுடன் அந்த அழைப்பை ஏற்று பேசத் தொடங்கினான் சிவா. அடுத்த நாள் கல்லூரியில் நடக்க இருக்கும் ஃபங்ஷன் பற்றி பேசினார்கள் சிவாவும், அஞ்சலியும்.

சிவா அன்றிரவு தூங்குவதற்குமுன் மறுநாள் அஞ்சலியிடம் தன் காதலைச் சொல்ல முடிவு செய்து படுத்தான்.

மறுநாள் ஃப்ங்ஷன் அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. சிவா கையில் ஒரு சிவப்பு ரோஜாவுடன் அஞ்சலியைத் தேடினான். ஒரு மரத்தடியில் அவள் சினேகிதி விஜியுடன் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்து, தன் கைப்பேசியில் அவளை அழைத்தான்.

“விஜி, ரொம்ப தாங்க்ஸ்டி. இந்தா உன் மொபைல். என் மொபைல் ரிப்பேர் செய்து வந்துவிட்டது” என்று அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே அஞ்சலியின் கைப்பேசி ஒலித்தது “ஜனனி ஜனனி, ஜகம் நீ அகம் நீ” என்ற இனிமையான பாடலுடன். 

தொடர்புடைய சிறுகதைகள்
விமல் ஸ்போர்ட்ஸ் என்றால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களுக்கு அத்துப்படி. அங்கு எல்லா வகையான விளையாட்டுப் பொருட்களும் கிடைக்கும். இரண்டு கிரிக்கெட் பேட்டும், ஐந்து டென்னிஸ் பந்துகளும் வாங்குவதற்கு அந்த கடைக்குச் சென்றனர் திலீப்பும், கிரியும். “கிரிக்கெட் பேட், டென்னிஸ் பால் வேணும்” ...
மேலும் கதையை படிக்க...
ஞாயிற்றுக்கிழமை, நேரம் காலை 6 மணி. காலிங் பெல் சத்தம் கேட்டது. தூக்கத்திலிருந்து முழித்தார் கணேசன். “நீ தூங்கு மீனா. இன்னிக்கு நான் சமையல் வேலை எல்லாத்தையும் பாத்துக்கறேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். மீனா வேறு யாரும் இல்லை, அவர் ...
மேலும் கதையை படிக்க...
வெற்றி நாயகன் தேவா என்றால் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் தெரியும். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு ஹீரோ. அவர் இது வரை 70 திரைப்படங்களில் நடித்துள்ளார். அவற்றில் 50 படங்களுக்கு மேல் சூப்பர் ஹிட். இவர் ஒரு ...
மேலும் கதையை படிக்க...
நேரம் காலை பத்து மணி. தாய் ராஜலக்ஷ்மி, தந்தை சிவப்ரகாஷ், மனைவி மீனாக்ஷியிடம் சொல்லிவிட்டு சென்னையில் அடையாரில் இருக்கும் தன் எலெக்ட்ரானிக்ஸ் ரிப்பேர் கடைக்குச் செல்ல தயாரானான் பாபு. சிவப்ரகாஷுக்கு வயது 70 ஆகிறது, ராஜலக்ஷ்மிக்கு வயது 60. தஞ்சாவூர் மாவட்டத்தில் ...
மேலும் கதையை படிக்க...
தாம்பரம் ரயில் நிலையம். காலை 8 மணி. ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் சந்துரு. நேற்று நடந்ததை எண்ணினான். மயிலை ரயில் நிலையத்தில் நேற்றுதான் அவளை முதன்முதல் பார்த்தான். 5 அடி 8 அங்குலம் உயரம் அவள். கடலை மாவு நிறம், சுருள் முடி, சற்றே ...
மேலும் கதையை படிக்க...
மெமரி கார்ட்
உன்னருகே நானிருந்தால்
ஹீரோ
தூக்கம்
ரயிலில் வந்த மயில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)