ரயிலில் வந்த மயில்

5
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 19, 2014
பார்வையிட்டோர்: 24,180 
 

தாம்பரம் ரயில் நிலையம். காலை 8 மணி. ரயிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தான் சந்துரு. நேற்று நடந்ததை எண்ணினான்.

மயிலை ரயில் நிலையத்தில் நேற்றுதான் அவளை முதன்முதல் பார்த்தான்.

5 அடி 8 அங்குலம் உயரம் அவள். கடலை மாவு நிறம், சுருள் முடி, சற்றே பெரிய நெற்றி. அதில் சின்ன வட்ட பொட்டு. காதில் தவழ்ந்துகொண்டிருந்த முடியைத் தாண்டி அவள் அணிந்திருந்த தங்கத்தோடு ஜொலித்தது. புன்னகையை அணிந்திருந்தன அவள் உதடுகள். நிலவைப் போல் வட்டமாக இருந்தது அவள் முகம்.

அவளைப் பார்த்த அந்த நொடியில் தன்னை மறந்தான் சந்துரு. அவள் அணிந்திருந்த கருப்பு நிற சுடிதாரைப் பார்த்ததும் “குயிலின் உடையணிந்து நடந்து வரும் மயிலே” என்று தன் மனதில் பட்டதை அவள் காதில் விழும்படி சொன்னான். அவளது புன்னகையை தனது ஹைக்கூ கவிதைக்குப் பரிசாகப் பெற்றான்.

நேற்று நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தபோது ரயில் வந்து சேர்ந்தது. அரக்க பரக்க உள்ளே ஏறி, காலியாக இருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தான்.

ஜன்னலோர இருக்கை, அதிவேகமாக போய்க்கொண்டிருக்கும் வண்டி, வெளியே விளம்பரப் பலகைகளுக்கு மத்தியில் மரங்கள், ஜில்லென்று காற்று. இந்த ரம்மியமான சூழ்நிலை அவனுக்கு மீண்டும் அவளை ஞாபகப்படுத்தியது.

நேற்று ரயிலில் கூட்டம் அதிகம். உட்கார இடமில்லை. கம்பியைப் பிடித்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். அவனுடைய வலது பக்கத்தில், அதே வரிசையில், இரண்டு ஆட்களுக்கு அடுத்ததாக அவளும் நின்று கொண்டிருந்தாள். அதை இப்போதுதான் கவனித்தான் சந்துரு.

என்ன தோன்றியதோ தெரியவில்லை. “ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் மயிலே” என்றான். இப்போதும் அவள் காதில் விழும்படி, கொஞ்சம் சத்தமாகவே சொன்னான்.

தன்னை ஒரு கவிஞனாக நினைத்து பெருமை கொண்டு, அவளிடம் என்ன ரியாக்ஷன் என்பதைப் பார்க்க எட்டிப் பார்த்தான். இவன் பார்ப்பதைப் பார்த்த அவள் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தாள். சொக்கிப்போனான் சந்துரு.

நிகழ்காலத்துக்கு வந்தான். வண்டி ஒரு ரயில் நிலையத்தில் நின்றது. ஒரு கூடையில் மல்லிகைப்பூக்களை எடுத்து வந்தார் ஒரு பூ வியாபாரி..அத்தனையும் உதிரிப் பூக்கள். அதைப் பார்த்ததும் நேற்றைய நிகழ்வுக்கு அவன் நினைவு சென்றது.

நேற்றும் இப்படித்தான் ஒருவர் மல்லிகைப்பூக்களை எடுத்து வந்தார். சந்துரு கவிதைகளை கட்டவிழ்த்துவிடும் மனநிலையில் இருந்ததால், இந்த மல்லிப்பூக்களைப் பார்த்ததும் அவனுக்கு ஒரு கவிதை தோன்றியது.

“மல்லிகையும் மயிலும் மனம் கவர்கின்றன” என்றான். அடடா, என்னே ஒரு கவிதை என்று நினைத்த மறு நொடி இதற்கு அவளின் பதில் என்ன என்பதைப் பார்க்க ஆவலுடன் எட்டிப் பார்த்தான்.

சந்துரு எட்டிப்பார்த்ததைப் பார்த்த அவள், சட்டென்று தன் கையில் வைத்திருந்த கைப்பேசியில் எதையோ தேடுவதுபோல் நடித்தாள். இம்முறையும் அவள் உதடுகளில் புன்னகைப்பூ மல்லிகைப்பூபோல் மலர்ந்திருந்தது. இந்தப்பூவிலிருந்து மணம் வீசவில்லை.

இதைப் பார்த்ததும் வானத்தில் பறப்பதுபோல் உணர்ந்தான் சந்துரு. கம்பியை வலது கையில் பிடித்துக் கொண்டு, இடது கையை நீட்டி, வானத்தில் இருந்து விழுவது போல் சாய்ந்தான்.

அப்போது அவன் கை, அவனுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு வயதானவரின் மேல் பட்டது. “இந்தாப்பா தம்பி, பாத்து நில்லு. நான் இங்க இருக்கறது உன் கண்ணுக்குத் தெரியலயா? என்ன நெனப்புல இருக்க?” என்று அதட்டினார் அவர். தலைகுனிந்தான் சந்துரு.

“ச்சே, இப்படி ஒரு அவமானமா?” என சந்துரு நினைப்பதற்குள் அந்த வயதானவர் சொன்னதைக் கேட்டு யாரோ ஒரு பெண் சிரிப்பது கேட்டது. யாரென்று பார்க்க எட்டிப் பார்த்தான் சந்துரு. இவன் பார்ப்பதைப் பார்த்த அவள் டக்கென்று தன் சிரிப்பை அடக்கி தன் கைப்பேசியை நோண்ட ஆரம்பித்தாள்.

இவன் வழிந்துகொண்டு தலையை சொரிந்து கொண்டு அடக்க ஒடுக்கமாக நின்றான்.

“நாம செய்யறத, நமக்கு நடக்கறத, அவள் கவனிக்கிறாடா சந்துரு. அடுத்த கட்டத்துக்குப் போயிட்டே நீ. இப்படியே போனா, வெற்றி உனக்குத்தான்” என்று தன்னை ஊக்குவித்துக் கொண்டான்.

அப்போது அவனுடைய கைப்பேசிக்கு ஏதோ அழைப்பு வந்ததால் மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தான் சந்துரு. அழைப்பை ஏற்று “ஹலோ” என்று சொன்னவன் அடுத்த ஐந்து நொடிகளில் அழைப்பை துண்டித்தான். முகம் முழுவதும் கோபமும், வெறுப்பும் நிரம்பியிருந்தது.

“ச்சே, இவளுங்க தொல்லை தாங்க முடியல. சும்மா கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பர்சனல் லோனுன்னு உயிரை எடுக்கறாளுங்க” என்று மனதிற்குள் அலுத்துக் கொண்டான்.

உடனே அவனது நினைவு மறுபடியும் நேற்றைய நிகழ்வுக்குச் சென்றது.
எங்கே விட்டான்? ஆங், மல்லிகைப்பூ கவிதைக்குப் பிறகு அவமானப்பட்டது, அதற்கு அவள் சிரித்தது.

அந்த வயதானவருக்குப் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாக நின்றுகொண்டிருந்தபோது அவன் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான் சந்துரு.

“ஹலோ….”

மறுமுனையில் ஒரு பெண் குரல். “சார் நாங்க ஏபிசிடி பாங்குல இருந்து பேசறோம்”

“சொல்லுங்க மேடம்” இவ்வளவு கனிவாக யாரிடமும் பேசியதில்லை சந்துரு.

“உங்களுக்கு பர்சனல் லோன் வேணுமா சார்?”

அந்தப் பெண் முடிக்கும் முன்னரே, “எனக்கு லோன், கடன் எல்லாம் வேணாம். எங்கிட்ட காசு நெறைய இருக்கு மேடம். உங்களுக்கு லோன் வேணும்னா கேளுங்க. நான் தர்றேன்” என்றான் சந்துரு. இதைக் கேட்டதும் அந்தப் பெண் அழைப்பைத் துண்டித்தாள். கைப்பேசியை எடுத்து தன் பேண்ட் பாக்கெட்டினுள் நுழைத்தான் சந்துரு.

“அவ்ளோ காசு இருக்கறவரு எதுக்காக எலெக்ட்ரிக் டிரெயின்ல வரணும்? காருலயோ, ஆட்டோவுலயோ போயிருக்கலாமே?” என்றது ஒரு பெண் குரல்.

யாருடைய குரல் இது என்று வலது பக்கம் எட்டிப் பார்த்தான். இவன் பார்த்ததைப் பார்த்த அவள், விருட்டென தன் கைப்பேசியை எடுத்து காதில் வைத்து யாரிடமோ பேசுவது போல் பேச ஆரம்பித்தாள்.

அவளைப் பார்த்து சிரித்துக்கொண்டே இருந்தான் சந்துரு. அவளும் இவனைப் பார்த்து சிரித்துவிட்டு, கீழே குனிந்தாள். பயணம் முழுவதும் சந்துரு அவளை சிரித்துக்கொண்டே பார்ப்பது, அவளும் பதிலுக்கு சிரிப்பது என்றே போனது.

“லவ் வந்துடுச்சுடா சந்துரு. வாழ்த்துகள். சாதிச்சிட்டே நீ” என்று தன்னைத்தானே மனதுக்குள் தட்டிக் கொடுத்துக் கொண்டான்.

வண்டி தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்றது.. அவள் ரயிலை விட்டு இறங்க, அவளைப் பின் தொடர்ந்து சென்றான் சந்துரு.

இவன் பின் தொடர்வதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நடந்து கொண்டிருந்தாள் அவள்.

சாலையில் ஒரு வளைவு வந்தது. அந்த வளைவில் திரும்பியதும் “ஸ் ஸ்” என்று ஒலி எழுப்பினாள். சில அடிகள் பின்னால் வந்து கொண்டிருந்த சந்துரு அப்போதுதான் அந்த வளைவில் திரும்பினான், அவளைப் பின் தொடர்ந்தபடியே.

அப்போது திடீரென நான்கு பெண் கான்ஸ்டபிள்கள் அங்கு வந்து அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

“ஏண்டா, எவ்ளோ தைரியம் இருந்தா எங்க இன்ஸ்பெக்டர் மேடத்தையே பின் தொடர்ந்து வருவே?” என்றார் ஒரு கான்ஸ்டபிள்.

“என்னாது போலீஸா?” நடுங்க ஆரம்பித்தது சந்துருவுக்கு.

“ஆமாடா. பின்ன, மயிலுன்னு நெனச்சியா?” என்றாள் சந்துருவின் மயில். அவள் குரலில் கிண்டல் இல்லை, கோபம் மட்டும்தான் நாட்டியமாடிக்கொண்டிருந்தது.

“சா.. சாரி மேடம்.. நீங்க யாருன்னு தெரியாம… இப்படியெல்லாம் பேசிட்டேன்…. மன்னிச்சிடுங்க ப்ளீஸ்” என்று வேண்டினான். சரளமாகக் கவிதை சொன்ன வாயிலிருந்து இப்போது வார்த்தைகள் வரவேயில்லை.

“உன்னை மாதிரி ஆளுங்க தொல்லை அதிகமானதாலதான் நானே இப்போல்லாம் ரயில்ல வந்து ஈவ் டீஸிங் பண்றவங்களைப் பிடிக்கறேன். இவனைத் தூக்கிட்டு ஸ்டேஷனுக்கு வாங்க” என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த தன் டி.வி.எஸ். ஸ்கூட்டியில் ஏறிப் பறந்தாள்.

இன்றுதான் சந்துருவை காவல் நிலையத்திலிருந்து வெளியே விட்டிருக்கிறார்கள். மயில்களின் நடனம் போல் சந்துருவின் உடலில் நேற்று முழுவதும் காவலர்கள் தாண்டவமாடினார்கள் என்பதைச் சொல்லவா வேண்டும்?

மயிலை ரயில் நிலையத்தில் இறங்கி, நொண்டி நொண்டி நடந்தான். வலது காலில் பலத்த அடி போல.

Print Friendly, PDF & Email

5 thoughts on “ரயிலில் வந்த மயில்

  1. ஹாஹாஹா நல்ல கதை காமெடியாவும் இருந்துச்சி .. அருமை.. வாழ்த்துக்கள் .

  2. அருமையான கதை. கதையை சொன்ன விதம் , அந்த கவிதை , எல்லாமே அற்புதம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *