மீளவிழியில் மிதந்த கவிதை..!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: February 6, 2013
பார்வையிட்டோர்: 16,688 
 

மீளவிழியில் மிதந்த கவிதையெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?

மின்னல் அடித்ததுபோல எல்லாமே சட்டென்று நடந்துவிட்டது. அதிர்ச்சியில் இருந்து நான் மட்டுமல்ல, அவளும் மீளவில்லை என்பதை அவளது அந்தப் பிடி உணர்த்தியது.

எவ்வளவு லாவகமாய் அவள் என்னைக்கடந்து சட்டென்று திரும்பி பின்பக்கமாய் வந்து என்னை இறுக்கி அணைத்தாள் என்பது எனக்கே வியப்பாக இருந்தது. தன்னைப் பாதுகாக்க என்னை முன்னால் தள்ளி நிறுத்தினாளோ, அல்லது எனது ஆண்மையில் அவளுக்கு இருந்த அதீத நம்பிக்கைதான் காரணமோ தெரியவில்லை, எதுவாய் இருந்தால் என்ன, என்னை நம்பிச் சரணடைந்தவளைக் காக்கவேண்டியது எனது பொறுப்பு என்பதை உணர்ந்து அவளுக்கு அடைக்கலம் கொடுத்தேன்.

தற்செயலாகத்தான் அது நடந்தது, பாடசாலையால் வரும்போது அவளது பென்சில் பெட்டி தெருவில் விழுந்து விடவே அதைக் குனிந்து எடுக்க முயன்றபோது, முன்வீட்டு வாசலில் படுத்திருந்த நாய் தன்னைத் தாக்கத்தான் எதையோ எடுக்கிறாள் என்ற பயத்தில் அவளைத் துரத்தத் தொடங்கியது. அந்த சமயம் பார்த்து நானும் எங்கள் வீட்டுக் கேற்ரைத் திறந்து வெளியே வந்தேன். அதனால்தான் பாதுகாப்புத்தேடி ஓடிவந்து அருகே நின்ற என்னைக் கட்டிப்பிடித்தாள். அழகு ஓவியம் ஒன்று இதமான உடம்பும் சதையுமாய் என்னைத் திடீரெனக் கட்டிப் பிடித்ததில் நான் அதிர்ந்து போனதென்னவோ உண்மைதான். அதுவும் சிலநாட்களாக யார்மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருந்ததோ, அவளே வலியவந்து என்னை அணைப்பதென்றால்? ஒரு ஸ்லோமோஷன் காட்சிப்படம் போல அந்தக் காட்சி என் மனதில் திரும்பத்திரும்ப நிழலாடிக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. சொர்க்கத்திற்குப் போனது போன்ற அந்த இனிய சுகம் அதிக நேரம் நீடிக்கவில்லை. அதிர்ச்சியில் இருந்து அவள் மீண்டபோது, பெண்மைக்கே உரிய நாணம் அவளைச் சட்டென்று விலகி நிற்கவைத்தது. வேர்த்து வியர்திருந்த முகத்தில் இன்னமும் பயக்களை தெரிந்தது. இப்பொழுதும் அவளது உடம்பு லேசாகப் பதறிக் கொண்டிருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது. மூச்சு வாங்க ஓடி வந்ததில் அவளது மார்பகம் மேலும் கீழும் ஏறி இறங்கியது. பாடசாலையின் மெல்லிய வெள்ளைச் சீருடை ஆங்காங்கே வியர்வையில் தோய்ந்து போனதில் அந்த இடத்தை மட்டும் சூரியவெளிச்சம் வட்டம் போட்டு அதிசயமாய்க்  காட்டியது. வயசுக் கோளாறோ என்னவோ எனது பார்வை சட்டென்று அங்கேபட்டுத் தெறித்தபோது, அவள் என்னை அணைத்தபோது ஏற்படாத உணர்வு அந்த வனப்பில் கிளர்ந்தெழுந்தது. வேறு நேரம் என்றால் எனது பார்வையின் உக்கிரத்தை அவள் புரிந்து கொண்டிருப்பாள், இப்போதைய நிலையில் சுயமாக இயங்க முடியாமல்; தடுமாறியதில் அவள் அதைக் கவனத்தில் எடுக்கவில்லை என்பது எனக்குப் புரிந்தது. தப்பாத இடத்தில் தப்பான பார்வை என்பதால் வலிந்து பார்வையைத் திசை திருப்பினேன்.
‘இதிலே கொஞ்ச நேரம் இருங்க..!’ அருகே இருந்த மரக்குற்றியைக் காட்டிச் சொன்னேன்.

அவள் பாதையைத் திரும்பிப் பார்த்தபடியே தயக்கத்தோடு உட்கார்ந்தாள். உட்கார்ந்ததும் ஓடிச்சென்று ஒரு டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன்.

அதை வாங்கிய அவள் என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்தபடியே என்னை மேலும் கீழும் பார்த்தாள்.
‘பயந்து போயிட்டீங்க, இதைக் கொஞ்சம் குடியுங்க..’ என்றேன்.
சுயமாக இயங்கமுடியாமல் எனது வழி நடத்தலுக்காகவே காத்த்திருந்தவள்போல, மளமளவென்று தண்ணீரைக் குடித்தாள்.
முருகனுக்கு ஓரு பிள்ளையார் யானை உருவில் வந்தது போல எனது காதலுக்குப் பைரவர் நாயின் உருவில் உதவிக்கு வந்தாரோ? என்று தெருவிலே விழுந்து கிடந்த புத்தகங்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கும்போதும் மனசுக்குள்  யோசித்தேன். பொறுக்கிய புத்தகங்களை அப்படியே எடுத்து வந்து அவளிடம் கொடுத்தேன். வாங்கிக் கொண்டாள், நன்றி சொல்லவில்லை. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத அதிர்ச்சி நிலையில் அவள் இருந்தாள்.

‘ஆ யூ ஓகே..?’ என்று வினாவினேன்.
கனவுலகிலிருந்து கலைந்து ‘ஓம்’ என்று என்னை நிமிர்ந்து பார்த்துத் தலை அசைத்தவள், மீண்டும் மெல்லத் தலை குனிந்தாள். அதுவே அவள் அழகிற்கு அழகு சேர்த்தது.

சற்றே தலை குனிந்தாள், சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை விழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீள விழியில் மிதந்த கவிதையெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?

ஏக்கப் பெருமூச்சு விட்டபடி மெதுவான எழுந்து வீதியத் திரும்பிப் பார்த்தபடியே வீடு நோக்கி நடந்தாள். என்னைத்தான் திரும்பிப் பார்த்தாளோ அல்லது திரும்பவும் தன்னை அந்த நாய் துரத்தலாம் என்ற பயத்தோடு திரும்பிப் பார்த்தாளோ தெரியவில்லை. அவளுக்கு சற்றுமுன் நடந்ததை நினைத்துப் பயம் இருந்திருக்கலாம். நாய் துரத்தாவிட்டாலும் என் மனம் அவளைப் பின்னால் துரத்திக் கொண்டே சென்றதை அவள் அறிந்திருக்க நியாயமில்லை. ஏக்கப் பார்வையோடு அவள் பிரிந்தபோது, பாரதி கண்ட கனவுகளை எனக்குச் சொந்தமாக்கி, அவளிடம் கண்ட அந்த ஆளை விழுங்கும் அழகை எனக்குள் மென்று சுவைத்துப் பார்த்தேன். நான் நானாக இல்லை என்பதை என்னைவிட்டு அவள் பிரிந்த அக்கணமே நான் உணர்ந்து கொண்டேன்.

அவள் என்னைவிட ஒரு வகுப்பு மேலே படித்துக் கொண்டிருந்தாள். பள்ளிச் சீருடையில் கூட்டமாக மாணவிகள் போகும்போது மற்றவர்களைவிட அவள் மட்டும் வித்தியாசமாய் என் கண்களில் பட்டாள். தினமும் எத்தனையோ பெண்களைப் பார்த்தாலும், என்னைக் கவரக்கூடிய ஏதோ ஒருவித கவர்ச்சி அவளிடம் இருந்திருக்கிறது. அதுதான் என் மனம் நேரகாலம் தெரியாமல் அவளைத் துரத்தித் திரிகிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவள் கல்லூரி சீருடையில் மட்டுமல்ல எந்த உடையிலும் சிரித்த முகத்தோடு அழகாகவே இருந்தாள். அந்த நிகழ்வின்பின் என்னைக் கண்டால் ஒரு புன்சிரிப்புடன் தலை குனிந்து கொள்வாள். பெண்மையின் நளினம் அவளது ஒவ்வொரு அசையிலும் வெளிப்படுவதைத் தினமும் அவதானித்தேன். எனக்குள் மெல்ல மெல்லக் காதலை வளர்த்துக் கொண்டேனே தவிர காதலைச் சொன்னதில்லை. சொல்ல நினைத்தாலும் விலாங்கு மீன்போல நழுவிக் கொண்டேயிருந்தாள். ஒரு நாள் படிப்பதற்கு ஏதாவது கதைப்புத்தம் இருக்குமா என்று வலிய வந்து கேட்டாள். கிடைத்த சந்தர்ப்பத்தை ஏன் நழுவவிடுவான் என்று குறுஞ்சிமலர் நாவலை அவளிடம் கொடுத்தேன். படித்துவிட்டு மிகவும் அருமையான நாவல் என்று வர்ணித்தாள். ஏன் என்று வினாவினேன். அதில் வரும் கதாநாயகனின் பெயர் தனக்கு மிகவும் பிடித்த பெயர் என்றாள். அதன்பின் எங்களிடையே புத்தகப் பரிமாறல் அடிக்கடி தொடர்ந்து கொண்டிருந்தது.

நாட்டின் போர்ச் சூழல் காரணமாக நாங்கள் பயந்து பயந்தே தினமும் வாழவேண்டி வந்தது. ஒருநாள் எங்கள் ஊரைநோக்கி இராணுவம் திடீரென முன்னேறுவதாகச் செய்தி வந்தது. நாங்களும் எங்கே போவது என்று தெரியாமல் அவசரமாக இடம் பெயர்ந்தோம். உயிர் வாழ ஆசைப்பட்டு ஆளுக்கொரு திசை நோக்கிச் சென்றதால் அவளை நான் மீண்டும் சந்திக்கவில்லை. நான் புலம் பெயர்ந்து வெளிநாடு வந்திருந்தேன். அவளும் அப்படியே ஏதாவது வெளிநாட்டிற்குப் போயிருக்கலாம் என்று என்னைச்சமாதானப் படுத்திக்கொண்டு மறைமுகமாக அவளைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டேன்.

மின்னஞ்சல்கள் தினமும் நிறைய வந்து குவிந்து கொண்டிருக்கும். இலவசம் என்பதால் விரும்பியவர்கள் எல்லாம் திக்கெட்டில் இருந்தும் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். வேண்டாதவற்றை அழிப்பதே மிகவும் சிரமமாக இருக்கும். அன்றும் ஆர்வம் காரணமாக நண்பன் ஒருவன் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றைத் திறந்து பார்த்தேன். வன்னியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பிரதி பெறுபவளின் பக்கம் என் கவனம் திரும்பியது. அவளேதான், இயக்கப் பெயராக இருக்கலாம் பெயர் மட்டும் மாற்றப்பட்டிருந்தது. அப்படி என்றால் அவள் அங்கேதான் இருக்கிறாளா? இது எப்படிச் சாத்தியமாயிற்று, ஒரு நாயைக் கண்டு பயந்து அந்த ஓட்டம் ஓடியவள், துப்பாக்கி ஏந்துவாளா? என்னால் கடைசிவரை நம்பமுடியாமலே இருந்தது. தமிழர் வாழ்ந்த நிலமெல்லாம் இராணுவத்தால் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப்பட்டது. யுத்தம் ஓய்ந்து வன்னி நிலம் பறிபோனபோது அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எந்த ஒரு செய்தியும் அவளைப்பற்றிக் கிடைக்கவில்லை.

தினமும் வரும் திடுக்கிடும் செய்திகளைக் கேட்கும்போதும், படங்களைக் காணொளிகளைப் பார்க்கும் போதும் அவளை நினைத்து என் மனம் வேதனையில் தடுமாறும்.

மாவீரர் தினத்திலன்று ஒவ்வொரு முறையும் மலரஞ்சலி செய்யும் போது என்கண்கள் பனிக்கும். கார்த்திகைப் பூக்கள் சூடுவதற்கல்ல, அர்பணிப்பதற்கே என்பதும் எனக்குத் தெரியும். ஆனாலும் அர்பணிக்கும் அந்த மலர்கள் நிச்சயமாக அவளுக்காக இருக்கக்கூடாது என்று ஒவ்வொரு தடவையும் என்மனம் சுயநலமாய் நினைக்கவைக்கும். ஏனோ இம்முறை மட்டும் மலர் வைக்கும்போது என்னை அறியாமலே குலுங்கிக் குலுங்கி அழுதேன். அன்று காணொளியில் பார்த்த அந்தக் காட்சி என்னை மீண்டும் மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உறைய வைத்திருந்தது. யாருக்காக அவள் தன்னுயிரைத் தந்தாள்?

மண்மீது கொண்ட காதலால்
மண்ணின் மானம் காக்கத்
தன்னையே தந்த அவளது அந்த
மீள விழியில் மிதந்த வலியெல்லாம்
சொல்லில் அகப்படுமோ?

Print Friendly, PDF & Email

1 thought on “மீளவிழியில் மிதந்த கவிதை..!

  1. போரும் காதலும் என்று லியோ டால்ஸ்டாய் எழுதியதைப் போல, போர் என்ற அரக்கனின் கைகளில் நசுங்கும் ரோஜா இதழ் போன்ற சென்ஸிடிவ்வான காதல் பற்றி குரு அரவித்தன் அவர்களால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது.
    நாய்க்கு பயந்தவள், துப்பாக்கி சுமக்கும் வைராக்யத்தை அடையும் இனப்பற்று.
    சொல்லில் அகப்படாத எத்தனையெத்தனையோ அனுபவங்களை சொல்லாமல் விட்டதை சொன்னவைகளுக்கு நடுவில் எண்ணிப் பார்க்க வைக்கிறார் கதாசிரியர் குரு அரவிந்தன் அவர்கள்.
    படித்ததில் பிடித்த இன்னொரு கதை.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *