Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மீண்டும் துளிர்த்தது

 

ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப்பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள் அவனுக்காகக் கொடுத்திருந்த நான்கு வரித் திருமண விளம்பரத்திற்கு வந்திருந்த கடிதங்கள் அவை. கிளி, ஜோஸ்யக்காரன்
விரல்களுக்குள் ஒளித்துக்காட்டும் நெல்மணியைக் கண்டதும் மிக எளிதாக ராசிக்குறிப்பைத் தேர்ந்தெடுத்து விடுகிறது. இவனுக்குத் தான் எப்படி இந்தக் குவியலிலிருந்து தன் மனைவியைத் தேர்ந்தெடுப்பதென்ற
சூட்சுமம் புரியவில்லை.

நாற்பது வயதைக் கடந்துவிட்ட மனைவியை இழந்த ஒரு விடோயரை மணந்து கொள்ளத் தான் எவ்வளவு பேர் – இளம்பெண்கள், முதிர்கன்னிகள், விதவைகள், விவாகரத்தானவர்கள் என்று – ஆர்வம் காட்டி விண்ணப்பம் அனுப்பி இருக்கிறார்கள்! தனசேகருக்கு மிகவும் ஆச்சர்யமாகவும், இவர்களிலிருந்து ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் ஒரு முறை கல்யாணம் பண்ணி…. ஆயாசமாகவும் இருந்தது.

சுமித்ராவின் மீது கோபம் கிளர்ந்தது அவனுக்குள். ஏன் இப்படிப் பண்ணினாள்? அவனுடன் ஐந்து வருஷங்கள் கூட முழுதாய் வாழ்ந்து முடிக்காமல் அல்ப ஆயுளில் விருட்டென்று விடைபெற்றுக் கொண்டு போய் விட்டாளே ராட்சஸி! ஆனால் அவளை மரணத்தை நோக்கி தள்ளியதில் அவனுக்கும் தானே பங்கிருக்கிறது என்ற குற்ற உணர்ச்சியும் பொங்கியது. அவன் மட்டுமா? முதல் காரணம் அவனுடைய அம்மா.

அவள் தான் சுமித்ராவைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து அவனுக்கு மணமுடித்து வைத்தாள். ஆனால் கல்யாணமான ஆறாவது மாதத்திலிருந்தே அவளைக் கரித்துக் கொட்டத் தொடங்கி விட்டாள் – சீக்கிரம் பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடுக்கச் சொல்லி. நாளுக்கு நாள் அவளின் நச்சரிப்பும் வார்த்தைகளால் வதைப்பதும் அதிகமானது. அவ்வப்போது தன்னுடைய மகனுக்கு வேறொரு கல்யாணம் செய்து வைத்து விடுவதாய் பயமுறுத்த வேறு செய்தாள். தனசேகர் கூட அம்மாவிடம் இதற்காக சண்டை போட்டிருக்கிறான்.

அடுத்தது இந்த சமூகம்! எங்கு போனாலும் ‘இன்னும் குழந்தை இல்லையா?’ என்கிற கேள்வி சுமித்ராவை சித்ரவதை செய்வதாய் இருந்தது. ஆளாளுக்கு அறிவுரைகளை வேறு தாராளமாய் அள்ளி வழங்கியபடி கடந்து போனார்கள். அப்புறம் தொலைக்காட்சி, சினிமா, பத்திரிக்கைகள் என்று எல்லாவற்றிலும் பெண்ணென்றால் பிள்ளை பெற்றுத் தர வேண்டும்; குடும்பத்தின் சந்ததி தழைக்க எப்பாடு பட்டாலும் அவள் உதவ வேண்டும் என்கிற சித்திரத்தையே முன் வைத்து அப்படி முடியாத பெண்களை குற்ற உணர்ச்சி கொள்ள வைத்தன.

ஒருமுறை அவர்கள் பார்த்த திரைப்படம் சுமித்ராவை விரக்தியின் விளிம்புக்கே இட்டுச் சென்றது. அந்த திரைப்பட இயக்குநரை அவளுக்கு ரொம்பவும் பிடிக்கும்; அவர் இயக்கி நடித்த ஒரு படத்தையும் அவள் தவற விட்டதே இல்லை. அந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் மிகவும் பொறுப்புள்ள ஆசிரியர்; தன்னிடம் படிக்கும் பெண்ணைக் காதலிக்கக் கூடாது என்கிற உன்னத இலட்சியங்களெல்லாம் உடையவன்.

அப்படிப்பட்டவன் பெண்களுக்கு அவர்களின் ஒவ்வொரு பருவத்திற்கும் தக்கபடி மதிப்பெண் போடுகிற அற்பத்தனமான காரியத்தைச் செய்கிறான் – பிறக்கும் போது இத்தனை மார்க்; ருதுவாகும் போது இத்தனை மார்க்; திருமணமானதும் இத்தனை மார்க்; பிரசவிக்கும் போது இத்தனை மார்க் என்று. ஒரு பெண் என்பவள் ஒரு பிள்ளைக்குத் தாயாகும் போது தான் முழுமை பெறுகிறாள் என்கிற முட்டாள்தனமான கருத்தைச் சொல்கிறது அந்த திரைப்படம்.

அந்த திரைப்படத்தைப் பார்த்து வந்த தினத்தில் சுமித்ரா இரவெல்லாம் தூங்கவே இல்லை. தன்னால் முழுமையான பெண்ணாக வாய்ப்பே இல்லையா என்பதையே திருப்பித் திருப்பிக் கேட்டு அரற்றிக் கொண்டிருந்தாள். தனசேகரின் சமாதானம் எதுவுமே அவளிடம் எடுபடவில்லை. “அவ்வளவு பெரிய டைரக்டர் சொன்னால் சரியாத்தான் இருக்கும்…” என்றாள். “அப்படி இல்லம்மா, அவரோட முதல் மனைவிக்குக் கூட குழந்தை இல்லை; அதனால அவங்க முழு மனுஷி இல்லையா என்ன?” என்று இவன் கேட்கவும், “அப்படித் தான் போலருக்கு; அதான் அவங்களும் சீக்கிரமே செத்துப் போயிட்டாங்க…” என்றாள் விரக்தியாய். அன்றைக்கு ராத்திரியே திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் தூக்கத்திலேயே சுமித்ராவின் உயிர் பிரிந்தது.

சுமித்ரா இறந்த ஒரு சில மாதங்களிலேயே அவனின் அம்மாவும் இறந்து போனது, மனித மனங்களின் மர்மம் ஆழங் காணவே முடியாததென்பதற்கான மற்றுமொரு அழியா சாட்சியம். தனிமை தனசேகரைத் தின்று கொண்டிருக்க, அவனின் அலுவலக நண்பர்கள் தான் வற்புறுத்தி அவனை இன்னொரு திருமணத்திற்கு இணங்க வைத்து, இந்த விளம்பரத்தை வெளியிட்டார்கள்.

வந்திருந்த கடிதங்களை மெதுவாய் மேலோட்டமாய்ப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு கடிதத்துடனேயே ஒட்டப்பட்டிருந்த பாஸ்போர்ட் அளவிலான போட்டோவிலிருந்த முகம் கொஞ்சம் பரிச்சயமானதாயிருக்கவே உற்றுப் பார்த்தான். காலம் தன் ரேகைகளை அழுத்தமாய் பதித்து அந்த முகத்தில் நிறைய மாற்றங்களை நிகழ்த்தியிருந்த போதிலும் அவனுக்கு அந்த முகத்தை அடையாளம் தெரியவே செய்தது. பெயரைப் படித்தவனுக்கு நரம்புகளிலெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடியது. மறக்க முடியுமா அன்னபூரணியை! அவள் எப்படி இந்தக் கடிதக் குவியலுக்குள்…..?

தனசேகர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் பேச்சுப் போட்டிகளிலும் கவி அரங்கங்களிலும் கலக்கிக் கொண்டிருந்தான். ஒருமுறை கோவையில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான கவிதைப் போட்டியில் தான் அன்னபூரணியைச் சந்தித்தான். அவளும் கவிதைப் போட்டியில் கலந்து கொள்வதற்காக மதுரையில் ஒரு பெண்கள் கல்லூரியிலிருந்து வந்திருந்தாள். அவள் வாசித்த கவிதை அவளைப் போலவே எளிமையான அழகுடன் கவித்துவம் பொங்க அற்புதமாய் இருந்தது. ஆனால் அது கவியரங்குகளில் வாசிக்கப்படக் கூடிய கவிதை அல்ல; எழுதப்பட்டு தனியாய் வாசித்தால் இலக்கிய அனுபம் தரக்கூடிய கவிதை. மாணவர்களுக்குப் புரியாததால், அவளை வாசிக்கவே விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி மேடையிலிருந்து கீழே இறக்கி விட்டு விட்டார்கள்; பாவம்!

தனசேகர் வாசித்த கவிதைக்குத் தான் அன்றைக்கு முதல் பரிசு கிடைத்தது. அவனுக்கு கவி அரங்குகளின் சூட்சுமம் தெரியும். நடுவர்களாய் உட்கார்ந்திருக்கும் தமிழாசிரியர்களுக்கு கவிதை பற்றிய ஒரு மண்ணாங்கட்டி புரிந்துணர்வும் இருக்காது. நவீன தமிழ் இலக்கியத்தின் பக்கம் தலைவைத்தும் படுக்க மாட்டார்கள்! மாணவர்களின் கைதட்டல்களை வைத்துத் தான் மதிப்பெண்கள் போடுவார்கள். வார்த்தைகளில் கொஞ்சம் நெளிவு சுளிவுகள்; வாசிப்பதில் ஏற்ற இறக்கம்; அங்கங்கே பெண்களைச் சீண்டும் பிரயோகங்கள்… இருந்தால் போதும்; மாணவர்கள் கைதட்டி ரசித்து முதல் பரிசை வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அன்றைக்கும் அதுதான் நடந்தது. போட்டி முடிந்ததும் இவன் வலியப் போய் அன்னபூரணியிடம் அவளின் கவிதையை சிலாகித்துப் பேசினான். அவளுக்கோ முகத்தில் கோபம் கொப்பளித்தது “உங்க கவிதைக்குத் தான் முதல் பரிசு அறிவிச்சிருக்காங்க; நீங்க என் கவிதையை பாராட்டிப் பேசுறீங்க….! என்ன நக்கல் பண்றீங்களா? இல்ல ரூட் போடலாம்னு பார்க்குறீங்களா? புகழ்ந்து பேசுனா மடங்குற பொண்ணு நானில்ல; அதுக்கு வேற ஆளப் பாருங்க…” என்றாள் படபடவென்று.

தனசேகருக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. முகம் வெளிறி அங்கிருந்து விலகிப் போய் விட்டான். இருந்தும் அவளின் கவிதை அவனைத் தூங்க விடாமல் இம்சித்தது. அரங்கத்தில் அந்தக் கவிதைக்கு ஏற்பட்டுவிட்ட அவமானத்தைத் துடைக்க வேண்டுமென்று துடித்தான். தமிழ் மன்றத்தினரிடமிருந்து அவளின் கவிதையின் கையெழுத்துப் பிரதியை வாங்கி அதை அப்படியே ஒரு இலக்கிய சிறு பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தான்.

அடுத்த மாதமே அது அந்தப் பத்திரிக்கையில் பிரசுரமானது. ஒரு சிறு கடிதம் எழுதி அவளின் கவிதை பிரசுரமான இதழுடன் அவளின் கல்லூரி முகவரிக்கு அனுப்பி வைத்தான். அதற்கு அடுத்த இதழில் அந்தக் கவிதையைப் பாராட்டி நிறைய வாசகர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். அதையும் வாங்கி அவளுக்கு அனுப்பி வைத்தான். அப்புறம் வந்த கவி அரங்கத்தில் சந்தித்தபோது அவளே தேடி வந்து பேசினாள்.

தன்னுடைய கவிதையை அச்சில் பார்த்த சந்தோஷமும் மலர்ச்சியும் அவளின் முகத்தில் அப்பட்டமாய் வழிந்தது. அன்றிலிருந்து இருவருக்குமான நட்பு துளிர்விட்டு புதுப்புதுக் கிளைகளுடன் விரியத் தொடங்கியது. பரிசு பெற வேண்டுமென்கிற அக்கறை கொஞ்சமுமில்லாமல் இருவரும் சந்தித்துக் கொள்வதற்காகவே கவி அரங்கங்களிலும் பேச்சுப்போட்டியிலும் பட்டிமன்றங்களிலும் கூடக் கலந்து கொள்ளத் தொடங்கினார்கள்.

பட்டாம் பூச்சிகளாய் சிறகடித்துப் பறந்த கல்லூரிக் காலம் முடிந்து வேலைக்காக அல்லாடிய நாட்களிலும் இருவருக்குமான நட்பும் நேசமும் உயிர்ப்புடனிருந்தது. தனசேகருக்கு சென்னையில் வேலை கிடைத்து, தாராளமாய் சம்பளம் வரத் தொடங்கியதும், கல்யாணம் பண்ணிக்கொள்ள தைரியம் வந்தவுடன், அவன் மனதிற்குள் முதலில் மனைவியாய் நிழலாடியவள் அன்னபூரணிதான். தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்கிற தயக்கத்தையும் மீறி, அவளைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்கிற விருப்பத்தை அவளிடம் தெரிவித்து விட்டான்.

அவள் ரொம்ப நேரத்திற்கு எதுவுமே பேசவில்லை. அப்புறம் சிரித்துக் கொண்டே சொன்னாள். “உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட வந்துட்டா, அப்புறம் எங்க மாமாவ யாரு கட்டிப்பா…?” அவள் சீரியஸாகச் சொல்கிறாளா, இல்லை சும்மா விளையாட்டுக்குச் சொல்கிறாளா என்று குழப்பமாக இருந்தது. அவளுக்கு அப்பா இல்லை என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறாள். ஆனால் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொள்வதற்காகவே ஒரு தாய்மாமா தயாராக இருக்கிற விஷயத்தை இதுவரைக்கும் அவள் சொன்னதே இல்லை.

அன்னபூரணியின் அப்பா ஆசிரியராக உத்தியோகம் பார்த்தவர். அவரின் காலத்திலெல்லாம் வீடுவீடாகப் போய் கிராமத்து மனிதர்களிடம் பேசி குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிக்க வேண்டுமென்பது ஆசிரியப் பணியின் ஒரு பகுதியாகவே இருந்திருக்கிறது. அப்படியிருந்தும் அந்த குடும்பக் கட்டுப்பாட்டை தன் விஷயத்தில் கடைபிடிக்க வேண்டுமென்று அவருக்குத் தோணவே இல்லை; ஆண் வாரிசு வேண்டுமென்ற அன்றைய பத்தாம் பசலித்தனத்திற்கு அவரும் பலியானதின் விளைவு அடுத்தடுத்து ஐந்து பெண்கள்; எப்போதும் வீட்டில் வறுமை.

சின்ன வயதிலேயே செத்தும் போய் விட்டார். நண்டும் சிண்டுமாய் ஆறு பெண் குழந்தைகளுடன் தனிமரமாய் நின்ற அன்னபூரணியின் தாயை அவரின் தம்பி தான் ஆதரித்திருக்கிறார். அவரைக் கல்யாணம் செய்து கொள்வது தான் தன்வரை சரியாக இருக்குமென்றும், அதன் மூலம் தான் தன்னுடைய தங்கைகளையும் கரை சேர்க்க முடியுமென்றும் அவள் சொன்னாள். தனசேகரும் இதற்கு மேல் வற்புறுத்துவது முறையல்ல என்று ஒதுங்கிக் கொண்டான். அதற்கப்புறம் அவளை மறுபடியும் சந்திக்கிற சந்தர்ப்பமே அமையவில்லை அவனுக்கு.

அன்னபூரணியிடமிருந்து வந்திருந்த கடிதம் வித்தியாசமாக இருந்தது. அது திருமண விளம்பரம் பார்த்து அனுப்பப்பட்டதாகவே தெரியவில்லை. ஏதோ வேலைக்கான விண்ணப்பம் போல ஆங்கிலத்தில் டைப் பண்ணப்பட்டு பாஸ்போர்ட் அளவிலான நிழற்படத்துடனிருந்தது. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று தனசேகருக்குப் புரிந்தது. கடித மேலுறையிலிருந்த முகவரியை திரும்பவும் வாசித்தான். அவனுடைய விளம்பரத்தின் பெட்டி எண்:KB3425. அன்னபூரணி விண்ணப்பித்திருக்கும் விளம்பரப் பெட்டி எண்:KR3425. அவள் Rயை Bமாதிரி எழுதியிருந்ததால் அந்தக் கடிதம் தவறுதலாக தனக்கு அனுப்பப்பட்டு விட்டது என்கிற விபரம் புரிந்தது அவனுக்கு.

தற்செயலாக இருந்தாலும், அன்னபூரணியின் கடிதம் தவறுதலாக தனக்கு அனுப்பப்பட்டிருப்பதில் ஏதோ சூட்சுமமான செய்தி ஒளிந்திருப்பதாய் அவனுக்குத் தோன்றியது. அன்னபூரணியைப் போய்ப் பார்த்து வந்தால் என்ன என்கிற எண்ணம் மெல்ல அவனுக்குள் எட்டிப் பார்த்தது. திடீரென்று போய் நின்றால் அவள் தன்னை எப்படி எதிர்கொள்வாள்? ஒருவேளை தன்னுடைய வருகை அவளின் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி விடுமோ? என்ன ஆனாலும் பரவாயில்லை; அவளைப் போய்ப் பார்த்து வருவதென்று தீர்மானித்தான் தனசேகர்.

திருநெல்வேலி டவுனின் முக்கிய வீதியிலிருந்த அன்னபூரணியின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் அவனுக்கு சிரமமேதும் இருக்கவில்லை. வீட்டின் மையத்தில் மூன்று படிக்கட்டுகளும் அதன் இருபுறமும் சிமெண்ட் திண்ணைகளும், நிறைந்த பூ வேலைப்பாடுகளுடன் ஓங்குதாங்காய் நின்ற தேக்கு மரக் கதவுகளும் பழம் பெருமை பேசி அவனை வரவேற்றன. திண்ணையில் கொஞ்சம் வயது கூடிய ஒரு பெண் வெறும் தரையில் படுத்து கண் மூடிக் கிடந்தாள். இவன் அங்கு போய் நின்றதும் அரவம் கேட்டுக் கண் விழித்து எழுந்தவள், தலைமுடியை அள்ளி முடிந்தபடி, “நீ யாருப்பா? உனக்கு என்ன வேணும்” என்றாள்.

“நான் சென்னையிலிருந்து வர்றேன்; இங்க அன்னபூரணிங்குறது….”

“என் பொண்ணு தான்; கொஞ்சம் இருப்பா, கூப்புடுறேன்…..” என்றபடி வீட்டுக்குள் பார்த்து சத்தங் கொடுத்தாள். அவசர அவசரமாய் வெளியே வந்த அன்னபூரணி வயசுக்குச் சற்றும் பொருத்தமில்லாமல் பாவாடை தாவணி அணிந்திருந்தாள். இவனைக் கொஞ்ச நேரம் யாரோ போல் புரியாமல் ஏற இறங்கப் பார்த்து விட்டு சட்டென்று ஞாபகம் வந்தவளாய், “ஏய் தனா, நீ எங்க இந்தப் பக்கம்?” என்றபடி மலர்ந்தாள். “அம்மா; இவர் தனசேகர்…. கவிதையெல்லாம் எழுதுறவர்… ஏற்கெனவே இவரப் பத்தி உன்கிட்ட சொல்லி இருக்கேன்ல…” என்று அறிமுகப்படுத்தினாள். அவளின் முகத்தில் தான் அணிந்திருந்த உடைக்காக கூச்சம் படர்ந்தது. “அம்மாட்ட பேசிட்டு இரு; ஒரு நிமிஷத்துல வந்துடுறேன்….” என்றபடி அவசரமாய் வீட்டுக்குள் போனாள்.

“அன்னம் உன்னப் பத்தி நெறைய சொல்லி இருக்கா தம்பி, இன்னம் கடிதமெல்லாம் எழுதறாளா….?” என்று அன்னபூரணியின் அம்மா கேட்கவும் அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. அதற்குள் அன்னபூரணியே ஒரு டம்ளரில் மோருடன் வந்து விட்டாள். இப்போது பாவாடை தாவணியைக் கலைந்து விட்டு, சேலை அணிந்து இன்னும் அழகாய் இருந்தாள்.

“இவ்வளவு வருஷங்களுக்கப்புறம் மறுபடியும் உன்னைப் பார்த்தது மனசுக்கு ரொம்பவும் சந்தோஷமா இருக்கு தனா! ஆமா, இந்த வீட்டு முகவரி உனக்கெப்படிக் கிடைச்சது? நாங்களே இங்க குடி வந்து ரெண்டு மாசந்தானே ஆகுது?” என்றாள். தனசேகர் எல்லா விபரங்களும் சொல்லி அவளின் கடிதத்தை எடுத்துக் காண்பித்தான். கொஞ்ச நேரம் பலதையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். “இரு உனக்கு குடிக்கிறதுக்கு காஃபி கலந்து எடுத்துட்டு வர்றேன்; நீ தான் காஃபின்னா பொண்டாட்டியையே விக்கிற ஆளாச்சே…” என்றபடி எழுந்து சமையலறையை நோக்கிப் போனாள் அன்னபூரணி.

“பூரணிக்கு எத்தனை குழந்தைங்கம்மா? ஒண்ணையுமே கண்ணுல காங்கல….” என்று அன்னபூரணியின் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான் தனசேகர். கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல், அவனையே குறுகுறுவென்று பார்த்திருந்து விட்டு “கொழந்தையா? அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலையேப்பா….” என்றாள் அவள். இவனுக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

“பூரணி சொன்னாங்களே, அவங்களக் கல்யாணம் பண்றதுக்காக தாய்மாமன் அதான் உங்களோட தம்பி காத்திருந்த கதையெல்லாம்….” பூரணியின் அம்மா சிரித்தாள் “எனக்கு தம்பின்னெல்லாம் யாருமில்லப்பா… இன்னும் சொல்லப்போனா, அது வரமா சாபமான்னே தெரியல; எங்க சந்ததியில ஆறேழு தலைமுறையா ஆண் வாரிசே கிடையாது… எங்க பாட்டிக்கு எட்டுப் பொண் குழந்தைங்க; எங்க அம்மாவுக்கு ஏழு; எனக்கு அஞ்சு; இவளோட தங்கைகளுக்கும் ஆளுக்கு ரெண்டோ மூணோ எல்லாமே பெண் குழந்தைங்க தான். அஞ்சு பொண் பொறந்தாலே அரசனும் ஆண்டிம்பாங்க; ஆனா நாங்க யாருமே ஆண்டியாகல; நல்லாத்தான் இருக்கோம். நீ அன்னத்தக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டியாமே! அன்னைக்கு முழுவதும் அழுதுக்கிட்டே இருந்தாள்; உன் மேல அவளுக்கு ரொம்ப இஷ்டம்; தெரியுமா…..”

“பூரணிக்கு என்மேல ரொம்ப இஷ்டம்ங்குறீங்க; அப்புறம் ஏன் புதுசா ஒரு தாய் மாமாவ உருவாக்கி என்னை தட்டிக் கழிக்கனும்? புரியலேயேம்மா….” தனசேகர் கேட்கவும் அவள் பொட்டென்று அழத் தொடங்கி விட்டாள். அன்னபூரணி காஃபியுடன் வரவும், கண்களைத் துடைத்துக் கொண்டு, “நீ காஃபி குடிப்பா…” என்றாள். காஃபி, பிரபஞ்சன் தன் கதைகளில் வர்ணிக்கும் தரத்தில் அடி நாக்கில் கசப்பும் மேலே தித்திப்புமாக அற்புதமான ருசியுடன் இருந்தது.

“ஏன் பூரணி இன்னும் நீ கல்யாணம் பண்ணிக்கல? அம்மா ரொம்ப வருத்தப்பட்டு அழறாங்க, தெரியுமா…” என்றான் தன்சேகர்.

“கல்யாணம் அத்தன முக்கியமா, என்ன” என்றாள் சலிப்புடன்.

“கல்யாணங்கிற ஏற்பாட்ல நம்பிக்கை இல்லையா உனக்கு”

“நம்பிக்கை இருந்தாப் போதுமா, அதுக்கான தகுதி வேணாமா?” மையமாய் சிரித்து மழுப்பினாள். அவளின் கண்களில் சோகம் விளிம்பு கட்டியது. தனசேகருக்கு அவள் சொன்னதின் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால் அவளின் அடி மனதில் ஏதோ காயம் இருப்பது மட்டும் புரிந்தது.

“கல்யாணத்துக்கு பெருசா என்ன தகுதி வேணும் பூரணி, யூ மீன் டௌரி…..”

“விடு தனா, அப்படி இப்படின்னு நாற்பது வயசத் தாண்டியாச்சு; இதுக்கு மேல என்ன கல்யயணம் காட்சின்னு….”

“இளமைக்குக் கூட கல்யாணம் அத்தன முக்கியமில்ல பூரணி; முதுமைக்குத் தான் ஒரு துணையும் தோழமையும் கண்டிப்பாத் தேவை; வெட்கத்த விட்டு இப்பவும் கேட்கிறேன்; நீ சம்மதிச்சா நாமளே கல்யாணம் பண்ணிக்கலாம் பூரணி…..” அவளிடமிருந்து நீண்ட மௌனமே பதிலாக வெளிப்பட்டது. மறுபடியும் அவனே பேசினான்.

“உன்னோட பிரச்னை எதுன்னாலும் என்கிட்ட நீ வெளிப்படையாப் பேசலாம் பூரணி…. எனக்கு பணத்தேவை எதுவும் இல்ல; அதால டௌரிங்கிற பேச்சே வேண்டியதில்ல… செவ்வாய் தோஷம் மாதிரியான ஜாதகக் கோளாறுன்னா, அதுல எல்லாம் எனக்கு துளி கூட நம்பிக்கையில்ல; உங்க அம்மாவையும் நம்ம கூடவே வச்சுப் பராமரிக்குறதுலயும் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்ல” அன்னபூரணி இப்போதும் பதிலேதும் பேசாமல் காலிக் கோப்பைகளுடன் உள்ளே போனாள்.

”அவளோட பிரச்னைய அவளால உன்கிட்ட சொல்ல முடியாது தம்பி… உன்னப் பார்த்தா, ரொம்ப நல்ல மாதிரியாத் தெரியுது; நீ கண்டிப்பா புரிஞ்சுக்குவங்குற நம்பிக்கையில அவ கல்யாணம் பண்ணிக்க மறுக்குறதுக்கான காரணத்த நான் சொல்றேன்…. அது இயற்கை அவளுக்கு பண்ணுன சதி; வேறென்ன….” அன்னபூரணியின் அம்மா பேச ஆரம்பித்தாள்.

“அன்னம் இன்னும் பெரிய மனுஷியாவே ஆகல தம்பி… நாங்களும் பார்க்காத வைத்தியமில்லை; அழைச்சுட்டுப் போகாத கோயில் குளமில்லை; மருந்து மாந்திரீகம் எதுலயுமே பலிக்கல…. சரி, அவளுக்கு விதிச்சது அவ்வளவு தான்னு விட்டுட்டோம்; வேறென்ன செய்றது?”

அன்னம் தான் அவர்களுக்கு மூத்த பெண்; அப்பா இறந்ததும் நொடித்துப் போன குடும்பம், அவள் படித்து வேலைக்குப் போக ஆரம்பிக்கவும் தான், கொஞ்சம் கொஞ்சமாய் தலை நிமிர்ந்திருக்கிறது. அவள் தான் தங்கைகளை எல்லாம் படிக்க வைத்தாள். நான்கு தங்கைகளுக்கும் அமர்க்களமாய் கல்யாணம் செய்வித்து, அவர்களின் நல்லது கெட்டதுகளைக் கவனித்துக் கொண்டாள். அவர்கள் எல்லோரும் தன் குடும்பம், குழந்தைகள் என்று சுருங்கி, இவளிடமிருந்து விலகிப் போகத் தொடங்கவும், திடீரென்று தன்னைச் சுற்றிலும் ஒரு வெறுமை படர்வதாய்த் உணர்ந்திருக்கிறாள்..

ஊராரின் பார்வைகளிலும் ஒரு ஏளனமும் பரிதாபமும் தோன்றவே, தன்னைத் தெரிந்த முகங்களின் குறுகுறுக்கிற பார்வைகளிலிருந்து முற்றாக விலகி, அவளின் குறைபாட்டை அறிந்திராத ஜனங்களுக்கு மத்தியில் போய்க் கலந்து கரைந்து விட வேண்டுமென்று, யாருக்கும் தகவல் கூட தெரிவிக்காமல் அம்மாவை மட்டும் அழைத்துக் கொண்டு இந்தப் புதிய இடத்திற்கு வந்து விட்டாள். இதுவும் நிரந்தரமில்லை. வேலை கிடைத்ததும் அந்த இடம் நோக்கி நகர்ந்து விடுகிற உத்தேசத்தில் தீவிர முயற்சியில் இருக்கிறாள்.

“இப்ப சொல்லுங்க தம்பி, தாம்பத்தியத்துக்கு தயாராகாம, வம்ச விருத்திக்கும் வழியில்லாம எப்படி அவளால கல்யாணம் பண்ணிக்க முடியும்?”

“தாம்பத்ய சுகமும் வம்ச விருத்தியும் மட்டுமே வாழ்க்கை இல்லைன்னு வாழ்ந்து புரிஞ்சுக்கிட்டவன் நான்: பூரணி சம்மதிச்சா, நான் பண்ணிக்கிறேன்ம்மா…. அவ எனக்கு ஒரு தோழியா இருந்தாப் போதும்; அன்னபூரணியால அது நிச்சயமா முடியும்……”

“அப்படின்னா தாராளமா கூட்டிடுப் போங்க தம்பி; உங்கள மாதிரி மனுஷனுக்காகத் தான் அவள் இவ்வளவு நாள் காத்திருந்தாளோ என்னவோ…..” என்றாள்.

“பூரணி மட்டுமில்லம்மா; நீங்களும் என் கூடவே வாங்க… என் மனசுலயும் வீட்டுலயும் தாராளமாவே இடமிருக்கு…..” என்றான் தனசேகர்.

தற்செயலாக நேர்ந்த ஒரு மிகச் சிறிய தவறு, ஒரு பத்திரிக்கை அலுவலகத்தின் தபால் பிரிப்பவர் கவனக் குறைவாய் செய்திட்ட ஒரு செயல், தன்னுடைய வாழ்க்கையின் மிக அற்புதமான திருப்பங்களுக்கு காரணமாக அமைந்து விட்டதே என்று யோசித்தபடி அன்னபூரணி மெதுவாய் நடந்து போய் தனசேகரின் கைகளைக் காதலுடன் பற்றிக் கொண்டாள் – அவளுக்குள் அவளின் பெண்மை பூ மாதிரி மலர்வதை உணர்ந்தபடி.

(தினமணிக்கதிர் அக்டோபர் 2009) 

தொடர்புடைய சிறுகதைகள்
வீடெனும் பெருங்கனவு
ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் - வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் -குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஆனால் நேரம் கடந்தும் தனபாலன் அங்கு வந்து ...
மேலும் கதையை படிக்க...
முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி ஏதாவது இருக்குமாப்பா… ” சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு மத்தியான வேளை; வேலைத்தளம் இயந்திர இரைச்சலும் மனிதக் கூச்சலுமின்றி அமைதியாக ...
மேலும் கதையை படிக்க...
பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. விஜிலென்ஸ் வந்து போன கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஒரு தேர்வு அறையிலிருந்து அய்யோ அம்மா என்று சத்தம் வரவும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. தலைமை ஆசிரியர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அவசரமாய் அந்த அறைக்கு ...
மேலும் கதையை படிக்க...
“காணி நிலம்னா சுமார் எத்தனை சதுர அடி இருக்கும் மிஸ்டர் ராம்நாத்?” என்றார் பரமேஸ்வரன். இப்படி ஒரு திடீர்க் கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத ராம்நாத் கொஞ்சம் தடுமாறித்தான் போனார். “ஸாரி. தெரியலியே ஸார், எதுக்குக் கேட்குறீங்க? நான் வேணும்னா நெட்ல தேடிப் பார்த்துச் ...
மேலும் கதையை படிக்க...
தினசரி வேலைத் தளத்தில் நரசய்யா பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டிருந்தன. தனபாலுக்கு அவனை என்ன செய்வதென்றே புரியவில்லை. என்னதான் கண்டித்தாலும், புத்தி சொன்னாலும் அமைதியாக பாவம் போல் பார்த்துக் கொண்டு நிற்பவனை என்னதான் செய்வது? கடந்த மூன்று தினங்களாக அவன் வேலைக்கும் வரவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
வீடெனும் பெருங்கனவு
தீராத சாபங்கள்
பால்ய கர்ப்பங்கள்
நிலமென்னும் நல்லாள்
துரத்தும் நிழல்

மீண்டும் துளிர்த்தது மீது 2 கருத்துக்கள்

 1. E Kannan says:

  Dear Writer,

  What to say?

  Simply superb.

  Regards…..
  Kannan
  7061901800

 2. SATHISH S says:

  சூப்பர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)