மிருகத்தனம்

 

கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

அன்று காலை பதினோறு மணிக்கு நாயை வைத்தியரிடம் அழைத்து போக வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்தாள் சியாமளா . உண்மையில் நாய் ஆரோக்கியமாகவே இருந்தது. ஆனால் அதன் சுபவாம் மாறியிருப்பதை தான் அவளால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

திருமணமாகி வரும்வரை அவள் நாய் வளர்த்ததில்லை. ஆனால் அவளது கணவன் ராஜனுக்கு நாய் வளர்ப்பதில் அதிக ஆர்வமிருந்தது. பெங்களுரில் பிரம்மசாரியாக தனியே வசித்த போது கூட இரண்டு நாய்கள் வளர்த்தாக சொல்லியிருக்கிறான்.

அவர்களது திருமணபரிசாக ஜோசப் தயாளன் தந்தது தான் அந்த ஜெர்மன் ஷெப்பர்ட். இரண்டு மாத குட்டியாக இருந்தது . அதற்கு நோவா என்று பெயர் வைத்தது கூட ராஜன் தான். தினசரி குளிக்க வைப்பது, இறைச்சி, பிஸ்கட் வாங்கி போடுவது. நடைபயிற்சிக்கு கூட்டி போவது என்று ராஜன் அதன் மீது மிகுந்த நெருக்கத்துடனிருந்தான். ஜெர்மன் ஷெப்பர்ட்டால் வெக்கை தாங்கமுடியாது. அதற்கு இரவில் குளிர்ச்சி தேவைப்பட்டது. அதற்காக அவர்கள் படுக்கை அறையின் ஒரத்திலே வந்து படுத்து கொள்ளும். அந்த அறையில் மட்டும் தான் குளிர்சாதன வசதியிருந்தது.

பலநேரங்களில் அவனோடு உடலுறவு கொள்ளும்போது நாய் அவளை பார்த்து கொண்டிருக்கிறதோ என்று சியாமளாவிற்கு தோன்றும். இருளில் நாய் சலனமில்லாமல் கிடப்பது தெரிந்த போது அந்த கூச்சம் மனதில் மூலையில் அகலாமலே இருந்தது. அதை ராஜன் கண்டு கொண்டதேயில்லை.

அதனால் தானோ என்னவோ அவளுக்கு நோவாவை பிடிக்காமலே இருந்தது. சில நேரங்களில் அலுவலகம் விட்டு அவனுக்கு முன்னால் சியாமளா வீடு வந்த போது நோவா வேகமாக வந்து அவள் மீது தாவி ஆசையோடு நக்க துவங்கும். அவள் எரிச்சல் அடைந்தபடியே அதை விலக்குவாள். கடுமையாக திட்டுவாள்.

அந்த நாய்க்கு ஆங்கிலம் பழகியிருந்தது. அவர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் தான் பேசிக் கொண்டார்கள். கோபம் அதிகமான நேரங்களில் மட்டுமே ராஜன் தமிழில் கத்துவான். எந்த மொழியில் பேசினாலும் நாய்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்க போகிறதா என்ன? அந்த நாயின் மூதாதையர்கள் வேட்டைக்கு பிரசித்தி பெற்றவர்கள் என்றும், பனிபிரதேசங்களில் வாழ்ந்து பழகியவர் என்றும் ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி ராஜன் நிறைய சொல்லியிருக்கிறான்.

ஏன் இப்படி தன்னைப் போல அதுவும் தன் பூர்வீகம் மறந்து இப்படி தங்கள் வீட்டில் வந்து அடைபட்டு கிடக்கிறது என்று தோன்றும் நிமிசங்களில் அதன் மேல் ஒரு பரிவு உண்டாகும். நாயை தடவி கொடுப்பாள்.

ராஜன் அலுவலகம் விட்டு வந்ததில் இருந்து அந்த நாயோடு சேர்ந்தே தானிருப்பான். அவன் டிவி பார்க்க துவங்கும் போது அது காலடியில் படுத்து கொள்ளும். அவன் உற்சாகமாக கைதட்டி விளையாட்டினை ரசிக்கும் போது அதன் முகத்திலும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டிருக்கும். ராஜன் அலுவல பயணமாக கிளம்பும் நாட்களில் நோவா பரிதவிக்க துவங்குவத கண்டிருக்கிறாள். அது தன்னை விடவும் அவன் மீது அதீத அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருக்கிறதோ என்று கூட தோணும். நாயோடு உளள் உறவை பொறுத்தவரையில் ராஜன் அருமையான மனிதன் தான். ஆனால் அவளால் தான் அவனோடு சேர்ந்து வாழ முடியாமல் போயிருந்தது.

அவர்கள் திருமணமாகி ஒன்றரை வருசத்திற்குள் பிரிந்து விட்டார்கள். அவன் அதே நகரில் வேறு அலுவலகத்திற்கு இடம்மாறி போய்விட்டான். எப்போதாவது அவளிடம் தொலைபேசியில் பேசுவதுண்டு. அவர்கள் பிரியும் நாளில் அவள் தான் நோவா தன்னிடம் இருக்கட்டும் என்று வைத்துக் கொண்டாள். சில நாட்களிலே வேலை வீடு என்று தனித்து வாழ பழகிய அவளுக்கு நோவாவை கவனிப்பதும். அதோடு பேசுவது. அதை கட்டிக் கொண்டு உறங்குவது மட்டுமே இயல்புலமாக இருந்தது.

ஆனால் கடந்த சில வாரங்களாகவே நோவா குலைப்பதில்லை என்பதை அவள் ஒரு நாளில் கண்டுபிடித்தாள். கடைசியாக நோவா எப்போது குரைத்தது. யோசிக்கையில் மனதில் அப்படியொரு நாள் தென்படவேயில்லை. அறியாத மனிதர்கள் வரும்போது ஒடி அவர்களை வழிமறிக்கிறதே அன்றி அது கத்துவதேயில்லை. ஏன் இப்படியிருக்கிறது என்று அவள் கவனிக்க துவங்கினாள்.

நோவா அந்நியர்களை கண்டுமட்டுமில்லை. எதற்குமே சப்தமிடுவதேயில்லை. அதன் முகத்தில் தீர்க்கமுடியாத துயரொன்று படர்ந்திருந்தது. அதை கலைப்பதற்காக அவள் புத்தகம் ஒன்றால் அதை அடித்து கூட பார்த்துவிட்டாள். அது சப்தமிடவேயில்லை. எதற்காக இந்த உக்கிரமௌனம். உலர்ந்த காயம் போல அதன்குரல் ஒடுங்கி போயிருக்கிறதா?.

நாயின் மௌனத்தை அவளால் தாங்க முடியவேயில்லை. சில நாட்கள் அவள் பாதி உறக்கத்தில் விழித்து பார்த்த போது நோவா இருட்டிற்குள் உட்கார்ந்திருப்பது தெரியும். எழுந்து அதை தன்னோடு இறுக்க கட்டிக் கொண்டு என்னடா வேணும் என்பாள். அதன் காதுகள் விடைத்து கொள்ளும். கண்களில் பரிவு கசியும். அவள் நாயின் ரோமங்களை நெற்றியை தடவி விட்டபடியே இருப்பாள். ஏன் இந்த நாய் தன் இயல்பை மறந்து இப்படியிருக்கிறது என்று யோசித்து கொண்டேயிருப்பாள்.

தெரிந்தவர்கள். நண்பர்கள் பலரிடமும் அதை எப்படி சரி செய்வது என்று கேட்டாள். இதற்காகவே நோவாவை கடற்கரைக்கு அழைத்து போனாள். சில வேளைகளில் அதிக மக்கள் நடமாட்டம் உள்ள வீதிகளுக்கு கூட அதை கூட்டி சென்றாள். செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் குழாயை வைத்து அதன்மீது தண்ணீரை பாய்ச்சி விளையாடினாள். அது துள்ளியது. தாவியது. ஆனால் சப்தமிடவேயில்லை. குரைக்காத நாயாக இருப்பது அவளுக்கு குற்றவுணர்ச்சி தருவதாக இருந்தது.

இதற்காகவே ஒரு முறை மணவிலக்கு பெற்று பிரிந்த ராஜனை தேடி போய் நோவாவை பற்றி பேசினாள். அவன் ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்கள் விசித்திரமானவை. அதை கையாளுவது எளிதில்லை. உன்னால் அதை வளரக்க முடியாது. விற்றுவிடு என்று ஆலோசனை சொன்னான். அவள் அப்படியில்லை. உன்னை பிரிந்திருப்பது தான் காரணமாக இருக்க கூடும். சில நாட்கள் அதை உன்னோடு வைத்திருந்து பார் என்றாள். அவனும் பார்க்கலாம் என்றான். மறுநாள் அவளே ராஜன் தங்கியிருந்த குடியிருப்பில் நோவாவை கொண்டு போய்விட்டு வந்தாள்.

மூன்றாம் நாள் ராஜன் போன் செய்து நோவா ரொம்பவும் மாறிவிட்டது. அவள் சொன்னது போல அது கத்துவதேயில்லை. அது சுவரை வெறித்து பார்த்தபடியே இருக்கிறது. நாய்களை புரிந்து கொள்ள முடியாது. அதன் கண்களில் வெறுப்பு பீறிடுகிறது. நீயே வந்து கூட்டி போய்விடு என்றான்.

அன்றிரவு நோவாவை வீட்டிற்கு கூட்டி வந்து நெடுநேரம் அதோடு பேசிக் கொண்டிருந்தாள். அவள் ராஜனை காதலித்த கதையை அதற்கு சொல்லிக் கொண்டிருந்தாள். நோவா தலைகவிழ்ந்தபடியே இருந்தது. மறுபடி சொல்லும் போது யாருக்கோ நடந்த கதை ஒன்றை போலிருந்தது. இவ்வளவிற்கும் அது என்றோ நடந்த விசயமில்லை. இரண்டு வருசங்களுக்குள் தானிருக்கும்.

அப்போது தான் சியாமளா அலுவலகத்திற்கு பெங்களுரில் இருந்து ராஜன் வந்திருந்தான். அனிருத்தாவின் பிறந்த நாள் பார்ட்டியின போது தான் அவர்கள் நிறைய பேசிக் கொண்டார்கள். அதன்பிறகு சியாமளாக தான் அவனை பிடித்திருப்பதாக முதலில் தெரிவித்தாள்.

ஒரு வேளை பதவி உயர்வில் தான் அமெரிக்கா போவதாக இருந்தால் திருமணம் செய்து கொள்ள இரண்டு ஆண்டுகள் ஆகும் பரவாயில்லையா என்று ôஜன் கேட்டான். அவள் தானும் அமெரிக்கா வந்துவிடுவதாக சொன்னாள்.

அவர்கள் அதிகம் காதலிக்கவில்லை. இரண்டு முறை ஒன்றாக திரைப்படம் பார்த்தார்கள். ஒரு முறை ஒன்றாக உடன்வேலை செய்யும் திருமுருகனின் திருமணத்திற்காக பாபநாசம் சென்றார்கள். அன்று ராஜன் அருவியில் குளிக்கவில்லை. திரும்பி வரும்போது அவளோடு ரயிலில் சீட்டு விளையாடினான். பொதுவில் அவன் அதிகம் கலகலப்பில்லாதவன் என்று தான் அவளுக்கு தோன்றியது. ஆனால் அவளோடு நெருக்கமாகவும், வேடிக்கையாகவுமே ராஜன் பேசினான்.

சியாமளாவிற்கு முன்பாகவே அவளது தங்கை சித்ராவிற்கு திருமணமாகியிருந்தது. அவள் இரண்டு வருசங்கள் ஆஸ்திரேலியாவில் உயர்படிப்பு படிக்க போன காலத்தில் அது நடந்திருந்தது. அப்போது அது பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் ஊர் திரும்பி வேலைக்கு போன போது சியாமளாவின் மனதிற்குள் தனக்கு முன்பாக சித்ரா திருமணம் செய்து கொண்டது பிடிக்காமல் தானிருந்தது.

ஒவ்வொரு முறை தங்கையை பார்க்கும் போது அவள் அப்போது தான் புணர்ச்சியிலிருந்து எழுந்து வந்திருக்கிறாள என்பது போல மனதில் தோன்றுவதை சியாமளாவால் கட்டுபடுத்தவே முடியவில்லை. அதற்காகவே சியாமளா வேகமாக திருமணம் செய்து கொண்டுவிட வேண்டும் என்று அவசரப்பட்டுக் கொண்டிருந்தாள்.

அவர்களாகவே திருமணத்திற்கான நாளை குறித்தார்கள். உடைகள், நகைகள் வாங்கினார்கள். திருமணத்திற்கு பிறகு குடியேற போகும் புதிய வீட்டை வாடகைக்கு பிடித்தார்கள். அவர்கள் எதிர்ப்பார்த்ததை விடவும் அதிகம் நண்பர்கள் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். ராஜன் அன்று மிகுந்த பதட்டத்துடன் இருந்தான் என்பது அவனது முகத்தில் துல்லியமாக தெரிந்தது.
முதலிரவிற்காக கடற்கரையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்கள். உடற்கிளர்ச்சிகள் ஆவேசமாக துவங்கி அரைமணி நேரத்திற்குள் அடங்கிவிட்டிருந்தது. ராஜன் தனது லேப்டாப்பில் ஏதோ தேடிக் கொண்டிருந்தான். படுக்கையில் கிடந்தபடியே அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவளது விரல்கள் அவன் கேசத்தை கோதின. அவன் விரல்களை விலக்கிவிட்டு டெலிபோனை எடுத்து தனக்கு பசிப்பதாக சொல்லி சான்ட்விட்ச் ஆர்டர் செய்வதாக சொன்னான்.

அவள் சற்றே எரிச்சலுற்றபடியே தான் உடையை மாற்றிக் கொள்வதாக சொல்லி குளியலைறைக்குள் சென்றாள். அவன் தனது போனில் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தான். அவள் கதவை திறந்து வெளியே வந்து கடற்காற்றை பார்த்தபடியே இருந்தாள். ராஜன் வெளியே வரவேயில்லை.
அலை இருளை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து கொண்டிருந்தது. அவள் சப்தமாக கடற்கரை மணலில் நிற்கலாமா என்று ராஜனிடம் கேட்டாள். அவன் அதெல்லாம் வேண்டாம் என்றபடியே கதவை திறந்து வைத்தால் ஏசி வீணாகிவிடும் என்று சொன்னான்.

அவள் தன் கன்னிமை இழந்த நாளின் இரவு வானத்தை பார்த்து கொண்டிருந்தாள். நிறைய நட்சத்திரங்கள் இருந்தன. அவள் நிறைய கற்பனை செய்திருந்தாள். அவை கால்சுவடுகளை அலை கரைத்து அழிப்பதை போல கண்முன்னே மறைந்து போய்விட்டன. இனி அந்த நிமிசங்கள் திரும்பிவராது.
அவள் நட்த்திரங்களை பார்த்தபடியே அவன் தன்னை முத்தமிட்டானா என்று யோசித்து கொண்டிருந்தாள். ஒரேயொரு முறை முத்தமிட்டான். ஆனால் அந்த முத்தம் உணவு பொட்டலத்தை சுற்றி கட்டப்பட்ட நூலை அவிழ்ப்பவனின் அவரசம் போன்றே இருந்தது. அவள் நிறைய முத்தங்களை அவனுக்கு தந்தாள். அவன் அந்த அளவு திரும்பி தரவில்லை. அவர்களை மீறி உடல்கள் ஒன்றையொன்று சேர்ந்து தங்கள் இச்சைகளை தீர்த்து கொண்டன. அவ்வளவுதானா என்பது போலிருந்தது. அன்று தான் திருமணவாழ்க்கை துவங்கியிருக்கிறது என்று அவள் சுயசமாதானம் கொண்டாள்.

ஆனால் நாட்களின் போக்கில் ராஜன் சாப்பாடு, பணம், அதிகாரம் இந்த மூன்றை தவிர வேறு எதிலும் நாட்டமில்லாமல் இருந்தான். வார விடுமுறை நாட்களை பியர் குடிப்பதற்கு மட்டுமேயானதாக கருதினான். உடைகளில் அவனுக்கு விருப்பமேயில்லை. ஏதாவது ஒரு உடையை அணிந்து கொண்டு அலுவலகம் வந்துவிடுவான். அவனுக்கு தன் வருமானத்தை போல இன்னொரு வருமானம் தேவையானதாக இருந்தது. அதற்காகவே அவளை திருமணம் செய்து கொண்டதாக வெளிப்படையாக சொன்னான்.

அவர்கள் சண்டையிட்டார்கள். விட்டுகொடுத்து சமாளித்துவிடலாம் என்று முயன்று பார்த்தாள். அந்த பிளவை சரிசெய்யவே முடியவில்லை. முடிவாக ராஜன் தன் சேமிப்பில் இருந்து எதையும் அவள் எதிர்பார்க்காவிட்டால் அவர்கள் பிரிந்து விடலாம் என்று சொன்னான். அப்படியே ஆனது. அவள் அலுவலகம் அருகிலே இடம் மாறி போனாள். ஊருக்கு போவதோ. அப்பா தங்கைகளை காண்பதையோ குறைத்து கொண்டாள். பெரும்பான்மை நேரங்களில் உணவகங்களில் இருந்து வாங்கி சாப்பிட்டு பசியை கடந்து சென்றாள்.

பின்னிரவில் உறக்கம் பிடிக்காமல் உடல் கிளர்ச்சியோடு எழுந்து உட்கார்ந்து இருளை பார்த்தபடி இருந்தாள். என்ன பிடிப்பில் தான் இப்படி நாட்களை கடந்து கொண்டிருக்கிறோம் என்று தோன்றும். அது போன்ற நேரங்களில் அவளை விடவும் அந்த நாயின் மீது அவளுக்கு அதீதமான துக்கம் வந்து சேரும்
நாயின் வாழ்க்கையை பத்தோ,பனிரெண்டோ வருசங்கள் தான் அதற்குள் யாருக்கோ விசுவாசமாக இருந்து. யாரையோ அண்டி வாழ்ந்து. எங்கோ வழியில் கண்ட இன்னொரு நாயுடன் கலவி கொண்டு தன் இச்சைகளை தீர்த்துவிட்டு ஒவ்வொரு நாளும் தன் விசுவாசத்தை வீடெங்கும் வழிய விட்டு என்ன வாழ்க்கையிது.

நாய்கள் ஏன் மனிதர்களோடு இவ்வளவு நெருக்கம் கொண்டிருக்கின்றன. தன் மூதாதையர்களை போல வேட்டையாடவோ. பனியில் தனித்து அலைந்து திரியவோ. அடிவானத்து சூரியனை பார்த்து குரைக்கவோ ஏன் இந்த நாய்கள் முயற்சிப்பதேயில்லை.

அதன் மனதில் அந்த நினைவுகள் துடைத்தெறியப்பட்டதை எப்படி இயல்பாக எடுத்து கொண்டன. இல்லை ஒருவேளை இன்றும் அதன் கனவில் பனிபொழியும் நிலமும், துரத்தியோடும் வேகமும் இருந்து கொண்டுதானிருக்குமா? தான் அலுவலகம் போன பிறகு நாள் எல்லாம் அந்த நாய் வீட்டின் சுவரை வெறித்தபடியே என்ன நினைத்து கொண்டிருக்கும். தன்னை ஏன் இப்படி நாய்கள் வருத்திக் கொள்கின்றன. அவள் அந்த நாய்க்காக வேதனை கொள்வாள். அப்போதும் கூட தன்னால் ஒரு போதும் அதன் நிஜமான உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடியாது என்று தோன்றும்.

நாய்களின் மௌனம் இத்தனை வலிமையானது என்பது அவளை அப்போது தான் அறிந்து கொள்ள துவங்கினாள். தொண்டையை விட்டு கிழே இறங்காமல் எதை விழுங்கி கொண்டாய் என்று பார்த்தபடி இருப்பாள். நோவாவின் காதுகள் அசைந்து கொண்டேயிருக்கும். பற்களை தவிர நாய்களின் உடல் ரப்பரை போன்று மிருதுவானவை. அவை குழந்தைகளின் வெதுவெதுப்பை கொண்டிருக்கின்றன. அதன் நாக்கு தான் ஒய்வற்று துடித்து கொண்டிருக்கிறது. அந்த நாக்கு மொழியற்றது. எதையோ சொல்ல முயன்று வாழ்நாள் எல்லாம் தோற்று போய்க் கொண்டிருக்கிறது போலும்.

**
மருத்துவமனை மிக சுத்தமானதாக இருந்தது. மருத்துவர் அவளை விடவும் வயதில் இளையவராக இருந்தார். அவர் நோவையை பரிசோதனை செய்துவிட்டு அது ஆரோக்கியமாக இருப்பதாக சொல்லியபடி அவளது பிரச்சனை என்னவென்று விசாரித்தார். நோவா குரைப்பதேயில்லை என்றாள். அவர் சிரித்தபடியே நல்லது தானே என்றார்.

இல்லை அது திடீரென குரைப்பதை நிறுத்தி கொண்டுவிட்டது என்று சொன்னாள். அவர் நாயின் அருகில் சென்று அதன் குரல்வளையை தன் கைகளால் பிடித்து பார்த்தார். அது சப்தமிடவில்லை. சிறிய டார்ச் லைட்டால் அதன் வாயை பரிசோதனை செய்தார். பிறகு வியப்புடன் குரல்வளையில் எந்த பிரச்சனையுமில்லை. ஏன் அது கத்துவதில்லை என்று அவளிடமே திரும்ப கேட்டார். அவள் எப்போதிருந்து அது குலைக்கவில்லை என்று தனக்கு தெரியவில்லை என்றும் கடந்த சில வாரங்களாகவே அப்படிதானிருக்கிறது என்றாள்

மருத்துவர் அந்த நாயின் வயதை விசாரித்தார். இரண்டரை இருக்கும் என்றாள். அந்த நாய் இதுவரை ஏதாவது பெட்டைநாயோடு பழகியிருக்கிறதா என்று கேட்டார். இல்லை அது தன் வீட்டிற்குள்ளாகவே வளர்கிறது என்றாள் சியாமளா. ஒருவேளை பாலுணர்ச்சி காரணமாக நாய் கத்தாமல் இருக்க கூடும் என்றபடியே அதை முயற்சி செய்து பார்க்கலாமே என்றார். ஒரு பெட்டை நாயை எப்படி கண்டுபிடிப்பது. எப்படி அதை இதோடு பழக விடுவது என்று அவளுக்கு குழப்பமாக இருந்தது.

அவர் தன் மேஜை டிராயரில் இருந்து ஒரு விசிட்டிங் கார்டை எடுத்து இவர்களை பார்த்தால் இந்த நாய்க்கு பொருத்தமான பெண்நாயை ஏற்பாடு செய்து தருவார்கள் என்று சொன்னார். எப்போது அங்கே தான் போவது என்று மருத்துவரிடம் கேட்டபோது அதற்கும் முன்பதிவு செய்து கொள்வது நல்லது என்றார்

அங்கிருந்தபடியே அந்த எண்ணில் தொடர்பு கொண்டு மறுநாள் மதியம் மூன்று மணிக்கு அழைத்து வரும்படியாக முன்பதிவு செய்து கொண்டாள். அடுத்த நாள் நாயை வீட்டிலிருந்து கூட்டி போகும் போது அவளுக்கு கூச்சமாக இருந்தது. முதன்முறையாக நோவா ஒரு பெண்ணை அடைய போகிறது. அவளை நோவாவிற்கு பிடித்திருக்குமா. எளிதாக அதன் பாலுணர்ச்சியை தீர்த்து கொண்டுவிடுமா. அவன் குழப்பமான யோசனைகளுடன் நாயை அழைத்து கொண்டு சென்றாள்.

அது நாய்களுக்கான பிரத்யேக பொருள்விற்பனையகமாக இருந்தது. அந்த வீட்டில் நடுத்தர வயது மனிதர் ஒருவர் மட்டுமே இருந்தார். நோவாவிற்கு இணையாக போகிற பெண் நாய் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடக்கூடும் என்றார். அவள் நோவாவோடு காத்து கொண்டிருந்தாள்.

நீல நிற சான்ட்ரோ கார் ஒன்றிலிருந்து இன்னொரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் இறங்கியது. அது தனது நோவாவை விடவும் பருத்திருந்தது. அந்த நாயை அழைத்து கொண்டு வந்த ஆள் நோவாவை பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான். நோவா அந்த பெண் நாயின் பக்கம் திரும்பவேயில்லை. இரண்டையும் ஒன்றாக விட்டபோதும் கூட அது விலகி விலகி வந்தது. பெண் நாயின் உரிமையாளன் தனக்கு தெரிந்த வழிகளை முயற்சித்து நோவை ஈர்க்க முயற்சித்தான். நோவா வாலை அசைத்தபடியே ஒடி அவள் அருகில் வந்து நின்று கொண்டது. அதற்கு பால்கிளர்ச்சிகளே இல்லை போலும்.

பெண் நாய் அதை கண்டு சப்தமிட்டது. ஆனால் நோவா சப்தமிடவேயில்லை. அரைமணி நேர போராட்டத்தின் பிறகு பெண் நாயை கூட்டிக் கொண்டு அந்த ஆள் கிளம்பி போனான். அவள் நோவாவை திரும்ப ஆட்டோவில் அழைத்து கொண்டு வந்தாள். ஆத்திரமாகவும் வருத்தமாகவும் இருந்தது. வீட்டில் அன்று அவளும் சாப்பிடவில்லை. நோவாவிற்கும் எதையும் கொடுக்கவில்லை.
தான் நோவாவை விட்டு பிரிந்துவிடுவதை தவிர வேறு வழிகள் எதுவுமில்லை என்று அவளுக்கு தோன்றியது. அதை தன்னோடு வைத்து கொண்டிருந்தால் தன் இயல்பு மாறிவிடுவதோடு நடந்து போன திருமண முறிவு மனதில் ஆறாத ரணமாகி கொண்டிருப்பதை அவள் உணர துவங்கினாள். இரண்டு நாட்கள் அதை பற்றியே யோசித்து கொண்டிருந்து விட்டு முடிவில் ஒரு ஏஜென்சியிடம் சொல்லி அதை விற்பதற்கு ஏற்பாடு செய்தாள்.

அவள் அலுவலகத்தில் இருந்த நேரத்தில் ஒரு பேராசியர் போன் செய்து அதை தான் வாங்கி கொள்ள விரும்புவதாக சொன்னார். அவள் நோவாவை பற்றி எடுத்து சொன்ன போது அவர் தனக்கு எழுபது வயதாகிறது என்றும் அதுவும் தன்னை போல வாயை மூடிக்கொண்டிருப்பதில் தனக்கு ஒரு பிரச்சனையுமில்லை என்றார். அவள் ஞாயிற்றுகிழமை காலையில் வீட்டிற்கு வரும்படியாக சொன்னாள்.

அந்த ஞாயிற்றுகிழமை அவள் நோவை குளிக்க வைக்கும்போது அதை விற்று விட்டதை பற்றி அதனிடமே சொன்னாள். அது காதை ஆட்டிக் கொண்டேயிருந்தது. பதினோறு மணி அளவில் பேராசிரியர் வருகை தந்தார். அவருக்கு நோவாவை பிடித்திருந்தது. அதை தான் வாங்கி கொள்வதாக சொல்லி அதற்கான காசோலையை அவளிடம் நீட்டினார். அவள் அன்று ஒரு நாள் மட்டும் தன்னோடு அந்த நாய் இருக்கட்டும் என்றபடியே தானே காலையில் அவர் வீட்டில் கொண்டுவந்துவிடுவதாக சொன்னாள்.

அவர் கிளம்பி போன பிறகு சியமளா வெளியில் போய் சாப்பிடலாம் என்று அதை அழைத்து கொண்டு போனாள். பகலெங்கும் நகரில் அலைந்து திரிந்தாள். இரவு வீடு திரும்பும் போது நோவா எப்போதும் போல இருளில் படுத்து கொண்டது. அவள் அதை பார்க்க மறுத்து புரண்டு படுத்திருந்தாள். நாயின் கண்கள் இருளிற்கும் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பிறகு தன்னை அறியாமல் விசும்பியபடியே எழுந்து அதை கட்டிக் கொண்டாள். நாயின் வெதுவெதுப்பு அவள் உடலெங்கும் நிரம்பியது.

என்னை நானே ஏமாத்திகிட்டு இருக்கேன். அது உனக்கு தெரியுதுடா. நான் நல்லவயில்லை.. செல்பிஷ் என்று அவள் ஆவேசத்துடன் புலம்பியபடி கட்டிக் கொண்டாள். நாயின் நாக்கு ஈரத்துடன் அவள் கைகளை தடவியது. அதன் பரிவை தாங்கமுடியாமல் அவள் உடைந்து அழுது கொண்டிருந்தாள். நோவா மௌனமாக காதுகளை அசைத்தபடியேயிருந்தது. இருவராலும் அவ்வளவு தான் செய்யமுடியும் என்பது போலவே அவர்களை வெறித்து பார்த்து கொண்டிருந்தது அறையின் இருள்.

**
2009 தினமணி தீபாவளி சிறப்பிதழில் வெளியான சிறுகதை. 

தொடர்புடைய சிறுகதைகள்
நடுவில் உள்ளவள்
வெயில் ஏறிக்கொண்டு இருந்தது. இறந்து போன அம்மாவின் உடலை மயானத்துக்குக் கொண்டுபோவதற்காகக் காலையில் இருந்தே காத்துக்கொண்டு இருந்தோம். இன்னும் சியாமளா வந்து சேரவில்லை. அவள் சூரத்தில் இருந்து கிளம்பிவிட்டாள் என்று தகவல் வந்திருந்தது. விமானத்தில் வந்து மதுரையில் இறங்கி, கார் பிடித்திருந்தால்கூட ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். ஆனங்குளத்தில் உள்ள ராமவர்மா வைத்தியசாலைக்கு சிகிட்சைக்காக கொண்டு வரப்பட்ட போது பி. விஜயலட்சுமி முப்பத்தியாறு கிலோ எடையுள்ளவளாக இருந்தாள். அவளுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்திருந்தன. சிகிட்சை அளிக்கப்பட்ட காலம் நாற்பது வாரம். அந்த நாட்களில் அவளோடு ...
மேலும் கதையை படிக்க...
விரும்பிக் கேட்டவள்
''அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா...'' என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு முன்பாகவே அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கியிருந்தேன். 'மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச ...
மேலும் கதையை படிக்க...
தென்கடல் தீவில் இருநூறு வருசங்களின் முன்பாக இது நடந்தது என்கிறார்கள். அப்போது அதை ஒரு மகாராணி ஆட்சி செய்து கொண்டிருந்தாள். அவளது ஆளுமையின் கீழாக பல நூறு சிறுதீவுகள் இருந்தன. ராணி திருணம் செய்து கொள்ளாதவள். மிகுந்த முன்கோபி என்று பெயர் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன். இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன என்பதை, கடந்த மூன்றாண்டுகளாகவே நான் அறியத் துவங்கியிருக்கிறேன். முன்பு கடற்கரையைக் கடந்து செல்கையில் எப்போதாவது பறவைகள் கடந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் மீதான என் கவனம் கூடியதில்லை. ஆனால் இந்த ...
மேலும் கதையை படிக்க...
நடுவில் உள்ளவள்
பி.விஜயலெட்சுமியின் சிகிட்சை குறிப்புகள்
விரும்பிக் கேட்டவள்
சிற்றறிவு
இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)