மாரியும் லாலியும் பின்னே சுகுவும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 15, 2012
பார்வையிட்டோர்: 11,374 
 

சென்னை கே.கே. நகரில் மொட்டை மாடி குடிலில் பேச்சுலர் வாசம் பூண்டிருந்தார் சுகுமாரன். 42 வயதாகியும் கல்யாணம் நிகழாத வருக்கு அடுத்த பிறவி குறித்து நான்கு ஆசைகள் இருந்தன. கண்ணதாசன் வீட்டில் சாராய கிளாஸாகப் பிறக்க வேண்டும்; இந்தி சினிமா டைரக்டரும் நடிகருமான குருதத்தின் தொப்பியாக ஜனிக்க வேண்டும்; இளையராஜாவின் ஆர்மோனியத்தில் ஒரு கட்டையாக இருக்க வேண்டும்; அல்லது, தன்னைத் துயரக் குடிலில் அடைத் துச் சென்ற காதலிக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும்.

தனிமையிலே இனிமையும், கொடுமையும் காணும் அவரின் குடில் கதவுகளை, ஒரு மார்கழித் திங்கள், தலைவலி நிறைந்த நன்னாளின் காலையில் மூட்டை முடிச்சுகளுடன் முட்டினான் மாரிமுத்து.

ஹேங் ஓவரோடு சுகுமாரன் கதவைத் திறந்து கண்களைச் சுருக்க, ‘‘அண்ணே…” -என்றபடி அன்றைய சூரியனின் முதல் கற்றை வெயிலில் கண்களில் நெய்யு ருக்கினான் மாரிமுத்து.

சுகுமாரன் வேலை பார்க்கும் தனியார் மருந்துக் கம்பெனியில் லேட்டஸ்ட்டாக சேல்ஸ்மேன் வேலைக்கு வந்தவன் அவன். ‘இவன் ரொம்ப நல்லவன்டா..!’ தோற்றத்தில் வந்த மாரியை சுகுமாரனுக்கு பிடித்துப் போயிற்று. எம்.சி.ஏ., படிக்கிற ஒரு பப்பாளித் தலையனுக்கு ரூம்மேட்டாக வாக்கப்பட்டு இருந்தான் மாரி.

அந்தப் பையன் கனத்த இங்கிலீஷ் புத்தகங்களும் சிவத்த நண்பர்களுமாகத் திரிபவன். வீட்டிலிருந்து ஓவல் டின் கொண்டு வந்து ரகசியமாகப் போட்டுக் குடிப்பவன். 555 பாக்கெட்டில் குயில் மார்க் பீடியைச் செருகியது போல் இருந்தது அந்த அறையில் மாரிமுத்து வின் இருப்பு. ரூமுக்கு அட்வான்ஸ் தந்திருந்த 555, அண்ட வந்திருந்த குயில் மார்க்கை கன்ட்ரோல் பண்ண, வெடித்த விவகாரம் குயிலின் குமுறல் வெளிநடப்பில் முடிந்தது.

‘‘மாரி… நீ ஒண்ணும் ஃபீல் பண்ணாத..-!’’ & சாரதா மெஸ்ஸில் சுகுமாரன் சொன்னதும் ஆம்லெட் அமுக்கிய வாயோடு ஃபீலிங் காட்டினான் மாரி. வரலாற்றின் அடுத்த திருப்புமுனையாக இருவரும் ரூம்மேட்டானார்கள்.

பகலில் பெருநகரின் வெவ்வேறு திசைகளில் வியர்வையில் அலைபவர் கள், இரவின் கட்டிங் உற்சவத்தில் ‘கலக்கப்போவது யாரு..? நடத்து வார்கள். சுகுமாரன் முதல் லார்ஜில் காதலின் காவல் தெய்வமாகவும் கடைசி பெக்கில் காதலின் மோதல் மிருகமாகவும் மாறுவார். ‘‘டேய் மாரி! லவ் பண்ணுடா… எவளையாச்சும் லவ் பண்ணிட்டே இரு’’ என்பார். ரெண் டாவது பெக்கில், ‘‘வேணான்டா மாரி. மோசமானவளுக. முட்டைச் சாம்ப லாக்கிருவாளுக. ஃபீல் பண்ணாம டீல் பண்ணு” என்பார். மனசை ஊற்றிமாரி முத்துவை மிக்ஸ் பண்ணி மகோன்னதத் தத்துவங்களை சுகுமாரன் சைடு டிஷ்ஷாக்கினார். ஆனாலும், காதலின் கனவில் கரைந்து மிதந்தன மாரியின் ராத்திரிகள்.

ஒரு மாசத்திலேயே மாரியின் காதல் கத்திரிக்காய் சுகுமாரனின் சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்தது. திடுதிப்பென்று வைகோ ரேஞ்சில் வாக்கிங் செல்ல ஆரம்பித்தான் மாரி. அதிகாலையில் மொபைல் அலாரத்தில் மொஸார்ட்டை இசைக்கவிட்டான். கடுப்பில் சுகு மாரன் கால் கண்ணைத் திறந்துபார்த் தால், புது ட்ராக் சூட்டுக்குள் கால் விட்டுக்கொண்டு இருப்பான். ‘என்றென்றும் புன்னகை, முடிவிலாப் புன்னகை…’ என வாயில் எஃப்.எம். வைத்தபடி வார்ம்&அப்பாகி ஓடுவான். கொஞ்ச நேரத்தில் அவன் அறை மீண்டதும் செல்லில் ‘டிடிங் டிங்’ என மெஸேஜ்கள் வர ஆரம்பிக்கும். டாய் லெட்டிலும் மாரியின் சிரிப்புச் சத்தம் கேட்கும். சுகுமாரன் பைக் ஓட்ட, பின்னால் உட்கார்ந்து, ‘‘யாருங்க… வண்டில போயிட்டு இருக்கேன். நானே கூப்பிடுறேங்க. ஆமா, அட ப்ராமிஸ்ங்க’’ எனப் பதைப்பான்.

சரக்கடிக்க அமர்ந்தால், இரண்டாம் லார்ஜில், ‘‘அண்ணே! ஊர்ல அம்மாவுக் குப் பேசிட்டு வந்துர்றேண்ணே” என்று எழுந்து போய், அவர் தூங்கும் மூன்றாம் ஜாமத்துக்குப் பிறகு, லோ பேட்டரியான தும்தான் திரும்ப வருவான். மிக்ஸிங் பெப்ஸி தீர்ந்திருக்கும். மூடி கழன்ற முக்கால் குவாட்டர் ஓ.சி&யைச் சாத்திச் சரிவான். தட்டுப்படும்போதெல்லாம் காதில் செல்லுடைத் தலைவ னாகவே திரிந்தான். இது எதுவும் தொழில் நிமித்த மல்ல, தோழி நிமித்தம் என்பதைச் சுகுமாரன் சுகுராகக் கண்டு பிடித் தார்.

அன்று இரவு சாராயத் திருவிழாவின் ஏற்பாட்டு நோக்கமே மாரியின் மன அலமாரியைப் படீரென்று திறப்பதுதான். முதல் பெக்கை முடித்த வேகத்தில், ‘‘என்னடா மாரி… பொண்ணு யாரு?” என்றார் சுகுமாரன். ‘‘என்னண்ணே..?” என எதுவுமே தெரியாதது போல எட்டுக் கட்டை யில் பதறினான் மாரி. ‘‘டேய் அப்ரன்டீஸ§… நாங்கெல்லாம் வி.ஆர்.எஸ்ஸ§&க்கு யோசிச்சிக்கிருக்கம்டா! கொழுந்தியா யாரு, அதைச் சொல்லு முதல்ல!’’ என வசீகரப் புன்னகையுடன் அடுத்த லார்ஜை ஊற்றினார். மாரி கனைத்தான். மறுத்தான். சிரித்தான். மூன்றாம் லார்ஜில் மேட்டரை உடைத் தான்…

‘‘லலிதான்னு பேருண்ணே. நாம மெடிசின் போடுவம்ல, ஆ.எஸ். கம்பெனி… அங்கதான் வேலை பாக்குது. ரெண்டு தெரு தள்ளித் தான்ணே வீடு. ரொம்ப நல்ல பொண் ணுண்ணே’’ என மனக் கோப்பையில் காதல் நுரைத்தான்.

‘‘சூப்பரு! டேய், எல்லாச் சிறுக்கிகளும் முதல்ல பச்சப்புள்ளையாட்டம்தான் இருப் பாளுக. அப்புறந்தேன்டி ஆரம்பிக்கும் கிராஃபிக்ஸ§’’ என சுகுமாரன் அனுபவ அலாரத்தை அலறவிட்டார்.

‘‘இல்லண்ணே… நாங்க ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுக்கிட்டம்ணே’’ என சிக்கன் மசாலாவில் விரல் விட்டுக் கோலம் போட்டான் மாரி.

‘‘சூப்பரு! என்ன புரிஞ்சுக்கிட்டீங்க..? சரி, அதை விடு. ஏதாவது நடந்துச்சாடா?’’ என எக்ஸ்ட்ரா லார்ஜ் போனார் சுகு.

‘‘அண்ணே, சும்மா இருங்க…’’

‘‘அதுக்கில்லடா மாரி… நாமெல்லாம் தாங்க மாட்டோம்டா. கயல் விழி தெரியுமா உனக்கு. என்னை எப்பிடி லவ் பண்ணா தெரியுமா? ஆயிரங் காரணம் இருக்கலாம்… விட்டுப் போயிட்டால்ல! தக்காளி, நான் சந்தோஷமா இருக்கேன்டா. டேய் மாரி… லவ் பண்ணணும்தான். ஆனா, மானுடத்தையே லவ் பண்ண ணும்டா…’’ & ஃபேனாக மாறி சுகுமாரன் சுழல, சுவிட்சாக மாறி ஆஃப் ஆனான் மாரி.

லலிதாவை மாரி ஜாலியாக ‘லாலி… லாலி…’ எனக் கொஞ்சி னான். இருவரும் பௌர்ண மியை மத்தாக்கிக் காதல் பாற்கடலைக் கடைந்தார்கள். கனவுகள் நனவாகும் காதல் நொடியில் கரைந்து அமிழ்ந் தார்கள். தியேட்டரின் அரை யிருட்டில் அவள் கைகளை நடுக்கமாய்ப் பற்றி வெப்பத்தில் குளிர்ந்தான். ‘என்னை விட்டுப் போயிட மாட்டியே’ எனத் தோளில் சாய்ந்து கசிந்தாள். காபி ஷாப்களில் அமர்ந் தார்கள். தனிமையின் தாழ் வாரத்தில் முத்தமிட்டார்கள். தீண்டித் தீண்டித் தீயில் நோயில் மறந்துகிடந்து அழுது சிரித் தார்கள்.

‘‘என்னடா டல்லா இருக்க… உன் லாலி பேசலையாக்கும்?’’ என அன்றைய செஷனில் ஆரம்பித்தார் சுகு. எது வும் பேசாமல் இரண்டு பெக் போட்டவன்,

‘‘அவ முன்ன மாதிரி இல்ல அண்ணே! முன் னெல்லாம் ஒரு நாளைக்கு இருபது தடவை பேசுவா. முப்பது மிஸ்டு கால் குடுப்பா. நாப்பது அம்பது எஸ்.எம்.எஸ். அனுப்புவா. இப்பல்லாம் நான் போன் பண்ணாக் கூட, கட் பண்றா! வலிக்குதுண்ணே…’’

‘‘சூப்பரு! இந்தா ஹெவியா ஒரு லார்ஜு போடுறா!’’

‘‘நான் அவகூட இருக்கும்போதே அவளுக்கு மெஸேஜா வருது. அன்னிக்கு, அவ ஆபீஸ்ல வேலை பார்க்கிறவன் பைக்ல வந்தான்… ‘பைடா!’னு என் கண்ணு முன்னாலயே ஏறிப் போயிட் டாண்ணே…’’

‘‘மாரி, நீ யோக்கியனா..?’’

‘‘அதுக்கில்லைண்ணே…’’

‘‘அவ கரெக்டா தரைக்கு வந் துட்டா. நீ கனவுலயே ஷோ ஓட்ற..!’’

‘‘போங்கண்ணே, எனக்கு அப்பி டியே… அப்பிடியே… வலிக்குதுண்ணே’’ என மாரி மனம் வெதும்பினான். லலிதாவை வெறிகொண்டு நேசித் தான். அவளோ அவனைத் தவிக்க விட்டாள். சிறு பிரிவுகளால் நோக டித்தாள். சண்டையிட்டான்; அவள் ஸாரி சொன்னாள். ஸாரி சொன்னான்; அவள் சண்டையிட் டாள். திடுக்கென்று பரமபதத்தில் ஏணியும் பாம்பும் அவள் கைகளில் சுழன்றன. அவன் ஏறி இறங்கி, இறங்கி ஏறி, காதல் கிறுக்கில் காலம் தொலைத் தான்.

‘‘அவளுகளை நம்மால தாங்க முடியாது. நம்ம காதலை அவளு களால தாங்க முடியாது. வந்துர்றா…’’ எனப் பொன்மொழியால் பிராண்டி னார் சுகுமாரன். மாரி ஒரு மாதிரியாய் திரும்பி வந்தான். ‘‘இனிமே பேச வேண்டாம்’’ என லாலியும் சொல்லி விட்டாள். அவன் நம்பரைப் பார்த் தால், அவள் எடுக்கவே இல்லை. பப்ளிக் பூத் கால்களும் ‘ஹலோ’க் களோடு முறிந்தன. ஏதேதோ நடந்து விட்டது. நினைவில் பிம்பங்கள் உடைந்தன. தேம்பினான். வெறித்துச் சிரித்தான். அப்படியே கிடந்தான். செல்லை ரீ&சார்ஜ் பண்ண மறந்தான்.

சுகுமாரன் தேற்றினார். ‘‘விடுறா… விடுறா மாரி’’ என ஊற்றினார். சாப் பாடு வாங்கி வந்தார். குருதத்தின் ‘பியாஸா’ படத்தை டி.வி.டி&யில் போட்டு ‘‘பார்றா மாரி… வாழ்ந்துருக் காய்ங்கடா’’ என அன்பைப் போதித்தார்.

மாரி எழுந்தான். ஆபீஸ் போக ஆரம் பித்தான். அன்றே செல்லை ரீ&சார்ஜ் பண்ணினான். கொஞ்சம் சுணங்கித் திரிந் தவன் முகத்தில் நாலே நாளில் நட்சத்திரங்கள் மினுங்கின. அது நிலவாக வளர ஆரம் பிப்பதைப் பார்த்து சுகுமாரன் மகிழ்வுறும் போதே, மறுபடி அவனது செல்போனில் ஒலிக் கத் தொடங்கியது ‘டிடிங்… டிங்…’ உயிரோசைகள். ஓசை கேட்கும்போதெல்லாம் உயிர் பூத்தான் மாரி.

ரெண்டு மூணு நாளில் அதிகாலை, நள்ளிரவு என ஓசைகள் உலகம் மறந்து உருண்டன. மீண்டும் செல் பேச்சு சிறகு விரித்தது. ‘லலிதா திரும்ப ஸீனுக்கு வர்றாளோ’ எனக் காட்சி புரியாமல் குழம்பிய சுகுமாரன், இன்னொரு ஆஃப் ஓ.சி. வாங்கினார்.

‘‘என்னடா மாரி… லாலி பேக் டு தி பெவிலியனா..?’’

‘‘இல்லண்ணே… நானே சொல் லணும்னு இருந்தேன். சாந்தினினு ஒரு பொண்ணு. என் பழைய கம்பெனில கம்ப்யூட்டர் செக்ஷன்ல இருந்துச்சு. ரொம்ப நல்ல பொண்ணுண்ணே..!’’

‘‘சூப்பரு! இவளைச் செல்லமா ‘சாலி’ன்னு கூப்பிடுவியோ..? ஒண்ணு மட்டும் சொல்றேன் கேளு, புத்தி தேடுறதுக்குன்னு ஒரு டைம் இருக்கு, பொருள் தேடுறதுக்குன்னு ஒரு டைம் இருக்கு. மாத்திப் போட்டுத் தேடினா, மக்கி மண்ணாயிரு வோம் மவனே!’’

‘‘அய்யய்யோ! இல்லண்ணே… நாங்க ஒருத்தருக்கொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டம்ணே!’’

‘‘சூப்பரு!’’

காதல் தொடர் ஓட்டத்தில் ஜோதியை சாந்தினி கையில் தந்தான் மாரி. ‘‘சாந்து… உன் நினைப்பாவே இருக்குடி’’ என ஃபீலிங் ஃபெவிகாலை ஓடி ஓடி ஒட்டினான். இரண்டாவது பெக்கில், ‘‘அண்ணே, அம்மாட்ட பேசணும்ணே! இந்தா வந்துர்றேன்’’ என எழுந்து மறைந்தான்.

‘டிடிங்… டிங்… டிடிங்… டிங்…’ தொடர்ந்தன. ‘என்னங்கடா டேய்’ எனச் சுகுமாரன் மண்டைக்குள் மணியடித் தது.

காலச் சிறகில் காதல் இறக்கைகள் உதிர்ந்தன. சாந்தினி தர்பாரிலும்வாளு டைந்து நிராயுதபாணியாக நின்றான் மாரி.

‘‘அண்ணே! ஏன்ணே இப்பிடி..? வலிக்குதுண்ணே!’’& அன்றைக்கு அவுட் ஆஃப் போகஸில் கிளாஸைக் கவிழ்த் தான்.

‘‘சூப்பரு! சாந்து சாந்தடிச்சுட் டாளா..?’’ எனக் குஷியானார் சுகு.

‘‘நல்ல பொண்ணுண்ணே! திடீர்னு என்னென்னவோ பேசுறாண்ணே. உன்னையெல்லாம் நம்ப முடியாதுங் கிறா. இன்னொரு பையனும் அவளை சின்ஸியரா லவ் பண்றானாம்ணே. அவனைப் பத்தியே பேசுறாண்ணே. ‘இன்னிக்கு என்ன நடந்துச்சு தெரி யுமா?’ன்னு அவன் கதையா சொல் றாண்ணே. வலிக்குதுண்ணே..!’’

‘‘சூப்பரு! நான்தான் சொன்னேனடா மாரி… பாரதி என்ன சொன்னான், ‘வேதமடி நீயெனக்கு, வித்தையடி நான் உனக்கு’ன்னான். டமுக்கு டமுக்குன்னு ஆட விடுவாளுக. வித்தை முடிஞ்சா வேற இடத்துல கயித்தைக் கட்டிருவாளுக. லவ் பண்றா, அது ஏன் பொண்ணுகளை மட்டும் லவ் பண்றே. ஒரு பூனைக் குட்டியை வாங்கி லவ் பண்ணுங்கிறேன்.’’

சாந்தினியும் ‘கண்ணாமூச்சி ரேரே’ என்று மாரிக்கு ஊளை முட்டையைத் தந்துவிட்டுப் போய்விட்டாள். மாரி மருகினான். உருகினான். குவாட்டரில் கருகினான். சுகு தேற்றினார். மீண்டும் ஊற்றினார். முட்டை பரோட்டா ஊட்டினார். மாரி மேல் பேரமைதி கவிழ்ந்தது.

சில நாட்கள் கழித்து ஒரு அதி காலையில் கேட்டது அந்தச் சத்தம். ‘டிடிங்… டிங்..!’ & திடுக்கிட்டு விழித்தார் சுகு. மலர்ந்து எழுந்தான் மாரி.

ராத்திரி சாராய பூஜையில் சாமக் கொடை ஆடாகி நின்றான் பயல்.

‘‘டேய் நாதாரி… யார்றா அது? செருப்பு பிய்யும்… யார்றான்னா..?’’ & சுர்ர்ர்ரென ஏறியது சுகுவுக்கு.

‘‘அண்ணே… சுகுணான்னு… ரொம்ப நல்ல பொண்ணுண்ணே… அவளுக மாதிரில்லாம் இல்லண்ணே!’’

‘‘சூப்பரு. இதான் உனக்குக் கடைசி பெக்கு. மவனே மரியாதையா படுத்துரு..!’’

‘‘அண்ணே…. இவ வேறண்ணே. நாங்க ஒருத்தருக்கொருத்தர் பேசி நல்லா புரிஞ்சுக்கிட்டம்ணே!’’

‘‘கடைசியா ஒண்ணு சொல்றேன் மாரி. மர்மம் இல்லாம, புதிர் இல்லாம உனக்குன்னு ஒருத்தி வரணும்டா… வருவாடா… இவளுகள்லாம் வேஸ்ட்டு!’’

‘‘அண்ணே! அம்மாட்ட பேசிட்டு வந்துர்றேண்ணே…’’ என மாரி கிளம்பி னான்.

சுகுணா மாரியைவிட கூரிய காதல் நகங்களைப் பெற்றிருந்தாள். அதில் கண்டபடி மாரியைப் பிராண்டினாள். அவள் இவனைச் சந்தேகப்பட்டாள், இவன் அவளைச் சந்தேகப்பட்டான். தழுவி முத்தமிட்டு அரைக் கண் கிறங்கையில், ‘டேய்… நேத்து ஏன் அவகூட அப்பிடிப் பேசுன?’ என நெற்றிக்கண் திறந்தாள். ‘நீ மட்டும் அவன்கூட அப்பிடிச் சிரிக்கிறே?’ என இன்னொரு நேரம் இவன் சிலிர்த்தான். ஆடிக் களைத்த பெண்டுலத்தை அவளே நிறுத்தினாள். செல் நம்பர் மாற்றினாள். ஆபீஸ் மாறினாள். குளித்துக் கரையேறி கோபியர்கள் சென்றுவிட்ட பிறகு, காக்கைகள் கரையும் ஆயர்பாடியில் தனிமையின் அந்தியில் தீராத காதல் குழலிசைத்துக் காத்திருந்தான் மாரி.

‘‘அண்ணே! வலிக்குதுண்ணே…’’

‘‘சூப்பரு. மாறுடா மாரி. மொத்தமா மாறு. எல்லாத்தையும் தூக்கிப் போட்டு வாடா!’’ -&குழலிசை நிறுத்தி குரு«க்ஷத் திரத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார் சுகுமாரன். கண்கள் பஞ்ச டைந்து திரிந்தான் மாரி.

அவனே ‘பியாஸா’ படத்தைப் போட்டுப் பார்த்தான். கண்களில் சோக ஒளி ஏற்றினான்.

ஒருநாள் இரவு… சுதியரங்கம். திடீரென மாரியின் செல் இசைத்தது. ‘டிடிங்… டிங்…’ எடுத்துப் பார்த்த மாரி ஒளிர்ந்தான். அதைக் கண்டு சுகு இருண்டார்.

‘‘அண்ணே! அம்மாட்ட பேசிட்டு வந்துர்றேண்ணே…’’ எனக் குரல் கனைத்துப் பாய்ந்தான் பயல்.

டென்ஷனான சுகுமாரன் அவனைத் தொடர்ந்து சென்று கன்னம் வைத்தார். ‘‘ஏண்டி லாலி இப்பிடிப் பண்றே..? உன்னை ரொம்ப லவ் பண்றேன்டி!’’ என செல்லில் குழைந்து கொதித்துக் கொண்டு இருந்தான் மாரி. இவரைக் கண்டதும் ஜெர்க்கடித்து, ‘‘அண்ணே!நம்ம லாலிண்ணே… ஏ லாலி, சுகு அண்ணே’’ எனத் தடதடத்தான்.

சுகு அமைதியாகத் திரும்பினார். கொஞ்ச நேரத்தில் லோ பேட்டரியோடு மீண்டான் மாரி.

‘‘அண்ணே! லாலிதாண்ணே கரெக்ட்டு!’’

‘‘சூப்பரு!’’

‘‘நான்தாண்ணே தப்பு! எல்லாம் பேசி ஒருத்தருக்கொருத்தர் நல்லா…’’ & மாரி முடிக்கும் முன்,

‘‘டேய், நானும் புரிஞ்சுக்கிட்டேன்டா… நல்லாப் புரிஞ்சுக்கிட் டேன்டா நாதாரி நாயே!’’& எனக் கத்தி விட்டு அந்தப் பக்கம் திரும்பி அமர்ந்து தனியே குடிக்க ஆரம்பித்தார் சுகு!

– 14th பெப்ரவரி 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *