மழைக்காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: November 4, 2013
பார்வையிட்டோர்: 17,128 
 

இரவு முழுக்க இடைவிடாது பெய்த மழை விடிந்த பின்னும் இன்னும் நிற்கவில்லை. அதன் இடைவிடாத சலசலப்பு ஹாலின் ஜன்னல் வழியே தோட்டத்தில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அறைக்குள் தட்பவெப்பம் மாறி லேசான குளிர். ராஜனுக்கு சூடாக ஒரு ஒரு கப் காஃபி குடிக்கவேண்டும் போல இருந்தது. கூடவே மீனாவுடன் உடனே ஃபோனில் பேசவேண்டும் போல ஒரு உத்வேக எண்ணமும் எழுந்தது.

இன்றைக்கு அவர்களின் கல்யாண நாள். ஆகவே லீவு போட்டுவிட்டு நாள் முழுவதும் அவன் கூடவே இருப்பதாக மீனா சொல்லியிருந்தாள். ஆனால் ஆஃபிஸிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும் ஏதோ ஒரு முக்கிய மீட்டிங் இருக்கிறதென்று அவசரமாக ஆட்டோ பிடித்து வழக்கத்தைவிட சீக்கிரமாகவே ஆபிஸூக்குக் கிளம்பிப் போய்விட்டாள். போகிற அவசரத்தில் லேசாய் அணைத்து முத்தமிட்டு இருவரும் ஒருவருக்கொருவர் ‘ஹாப்பி அனிவர்ஸரி’ சொல்லிக்கொண்டதோடு சரி. ராஜனுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. மீனா இன்று அவனோடு இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்குமென்று தோன்றியது. ஊர் முழுக்க மழை காரணமாக பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் நரேனுக்கு ஸ்கூல் இருந்தது. அவனும் கிளம்பிப் போய்விட்டான்.

ராஜன் தனிமையை உணர்ந்தான். கல்யாண நாள் இப்படி ஆயிருக்க வேண்டாம் என்று தோன்றியது. அவனுக்கு வீடும் ஆஃபிஸூம் ஒன்றுதான். இண்டர்நெட், டெலிபோன் அழைப்புகள் உபயத்தில் உட்கார்ந்த இடத்திலேயே அவனது வேலைகள் முடிந்துவிடும்.

லாப் டாப்பில் ”மலையும் நதியும் கடலும் ஒருநாள்…” என்று ஹரிஹரனும், சுஜாதாவும் காதல் பொங்க பாட ஆரம்பித்தார்கள். மழை நாட்களில் இந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பது அவனுக்கு மிகவும் பிடித்த விஷயம். குரல்களின் உருகலில் எப்போதும் கிளர்ந்தெழும் தவிப்பு இப்போதும் இந்த யாருமற்ற தனிமையில் கிளர்ந்தது. இத்தனை வருடத்திற்கப்புறமுமா? மீனாவுடன் பேசவேண்டுமென்று தோன்றியது. ராஜன் மொபைலை எடுத்தான். அவள் மீட்டிங்-கில் இருந்தால் தொந்தரவாக இருக்குமே என்றும் யோசனை வந்தது. உடனே வேண்டாம் என்று தீர்மானித்தான். ஃபோனில் கூப்பிடுவதற்குப் பதில் குறுஞ்செய்தி அனுப்பலாமே என்று தோன்றியது.

‘டாரு’ என்று ஆரம்பித்து மொபைலின் பட்டன்களை அழுத்த ஆரம்பித்தான். ‘மழை. குளிர். பகலிலேயே இருள். திருமண நாள். அழகான ரொமான்ஸூக்கு அற்புதமான சூழ்நிலை. வாயேன்!” சட்டென்று அவன் மனதிலிருந்து ஒரு விரகம் கலந்த காதல் நதி பிரவாகமெடுத்து அருவியாய் தலைகீழாகக் குதித்ததை உணர்ந்தான். பதினைந்து வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிற வற்றாத ரகசிய நதிதான் அது.

பிறகு ஏதோ யோசித்து மொபைலில் டைப் பண்ணுவதை நிறுத்தி அழித்தான். லாப்டாப்பை தன் பக்கம் திருப்பி அவள் ஆன்-லைனில் இருக்கிறாளா என்று பார்த்தான். இருந்தாள். ஆனால் ’பிஸி.. நோ சாட் ப்ளீஸ்’ என்று போட்டிருந்தது. இருந்தாலும் சாட்-டில் கூப்பிட்டுத் தொந்தரவு செய்யலாமா என்று யோசித்தான். பிறகு சாட் வேண்டாம் ஒரு இமெயில் அனுப்பிவிடலாம் என்று தீர்மானித்தான். ஜிமெயிலைத் திறந்து குறுஞ்செய்தியில் சொல்ல நினைத்ததை ஈமெயிலாக எழுத ஆரம்பித்தான். ’மழை. குளிர். பகலிலேயே இருள்.’ பிறகு அதையும் பாதியில் நிறுத்தினான். அப்படியே கண்களை மூடி சோபாவில் சாய்ந்தான். அவன் செய்கைகள் அவனுக்கே சிரிப்பை வரவழைத்தது. இத்தனை வருடம் கழித்தும் என்னடா ரொமான்ஸ் வேண்டிக்கிடக்கிறது என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்.

காலச் சக்கரத்தின் வட்டம் பெரிது. மீனாவை கல்யாணம் பண்ணி விளையாட்டுப் போல பதினைந்து வருடம் ஓடிவிட்டதென்பதையே நம்ப முடியவில்லை. நரேன் பிறந்து கிடு கிடுவென வளர்ந்து ஏழாம் வகுப்புக்கும் வந்துவிட்டான். ராஜனும் மீனாவும் காதல் வயப்பட்டிருந்த காலத்தில், தெருவில், பஸ்ஸ்டாப்பில், காஃபி ஷாப்புகளில் என கை கோர்த்து மயங்கித் திரிந்த நாட்கள் பனிமூட்டத்தின் நடுவே காட்சிகள் போல மங்கலான ஃப்ளாஷ்பேக்குகளாக இருவரின் ஞாபக அடுக்குகளிலும் சேகரம் செய்யப்பட்டுக் கிடந்தன. எப்போவாது அவைகள் மீள்நினைவுகளாக பேச்சினூடாக இருவருக்கும் வந்து போகும். அப்போது ஒரு சின்ன சிலிர்ப்பு ஒன்று ஓடும். அந்தச் சிலிர்ப்புத் தருணத்தில் ஒன்றை கண்ணுக்குள் கொண்டுவந்து நிறுத்த முற்பட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு அப்போது செல்ஃபோன்கள் இல்லாத ஒரு காலம். இதே போலத்தான் ஒருநாள் இடைவிடாது மழை கொட்டிக்கொண்டிருந்தது. ராஜன் ஒரு எஸ்.டி.டி பூத்துக்கு மழையில் நனைந்து கொண்டே வருகிறான். டெலிஃபோன் கூண்டுக்குள் ஏற்கெனவே ஒரு பெண் தீவிரமாக கையை ஆட்டியபடி பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் உச்சஸ்தாயியில் கத்துவது கண்ணாடி கதவைத் தாண்டி வெளியே கேட்கிறது. வெளியே ஒருவன் காத்திருப்பதைப் பொருட்படுத்தாமல் அவள் பாட்டுக்கு வெகுநேரம் பேசிக்கொண்டேயிருக்கிறாள். நிறைய காத்திருப்புக்குப் பின் ஒரு வழியாக அந்தப் பெண் வெளியே வருகிறாள். ராஜன் அவசரமாய் கூண்டுக்குள் பாய்கிறான். மீனா வேலை செய்யும் ஆஃபிஸ் நம்பரை டயல் செய்கிறான். யாரோ எடுக்கிறார்கள்.

“ஹலோ.. மீனா இருக்காங்களா?”

“நீங்க யாரு பேசறீங்க…”

“நான் அவங்க ரிலேட்டிவ்..”

“உங்க பேரு?..”

“ராஜன்”

மறுமுனை ஒரு நிமிடம் காத்திருக்கச் சொல்லுகிறது. அத்தனை ரசிக்கத்தகாத ஒரு இசை ஃபோனில் ஒலிபரப்பப்படுகிறது. ராஜன் காத்திருக்கிறான். எஸ்.டி.டி பூத்தில் மாட்டியிருந்த மீட்டரில் சிவப்பு வண்ண எழுத்துக்கள் அவன் கையில் இருக்கிற சில்லறையை பற்றிய கவலையில்லாமல் வேகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது. நீண்ட நேரம் கழித்து மீனாவின் குரல் தயக்கமாய் மெதுவாய் சன்னமாய் ஒலிக்கிறது.

“டாரூ..” என்கிறான் ராஜன். டார்லிங் என்பதன் சுருக்கம். மறுமுனையில் தயக்கம் தொடர்கிறது. மீனா ’ஒரு நிமிடம்’ என்று சொல்கிறாள். ராஜன் அமைதியாய்க் காத்திருக்கிறான். மீண்டும் ம்யூசிக். ஒரு டயல் சப்தம். அரை நிமிடம் கழித்து இப்போது மீண்டும் அவள் குரல். “ஏய்.. சொல்லுப்பா. இங்க அக்கவுண்ட்ஸ் செக்ஷன்-ல இருக்கானே ஒருத்தன்.. எனக்கு எப்ப ஃபோன் வந்தாலும் பக்கத்துலயே நின்னுகிட்டு ஒட்டுக்கேக்கறதே அவனுக்கு வேலையாப் போச்சு. அதான் எம்.டியோட ரூமுக்கு லைன் ட்ரான்ஸ்ஃபர் பண்ணிட்டுப் பேசறேன். எம்.டி. வெளிய போயிருக்காரு. சீக்கிரம் பேசிட்டு வெச்சுரு என்ன!. எங்கிருந்து போன் பண்றே? ஆபிஸ்லேர்ந்தா?”

“பூத்லேர்ந்து.. வெளிய ஒரே மழை. நாம பாத்து மூணு நாளாச்சுடி ஞாபகமிருக்கா?…”

“பின்ன இல்லாமயா?..”

“இன்னிக்கு சாயங்காலம் மீட் பண்ணலாண்டி….”

”இன்னிக்கா.?. ரொம்ப கஷ்டம். சாயங்காலம் பெரீம்மா வீட்டுக்குப் போயாகணும்.. ராஜி தெரியும்-ல பெரீம்மாவோட ரெண்டாவது பொண்ணு.. அவ வயசுக்கு வந்துட்டா…”

“அடிப்பாவி!.. அப்ப நாளைக்கு?”

“ஏய்.. எனக்கு மட்டும் உன்னப் பாக்கணும்னு இருக்காதாடா.. கண்டிப்பா வர்ரேன் செல்லம்.. நாளைக்கு ஆறு மணி. நம்ம டிவைன் தியேட்டர் பஸ் ஸ்டாப்பு…”

இந்த மாதிரி அவன் மீனாவுக்காக காத்திருந்து காத்திருந்தே டிவைன் தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் அவன் நிற்கிற இடத்தில் தரை தேய்ந்திருந்தது. ஒவ்வொரு பஸ் வந்து நிற்கும் போதும் அதிலிருந்து மீனா வெளிப்படுவாளா என்று தேடுவான். அவள் சொல்கிற மாதிரி எப்போதும் சரியாக ஆறு மணிக்கு வந்ததேயில்லை. வந்தவுடன் ஆபிஸிலிருந்து கிளம்பும்போது மேனேஜர் பிடித்துக்கொண்டார் அல்லது பஸ் கிடைக்கவில்லை என்று ஏதாவது சமாதானம் கூறுவாள். பத்துப் பதினேழு யுகமானாலும் உனக்காக காத்திருப்பது சுகம்தாண்டி என்று ராஜன் பிதற்றுவான். அந்த பொய்யான வசனத்தில் அவள் மலர்ந்து சிரிப்பாள். இருவரும் பார்த்து பலவருடமாகிவிட்டதைப் போல ஒருவரை ஒருவர் பார்வையால் சிறிது நேரம் விழுங்கிக்கொண்டிருப்பார்கள். பிறகு மெதுவாய் கை கோர்த்துக் கொண்டு நடந்து அப்படியே பெரிய கடைவீதி, மார்க்கெட் என ஜனத்திரள்களுக்கு நடுவே ஒரு மூன்று கிலோமீட்டர்களாவது நடந்துபோவார்கள்.

எதையெதையோ பேசிக்கொண்டு சில நிமிடங்கள். ஒன்றும் பேசாமல் மௌனமாய்ப் பல நிமிடங்கள். அர்த்தமில்லாமல் எதற்கோ சிரித்துக்கொண்டு சில நிமிடங்கள். திடீரென எதிர்காலம் குறித்த பேச்சு வந்து கவலையும் சோகமுமாய் கொஞ்சநேரம். சின்னச் சின்ன உரசல்கள். விழித் தீண்டல், விரல் தீண்டல் என ஒரு மணி நேரம் கால் போன போக்கில் போய்க்கொண்டிருப்பார்கள். மென் காற்றில், கருநீல வானத்தில் என எங்கும் எதிலும் காதல் விரவி நிற்கும் கணப் பொழுதுகளாய் இருவரும் மயங்கித்தவித்த காலம்.

பிறகு ஒரு பஸ் ஸ்டாப்பில் நின்று பிரிய மனமின்றி கொஞ்ச நேரம் நின்றுகொண்டிருப்பார்கள். நாளைக்கு ஃபோன் பண்ணு என்று சொல்லிவிட்டு அவள் பஸ்ஸில் ஏறிக்கொள்வாள். பஸ் கிளம்பியதும் ஜன்னல் வழியே தெரிகிற அவள் ஏக்க முகத்தையும் பிறகு பஸ்ஸின் முதுகையும் மறையும் வரை பார்த்துக் கொண்டு நிற்பான்.

அடுத்தடுத்த நாட்களில் மறுபடி மறுபடி எஸ்.டி.டி பூத். ஃபோன். மீட்டரில் ஓடும் சிவப்பு எண்கள். ஒட்டுக்கேட்கிற அக்கவுண்ட் செக்ஷன் ஆசாமி. மீனாவின் குரல். இண்டர்காம். டிவைன் தியேட்டர் பஸ் ஸ்டாப். கடை வீதி. காஃபி. கால் தேய நடை. பஸ் ஜன்னல் பார்வை.

ஒரு இடிச்சத்தம் நினைவுகளிலிருந்து மீட்டு ராஜனை சுய நினைவுக்குக் கொண்டுவந்தது. லாப்டாப்பில் பாடல் நின்றிருந்தது. ராஜன் லேசாய் புன்னகைத்துக்கொண்டான். கொஞ்சம் கார்பன்-டை-ஆக்ஸைடை பெருமூச்சாக வெளிப்படுத்தினான். சமையலறைக்குப் போய் சூடாக ஒரு கப் காஃபி கலந்து சாப்பிட்டான்.

பிறகு என்னவோ யோசித்தவனாக குடையை எடுத்துக்கொண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கினான். வெளியே மழை இப்போது இன்னும் அதிக வலுவுடன் பெய்து கொண்டிருந்தது. சாலையெங்கும் கணுக்கால் அளவு வெள்ளம். பேண்ட்-டை முழங்கால் வரை மடக்கி விட்டுக்கொண்டு இறங்கினான். குடையை விரித்து மெதுவாய் தண்ணீரை அலசி அலசி நடந்து அடுத்த தெருவில் இருக்கிற சுமதி ஸ்டோருக்கு வந்தான். எல்லாத் தெருக்களும் கனமழையால் வெறிச்சோடிக்கிடந்தன.

சுமதி ஸ்டோர் வாசலில் மழை நீர் ஒழுகுகிற ஆஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழே மாட்டியிருந்த காயின் போட்டுப் பேசுகிற போனில் அவள் ஆஃபிஸ் நம்பரை டயல் செய்துவிட்டுக் காத்திருந்தான். மறுமுனையில் மீனா வந்து “ஹூ இஸ் திஸ்” என்று கேட்டுவிட்டு அவன் “நாந்தான்” என்று சொன்னதும் லேசாகப் பதறிப் போய் “என்னடா.. லேண்ட் லைன்–ல இருந்து பேசற? எனி ப்ராப்ளம்?” என்றாள்.

அவன் சிரித்தபடி “ஏ.. டாரூ.. இன்னிக்கு ஈவ்னிங் ஆறு மணிக்கு டிவைன் தியேட்டர் பஸ் ஸ்டாப்புல மீட் பண்ணலாமா?” என்றான். திடீரென்று அடித்த காற்றில் மழைச்சாரல் கூரையைத் தாண்டி விசிறியடித்ததில் அவன் தேகம் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது.

– நம் தோழி – பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *