மண் குதிரைகள்

 

அன்றும் அந்த சம்பவத்தை மந்தாகினி காண நேரிட்டது.

குமார் மானேஜரின் தனியறையிலிருந்த தொலை பேசி எண்களை சுழற்றிக் கொண்டிருந்தான். மானேஜர் இல்லாத சமயங்களில் அவனது இந்த வித்தியாசமான செயல் அவளுக்குப் பெரிய புதிராக இருந்தது.

அதாவது, குமார் தொலைபேசியின் எண்களை மட்டும் சுழற்றிவிட்டு, தொடர்ந்து ரிசீவரை காதில் வைத்தபடி ஒன்றுமே பேசாது சற்று நேரம் இருப்பான். பின் ரிசீவரை வைத்துவிட்டு அறையிலிருந்து பூனை போல் வெளியேறி தன் இருக்கையில் வந்து அமர்ந்து விடுவான். அனால் ஒரு நாள் கூட தொலைபேசியில் அவன் பேசியதில்லை.

இதை மானேஜரின் பி.ஏ.வான மந்தாகினி கண்ணாடியாலான தடுப்புச் சுவரின் வழியாக இன்றும் காண நேர்ந்தது. இன்று எப்படியும் அவனிடம் இது பற்றி கேட்டுவிட வேண்டும் என மந்தாகினி முடிவு செய்து கொண்டாள்.

குமார் சமீபத்தில்தான் சென்னையிலிருந்து மதுரைக் கிளைக்கு மாற்றலாகி வந்தவன். அவனது ஒதுங்கிய சுபாவமும், அமைதியான பண்பும், அளவான சிரிப்பும், நேர்த்தியாக உடையணியும் பாங்கும், அவன் பால் மந்தாகினிக்கு ஆரம்பக் காதலை தோற்று விற்றிருந்தன. அவன் என்றாவது ஒருநாள் தன்னை காதலிப்பதாகச் சொல்வான் என்ற எதிர்பார்ப்பில் இருந்தாள்.

அன்று மதிய உணவு இடைவேளையின்போது பேச்சுவாக்கில் அவனிடம் இயல்பாக, “என்ன மிஸ்டர் குமார், நீங்க டெலிபோன் நம்பரை சுழற்றித்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் பேசிப் பார்த்ததில்லை, ஒருவேளை நீங்கள் முயற்சி செய்யும் ஒவ்வொரு தடவையும் நம்பர் என்கேஜ்டாக இருக்கிறதா என்ன?” என்று கேட்டுவிட்டு அவனை ஊன்றிக் கவனித்தாள் மந்தாகினி.

“மிஸ் மந்தாகினி உங்களிடம் உண்மையைச் சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்… நான் சென்னையில் இருந்தபோது உயிருக்கு உயிராக ஒரு பெண்ணை ஐந்து வருடங்களாகக் காதலித்தேன். நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவன், அவள் யாதவ வகுப்பைச் சேர்ந்தவள்.

எனினும், அவள் தன்னுடைய வீட்டில் போராடி எங்களுடைய திருமணத்திற்கு சம்மதம் வாங்கி, அதற்காக தன்னை ஆயப்படுத்திக் கொண்டாள்.

“ஆனால் அவள் வேறு ஜாதி என்பதால் என் வீட்டில் இதற்கு கடும் எதிர்ப்பு இருந்தது. என் தாயார் அடிக்கடி என்னிடம் அழுது புலம்பினாள். தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினாள். இறுதியில் என்னுடைய ஐந்து வருடக் காதல் தோல்வியடைந்து, தாய்ப் பாசம்தான் என்னை வென்றது.

“……..”

“என்னுடைய இயலாமையால், ஐந்து வருடங்களாக நாங்கள் ஆவலுடன் வளர்த்துக்கொண்ட எதிர் பார்ப்புகள் வெறும் கானல் நீராகிப் போனது… செய்து கொண்ட சத்தியங்கள் பொய்யாகிப் போனது. எங்களுடைய கல்யாணக் கனவுகளில் இருந்த அவள் மனம் ரணமாகிப்போனது.

“கடைசியாக நான் அவளைச் சந்தித்தபோது என்னை மன்னித்துவிடும் படியும், இனி நான் அவளைப் பார்க்கவோ பேசவோ மாட்டேன் எனவும், அவளின் புதிய வாழ்க்கைக்கு நான் பிரார்த்தனை செய்வதாகவும் சொல்லி அவளிடமிருந்து முற்றிலும் விலகிக் கொண்டேன். பல மாதங்கள் சென்ற பின் எனக்கு அவளிடமிருந்து வந்த அவளின் திருமணப் பத்திரிக்கையை அழைப்பாக அல்லாமல் வெறும் அறிவிப்பாக எடுத்துக் கொண்டேன்.

“…….”

“விரைவில் மதுரைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு இங்கு வந்து விட்டேன். ஆனால் என்னால் அவளை மறக்க முடியவில்லை. அவளை நான் மறக்க வேண்டுமென்றால் நாங்கள் சேர்ந்து ரசித்த சந்திரனும், மாலை நேரச் சூரியனும், சிறந்த இலக்கியப் படைப்புகளும் என்னை எதிர் படக்கூடாது. இது சாத்தியமா மிஸ்.மந்தாகினி?”

குமார் மேலும் தொடர்ந்தான்…

“அவளைப் பார்க்கவோ, பேசவோ மாட்டேன் என்று நான் அவளிடம் வீராப்பாக சொன்னது நிஜம். ஆனாலும் அவளின் இனிமையான குரலை மட்டுமாவது கேட்க வேண்டும் என்கிற வெறி என்னுள் ஏற்பட்டது. அவள் சென்னையில் டெல்டா என்கிற நிறுவனத்தில் டெலிபோன் ஆப்பரேட்டர்..

“நான் நம்ம மனேஜர் இல்லாத சமயங்களில் டெல்டாவின் நம்பரை எஸ்டிடியில் தொடர்பு கொண்டு, அவளுடைய ‘குட் மார்னிங், டெல்டா ஹியர்’ என்கிற குரலையும் நான் பதில் பேசாதிருப்பதால் அவளின் தொடர்ந்த ‘ஹலோ ஹலோ’வையும் கேட்பேன். அவள் குரலுக்கு பதில் பேசாது தொலைபேசியை வைத்துவிட்டு என் இருக்கைக்கு வந்து விடுவேன்.”

“அவளின் இனிமையான குரலைக் கேட்கும்போது ஒரு இனந்தெரியாத மகிழ்ச்சி என்னுள் ஏற்படுகிறது மந்தாகினி… இன்றும் அப்படித்தான்” என்று தன் கதையைச் சொல்லி முடித்தான்.

மந்தாகினிக்கு, அவனிடமிருந்த ஆரம்பக் காதல் முற்றிலும் அடிபட்டுப்போய், சட்டென எரிச்சல் ஏற்பட்டது. கூடவே வேறு ஜாதியான தன்னை இவன் காதலிக்கத் தயங்குவான் என்பது நிதர்சனமாகப் புரிந்தது.

ஒரு பெண்ணை ஐந்து வருடங்களாகக் காதலிக்கத் தெரிந்தவனுக்கு, கேவலம் ஜாதிக் குறுக்கீட்டால் அவளைக் கைவிட்டான். முதுகெலும்பில்லாத தாய்ப் பாசக் கோழையானான். இவனைப் போன்ற கோழையான ஆண் மண் குதிரைகளை நம்பி வாழ்க்கையெனும் நீண்ட ஆற்றில் பெண்கள் எப்படிப் பயணிப்பது? என்று வெகுண்டாள்.

அதெப்படி இன்னொருத்தன் மனைவியின் குரலை அவ்வப்போது தொலைபேசியில் ஒளிந்து கேட்டுக்கொண்டு, விவஸ்தைக் கெட்டத் தனமாய் அதை இனிமை என்று என்னிடமே வர்ணிக்கும் இவன் எப்பேர்ப்பட்ட கிராதகன்…ச்சீ !

கோபம் கொப்புளிக்கும் கண்டிப்பான குரலில் மந்தாகினி சொன்னாள், “மிஸ்டர் குமார் யு நோ, நான் மனேஜருடைய பி.ஏ., இனிமே அவருடைய தொலைபேசியை நீங்க தொட்டீங்கன்னா, எழுத்து மூலமா உங்கள் மீது நான் புகார் தர வேண்டியிருக்கும் ஜாக்கிரதை… தவிர இதுவரை நீங்க பேசாது மெளனம் காத்த சென்னை எஸ்.டி.டி கால்களுக்கு, பில் வந்தவுடன் பிரின்ட் அவுட் அனுப்புகிறேன். அதற்குண்டான பணத்தை உடனே நம் அலுவலகத்தில் கட்டி ரசீது வாங்கிக் கொள்ளவும். பிறகு அதை என்னிடம் காண்பிக்கவும். புரிந்ததா ?”

எழுந்து சென்று விட்டாள்.

மந்தாகினியிடம் ஏற்பட்ட மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியாத குமார் விக்கித்துப் போனான். 

தொடர்புடைய சிறுகதைகள்
சென்னை பழவந்தாங்கல் ஸ்டேஷனை ஒட்டி ஒரு பெரிய வீடு. அதில் மனைவி மரகதம் மற்றும் மூன்று மகன்களுடன் கோதண்டராமன் வசித்து வருகிறார். முதல் இரண்டு மகன்களுக்கும் நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்தார். அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். ஆனால் மூன்றாவது மகன் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘வாரிசு’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) நாலே எட்டில் இசக்கி கடைக்கு வந்து சேர்ந்துவிட்டார். மனசுக்குள் ஒரு பக்கம் சிரிப்பாகவும், இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. எப்படியோ ஒரு குருட்டுத் தைரியத்தில் கிணற்றைத் தோண்டி விட்டார்! அதுக்காக ...
மேலும் கதையை படிக்க...
இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறையாவது ‘மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது’ என்கிற செய்தி சர்வ சாதாரணமாக நம் காதுகளில் விழுகிறது. ஒரு தந்தையைப் போல் நடந்து கொள்ள வேண்டிய ஆசிரியரே இப்படி நடந்து கொள்கிறாரே என்று நாம் நொந்து ...
மேலும் கதையை படிக்க...
நாம் அனைவரும் குழந்தைப் பருவத்தை தாண்டி வந்திருக்கிறோம் என்றாலும் தற்போதைய குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். ஏன், எதற்கு, எப்படி என்கிற கேள்விகள் அவர்களிடம் ஏராளம். அவர்களுக்குப் புரியும்படி பதில் சொல்ல நமக்குத்தான் புத்திசாலித்தனமும் பொறுமையும் வேண்டும். அது நம்மில் பலருக்கு இருப்பதில்லை. என் தாத்தாவைவிட ...
மேலும் கதையை படிக்க...
என் பெயர் .ஜமுனா. பதினைந்து வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் நாங்கள் காரில் திருப்பதி சென்றுவிட்டுத் திரும்பும்போது, கார் விபத்துக்குள்ளாகி என் பெற்றோர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். அப்போது எனக்கு வயது ஒன்பது. என் அண்ணாவுக்கு பன்னிரண்டு. ...
மேலும் கதையை படிக்க...
பைத்தியக்காரக் கல்யாணம்
மச்சான்களின் எச்சரிக்கை
உள்ளும் புறமும்
குழந்தைகள்
அண்ணாவின் டைரிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)