மணல்வீடுகள்..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: July 12, 2012
பார்வையிட்டோர்: 9,051 
 

மெரினா கடற்கரை:

“இந்தக் கடல்மேல சத்தியமா சொல்லு நந்தினி நீ என்னை காதலிக்கவே
இல்லையா?” கண்ணில் நீர்துளிக்க கேட்டான் பாலா.

“இல்ல பாலா…உன் புரிதலில்தான் தப்பு இருக்கு. எனக்கு உன்னை பிடிக்கும்,
உன்கூட சினிமா,டிஸ்கோன்னு நான் சுத்தினதும் உண்மை, எனக்கு ஊர்சுத்துறது ரொம்ப பிடிக்கும்,அதுக்கு ஒரு ஆள் தேவைபட்டுச்சு. தேட்ஸ் ஆல்! இதுக்கெல்லாம் பெயர் காதல்,கத்தரிக்காய்ன்னா சுத்த பைத்தியக்காரத்தனம் பாலா” இயல்பாகச் சொன்னாள் நந்தினி.

“எப்படி உன்னால இப்படி பேச முடியுது? உனக்கு மனசே இல்லையா நந்தினி”

“யார் சொன்னா? எனக்கு மனசுமிருக்கு,வாழ்க்கை பத்தின தெளிவும் இருக்கு
அடுத்த வாரம் எனக்கு நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை அமெரிக்காவுல சாப்ட்வேர் இன்ஞ்சினியர்” நான் வர்றேன் பாலா.

விறுவிறுவென்று நடந்து செல்லும் நந்தினியை தடுக்கமுடியாமல் கடலை
வெறுத்துப்பார்த்துக்கொண்டிருந்தான் பாலா.

மியாமி கடற்கரை:

“நீ ஒரு இந்தியன், நல்ல குடும்பத்து பையன்ங்கறதாலதான் உன்னன உயிருக்கு
உயிரா காதலிச்சேன் அருண். ஆனா இப்போ நாம பிரிஞ்சுடலாம்னு ஈஸியா சொல்றியே
இது உனக்கே நல்லா இருக்கா?” கோபமாகக் கேட்டாள் ஜெனிபர்.

“உண்மைதான் ஜெனிபர், எனக்கும் உன்னை பிடிச்சிருந்தது ஆனா நீ நினைக்கிற மாதிரி
உன்னை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீயும் ஒரு இந்திய வம்சாவளிப் பெண்தான். ஆனா நீ வளர்ந்த விதம் வேற உன்னால எங்ககுடும்பத்து பெண்ணா இருக்க முடியாது” கவலையின்றி பேசினான் அருண்.

“சே நீ எல்லாம் ஒரு மனுசனா? உன்னை காதலிச்சத நெனச்சா வெட்கமா இருக்கு..கெட் லாஸ்ட் யூ கோவர்ட்” ஆவேசமாக திட்டிவிட்டு எழுந்து சென்றாள் ஜெனிபர்.

“அப்பாடா நிம்மதி இனிமே எனக்கு அப்பா அம்மா பார்த்திருக்கற நந்தினியை கட்டிக்கவேண்டியதுதான் அவ ரொம்பநல்ல குடும்பபெண்ணாம்” அப்பா போன்ல சொன்னதை நினைத்துக்கொண்டே கடலை ரசிக்கத்துவங்கிய அருணைக் கண்டு கைதட்டி சிரித்தது ஒரு மெரினா அலை.

– Sunday, September 16, 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *