பெயர்க் காரணம்

0
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 31, 2013
பார்வையிட்டோர்: 16,309 
 

ஜோதி… இந்தப் பெயர்தான் குழந்தைக்கு வைப்பதென சஞ்சய் உறுதியான முடிவுக்கு வந்தான். இந்தப் பெயர் ஒரு காலத்தில் ஏற்படுத்தின அதிர்வு இப்போதும் கிடைத்தது அவனுக்கு. மனசு சட்டென பாரம் குறைந்து ஒரு பறவையின் இறகை போல லேசானது. சஞ்சய்க்கு அப்படியே காற்றில் பறக்கிற மாதிரி இருந்தது. மொத்த வாழ்வின் திருப்தி நொடியை சஞ்சய் இப்போதே உணர்ந்தான்.

சஞ்சய் தொட்டிலில் இருந்த தன் குழந்தையைப் பார்த்தான். வட்டமான முகம். சற்றே பெரிய கண்கள். மென்மையாய் ரோஜா கன்னங்கள். கொலுசில் சிணுங்கும் பிஞ்சு பாதங்கள். பரவசப்படுத்தும் பேரழகு. இந்த மூன்று மாதக் குட்டி தேவதைக்கு இந்தப் பெயர் மிகப் பொருத்தமாய் இருப்பதாய்த் தோன்றியது. அவனும் பிருந்தாவும் புத்தகங்கள், நெட், நண்பர்களிடம் கேட்டு என தன் குழந்தைக்குப் பெயர் தேடாமல் இல்லை. சஞ்சய் பெயர் தேடுகிற மாதிரி நடித்தானே தவிர, அவன் மனம் முழுவதும் ஜோதி என்கிற பெயரே நிறைந்திருந்தது. உலகிலேயே அழகான பெயர். எத்தனை முறை எழுதிப் பார்த்தும் இதுவரையிலும் அலுக்காத பெயர்.

பெயர்க் காரணம்ஜோதி.. மனதிற்குள் ஒரு முறை மறுபடியும் உச்சரிக்க சஞ்சய்க்கு லேசாய் கண் கலங்கியது. ஜோதியின் நினைவு பொங்கி வந்தது. மனசு வழக்கம் போல் புலம்ப ஆரம்பித்தது. ஜோதி எங்கிருக்கிறாய்? என்னை ஞாபகமிருக்குமா? என்னை மாதிரி நீயும் கண் கலங்கி நினைத்துக் கொண்டிருப்பாயா? அல்லது எல்லாம் மறந்து சந்தோசமாய் இருக்கிறாயா? நீ எப்படியோ… என்னால் உன்னை மறக்கமுடியவில்லை ஜோதி… நான் உங்கள் ஊருக்கு குடி வந்திருக்கக்கூடாது. வந்தாலும் உன்னை நான் பார்த்திருக்கக்கூடாது. பார்த்தாலும் பேசியிருக்கக்கூடாது. ஆனால் சஞ்சயின் வாழ்க்கையில் எல்லாம் நடந்தது.

சஞ்சயின் அப்பாவுக்குத் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை. உதவி கணக்காளர். அவருக்கு அட்டகட்டிக்கு வேலை மாற்றலான போதுதான் சஞ்சய், ஜோதியை சந்தித்தான். அட்டகட்டி பொள்ளாச்சியிலிருந்து நாற்பது கிலோமீட்டரில் இருக்கிறது. அது ஊரல்ல. கேம்ப். மலைப்பகுதி. பறவைகள் சப்தம். மிருகங்களின் நடமாட்டம். குளிர்ந்த காற்று. மரங்கள் மூடிய வீடுகளென முற்றிலும் புதிய உலகமாய் இருந்தது சஞ்சய்க்கு.

அட்டகட்டியில் அனைத்து வீடுகளும் ஓரேமாதிரிதான் இருக்கும். அரசாங்க குடியிருப்பு. பெரிய அதிகாரிகளின் வீடுகள் மட்டும் சற்று தள்ளி பெரியதாய் தனித்திருக்கும். வித்தியாசம் புரியாத ஒரு குழப்பத்தில்தான் சஞ்சய் ஒருமுறை வீடு மாறி ஜோதியின் வீட்டிற்குள் நுழைந்து விட்டான். உள்ளிருந்த ஜோதி பதற்றமாய் ஓடி வந்தாள். ஆனால் எதுவும் திட்டவில்லை. யார் என்ன வேண்டுமென ஜோதி சைகையிலே கேட்க சஞ்சய்க்குத் தன் தவறு புரிந்தது. பதில் சொல்லாமல் அவளையே பார்த்தபடி இருந்தான். அவள் வீடு முழுவதும் சாம்பிராணி புகை இருந்தது. கண்ணை உறுத்தாத மஞ்சள் தாவணி. மூக்கில் ஒற்றை மூக்குத்தி. மிகச் சின்னதாய் பொட்டு. பெரியதாய் கண்கள். ஜன்னலில் வந்த மெல்லிய வெளிச்சம் அவள் மீது படர்ந்திருக்க சஞ்சய் அசந்து போய் நின்றிருந்தான். அவன் வீடு மாறி வந்ததையோ மன்னிப்பு கேட்டான் என்பதோ சஞ்சய்க்கு சுத்தமாய் ஞாபகமில்லை. அவன் வீடு திரும்பியிருந்தான்.

இவ்வளவு நாள் எங்கிருந்தாள்? எப்படி பார்க்காமல் போனேன்? சஞ்சய்க்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை. அவளை மறுபடியும் எப்போது பார்ப்போம் என்றிருந்தது.

விடிந்தது. மெதுவாய் அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தான். தான் நேற்று வீடு மாறி போன விஷயத்தை அம்மாவிடம் இப்போது சொன்னான். “”இவ்வளவு அழகான பொண்ணு ஊமைன்னு நினைக்கறேன்” என்றான். அம்மா சிரித்தபடி, “”ஜோதி ஊமையில்லை. மாசத்துக்கு ஒருநாள் மௌனவிரதம் இருப்பாளாம். நேற்று அந்த மாதிரிதான்” என்றாள். “ஜோதி சூப்பரா பாடுவா’ என்ற உதிரி தகவலும் கிடைக்க சஞ்சய் மேலும் சந்தோசமானான். சஞ்சய் ஜன்னல் வழியாகப் பார்த்தான்.

ஜோதி வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது. உதட்டில் முணுமுணுக்கிற ஏதோவொரு பாடல். சஞ்சய் வேகமாய் வெளியே வந்தான். அதற்குள் எழுந்து ஜோதி வீட்டிற்குள் சென்றிருந்தாள்.

அடுத்தமுறை சஞ்சய் ஜோதியைப் பார்த்தபோது அவள் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள். ஹெட்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். ஒரு குயில் பாட்டு கேட்கிறது. சஞ்சய்க்குள் ஒரு கவிதை ஓடியது. ஜோதி சஞ்சயைப் பார்த்ததும் சிரித்தாள். சஞ்சய் உருகிப் போனான். ஜோதி இப்போதும் சைகையிலேயே “”எப்படியிருக்கீங்க?” என்றாள். சஞ்சய்க்கு சிரிப்பு வந்தது. பக்கத்தில் போனான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அவர்கள் இங்கே குடி வந்து ஏழெட்டு வருடங்கள் ஆயிற்றாம். ப்ளஸ் டூ வோடு படிப்பை முடித்துக் கொண்டு வீட்டிலேயே இருப்பதைச் சொல்லி ஜோதி வருத்தப்பட்டாள். சஞ்சய் தான் படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னான். காலேஜ் படிக்கும் அவளது தங்கை தம்பி மற்றும் அவளது குடும்பமே பிறகு அறிமுகமானார்கள்.

அதன் பிறகு ஜோதி அருகில் இருந்த சரிவான அந்தப் பரந்த காட்டைப் பற்றி சஞ்சய்க்கு அறிமுகப்படுத்தினாள். மிக அருகில் துள்ளியோடும் மான்களைப் பார்த்தான். கண்ணை மூடி கூட்டிப் போய் ஒரு பெரிய பள்ளத்தாக்கைக் காட்டி திடீரென பயமுறுத்தினாள். தூரத்தில் சன்னமாய் தெரிந்த சின்ன அருவிக்கு கூட்டிப் போனாள். அட்டகட்டியிலிருந்து தெரியும் ஆழியார் அணையின் அழகை காட்டினாள். மேலும் சந்திப்புகள் தொடர்ந்தன. நிறைய விஷய பரிமாற்றங்கள். மழையில் நனைந்தார்கள். வெயிலில் நடந்தார்கள். படிக்கிற புத்தகங்கள், பிடித்த சினிமா என ரசனையிலும் ஒத்துப்போக சஞ்சய் அவளைப் பார்க்காமல் இருக்கவே முடியாது என்ற நிலைமைக்கு வந்தான்.

இருவரையும் பற்றி கேம்பில் தப்பாகப் பேசுவதாக சஞ்சயின் காதுக்கு செய்திகள் வந்தன. கேட்டதும் சஞ்சய் சந்தோசப்பட்டான். சஞ்சய் ஜோதியிடம் இதை சொன்னான். அவளும் சந்தோசப்படுகிறாளா என உன்னிப்பாய் கவனித்துப் பார்த்தான். அவளிடம் எந்த வித்தியாசமும் வராதது சஞ்சய்க்கு வருத்தமாய் இருந்தது.

வெறும் பேச்சுகளில் கரைந்து கொண்டிருந்தது காலம். கனவுகளில் கழிந்து கொண்டிருந்தது காதல். பொறுக்க முடியாமல் சஞ்சய்தான் முதலில் ஜோதியிடம் காதலை வெளிப்படுத்தினான். கேட்டதும் அவள் உடம்பு நடுங்குவது சஞ்சய்க்குத் தெரிந்தது.

“”வேண்டாம் சஞ்சய். ரொம்ப பயமா இருக்கு..” என்று மட்டும் சொல்லிவிட்டு ஓடிப்போனாள். என்ன பதில் இது? சஞ்சய்க்கு ஒன்றும் புரியவில்லை. வெறுத்துப் போனான். அப்படியே இறங்கி காட்டில் நடக்க ஆரம்பித்தான். மௌனம் சுமந்த காடு. அவ்வப்போது மரங்கள் காற்றில் மோதி பேசும் வார்த்தைகள் சஞ்சயின் காதுகளில் பேரிரைச்சலாய் ஒலித்தன. சஞ்சய் இலக்கில்லாமல் நடந்தபடி இருந்தான். திரும்ப வழி கிடைக்காமல் அப்படியே காணாமல் போக தோன்றியது. ஒரு பெரிய மரத்தடியில் நின்றான். அதில் சாய்ந்து அமர்ந்து அழ ஆரம்பித்தான். அப்படியே தூங்கிப் போனான். யாரோ அவனை எழுப்ப மெதுவாய் கண் திறந்து பார்த்தான். ஜோதி நின்றிருந்தாள். “”வா வீட்டுக்கு போகலாம்” என்றாள். சஞ்சய் பதில் சொல்லவில்லை.

“”சஞ்சய் ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. எங்க வீட்டை பத்தி உனக்கு தெரியாது. திருநெல்வேலியில போலீஸ் வேலையில இருக்கற எங்க மாமாவுக்கு என்னை கட்டிக் கொடுக்கணும்னு சின்ன வயசில இருந்து பேசிட்டிருக்காங்க. நம்ம விஷயம் தெரிஞ்சா என்ன பண்ணுவாங்கன்னு தெரியல..” என்றபடி ஜோதி அழ ஆரம்பித்தாள்.

“”அதெல்லாம் அப்புறம்.. பிரச்சனை வராத ஒரு காதல சொல்லு பார்ப்போம்.. என்னை உனக்கு பிடிச்சிருக்கா இல்லையா..? அதுக்கு பதில் சொல்லு..”

“”பிடிக்காமயா ஆள காணம்னு தேடிட்டு வருவாங்க..”

சஞ்சய்க்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. ஜோதியை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டான்.

முதலில் சஞ்சயின் வீட்டிற்கு விஷயம் தெரிந்தது. அப்பா, “”முதல்ல ஒழுங்கா ஒரு வேலையைத் தேடு” என்றார். சஞ்சய் நண்பர்களிடம் சொல்லி தீவிரமாய் வேலை தேடினான். வேலை கிடைத்ததும் ஜோதி வீட்டில் போய் பெண் கேட்பதாய் திட்டம்.

ஜோதி வீட்டிற்குத் தெரிந்த போதுதான் விஷயம் விபரீதம் ஆனது. அவளது அப்பா நெஞ்சை பிடித்துக்கொண்டு அமர்ந்தார். அவளது அம்மாவின் அழுகை அந்த குடியிருப்பு முழுவதும் கேட்டது. சஞ்சய் எழுந்து ஜோதியின் வீட்டிற்கு ஓடினான். ஜோதியின் அப்பா சைகையால் சஞ்சய்யை வாசலிலேயே நிறுத்தி விரலால் விரட்டினார். ஜோதியின் அம்மா சஞ்சயின் வீட்டின் முன்னால் வந்து கத்தி மண்ணை தூற்றினாள். சஞ்சயின் அம்மா செய்த சமாதானங்கள் அந்த அம்மாவிடம் எடுபடவில்லை. குடியிருப்பே அல்லோலப்பட்டது. இதெல்லாம் வேண்டாம் என சஞ்சயின் அப்பா ஏற்கெனவே எச்சரித்திருந்ததால் அவர் எதுவுமே பேசவில்லை. சூழல் கொஞ்சம் அமைதியான போது சஞ்சய் எப்படியாவது ஜோதியிடம் பேசிவிட முயற்சித்தான். ஜோதி அவள் வீட்டின் பின்புறம் தெரிந்தாள். சைகையில் ஏதேதோ சொன்னாள். சஞ்சய்க்கு எதுவும் புரியவில்லை. மாசத்திற்கு ஒருநாள் இருக்கும் மௌனவிரதம். சஞ்சய் வெறுத்துப் போனான்.

ஜோதி வாசலில் கோலம் போட விடிகாலையில் வருவாள். பேசிவிடலாம். சஞ்சய் அலாரம் வைத்து எழுந்துப் போய் பார்த்தான். ஜோதியின் வீடு பூட்டியிருந்தது. சஞ்சய் அதிர்ந்து போனான். அவர்கள் திருநெல்வேலி போயிருக்கும் விஷயம் பிறகு தெரிந்தது. சஞ்சய் பைத்தியம் பிடித்த மாதிரி அலைந்தான். அப்பா வேறு ஊர் மாற்றலுக்கு எழுதிக் கொடுத்திருந்தார். சஞ்சய்க்கு என்ன செய்வதென புரியவில்லை. காட்டிற்குள் போய் மரத்தடியில் அமர்ந்து அழ மட்டுமே முடிந்தது. ஒரு வாரத்திற்குப் பிறகு ஜோதியின் குடும்பத்தினர் வீடு திரும்பினார்கள். ஆனால் ஜோதி வரவில்லை. ஜோதிக்கும் அவளது மாமாவுக்கும் திருமணம் ஆன விஷயம் ஜோதியின் தம்பி மூலம் தெரிந்த போது சஞ்சய்யால் தாங்க முடியவில்லை. காட்டிற்குள் ஓடினான். அரளி விதையை அரைத்துக் குடித்தான்.

சஞ்சய் காப்பாற்றப்பட்டு வீடு திரும்பிய பிறகு விதி மாறாமல் தாடி விட்டான். நண்பர்கள்தான் பேசிப் பேசி அவனை தேற்றினார்கள். சஞ்சயின் அப்பாவுக்கு மீண்டும் கோயம்புத்தூருக்கு மாற்றல் கிடைத்தது. சஞ்சய்க்கும் வேலை கிடைத்தது. சென்னை வந்தான். புதுச்சூழல் மற்றும் வேலையின் பிஸி அவனுக்கு கொஞ்சம் அமைதி தந்தது. கல்யாணமே வேண்டாம் என்றான். பிடிவாதம் இரண்டு வருடம் நீடித்தது. அம்மாவின் தொடர்ந்த வற்புறுத்தலில் பிருந்தாவை பார்த்தான். படித்த பெண். அவளது அமைதி அவனுக்கு ஆறுதலாய் இருக்கும் போலிருந்தது. சம்மதம் என்றான். கல்யாணம் நடந்தது. ஜோதியின் இழப்பு இன்னும் உள்ளுக்குள் அழுத்திக்கொண்டிருந்தாலும் பிருந்தாவுடன் வாழ்க்கை சந்தோசமாய்தான் போய்க் கொண்டிருக்கிறது. சந்தோசத்தின் அடையாளமாய் இதோ தொட்டிலில் மூன்று மாதக்குழந்தை.

“”என்ன பலத்த யோசனையா இருக்கு…” பிருந்தா உள்ளிருந்து குரல் கொடுத்தாள். சஞ்சய் நிதானத்திற்கு வந்தான்.

“”ஒண்ணுமில்ல… ”

“”காப்பி போடட்டா..”

“”ம்..”

இப்போது சஞ்சய்க்கு “”இந்தப் பெயர் பிருந்தாவிற்கு பிடிக்குமா?” எனக் கவலை வந்தது. எப்படி அவளை சம்மதிக்க வைப்பது என்று யோசித்தான். ஒரு வாரமாய் பிருந்தா கோவையில் அவளது தோழிக்கு நடக்கும் திருமணத்திற்குப் போக அனுமதி கேட்டுக்கொண்டிருந்தாள். பச்சைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவ்வளவு தூரம் போக வேண்டுமாயென சஞ்சய் மறுத்துக்கொண்டிருந்தான். அதற்கு சம்மதம் தந்துவிட்டு இந்தப் பெயரைச் சொன்னால் ஒருவேளை பிருந்தா சம்மதிக்க வாய்ப்பு இருப்பதாக சஞ்சய் நினைத்தான். பிருந்தா காப்பியோடு வந்தாள்.

“”பிருந்தா கோயம்புத்தூர்ல எப்போ உன் ஃபிரண்ட் கல்யாணம்.. ” சஞ்சய் மெதுவாய் ஆரம்பித்தான்.

“”வர்ற 5-ந்தேதி இன்னும் மூணு நாளு இருக்கு.. ஏன்..” என்றாள்.

“”சரி போயிட்டு வருவமா..”” என்றதும் பிருந்தாவிற்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. ஓடிவந்து சஞ்சயின் கழுத்தை கட்டிக்கொண்டாள்.

“” பிருந்தா நம்ம செல்லத்திற்கு ஒரு பேரு யோசிச்சு வச்சிருக்கேன்.. நல்லாயிருக்கான்னு சொல்லு..”

“”ம்..சொல்லுங்க..”

சஞ்சய் தயக்கத்தோடு சொன்னான்.

“”ஜோதி.. எப்படியிருக்கு?…”

கேட்டதும் பிருந்தா ஒரு நிமிடம் யோசித்தாள். அவளுக்குப் பிடித்த வேறு பேரைச் சொல்ல போகிறாளோ? சஞ்சய்க்கு கொஞ்சம் பதட்டமானது. என்ன சொல்லப் போகிறாள் என ஒரு எதிர்ப்பார்ப்போடு பார்த்தான்.

“”ஜோதி.. ரொம்ப நல்லா இருக்கு. இதைவிட நல்ல பேர் நம்ம குழந்தைக்கு அமையாது.. நான் போய் துணியெல்லாம் ரெடி பண்றேன்..”சொல்லிவிட்டுப் பிருந்தா வேகமாய் உள்ளே போனாள்.

உண்மையிலேயே இந்தப் பெயர் பிடித்துதான் சொன்னாளா அல்லது ஊருக்கு போக அனுமதி கிடைத்த சந்தோசத்தில் சொன்னாளா சஞ்சய் யோசித்தான். எது எப்படியோ அவள் ஒத்துக்கொண்டது சஞ்சய்க்கு மிக சந்தோசமாய் இருந்தது.

கோவை. காந்திபுரம். ஒரு கல்யாண மண்டபம். பிருந்தாவின் கல்லூரி தோழி அமலாவின் கல்யாணம். கல்லூரியே திரண்டு வந்த மாதிரி நல்ல கூட்டம். பிருந்தாவை பிடிக்க முடியவில்லை. சந்தோசத்தின் உச்சத்தில் இருந்தாள். அவ்வப்போது மட்டும் வந்து குழந்தை அழுகிறதா என்று கேட்டாள். பால் கொடுத்தாள். பிறகு காணாமல் போவாள். சஞ்சய் எதையும் கண்டுகொள்ளவில்லை. சந்தோசமாய் அனுபவிக்கட்டும். அவனே குழந்தையைக் கவனித்துக்கொண்டான். பிருந்தா கல்லூரி நண்பர்களையும் தோழிகளையும் சஞ்சய்க்கு அறிமுகப்படுத்தினாள். குழந்தையை ஆளாளுக்கு தூக்கிக் கொஞ்சினார்கள். காலையில் முகூர்த்தம். இரவே மண்டபம் நிறைந்திருந்தது. கல்யாண சடங்குகள் நடந்தன. ஒரு ஓரமாய் லைட் மியூசிக்கில் புது பாட்டுக்கள். நண்பர்கள் கூடி ஆடினார்கள். விசில் பறந்தது. குழந்தை அழ ஆரம்பித்தது. எத்தனை தட்டிக்கொடுத்தும் அதன் அழுகையை நிறுத்த முடியவில்லை. சஞ்சய் பிருந்தாவை கூட்டத்தில் தேடினான். காணவில்லை. ஒரு தோழியிடம் கேட்டான். மண்டபத்திற்கு பின்னாடி போன மாதிரி இருந்தது என்றாள். தேடிப் போனான். நடக்க ஆரம்பிக்க குழந்தையின் அழுகை குறைந்து சற்று அமைதியானது.

மண்டபத்தின் பின்புறம் வந்தான். பாட்டின் சப்தம் குறைந்தது. லேசாய் குளிரடித்தது. ஒரு விநாயகர் கோயில் தெரிந்தது. பிருந்தா தூரத்தில் மங்கலான வெளிச்சத்தில் தெரிந்தாள். யாரோ ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். அவனுடன் நீண்ட விவாதம் நடக்கிறமாதிரி இருந்தது. சஞ்சய் சட்டென நகர்ந்து தூண் மறைவில் நின்று பார்த்தான். பிருந்தா அழுகிற மாதிரி இருந்தது. சஞ்சய்க்கு அடி வயிற்றில் என்னவோ செய்தது. கூட இருந்தவனும் கண்களைத் துடைத்துக் கொள்வது தெரிந்தது.

“”என்ன சார் அப்படி பார்க்கறீங்க..?”

குரல் கேட்டு சஞ்சய் சட்டென திரும்பிப் பார்க்க கையில் சிகரெட்டோடு ஒருவன் நின்றிருந்தான்.

“”இல்ல.. சும்மாதான் பார்த்துட்டு இருந்தேன்..” என்றான் சஞ்சய் சற்று பதட்டமாய்.

“”இதுல என்ன சார் இருக்கு.. பாருங்க. அவங்க ரெண்டு பேருக்கும் நடந்த மாதிரி வேற யாருக்கும் நடக்கக்கூடாது சார். அவங்க ரெண்டு பேரும் எங்க காலேஜ்தான். ஒரே வகுப்பு. அப்படியொரு காதல் சார். இப்படியொரு காதல் ஜோடிய எங்கயும் பார்க்க முடியாது. எங்க கண்ணே பட்டிருச்சு போலிருக்கு. காலம் அவங்க ரெண்டு பேரையும் பிரிச்சிருச்சு. பிருந்தாவிற்கு அவங்க வீட்ல வேற இடத்தில கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டாங்க.. ஆனா “”ஜோதி,லிங்கம்தான் இன்னும் கல்யாணமே வேண்டாம்னு வாழ்ந்துட்டிருக்கான்.. என்ன சார் வாழ்க்கை.. பேசட்டும் மனசு விட்டு பேசட்டும்..” சொல்லச்சொல்ல அவனுக்கும் இலேசாய் கண் கலங்கியது.

சஞ்சய் உறைந்து போய் நின்றிருந்தான்.

– சரசுராம் (டிசம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *