Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பூவிடைப்படினும்

 

‘தீபா அத்த வந்திருக்குடீ’, அம்மாவின் அழைப்பு.

‘உனக்குத் தான் அழுவாந்தழ அரச்சி எடுத்தாந்தேன் இந்தா வச்சிக்கோ’.'தேங்கா கொழுக்கட்ட சாப்டு அம்மு’ ஒவ்வொருவருக்கும் பாத்துப் பாத்து செய்ய தீபா அத்தையால மட்டும் தான் முடியும். ‘அந்த மனசுக்குத்தான் அவளுக்கு ஒரு கொழந்த கூட இல்லாம உட்டுட்டாரா அண்ணாமலையாரு ‘அம்மாவின் அங்கலாய்ப்புகள்..ஆனா அதுக்கும் அத்த சிரிக்கத்தான் செய்யும்.

அம்மு, நான், அகி, இந்து எல்லாரும் படிக்கும்போது லீவுக்கு அத்த வீட்டுக்கு ஜம்னாமரத்தூருக்கு போகத்தான் விரும்புவோம். அந்த மலை மேல அத்த, கார்த்தி மாமா ரெண்டு பேரும் எங்கள நல்லா கவனிச்சுக்குவாங்க. ஜவ்வாது மலையின் குளிருக்கு அத்தை தரும் பாலில்லா கடுங்காப்பியும்,சுட்ட வள்ளிக்கிழங்கும் மக்காசோளப்பொரியும் எங்கள் விடுமுறைகளை காவியங்களாக்கின.

அத்தை ஒரு சிறந்த கதை சொல்லி.பள்ளியில் தொடங்கி கல்லூரி வரை எங்களுக்கு விதவிதமாய் உலக இலக்கியங்களையே கதைகளாக கூறியிருக்கிறார்கள். .

அம்முவின் வீடடில் தான் அத்தையைக் கடைசியாகப் பார்த்தேன். அதன்பிறகு இப்பதான் அவளின் இறுதிப்பயணத்திற்கு் தான் செல்கிறேன்.

எங்க வீட்டுப் பெண்களிலேயே அத்த மட்டும் கொஞ்சம் வேற மாதிரி.மாநிறம்,அகன்ற விழிகள் ,சற்றே செம்பட்டை நிற கூந்தல் மூக்கு மட்டும் கொஞ்சம் தூக்குனமாதிரி இருக்கும். நல்ல உயரம்,பேரழகி.’அவ மலையாளத்து முஸ்லீமாச்சே அழகாத்தான் இருப்பா’”ருக்கு சித்தி தான் அத்தையின் கதையை சொன்னது..

மாமா வனத்துறையில் ஃபாரஸ்டர்.பயிற்சிக்காக கேரளா சென்ற போது அத்தையை மணந்து கூட்டி வந்திருக்கிறார். அத்தையிடமே நானும் அம்முவும் இது பற்றி ஒன்பதாவது படிக்கும் போதே கேட்டோம்.
சிரித்துக்கொண்டே அத்தை போய்விட்டது.

கல்லூரி வந்த போது நானும் அம்முவும் அத்தைக்கு விசிறிகளாகி விட்டோம்.அத்தையின் பேச்சும் சிரிப்பும், சமையலும் முக்கியமாக எங்களிடம் காண்பித்த நட்பும்….

லீவுகளில் அத்தையின் பின்னாலேயே அலைவோம்… எங்களுக்கு எல்லாந்தெரியும் சொல்லத்தே ,அத்த எப்டி தமிழ் நல்லா படிக்கிறீங்க’”என்ற போது தான் அத்தை சொன்னது ‘ஏன் கவிதா உனக்கு காலேஜ்ல தமிழ் இருக்கு தான குறுந்தொகையெல்லாம் படிப்பியா?’

அணில் பல் அன்னகொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர் சேர்ப்ப இம்மை
மாறி மறுமை யாயினும் நீ ஆகியர் என்
கணவனை யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே”,

“இரண்டாயிரம்வருஷத்துக்கு முன்னாடியும் இங்க காதல இப்பபடித்தான கொண்டாடி இருக்காங்க. முண்டகம்னா நீர்முள்ளிச்செடி..,அதன் முள் போன்ற நிகழ்வுகள் நடந்தாலும் எப்பிறவியிலும் நீ தான் என் கணவன், நானே உன் நெஞ்சுக்கு நெருக்கமானவள்…எத்தனை அழகுணர்வு…அத்தை பரவசமாக சொலுவாள் ..

“நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கும்போது உங்க மாமா ஆழப்புழாவுக்கு ட்ரெய்னிங் வந்தாரு.எங்க வீடு அங்க ஒரு ஜமீன் பரம்பரை.ரொம்ப வசதி. தினமும் காலையில எங்க எஸ்டேட் பக்கத்துல நடக்குற பயிற்சிக்கு வந்த கார்த்திக்கும் எனக்கும் மொழி தெரியாமலேயே விழியில் காதல்.,…

இரண்டு பேரும் பழகுனது தெரிஞ்சு எங்க அப்பா ,அம்மா அண்ணன் எல்லாரும் என்ன அடிச்சாங்க கார்த்திய மிரட்டுனாங்க.அப்ப என் பேரு முபீனா. ‘அந்த பாண்டி நாட்டுப் பட்டியோட போனா நினக்கு ஓர் பைசா கிட்டாது மனசிலாயோ மோளே’ன்னு அச்சன்பறஞ்சு.அப்பல்லாம் கேரளாவில அம்மா வழியில் மகளுக்குத்தான் சொத்து.மருமக்கள் வழி.எனக்கு ஒரு எஸ்டேட்டே இருந்தது.

ஒருநாள் உங்க மாமா எங்கிட்ட சொன்னாரு’”முபீனா எனக்கு வசதி இல்ல .உங்க வீடளவுக்கு பணமில்ல.ஆனா கடைசி வரைக்கும் என் காதலை முழுசா உனக்குத்தர முடியும்.விருப்பமிருந்தா என்கூட வா.” நானும் எங்க வீட்டுல சொல்லிட்டு வந்துட்டேன்.

எனக்கு தீபான்னு பேர் வச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு.கார்த்திக்குப் பொருத்தமா தீபா … திருவண்ணாமலைக்காரரில்லையா?.

இருபத்தஞ்சு வருஷமா அப்டித்தான் இருக்காரு.ஆரம்பத்துல எங்களுக்கு கொழந்த இல்லைனு உங்க பாட்டில்லாம் ‘அவ வேணும்னா இந்த வீட்லயே இருக்கட்டும்.உனக்கு வேற பொண்ணக் கட்றோம்னு சொன்னாங்க’.அன்னிக்கு என்ன பண்ணி இருந்தாலும் என்னால் எதுவுமே செய்திருக்க முடியாது எனக்குனு பேச யாருமே இல்ல.

ஆனா என் கார்த்தி அவங்க அம்மாவ அடிக்க போனாரு.அவ என்ன நம்பி வந்தவ ,இப்ப எனக்கு கொழந்த இல்லன்னா என்ன ?அவ போதும்னு சொன்னாரு.அன்னிக்கு நான் அழுத அழுகை எனக்குத் தான் தெரியும்.ஆனா என் கார்த்தி அத பெருசாவே நினைக்கல.”நீ ஏன்டா அழற.நாம இங்க இருக்கவே வேண்டாம்னு” மலைக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிட்டு என்ன கூட்டிட்டு போய்ட்டாரு.அவர் தான் எனக்கு தமிழ் படிக்கச் சொல்லித் தந்தார்.

நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நிறைவா வாழறோம்.

‘ஏன் அத்த நீங்க திரும்ப கேரளாவுக்குப் போகவே இல்லயா?’

‘என் அம்மா இறந்தப்ப போனோம் .அண்ணன் என் பங்கு எஸ்டேட்ட எழுதி தரேன்னாரு.இருவது வருஷத்துக்கு முன்னயே ஐம்பது லட்சம் சொத்து.ஆனா கார்த்தி எதுவுமே வேணாம்னுட்டாரு.’உங்க அம்மா வளையல மட்டும் வேணும்னா ஞாபகத்துக்கு எடுத்தக்கோ தீபான்னு சொன்னார்.அவரே சொன்ன பிறகு எனக்கென்ன ?. எங்க அம்ம வளையலோட வந்தோம்.அதுக்கப்புறம் போகவே இல்லை.’

‘ஏன் அத்த எப்பிடி எல்லாரையும் விட்டுட்டு வேற மொழி,சாமி,ஊருன்னு இருக்க முடிஞ்சது?’அம்மு கேட்டாள்.

‘ நீங்க கிறிஸ்டியன் காலேஜில தான படிக்கிறீங்க,பைபிள் கதையெல்லாம் தெரியுந்தான,இயேசுவைப் பின்பற்றின மேரி மகதலேனாவை பத்தி தெரியுமா? அவள் அந்த தச்சனின் மகன் மீது கொண்ட காதல் தான் பக்தியாய் வெளிப்பட்டது.இயைசுவைப் போன்ற உள்ஒளி பெற்ற ஒருஆளுமையைப் பின்பற்றுவது நெருப்பைத் தொடர்வது போன்றது.ஆனால் மகதலேனாவின் ஆன்மீகமான காதலே அவளை கல்லறை வரையிலும் ஏசுவைப் பின்தொடர வைத்தது.என் ஆண்டவரே என உரிமையுடன் அவர் பின்னே அலைய வைத்தது.

இது கோதை நாச்சி, ஆண்டாளின் காதல் மாதிரி தான்.நானும் அப்படித்தான் அவர் அன்பைத் தவிர வேறெ எதுவும் எனக்கு தெரியல.

தீபா அத்தை தான் எங்களுக்கு சங்கப்பாடல்களை அறிமுகம் செஞ்சாங்க.

“பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போல பிரிவரிதாகிய” .

நீரில் வாழும் மகன்றிற் பறவைகள் தங்களுக்கிடையே ஒரு பூ வந்தாலும் அப்பிரிவைத் தாங்காதது போன்ற காதல் …என்ன அழகுணர்வு.தமிழைத் தவிர வேறு எம்மொழியில் இதைக்கூற முடியும்…அத்தை சொல்லுவதே கவிதை மாதிரி இருக்கும்.

அத்தையின் மனதே இப்படி ரசனையானதுதான்.மாமாவும் அத்தையும் ஜவ்வாது மலையின் இயற்கையில் கபிலரின் குறிஞ்சித்திணையாகவே வாழ்வை வாழ்ந்தார்கள்.தங்க நிற கொன்றை, செங்காந்தள்,ஆம்பல்,கொட்டி என எங்களுக்கு மலர்களை அறிமுகம் செஞ்சது அத்தையும் மாமாவும் தான்.அந்த ஊர் ஏரிக்கரையில் நடக்கும்போது மாமா எங்களுக்கு நாரையும்,நீர்க்கோழியும் ,தேன் சிட்டுகளையும் காட்டுவார்.அவர்கள் இந்த மரங்களையும் மலைகளையும் போலவே எழிலாகவே வாழ்ந்தார்கள்.

“ஏன் அத்த நீங்க சண்டையெல்லாம் போட்டதில்லையா?”,.,.

அதெல்லாம் இல்லாமலா?அது ஊடல்,அப்டில்லாம் இல்லைன்னா வாழ்க்கை வெறுமையாயிடும்”

அத்தையின் அன்பு என்னேலேயே தாங்க முடியாதது ,மாமா எப்படி அவள் பிரிவைத் தாங்குவார்? , அத்தையின் இறுதிப்பயணத்தில் கார்த்தி மாமா அழவே இல்லை.எங்க வழக்கப்படி எரிக்கனும் என்ற போது தான் அவர் உடைந்ததைப் பார்த்தோம்.”என் தீபாவைப் பொதச்சிடுங்க அவ நெருப்பைத் தாங்க மாட்டா”என்றவர் அத்தையின் கால்களைக் கட்டிக்கொண்டு “தீபாம்மா ஏன்டா என்ன
தனியா விட்டுட்ட”என்று கதறினார்.

யார் கூப்பிட்டாலும் மாமா அந்த ஊரை விட்டு வரவில்லை.

அத்தை இறந்த பத்தாம் நாள் தகவல் வந்ததது “கார்த்தி மாமா இறந்துவிட்டாரென”,

பூவிடைப்படினும்,……,. 

தொடர்புடைய சிறுகதைகள்
“சார்வாள்! சொகமாயிரிக்கீறா?” இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் வள்ளிநாயகத்தின் குரலில் குமரித்தமிழ் கொஞ்சியது. “ஜே எம் எஸ் பஸ்ஸுல என்ன கூட்டம்.நல்ல குளுறு வேற. சமுனாமரத்தூர் எப்படி மாறிடுச்சு. நாப்பது வருசமாயிட்டுல்ல. தம்பி கல்யாணங்கெட்டாமலே இருந்துட்டீக. நம்ம ஊரு பக்கம் ஏதாச்சும் நல்ல ...
மேலும் கதையை படிக்க...
வசு இன்று உனக்கு ஆறாவது கீமோ சிட்டிங்.ட்ரீட்மெண்ட் அறையில் உன்னை விட்டுவிட்டு வெளியில் நிற்கிறேன். இடது கன்னத்தில் எரிகிறது.நேற்று நீ தூக்கி எறிந்த முள்கரண்டி கீறிய வலி.நேற்றிரவு என்னிடம் உக்கிரமாய் சண்டையிட்டாய்.காலையில் ஒன்றுமே நடக்காதது போல குளித்து,எனக்குப் பிடிக்காத ப்ரௌன் வண்ண சுடிதார் ...
மேலும் கதையை படிக்க...
உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் புதரின் மேலெல்லாம் பனித்துளிகள்.ஜவ்வாது மலையின் மடியினில் இருந்த அவ்விடத்துக்குக் காலையிலேயே வந்து விட்டார்கள் கோயிந்தனும்,அனுமனும். அவ்விடத்தின் தனிமையை இன்னும் அதிகமாக்குவது போல இருந்த மஞ்சம்புல் குடிசையின் அருகில் போகிறார்கள்.வீட்டைச் சுற்றிலும் மஞ்சள் காடாய்ப் பூத்திருக்கின்றன எள்ளுச்செடிகள். 'வாடா மனா கோரு.ரவ ...
மேலும் கதையை படிக்க...
ரூபி உனக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு. அன்பு மிக்க ரூபிக்குட்டிக்கு,அன்புடன் அப்பா எழுதுவது..ஆண்டவரின் பெரிதான கிருபையினால் நாங்கள் அனைவரும் நலம்.நம் வீட்டின் முன் புறமெங்கும் ஊதாவும் மஞ்சளுமாய் ஒற்றையிதழ் செவ்வந்தி மலர்களும்,ஒயின் சிவப்பும்,பொன்னிறமுமான டேலியாக்களும்,செந்தூரமும் செம்மண்ணும் கலந்த வண்ணமான மெர்ரி கோல்ட் பூக்களும் ...
மேலும் கதையை படிக்க...
காலை என்பது மலைகளுக்கே உரியது.கோடையிலும் மெல்லிய குளிர் பரவுகிறது.நேற்றிரவு பெய்த கோடை மழை புற்கள் செடிகள் முட்கள் என எல்லாவற்றிலும் பனித்துளிகள் போல ஒளிர்கிறது. ரோஜாவும்,செவ்வந்தியும், யானைக்காது போன்ற சேம்பிலைகளும் நீர்த்துளிகளுடன் காலை சூரியனில் மின்னுகின்றன. கையில் தேநீருடன் நின்றேன்.அவள் வருமுன்னே என்னால் உணரமுடிகிறது.பூவும்,பௌடரும் ...
மேலும் கதையை படிக்க...
செம்பக வனம்
விசும்பின் துளி
தேன்
பார் மகளே பார்!
வேழம்

பூவிடைப்படினும் மீது ஒரு கருத்து

  1. venkatesan parasuraman says:

    Excellent

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)