புதுமைப் பெண்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: September 18, 2019
பார்வையிட்டோர்: 39,130 
 

செல்வியை அவளது அப்பா ஒரு புதுமைப் பெண்ணாக வளர்த்திருந்தார் . அதற்கு ஏற்றாற் போலவே அவளும் இலக்கணம் மீறிய கவிதை போல் வளர்ந்து இருந்தாள். ஆண்கள் தன்னிடம் நட்பாக பழக வேண்டும் என்றே விரும்பினாள் அன்றி காதல் கத்தரிக்காய் என்று எல்லாம் உளறக் கூடாது என்பதில் அவள் மிகப் பிடிவாதமாக இருந்தாள்.அப்படி அணுகும் ஆண்களை அவள் புறக்கணித்து வந்தாள். ஆனால் அவள் எவ்வளவு கண்டிப்பாக இருந்தாலும் அவளுடன் பழகும் ஆண்கள் அவள் அழகை ரசிக்கத்தான் செய்தார்கள்.அதற்கு ஏற்றாற்போல அவளது அங்கங்களும் செழித்து கவர்ச்சியாக வளர்ந்திருந்தன.

அவள்பல்கலைக்கழகத்தில் இருந்து விலகிய கொஞ்ச காலத்திலேயே அவளுக்கு வேலை கிடைத்து விட்டது. அவள் காட்டிய திறமை காரணமாக நிறுவனத்தின் மனித வள அபிவிருத்திப் பிரிவின் முகாமையாளராக பதவி உயர்வு பெற்றாள் .இதனால் அவள் பல்வேறுபட்ட மனிதர்களுடன் தனது தொழில் நிமித்தமாக பழக நேரிட்டது. அத்தகையவர்களில் ஆண்களே அதிகமாக இருந்தார்கள் . அவள் வேலை செய்த நிறுவனத்துக்கு வேலைக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு வருபவர்களை நேர் கண்டு பரிசீலனைக்கு உட்படுத்தி தகுதி கண்டு உரியவர்களை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதே அவளது கடமையாக இருந்தது . இதனால் அவள் புதுப்புது அனுபவங்களைப் பெற்றாள்.

அங்கிருந்தவர்களில் அவளுடன் அதிகமாகப் பழகியவன் ஸ்ரீ சந்திரன் என்பவன் தான். அவனை அவள் ஸ்ரீ என்றே அழைப்பாள். அவனுக்கும் அது பிடித்துத்தான் இருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து வேலை நிமித்தம் ஒரு முறை வேற்று ஊருக்குப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது. அவர்களுக்கு பரிச்சயமானவர்கள் அந்த ஊரில் இல்லாதிருந்ததால் அவர்கள் இருவரும் மிக நெருங்கி பழக வேண்டிய சந்தர்ப்பங்கள் அதிகம் ஏற்பட்டன . ஒன்று சேர்த்து சாப்பிடுவது, ஒன்று சேர்ந்து தேநீர் அருந்துவது, எதுவும் வேலை இல்லாதபோது இருவரும் சேர்ந்து பேசிக்கொண்டு இருப்பது இப்படி எல்லாம் நெருங்கி பழகும் வாய்ப்பினை அந்தப் பிரயாணம் அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தது.

அப்போதுதான் செல்விக்கு அந்த சந்தேகம் ஏற்பட்டது . அவன் தன்னுடன் கூட நெருக்கமாக பழகுகின்றானோ என்ற சந்தேகம் மெது மெதுவாக வலுக்க ஆரம்பித்தது .அதன் பிறகு அவள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட ஆரம்பித்தாள். சந்திரனால் உணர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு அவள் சூக்குமமாக ஒரு அடி தள்ளியே பழகினாள் . என்னதான் செல்வி அந்த விடயம் தனக்கு விளங்காது என்று நினைத்தாலும் ஸ்ரீ சந்திரனால் அவளின் நடத்தையை புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவன் அதிர்ச்சி அடையாவிட்டாலும் அவன் மனம் எரிச்சல் அடைந்தது . ஏற்கனவே சந்திரனின் மனதில் ஒரு ஓரத்தில் அவளுக்கென ஒரு மெல் உணர்வு தோன்றி இருந்தது . அதை அவன் அவளுக்குக் காட்டிக் கொண்டிருக்கவில்லை . என்றாலும் இப்போது அதுவே அவளுக்கு எதிரான வெறுப்பாக மாறியது . அவனும் அவளுடன் ஓரடி தள்ளி பழக ஆரம்பித்தான்.

ஒருவாறு அவர்களது வெளியூர் பயணம் முற்றுப்பெற்றது. அவர்கள் இருவருமே மனதுக்குள் சந்தேகங்களுடனும் , விஷமங்களுடனும், ஆதங்கங்களுடனும் வேற்றூர் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். சந்திரனின் நடத்தைகளில் இருந்து தான் சந்திரன் மீது சந்தேகம் கொண்ட விடயம் அவனுக்கு புரிந்து விட்டது என்பதை செல்வியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அந்த கணத்தில் இருந்து அவள் மனதில் ஒரு குற்ற உணர்வு குடி புகுந்து கொண்டு விட்டது . இரண்டு நாள் கழித்து அவள் அலுவலகத்திற்கு சென்ற போது ஏனோ சந்திரனின் முகத்தை அவளால் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை. சந்திரனும் அவளை ஓரக்கண்ணால் கவனித்து விட்டு மௌனமாக இருந்து விட்டான் . அவளது அந்த செயல் அவனுக்கு தன் மீது சந்தேகம் ஏற்பட்டு விட்டது என்ற குற்ற உணர்வை அவளுக்கு மீண்டும் ஒரு முறை குத்திக் காட்டியது.

இத்தனை காலமும் சிரித்த முகத்துடனும் சுறுசுறுப்புடனும் கலகலப்பாகவும் காணப்பட்ட அவள் கப்சிப் என்று அடங்கிப் போய் விட்டாள் . சந்திரன் விடயத்தில் தான் ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்பது அவளால் நம்ப முடியாமல் இருந்தது . சில நாட்களாக இந்த உணர்வு ஆழ்மனதை குடைந்து சித்திரவதை செய்ய ஆரம்பித்தது . அவள் உடலில் சூடு அதிகரித்து அது பின்னர் காய்ச்சலாக மாறியது . தலை சுற்றும் வாந்தியும் ஏற்பட்டு அவள் படுக்கையில் விழுந்தாள். வீட்டில் இருந்தவர்கள் அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனார்கள். மருத்துவர் அவளை பரிசீலனை செய்து பார்த்து மருந்து மாத்திரைகள் கொடுத்த போதும் அவற்றினால் அவளது உடல் உபாதை குணம் ஆனதே தவிர அவளுக்கு ஏற்பட்டிருக்கும் மனநோயை அவற்றால் குணப்படுத்த முடியவில்லை . அவள் பதினைந்து நாட்கள் அலுவலகத்துக்கு லீவு போட்டுவிட்டு வீட்டில் இருந்தாள்.

அவளது தோழிகள் சிலர் அவளை வீட்டில் சென்று பார்த்தனர் . அவள் ஏன் இப்படி வாடி வதங்கிப் போய் விட்டாள் என்று அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவள் இருந்த நிலை தொடர்பில் அலுவலகத்திலும் செய்திகள் பரவியிருந்தன. இந்த விடயம் ஸ்ரீ சந்திரனின் காதிலும் விழுந்தது . அவன் மனதில் பலத்த யோசனை எழுந்தது.

அவன் தன் மனதில் ஏதோ சோகம் பரவுகின்ற உணர்வை உணர்ந்தான். அவன் மனதையும் ஏதோ ஒன்று குத்தி கசக்கிப் பிழிய ஆரம்பித்தது . அவன் கண்களுக்குள் செல்வியின் தோற்றம் தோன்றித் தோன்றி மறைந்தது . செல்வியின் நினைப்பு தனக்குள் ஏன் சோகத்தை ஏற்படுத்துகிறது என்று அவன் மீண்டும் மீண்டும் வலிந்து யோசித்தான். அவனாலும் தன் நிலையை சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை . பின் ஒரு வழியாக செல்வியை சென்று பார்ப்பது என்று முடிவு செய்தான்

அவன் செல்வியை பார்க்க வரும் செய்தியை அவளுக்கு சொல்லி அனுப்பினான் . அந்த செய்தி அவள் காதில் விழுந்ததுமே அவள் உடலில் ஏதோ தெம்பு ஏற்படுவது போலிருந்தது . தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய்க்கு அவன் தான் காரணம் என அவள் உடனேயே புரிந்து கொண்டாள் . அவன் வந்ததும் தன் மனதில் உள்ளதை எல்லாம் அப்படியே கொட்டித் தீர்த்துவிட வேண்டும் என்று அவள் நினைத்தாள் . தனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோய்க்கு அவன் மீதான காதல் தான் காரணம் என்பதையும் அவள் புரிந்து கொண்டாள். தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதும் அவள் மனதுக்கு விளங்கியது . அவள் அவன் வருகையை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தாள்.

சந்திரனும் அவளுக்கு பரிசளிக்கவென இரணடு புறாக்கள் முத்தமிட்டு சல்லா பித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறிய பளிங்கு சிலையை வாங்கிச் சென்றான். அவனைக் கண்டதுமே செல்வியின் முகம் அன்றலர்ந்த ஆம்பல் போல் பளிச்சிட்டு மின்னியது . அவன் தான் கொண்டு வந்த பரிசுப் பொருளை அவளது கைகளில் திணித்தான். அவன் கொண்டு வந்திருந்த அந்த பரிசுப் பொருளே அவன் தன்னிடம் என்ன செய்தியை சொல்ல வந்திருக்கிறான் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது . அவர்கள் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு நீண்ட நேரம் சமைந்து இருந்தனர் . அவர்கள் இருவர் கண்களிலும் சில நீர்த்துளிகள் உருண்டோடின . அவர்களை தொந்தரவு செய்ய அங்கு யாரும் இருக்கவில்லை.

Print Friendly, PDF & Email

2 thoughts on “புதுமைப் பெண்

  1. அழகான வரிகளோடு அமைதியாக ஆரவாரமின்றி கதையை முடித்தது சிறப்பு. கதையின் ஒவ்வொரு வரிகளையும் இரசிக்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *