பிரியாத மனம் வேண்டும்.

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 10,327 
 

ஆபீசில் வேலையில் மனம் லயிக்கவே இல்லை அனுலாவிற்கு.

கீபோர்டில் மானிட்டரில் மௌசில் என்று பார்த்த இடத்திலெல்லாம் அவன் முகம் வந்து அவளைப் பாடாய்ப் படுத்தியது.

அபிஜித்தின் நினைவு மனதில் அலை அலையாய் வந்து மோதிற்று. அவனைப் பிரிந்த இந்த சிலமணிநேர அவஸ்தையைத் தாங்க இயலாதவளாய் தவித்தாள். நகம் கடித்தாள். துப்பட்டாவை இடது தோளுக்கும் வலது தோளுக்குமாய் மாற்றி மாற்றிப் போட்டுப்பார்த்தாள். கைப்பையைத்திறந்து அவனது நினைவாய் அவனிடமிருந்து பெற்றுக் கொண்ட பேனாவை எடுத்து கன்னத்தோடு சேர்த்து அழுத்திக் கொண்டாள்.

‘இண்டர்வ்யூவில் இருப்பேன் நாள் முழுவதும் மொபைலில் தொடர்பு கொள்ள வேண்டாம் அனு ப்ளீஸ், எல்லாம் நல்லபடியாய் முடிந்ததும் நானே உன்னை அழைத்துப் பேசுகிறேன்?’

புறப்படும் முன்பு அபிஜித் அவளிடம் இப்படி சொல்லிப்போயிருந்ததால் அவனுடன் செல் போனிலும் ஒரு சொல் பேச இயலாத நிலமை.

‘மை டியர் லவ்லி ராஸ்கல்! இண்டர்வியூக்கு பெங்களூர் போனபோது என் மனசையும் சேர்த்து எடுத்துட்டுப்போயிட்டியாடா? காதல் என்றால் பெரும் அவஸ்தையென்று பாட்டில் கேட்ட போது சிரிப்பாய் வந்தது ஆனால் இப்போ நான் படும் அவஸ்தை சொல்லி மாளாது அபிஜித். இனி உன்னைப் பிரிந்து என்னால் ஒரு நிமிஷம் கூட இருக்கமுடியாது. நீ சொன்னமாதிரி சீக்கிரமே நாம் கல்யாணம் செய்துக்க வேண்டியதுதான்.’

அபிஜித்!

அவனை ஒரு இனிமையான மாலை நேரத்தில் முதன் முதலில் சந்தித்ததை அனுலா நினைத்துப் பார்த்தாள்.

தாஜ் ஹோட்டலில் ஒரு ஓவியக் கண்காட்சி.

மழை சுமந்து கொண்டு வரும் மேகக்கூட்டம், கழனியிலிருந்து தலையில் பானையுடன் இளமைச்செழுமையான காலழகும் மேலழகும் கொண்டவளாய் ஒரு கிராமத்துப்பெண், இடுப்பை சற்றே ஒடித்து பின்புற உருவம் மட்டும் காட்டியபடி கொடியில் பூப்பறிக்கும் மங்கை என்று விதம் விதமான ஓவியங்கள் காட்சியாய் வைக்கப்பட்டிருந்தது.

அனுலா ரசித்துப்பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் யாரோ தன் முதுகுக்குப் பின்னே அருகில் நிற்பதை மூச்சுக் காற்றில் உணரமுடிந்த அனுலா சட்டெனத் திரும்பினாள்.

மாதவனின் குறும்புத்தனமான முகத்துடன் ஆறடி உயரத்தில் அழுத்தமான உதடுகளில் அழகான ஒரு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் இருபதுகளின் இறுதியில் இருக்கலாமென வயதைச் சொல்லகூடிய இளைஞன் ஒருவன்.

தன்னை ஏறிட்டவளிடம் சினேகமாய்.’ஹலோ?’ என்றான் அவன்.

‘யார் நீங்க எனக்கு ஏன் ஹலோ சொல்றீங்க. முன்னே பின்னெ தெரியாதவங்க கிட்டல்லாம் நான் ஹலோ சொல்ல முடியாது ஸாரி..’ என்று வழக்கமாய் வேறு ஒரு இளைஞனாயிருந்தால் சீறி இருப்பாள், ஆனால் இப்போது அவனுடைய வசீகரப் புன்னகையில் அனுலா மனதை தன் வசமிழப்பதை உணர்ந்தாள்.

மௌனமாய் கன்னங்களில் ரூஜ் தடவாமலே சிவப்பு நிறம் படர வெட்கப்பட்டாள். மென்மையாய், ‘ஹலோ’ என்றாள்.

‘ஓவியம்னா பிடிக்குமா ரொம்ப?’ அவன் கேட்டான்.

அந்தக் குரல் நெஞ்சை ஊடுருவிச் சென்றது. என்ன குரல் இது, பாடும்போது ஹரிஹரனிடம் உள்ளதுபோன்ற ஹஸ்கி வாய்ஸ்!

‘ஹேய் ஐ லைக் இட்’

மனது பட்டாம்பூச்சியாய் சிறகடித்தாலும் பாழாய்ப் போன வெட்கம் பேசவிடாமல் தடுத்தது.

‘எனக்கும் ரொம்ப பிடிக்கும் அதிலும் இயற்கை அழகை இப்படி நெருங்கி நின்று ரசிப்பது ரொமப ரொம்பவே பிடிக்கும்!’ அவன் தொடர்ந்து பேசவேண்டுமெனப் பேசியதாகத் தெரியவில்லை, ஏனெனில் அவன் கண்கள் ஓவியத்தின் மீது அழ்ந்த ரசனையுடன் பதிந்திருந்தது.

‘உம்’ என்றாள் என்ன பேசுவதென்று தெரியாமல் அல்லது பேச முடியாமல்.

கம்பன் சொன்னதெல்லாம் உண்மைதானோ கண்ணொடு கண் நோக்கும்போது வாய் ஊமையாகித்தான் போய்விடுமோ?

சே என்ன இது? இதுதான் காதலா, இதுதானா இதுதானா?

கஷ்டப்பட்டு யாரோ வரைந்திருக்கலாம் அவரை கௌரவிக்கும் பொருட்டோ அல்லது ஊக்குவிக்கிறதிரியோ ‘ஓவியம் நன்றாக இருக்கிறதாய் ஒரு வார்த்தை பாராட்டக் கூடாதோ?’

அவன் இப்படிக் கேட்டதும் அனுலா சிரித்துவிட்டாள்.

இப்படித்தான் வம்புக்கு இழுப்பதுப்போல இந்த ஆண் வர்க்கம் பேசத்தொடங்கும். மெல்லக் காதல் வலை விரிக்கும். மு மேத்தா கவிதை வரிகளைப் போல விரித்தவர்களே அகப்பட்டுக் கொள்ளும் விசித்திர வலை அல்லவோ இந்தக் காதல்?

ஆண்களின் இந்த சாகசமெல்லாம் பெண்களுக்கு ஒன்றும் தெரியாமல் இல்லை. அவைகள் பெண்களால் ரசிக்கப் படுவதால்தானே இலக்கியக் காலத்திலிருந்து இன்னமும் அது தொடர்கிறது?

அனுலா உதட்டில் புன்னகை தவழ,’ஒரு வார்த்தை என்ன ஓவியர் மட்டும்இப்பொ என் எதிரில் இருந்தால் கை குலுக்கி பெருமையாய் பல வார்த்தை பாராட்டாய் சொல்வேன்” என்றாள்மகிழ்ச்சியாய்.

‘அப்படீன்னா சொல்லிடுங்க .என் பெயர் அபிஜித். இந்தக் கண்காட்சியில் இருக்கிற ஓவியங்களைக் கிறுக்கியவன் நான் தான்!” என்றான்

அனுலா நம்பமுடியமல். ரியலீ?’ என்று கேட்டதும்,

‘ஆமாம் ஏன் சந்தேகமா? ஓவியர்னா தாடிமீசை பரட்டைத்தலை ஜோல்னா பை என்கிற காலமெல்லாம் போயிந்தி, இட்ஸ் கான், போயே போச் மேடம்!’ எனக்கூறி சிரித்தான் அபிஜித்.

அப்போதுதான் அவனை கூர்ந்து கவனித்தாள் அனுலா.

மெரூன் கலர் சூட்டில் சிவப்பு ஸில்க் டையில் ஜெல் படிமத்தில் அடங்கிய அடர்த்தியான தலை முடியில் உயரமும் ரோஜாநிற உடலுமாக நின்றவனை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டாள்.

‘எக்ஸெலெண்ட் பெயிண்டிங்க்ஸ்! கை கொடுங்க பாராட்டிட்றேன்?’

இருவர் கைகளும் இணைந்த அந்தப் பொழுதில் மனங்களும் இணைவதை இருவராலுமே உணர முடிந்தது.

எனக்கும் ஓவியம் வரைவது பிடிக்கும். தஞ்சாவூர் பெயிண்டிங்க்ஸ் செய்திருக்கிறேன் ஆனால் உங்களைப்பொல இத்தனை தத்ரூபமாய் எனக்கெல்லாம் வரைய வராது. இது கடவுள் உங்களுக்கு அளித்த வரம். பை தி வே ஐயம் அனுலா. சா·ப்ட்வேர் ப்ரோக்ரமர். வேலை நேரம் போக மீத நேரத்தில் என்னை அடையாறு ஆர்ட்ஸ் ஸ்கூலில்தான் பார்க்கலாம். இதுபோல ஓவியக் கண்காட்சி எங்கெ நடந்தாலும் ஓடி வருவேன் பார்ப்பதற்கு. சாதாரணமாய் ஓவியர் யாரையும் நேரில் சந்திச்சதே இல்லை. இன்னிக்கு ஓவியரே என்னைப்பார்த்துப் பேசினதில் ரொம்பவே திணறிப் போயிருக்கேன்.

அந்த வகையில் இன்னிக்கு எனக்கு லக்கிடே!’

‘அனுலா! உங்க ஓவியத்திற்கெல்லாம்,’ஒரு ஓவியம் வரைந்த அழகு ஒவியங்கள்’ அப்படீன்னு தலைப்பு கொடுக்கலாம்’

‘ஓவியத்தை பார்க்காமலேயே தலைப்பெல்லாம் கொடுப்பீர்களோ?’

‘உங்களைத்தான் பார்த்துவிட்டேனே போதாதா? சித்திரம் பேசுதடீ….ஒரு பழைய பாட்டுதான் இப்பொ நினைவிற்கு வருகிறது?’

அபிஜித் இப்படி அவள் அருகில் கிசுகிசுப்பாய் சொன்னதும் அனுலாவின் காதுமடல் சிவந்துபோனது. இந்த இருபத்திமூன்று வயதிற்குள் எததனையோ ஆண்களிடம் பேசிய போதெல்லாம் ஏற்படாத ஒரு இனிய உணர்வு இப்போது உடலில் புகுந்து பாடாய்ப் படுத்துவதை உணர்ந்தாள்.

காதல் சின்னமாகிய தாஜ்மஹலின் பெயர் கொண்ட ஒரு ஹோட்டல் வளாகத்தில் அன்று ஜனித்தகாதல் ஆயிற்று ஒருவருடமாய் ஆலமரமாய் வளர்ந்தும்விட்டது.

அபிஜித் நேற்று பெங்களூர் புறப்படும் முன்பு அனுலா கேட்டாள். ‘அபி, நம்ம காதலை கிராமத்திலிருக்கும் உங்க அம்மாக்கு தெரிவிச்சீங்களா? கலயாணத்துக்கு அவங்க சம்மதம் சொல்லிட்டாங்களா?’

‘அம்மாக்கு நான் பன்னிரண்டு வருஷம் கழிச்சிப் பிறந்த தவப்புதலவன். அப்பா இல்லாமல் கிராமத்தில் அம்மா என்னைத்தனியே கஷ்டப்பட்டுப் படிக்க வைத்தவங்க..என்மேல அம்மாவுக்குப் பிரியம் அதிகம் என் பேச்சுக்குக் குறுக்க நிக்க மாட்டாங்க அனுலா..’

‘எனக்கென்னவோ நமம் காதல் நிறைவேறுமான்னு பயமாவே இருக்கு அபி’

‘ஏன் அப்படி? உன் சைடு உனக்கு ஒரே ஒரு சித்தப்பாதான் அவர் சரின்னு சொல்லிட்டார் அப்புறம் என்ன? காதல் பத்தி வைரமுத்து என்ன சொல்லிருக்கார் தெரியுமா?’

‘என்ன?’

‘இதய ரோஜாச்செடியில்
இந்த
ஒற்றைப்பூ
பூத்துவிட்டால்
அத்தனை முட்களும்
உதிர்ந்து போகின்றன’

அதனால கவலை வேண்டாம் என் தேவதையே! கைபிடிப்பேன் பெங்களூர் சென்றுவந்து நான் உன்னையே!’

‘ஹேய் போங்க உங்களுக்கு எப்போதும் கிண்டல்தான்…எதிர் காலம் பற்றி நிகழ்காலத்துலதான் ரொம்ப சிந்திக்கணும் அபி’

‘சரி நீ சிந்திச்சி முடி, நான் இண்டர்வியு முடிச்சி வந்துடறேன் அப்புறமா சிந்தனை செய்மனமே கிடையாது எல்லாம் செயல் தான் கண்ணே!’

ஹேய் யூ நாட்டீ!’

சிரித்தபடி விடை பெற்றூப்போன அபிஜித் திரும்பி வந்தபோது சீரிய சாய்த் தெரிந்தான்.

வழக்கமான குறும்புத்தனம் மறைந்திருந்தது, அனுலாவைக் கண்டதும் விரல்களை ஆசையுடன் பிடித்து இறுக்கி அவள் ரத்தஓட்டத்தைக் கிளுகிளுக்க வைத்து அவளைப் பரவசத்தில் ஆழ்த்தாமல் அமைதியாய் இருந்தான்.

அனுலா கலக்கமாய், ‘என்ன ஆச்சு ?’ என்றதும் மௌனமாய் ஒரு கடிதத்தை நீட்டினான்.

அனுலா குழப்பமாய் அதை வாங்கிப் படிக்க ஆரம்பித்தாள்.

“அன்பு மகன் அபிஜித்,

உன் கடிதம் கிடைதது.
அனுலா என்ற பெண்னை நீ காதலிப்பதாயும் கல்யாணம் என்றால் உனக்கு அவளோடுதானென்றும் எழுதி இருக்கிறாய்.

அபிஜித்!. உன் அப்பா உனது இரண்டாவது வயதில் இறந்தது முதல் இன்றுவரை நமக்கு பலவிதத்திலும் உறுதுணையாயிருக்கும் உன் மாமா – என் அண்ணன் – மகள் ஆரத்தி தான் உனக்கு மனைவி என்று என்றைக்கோ நான் என் அண்ணாவிடம் வாக்கு கொடுத்துவிட்டேன். ஆரத்தியும் உனக்காக இங்கே கிராமத்தில் படிப்பை முடித்துக் காத்திருக்கிறாள். வளர்த்தவர்களுக்கு நான் உன் மூலமாக இப்படி நன்றிக்கடன் செலுத்த நினைத்த என் எண்ணத்தில் மண்ணைப் போட்டுவிடாதே மகனே. காதல்தான் பெரிதென்றால் என்னைவிட்டு நீ பிரிந்து போனதாக ஆகுமடா. என்னை பிரிய உன் மனம் இடம் தருமா. யோசிப்பாயா அபிஜித்?

என் வாக்கு பெரிதா உன் காதல் பெரிதா ? இதை நீயே முடிவு செய்து கொள். உனது நல்ல பதிலுக்குக் காத்திருக்கும்

உன் அம்மா ”

படித்ததும் அனுலா அதிர்ச்சியுடன். ‘அபிஜித்? என்ன செய்யபோறீங்க?’ என்று கேட்டாள் அவள் கண்கள் கலங்கிவிட்டிருந்தன.

அபிஜித் அவசர அவசரமாய் அவள் கண் நீரை தன் விரல்களால் தட்டிவிட்டபடி, ‘அனு அழாதே நீ இல்லாத வாழ்க்கை என்னால் நி¨னைச்சிப்பார்க்க முடியாதுடா. அம்மா இப்படில்லாம் என்னைக் கேட்காமல் அவங்க அண்ணாக்கு வாக்கெல்லாம் கொடுத்திருக்கவேகூடாது, இப்படியெல்லாம் நான் சினிமாலதான் பாத்ருக்கேன். இப்போ என் வாழ்க்கையிலேயே இப்படி ஒரு சம்பவம் நடக்க நேரிடும்னு சத்தியமா நான் நினைச்சேப் பார்க்கலை. அனுலா ! நான் அம்மாவுக்கு இப்போவே லெட்டர் எழுதபோறேன் ‘அம்மா எனக்குக் காதல்தான் பெரிது உங்க மகன் உங்களை விட்டுப் பிரிஞ்சி போனதாகவே நீங்க நினைத்துக் கொள்ளலாம்’ அப்படீன்னு.” என்றான் உறுதியான குரலில்.

“உங்களைவிட்டுப் பிரிந்து..”

அபிஜித் என்ன சொன்னார் பிரிவதா அதுவும் பெற்ற தாயையா ?

பிரிதல் பிரிந்து இருத்தல்…
இவ்விஷயம் அபிஜித்தின் தாயை எப்படிக் கொல்லும்?

ஒரே வருடப் பழக்கத்தில் இந்த காதல் என்ற சொல், என்னைப் பிரிவுத்துயரத்தை ஆழ்த்தியது நிஜம். அபிஜித் பெங்களூருக்குப் பிரிந்து ஒருநாள் போனபோது அதுதான் எத்தனை வேதனையைத் தந்தது ? தன் ரத்ததை பாலாக்கி ஊட்டி பல வருஷம் வளர்த்த ஒரு தாய்க்கு காதலுக்காய் மகன் தன்னை விட்டுப்பிரிவது என்பது எத்தனை அவஸ்தையாயிருக்கும்? ரத்தமும் சதையுமான தன் மகனை உயிரோடு ஒரு தாய் பிரிவதற்கு நான் காரணமாகக்கூடாது.

அனுலா ஒரு முடிவுடன் அபிஜித்தை ஏறிட்டு சொல்ல ஆரம்பித்தாள்.

– பெப்ரவரி 10, 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *