Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

நியந்தாவின் வண்ணங்கள்

 

காடென்பது சிறகாகிறது. வெற்றிடங்களில் வீசும் காற்றின் கண்களில், கைகளில் பட்டு, பரவசமாகும் உயிர்களில் கோடி யுகம் சுகமாகிறது….காண காண விரியும் சிறகுகளில் காண்பதே கவிதையாகும். மாயங்கள், காடுகளில் சாத்தியம். காடு காணாமல் போகும் கண்களில் அவளும் அவனும், தீரவே முடியாத தேடலுடன், இனம் புரியாத திசைகளை வெறுத்து மனம் அறியாத திசை நோக்கி பயமா.. பரவசமா…. என்றறியாமல், அர்த்தம் வேண்டாத பாதங்களை சிறகுகளாக்கி பறப்பதாய் நடந்து கொண்டிருந்தார்கள். காடென்பது தனி உலகம். அங்கே, கனவுகளின் தேடல் மரங்களாகவும், மலைகளாகவும் உயிர்களின் உலாவல்களாய் உருமாறிக் கிடக்கின்றன….உடல் நனைத்த வியர்வைகளை பனித்துளியாய் மறையச் செய்யும் காடுகளின் கோடுகளில் வண்ண வண்ண ஓவியங்களை அவர்களின் கண்கள் காட்சிகளாக்கி சென்றன….

அவர்கள் ஒருவரையொருவர், பார்த்துக் கொண்டார்கள். பேசிக் கொண்டார்கள். விரல் கோர்த்துக் கொண்டார்கள். விதி மாற்றம் கொண்டார்கள். எட்டிக் குதித்தால் பிடித்து விடலாம் போல நீல வானமும், துளி இல்லா மழை தூவின….நிறம் இல்லா நிலையான வானவில், பாதைகளாகின……

காதலில் எல்லைகள் ஏது..? அங்கு எல்லாமே சாத்தியம். பேச்சுக்கள் மொழிகள் தாண்டின. புரிதல்கள் பேச்சுக்கள் தாண்டின. தீண்ட தீண்ட, தேனீக்கள் தேனாகும் வித்தைகளை தீண்டி, தீண்டாத இடைவெளியில் காடு முழுக்க பற்றி எரியச் செய்யும் காட்டுத்தீயின் இரு முனைகளை குளிர்ந்த நீரில் எரியச் செய்து கொண்டிருந்தார்கள் இருவரும்…….

ஆதித்யா ஆதியானான். நியந்தா நிஜம் தந்தாள் …..ஒரு நாளில் ஒரே பெயரானார்கள். தனித் தனி பெயர் எதற்கு என்று காதல் என்ற ஒற்றைப் பெயரில் பயணித்த இருவரின் வழியிலும் உள்ள மைல் கற்களில் ஆளுக்கொரு கடவுள் கண்டார்கள். ஆளுக்கொரு ஜாதி கண்டார்கள். ஆளுக்கொரு சமுதாயத் தகுதி கண்டார்கள். மிரண்டார்கள். மௌனித்தார்கள். தோள் சாய்ந்து கொண்டார்கள். வழி மாற்றினார்கள். உள் நோக்கி பயணிக்கத் தொடங்கினார்கள். அது, காதல் தேசத்திற்கான வழி. அந்த வழியெங்கும் பூத்துக் குலுங்கிய மரங்களும் மலைகளும் கடவுளாய் ஒளி வீசின….அவர்கள் புன்னகைத்துக் கொண்டார்கள்…. விழி மாற்றிக் கொண்டார்கள். அவன் விழியில் அவள் காட்சி…… அவள் விழியில் அவன் சாட்சி….

பிறவிக்கான அர்த்தம் உணரச் செய்த காதலைக் கொண்டாடினார்கள். பாயும் ஒளி நீ எனக்கு என்றான் அவன்……. பார்க்கும் விழி நீ எனக்கு என்றாள் அவள்…..பாரதியை வம்புக்கிழுத்தார்கள்……கனவில் வாழ்த்திப் போனதாக இருவருமே கூறினார்கள்…..ஒரே கனவு இருவருக்குமா?!…..அறிவியலில் கிடைக்காத அர்த்தம் காதலில் உண்டுதானே…! என்று கட்டிக் கொண்டார்கள். அலைபேசி அணிலானது….. குறுஞ்செய்தி குதூகளித்தது…..கண் சிமிட்டி எழுப்பினாள்… கன்னம் கிள்ளி தாலாட்டினான்…..முகப் புத்தக உரைகள்- வரம் வந்தது…கலீல் ஜிப்ரானின் வரிகள்- தவம் தந்தது…..

தேடுவதும், தொலைவதும் பகலும் இரவும் போல…. பகலும் இரவும் அவளும் அவனும் போல…… பகலாகிட அவனும், இரவாகிட அவளும் பயணிக்கும் நேர்க்கோட்டு சந்திப்பில் பிரிவென்பதோர் நரகத்தில் உழன்றார்கள்…

உரிமையில், கணவா….! என்று, சொல் கடித்து கண் அடித்தாள்.. உண்மையில் மனைவி என்றே வில் கொண்டு கண் வளைத்தான்…காதல், சொல்லாமல் சொல்லியது. துள்ளாமல் துள்ளியது. உயிர் மாறி, உடல் தேடியது. உணர்வாகி மடல் பாடியது…..

அதிகாலைத் தென்றலில், அலங்கோல வாசல் ஒன்று தலை விரித்தாடியது…. தவம் கலைத்தாடியது. வரம், விழி வீங்கிச் சாடியது…விரல் பிசைந்து வாடியது… பாதம், அவன் வீட்டை நாடியது…..

உடல் நடுங்கி, உயிர் வதங்கி நின்றாள் நியந்தா ….. கட்டிக் கொண்டான் ஆதி. காதல் தொட்டுக் கட்டினான் தாலி. முகமே குங்குமம் ஆனது. முடிவிலி காமத்தில் விடியலைத் தெளித்தார்கள். விடிந்தது தெரியாமல் வெள்ளிக் கொலுசை விதைத்தார்கள்…..

காவல் வந்தும் காதல் நின்றது….. கண்ணீர் வந்தும் கணவன் என்றது.. விரிந்த கண்களில் வீரியம் விதித்து வெளியேறியது நியந்தாவின் கிளைகள்….

வாரம் ஒன்று, போனது நன்று. அன்று நின்ற வாசலில் கதவு தின்ற சத்தம் புதிது….அது யுத்த சாயல். முகம் துடைத்த ஆதி, சந்தேக நெற்றி சுருக்கி, கதவு திறந்தான். மின்னல் பிளந்த வானத்தில் நெருப்பாய் நின்றிருந்தான் நியந்தாவின் மூத்த கிளை. ‘அண்ணா…..’ என்பதற்குள், எட்டி உதைத்தான். சுவரில் பசையாகிய ஆதியை, வாய் பொத்தி வயிற்றில் குத்தியது, அண்ணனின் தோழர்கள் ….. அழுகை வெடிக்க, அண்ணனை அடிக்க எகிறிய தங்கையின் சிறு வயிற்றில் அண்ணனின் பெருங்கோபம் பாதமானது. பாதகம் கண்டவள் பதறிச் சரிந்தாள்….

“யார், யாருடன் வாழ்வது……?….. குடும்ப மானம் போனது…..ஈன சாதி இவனுடன்.. நீயா…. அடிங் …..
அப்பாவின் தலைப்பாகை சாக்கடைக்குள்ளா?…..அம்மாவின் கழுத்து நகையில் கலப்படமா?.. மானங்கெட்டவள் மறித்து போவது தான் மரியாதை…..காலத்துக்கும் செத்து போகும் நீதியை உனைக் கொல்லும் அநீதி காக்குமெனில் தங்கையே நீ செத்துப் போ….. சாவது நீயாகினும், சாக்கடையே வலி உனக்கு வேண்டும்” என்று கத்திய அண்ணன், ஆதியின் காதில் ரகசியம் கூறி வெளியேறினான்….

ஆதி பதறினான். கதறினான். காலில் விழுந்தான். காதலில் எழுந்தான்….

நண்பர்களில் ஒருவன் ஆயத்தமானான், ஆடை கழற்றி…. அடிக்க கத்தினான் ஆதி.. அடித்து கத்தினான் இன்னொருவன்….

“நாயே…. நீயே…… உன் பொண்டாட்டி மூஞ்சில தலையாணி வைச்சு அமுத்தி கொல்ற…. இல்ல…. நாங்க மாரி மாரி உன் கண்ணு முன்னாலயே… நாசம் பண்ணுவோம். இனி மேல உன்ன மாதிரி சாக்கடைங்க எங்க சாதி புள்ளைங்க மேல கண்ணப் போடவே கூடாதுடா நாயே… போய் கொல்லுடா….”-பல் கடித்துக் கத்தினான்.

‘மனைவியை இன்னொருவன் தொடுவதா….? ஐயோ….! உயிர் போனால் திரும்பாதே….’- அழுதான் ஆதி….

“மானம் போனாலும் திரும்பாது ஆதி’ என்று முணங்கினாள்…நியந்தா ……

அரை நிரவாணத்தில் நெருங்கிய நண்பனின் காலில் விழுந்து கெஞ்சிய ஆதியின் கழுத்தில் ஓங்கி ஓங்கி நான்கு மிதிகள் விழுந்தது . உடல் கோணி, பலம் இழந்து தரை தவழ்ந்தான் ஆதி. அரை நிர்வாணி அத்து மீறத் துணிந்திருந்தான்….

“ஆதி,….. வா… வாடா….என்னைக் காதலிச்சது நிஜம்னா என்னைக் கொன்னுரு….அவன் தொட்டு நான் வாழ்ந்தா நான் பொணம்……நீ கொன்னு நான் செத்தா நான் சாமிடா….”

நியந்தா கத்த கத்த, கதற கதற நடுங்கிக் கொண்டே அவளைத் தலையணையால் அழுத்திக் கொன்றான் துடி துடித்த ஆதி….

பெரு மூச்சு விட்டவர்கள், ” போலீஸ் வரும் ” என்று வெளியேறினார்கள்….

கட்டிக் கொண்டு, அழுது, கதறி, “காதலிச்சா தப்பா…!!!!!……. ஆதலால் காதலின்னு சொன்னயே பாரதி…….இவனுங்க காதலையே கொன்னுட்டாங்களே…….” என்று நெஞ்சிலும், தலையிலும் அடித்துக் கொண்டு, கண்கள் சிவந்து உயிர் வெளியேறும் வலியோடு நியந்தாவைத் தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி நடக்கத் தொடங்கினான்….

கோபம் தணிந்து, தாபம் குறையச் செய்த காடும் மலையும் கடவுளாகிப் போனது….அவள், தன்னோடு நடந்தும், ஓடியும், கைகோர்த்து, வருகையில் தன்னை அவளாகவே நினைக்கத் தொடங்கியிருந்தான் ஆதி. அவளும் தன்னை அவனாக்கிக் கொண்டது போல, நடை கூட மாற்றிக் கொண்டிருந்தாள்.

யுகம் கடந்த பிரபஞ்சத்தில் இரண்டுடல்கள், இரண்டுயிர்கள் ஒன்றானதில், நேற்று வந்த சாதியும் சமயமும், தன் வக்கிர நாக்கை நீட்டி ரத்தம் கக்குவது, வானம் சுமந்து திரியும், சாபங்களின் சிவப்பாகவே உணரந்தார்கள். எப்படி ஆகியும் அப்படி ஆகவில்லை, அவர்களின் காதல். அது தீரா தேசம் நோக்கி, தீர்ந்திடாத நெருக்கத்தை தூக்கிச் சுமந்தே மறைந்து கொண்டிருந்தது……

பெருங்காடு சுமந்து திரியும் பாதங்களில் ஆதியின், நியந்தாவின் பயணங்கள் ஒரு பட்டாம் பூச்சியை படைத்துக் கொண்டிருந்தது….படைத்துக் கொண்டேயிருக்கும் சிறகுகளில் அவர்கள் வண்ணங்களாகி இருப்பார்கள்….. 

தொடர்புடைய சிறுகதைகள்
அவரவர் இடத்தில் அவரவர் அக்கறையின்றி அமர்ந்து........ அப்படித்தான் ஆரம்பிக்கும் அந்த நாள். பிச்சையெடுப்பதை போல உயிருக்கு நடுக்கம் தரக் கூடியவை வேறொன்றும் இல்லை. ஒரே ஒரு நாள் பிச்சை எடுத்து பார்த்திருக்கிறேன். அது அத்தனை சுவாரஷ்யமானதாக இல்லை. பிச்சையெடுப்பதிலும் கொடுமையான ஒன்று கண்கள் ...
மேலும் கதையை படிக்க...
அந்த அடுக்குமாடி குடியிருப்பில் 7வது தளத்தில் அன்றைக்கான விடியல் காதலாய் பூத்தது. அவள் என்றால் அது அவனும் அவளும்.... அவன் என்றால் அது அவளும் அவனும்... ஒரு கை ஜன்னல் திறக்க ஒரு அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தது. நெற்றிகள் இரண்டும் ...
மேலும் கதையை படிக்க...
நொடிக்கும் குறைவான நேரத்தில், ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மணல் மேட்டில் குடை பிடித்து நடக்க இந்த மனத்தால் முடிகிறது. அடுத்த கணம், என் வீட்டு மொட்டைமாடியில் என்றோ விட்டு சென்ற தோழியுடன் அமர்ந்து கதை பேச முடிகிறது.... ...
மேலும் கதையை படிக்க...
மீனலோட்சனி....................... இந்த பெயரை உச்சரிக்க நினைக்கும் போதே, குடை தாண்டி ஒரு மழை என்னை நனைக்கத் தொடங்குகிறது.. மீனா.......... மீனா என்று அழைத்தால் அவளுக்கு பிடிக்காது..... மீனலோட்சனி என்று முழு பெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்பது அவளின் மழையின் ஆளுமை.... கடற்கரையில் மழையோடு நிற்பதென்பது அலையோடு ...
மேலும் கதையை படிக்க...
சாம்பல் பூத்த அந்தக் காடு... தன் பூத உடலைத் திறந்து ஒரு பெரும் பிணம் போல கிடந்தது. காகங்களும்..... கனவுகளும் அலைந்து கொண்டே திரியும் அந்தக் காடு... சிமிட்டாத காட்சியாக இரைந்து கிடந்தது.... முன்பு கூறியதை போலவும்... அலை பாய்ந்து கொண்டே இருந்த ...
மேலும் கதையை படிக்க...
நன்றாக யோசித்து எடுத்து முடிவல்ல. நன்றாக யோசிக்க முடியாத மனநிலை ஒன்றில் உள்ள சுகத்தின்பால்...வந்த தடுமாற்றத்தின் விளைவு தான்... இந்த சூனியத்தின் முக்கில் நிற்பது. வாகனங்களின் இரைச்சல் மரண அவஸ்தையைத் தந்து கொண்டிருந்தது. அந்த தோஷம் இந்த தோஷம் என்று ஜாதகம் பார்த்தே ...
மேலும் கதையை படிக்க...
சாம்பல் பூத்த தீவைப் போல தான் இருந்தது அந்த ஊர். பனி விலக்கிக் கொண்டுதான் நகர வேண்டும் போல.... ஆதியின் சப்தம் நிறைந்திருந்த வழியெங்கும் யாருமே இல்லை. காணும் மரங்கள் எல்லாம் இலைகளற்று மொட்டையாய் நின்றன. காற்றுக்கு மூச்சு பேச்சு இல்லை ...
மேலும் கதையை படிக்க...
யாராவது மரணிக்கும் போது உயிர் போவதை வெகு அருகில் நின்று பார்த்திருக்கிறீர்களா....? அப்போது மரணிப்பவரின் உடல் இயக்கத்தை கவனித்திருக்கிறீர்களா....?.... அதுவும் தற்கொலை செய்பவர்களின் உயிர் பிரிதலைக் கண்டவர்கள் உண்டா...! உண்டெனில் அது பற்றி சொல்லுதல் ஒரு மாயக் கதையென ஒரு பனி மூட்டப் பாதையென விரிந்து ...
மேலும் கதையை படிக்க...
20 வருடங்களுக்கு பிறகு... நானாகவே நிற்கிறேன். அடையாளம் தெரியாதவர்கள் பற்றி கவலை இல்லை. தெரிந்து தெரியாத மாதிரி போவோர் பற்றிய அக்கறை இல்லை. அடையாளம் தெரிந்து கொண்டு அருகில் வருவோர் பற்றி தான் பயம். இருபது வருட கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் இல்லை. எல்லாம் ...
மேலும் கதையை படிக்க...
இந்தக் கதைக்கு நான் முக்கியம் என்று இப்போதைக்கு எனக்கு தோன்றவில்லை .... ஆனால்... கிருஷ்ணாவை... பின் தொடரத்தான் வேண்டும்....அவன் இன்று பாபநாசம் செல்கிறான்.... எதற்கு என்று தெரியவில்லை.... தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவனுக்கும் தெரியாமல் பின் தொடரத்தான் வேண்டும்... தெரிந்தால்... கத்துவான்..... ...
மேலும் கதையை படிக்க...
ரோசாப்பூ
7வது தளத்தில் ஒரு சின்ன கதை
மாய குதிரை
குடைக்குள் மழை
வறுமையின் நிறம் சாம்பல்
இரும்புப் பூக்கள்
மின்மினி தேசத்து சொந்தக்காரன்
சட்டென்று சலனம் வரும் என்று…….!
மக்தலேனா
விக்கிரமாதித்தனின் கிருஷ்ணவேணி

நியந்தாவின் வண்ணங்கள் மீது 2 கருத்துக்கள்

  1. Nila says:

    Solvadharkku vaarthaigale illai…

  2. Mekala says:

    இந்த கதை மிகவும் உணர்வுபூர்வமாக உள்ளது என் மனதை ஆட்கொண்டது என் கண்களில் கண்ணீர் வடிய வைத்தது.
    இந்த கதையை எழுதிய கதையாசிரியர் கவிஜிக்கு என் மனமார்ந்த வணக்கங்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)