நிஜமான கற்பனைக் காதல்

 

1

<<காதல் என்பது தன்னுயிரை வாடகைக்கு அமர்த்துவது, இன்னோர் உடலில்>>

“ப்ப்ப்ப்பா. என்னமா எழுதறாரு!! அவரோட கவிதைகள் படிக்கும்போது எனக்கு ஒரு காதலி இல்லையேன்னு ஏக்கமா இருக்குடி”

“நீ வேற, அவரு கவிதைகள விட கதைகள் இன்னும் சூப்பர் தெரியுமா? நீ கவிதய விட்டு வெளிய வரமாட்ற”

“காதல் பத்தி சொல்றதுக்கு இவ்ளோ விஷயங்கள் இருக்கான்னு அவர் கவிதைகள் படிக்கும்போதுதான்டி தெரியுது. அந்த விஷய ஞானத்தை காட்டலாம்னா எனக்கு காதலி இல்லையே? வேணும்னா ரமேஷ்கிட்ட பர்மிஷன் வாங்கறேன், கொஞ்ச நாள் நீ என் காதலியா இருக்கியா?”

“டேய் வீணா போனவனே! வாடகைக்கு காதலி தேடற நீ வாடகை வீட்லதான் கடைசிவரைக்கும் காலம் தள்ளுவ. என்னமோ பண்ணித்தொல, ரமேஷ்கிட்ட பர்மிஷன் கேட்டுப்பாக்கறேன்”

“அடிப்பாவி! நெஜமாவே சொல்றியா? நா வர்ல இந்த வெளையாட்டுக்கு”

மேற்கண்ட உரையாடல் வசந்த் மற்றும் அவன் நண்பி ரேகா, இருவருக்கும் இடையில் நிகழ்ந்தது. இவங்க நம்ம கதைல இந்த சீனோட அப்பீட்டு.

இவர்கள் பேசிக்கொண்டது தமிழ்நாட்டில் புகழ்பெற்ற எழுத்தாளன் மன்மதன் பற்றித்தான். அவனை நாம் சந்திக்கும் முன், அவனைப்பற்றிய சிறுகுறிப்பு பெரியதாகவே சொல்லி, அவன் படம் வரைந்து பாகங்களை குறித்துவிடுகிறேன். இக்கதையின் நாயகனானதால் அவனைப்பற்றிய வரலாறு, பூகோளம், அறிவியல், அறியாவியல் எல்லாம் தெரிந்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

மன்மதன் அவனது புனைப்பெயர். நீங்க கொஞ்சம் புத்திசாலியா இருந்தா இந்நேரம் அவன் புனைப்பெயருக்கு நதிமூலம் ரிஷிமூலம் வாஸ்த்து எல்லாம் கண்டுபுடிச்சிருப்பீங்க. இல்லன்னா அடுத்த பாரா வரைக்கும் வெய்ட் பண்ணுங்க.

அவன் முழுபெயர் கமலக்கண்ணன், செல்லமா கமல். தமிழ்மீது தீராத ஆர்வம். ஸ்கூல், காலேஜ் படிக்கறப்பவே தமிழ் உரைநடை, கட்டுரை, கவிதை இப்படி எல்லாத்துலயும் பின்னி பெடல் எடுத்து, நட்டு வேற போல்ட் வேற-ன்னு பிரிச்சி மேஞ்சிருவான். அவன் கலந்துக்கறான்னா போட்டியில கலந்துக்கவே மத்தவங்க யோசிப்பாங்க.

அவன் பேருக்கு ஏத்தமாதிரி காதல்ல அவ்ளோ ஆர்வம், உருகி உருகி காதல்பத்திதான் எழுதுவான். அதனாலயே தனக்கு மன்மதன்னு புனைப்பெயர் சூட்டிகிட்டான்.

சும்மா சொல்லக்கூடாது – அவன் கவிதை/கதைகள் படிச்சே டெம்ப்ட் ஆகி, காதல் செஞ்சு, மண்ட காஞ்சு, நல்லாவாழ்ந்து நாசமாப்போன ஆளுங்க தமிழ்நாட்டுல நெறையபேர். ஒரு ஆர்வத்துல கல்யாணம் பண்ணிக்கிட்ட அவங்க இவன்மேல வெறியா அலையறாங்க, மாட்னா கண்டம்தான்.

ஒவ்வொரு கவிதை/கதைக்கும் ஒரு புது கான்செப்ட் புடிச்சி, காதலை வெவ்வேற கோணத்துல ஸர்ஃப் போட்டு அலசி தோய்ச்சி வறுத்து ஒரு பிழி பிழிஞ்சி ஜூஸ் எடுத்துடுவான்.

தமிழ் பேசமட்டும் தெரிஞ்ச, படிக்கத் தெரியாத பல அரைடிக்கெட்டுங்க தமிழ் படிக்கப் பழகினதுக்குக் காரணம் இவனோட காதல் படைப்புகள்தான்-னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகணும்.

இவனப்பத்தி இன்னும் பேசலாம், அடுத்த அத்தியாயம் வரை பொறுங்க…

(தொடரும்)

2

<<காதல் என்பது எப்போதும் உறங்குவது, கண் திறந்துகொண்டே>>

ஸ்கூல்லயும் சரி, காலேஜ்-லயும் சரி, கமல் படிப்பில் கோட்டைவிட்டதே இல்லை. அப்பவே தெளிவா இருந்தான், படிப்பு/வேலை பாத்துகிட்டேதான் தமிழ்ப்பசிக்கும் பீட்ஸா ஆர்டர் பண்றதுன்னு.

காலேஜ் முடிக்கறவரைக்கும் பெரிய பத்திரிக்கைகள் எதுலயும் அவன் படைப்புகள் பப்ளிஷ் ஆகல. வேலைல சேர்ந்ததுக்கு அப்புறம்தான் டார்ச்லைட் அடிச்சமாதிரி ஒரு பளிச் கெடைச்சது. முன்னணி பத்திரிக்கைகள்ல நெறைய பப்ளிஷ் ஆச்சு. பிரபலம் ஆனான், படிப்படியா.

தமிழ்ப்பட இயக்குனர்கள் நிறையபேர் காதல் காட்சிகளுக்கு இவன்கிட்ட ஐடியா கேப்பாங்க. பலபேர் கதை விவாததுக்கும் கூப்புடுவாங்க. சிலபேர் ஆக்‌ஷன் கதையையே காதல் கதையா மாத்தற அளவு இவன் சொல்ற காட்சிகள் அவங்களுக்கு பிடிச்சிடும்.

அவன் ஷாப்பிங் போனா, ஒரு கூட்டமே மொய்க்கும். “சார்! என் காதலி ஒரு வாரமா என்கூட பேசமாட்டேங்கறா. ஒரு ஐடியா குடுங்க இல்லன்னா அவகிட்ட என் சார்பா தூது போறீங்களா ப்ளீஸ்” ன்னு கேப்பாங்க. பலதடவ ஐடியா குடுப்பான், சிலதடவ மனசுக்குள்ளயே கோவப்படுவான் (‘ஏண்டா! நா என்ன டபுள் எம்.ஏ.வா?’).

அவன் குடும்பம் ஒரு பெரிய அப்பாடக்கர் கூட்டுக்குடும்பம். எல்லா வித்யாசமான கேரக்டர்களும் இருக்கும்.

அவன் அப்பாக்கு அவன் கவிதை/கதை எழுதறதுல விருப்பமே இல்ல. காதல்-னு காதுல விழுந்தாலே பாகிஸ்தான் தீவிரவாதிய க்ளைமாக்ஸ்-ல பாத்த விஜயகாந்த் மாதிரி செம கடுப்பாயிடுவாரு. ஏதோ படிப்புக்கேத்த வேலைல அவன் இருக்காங்கறதால வாயில் பபுள்கம் மென்னுகிட்டே அடக்கி வாசிக்கறார், எப்பவேணா வெடிக்கத் தயாரா இருக்கற எரிமலை மாதிரி.

அவன் அம்மா அமைதிக்கு நோபல் பரிசு வாங்காதது ஒண்ணுதான் குறை, பரமசாது. கமலுக்கு ரொம்ப நெருக்கம் அவங்க.

அவனுக்கு ஒரு மாமா உண்டு, அம்மாவோட சொந்த தம்பி, பேர் அறிவழகன், சுருக்கமா அறிவு. எங்க என்ன தப்பு நடந்துச்சோ தெரியல, அவன் மாமா அவனவிட ரெண்டு வயசு சின்னவர்(ன்). கமலோட வாழ்க்கைல முக்கியப்பங்கு அறிவழகனுக்கு உண்டு. ரெண்டு பேரும் ஃபெவிகால் போட்டு ஒட்டினமாதிரி ரொம்ம்ம்ம்ப நெருக்கமான நண்பர்கள். அறிவுக்கு வித்யாசமான அறிவு – எப்ப கலக்குவான், எப்ப சொதப்புவான்னு அவனுக்கே தெரியாது. நீங்க நெனைக்கறமாதிரியே அறிவுக்கு உருப்படியா வேலை எதுவும் இல்லை. சுருக்கமா சொன்னா – அறிவு, கமலோட அல்லக்கை.

வீட்ல மத்த உருப்படிகளை அப்பால பாப்போம்.

இவ்வாறாக, இவ்வளவு அருமை பெருமை பொறுமை வாய்ந்த நம்ம ஹீரோ கமல் என்கிற மன்மதனுக்கு ரொம்ப நாளா ஒரு பெரிய குறை – தனக்கு ஒரு காதலி இல்லையேன்னு.

(தொடரும்)

3

<<காதல் என்பது புதிரானது, காதலித்தவனுக்கும் காதலிக்காதவனுக்கும்>>

ஆச்சர்யம், ஆனால் உண்மை. காதல் படைப்புகள்ல மூழ்கி முத்து வைரம் வைடூரியம் எல்லாம் எடுத்து, தூர் வாரி, தூசு தட்டி, பட்டி டிங்கரிங் எல்லாம் பாத்த நம்ம மன்மதன் இதுவரை யாரையும் காதலிச்சதே இல்லை.

இதுவரைக்கும் கற்பனைல மட்டுமே இருந்த காதலை நிஜமாக்கணும்னு நெனச்சான் (டைட்டில் வந்தாச்சு, எல்லாரும் ஒரு தபா ஜோரா கைதட்டுங்கப்பா).

அவன் பிரபலமான கவிஞன்/கதைஞன், அதுவும் காதல் ஸ்பெஷலிஸ்ட், அதுவும்

இளைஞன். அதனால, மப்பு அடிக்காமலே எப்பவும் மப்பும் மந்தாரமுமா திரியற இளைஞிகள் பலபேர் அவன ஏக்கமா ஒரு பார்வை பார்ப்பாங்க.

அவங்க யாரும் தனக்கு செட்டாகலன்னாலும் தன் மாப்ள நல்லா இருந்தா போதும்னு நெனச்ச அல்லக்கை அறிவு, ‘சா பூ த்ரீ’ போட்டு அதுங்கள்ல யாரயாவது செலக்ட் செய்யச் சொன்னான் கமலிடம்.

கமல் வேறமாதிரி யோசிச்சிட்டு இருந்தான். தன்னோட ரசிகையை காதலிக்கறதவிட தன்னை யாருன்னு அவ்வளவா தெரியாத ஒருத்தியை காதலிக்கலாம்னு நெனச்சான். அப்பதான், காதல்பத்தி தன்கிட்ட இருக்கற மொத்த சரக்கையும் எறக்கி, வீடு கட்டி வெளையாடலாம்னு கணக்கு போட்டான்.

“டேய் மாப்ள! இது காதல்டா, வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். கைலயே தயிர்சாதம் இருக்கும்போது, இல்லாத பீட்ஸாக்கு ஏண்டா அலயற?” – அறிவு.

“டேய் மாமா! …..” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்த கமலை பேசவிடாமல் தடுத்து, கத்தினான் அறிவு.

“டேய் மாப்ள! என்னை மாமா-ன்னு கூப்புடாதன்னு பத்தாயிரத்தி எழுநூத்தி நாற்பத்தி எட்டு தடவ சொல்லிட்டேன், இனிமேல் அப்டி கூப்ட, நீ யாரயோ காதலிக்கறன்னு பொய் சொல்லி உங்க அப்பன்கிட்ட போட்டுகுடுத்துடுவேன்”

ஆமாங்க! ஆல் லாங்வேஜ்லயும் அறிவுக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை ‘மாமா’.

மறந்துபோய் ஒரு ஃப்ளோல இவன மாமான்னு கூப்பிட்டு, தன்னோட, இன்னும் ஆரம்பிக்காத, காதல் வாழ்க்கைக்கு தானே சவக்குழி தோண்டறமாதிரி ஆயிடுமோங்கறதால, கமல் அவன கூல் பண்ணிட்டு பேச ஆரம்பிச்சான்.

“டேய் அறிவு கெட்ட அறிவு! இவங்கள டாவடிக்கறதுல என்னடா கிக்கு? அடங்காத பசுமாட அடக்கறதுலதான்டா இருக்கு கிக்கு. கைல இருக்கற தயிர்சாதம் எங்க போய்ட போகுது? அத சாப்பிட்டா திருப்தி இருக்குமா? ஆனா அலைஞ்சி திரிஞ்சி காய்ஞ்சி அவிஞ்சி கெடைக்கற பீட்ஸால இருக்கற ருசியே தனிடா. அந்த மாதிரி ஒருத்திய தேடி கண்டுபுடிச்சி காதலிக்கப்போறேன்டா”

“நீ கலக்குடா மாப்ள. ஆனா இவங்கள்ல யாரையாவது ஒருத்திய என் பக்கம் திருப்பிவுடேன்”

கமல் ஒருமுறை முறைத்தான், அறிவு அடங்கிவிட்டான்.

ஆல்ரைட் வாசகாஸ் – இனிமேல் ‘ஆப்பரேஷன் ஆதர்ஷ காதலி’ ஆரம்பம் !!!

(தொடரும்)

4

<<காதல் என்பது அனைவரையும் முட்டாளாய் நினைப்பது, தானே முட்டாளானதை உணராமல்>>

தன் ஆதர்ஷ காதலியின் வடிவம், குணநலன்கள், சூரிய மேடு, சந்திர மேடு, குபேர மூலை எல்லாம் பட்டியலிட ஆரம்பித்தான் கமல்.

மாநிறம் (வெள்ளையானால் திமிர் அதிகம் என்ற பயம்), தன்னைவிட கொஞ்சமே கொஞ்சம் குள்ளம், தமிழ் பேசத்தெரிந்தால் போதும் (தன் படைப்புகளை படிக்கத் தெரியவேண்டியதில்லை), கொஞ்சம் நகைச்சுவை உணர்வு, ரொம்ப மாடர்னும் வேணாம் ரொம்ப பட்டிக்காடும் வேணாம், நிறைய காதல் பண்ணத் தெரியணும், ஓரளவாவது தன் குடும்பத்து உறுப்பினர்களை மதிக்கணும், இப்படி பலப்பல.

இதையெல்லாம் எழுதும்போதே அவனுக்குத் தெரியும், இதுல பாதி பொருந்தினாலே பெரிய விஷயம்ன்னு. இருந்தாலும் சல்லடை போட்டு அலசி தேடி கண்டுபுடிக்கறதுன்னு முடிவுபண்ணிட்டான். ‘தம்பி உடையான் படைக்கு அஞ்சான், அல்லக்கை உடையான் எதற்கும் அஞ்சான்’ – அறிவு இருக்கும்போது தேடறதுக்கு எதுக்கு சிரமம்?

ஒரு மங்களகரமான வெள்ளிக்கிழமை அன்னிக்கி தேடுதல் படலம் வுடு ஜூட்.

கோயில், ஷாப்பிங் மால்ஸ், பார்க்-ன்னு ஒரு பெட்டிக்கடை விடாம தேட ஆரம்பிச்சாங்க, அறிவும் கமலும். விஷயம் வெளிய லீக் ஆகிடக்கூடாதுன்னு ரொம்ப கவனமா இருந்தாங்க. மீடியா தொல்லை ஒரு பக்கம், ‘காதலி தேடுகிறார் காதல் மன்மதன்’னு ரைமிங்கா எழுதி படுத்துவாங்க. அப்பாக்கு தெரிஞ்சா மனுஷன் ருத்ரதாண்டவம் ஆடிடுவார். ரசிகைகள் தொல்லை வேற. அதனால, ஒசாமா பின்லேடன தேடற அமெரிக்க உளவுத்துறை ரேஞ்சுல எல்லாம் ரகசியமா நடந்தது.

தனக்கு ரொம்ப நெருக்கமான சில நண்பர்களுக்கு மட்டும் விஷயத்த சொன்னான்.

சில மாசமாச்சு. நெறைய பேரை அலசியாச்சு. எதுவும் திருப்தியில்லை. அறிவுக்கும் தேடற மும்மூரம் கொறஞ்சிடுச்சி. கமல் விடாம கொள்கைல தீவிரமா இருந்தான். அவனோட அம்மா, அக்கா, பெரியப்பா மற்றும் சித்தி பொண்ணுங்க எல்லாரும் இவனுக்கு காதலி தேடற வேலைல பிஸியோ பிஸி – ஆமாங்க, அவன் அப்பா, மத்த ஆண்கள் தவிர்த்து வீட்ல எல்லா பெண்களும் கமலுக்கு சப்போர்ட்.

கடைசியா ஒருத்தி வகையா மாட்டினா. அவனுக்கு ஏத்த ஜோடின்னு குடும்பத்துல எல்லாருக்கும் சந்தோஷம், ‘அப்பாடா! இனிமேல் தனக்கான ஜோடிய தேட ஆரம்பிக்கலாம்’ ன்னு அறிவும் ஹேப்பி அண்ணாச்சி.

கமலுக்கு கொஞ்சம் ஹேப்பி இல்ல…. ரொம்பவே ஹேப்பி. பின்ன? அவன் லிஸ்டில் ஆகக்கூடி பத்துப் பொருத்தம் இல்லாம பத்தாயிரத்து பத்துப் பொருத்தமும் பொருந்துதே!

அவள எப்படியெல்லாம் காதல் செஞ்சு அசத்தலாம்னு ரூம் போடாமலே யோசிக்க ஆரம்பிச்சான். அவன் ரூம் போடணும்னு அவசியமே இல்ல. அதான் உருண்டு புரண்டு யோசிச்சி, கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் வாந்தி எடுத்து கவிதை/கதை-ன்னு அவ்ளோ எழுதியிருக்கானே? என்ன ஒண்ணு, ஒரு சிச்சுவேஷனுக்கு ஓராயிரம் ஆப்ஷன்ஸ் இருக்கு, அதுல பெஸ்ட்டா பொறுக்கியெடுக்கணும்.

நடக்கப்போற ட்விஸ்ட் தெரியாம அவளோட மொத மீட்-க்கு ரெடியானான்.

(தொடரும்)

5

<<காதல் என்பது சாவது, உயிர் மாய்க்காமல்>>

கமல் ‘அவளோட’ மொதல் மீட்டுக்கு ரெடியாகறதுக்குள்ள, ‘அவள’ எங்க, எப்படி புடிச்சாங்கன்னு பாப்போம்.

அவன் பெரியப்பா பொண்ணு பேரு வாசுகி, அவனைவிட ரெண்டு வயசு பெரியவ. சரியான காமெடி பீஸ் ஆனா ரொம்ப புத்திசாலி. தேவையில்லாத விஷயங்கள ஞாபகம் வெச்சிக்கறதுல கில்லி, ஆனா தேவையான விஷயங்கள மறந்துடுவா – செலக்டிவ் அம்னீசியா மாதிரி. உதாரணத்துக்கு சொன்னா, ஆறு மாசத்துக்கு முன்னாடி வீட்ல என்ன சமையல்னு ஞாபகம் இருக்கும், ஆனா இன்னைக்கு ஆபிஸ்ல செய்யவேண்டிய வேலை என்னன்னு ஞாபகம் வராது.

இவளுக்கு கமல் நெறைய உதவி செஞ்சிருக்கான், அவ அதிகமா அலஞ்சு திரிஞ்சு கமலுக்கு ஏத்த காதலி தேடிட்டிருந்தா. ஒருநாளு வாசுகி அவளோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு வீட்டுல ஒரு விஷேஷம்னு போயிருந்தப்ப ‘அவள’ பார்த்தா. ‘அவளும்’ தன்னோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு வீட்டு விஷேஷத்துக்குதான் வந்துருக்கா. அங்க இருந்த மூணு நாளும் ‘அவள’ நெறைய கவனிச்சா வாசுகி. ‘அவதான்’ கமலுடன் மல்லுக்கட்ட சரியான ஆளுன்னு முடிவு பண்ணி கமல்கிட்ட சொன்னாள்.

கமலும் வாசுகியும் அந்த பொது ஃப்ரண்டு மூலமா யதேச்சையா சந்திக்கறமாதிரி ஒரு மூணு நாலு தடவ ‘அவள’ சந்திச்சாங்க. கமல் கொஞ்சம் கொஞ்சமா ‘அவ’கிட்ட க்ளோஸ் ஆகறான். ‘அவ’ ஃபோன் நம்பர் வாங்கிட்டு, டேட்டிங் போகலாமான்னு யதார்த்தமா கேட்க, ‘அவளும்’ பதார்த்தமா சரின்னு சொல்ல, இப்ப அதுக்குதான் ரெடி ஆகறான்.

‘அவ’ பேரு – சொன்னா சிரிக்கக்கூடாது – சொப்பன சுந்தரி !!! கரகாட்டக்காரன் பட டயலாக் ஞாபகம் வந்தா நான் பொறுப்பல்ல. இந்த பேரு புடிக்காம, ஆர்த்தி-ன்னு வெச்சிக்கிட்டா.

ஓவர் டூ கமல் – மன்மதன் மாதிரியே ரெடி ஆயிட்டான்.

வாசுகி “பளபளன்னு இருக்க? எங்கடா கெளம்பிட்ட?” ன்னு கேட்க, செல்லமா மொறச்சான். “ஓ!! மறந்துட்டேன். வாழ்த்துக்கள்-டா. அசத்து” ன்னா.

அறிவு “மாப்ள! நெஜமாவே மாப்ள களை வந்துடுச்சி. ஓரே மாசத்துல கல்யாணம் முடிச்சிடுடா” ன்னான். அவன் அவனுக்கு அவன் அவன் கவலை – கமல் சீக்கிரம் கல்யாணம் பண்ணாதான் தனக்கு கல்யாணம் ஆகும்னு அவன் கணக்கு.

அம்மா வெற்றித்திலகம் வெச்சி அனுப்புனாங்க.

சொன்ன நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே வந்துட்டான். யாரும் பாக்காதமாதிரி ஒரு மூலைல போய் உட்கார்ந்தான்.

நாலு மணி நேரம் ஆச்சு, அவ வரவேயில்ல. ஃபோனும் எடுக்கல.

(தொடரும்)

6

<< காதல் என்பது வயிற்றை நிரப்புவது, வார்த்தைகளால் >>

“குழந்தை சிரிப்பு
குமரி வனப்பு
தாய் அரவணைப்பு
தந்தை பொறுப்பு
தமக்கை பூரிப்பு
தமையன் ஆதரவு
அனைத்தும் சிறிதாகும்
உன்காதல் பார்வையில் !!

ஒரேநொடி பார்த்தாலும்
கொல்லாமல் கொல்லும்…

இறக்காமல் இறப்பேன்
வேகாமல் நோவேன்
பிறவாமல் வாழ்வேன் !!

ஆம் என்றேசொல்
ஆயுளுக்கும் துணையிருப்பேன்
ஆயுள்தாண்டியும் உடனிருப்பேன்”

*****************

அவள் வராததால், நொந்து நூடூல்ஸாகி, அது உடம்புக்கு ஆகாதென, வெந்து வெங்காயம் ஆகி, அது காஸ்ட்லி என, அந்து அவலாகிவிட்டான். முகம் வாடிவிட்டது. தனியாக கடற்கரை போய் உட்கார்ந்து யோசிக்கலானான். எவ்ளோ சிச்சுவேஷனுக்கு டேட்டிங் பத்தி எழுதியிருக்கான், இப்ப அவனுக்கே எதுவும் உதவலையே!

தன்னோட காதலுக்கே இப்டி ஒரு சவாலா? விடக்கூடாதுன்னு முடிவுபண்ணான்.

அவகிட்ட ‘ஏன் வரல’ ன்னு, தானே போய் கேட்டா சீப்பா நெனச்சிடுவான்னு, வாசுகியோட ஃப்ரெண்டு மூலமா சூசகமா கேட்கலாம்னு, வாசுகிக்கு ஃபோன் போட்டான்.

“சொல்லுடா”

“எங்கடி இருக்க”

“வீட்லதான், நீ?”

“ஆர்த்தி டேட்டிங்-க்கு வரலடி”

“ஆர்த்தி-யா? அவ யாருடா?”

“நீ வேற, படுத்தாத. நீதான்டி செட் பண்ணி கொடுத்த” ஃப்ளாஷ்பேக்கை நினைவூட்டினான்.

“அடிப்பாவி! வரவேயில்லையா? ஃபோன் பண்ணி கேக்கறேன்”

“உன் ஃப்ரெண்ட் மூலமா கேட்டு சொல்லு”

வெய்ட் செய்தான். சிறிது நேரம் கழித்து வாசுகி கூப்பிட்டாள்.

“டேய்! அவளும் என்னை மாதிரி போல, மறந்துட்டாளாம்”

இவளுடன் தனக்கு சரிப்பட்டு வருமா என யோசனையில் ஆழ்ந்தான். வெளியில் தெரிந்தால் அவமானம், நாடுபோற்றும் காதல் மன்னனின் காதலே ஊத்திக்குமா? அந்த சோகத்திலும் அவனுக்கு ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படத்துல விசு சொல்ற டயலாக் ஞாபகம் வந்தது – ‘ஒரு காதல் மன்னனின் காதலே ஊத்திக்கிட்டா அவன் வேற எந்த காதல் மன்னன்கிட்ட தன்னோட காதலுக்கு ஐடியா கேப்பான்’.

முட்டிமோதிப் பார்த்துவிட முடிவுசெய்தான். ஆர்த்தியிடம் தானே பேசுவதென நினைத்தான்.

“நாளை சந்திப்போமா?” என நவீனத்தகவல் அனுப்பும் பயன்பாட்டுச்செயலியில் தகவலிட்டு, நகம் கடித்துக்கொண்டே காத்திருந்தான்.

(தொடரும்)

7

<<காதல் என்பது நிபந்தனைகளற்றது, ஒருவர் பக்கம் மட்டும்>>

ஆர்த்தியிடம் இருந்து பதில் வந்தது, “சந்திப்போம்” என ஒற்றை வரியில். இப்போதாவது பதில் வந்ததே என சந்தோஷப்பட்டான்.

மறுநாள், முன்பைவிட இன்னும் ஸ்மார்ட்டாக ரெடியானான்.

“மாப்ள, இன்னிக்கி அவள எப்டியும் மடிச்சிடுடா” – சொன்ன அறிவுகிட்ட “பாக்கலாம்டா” என்றான்.

வாசுகி “இன்னிக்கும் அவ வரலன்னா, நாளைக்கு அவளுக்கு பால்-தான்” என்றாள்.

சிரித்துவிட்டு கிளம்பினான்.

இந்தமுறை சரியான நேரத்திற்கு சென்றான். அவளும் சரியாக வந்து சேர்ந்தாள்.

“ஸாரி, நேத்து மறந்துட்டேன்” என்றாள்.

“பரவாயில்லை, என்ன சாப்டறே”

ஆர்டர் செய்துவிட்டு, ஏதாவது பேசலாம் என்று ஆரம்பிக்கும் முன்பு அவளே ஆரம்பித்தாள்.

“நீ யாரையாவது காதலிச்சிருக்கியா?”

யோசிக்காம டக்குன்னு சொன்னான் “ஆமாம், உன்னத்தான்”

“எனக்கும் உன்ன புடிச்சிருக்கு”

அவள் சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் அவன் மனம் பறக்க ஆரம்பித்தது. இவ்ளோ சுலபமா முடியும்னு நினைக்கவே இல்லை.

அவள் தொடர்ந்தாள் “ஆனா, நீ ரொம்ப கத்துக்குட்டியா இருக்க, உனக்கு காதல்பத்தி ஒண்ணும் தெரியல”

சுட்டிபேசியை யாரோ பலநாட்கள் ஒளித்து வைத்தது போல மண்டை காய்ந்தது அவனுக்கு, ‘என்னாது? எனக்கு காதல்பத்தி ஒண்ணும் தெரியலயா!!’ என மனதுக்குள் கேட்டுக்கொண்டு, அவளுக்குத் தெரியாமல் பல்லைக் கடித்தான்.

“ஏண்டா! ஏதாவது ரொமான்டிக்கா மெஸேஜ் அனுப்பாம, ரொம்ப மொக்கையா அனுப்பற. காதலிய எப்டி இம்ப்ரஸ் பண்றதுன்னு உனக்கு தெரியலையே”

அவள் தடாலென தன்னை `டா’ போட்டு கூப்பிட்டதைக்கூட அவன் பொருட்படுத்தவில்லை. ஆனால் தன் காதல் திறமையை குறைத்து மதிப்பிட்டுட்டாளே என்று பொருமினான்.

“நேத்து நான் ஏன் வரலன்னா, உன்னோட டேட்டிங் மெஸேஜ் அவ்ளோ ஆர்வமாவே இல்ல. சரி விடு, இனிமேலாவது ஒழுங்கா காதல்பண்ண கத்துக்கோ”

“சரிடி, இப்ப சாப்டலாம்”.

ஆர்டர் செய்ததை சாப்பிட்டு வெளியே வந்ததும், அவளை அசத்த முடிவெடுத்து “ஏதாவது படம் போகலாமா?” என்று கேட்டு முடிப்பதற்குள், “எல்லா படமும் ஒரே போர்-டா, வேற எங்கயாவது போலாம்” என்றாள்.

“ஷாப்பிங் மால்”

“எனக்கு நிறைய ஷாப்பிங் பண்ணணும், ஆனா இப்ப வேணாம், வேற எங்கயாவது போலாம்”

“பீச்”

“நாம என்ன குழந்தையா?”

“கோயில்”

“வேணாம்”

ரொம்ப யோசித்து எதுவும் தோணாமல் “வேற எங்கதான்டி போறது” என்றான்.

“நான் சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன்”

“சொல்லுடி”

“சினிமா போலாம்டா”

ஜயன்ட் வீல்-ல சுத்தாமலே அவன் தலை கிர்ருன்னுச்சி..

(தொடரும்)

8

<<காதல் என்பது சவமாய் கிடப்பது, சுவாசித்துக்கொண்டே>>

இவ்வாறாக அவங்க காதல் நிம்மதியும் சமாதானமுமா நக்கலும் நையாண்டியுமா சண்டையும் சச்சரவுமா ஒருமாதிரி சுமாரா நல்லாவே கஷ்டப்பட்டு போயிட்டு இருந்தது.

ஒரு நாள் அவளுக்கு பொக்கே பரிசளித்தான், “இன்னும் நல்ல ஃப்ளவர்ஸ்-ஆ பார்த்து வாங்கியிருக்கலாம்” என்றாள்.

மற்றொரு நாள், ரொம்ப காஸ்ட்லியான சுட்டிபேசி வாங்கிக்கொடுத்தான், தன்னைக் கேட்காமல் ஏன் வாங்கினாய் என்று சண்டை போட்டாள்.

வேறொரு நாள் கடைக்கு கூட்டிட்டு போய் “என்ன வேணுமோ வாங்கிக்கோ” என்றான். “எனக்கு என்ன பிடிக்கும்-னு உனக்கு தெரியாதா” என மடக்கினாள்.

அவனுக்கு என்ன பண்றதுன்னே புரியல, ‘என்ன பண்ணாலும் குறை சொல்லிட்டே இருக்காளே’ ன்னு கவலைப்பட்டான்.

தன்னால் முடிந்தவரையில் அவளுக்குப் பிடிச்சமாதிரி இருக்க முட்டிமோதிப் பார்த்தான், அவளுக்கு மட்டும் எதுவுமே த்ருப்தி ஆகல.

“ஏண்டா இப்படி எப்பவும் போர் அடிக்கற? என்கூட பழகினதுக்கு அப்பறம் கூட உருப்படியா காதல் பண்ண கத்துக்கலயே நீ” ன்னு சொன்னா ஆர்த்தி.

முட்டுச்சந்துல முட்டிக்கிட்டமாதிரி இருந்துச்சு. தனியா அவங்க வீட்டு மொட்டை மாடியில நின்னுகிட்டு தாவாக்கட்டைய சொறிஞ்சிகிட்டு இருந்தான்.

அறிவு வந்தான். “என்ன மாப்ள, தனியா ஃபீல் பண்ணிட்டு இருக்க? எப்ப கல்யாணம் வெச்சிக்கறதுன்னா?”

ஆ… சொல்ல மறந்துட்டனே! அவங்களுக்குள்ள நடக்கற எந்த விஷயத்தையும் இதுவரைக்கும் கமல், அறிவுகிட்டயோ வாசுகிகிட்டயோ சொல்லல.

சொல்லக்கூடாதுன்னு இல்ல, அவ கூட இருக்கவே டைம் போதல, ஸோ இவங்கள பாக்கவேயில்ல. இப்பயாவது அவங்ககிட்ட சொல்லணும்னு நெனச்சான்.

பீட்ஸா ஆர்டர் பண்ண நெனச்சப்ப, வீட்டுக்கே டெலிவரி ஆனமாதிரி, வாசுகியையும் கூப்பிடலாம்னு நெனச்சப்ப, அவளே டாண்னு வந்து நின்னா.

நடந்த விஷயங்களை ரெண்டு பேர்கிட்டயும் ஷார்ட்டா ஒரு டீஸர் மாதிரி இல்லாமல், ஒரு முழு நீள சரித்திர காவியம் மாதிரி சொல்லி முடிக்கறதுக்குள்ள, ரெண்டு தடவை அறிவு தூங்கி எழுந்தான், கமலுக்குத் தெரியாமல்.

எல்லாத்தையும் பொறுமையா கேட்டுகிட்டு, வாசுகி கேட்டாளே ஒண்ணு “அதெல்லாம் சரிடா, ஆனா இவ்ளோ நேரம் யார் பத்தி சொன்ன?”.

கமல் மரண காண்டு ஆயிட்டான். “ஏண்டி, விடிய விடிய எந்திரன் படம் பார்த்து ரோபோன்னா யாரு-ங்கறியே?” ன்னான்.

அறிவு அவன அடக்கிட்டு, அவளுக்கு மறுபடி ஒரு டிரெய்லர் ஓட்டினான், இப்ப வாசுகிக்கு கண்ணு பளிச்…

“ஏண்டா! நீதான் மன்மதன்-னு சொல்லி உன் காதல் கவிதை/கதைகளை படிக்கச் சொல்லேன்”

“அது சீட்டிங் டி, என் திறமையை அவகிட்ட நிரூபிக்கணும்”

“மாப்ள, நான் வேணும்னா அவள ஒரு வாரம் ஃபாலோ பண்ணி, அவளுக்கு உண்மைலே எது புடிக்கும் புடிக்காது ன்னு கண்டுபுடிக்கட்டுமா?”

“அவளோட பழகியே என்னால புரிஞ்சுக்கமுடியல”

அப்ப ஒரு கம்பீரமான குரல் அதட்டலா கேட்டது – “டேய், நீ இப்படி ஏதாவது செய்வேன்னு நெனச்சிட்டே இருந்தேன், யாருடா அவ?”

மூணு பேரும் பயந்துபோய் திரும்பிப் பார்த்தா, அங்க – - – - பத்ரகாளன், அய்யனார், நரசிம்மர், காலபைரவர் ன்னு எல்லா உக்ர கடவுள்களையும் மிக்ஸில போட்டு, கொஞ்சம் நெறையவே மிளகாய்த்தூள், உப்பு, புளி எல்லாம் சேர்த்து, போதாதுன்னு, நம்பியார், ரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் ல ஆரம்பிச்சி அரவிந்தசாமி வரைக்கும் எல்லாவிதமான வில்லன்ஸ்-யையும் போட்டு, மிக்ஸிய ஒரு ரவுண்டு ஓட்டுனா என்ன கெடைக்குமோ அந்த மாதிரி நின்னுட்டு இருந்தார்,

மகாகனம் பொருந்திய சீனிவாச ராகவன். சுருக்கமா சொன்னா கமலோட அப்பா……

(தொடரும்)

9

<<காதல் என்பது பட்டினி கிடப்பது, பசி இல்லாவிடினும்>>

டைனோசரோட கால்ல மாட்டின கரப்பான் பூச்சி மாதிரி, ரோடு ரோலரோட சக்கரத்துல மாட்டின நடவண்டி மாதிரி அவங்க மூணு பேரும் பம்மிட்டு நின்னாங்க.

அவனோட அப்பா கேட்டாரு – “சொல்லுடா, யார லவ் பண்ற?”

“அப்பா! அப்படி எதுவுமில்லப்பா”

“பொய் சொல்லாத. நீ பேசினது கேட்டுட்டு இருந்தேன்.”

“அய்யோ இல்லப்பா. நான் எழுதிட்டு இருக்கற கதைல வர்ற சீன் பத்தி பேசிட்டிருந்தோம்.”

“உண்மையாவா?”

“ஆமாம்பா”

“ஹ்ம்ம். காதல் காத்தாடி ன்னு ஏதாவது பூச்சாண்டி காட்டினா உன்ன பின்னி பெடல் எடுத்துடுவேன்”

“கமல் அப்படில்லாம் பண்ணமாட்டாங்க” – சொல்லிகிட்டே அவன் அம்மா வந்தாங்க.

“பாத்துக்க, எனக்கு இதெல்லாம் புடிக்காது” – சொல்லிட்டு அவர் கோவமா கெளம்பிட்டாரு.

“கமல்! விடுடா, இவ இல்லன்னா இன்னொருத்தி. ஓ.எல்.எக்ஸ்-ல உன் காதல் விற்பனைக்குன்னு விளம்பரம் குடுத்தா நூறாயிரம் பொண்ணுங்க வரிசை கட்டி பட்டய கெளப்புவாங்களே”

“அய்யோ அம்மா, நீ வேற. என் பின்னாடி வர்ற ஹட்ச் நாய் விட, எனக்குப் புடிச்ச கழுதைதான் எனக்கு வேணும்”

“பின்றடா மாப்ள, உன்னப் போயி அவ பாடா படுத்தறாளே” – இது அறிவு.

“டேய் மேட்டருக்கு வாங்கடா, அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம்” – இது வாசுகி.

“நான் ஒரு சூப்பர் ஐடியா வெச்சிருக்கேன். வாங்க, வந்து என் அறிவ உபயோகிச்சிக்கோங்க” – என்றபடி சீன்ல மொத மொதலா என்ட்ரி போட்டாள் ப்ரஷிதா.

அவளப் பத்தி இன்ட்ரோ குடுக்க நெறைய மேட்டர் இருக்கு, சுருக்கமா சொல்றேன். கமலோட அத்தைப் பெண். முறைப்படி பார்த்தா அவனோட முறைப்பெண், முறைக்காம பார்த்தா அவனைவிட பத்து வயசு சின்னவ, மறைக்காம பார்த்தா இப்பதான் காலேஜ்ல சேர்ந்துருக்கா. செம அழகி, ஸோ அவள எப்பவும் பத்து பேர் ஃபாலோ பண்ணிட்டே இருப்பாங்க. மௌனராகம் கார்த்திக்கை விட ஓவர் குறும்பு. கமல் ன்னா அவளுக்கு அவ்ளோ புடிக்கும், மாமா ன்னு தான் கூப்புடுவா.

“அடி அறுந்த வாலு, உன்ன யாரு இங்க கூப்பிட்டா? போய் படிடி” – இது கமல்.

“மாமா, அடங்கு. உன் காதல் சக்ஸஸ் ஆகல ன்னா அது எனக்குதான் டேஞ்சர், உன்ன என் தலைல கட்டிடுவாங்க. எப்படியாவது உன் காதல ஜெயிக்க வெச்சிடலாம்”

“எல்லாரும் ஒண்ணா கூடி கும்மியடிக்கறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க, சரி யார் யாருக்கு என்னென்ன ஐடியா தோணுதோ சொல்லுங்க” ன்னான் கமல்.

அடுத்த ஒரு மணி நேரம் ஆளாளுக்கு அவங்கவங்களுக்கு தோணினத சொன்னாங்க – சும்மா சொல்லக்கூடாது, அவங்க கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் எறக்கி வீடு கட்டி, சாமியாடி, காட்டு காட்டுன்னு காட்டுனாங்க.

ஆனா, கமலுக்கு யார் சொன்ன ஐடியாவும் வேலைக்கு ஆவும்னு தோணல. ‘வெத்து ஐடியா வேலைக்கு ஆகாது, ஓவர் ஐடியா ஒடம்புக்கு ஆகாது’ ன்னு சொல்லி, எல்லாரையும் போகச்சொல்லிட்டு மதில் மேல சாஞ்சி நின்னுகிட்டு யோசனையா நிலாவைப் பார்த்துக்கிட்டே நின்னான்.

அப்ப அவன் தோளை யாரோ தொட்டாங்க. திரும்பிப் பார்த்தா, வாசுகி.

“டே கமல், சின்ன வயசுலருந்து உன்ன பார்க்கறேன். எந்த பிரச்சனையும் உன்ன இவ்ளோ பாதிச்சதேயில்ல. கவலைப்படாத. சாப்டுட்டு படு, காலைல நல்லதா ஒரு வழி தெரியும். எனக்கு உன்மேல முழு நம்பிக்கை இருக்குடா”

ஒரு லட்சம் யானை பலம் வந்த மாதிரி உணர்ந்தான்.

“சரிடி, கொஞ்சம் நேரம் கழிச்சி வர்றேன், எல்லாரும் ஒண்ணா சாப்டலாம், ரெடி பண்ணு”

அவள் கீழே இறங்கும்போது, அவளை அழைத்து சொன்னான், “அப்பா மட்டும் நம்மகூட சாப்பிடாம பார்த்துக்க, இல்லன்னா என் மூடு அவுட் ஆயிடும்”

சிரித்து தலையாட்டிச் சென்றாள்.

கொஞ்சம் நேரம் தனிமையில் நின்றான். பளிச்சென உள்ளுக்குள் பல்ப் எரிந்தது.

‘யுரேகா’ என மனதுக்குள் கத்திக்கொண்டே, இரண்டிரண்டு படிகளாக இறங்கினான், உற்சாகமாக.

(தொடரும்)

10

<<காதல் என்பது முட்டாள்தனமானது, அறிவாளியே செய்தாலும்>>

டைனிங் டேபிள் களை கட்டியது.

“டேய் மாமா! இந்தப் பசங்க தொல்ல தாங்கல, எப்பவும் என்னையே சுத்தி வரானுங்க” – இது யார்ன்னு சொல்லத் தேவையில்லை, ப்ரஷிதா-தான்.

“என் பேர்ல இருக்கறது உன் காலேஜ் பசங்களுக்கு சுத்தமா இல்லடி, போயும் போயும் உன்ன யா சைட் அடிக்கறானுங்க” – கேப்ல புகுந்து கலாய்த்தான் அறிவு.

“வேணாம், எதாவது திட்டிடுவேன். மாமா, பேசாம ஒண்ணு பண்ணவா? உன்னோட கவிதை புக் எதாவது குடுத்து படிக்கச் சொல்றேன், மூஞ்சிய சொரண்டுவானுங்க, பாயைப் பிராண்டுவானுங்க, அப்பறம் என்னை தொந்தரவு பண்ணமாட்டாங்க”

“கலாய்ன்னு நெனப்பு? அவனுங்கள ஐ-செக்அப் பண்ண சொல்லு, பளிச் ன்னு தெரியும். இவளையா இவ்ளோ நாளா பருப்புன்னு நெனச்சோம்னு வேற நல்ல ஃபிகர் பின்னால போவாங்க” – சாட்சாத் கமலேதான் பதில் கலாய்த்தான்.

“வாசுகிக்கு நல்ல வரன் வந்திருக்குடா” – இது கமல் அம்மா.

“எல்லாம் சரி, கல்யாணத்துக்கு அப்பறம் அவரை யார்ன்னு ஞாபகமில்லை ன்னு சொல்லுவா, அவுருக்கு மண்டைல இருந்து பாதம் வரைக்கும் காய்ஞ்சி தேய்ஞ்சி கஞ்சி ஆயிடுமே”

“டேய்ய்ய்” ன்னு ஒரே ஒரு சவுண்ட் வுட்டா வாசுகி, கமல் அடங்கிட்டான்.

“அக்கா! வாசுகிக்கு எப்ப கல்யாணம் முடிக்கறது? கமல் எப்ப ஆர்த்திய மடக்கி கல்யாணம் வரைக்கும் போறது? இது ஒண்ணும் ஆவரதில்ல, ஷார்ட் கட்ல மொதல்ல எனக்கு கல்யாணம் முடிச்சிரு” – அறிவு ஏக்கமாகக் கேட்டான், கமல் அம்மாவிடம்.

“உனக்கு இனிமேல்தான் பொண்ணு தேட ஆரம்பிக்கணும், எவ்ளோ நாள் ஆகுமோ? அதுக்குள்ள எம்புள்ளயே ஆர்த்தியை மடக்கிடுவான்போல” – ஒரே வாய்ல ரெண்டு கலாய்.

“அந்த கஷ்டம் உங்க யாருக்கும் வேணாம்னு தான் நானே ஒருத்திய செட் பண்ணிட்டேன்” – அறிவு சொன்னத யாரும் ஒரு நிமிஷம் நம்பல.

“எப்படிடா மாமா… ஸாரி அறிவு? எப்படிடா காதல்ல ஜெயிச்ச? என்கிட்டகூட சொல்லல?” – இது கமல்.

“ஸாரிடா மாப்ள, நீயே கஷ்டத்துல இருக்க, அப்பறம் சொல்லலாம்னு இருந்தேன். அவ வேற யாரும் இல்ல, ஆர்த்தியோட ஃப்ரெண்ட் வாணி-தான். அவள எப்படி மடக்கினேன்னு சொன்னா ஆச்சர்யப்படுவ. உன்னோட கவிதைகளை நான் எழுதின மாதிரி சொல்லித்தான்”

எல்லாரும் அறிவுக்கு கை கொடுத்த கையோட கமலுக்கும் கை கொடுத்தாங்க – “உன் கவிதைகள் எவ்ளோ யூஸ் ஆயிருக்கு பாரு” ன்னு.

கமல், அறிவைக் கட்டிப் பிடிச்சு பாராட்டினான், “உண்மையாவே சந்தோஷமா இருக்குடா. என்ன உதவி வேணும்னாலும் கேளு”

“அப்பப்போ புதுசா கவிதை எழுதிக்குடு, அது போதும்”

“அறிவு! ரேஸ்ல வண்டி ஓட்டுறது அவன், கப் உனக்கா? என்னமோ போ! நீ செட்டில் ஆனா சரி. அப்டியே வாணியோட சைடுலருந்து நல்ல பையன் யாராவது இருந்தா, என் பக்கம் தள்ளிவுடு, கொஞ்ச நாள் சுத்திட்டு கழட்டிவுட்டுர்ரேன்” – வேற யாரு? ப்ரஷிதா-தான்.

“ஏண்டி! இப்ப உன் லிஸ்ட்ல இருக்கற இளிச்சவாயனுங்க பத்தாதா?”

“கமல், ஆனா ஒண்ணு! உன் கவிதைனால அறிவுக்கே காதலி செட் ஆயிட்டா. நீ காதல் ராம்ராஜ்யத்துக்கே சக்கரவர்த்திடா” ன்னு கை தட்டுனா.

கமல் மென்மையா சிரிச்சான்.

கமலோட அம்மா திட்டவட்டமா சொன்னாங்க “டேய் அறிவு! கமலுக்கும் வாசுகிக்கும் முடிச்சிட்டுதான் உனக்கு, அதுவரைக்கும் காதலோ டேட்டிங்-கோ பண்ணிட்டே இரு”

கொஞ்சம் நேரம் வாசுகிக்கு வந்த வரன் பத்தி பேசினார்கள். கமல் ஒரு தடவ அவர பார்த்து பேசிட்டு முடிவு பண்ணலாம்னு முடிவு பண்ணாங்க. அறிவு அவரை ரகசியமா ஃபாலோ பண்ணி உண்மைலயே நல்லவரான்னு பாத்துடலாம்ன்னு சொன்னான்.

எல்லாரும் படுக்க போனாங்க.

‘ஆர்த்தி! நாளைலர்ந்து ஒரு புது கமல்-அ பார்க்கப்போற’ ன்னு மனசுல சொல்லிகிட்டே படுத்தான் கமல்.

சிறுத்தை சீறிப் பாயப்போகுது, பார்க்கறதுக்கு நீங்க ரெடியா?

(தொடரும்)

11

<<காதல் என்பது நினைவை உணவாயிடுவது, மனப்பசிக்கு>>

“நீங்கதாங்க ஆதர்ஷ காதலன்”

“இவ்ளோ காதல எங்கங்க ஒளிச்சி வெச்சிருந்தீங்க இத்தனை நாளா?”

“எனக்கு என்னென்ன புடிக்கும் புடிக்காது ன்னு மொத்தமா தெரிஞ்ச ஒரே மனுஷர் நீங்கதாங்க”

“உங்க கூட பேசிட்டு இருந்தா நேரம் போறதே தெரியலங்க”

என்ன பார்க்கறீங்க? இதெல்லாம் பெண்ணானப்பட்ட ஆர்த்தி நம்ம கமலைப் பார்த்து சொல்றதுதான் இப்பல்லாம்.

போன ஒரு வாரம் எப்படி போச்சுன்னே தெரியல. ஆர்த்தி கமலுக்கு பாராட்டு விழா எடுத்து ‘காதல் சாம்ராஜ்ய சக்கரவர்த்தி’ ன்னு பட்டம் கொடுக்காதது ஒண்ணுதான் நடக்கல – வசதி இருந்தா அதையும் செஞ்சிருப்பா – அதுதவிர எல்லாம் நடந்துச்சி.

இத்தனைக்கும் கமல் அவகிட்ட, தான் ஒரு பிரபலமான காதல் எழுத்தாளன்னு சொல்லவேயில்ல.

ஆர்த்தியே இப்பல்லாம் அவளாவே அவனுக்கு அடிக்கடி ஃபோன் பண்றா. அவ ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் கமலைப் பத்தி ரொம்பப் பெருமையா சொல்றா. எப்பவும் அவன பாராட்டிட்டே இருக்கா. எல்லாத்தையும் விட, அவன வாடா/போடா ன்னு கூப்பிட்டுட்டு இருந்தவ, இப்பல்லாம் வாங்க/போங்க ன்னுதான் கூப்புடுறா.

ஆர்த்தியோட ஃப்ரெண்ட் வாணி மூலமா விஷயத்தைக் கேள்விப்பட்ட அறிவுக்கு சந்தோஷத்துல ஃபேஸ்புக் எது வாட்ஸ்அப் எது ன்னு புரியல (லைக் பட்டன வாட்ஸ்அப்ல தேடறான்). கமலைக் கட்டிப்பிடிச்சி தூக்கிக்கொண்டாடினான்.

வாசுகி ஆனந்தக் கண்ணீருடன் கைகுலுக்கினாள்.

அவன் அம்மா “என் பையனா கொக்கா” ன்னாங்க.

“அப்பாடா, நான் உன்கிட்டருந்து கிரேட் எஸ்கேப், இனி எனக்கான ஆளை நிம்மதியா தேடலாம். கலக்கிட்ட மாமா” ன்னா ப்ரஷிதா.

வீட்ல மத்த பெண்கள் எல்லாரும் பாராட்டினாங்க.

கமல் ஆர்த்திகிட்ட தான்தான் மன்மதன்-ங்கற எழுத்தாளன்னு சொல்லிடலாம்னு நெனச்சான் – ஆனா அதுக்குள்ள எல்லா பத்திரிக்கைலயும் அன்னைக்கு தலைப்புச் செய்தி கமல்தான்.

“காதல் பிரபஞ்ச பேரரசன் மன்மதன் காதலில் விழுந்தார். அவரின் ஆதர்ஷ காதலி ஆர்த்தி” என்று இருவரின் ஃபோட்டோவோட சுடச்சுட செய்தி மாநிலம் முழுவதும் மானாவாரியா சர்குலேட் ஆச்சு.

அதப்படிச்சி ஆர்த்தி ஆத்திரமா கமலைப் பார்க்க அவன் வீட்டுக்கே வந்துட்டா.

“என்னங்க இது?” ஆதங்கமா கேட்டாள்.

“ஸாரி ஆர்த்தி. நானே உன்கிட்ட சொல்லணும்னு நெனச்சேன், ‘நான்தான் மன்மதன் ங்கற எழுத்தாளன்’ னு, அதுக்குள்ள இவங்க முந்திக்கிட்டாங்க”

“அத விடுங்க, அது எனக்கு சந்தோஷம்தான். ஆனா இவங்க என்ன இப்படி பண்ணிட்டாங்க?”

“எதப்பத்திம்மா சொல்ற? நம்ம காதலை இவங்க நியூஸ் ஆக்கிட்டதையா?”

“இல்லைங்க. என்னோட ஃபோட்டோவப் பாருங்க. நல்லாவேயில்ல. ஒடனே பத்திரிக்கை ஆபீசுக்கு ஃபோன் போட்டு ‘வேற நல்ல ஃபோட்டோ தர்றோம்’ ன்னு சொல்லுங்க”

சிரிக்கறதைத் தவிர வேற வழியில்லை.

அதெல்லாம் சரி…. அவள இம்ப்ரஸ் பண்ண முடியாம திணறிட்டு இருந்தானே, எப்படி ஒரே வாரத்துல நிலைமை தலைகீழா ஆச்சு ன்னு சந்தேகமா?

அது ரொம்ப ஸிம்பிள்-ங்க.

அவ சொல்றதுக்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போட ஆரம்பிச்சான்.

(முற்றும்)

பின் குறிப்பு இல்லாத கதையும், பிஞ்சு கத்திரிக்கா இல்லாத குழம்பும் நல்லா இருந்ததா வரலாறு பூகோளம் அறிவியல் எதுவும் கிடையாது – ஸோ ஒரே ஒரு அத்தியாயம் வெய்ட் பண்ணுங்க.

12

<<காதல் என்பது தெய்வீகமானது, நாத்திகனுக்கு>>

–: பின்குறிப்பு :–

கமலோட அப்பா பத்திரிக்கைல நியூஸ் படிச்சி, வீட்டையே ரெண்டு ஆக்கிட்டார். அவர் கால்ல விழாத குறையா சம்மதம் வாங்கறதுக்குள்ள ஆர்த்திக்கு குழந்தையே பொறந்துடுச்சி, கனவுல.

**************

இப்பல்லாம் கமல் எழுதற கவிதைகள் இரண்டு வகைப்படும் – உலகத்துக்காக எழுதறது மற்றும் அறிவோட காதலி வாணிக்காக எழுதறது. இப்ப வரைக்கும் வெற்றிகரமாக இதெல்லாம் தன்னோட கவிதைகள்ன்னு அறிவு அவளை நம்பவெச்சிட்டிருக்கான். அவ ஒரு பச்ச மண்ணு, பாவம் நம்பிகிட்டு இருக்கா.

**************

வாசுகிக்கு வந்த வரனை கமல் பார்த்துப் பேசி, இம்ப்ரஸ் கம்ப்ரஸ் எல்லாம் ஆகி, நிச்சயதார்த்தம் முடிஞ்சி, அடுத்த வாரம் கல்யாணமே முடிஞ்சுடும் – ஆனா அறிவு இன்னும் அவரை ஃபாலோஅப் செஞ்சு முடிக்கல. அவங்களுக்கு குழந்தை பிறக்கிறதுக்குள்ளயாவது அவர் நல்லவரா இல்லையான்னு ரிபோர்ட் தர்றேன் னு சொல்லியிருக்கான், தந்துடுவான்னு நம்புவோம்.

**************

தன்ஷிகாவை இப்பல்லாம் எவனும் ஃபாலோ பண்றதில்ல. ஜாலியா டேட்டிங் மட்டும் பண்ணவ, கமல்/ஆர்த்தி ரெண்டு பேரும் சின்சியரா லவ் பண்றத பார்த்து தானும் உண்மைலயே ஒருத்தன காதலிக்கணும் ன்னு முடிவு பண்ணிட்டா. இது தெரிஞ்சி பசங்க எல்லாம் அப்பீட்டு. உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பையன் யாரையாவது அவளுக்கு ரெஃபர் பண்ணுங்களேன், ப்ளீஸ்.

**************

ஒரே மேடைல கமல்/ஆர்த்தி மற்றும் வாசுகி/ராகவன் கல்யாணங்கள் நல்லபடியா முடிஞ்சது. கமலோட அப்பா இன்னும் கடுப்பாவே இருக்கார், உள்ளுக்குள்ள.

**************

எல்லாம் நல்லா முடிஞ்சதே, சுபம் போட்டுடலாமேன்னு நெனச்சேன் – ஒரு பிரச்சனை ‘ஸ்டார்ட் த மியூசிக்’. வேற ஒண்ணும் இல்ல – கமலோட அப்பா இனி யாரையுமே காதல் கல்யாணம் பண்ணிக்க விட மாட்டாராம். அறிவு, தன்ஷிகா-ல ஆரம்பிச்சி, நேத்து தான் டீன்ஏஜூக்கு காலடி எடுத்து வெச்ச, கமலோட கடைசி சின்னம்மாவோட பொண்ணு ஹாரிகா வரைக்கும் கொலவெறி ஆயிட்டாங்க.

**************

ஆ! சொல்ல மறந்துட்டனே? கமலோட அடுத்த கதையோட தலைப்பு “காதல் செய்ய ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே பெத்தவங்க சம்மதம் ‘ப்ரீ-பெய்டா’ வாங்கறது எப்படி?”. புக் ரிலீஸ் ஆகறதுக்குள்ளயே ஒரு கோடி காப்பி ஆர்டர் செஞ்சுட்டாங்க.

(பின்குறிப்பும் முடிந்தது) 

தொடர்புடைய சிறுகதைகள்
"மாதேஷ் ஸார்! இப்படி அநியாயமா பொய் சொல்லி, என் சொத்தை அபகரிச்சவனை விடுதலை பண்ண விட்டுட்டீங்களே" "நீ மொதல்ல என்கிட்ட இந்த வழக்கைக் கொண்டு வந்திருந்தா நிலைமையே தலைகீழ் ஆயிருக்கும். உன்னை யாருய்யா என் தொழில் எதிரி ஈஸ்வரன் கிட்ட போகச் சொன்னா?" "உன் ...
மேலும் கதையை படிக்க...
"நான் எந்த கார் வாங்கணும்னு முடிவு பண்ணிட்டேன்" - வீட்டில் எல்லோரிடமும் அறிவித்தேன். "அப்பாடா. கடைசியா முடிவு பண்ணீங்களா? இனிமே சோதனை ஓட்டம் போகலாம்னு படுத்தமாட்டீங்களே?" தர்மபத்தினி லாவண்யா. "வாழ்த்துக்கள் சுந்தர்! எவ்ளோ காசு ஆகும்டா?" அப்பா கிருஷ்ணன். "கண்ணு! உனக்கு திருப்தியா இருக்கா? எல்லாரும் ...
மேலும் கதையை படிக்க...
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய் மற்றும் அஜித் எல்லோரும் உடன்பிறந்தவர்கள். சின்ன வயதிலிருந்தே ரொம்ப ஒட்டுதல். ரஜினிக்கு மட்டைப்பந்து விளையாட்டு ரொம்பவும் பிடிக்கும், ஆனால் அவர் தில்லுமுல்லு ஏதும் பண்ணாமல் நேர்மையாக விளையாடக்கூடியவர். கமல் ஒரு சகலகலா வல்லவர். பந்து போடுவது, ...
மேலும் கதையை படிக்க...
"இதனால் மேல்கலிங்கத்து சோழிங்க மக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், நமது மாமன்னர், பாரெல்லாம் பெருவெற்றி கண்ட பேரரசர், உலகை உலுக்கிய உத்தமர், மக்கள் போற்றும் மகேசன், எதிரிகள் அஞ்சும் எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன் அவர்களுக்கு நாள்பட தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கும் தீராத ...
மேலும் கதையை படிக்க...
"ஸார்! வெய்ட் குறைக்கணும், என்ன பண்ணலாம்?" சரவணன் வழக்கமாக யாரைப் பார்த்தாலும் கேட்பது இதுதான். அவன் அப்படி ஒன்றும் குண்டு இல்லை, வெறும் நூறு கிலோ தான். அவன் உயரத்துக்கு, வயதுக்கு சரியான எடை என்றால், அறுபது கிலோ தான் இருக்கணும். சின்ன வயசுல அவன் ...
மேலும் கதையை படிக்க...
பொய்மையும் வெல்லும்
கார் வாங்கப் போறேன்
மட்டைப்பந்து போர்
எழுபத்து நான்காம் எழுட்சிமான் எலிமாறன்
நாற்பது கிலோ குறைக்கணும் ஸார்!!

நிஜமான கற்பனைக் காதல் மீது 8 கருத்துக்கள்

 1. சத்யஸ்ரீ says:

  பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி. உங்களது கருத்தை பவ்யமாக ஏற்கிறேன், திருத்திக் கொள்கிறேன்.

 2. SATHISH S says:

  நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

  • சத்யஸ்ரீ says:

   பின்னூட்டத்திற்கு நன்றி

 3. ஜோனி says:

  அருமை, இதை படித்தபின் தான் படிக்கும் ஆர்வம் தூண்டபடுகிறது…
  ” ஆமா ” மந்திரம்

  • சத்யஸ்ரீ says:

   பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!!

 4. Sathish Kumar says:

  அருமையான கதை அதுவும் உங்களோட எழுத்து நடை மிகவும் சூப்பர் சிரித்து சிரித்து வயிறே வலி எடுத்துவிட்டது தொடரட்டும் உங்கள் எழுத்து பனி வாழ்த்துக்கள்

 5. Ramachandran says:

  could have been an audio book story given your good narration timing skills. One liners are good. So much illustrations make it lenthy and boring at times.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)