Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தோற்றுப் போனவர்கள்

 

ஆயிரமாயிரம் வண்ணப்பூக்கள் சிதறிக்கிடந்த பூங்கொத்து விற்பனைக் கடை ஒன்றில், தனது கூந்தலிலிருந்த மழை நீரை உதறியபோது தான் முதன்முதலாக ஜோவைப் பார்த்தாள் ஜெனிஃபர்.

அது மெலிதாகத் தூறிக்கொண்டு இருந்த ஒரு நவம்பர் மாத மழைக்காலம். சர்ச்சுக்குச் செல்லும் மலைப் பாதையில் ஏறிக்கொண்டு இருந்த போதுதான் இருவரும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொண்டார்கள். கண்களிலிருந்து வழிந்தது மழை நீரா, கண்ணீரா என அறிய முடியாத இன்னொரு மழைக்கால மாலையில் தான் இருவரும் பிரிந்ததும். ஆறு வருடங்கள் கழித்து, ஜெனிஃபர் மீண்டும் ஜோவை சர்ச்சில் இன்று மாலை சந்திக்கிற போதும் மழை!

தூரத்துச் சொந்தமான கிறிஸ்டோபரின் திருமணத்துக்கு வந்திருந்தாள் ஜெனிஃபர். அவளுக்கு முன்னால், நான்கு வரிசை தள்ளி அமர்ந்திருந்தான் ஜோ, கவனமாக ‘பிரைடல் மார்ச்’ பாடலைப் பாடிய படி!

பாடல் முடிந்ததும் ஃபாதர், ‘‘பிரியமானவர்களே… இந்த மாலை வேளையில், கிறிஸ் டோபரையும், ஜெசிந்தாவையும் திருமணத்தில் இணைப்பதற்காக கர்த்தர் முன்னிலை யில்…’’ என்று கூறிக் கொண்டு இருந்தபோது, தற்செயலாகத் திரும்பிய ஜோ இவளைப் பார்த்து விட்டான். அவன் பார்வை பட்டதும், ஜெனிஃபரின் உடல் ஒரு விநாடி சிலிர்த்து அடங்கியது. ‘‘கர்த்தரே…’’ என்று உதடுகளைக் கடித்துக்கொண்டாள். மேற்கொண்டு அங்கிருந்தால் உடைந்து, அழுதுவிடுவோமோ என்ற பயத்தில், வேகமாக எழுந்து சர்ச்சைவிட்டு வெளியே வந்தாள்.

நல்ல மழை. புடவைத் தலைப்பால் தலையை மூடிக்கொண்டு, அருகிலிருந்த கார் ஷெட்டை நோக்கி ஓடினாள். புடவை முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்ட போது, வெடித்துக் கிளம்பிய அழுகையை ஜெனிஃபரால் தடுக்க முடியவில்லை. ‘‘ஜோ…ஜோ…’’ என்று மனதுக்குள் கூவி அழுதாள்.

‘‘ஜெனிஃபர், உன்கூட இருக்கி றப்பதான் சந்தோஷமா ஃபீல் பண்றேன். என்னை விட்டுப் பிரிஞ்சுட மாட்டியே?’’

‘‘ஏய்… என்ன திடீர்னு சந்தேகம்?’’

‘‘எனக்கு வேலை கிடைக்கிற மாதிரி தெரியலை. நீயும் எவ்ளோ நாள்தான் வீட்ல சமாளிப்பே? எம்.காம்., முடிச்சுடு றேன்னு சொல்லி, உங்க வீட்ல கல்யாணப் பேச்ச எடுக்க விடாம வெச்சிருக்கே! இந்த வருஷத்தோட உன் படிப்பு முடியுது. அதுக்குப் பிறகு என்ன பண்ணப் போற? வாழ்க்கைல எனக்கு இருக்கிற ஒரே பிடிப்பு நீதான் ஜெனிஃபர்! நீயும் போயிட்டேன்னா நான் அவ்வளவு தான்!’’

‘‘வீணா ஏன் கண்டதையும் மனசுல போட்டு உழப்பிக்கறே? உனக்குக் கட்டாயம் வேலை கிடைச்சிடும்!’’

ஆனால், ஜெனிஃபர் சொன்னபடி அவனுக்கு வேலை கிடைக்கவில்லை. ஜெனிஃபரும் எம்.காம்., முடித்துவிட்டாள். வீட்டில் அவளைத் திருமணத்துக்கு நெருக்க ஆரம் பித்தனர். இவளுக்குத் திருமணம் செய்துவிட்டுதான், திருமணம் செய்து கொள்வேன் என்று ஜெனிஃபரின் அண்ணன் பிடிவாதமாக இருந்தான். ஜோவுக்கு விரைவில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவள் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்த சமயத்தில், வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தனர். ஜெனிஃபர் மறுப் பேதும் சொல்லவில்லை.

மெலிதாகத் தூறிக்கொண்டு இருந்த ஒரு மாலைப்பொழுதில், ஜோவைப் பார்க்கில் சந்தித்து ஜெனிஃபர் தன் முடிவைத் தெரிவித்தபோது, அதிர்ந்து போனான் ஜோ. தனக்காக இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கக்கூடாதா என்று கெஞ்சினான். தனது வீட்டுச் சூழல் சாதக மாக இல்லை என்று சொல்லி, தன்னை மறந்துவிடுமாறு உறுதியாகச் சொல்லி விட்டு வந்துவிட்டாள் ஜெனிஃபர்.

அதன் பின் அவள் அவனைப் பார்க்கவே இல்லை. திருமணமாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஜோவுக்கு சென்னையில் வேலை கிடைத்து, அவன் குடும்பமே சென்னைக்குச் சென்று விட்டதாகக் கேள்விப்பட்டாள். அதன் பிறகு ஜோவைப் பற்றிய தகவல்களும் இல்லை.

ஜெனிஃபரின் காதல் வாழ்க்கைதான் சோகத்தில் முடிந்ததென்றால், திருமண வாழ்க்கையும் சுகப்படாமல் போயிற்று. ஜெனிஃபருக்கு, அவர்கள் வீட்டில் பார்த்துவைத்த புருஷன் சரியான குடிகாரன். தினமும் குடி… தகராறு… அடி… உதைதான்! இதற்கு நடுவில் எப்படியோ ரெண்டு பிள்ளைகளையும் பெற்று, அவர்களுக்காக அனைத்தையும் சகித்துக்கொண்டு, குடிகாரக் கணவனு டன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறாள்.

நல்ல புருஷன் அமைந்தாலே, அவ்வப் போது பழைய காதலனின் நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியாது. தினமும் குடித்துவிட்டு வந்து உதைக்கும் புருஷன் அமைந்தால் கேட்கவா வேண்டும்? எப்போதும் ஜோவின் நினைவுகள், அவளைத் தொடர்ந்துகொண்டே இருந்தன. ஜோவைத் தவிக்கவிட்டுத் திருமணம் செய்துகொண்டதற்கான தண்டனைதான் இந்த வாழ்க்கையோ என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள். ‘இன்று ஜோவிடம் பேச முடிந்தால், இதையெல்லாம் அவனிடம் கூறி அழ வேண்டும்!’

திருமணம் முடிந்தவுடன், அனைவரும் எழுந்து கலைந்தனர். இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றனர்.

ஜெனிஃபர் சர்ச்சைவிட்டு வெளியே வர, ஜோ இவளுக்காகப்படிக் கட்டுகளில் காத்துக்கொண்டு இருப் பது தெரிந்தது. சுற்றிலும் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தபடி ஜெனிஃபர், ஜோவை நெருங்கினாள். சற்றுவிட்டிருந்த மழை, மீண்டும் தூற ஆரம்பித்தது.

‘‘ஜெனிஃபர்…’’ என்ற ஜோவுக்கு லேசாகக் கண் கலங்கியது. ‘‘ஜோ…’’ என்ற ஜெனிஃபர், சட்டென்று குமுறி அழ ஆரம்பிக்க… ‘‘ஏய்… யாராச்சும் பார்க்கப்போறாங்க. கார் ஷெட் பக்கம் போயிடலாம் வா!’’ என்று கூறினான் ஜோ.

கண்களைத் துடைத்துக்கொண்டு முன்னால் நடந்தாள் ஜெனிஃபர். மழைத் துளி ஒன்று அவளது வெற்று முதுகில் விழுந்து, நேர்க் கோடாகக் கீழிறிங்கி ஜாக்கெட்டை நனைத்தது.

‘‘எப்படி இருக்கீங்க ஜோ?’’ என்று கேட்டபோது, அடக்கமுடியாமல் அவளுக்கு அழுகை வந்தது. ஜோவும் அழுகையை அடக்கிக்கொண்டு, ‘‘நல்லா இருக்கியா ஜெனிஃபர்?’’ என்றான்.

‘‘ம்…’’

‘‘என்னை எப்பவாவது நினைச்சுப் பியா ஜெனிஃபர்?’’

‘‘மனிதர்களை வேணும்னா தவிர்த்திடலாம் ஜோ. நினைவுகளை எப்படித் தவிர்க்க முடியும்? ம்… நீங்க இப்போ சென்னையிலதானே இருக்கீங்க?’’

‘‘ஆமாம் ஜெனி! உனக்கு எத்தனை பசங்க?’’

‘‘ஒரு பையன். ஒரு பொண்ணு. பெரியவன் செகண்ட் ஸ்டாண்டர்ட். அடுத்தவ எல்.கே.ஜி. உனக்கு..?’’

‘‘ஒரே ஒரு பொண்ணு.’’

‘‘மேரேஜ் லைஃப் எப்படிப் போயிட்டிருக்கு ஜோ?’’

‘‘நைஸ்… வெரி நைஸ்! நீ ஒரு முறை எமிலியைப் பார்க்கணும் ஜெனி! பயங்கர ஜாலி டைப். என் மேல ரொம்ப பொஸஸிவ்வா இருப்பா. உன் ஹஸ்பெண்ட் எப்படி?’’

கணவன் என்றொரு மிருகம் தன்னைச் சித்ரவதைப்படுத்தும் கதையை எல்லாம் ஜோவிடம் சொல்லி அழத்தான் நினைத்தாள் ஜெனிஃபர். ஆனால், ஒரு விஷயம் இடித்தது.

அவளாகவேதான் ஜோவை விட்டுப் பிரிந்து சென்றாள். இப்போது அவனிடமே தன் கணவன் சரியில்லை என்றால், ‘என்னைக் கழற்றிவிட் டுட்டுப் போனில்ல… நல்லா அனுபவி’ என்று நினைக்க மாட்டானா? ஜோ அந்த மாதிரி நினைக்கக் கூடியவன் இல்லைதான். இருந்தாலும், எனது பிரிவால் உடைந்து போனவன். அதுவும், இப்போது கல்யாண மாகி மனைவியுடன் சந்தோஷ வாழ்க்கை நடத்தி வருகிறான். இவனிடம் தன் வாழ்க்கை நரகமாகிப் போனதை ஏன் சொல்லவேண்டும்?

‘‘என் கணவர் ஒரு ஜெம்! எந்நேரமும் ஜெனி… ஜெனின்னு என்னையே சுத்திச் சுத்தி வருவார், ஜோ!’’ என்றாள் ஜெனிஃபர், தூரத்தில் காற்றில் ஆடிக் கொண்டு இருந்த சைப்ரஸ் மரங்களைப் பார்த்தபடி.

‘‘கர்த்தர் நம்மைக் கைவிடலை ஜெனி! நாம பிரிஞ்சாலும், நம்ம ரெண்டு பேருடைய மேரேஜ் லைஃபுமே நல்லபடியா அமைஞ்சுடுச்சு’’ என்றான் ஜோ.

மேலும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது.

‘‘சாப்பிடப் போகலாமா?’’

‘‘இல்லை. நான் கிளம்பறேன். போய் பஸ்ஸைப் பிடிக்கணும். இப்ப போனாதான் சரியாயிருக்கும்’’ என்றான் ஜோ.

‘‘கிளம்புறியா… ஓ.கே. ஆல் தி பெஸ்ட்!’’ என்று கூறிய ஜெனிஃபர், ஒரு விநாடி ஜோவை உற்று நோக்கிவிட்டு, சட்டென்று திரும்பி நடந்தாள். பள்ளியில் நுழைவதற்கு முன் திரும்பிப் பார்த்தாள். ஜோ மழையில் நனைந்தபடி அவளைப் பார்த்தபடியே நின்றுகொண்டு இருந்தான். அவளிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாமோ என்று ஜோவுக்குத் தோன்றியது.

உண்மையில் அவனுக்கும் அவன் மனைவிக்கும் சரிப்பட்டு வரவில்லை. அடிக்கடி சண்டை, பிரச்னை என்று குழந்தையுடன் அவள் தன் அம்மா வீட்டுக்குச் சென்றுவிட்டாள். இப்போது விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் அவன் ஜெனிஃப ரிடம் கூற முடியுமா? ‘நீ என்னை உதறிவிட்டுப் போனதால் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. நான் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்’ என்று கூறினால்தானே, இவனுடைய ஈகோ திருப்தி அடையும்!

பள்ளிக்கூட கேட்டிலிருந்து திரும்பிப் பார்த்த ஜெனிஃபரை நோக்கிக் கையசைத்துவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தான் ஜோ.

- வெளியான தேதி: 25 அக்டோபர் 2006 

தொடர்புடைய சிறுகதைகள்
கடவுள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், ஒரு மகா அற்புதமான தருணத்தை எங்கேனும் ஒளித்துவைத்திருப்பார். எனக்கு முப்பத்தெட்டு வயதில், கொடைக்கானலில் வைத்திருந்தார். ஏரிக்கு எதிரேயிருந்த ஓட்டலிலிருந்து காலை ஆறரை மணிக்கு நான் வெளியே வந்தேன். குளிருக்கு இதமாக ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, பனிப்புகையினூடே நடக்க ஆரம்பித்தேன். ஏரியைக் ...
மேலும் கதையை படிக்க...
ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்
பின்வரும் குறிப்புகளில் இருந்து, நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்... எஃப்.எம் தொகுப்பாளினிக்கு மதியம் 12 மணி வெயிலில் போன் போட்டு, 'குளிருதே... குளிருதே... உடம்பெல்லாம் உதறுதே...’ என்ற பாடலை ஒலிபரப்பச் சொல்லி, என் நண்பன் அரவிந்துக்கு டெடிகேட் செய்வேன் ...
மேலும் கதையை படிக்க...
ராயல் டாக்கீஸ்
நான் கையில் டிராவல் பேக்குடன் 'ராயல் டாக்கீஸ்’ தியேட்டர் வாசலை நெருங்கியபோது இன்னும் முழுதாக விடிந்திருக்கவில்லை. தியேட்டர் வாட்ச்மேனுடன் பேசிக்கொண்டு இருந்த தேவராஜ் என்னைப் பார்த்தவுடன் வேகமாக வந்து என் கைகளைப் பற்றிக்கொண்டு, ''வா மகேந்திரா...' என்றான்.நான் லேசாகச் சிரித்தபடி, ''தம்மு ...
மேலும் கதையை படிக்க...
இளையராஜா
இளையராஜாவின் இசை என்பது, வெறும் திரையிசைப் பாடல்கள் மட்டும் அல்ல; அது தமிழர்களுடைய வாழ்க்கையின் ஒரு மகத்தான பகுதி! குரல் தழுதழுக்க, என் முன்னாள் காதலியின் கடிதத்தைப் படித்து முடித்த என் மனைவி நந்தினி, ''யாரு இந்த ஜெஸ்ஸி?' என்றாள். அப்போது அவளின் ...
மேலும் கதையை படிக்க...
கண்களை இறுக மூடிக்கொண்டு, தூங்க முயற்சித்தேன். தூக்கம் வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை. மனம் வித்யாவையே சுற்றிச் சுற்றி வந்தது. ‘ஒண்ணு, ரெண்டு, மூணுன்னு எண்ணிட்டிருந்தா தூக்கம் வரும்’ என்று யாரோ கூறியது ஞாபகத்துக்கு வர, மனதுக்குள் எண்ண ஆரம்பித்தேன். ‘‘ஒண்ணு...’’ ‘ஒரு நாள்கூட, உன்னைப் ...
மேலும் கதையை படிக்க...
தீராக் காதல்
ஒவ்வொன்றாய்த் திருடுகிறாய்
ராயல் டாக்கீஸ்
இளையராஜா
ஆசை கனவே… அதிசய நிலவே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)