தாரணி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 19, 2019
பார்வையிட்டோர்: 12,132 
 

சங்கர் ‘நொஸ்க்’ வகுப்பிற்குப் பிந்திவிடுவேன் என்கின்ற தவிப்பில் மின்னல் வேகத்தில் வழுக்கும் பனியில் சறுக்கும் நடனம் பயின்ற வண்ணம் சென்றான். சில காலம் பின்லான்ட்டின் வடக்குப் பகுதியிற் குடியிருந்த பழக்கத் தோஷத்தில் வந்த நல்ல பயிற்சி அது. பின்லான்டை நினைத்த பொழுது சுருக்கென்று இதயத்தில் ஊசி ஏறிய ஒரு வேதனை அவனைத் தாக்கியது. நெஞ்சை அழுத்திப் பிடிக்க தன்னிச்சையாகக் கை சென்றது. அந்த நாட்டில் வாழ்ந்த ஒரு வருசக் கனவு வாழ்க்கை நினைவில் வந்து போயிற்று. அது தனது விதியை நிரந்தரமாக மாற்றியதை இன்னும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் வாழும்வரை அவனோடு வாழப் போகும் நிரந்தர மாற்றம் அது. அதை இனி ஆண்டவனுக்கும் மாற்றும் வல்லமை கிடையாது என்பது இன்றைய உலக யதார்த்தம். அந்த உண்மை இயமதேவனின் எருமை வாகனமாக முன்னே எப்போதும் சவாரி செய்கிறது. ஆயுள் நீட்டிக்கப்பட்ட மரண தண்டனைக் கைதியான ஒரு அவஸ்தை அவனை எங்கும் விட்டுக் கலைக்கிறது. விருப்பமில்லாத எண்ணங்கள் சிலவேளைகளில் மனிதன் விரும்பாவிட்டாலும் மூளையில் விரிந்து விடுகின்றன. எதற்கு இப்பொழுது எண்ணப் பிடிக்காதவற்றை எண்ணுகிறேன் என்கின்ற வெறுப்போடு சங்கர் தெருவை வெறித்துப் பார்த்தான். அங்கே ஒரு அழகு நடந்தது. நீண்ட கருங்கூந்தல். நான்குமுழ நாகப்பாம்பு படமெடுத்தபடி சந்திரனைக் கௌவ்விய பின் தோற்றம். உடுக்கின் இடுப்பும்… சீ வேண்டாம் அபாரப் புளுகு, துள்ளும் பின்னழகு. முன்னும் பாரென ஆசை அவனை மூர்க்கம் கொள்ள வைத்து. சந்திர வதனமா? குட்டிச் சாத்தான் கோரமா? துள்ளும் கொங்கையும், துடிக்கும் விழியும், செல்லில் தேனும் கொண்டவளா? எட்டிப் பார்த்துவிட வேண்டும் என்கின்ற திடீர் ஆசை அவனுக்கு.

சங்கரை அதிஸ்ரம் தேடி வந்தது. தாரணியின் அறிமுகம் அவனைத் தானாகவே நாடி வந்தது. முன்னே நடந்து சென்ற தாரணி குதியுயரக் குளிர் காலச் சப்பாத்து அணிந்திருந்தாள். அங்குல ஆழத்தில் பூவுள்ள சப்பாத்து அணிந்த சங்கரே தனது சமநிலையைப் பேணப் போராட வேண்டியதாகிற்று. ஒரு கணம் பிழைத்தால் மறு கணம் புவியீர்ப்பு தனது வேலையைக் கச்சிதமாய்ச் செய்வதில் தவறாது. சங்கர் சறுக்கலில் நடனமாடினாலும் கண்கள் அவளை மேய்ந்தன. அதிசயம் நடந்தது. அவன் அவளைப் பார்த்த பொழுது அப்படித்தான் எண்ணிக்கொண்டான். அன்னப்பேட்டின் அழகோடு சின்னப் பேடாக அசைந்த தாரணியைக் குதியுர்ந்த சப்பாத்து மோசம் பண்ண, புவியீர்ப்பு அவள் மீது மோகம் கொள்ள, திடீரென சத்தத்தோடு அன்னப்பேடு சேற்றுத் தாராவாகியது. அது தரையில் சுழியோடியது. சங்கர் தனது கலாரசனையைத் தூக்கி எறிந்து விட்டு, அவசரமாக அவளிடம் ஓடிச் சென்றான். சீ வழுக்கிச் சென்றான். வேதனையில் சுருங்கிய அவள் வதனமே அவனிடம் காம வேதனையைக் கிளறும் கவர்ச்சி காட்டிற்று. சங்கர் தன்னை அந்தச் சிற்றின்ப நினைவில் இருந்து விடுவித்துக் கொண்டு,

‘அடிபட்டிட்டுதோ?’ என்றான். சங்கரின் குரலில் நளினம் இருப்பதான உணர்வு அவளுக்கு.

‘விழுந்தா அடிபடாமல் இருக்கிறதுக்கு இது என்ன சந்திர மண்டலமே?’ என்றாள்.

‘இல்ல சிலருக்கு விழுந்தாலும் அடிபடாது. வேற கலக்சியில இருந்து அப்பிடியான மனிசர் வருவினமாம்.’

‘ஒ ஸ்பிறிங் கட்டியிருந்தா அடிபடாது. பகிடி விடுகிறியளாக்கும். பெரிய அறிவாளி எண்ட நினைப்பே உங்களுக்கு? உங்கட கடிய விட்டிட்டுக் கையைத் தாரீங்களா?’

‘அதுக்குத்தானே காத்திருக்கிறன்.’

‘என்ன?’

‘ஒண்டும் இல்லை.’

சங்கர் அவசரமாகக் கையைத் துடைத்துவிட்டுக் கொடுத்தான். அவள் முறைத்து விட்டு அதைப் பற்றிக்கொண்டு எழுந்தாள்.

‘சீ… சினோ இப்பிடி மோசம் செய்து போட்டுது.’ என்றாள் தாரணி தோல்வியோடு.

‘இல்லை. உங்கட சப்பாத்துத்தான் அந்த வேலையைச் செய்திருக்குது.’ சங்கர் காலைப் பார்த்த வண்ணம் கூறினான்.

‘பகிடியா உங்களுக்கு?’ மீண்டும் கேட்டாள் தாரணி.

‘பகிடியில்ல உண்மையத்தான் சொல்லுறன்.’

‘சரி.. சரி… காணும். நீங்களும் எங்க நொஸ்க் படிக்கவே போறியள்?’

‘சரியாய்க் கண்டு பிடிச்சிருக்கிறியள்.’

‘ம்… குரங்க மனிசனாக்கிற டீஎன்ஏ விஞ்ஞானமா? புத்தகப் பையோட இதுக்க அலையிறவை யுனிவர்சிற்றிக்கோ போவினம்? இது பெரிய கண்டுபிடிப்புத்தானே?’

‘நேரம் போகுது எட்டி நடவுங்க.’

‘கால் நோகுது. வழுக்கல் பயமா இருக்குது.’

‘அப்ப நான் தூக்கிக்கொண்டு போகட்டுமே?’

‘இவற்ற கதையப் பாருங்க. உங்களுக்கு வாய் நீட்டு. அறிமுகமே இல்லை. என்ன கதை கதைக்கிறியள்? இதுக்குத்தான் அறிமுகம் இல்லாத மனிசரோட கதைக்கக் கூடாது எண்டு சொல்லுறது.’

‘சொறி சொறி. நான் அதை மீன் பண்ணேல்ல. சும்மா பகிடிக்குத்தான். ஆனா நீங்கள் சொல்லுற ஒரு விசயம் பிழையா இருக்கே.’

‘என்ன அது?’

‘அறிமுகம் இல்லையெண்டு சொன்னதைச் சொல்லுறன். நீங்கள் விழுந்து, நான் தூக்கி விட்டது, உங்களோட கதைச்சது, இது அறிமுகத்தைவிட அதிகம் இல்லையா?’

‘ஐயோ… இது பெரிய அறிமுகம்தான்.’

சங்கரின் அதிஸ்ரம் தாரணி மீண்டும் பனியில் நிலை தடுமாறிச் சாங்கரைச் சட்டெனப் பற்றிக் கொண்டாள். அதன் பின்பு அவன் கையைப் பிடித்த வண்ணமே பாடசாலை வரையும் நடந்து சென்றாள்.

சங்கருக்கு அது பிடித்துக் கொண்டது. பெண்ணின் தொடுகை மன்மதக் கிரக்கம் தந்தது. பாடசாலைக்குள் இருவரும் ஒருவாறு வந்து சேர்ந்தார்கள். சங்கர் சிறிது பயந்தவாறே,
‘உங்கட ரெலிபோன் நம்பர் என்ன?’ என்று கேட்டான்.

‘அது என்னத்துக்கு உங்களுக்கு? துணிவுதான் உங்களுக்கு. உங்கட நம்பரை முதல் தாங்க பாப்பம்?’ என்றாள் தாரணி. விரும்பாதவள் போலக் காட்டிக்கொள்ளும் விரும்பும் நடப்பு என்பது சங்கருக்குப் விளங்கியது.

சங்கர் துணிவோடு தனது எண்ணைச் சொன்னான். தாரணி அதைத் தனது அலைபேசியில் குறித்துக் கொண்டாள். அத்தோடு நிற்காது மிஸ்கோல் கொடுத்து உறுதி செய்துகொண்டாள்.

‘வாடி வா.’ எனச் சங்கர் மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

*

சங்கருக்குத் தனிமை வெறுத்தது. தரணியோடு தனக வேண்டும் என்பது மனதில் இனித்தது. அதனால் அவளைத் தேநீர் அருந்த அழைத்தால் என்ன என்கின்ற குறுகுறுப்பு மனதிற்குள்ளே எழுந்தது? சிலவேளை கோபித்துக் கொண்டு தன்னுடன் கதைக்காது விட்டால் என்கின்ற பயமும் அடிக்கடி எட்டிப் பார்த்தது. அன்று நோர்வே மொழி படிக்கும் பொழுது ஒரு பழமொழியை அறிய முடிந்தது. ‘இன்தெத் வோகர் இன்தெத் வின்னர்.’ என்பதுதான் அது. அதன் அர்த்தம் துணிவு அற்றவனுக்கு வெற்றிகள் கைகூடுவதில்லை என எடுத்துக் கொள்ளலாம். சங்கருக்கு அது இப்பொழுது ஞாபகம் வந்தது. அவன் மனதிற்குள் ‘இன்தெத் வோகர் இன்தெத் வின்னர்.’ என்று சொல்லிக் கொண்டான். அலைபேசியைக் கையில் எடுத்தான். மறுமுறை உயிர் பெற்றுக் கொண்டது. இதயம் இடியாக முழங்கியது. உள்ளங்கை வியர்த்தது. என்றாலும் ‘இன்தெத் வோகர் இன்தெத் வின்னர்.’ என்பதை மனதில் இருத்திய வண்ணம் கதைக்கத் தொடங்கினான்.

‘நான் சங்கர்.’

‘தெரியும் பெயர் எழுதித்தானே நம்பர் குறிச்சு வைச்சிருக்கிறன். என்ன திடீரெண்டு ஞாபகம் வந்து இருக்குது?’

‘வரக்கூடாதா?’

‘வரலாம். வரலாம். ஏன் வரக் கூடாது?’

‘நான் ரீ குடிக்க வேணும்.’ தான் உளறுவது சங்கருக்குப் விளங்கியது. புதிராக இருந்தது.

‘அதுக்கு ஏன் போன் பண்ணுறீங்க? கேத்திலத் தட்டிவிட்டா தண்ணி கொதிக்குது. தேயிலைப் போட்டு கொஞ்சம் சீனியும் போட்டுக் கலக்கி ஆறுதலா இருந்து குடிக்கிறதுதானே?’

‘அது இல்லை.’

‘ரீ இல்லையா? கோப்பி போடப்போறியளே?’

‘நான் சொல்லுறதைக் கேளும்.’

‘சரி சொல்லுங்க சேர்.’

‘நாங்கள் ரெண்டுபேரும் ஒரு ரெஸ்ரண்டில சந்திச்சு ரீ குடிக்க வேணும். அதைத்தான் சொல்ல வந்தன். ஓகேயா?’

‘ஆ… நல்ல கதையிது… துணிவுதான் உங்களுக்கு.’

அதன் பின்பு மறுமுனை அமைதியாகியது. சங்கருக்கு அது அவஸ்தையாகியது.

‘ரீ தானே பிளீஸ்.’ என்றான் சங்கர்.

‘நிறையக் கொழுப்பு.’

‘ரீயில கொழுப்பு இல்லையே?’

‘உங்களுக்கு நிறையக் கொழுப்பு.’

‘பிளீஸ் தனிமை வெறுக்குது. கொஞ்ச நேரம் மட்டும்.’

‘நான் யோசிக்க வேணும். யோசிச்சிட்டு பிறகு உங்களுக்குப் போன் பண்ணுறன்.’

என்று கூறிவிட்டு அவள் போனைத் துண்டித்துக் கொண்டாள். சங்கருக்கு வெற்றியும் தோல்வியும் ஒரே நேரத்தில் கிட்டியதான அனுபவம். அவளுடன் கதைக்க முடிந்ததில் அவனுக்கு வெற்றி. சாதகமான பதில் கிடைக்காததில் தோற்றதான கவலை. சங்கர் அவஸ்தையாக சில நாட்களைக் கழிக்க வேண்டியதாகிற்று.

சில நாட்கள் கழித்து போன் பண்ணிய தராணி தனது வீட்டிற்குச் சங்கரை வரச் சொன்னாள். சங்கரால் அதை சில கணங்கள் நம்ப முடியவில்லை. விடுதியைவிட வீட்டில் சந்திப்பது நெருக்கமானதாய் சங்கருக்குத் தோன்றியது. அது அவனுக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. சங்கர் தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டான். பின்பு பூக்கடைக்குச் சென்று ரோஜா ஒரு கட்டு வாங்கிக் கொண்டான். அவனுக்குப் பதட்டம் தணியவில்லை. இதயம் அவஸ்தையாக ஓசை எழுப்பியது. சங்கர் அவள் சொன்ன முகவரிக்குச் சென்று கதவில் இருந்த ஆழியை அழுத்தினான்.

கதவு திறந்து கொண்டது. சங்கரைப் பார்த்த தாரணி ‘வாவ்.’ எனத் தன்னை மறந்து கூறியவள் பின்பு ‘உள்ள வாங்க.’ என்றாள்.

தாரணியும் மெல்லிய அலங்காரத்தோடு தாரகையான தோற்றம். அவளைப் பார்த்த பொழுது தான் கொஞ்சம் அதிகமாக அலங்கரித்துக் கொண்டேனோ என்கின்ற எண்ணம் சங்கருக்கு உண்டானது.

அவன் ஒரு நெளிவோடு அவளைப் பார்த்து,

‘என்னத்துக்கு வாவ் எண்டனியள்?’ என்றான்.

‘இல்ல பெம்பிள பார்க்க வந்த மாதிரி வெளிக்கிட்டு வந்து இருக்கிறியள்.’ என்றாள் தாரணி.

‘நீங்கள் பெம்பிள தானே?’

‘உங்களுக்கு வாய் எப்பவும் நீளுது.’

‘உண்மையத் தானே சொன்னான். நீங்கள் பெம்பிளதானே?’

‘ஓம் இருக்கட்டும் உள்ளவாங்க.’

‘உங்களப் பாக்கத்தானே நான் இங்க வந்திருக்கிறன்.’

‘ஓம்… ஓம்…’

‘அப்ப பெம்பிள பாக்கத்தானே வந்திருக்கிறன்?’

‘சரி… சரி… உங்கட பைத்தகிராஸ் நிரூபணம் காணும். இதுக்கும் அதுக்கும் வித்தியாசம் இருக்குது. ஜக்கெற்றத் தாங்க கொளுவி விடுகிறன்.’

‘தரணி?’

‘ம்.’

‘ஒண்டு சொல்லட்டுமா?’

‘ஐயோ! நீங்கள் என்ன சொல்லப் போறியளோ எண்டு எனக்குக் கொலைப் பயமா இருக்குது. உங்கட வாய முதல்ல தைக்க வேணும்.’

‘அப்ப வேண்டாம்.’

‘சரி பருவாய் இல்லச் சொல்லுங்க.’

‘இவ்வளவு கொஞ்ச நாளில நான் யாரோடையும் இந்த அளவுக்கு அன்னியோன்னியமாய்ப் பளகினது இல்லை. உம்மப் பார்த்ததில இருந்தே ஏதோ ஏற்கனவே பழகின மாதிரி ஒரு உணர்வு. கானகாலம் சேர்ந்து இருந்த மாதிரி ஒரு பீலிங்.’

‘வாவ். இப்பிடி வசனத்தால எத்தின பேரை விழுத்தினியள்? என்னிட்ட உந்தப் பருப்பெல்லாம் அவியாது. அதோட இரண்டும் ஒண்டுதான்.’

‘எது?’

‘உணர்வும் பீலிங்கும். நல்லாப் பூ சுத்துவியள் போல இருக்குது. என்ர இந்தக் கொண்டை அதுக்குக் காணாது போல இருக்குது.’ தாரணி தனது கொண்டையை ஆட்டிக் காட்டினாள்.

சங்கருக்கு ஏமாற்றம். அவன் சோகமாக, ‘நம்பேல்லையா?’ என்றான்.

‘சரி… சரி… நம்புறன். மூஞ்சை சுருங்கிப் போச்சுது. எனக்கும் அப்பிடி ஒரு மெல்லிய உணர்வுதான். ஆனா கொஞ்சம் தள்ளியே நிண்டு கொள்ளுங்க.’

‘ஏன்?’

‘சிலவேளை போன பிறப்பில அண்ணன் தங்கச்சியா இருந்து இருப்பமோ என்னவோ? பாசமலர் சாவித்திரி சிவாஜிகணேசன் போல…’

‘சோதப்பாதையும் தாரணி.’

‘அப்ப?’

‘இது பாசமலர் உறவா இருந்திருக்க முடியாது.’

‘ஆங்… உங்களுக்கு அதுதான் பிடிக்குமாக்கும். அப்பிடி ஒரு கற்பனை உங்கட மனதில இருக்கா?’

‘பிளீஸ் தாரணி என்னோடை விளையாடாதீர்.’

‘அப்ப யாரோடா விளையாடலாம்?’

‘அப்ப விளையாடுவம்.’

‘சரி இவ்வளவும் போதும். வந்து சோபாவில இருங்க. நான் ரீவைச்சாரன். குடிச்சிட்டு வந்த வழியப் பாத்து நடையக் கட்டுங்க.’

‘தாரணி… உமக்கு விளையாட்டுத்தான்.’

‘சத்தியமா? வேற என்ன ஐடியா உங்களுக்கு?’

‘மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத புனிதமான உறவு.’

‘தூ சொந்தமா ஒரு வசனம் தெரியாதா? ம்… யோசிப்பம்.’

அவள் சிரித்த வண்ணம் சமையலறைக்குச் சென்றாள்.

*

பழக்கம் காதலாகிப் பாலும் தேனுமாய் கலக்கத் தொடங்கிய நாட்களில், அவர்கள் காதல் காமம் என்னும் வலையில் வீழ்ந்து, உடலுறவு என்னும் அக்கினிப் பிரவேசம் செய்யாது புனிதம் காத்தது.

தாரணி வழுக்குவதற்குத் தயாராகிவிட்டாலும் சங்கார் அதைப் பின்போட்டுக்கொண்டே வந்தான். தாரணிக்குச் சிலவேளை அவன் செயலைப் பார்க்க வியப்பாக இருக்கும். ஆண்கள் என்றால் சந்ததி பெருக்கும் சிந்தையில் அலைபவர்கள் என்பதுதான் தாரணியின் முன்னைய கருத்து. அதைச் சங்கர் தலைகீழாகப் புரட்டியதான அவஸ்தையான அனுபவம். சங்கர் முத்தம் தரும்போதுகூடப் பட்டும் படாமல் முத்தமிடுவது அவளுக்கு அவன்மீது கோபத்தோடு காமத்தையும் தூண்டிவிடும். அவள் நெருங்கும் போதும் அவன் ஒதுங்கிக்கொள்வது அவள் உடலை காமத்தீயில் எரியப்பண்ணும். தரணி முடிவு செய்துகொண்டாள். பிற்பகல் சென்றால் இரவு காரியம் முடித்துக்கொண்டு வரும் நாடு இது. தன்னை எவ்வளவு காலம் சோதிப்பதாய் சங்கருக்கு உத்தேசம் என்பது அவளுக்கு விளங்கவில்லை.

சிலவேளை திருமணத்திற்குப் பின்புதான் இது எல்லாம் என்று சங்கர் நினைத்து இருக்கிறாரோ என்கின்ற எண்ணமும் அவளுக்கு அடிக்கடி வருவது உண்டு. இன்று அதைக் கேட்டு விடவேண்டும் என்று முடிவு செய்து சங்கர் வீட்டிற்கு வந்தாள். சங்கர் பீச்சா செய்தான். பின்பு அதைக் கொண்டு வந்து மேசையில் வைத்துவிட்டுத் தொலைக்காட்சியை இயக்கினான். தாரணி அவனிடம் இருந்து றீமொல்ற் கொன்றோலைப் பறித்தாள்.

‘என்ன தாரணி ரீவி பார்க்க வேண்டாமே?’

‘பார்க்கலாம். பார்க்கலாம். அதுக்கு முதல் நான் ஒண்டு கதைக்க வேணும்.’

‘சரி மகாராணி செப்புங்கள். நீங்கள் கூறுவதைக் கிரகிக்க நான் மிக்க சிரத்தையோடு காத்திருக்கிறேன்.’

‘பகிடிய விடுங்க. நான் சீரியஸ்சா கதைக்க வேணும்.’

‘சரி சொல்லும்.’

‘நாங்கள் எவ்வளவுகாலம் இப்பிடியே இருக்கிறது?’

‘எவ்வளவுகாலம் எண்டாலும் இருப்பமே. இதையேன் குளப்பிறாய் தாரணி? பேராசை பெரும் நஸ்ட்டம். மனிதர்கள் புரிந்துகொள்ள முடியாத தெய்வீகக் காதல் இது. அது காமத்தால் மாசுபடக்கூடாது.’

‘நல்லா இருக்குது உங்கட வியாக்கியானம். நான் ஒண்டும் குளப்பேல்ல. இது பேராசையும் இல்லை. இன்னும் ஒருபடி மனிதர்களாக மேல போகலாம் எண்டு நினைக்கிறன். அது மட்டும்தான் எனக்கு வேணும்.’

என்றாள் தாரணி.

‘தங்கட மேல போறது எண்டதுக்கு என்ன அர்த்தம்?’

‘றியிஸ்றர் பண்ணுவம் முதல்ல.’

‘ஓவ்… ஒவ்… நிப்பாட்டு.’

‘ச்… ஏன்?’

‘வேண்டாம் தாரணி. என்னோட இப்பிடியே இருந்திட்டுப் போ. எனக்கு அது போதும் தாரணி. உன்னோட இருக்கிறது சந்தோசம் தாரணி. அந்தச் சந்தோசம் போதும் தாரணி எனக்கு.’

‘இல்ல… இப்பிடி எவ்வளவு காலம் இருப்பம்? எங்களுக்கும் ஆசையும், உணர்ச்சி இருக்குதுத்தானே? நாங்களும் இரத்தம், சதை, நரம்பு எண்டு நடமாடுற மனிசர்தானே? குஞ்சுகளைப் பார்க்க ஆசையிருக்கும்தானே?’

‘அப்பிடியான ஆசை உனக்கு இருந்தா என்ன விட்டிடு தாரணி.’ சங்கர் கோபமாகிவிட்டது போலத் தாரணி உணர்ந்தாலும் இன்று முடிவு தெரிய வேண்டும் என்பதில் அவள் உறுதிகாட்டினாள்.

‘நீங்க என்ன சொல்லுறியள்?’ அவள் முகம் சிவந்து விம்மத் தொடங்கினாள். தலையைக் கால்களுக்குள் புதைத்து விசும்பினாள். பெண்ணின் பாசை மெதுவாகப் பேசினாள். சங்கரால் தாரணியை இப்பொழுது எதுவும் செய்ய முடியும். அவள் அடிமை போல விழுந்து கிடக்கிறாள். சங்கர் அவளை மனதால் மட்டும் காதலித்துவிட்டான். அந்தக் காதலின் உயிர் அவளையே அவனது உயிராக்கிவிட்டது. அந்த உயிருக்குத் தானே கெடுதல் விளைவிக்க அவன் விரும்பவில்லை.சங்கர் தாரணியைப் பார்த்துக் கொண்டு இருந்தான். அவள் அழுவதைப் பார்த்த அவனுக்கும் கண்கள் கரைந்தன. இதயம் வலித்தது. மனது புழுவாய்த் துடித்தது. தன்னைச் சமாதியாக்கி அவளை வாழவைக்க வேண்டும் என்கின்ற ஓர்மம் பிறந்தது. அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாதவனாய் தனது படுக்கை அறைக்குள் சென்றான்.திரும்பி வந்தவனின் கையில் மருந்துக் கடைப் பையிருந்தது. அவன் அந்த மருந்துகளைத் தாரணியின் முன்பு மேசையில் கவுட்டுக் கொட்டினான். தாரணி அவனை என்ன என்பது போலப் பார்த்தாள்.

‘நல்லா வாசிச்சுப்பார்.’ என்றான்.

தாரணியின் அழுகை சடுதியாக நின்றது. அவள் அவசரமாகப் புறப்பட்டு புயலாக வெளியே சென்றாள்.

சங்கரின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரின்சுவை அவனுக்கு உப்பாகக் கரித்தது.

Print Friendly, PDF & Email

1 thought on “தாரணி

  1. உங்க கதை மிக்க அருமையாக irunthathu. குறிப்பாக காதல் வசனங்கள் மனதை தொட்டது..! காதல் தான் இப்புவியின் இயக்கு சக்தி….கதை படித்து முடித்த பொது ஒரு மென்சந்தோஷம் ஒரு மென்சோகம் என கலவையான உணர்வுக்குள்ளானேன் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *