c

சொல்லாமல் விட்ட காதல்

 

அவள் பெயர் கார்குழலி. இருந்தாலும் நான் அவளை முதன்முதலில் பார்த்தது பஸ்ஸில்தான்.

திருவல்லிகேணியிலிருந்து துரைப்பாக்கம் கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த காலக்கட்டம். சைதை பஸ் ஸ்டாண்ட் சென்று அங்கிருந்து வேறு பஸ் பிடித்துச் செல்வேன்.

ஒரு நாள் திருவல்லிகேணியில் பஸ்ஸில் ஏதோ நினைவில் ஆழ்ந்திருந்த என்னை ‘ இங்கே உட்காரலாமா?’ என்று ஒலித்த ஒரு சங்கீதம் எழுப்பியது. பார்த்தால் ஒரு 22 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். நான் அமர்ந்திருந்தது ஜெனரல் சீட்டில். அவள் கேட்டதால் ஒரு மரியாதைக்கு நான் எழுந்திருக்க முயன்றபோது ‘ நோ நோ இட்ஸ் ஓகே! நீங்க உட்காருங்க. நானும் உட்காரலாமா என்றுதான் கேட்டேன்’ என்று மீண்டும் பாடினாள்.

‘உட்காருங்கக்கா’ என்று நான் யோசிக்காமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் வந்து விட்டன. புருவத்தை உயர்த்தி ‘அக்காவா?’ என்று கண்ணாலேயே கேட்டாள். இனிமேல் இவளை எந்தக் காலத்திலும் அக்கா என்று கூப்பிடக்கூடாது என்று எனக்குள் சத்தியம் செய்து கொண்டேன்.

என் அருகில் உட்கார்ந்த அவள் பேசினாள் பேசினாள் இடைவிடாது பேசினாள். அவள் ஹால்டா அருகில் ஒரு கம்பெனியில் அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்டில் வேலையை இருந்தாள். அப்பா அம்மாவுக்கு ஒரே பெண். கமலஹாசன் படம் பார்த்தால் ஒரு வாரத்துக்கு இவள் கனவுகளைக் குத்தகை எடுத்துக் கொள்வாராம். சுஜாதா கதைகள் பிடிக்குமாம் ( யாருக்குத் தான் பிடிக்காது?). ஒரே மூச்சில் படித்து முடித்து விடுவாளாம்.

ஊர் சுற்ற பிடிக்குமாம். மழையில் ஐஸ் க்ரீம் சாப்பிடப் பிடிக்குமாம். பாடல்களில் SPB இடையில் கிளுகிளுப்பாகச் சிரிக்கும் போது இவளும் வெட்கப்பட்டுச் சிரிப்பாளாம். (உங்களில் யாருக்காவது அந்த வியாதி இருந்ததா?)

ஒரு இருவது நிமிடப்பயணத்தில் தன்னைப்பற்றிய ஒரு கதைச்சுருக்கத்தைக் கொடுத்து விட்டாள். கடைசியில் போனால் போகிறதென்று என் பெயரைக் கேட்டாள். நான் வெங்கடேஷ் என்றும் நான் துரைப்பாக்கம் கல்லூரியில் படிப்பதையும் சொன்னேன். அவள் முகத்தில் எந்தவித ரியாக்ஷனையும் படிக்க முடியவில்லை.

அன்று இரவு, வழக்கமாக வந்துகொண்டிருந்த ஸ்ரீதேவிக்கு பதிலாக, கார்குழலி என் கனவில் வந்தாள்.

அவள் இளமையையும் அழகையும் நான் ரசித்தேன் (கனவில் தான்!). திடீரென்று ‘அக்கா’ என்று பின்னணியில் ஒரு குரல் கேட்டதும் கனவு கலைந்தது. வியர்த்து எழுந்தேன். தூக்கம் கேட்டது. மனசுக்குள் ஒரு பட்டிமன்றம் நடந்தது. என்னை விட குறைந்தது ஆறு வயது பெரியவளைப் பற்றி இப்படி இனிமேல் நினைக்கக்கூடாது என்று ஒரு முடிவு எடுத்தேன்.

ஆனால் திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாண்டில் அவளைப் பார்த்தது அது முறிந்து போகும் என்று நினைக்கவில்லை.

என்னைப்பார்த்து மலர்ந்த அவள் முகம் என்னை என்னென்னோவோ செய்தது. நேர்த்தியாகப் புடவை அணிந்திருந்தாள். உனக்கு மட்டும் உனக்கு மட்டும் என்பது போல கொஞ்சமாக இடுப்பு காட்டினாள். எனக்கு ஜுரமடித்தது.

பஸ் வந்ததும் நான் ஏறி ஜெனரல் சீட்டில் அமர்ந்தேன். வண்டி ஏறக்குறைய காலி தான். பெண்கள் சீட்டுகள் நிறைய காலியாக இருந்தும் அவள் என்னருகில் அமர்ந்தாள். பிறகும் என்ன தோன்றியதோ தெரியவில்லை என்னை எழுந்திருக்கச் சொல்லிவிட்டு ஜன்னலோரம் அவள் அமர்ந்தாள்.

மீண்டும் பேச்சு. அவள் முந்தைய நாள் படித்த சுஜாதா நாவல் பற்றி. மிகவும் ரசித்து விமர்சித்தாள். ஒரு குழந்தை புதிதாக உலகத்தைப் பார்ப்பதைப்போல் மிகவும் ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தேன். நான் ஏற்கனவே படித்ததுதான் என்று சொல்ல வந்தவன், சொல்லாமல் விட்டுவிட்டேன்.

பேச்சுச் சுவாரஸ்யத்தில் கையை உயர்த்திப் பேசிக்கொண்டிருந்தவளின் உடல் என் கையில் பட்டது. எங்கள் வீட்டுக்கு ரிப்பேர் பார்க்க வந்த எலெக்ட்ரீஷியன் ஷாக் அடித்தபோது ஏன் அலறினான் என்று எனக்கு அன்று புரிந்தது.

‘சாரி’ என்று சொன்னேன். அதைக் சட்டை செய்யாமல் மேலே பேசிக்கொண்டே போனாள். அந்த சுஜாதா நாவல் விமர்சனம் முடியும் முன்னே எனக்கு ஒரு ஐந்து முறை ஷாக் அடித்தது. ஆனால் நான் சாரி சொல்லவில்லை.

எனக்கு அவள் மீது காதல் தான் என்று எனக்கே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஆனால் அவள் மனதில் என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை. எதையாவது சொல்லப் போய், ‘உன்னத் தம்பி மாரி நினைச்சேன்’ என்று சொன்னால் என்ன ஆகும்? அந்த பயம் தான். அந்த பயத்திலும் மனதிலிருந்த ரகசிய காதலிலும் பல நாட்கள் கழிந்தன.

ஒரு நாள் அவள் முகம் சோர்ந்திருந்தது. என்னவென்று கேட்டேன். ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டாள். ஜன்னல் பக்கம் அமர்ந்தவள் வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே ஹால்டா வரை வந்தாள். போய் வருகிறேன் என்று சொல்லிக்கொள்ளாமல் இறங்கிப் போய் விட்டாள்.

அப்புறம் ஒரு வாரம் வரவில்லை. ரொம்பவும் தவித்துப் போய் விட்டேன். ஒரு வாரம் கழித்து வந்தாள். தன்னைத் தேற்றிக்கொண்டவள் போலத் தெரிந்தாள். என்னைப்பார்த்து புன்னகைத்தாள். வழக்கம் போல ஜன்னல் அருகில் உட்காராமல் இடது பக்கம் உட்கார்ந்தாள். அதிகம் பேசவில்லை. அவள் ஸ்டாப் வருவதற்கு ஒரு பத்து நிமிடம் முன்னால் தன் handbagலிருந்து ஒரு கவர் எடுத்தாள்.

கல்யாணப் பத்திரிகை! என் இதயம் ஒருமுறை நின்று துடித்தது.

‘வர்ற மாசம் பத்தாம் தேதி கல்யாணம். அவசியம் வரணும்’ என்று என் கையில் திணித்தாள். நான் எதுவும் பேசவில்லை. கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. ஓரிரு நிமிடம் கழித்து ‘ கல்யாணத்துக்கப்புறம் என்ன மறந்துடுவீங்க இல்ல?’ என்று சம்பந்தமில்லாமல் கேட்டேன்.

அவள் ஸ்டாப் வந்தது. எழுந்து நின்றவள் ‘ நீ என்ன மறந்துடுவடா, என்னால மறக்கமுடியாது’ என்று சொல்லிவிட்டு இறங்கி சென்று விட்டாள்.

கொஞ்ச நேரம் சிலையாயிருந்தேன். சைதை வந்து இறங்குவதற்கு முன் பத்திரிகை கவர் மேல் அச்சடித்து இருந்த மணமக்கள் பெயர் மீது கண்கள் சென்றன.

மணமகன் பெயர் – வெங்கடேஷ்!

இன்றும் ஹால்டா பக்கம் போகும் போது கார்குழலி நினைவுக்கு வருகிறாள்.

- அக்டோபர் 2013 

தொடர்புடைய சிறுகதைகள்
அந்த நட்சத்திர ஹோட்டலில் நடந்த இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி செமினார் ஃபிரேக்கின் போது ராமனைச் சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் விதி வியப்பானது. 25 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சந்திக்கிறோம். இந்த 25 வருடங்கள் எங்கள் சந்திப்பின் இடைவெளி மட்டுமல்ல; உடையவே உடையாது ...
மேலும் கதையை படிக்க...
இரண்டு நாள் outstation branch ஆடிட்டுனா கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும். ருடீன் போர் அடிச்சு போச்சு “I will start tomorrow itself, Sir”னு ரீஜனல் மானேஜர் கிட்ட சொன்னேன் நான். நான்? வெங்கடேஷ், வங்கி அதிகாரி, வயசு 48. லக்னோவில் போஸ்டிங். ...
மேலும் கதையை படிக்க...
"அமி சோம் தத்... அமி நிர்தோசா .. அமி நிர்தோசா .." என்று சப்தமாக குரல் வரவே சட்டென்று கண் விழித்தாள் ராகினி. இருட்டுக்குக் கண் பழகி, சுற்றிலும் பார்த்தாள். "அமி நிர்தோசா .. அமி நிர்தோசா .." என்று பக்கத்தில் இருந்து ...
மேலும் கதையை படிக்க...
Daddy had a massive attack and passed away today at 4.30 am. We are at our Kodaikanal Bungalow. Madhivadhani Kulasekaran. இந்த டெக்ஸ்ட் மெசேஜ் வந்ததும் பாரதி சந்திரனுக்கு முதலில் தோன்றியது அவன் குலசேகரனுக்கு இழைத்த ...
மேலும் கதையை படிக்க...
“பயமா இருக்கு டாக்டர்” என்று சொன்ன என்னைப் பார்த்தார் (சைக்கியாட்ரிஸ்ட்) டாக்டர் ஆதிமூலம். “என்னய்யா பயம்? இதெல்லாம் ஒரு passing phase. ரொம்ப சின்ன விஷயத்தப் பெருசு பண்ணாதே! கொஞ்ச நாள்ல சரியாயிடும். இந்த மருந்து தரேன். anti stress மருந்து. ...
மேலும் கதையை படிக்க...
எது துரோகம்?
யார் நீ?
சோம் தத்
உங்களைக் கொல்லாமா ப்ளீஸ்?
ஈ.எஸ்.பீ (e.s.p)

சொல்லாமல் விட்ட காதல் மீது ஒரு கருத்து

  1. Gurusamy Saravanaprakash says:

    அருமையான கதை.உங்களுக்குள் ஏற்பட்டிருந்தது காதல் தானா என இன்னுமும் நான் ஆய்ந்து கொண்டிருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)