Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செத்துப் போ பிரியா..!

 

2162 நவம்பர் மாதம். 20 ஆம் நாள்.

குருவின் அந்த அறை பாலிஃபெனால்சிந்தடிக் கலவையான சுவர்களால் செய்யப்பட்டவை. சிமெண்ட் செங்கல் ஜல்லி சுண்ணாம்பு ஆகிவை வழக்கொழிந்து நூறு வருடங்கள் ஆகிவிட்டன.

2012 டிசம்பர் 21 இல் ஏற்பட்ட மஹா பிரளய அழிவில் பழைய எர்த் 21.2012.12 மாடல் பூமி சுத்தமாக அழிந்து இந்த புதிய பூமியை உருவாக்கி இருந்தார்கள். அந்த அமைப்பின் பூரண உரிமை இப்போது இந்த புதிய உலகின் தலைவன் குருவுக்கு மட்டுமே என்பது எழுதப்படாத சட்டமாகவும் ஆகிவிட்டிருந்தது. தமிழ்தான் இந்த புதிய உலகத்தின் ஒரே ஆட்சி மொழி. ஆனால் அதில் தமிங்கலம் சமஸ்தமிழ் எல்லாம் பயன்படுத்தலாம். தடையில்லை..

குரு எப்படி இந்த உலகத்தின் தலைவன் ஆனான்..? பழைய உலகத்தின் நிலை என்ன..? புதிய உலகத்தின் உருவாக்கம் எப்படி..? இதை எல்லாம் தெரிந்துகொள்ள உங்களிடம் ஒரு கணினி இருக்கவேண்டும். இணைய இணைப்பு இருக்கவேண்டும். இந்தப் புதிய உலகில் இணைய இணைப்பு நேரடியாக சாட்டிலைட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். தேவை எல்லாம் ஒரு சிறிய பென்சில் ஆண்டெனா பொருத்திய உபகரணம் வாங்கிக்கொள்வது தான்.

உங்கள் கணினியில் புது உலகம் வர்ஷன் : 03.2013.03 இன்ஸ்டால் செய்து டைம்லைனில் சென்று தேதி குறிப்பிட்டு வரலாறு கேட்டால் பத்தி பத்தியாகச் சொல்லிவிடும். ஆனாலும் சுருக்கமாக இங்கே சொல்லிவிடுவோம். சமீபகாலமாக குரு தனது பிரைவேட் கேபினில் ஒரு புதிய ப்ரோகிராம் எழுதிக்கொண்டு இருக்கிறான். அதன் மூலம் இந்த புதிய உலகத்தை ஒரே ஒரு பட்டனில் தட்டி அழித்து விடலாம். அல்லது எந்த இடத்தில் என்ன செய்ய நினைக்கிறானோ அதைச் செய்துவிடலாம். அதற்கான தேவையும் எதிரிகளும் உருவாகிவிட்டிருந்தனர். அதன் காரணகர்த்தா யார் என்பதைத்தான் கண்டுபிடிக்க முடியவில்லை.

முதலில் கொஞ்சம் 150 வருட ஃப்ளாஷ் பேக்.. ரெடி..?

மாயன்கள் குறித்துவைத்த காலண்டர் முடியும் நேரத்தில் உலகம் அழியப்போகிறது என்று எக்கச்சக்கமான பேர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும் அதையும் விட அதிகம் பேர் அதைப் பொய் என்றே நினைத்திருந்தார்கள். 20 டிசம்பர் 2012 வரையில் கூட எந்த வித அறிகுறியும் தெரியவில்லை. 20 ஆம் தேதி நள்ளிரவு தீடீரென வானத்தில் பெரும் ஒளி. சத்தமில்லா பிக் பேங். சில நிமிடங்களும் சில நொடிகளுமான இடைவெளியில் மொத்த உலகம் பொசுங்கிவிட்டிருந்தது.

இதை எல்லாம் எதிர்பார்த்திருந்த அமெரிக்காவின் சாமர்த்தியமான பாதாள அறைத் தற்காப்புப் பெட்டகத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிர்தப்பினர். அதில் இந்தியாவில் இருந்து 1. இந்திய ஜனாதிபதி 2. ராகுல் 3. பிரியா 4. மோனிகா 5. சுனில் சும்பானி 6. ( எப்படியோ ஒட்டிக்கொண்ட ) இப்ரமணியன் இவாமி. 7. குரு. ( குரு எப்படி இவர்களுடன் போனான் என்பது இதுவரை கண்டறியப்படவில்லையாம். ஒருவேளை தனது அதீத கணினித்திற்மையால் தன்னை ஒரு ப்ரோகிராமாக மாற்றி இவாமியுடன் சேர்ந்து அவரது லேப்டாப்பில் தப்பி இருக்கலாம் என்று பரவலாகப் பேசப்படுகிறது. ) இந்த 7 பேரும் இந்தியாவின் தரப்பிலிருந்து தப்பித்திருக்க அமெரிக்காவில் இருந்து மட்டுமே 2000 பேருக்குமேல் தப்பித்திருந்தனர். எல்லாம் காசு செய்த மாயம்.

சுமார் பத்துவருடங்கள் அந்த பாதாளப்பெட்டகத்தில் பதுங்கி இருந்து பூமியின் தட்பவெப்பம் சரியாகும் வரை காத்திருந்து பின்னர் வெளியில் வந்து புது உலகைச் சமைப்பதாக அவர்களின் எண்ணம். சுமார் 25 வருடங்களுக்கான உணவு முதலியவையும் ஆக்சிஜன் தண்ணீர் போன்றவையும் அங்கே சேமிக்கப்பட்டிருந்தன. அதற்கு தலைமையாக கில் பேட்ஸ் நியமிக்கப்பட்டிருந்தாலும் எப்படியோ அவருடன் ஒட்டிக்கொண்ட குரு இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கும் தமிழ்கற்றுக்கொடுத்து அங்கே சேமிக்கப்பட்டிருந்த கணினி உபகரணங்கள் மூலம் அனைத்து ப்ரோகிராம்களையும் தமிழில் ஆக்கிட உதவியாகவும் இருந்தான். காலநிலையினைக் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருந்ததால் எவருக்கும் நோயும் முதுமையும் வராமல் அதே நிலையில் இருந்தார்கள். பின்னால் எப்படியும் இன்னும் 50 வருடங்கள் அங்கே இருக்கவேண்டி இருக்கும் எனக் கணக்கிட்ட குருவும் கில்பேட்சும் அதற்குத் தக்கபடி உணவைச் சேமிக்க வேண்டுமென்றால் ஒரே வழி: கன்ஸ்யூமர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுதான். மிகத்திறமையாக ப்ரோகிராம்களின் மூலமாக கில்பேட்சும் குருவும் அங்கே இருந்தவர்களின் என்ணிக்கையை சட சடவெனக்குறைத்து 999 பேராக்கிவிட்டிருந்தனர். ( குரு – ஆயிரத்தில் ஒருவன் இல்லையா,,? ) இந்தியாவில் இருந்து குருவும் பிரியாவும் மட்டுமே தப்பினார்கள். தனது சொந்த பயன்பாட்டுக்காக குரு அவளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிறான்.

வயதும் ஆகாமல் முதுமையும் வராமல் ஒரே சீதோஷ்ணத்தில் அதே வயதில் காத்திருந்த அவர்கள் 999 பேரும் புதிய பூமியின் பசுமை மீண்டும் திரும்பிவந்ததை அறிந்து மெல்ல மெல்ல புதிய பூமி புதிய உலகம் பழைய மாடல் போல் இல்லாமல் ஃப்ரிக் ஷனல் ஃபோர்ஸ், செல் டிவிஷன் , செல் மல்டிப்ளிகேஷன் மற்றும் டிகேஷனல் ரியாக் ஷன் எல்லாம் இல்லாமல் புத்தம்புது ஆக்ஸிஜன் வெளி மட்டுமே இருந்ததால் இறப்பு முதுமை என்பது இல்லாமல் போய்விட்டிருந்தது. இதை உருவாக்கியதும் குருதான்.

அவனது அபாரமான கணிணித்திறமையும் அறிவியல் ஆட்சித்திறனும் அவன் சொன்னது தான் சட்டம் என புது உலகம் ஏற்றுக்கொண்டது. தற்சமயம் புதுப்பிரஜைகள் கொஞ்சம் பேரை உருவாக்கி இருக்கின்றான் குரு.. அவர்களுக்கு மட்டும் விசேஷ மெட்டபாலிசம் சலுகை தரப்பட்டு குறிப்பிட்ட வயது வரை வளர்ந்து பின்னர் ஸ்டேப்ளைஸ் செய்யும்படியாக வடிவமைத்திருந்தான். மேலும் அவர்கள் அனவைருக்கும் டெலியனலைசிஸ் மூலம் தான் நினைப்பதை அவர்கள் நிறைவேற்றும் படி ப்ரோகிராம் செய்து விட்டிருந்தான். குருவின் ரகசியப் படை அது. குருவின் சொல் மிக்க வேதமில்லை அவர்களுக்கு.

பிரியா குருவை ரொம்ப காதலிப்பாகச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். ஆனால் குருவின் புதுக் கண்டுபிடிப்பான ஃப்யூச்சரிஸ்டிக் ஆப்சர்வேட்டரி இன்வென்ஷன் ( F O I ) மூலம் நேற்றுதான் அவளது உண்மை மனநிலையை அறிய முடிவெடுத்தான். . குரு உருவாக்கிய அந்த ப்ரோக்ராமிங் மெஷினில் ஒரு பட்டனைத் தட்டியதும் வெளியே நீட்டும் சிறிய ட்ரேயில் ப்ளட் சாம்பிள் ஒரு துளியை வைத்துப் பின்னர் அனலைசேஷன் மோடில் கொண்டு சென்றால் அவர்கள் மனதில் ஓடும் எண்ணங்கள் அவர்களின் எதிர்காலச் செயல்பாடுகள் ( நினைவில் இருப்பவை மட்டும். ) அனைத்தையும் காட்டி விடும்.

நேற்று சட்டென்று ஒரு சிந்தனை உருவாகி இருந்தது. பிரியாவை ரொம்ப நம்பி சிலவிஷயங்களைச் சொல்லி வருகிறோமே.. அவள் நம்பகமானவளா..? அவள் என்ன என் மனைவியா..? இல்லையே. என்று யோசிக்கத்தொடங்கி இருந்தான்.

மனைவி கல்யாணம் என்பதெல்லாம் இப்போது ஒழிக்கப்பட்டிருக்கிறது, அவசியமே இல்லாத நிலை என்று தவிர்க்கப்பட்டிருக்கிறது,. காமம் என்பது அனுமதிக்கப்பட்டால் மட்டுமே ஒரு இஞ்செக் ஷன் குருவர்ன்மெண்ட் டிபார்ட்மெண்ட்டில் பெற்றுக்கொண்டு செய்யவேண்டிய விஷயம்.

மொத்தம் 24 நிமிடங்களுக்கு மட்டுமே செக்ஸ் அனுமதிக்கும் இஞ்செக் ஷன் அது, ( ஆனால் குரு – பிரியாவுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது.) குழந்தை உருவாவது என்பதை நிர்ணயிக்கும் ஒரு மாத்திரையை போட்டுக்கொண்டால் மட்டுமே பிள்ளை பிறக்கும் என்பதால் எல்லோருக்கும் இந்த அனுமதியும் சலுகையும் வழங்க முடியாது. பிறகு பழைய உலகம் போல் மக்கள் தொகை அதிகரித்து நாசமாகிவிடும்.

குரு பிரியாவுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு. அவர்கள் மெட்டபாலிசக் கேர்சென்ட்டரில் வளர்ச்சிக்காகவும் கல்வியறிவுக்காகவும் விடப்பட்டு வளர்ந்து வருகின்றனர். பிரியா குருவுடன் கட்டிலில் நன்றாகத்தான் ஒத்துழைக்கிறாள்.

இங்கே பிரியாவைப்பற்றி கொஞ்சம் உபரித்தகவல்கள் தரவேண்டி இருக்கிறது.

பிரியங்கா. வயது: பொருந்தாது. உயரம் 5’7’’. கண்கள் கரும்பழுப்பு. மார்புகள் : சுற்றளவு 18 செமி. உயரம் வலது 8’’ இடது 7.8 ‘’ நல்ல சந்தனக்கலர் உடம்பு. இடுப்பு மேல் புறம் 26 ‘’ நடுப்புறம் 24’’ கீழ்ப்புறம் 30 ‘’ அதற்க்குக்கீழ் வேறு பிரதேசங்கள் தொடங்குகின்றன. அவைகள் முழுச்சுற்றளவு 48 ‘’ ஒவ்வொரு பிரதேசத்தின் சுற்றளவு 23 ‘’

இதோ இப்போது தன் பாலிஃபெனால்சிந்தடிக் அறையில் குரு பிரியாவின் ரத்த சாம்பிளை சோதித்துப் பார்த்து கணிணியில் கடந்த கால டைமரை செட் செய்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அது கூறிய கடந்த கால சம்பவங்கள் விஷுவலைஸிங் மோடில் பார்த்தபோது எதுவும் வித்தியாசம் தோன்றவில்லை. சற்றே ஒரு மாத காலம் பின்னாலானா ஃப்யூச்சர் டைமருக்குப் போனான். அதிர்ச்சியானான்.

இத்தாலியில் இருந்து பழையவுலக அழிவில் தப்பித்து வந்த குண்ட்டானியா என்பவனுடன் பிரியா உடல் உறவில் ஈடுபட்டிருந்தாள். துரோகம் மற்றும் ப்ரோட்டோகால் ப்ரேக்கிங் அது..! குரு கவனிக்கத் தொடங்கினான்..

குருவுடைய ரத்தஓட்டங்கள் அதிகரித்து மூளைக்கு அதிகமாய்ப் பாய்ச்சின, காதுகள் ஜிவ்வெனச் சிவந்தது. பிரியா கடன்காரி. இப்படியா நினைச்சு ஏமாத்தப்போறா… அவளை இந்த புதிய உலகத்தின் ராணியாக்க கனவுகள் கண்டேனே.. இப்படி அந்நிய நாட்டுக்காரனுக்கு அடிமையாகிப் போய் என்னைக் கவிழ்த்துவிட்டாளே.. பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டே மேலும் பார்த்தான். இடது கை உளைச்சல் லேசாகத் தொடங்கியது, குருவின் கண்கள் சில நிமிடங்களுக்கு இடுங்கிக்கொண்டன. இதயத்துடிப்பு மெல்லமாகி லப் டப் களின் இடைவெளி குறைந்து கொண்டே வந்தது, இத்தனை பெரிய துரோகமா என்று உள்மனம் நினைத்துக் கொண்டிருந்தது,

மீண்டும் கண்களைத்திறந்த குருவின் எதிரில் மானிட்டரில் குண்ட்டானியா பிரியாவைக் கட்டி அணைத்தபடி கூறிக்கொண்டிருந்தான்.

‘’ இனி குருவைத் தீர்த்துக்கட்டிட்டு இந்த புதிய உலகத்தின் அதிகாரத்தை நாம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் பிரியா.. ‘’ என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டான் குண்ட்டானியா. அதைக் கேட்டுக்கொண்டிருந்த குருவின் இதயத்துடிப்பு சட்டென நின்று தலை தொங்கியது.

அப்போது குருவின் அந்த பிரத்தியேக அறைக்கதவு சடாலெனத் திறக்கப்பட்டது, அங்கே பிரியாவும் குண்ட்டானியாவும் நின்றுகொண்டிருந்தனர்.

’’ குருவின் கதை முடிஞ்சு போயிடுச்சு போலிருக்கே,, ‘’ கெக்கெக்கே எனச் சிரித்தான் அவன்,

’’ அப்படித்தான் எனக்கும் தோணுது குண்ட்டானியா.. குருவின் எல்லா சீக்ரெட் ஃபைல்களும் இங்க தான் இருக்கு. இனி அதெல்லாம் நம் கையில். அதாவது இந்த புது உலகின் அதிகாரச்சாவி நம்மிடம்.. ஸ்வீட் எடு கொண்டாடு.. ‘’ என்று கூறிய பிரியா குண்ட்டானியாவின் உதட்டில் முத்தமிட்டாள்.

‘’ பின்னே.. கடந்த ஒரு வருட உழைப்பு இது பிரியா.. குரு கண்டிபிடிச்ச இந்த ஃப்யூச்சரைசேஷன் மெஷினுக்குள் நமது சங்கமக்காட்சியை செட் செய்வதற்கு என்ன பாடு படவேண்டி இருந்தது தெரியுமா..? ‘’ கொக்கரித்தான் குண்ட்டானியா.

‘’ குருவின் ஹார்ட் கண்டிஷன் மோசமா போயிக்கிட்டிருக்குன்னு அமெரிக்க கார்டியோ ஸ்பெஷலிஸ்ட் என் கிட்ட தனியா சொன்ன அந்த ரகசியம் தான் இப்ப நம்மைக் காப்பாத்திச்சு குண்ட்டானியா. பலவீனமான குருவின் இதயத்தை சுத்தமா நிறுத்த நம்ம துரோகத்தால மட்டுமே முடியும்னு நாம நினைச்சது 100 சதவீதம் சரியாச்சு பார்த்தியா.. ‘’ குண்ட்டானியாவின் தோளில் தொங்கியபடி கொஞ்சலாகச் சொன்னாள் சிரியங்கா..

‘’ சரி .. இனி தாமதிக்காம டாக்டரை வரவழைத்து குருவின் மரணம் இயற்கையானதுன்னு உலகத்துக்கு டிக்ளேர் செய்து 999 பேருடைய ஜெனரல் பாடி மீட்டிங் போட்டு அறிவிச்சுட்டு அடுத்து பிரியாவாகிய நீ இந்த உலகத்தின் தலைவியாகப் பிரகடனம் செய்யவேண்டியதுதான் ’’ என்று கூறிய குண்ட்டானியா பிரியாவிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு குருவை நெருங்கினான்.

சரியாக ஐந்து நிமிடங்கள் கழிந்திருந்தன.

இடையில் கொஞ்சம் ஃப்ளாஷ்பேக்..

குருவின் இதயம் பாழ்பட்டிருந்ததை முன்னரே அறிந்திருந்த குரு உலகத்தின் மிகப்பெரிய கார்டியாலஜிஸ்ட் லாஜோஸ் பப்பு வை வரவழைத்து ரகசியமாக இன்னொரு இதயத்தை வலது புறமாகப் பொருத்திக்கொண்டதையும் முதல் இதயம் இயங்க மறுத்து நின்றபின் சரியாக ஐந்து நிமிடம் கழித்து அடுத்த இதயம் செயல்படுமாறு அமைத்திருந்ததையும் மிக மிக ரகசியமாகவே வைத்திருந்தான். பிரியாவிடம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை. அது இப்போது மிக நல்லதாய் போயிற்று.

இதயம் மீண்டும் இயங்கி மூளைக்குள் ரத்தம் பாய்ந்து நினைவுக்கு மீண்டு நடந்தவை எல்லாம் சில வினாடிகளில் ரீகால் செய்துகொண்ட குரு.. கண்கள் மூடியவாறே படுத்துக்கொண்டு தனது வலது கையில் கட்டியிருந்த லேசர் வாட்சை மெல்ல இயக்கினான், சக்திவாய்ந்த லேசர்கற்றை அதிலிருந்து பாய்ந்து குண்ட்டானியா பிரியா இருவரையும் சுற்றி ஒரு வளையமிட்டு நகரவிடாமல் தடுத்தது,

கண்களைத் திறந்து அவர்களைப் பார்த்துப் புன்னகைத்த குரு ‘’ பாவம் நீங்கள்.. இந்த இறுதி முடிவை எதிர்பார்த்திருக்கமாட்டீர்கள் தானே..? நான் முதலில் நினைத்தது எனக்கு எதிராக யாரோ சிலர் சதி செய்வதாகத் தான். ஆனா அது பிரியா என்பதும் அதுக்கு துணையா இந்த இத்தாலி நாயும் என்று நினைத்துப் பார்க்கவில்லை. உன் தாய் இத்தாலிய நாட்டுக்காரி. எப்படி துரோகத்திற்கென்றே பிறந்தாளோ அதே ரத்தம் உன்னிடமும் ஓடுகிறது பிரியா. ‘’ குரலில் வருத்தமுடன் கூறினான் குரு.

‘’ அந்த வகையில் கடவுள் என்னைக் காப்பாத்திவிட்டார் பார்த்தாயா.. பிரியா…? என்னைக்கும் தமிழன் இளிச்சவாயன் இல்லை. அவன் பிறருக்கு விட்டுக்கொடுப்பதை வீரமில்லாதவன் என்று நினைத்து ஏமாந்தால் அது உங்களுக்குத்தான் நஷ்டம்.. ஹூம்.. இனி உங்கள் இருவரின் இழப்புக்காக இன்னும் இரண்டு பிரஜைகளுக்கான உரிமம் வழங்கவேண்டும்.. செத்துப்போங்கள் துரோகிகளே… ‘’

லேசரின் பலம்வாய்ந்த கதிர்களை இருவர்மேலும் பாய்ச்சினான் குரு. குருவின் புது உலகம் புதுப்பொலிவுடன் புலர்ந்தது அடுத்தநாள் காலை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)