சின்ன முள் பெரிய முள்

 

சின்ன முள் பெரிய முள்காதலியர் கடைக்கண் காட்டிவிட்டால், மாமலையும் கடுகு என்பதெல்லாம் கூட சரி, ஆனால் ஐஏஎஸ் படிப்பதென்பது அத்தனை லேசுப்பட்டதா என்ன? கல்யாணி அப்படிச் சொன்னபோது ‘‘அப்படியே மூக்கு மேல குத்திடுவேன்… ஓடிப் போயிடு!’’ என்றான் ரகு.

“ஏன்… ஏன் நீங்க படிக்கக்கூடாது?”

“உனக்குத்தான் வேற வழியில்லை, உங்க அப்பா தொல்லை…”

“…”

“என்ன பதிலே காணும்?”

“நம்ம விஷயம் பத்தி வீட்ல பேசும்போது கொஞ்சம் ஈஸியா இருக்கும்னு பார்த்தேன்…”

“எப்படி?”

“அவரும் ஐஏஎஸ் படிக்கிறார்னு சொல்லி ஆரம்பிக்கலாம்ல…”

“ஹலோ… ஏதோ ஜோக் அடிக்கறேன்னு நினைச்சேன். இதெல்லாம் நடக்கற காரியமா?”

“ஏன் நடக்காது? இண்டரெஸ்ட்டோட புக்ஸ் படிக்கிறீங்கல்ல… அதை அப்படியே இந்தப் பக்கம் திருப்புங்க…’’

“சரி, படிச்சு தேறலைன்னா?”

“அதை அப்புறம் பார்த்துக்கலாம்…”

“அதுக்கப்புறம்… வேற ஏதாவது சொல்லுவே?”

“என்னன்னு…”

“ஒலிம்பிக்ல ஏதாவது மெடல் வாங்கினா ஈஸியா இருக்கும்னு… அதெல்லாம் நம்மால முடியாது தாயே…”

இப்படி ஆரம்பித்ததுதான். அடுத்த வாரத்தில் கோச்சிங் கிளாஸ் சேர்ந்து ஸ்டடி மெடீரியல் எல்லாம் வாங்கி வீட்டில் அடுக்கி, மும்முரமாகப் படிக்க ஆரம்பித்தவனை ஆச்சர்யமாகப் பார்த்தாலும், உள்ளுக்குள் சந்தோஷம் பொங்க, அவ்வப்போது ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தாள் ரகுவின் அம்மா.

ரகுவின் அப்பா எதுவும் சொல்லாமல் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். ரகுவின் தங்கை ராஜிதான் ‘‘என்னண்ணா… திடீர்னு இப்பிடி இறங்கிட்டே…’’ என்று அவனை கிண்டலடித்துக் கொண்டிருந்தாள்.

அலுவலகத்தில், ரகு ஐஏஎஸ் படிப்பது ஒரு பெரிய விஷயமாக பேசப்பட்டது. எப்போதும் எரிந்து விழும் மேலாளர் கூட, ரகுவை அழைத்து வாழ்த்தி ஆசி கூறும் அளவுக்கு.இதையெல்லாம் விட பெரிய காமெடி, பாபு வந்து ‘‘நானும் ஐஏஎஸ் படிக்கலாம்னு இருக்கேன்…’’ என்று சொன்னதுதான்.

ரகுவுக்கு உடனே ‘‘யாருப்பா உன் கல்யாணி?’’ என்று கேட்க வேண்டும் போல் இருந்தது.

பாபு, ரகுவுக்கு ஒரு மாதம் சீனியர். பக்கத்து டிபார்ட்மெண்ட். கல்யாணி அந்த டிபார்ட்மெண்டில்தான் இருக்கிறாள். ஒருவேளை கல்யாணியை பாபுவும்..? சேச்சே… இருக்காது.ரகு அதுவரை பார்த்து வந்த பாபு வேறு. பாபு இருக்கும் இடம் கடி ஜோக்குகளால் களை கட்டும். ‘போதும்பா…’ என்று ஆட்கள் பயந்து ஓடும் அளவுக்கு சமயங்களில் எல்லை மீறிப் போகும். ஒருமுறை அவர்கள் அலுவலகத்தில் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்த மீனா, உணவு இடைவேளையின்போது, தோழியரிடம் ‘‘நேத்து ஈவினிங் ஸ்விம்மிங் போயிருந்தேன்பா…’’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

சற்று தள்ளி ரகுவுடன் உட்கார்ந்திருந்த பாபு, சட்டென்று எழுந்து அவர்கள் இருந்த மேஜையை நோக்கிச் சென்று மீனாவிடம் ‘‘தண்ணியே இல்லாம எப்படி நீச்சல் அடிப்பே?’’ என்றான்.

“ஏன்..? தண்ணி புல்லா இருந்துச்சே…’’

“நீ குதிச்சவுடனே தண்ணியெல்லாம் வெளியே போயிருக்குமே…”

மீனா கொஞ்சம் அல்ல… நிறையவே குண்டு!

“ஏய்… எங்கப்பா யாரு தெரியும்ல…”

“ஏன்… அவரும் தண்ணியில்லாம நீச்சலடிப்பாரா?”

மீனாவின் அப்பா போலீஸ் இலாகாவில் பெரிய பதவியில் இருப்பவர் என்று பாபுவுக்குத் தெரியும். ஆனால், அதையெல்லாம் நினைத்துப் பார்க்க நேரம் எடுத்துக்கொள்பவன் அல்ல. அவனுக்குத் தோணும் எதையும், அது படு அறுவையாக இருந்தாலும், அப்படியே அள்ளித் தெளித்தபடி போய்க்கொண்டே இருப்பான்.

அப்படிப்பட்ட பாபு, தானும் ஐஏஎஸ் படிக்கிறேன் என்று ரகு சேர்ந்த டுடோரியலில் சேர்ந்தான். ஆளே மாறிப் போனான்.

படிப்பதில் பாபுவின் வேகம் ரகுவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தொலைக்காட்சியில் ஒருநாள் “ஐஏஎஸ் படிப்பது சுலபம்…” என்று பேசிக்கொண்டிருந்த மாவட்ட ஆட்சியாளர் அன்புக்கரசன் எழுதிய ‘தமிழில் ஐஏஎஸ் படிக்கலாம்’ என்ற புத்தகத்தை அடுத்த நாளே வாங்கி வந்து இரண்டே நாளில் படித்து முடித்து அதை ரகுவிடம் கொடுத்தான். “படி… நிறைய வழிகள் இதுல சொல்லி இருக்கார்…”

யாரையோ பிடித்து அடுத்த ஒரு வாரத்தில் அன்புக்கரசனைப் பார்க்க அப்பாயின்ட்மென்ட் வாங்கினான். “வேணாம் பாபு… அவரைப் போய் பார்த்து என்ன பண்ணப் போறோம்?” என்று ரகு எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்.பாபு கேட்பதாயில்லை. “ஏதாவது டிப்ஸ் தருவார் படிக்க…” என்று ரகுவை இழுத்து வந்து… இதோ அவர் வீட்டு வரவேற்பறையில் காத்திருக்கிறார்கள்.

“ரொம்ப பலமான யோசனையோ?” என்ற குரலால் உலுக்கப்பட்ட ரகு, பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாபுவைப் பார்த்தான்.

‘‘கண்டிப்பா இவரைப் பார்த்துதான் ஆகணுமா..? அப்படி என்னதான் பேசப்போறோம்?’’

‘‘நீ பேசாம இரு… நான் பார்த்துக்கறேன்…’’ என்றான் பாபு.

“உங்க ரெண்டு பேர்ல யார் ஐஏஎஸ் படிக்கற முடிவை முதல்ல எடுத்தீங்க…”

அன்புக்கரசன் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பாபுதான் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். உரையாடலின் முடிவில் அன்புக்கரசன் சொன்னது பெரும் உத்வேகத்தைத் தந்தது.“நிறைய பேர் இந்த மாதிரி வந்து பார்த்துட்டு போறாங்க. ஆனா, உங்க ரெண்டு பேரைப் பார்த்தா நீங்க கண்டிப்பா ஐஏஎஸ் ஆயிடுவீங்கன்னுதான் தோணுது. ஆல் தி பெஸ்ட்!”பாபுவுக்கு அந்த வார்த்தைகள் பெருமளவில் உற்சாகம் ஊட்டியதை மறுநாளிலிருந்து ரகு உணர்ந்தான்.

பொது அறிவுப் புத்தகங்களைப் படித்துவிட்டு ரகுவிடம் வந்து ‘‘ஜப்பானை பிளவுபடுத்தியது யார் தெரியுமா?’’ என்பான். முழிக்கும் ரகுவிடம் ‘‘அசிகாகா டாக்கா உஜி…’’ என்பான். “ஜப்பானை ஒன்றுபடுத்தியது யார்?’’ என்று கேட்டுவிட்டு “நேபுநாகா…’’ என்பான்.

அன்புக்கரசன் சொன்னது மாதிரி பாபு எப்படியும் ஐஏஎஸ் ஆகிவிடுவான் போலத் தோன்றியது.

எல்லாம் முதல் கட்டத் தேர்வான ப்ரிலிமினரி எக்ஸாம் எழுதும் வரைதான்.தியாகராய நகரில் இருந்த ஒரு பள்ளி தேர்வு மையமாக போடப்பட்டிருந்தது. கேள்வித்தாளை கையில் வாங்கிய ரகு அடுத்த பத்து நிமிடத்திலேயே ‘‘இது ஆவறதில்லே…’’ என்று முடிவுக்கு வந்தவனாக கொஞ்ச தூரத்தில் அமர்ந்திருந்த பாபுவைப் பார்த்தான்.பாபுவின் மெல்லிய புன்னகையும் அதையே சொல்லியது.

ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒன்றோ இரண்டோ அல்லது எல்லாமே சரியான பதில்களாக இருந்தால் டிக் அடிக்கச் சொல்லியிருந்தது.முக்கால் மணி நேரத்தில் பதில்களை டிக் அடித்துக் கொடுத்துவிட்டு வெளியே வந்த ரகுவின் பின்னாேலயே பாபுவும் வந்து சேர்ந்தான்.“அந்த கடிகாரக் கேள்விக்கு என்ன பதில்?” என்ற பாபுவுக்கு பதிலேதும் சொல்லாமல் சிரித்தான் ரகு.கேள்வி இதுதான்.

‘கடிகாரத்தின் சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒரு நாளில் எத்தனை முறை 90 டிகிரி பொசிஷனில் நிற்கும்?’ரகு ‘இது ஆவறதில்லே…’ என்று முடிவுக்கு வந்ததே அந்தக் கேள்வியைப் படித்த பிறகுதான்.

“கல்யாணிக்கு ஒருவேளை தெரியுமாய் இருக்கும். ப்ரிலிமினரி தேர்வில் தேறியவள். அவளிடம் கேட்டுப் பார்க்கலாம்…” என்றான் ரகு.

“சே… இப்படி சொதப்பலா போச்சே… இதை வச்சி நிறைய பிளான் பண்ணி இருந்தேன்…” என்று வானத்தைப் பார்த்தபடி சொன்ன பாபுவின் அப்போதைய முகம் அதுவரை ரகு பார்த்திராத முகமாக இருந்தது.

- ஜூன் 2019 

தொடர்புடைய சிறுகதைகள்
சொல்லாத சொல்லுக்கு
சங்கர் அதை எதிர்பார்க்கவில்லை. முகம் குப்பென்று வியர்த்தது. பாக்கெட்டிலிருந்து கர்சீப்பை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த என்னிடம், ""என்னதிது குமார்?'' என்றான். எனக்கும் ஒன்றும் புரியவில்லை. ""என்ன பண்ண அவரை?'' என்றேன். அந்த நபர், நாங்கள் உட்கார்ந்திருந்த இருக்கையில் இருந்து இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
நிறை மாத வயிறோடு அந்த பேருந்து நிறுத்தத்தில் டாக்ஸிக்காக காத்துக் கொண்டிருந்தாள் பிரேமா. அபுதாபியில் காலை வெயிலோடு நல்ல தூசுக் காற்று வீசிக் கொண்டிருந்தது. கடந்து போன டாக்சி ஒன்றில் பயணிகள் நிறைந்து காணப்பட்டது. ஒன்பது மணிக்கு ஆஸ்பத்திரியில் இருக்கவேண்டும். செல்பேசியில் ...
மேலும் கதையை படிக்க...
அதற்குள் அப்படியொன்று இருக்குமென்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அதன் விளைவாக நடந்த அத்தனை நிகழ்வுகளையும் நினைவுக்கு கொண்டு வந்து போட்டது, மைக்கேல் சாரை, அவரின் மனைவியோடு எதிர்கொள்ள நேர்ந்த இந்த மாலைப் பொழுது. தம்பதி சமேதராய் எதிரில் கடந்து போனவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. ...
மேலும் கதையை படிக்க...
உள்ளும் புறமும்
“ஹலோ சார்...” “சூரஜ்?” “எஸ் சார்...” “உட்காருங்க...” “‘இங்க’ல்லாம் வேண்டாம் சார்…” “சரி… டேக் யுவர் சீட்… யூ லைக் திஸ் ஆபீஸ்?’’ “ரொம்ப சார்…” “எஞ்சினீரிங் முடிச்சது இந்தியாலதானே?” “ஆமா சார்...” “வேலைலாம் எப்படிப் போகுது?’’ “டைட்டா போகுது சார்...” “அது ஓகே… பிடிச்சிருக்கா..?” “ரொம்ப…” “படிச்சது மெக்கானிக்கல் இல்ல?” “ஆமா சார்...” “செய்யற வேலைக்கும் படிச்ச படிப்புக்கும் சம்பந்தம் இருக்கற ...
மேலும் கதையை படிக்க...
காற்றில் ஆடிக்கொண்டிருந்தது கடிதம். கடிதம் என்றால் கடிதமில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து நலம் நலமறிய மாதிரி இல்லை. இது முழுவெள்ளைத்தாளில் முழுவதும் கவிதையாய் ஓடி முடிவில் கேள்வி போட்டு தொக்கி நிற்கிறது. இது இப்படி முடியுமென்று அவன் ஒரு பொழுதும் நினைத்ததில்லை. Lady ...
மேலும் கதையை படிக்க...
சொல்லாத சொல்லுக்கு
பார்வைகள்
காக்கைச் சிறகினிலே
உள்ளும் புறமும்
ஒரு கவிதையை முன்வைத்து..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)