கெளுத்தி மீன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 7, 2012
பார்வையிட்டோர்: 13,910 
 

என் கிராமத்துக்கும் எனக்குமான தொடர்பு அம்மா என்கிற ஒற்றை மனுஷியால் பிணைக்கப்பட்டு இருந்தது. அம்மா, கிராமத்தைத் தன் உயிரில் பொதிந்துவைத்து இருந்தாள். இரண்டு முறை சென்னைக்கு வந்து என்னோடு தங்கிய அம்மா, ஓர் அந்நியத்தன்மையோடு வேற்று மனுஷியாகவே இருந்தாள். ஒரு வீட்டுக்குள் அடைந்துகிடந்து சாப்பிடுவதும் டி.வி. பார்ப்பதுமான வாழ்க்கைமுறை அவளுக்கு ஒவ்வாததாக இருந்தது. ”என்னை ஊர்ல கொண்டுபோய் விட்ருடா. அப்பப்போ வந்து பாத்துக்கோ. என்னால இந்த நரகத்துல இருக்க முடியல” என்றாள். அதன் பின் வருடத்துக்கு இரண்டு முறை அம்மாவைப் பார்ப்பதற்காக ஊருக்குச் செல்ல வேண்டி இருந்தது. அந்த ஊர் என் பால்யத்தை இன்னமும் தனக்குள் ஒரு ரகசியமாக பத்திரப்படுத்தி வைத்து இருந்தது.

இந்த முறை ஊருக்குப் போனபோது அம்மா கெளுத்தி மீன் வாங்கிக் குழம்பு வைத்திருந்தாள். கெளுத்தி மீன் எனக்கு சண்முகவடிவை நினைவுபடுத்தியது. பரிசுப் பொருட்கள், சுற்றித் திரிந்த இடங்கள், பழைய புகைப்படங்கள், பெயர்ப் பலகைகள் இவைதான் பழைய நினைவுகளை மீட்டு எடுக்க வேண்டும் என்பது இல்லை. சில சாதாரணமான விஷயங்கள்கூட நினைவுபடுத்திவிடும்.

சண்முகவடிவையும் கெளுத்தி மீனையும் ஒருபோதும் என்னால் பிரித்துப் பார்க்க முடிந்ததே இல்லை. ஒருவேளை கெண்டை மீன்களைப்போல கெளுத்தி மீன்களுக்கும் கொடுக்கு இல்லாமல் இருந்திருந்தால், சண்முகவடிவு என் வாழ்வில் இல்லாமல் இருந்திருப்பாள். வடிவை முதன் முதலில் பார்த்தது குண்டாங்கிடங்குக் குளம் அழிந்தபோதுதான்.

அன்று ஊர் கூடி மீன் பிடித்தது. குளம் முழுக்கச் சகதியும் மீன்களுமாக இருந்தன. தாந்தோன்றிக் குளம் அழியும்போதோ, பரணிப்பாடு குளம் அழியும்போதோ இத்தனை கூட்டம் வருவது இல்லை. குண்டாங்கிடங்குக் குளத்து மீனின் ருசி எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு வரவைத்துவிடும். பெரிய பெரிய பாத்திரங்களோடு காலையில் ஏழு மணிக்கே எல்லோரும் வந்துவிடுவார்கள். எல்லாருடைய கைகளிலும் ஒரு நார்க்கூடை இருக்கும். அதைச் சகதிக்குள் முக்கி எடுத்தார்களானால், சகதியும் மீனுமாக கூடை வெளியே வரும். கரையில் நல்ல தண்ணீரோடு குடும்பத்து உறுப்பினர்கள் யாராவது ஒருவர் இருப்பார்கள். அவர்கள் சகதியில் இருந்து மீனைப் பிரித்தெடுப்பார்கள்.

நான் போனபோது ஒரு பெரிய நார்க்கூடையை நடுக்குளத்தில் இருந்து இழுக்க மாட்டாமல் இழுத்துக்கொண்டு வந்தாள் வடிவு. சாய்ந்த நிலையில் அவள் கூடையை இழுத்துக்கொண்டு வந்தது அழகாக இருந்தது. அவள் முகத்தில் சகதி புள்ளி புள்ளியாகத் தெறித்து இருந்தது. பின்னியிருந்த சடையில் இருந்து ஒரு கற்றை முடி தனியே பிரிந்து நின்றது. ஒரு கையால் கூடையை இழுப்பதும் மறு கையால் முடியை ஒதுக்குவதுமாக இருந்தாள். அதற்கு முன் வடிவை நான் அத்தனை வடிவாகப் பார்த்தது இல்லை.

வடிவு சொல்லிக்கொள்கிற மாதிரி நிறம் இல்லை. திட்டுத்திட்டாக அவள் முகத்தில் பருக்கள் இருக்கும். எண்ணெய் தேய்த்து தலையைப் படிய வாரி சடை போட்டிருப்பாள், வாடாமல்லி கலரில் ஒரு குட்டைப் பாவாடை. அழுக்கடைந்து நிறம் மங்கிய ஒரு சட்டை. இதுதான் பெரும்பாலும் அவள் அணிந்திருக்கும் உடை. வடிவின் மீது பெரிய விருப்பம் ஒருபோதும் யாருக்கும் வந்திருக்காது. எப்போதாவது நடுவப் பண்ணை வயல்வெளியில் மாடுகளை மேய விட்டுவிட்டுப் பாடிக்கொண்டு இருப்பாள்.

‘மயக்கமென்ன டிங்டிங்டிங் இந்த மௌனம் என்ன டிங்டிங்டிங் மணி மாளிகைதான் கண்ணே’ பாடலுக்கு இடையே வரும்இசை யைக் கூடப் பாடுவாள்.வேடிக்கை யாக இருக்கும்.

தினமும் நான் பள்ளிக்கூடம் செல்லும்போது எதிரில் தங்கள் வீட்டு எருமை மாடுகளை ஓட்டிக்கொண்டு போவாள் வடிவு. அவள் வயதொத்த சிறுமிகளோடு நான் நெருக்கமாகவும் இணக்கமாகவும் பேசும்போதோ, விளையாடும்போதோ அம்மா எதுவும் சொல்வது இல்லை. வடிவிடம் ஏதாவது பேச முயன்றால் மட்டும், ”பொட்டப் புள்ளைகிட்ட என்னடா பேச்சு வேண்டிக்கிடக்கு?” எனத் திட்டிவிட்டுச் செல்வாள் அம்மா. வடிவும் எந்த ஆண்களிடமும் பேசாமல் ஒதுங் கியே செல்வாள். ஒருவேளை படிக்கிற வயதில் மாடு மேய்க்கிறோமே என்கிற தாழ்வுமனப்பான்மை காரணமாக இருக்கலாம். வடிவின் வீட்டில் யாருமே படித்தவர்கள் இல்லை. வயல்வேலைக்குச் செல்வது, மாடுகன்னுகளைப் பார்த்துக்கொள்வதுதான் அவர்களுக்குப் பிரதானம். ‘படிப்பு என்னவே படிப்பு? ரூவா நோட்ட எண்ணத் தெரிஞ்சாப் போதாதா?’ என்பார் வடிவின் அப்பா பெரிய கண்ணு. வடிவைத் தினம் தினம் பார்ப்பவன்தான் நான், ஆனாலும் மீன் பிடித்தபோது பார்த்ததுதான் முதல் முதலாகப் பார்த்த கணக்கில் இருக்கிறது.

அவள் நடுக்குளத்தில் கூடையை இழுத்து வந்தபோது நான் எனது நார்ப் பெட்டியோடு அவளுக்கு எதிரில் சென்றுகொண்டு இருந்தேன். நான் அவள் அருகே செல்லவும் ஒரு பெரிய கெளுத்தி மீன் வடிவின் கையில் கொட்டிவிட்டது. வடிவின் கைகளில் ரத்தம் வழிந்தது. அந்தக் கெளுத்தி எனக்கும் வடிவுக்கும் நுட்பமான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்த விரும்பியதோ என்னவோ தெரியவில்லை. கொஞ்சம் ஆழமாகக் கொட்டியிருந்தது. கையில் ரத்தம் வழிய ஒரு கையில் கூடையைப் பிடித்தபடி மறு கையை உதறிக்கொண்டு அழுதாள். சட்டென அவள் கையைப் பிடித்து ரத்தம் வழியும் விரலை என் வாயில் வைத்துக்கொண்டேன். ஊரே கூடி நிற்க, நான் அவள் கையைப் பிடித்ததில் எழுந்த பயமும் வெட்கமும் கலந்த ஒரு பார்வையைப் பார்த்தாள். அவள் கைகளில் வழிந்த ரத்தம் நிற்கவில்லை.

நான் சட்டென என் சட்டையின் விளிம்புப் பகுதியைக் கிழித்து அவள் கைகளில் கட்டுப் போட்டேன். ஒரு நன்றி கலந்த புன்னகையோடு கூடையை இழுத்துக்கொண்டு சென்றாள். அந்த சிரிப்புக்குள் ஒரு மாயத்தன்மை இருந்தது. அது என்னவோ செய்தது. அம்மா புதுச் சட்டையைக் கிழித்ததற்காக அடித்தபோதுகூட வலிக்கவில்லை. காரணம், அந்த மாயச் சிரிப்பு.

அந்த நிகழ்வுக்குப் பின் பள்ளிக்குச் செல்லும் நேரத்தில் மிகச் சரியாக என் எதிரில் மாடு ஓட்டிக்கொண்டு செல்வாள் வடிவு. ஒரு கையில் சாப்பாட்டுத் தூக்குவாளி, மறு கையில் மாடு ஓட்டும் குச்சி, இவற்றோடு எனக்கான சிரிப்பையும் அவள் எடுத்து வர மறப்பது இல்லை. அவள் தனது அன்பையும் நன்றியையும் ஒற்றைச் சிரிப்பில் கட்டிவைத்திருந்தாள். அந்தச் சிரிப்பு அநேகம் பேசும். ஏன் லேட்டு, சாப்பிட்டியா, நல்லா பரீட்சை எழுது, இப்படித் தினமும் அக்கறையாகப் பேசும். தெருவில் ஆளரவமற்ற சில தினங்களில் நான் அவளிடம் பேச முயன்றபோது மிக நுட்பமான பதற்றத்தோடு விலகிச் சென்றாள். வடிவைப் புரிந்துகொள்ள நான் எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துபோனது.

அப்போது எனக்கு 13 வயது, அவளுக்கு 11 வயது. அது காதலிக்கும் வயதா? ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்போது அடிவயிற்றில் எழும் பய உணர்வுக்குள் காதல் ஒளிந்திருந்ததா என்பதை என்னால் இப்போதும்கூட உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வடிவிடம் பேசிவிட வேண்டும் என்கிற தவிப்பு மட்டும் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருந்தது. வடிவு மாடு மேய்த்துக்கொண்டு இருக்கும் காட்டுக்குப் போய் பேசுவது என முடிவு செய்தேன்.

அன்று நடுவப் பண்ணை வயலில் மாடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தாள் வடிவு. நான் போகும்போது மாமரத்து நிழலில் தனக்கு இருபுறமும் இருவர் நிற்பதுபோன்ற பாவனையில் கைகளைக் கோத்துக்கொண்டதுபோல வைத்துக்கொண்டு ‘பூப் பறிக்க வருகிறோம், பூப்பறிக்க வருகிறோம்’ எனச் சத்தமாகப் பாடியபடி எதிர் திசை நோக்கி ஓடினாள். சற்று தூரம் சென்று திரும்பியவள் குரலை மாற்றி, ‘எந்தப் பூவைப் பறிக்கிறீர்கள், எந்தப் பூவைப் பறிக்கிறீர்கள்?’ எனப் பாடியபடி திரும்பினாள். 10 குழந்தைகள் விளையாடும் விளையாட்டை ஒற்றை மனுஷியாக விளையாடினாள். அவள் விளையாடிய விதமும் அப்போது அவளிடம் காணப்பட்ட முக பாவனையும் ஒரு புதிரைப்போல இருந்தது. நான் அவளிடம் பேசாமலேயே திரும்பி வந்தேன்.

அன்றுதான் முதல் முறையாக அம்மாவிடம் வடிவைப்பற்றிப் பேசினேன். ”அம்மா பெரியகண்ணு மாமா பொண்ணு நடுவப்பண்ணை கிணத்துல தனியா நின்னு கிறுக்குப்புள்ள மாதிரி பாட்டுப் பாடி விளையாடிட்டு இருக்கும்மா” – நான் இதைச் சொன்னதும் அம்மா அதிர்ச்சி அடைவாள் என எதிர்பார்த் தேன். அம்மாவிடம் சிறு சலனம் கூட இல்லை. ”எல்லாம் கிரஹக் கோளாறுடா. வடிவு எட்டு வயசுல சமைஞ்சுட்டா” – இதைச் சொல்லிவிட்டு, தான் சொல்வது எனக்குப் புரிகிறதா என்பதுபோல ஒரு பார்வை பார்த்துவிட்டு, ”பெரிய மனுஷியாயிட்டா” என விளக்கம் சொன்னாள். வடிவின் வேதனைகளை முழுமையாகச் சொல்லும் ஆயத்தத்தோடு இருந்தாள் அம்மா. நான் அவள் மடி யில் படுத்துக்கொண்டேன்.

”அங்க நிக்காதே, இங்க நிக்காதே. அவன்கூடப் பேசாதே. இவன்கூடப் பேசாதே. சமைஞ்ச குமரிக்கு விளையாட்டு என்னடி வேண்டிக்கிடக்குன்னு இப்படியே தட்டித்தட்டி அந்தப் புள்ளய ஒடுக்கிவெச்சிருக்கு. யாருகூடயாவது அந்தப் புள்ள பேசறதப் பாத்தாப் போதும், அவ அம்மை தொடையில ஊதுகுழலைக் காயவெச்சு சூடு போட்டுருவா. அந்தப் புள்ள தொடை முழுக்க சூட்டுத் தழும்புதான்டா இருக்கும்”- அம்மா மிகுந்த மன வேதனையோடு இதைச் சொன்னாள். வடிவிடம் பேசும்போது அம்மா திட்டுவதற்கான காரணம் எனக்கு அன்றுதான் புரிந்தது.

”சின்ன வயசுலயே பெரிய மனுஷியானது அவ தப்பு இல்லல்லம்மா” என்றேன். அம்மா பதிலேதும் சொல்லவில்லை. மிக நீண்ட மௌனத்துக்குப் பிறகு, ”வடிவு பாவம்மா” என்றேன். அம்மா என்ன நினைத்துக்கொண்டாளோ தெரியவில்லை. ”நீயும் அவ தொடையில ஒரு சூடு போடவெச்சிடாதடா” என்றாள்.

அதன் பின் வடிவை நேருக்கு நேர் பார்ப்பதற்குக்கூட எனக்குப் பயமாக இருந்தது. ஆனால், வடிவிடம் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல ஒற்றைச் சிரிப்புடன் கடந்து சென்றாள். அந்தத் தனிமைக்கும் வாழ்க்கைமுறைக்கும் வடிவு முழுமையாகப் பழகிப்போயிருக்க வேண்டும். அவளுடைய பாவனைகளில் துளி வருத்தமும் தெரியவில்லை. எப்போதாவது சத்தமான குரலில் பழைய திரைப்படப் பாடல் களைப் பாடுவாள். எனக்கு அவளது வலி தெரிந்ததால், நான் அந்தப் பாடல்களை அவளோடு பொருத்திப் பார்த்துக்கொண்டேன்.

சில சமயங்களில் அவள் மாடு ஓட்டிக்கொண்டு வரும் பாதை வழியாக சைக்கிளில் செல்வேன். அப்படி எதிர்பாராமல் என்னைப் பார்க்கும்போது வடிவிடம் ஒரு தனி முகமலர்ச்சி தெரியும். ஒரு வார்த்தைகூட என்னிடம் பேசாமலேயே அவள் என்னோடு மிக நெருக்கமாக இருந்ததாக உணர்ந்தேன். அவள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒருவனாக இருந்தேன்.

எங்கள் பார்வைப் பரிமாற்றத்தை பள்ளிச் சிறுவர்கள் எந்தவிதமாகப் புரிந்துகொண்டார்கள் எனத் தெரியவில்லை. வடிவு போகும்போது ஒளிந்து நின்றுகொண்டு, ‘ஏய் கெளுத்தி மீனு’ எனக் கேலி செய்யத் துவங்கினார்கள். நான் வடிவைப் பார்த்துக்கொண்டு இருப்பதுபற்றியோ… நான் சட்டையைக் கிழித்து அவளுக்கு கட்டுப் போட்டதுபற்றியோ யோசிக்காமல்கூட அவர்கள் கேலி செய்திருக்கலாம். வடிவு எதையும் சட்டை செய்வது இல்லை. அவள் பாட்டும் பார்வையும் என்னைத் தொடர்ந்தபடியே இருந்தன.

அந்த வருட அம்மன் கோயில் கொடைதான் என்னிடம் இருந்து வடிவைப் பிரித்தது. எங்கள் ஊர் அம்மன் கொஞ்சம் வித்தியாசமான அம்மன். அவள் எப்போதும் ஒருவர் மீது மட்டும் வந்து இறங்குவது இல்லை. சாமிக் கொண்டாடி என ஒருவர் இருந்தாலும் 10 பேராவது சாமிஆடிக்கொண்டு இருப்பார்கள். அன்று இரவுக் கொடையில் வடிவு சாமியாடினாள். மற்ற எல்லா சாமிகளின் ஆட்டத்தைவிட வடிவின் ஆட்டம் உக்கிரமாக இருந்தது. இதுவரை தான் விளையாடாத விளையாட்டுக்குஎல்லாம் சேர்த்துவைத்து ஆடுவதுபோல இருந்தது. தலையை விரித்துப் போட்டுக்கொண்டு, நாக்கைத் துருத்திக்கொண்டு ஆடியவிதம் அவள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிரானது என்பதை ஒருவரும் புரிந்துகொள்ளவில்லை. எல்லோரும் வடிவின் மீதுதான் இசக்கி அம்மன் முழுமையாக இறங்கிஇருப்பதாகப் பேசிக்கொண்டார்கள். வடிவின் முகத்தில் குங்குமமும், திருநீறும், கோபமும் வியர்வையோடு வழிந்துகொண்டு இருந்தது. வடிவின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மேளக்காரர்கள் திணறினார்கள்.

வடிவு கண்களை உருட்டி ஆடியபடியே எல்லோர் தலையிலும் திருநீறால் அடித்தாள். அது அம்மனின் ஆசி இல்லை. வடிவின் சாபம் என்றே எனக்குப்பட்டது. தூரத்தில் நின்ற என்னை அழைத்து, என் நெற்றியில் திருநீறு வைத்துவிட்டுச் சிரித்தாள். அந்தச் சிரிப்பு ‘இப்ப என்ன பண்ணுவே’ என அவள் அம்மாவைக் கேள்வி கேட்டது.

அன்று இரவு முழுக்க எனக்கு வடிவுபற்றிய எண்ணம் மட்டும்தான் இருந்தது. நிறைவேறாத எந்த ஆசைகளையும் கனவுகளையும் வடிவுக்குள் திணித்துவிடக் கூடாது என முடிவுசெய்தேன். ஒருவேளை உள்ளுக்குள் உறைந்துகிடக்கும் வடிவின் மூர்க்கத்தைப் பார்த்த பயமாகக்கூட இருக்கலாம். அதன்பின் வடிவைச் சந்திப்பதைத் தவிர்த்தேன். வடிவைப் பார்க்கவில்லையே தவிர, அவளது புன்னகை எப்போதும் என்கூடவே இருந்தது.

அடுத்த ஆண்டு என்னை பாளையங்கோட்டையில் ஒரு பள்ளியில் சேர்த்தார்கள். வடிவைச் சந்திக்கும் சூழ்நிலை தானாகவே குறைந்தது. கல்விக்கான அடுத்தடுத்த இடம் பெயர்தல் வடிவை முற்றிலுமாக என்னைவிட்டு விலக்கியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு முறை எதிரெதிராகச் சந்திக்க நேர்ந்தபோது, ஒரு கணம் என் எதிரில் நின்று தீர்க்கமாக என்னைப் பார்த்துவிட்டுக் கடந்து சென்றாள்.

பெருநகரங்கள் என்னைப் பணி நிமித்தமாக விழுங்கியதற்குப் பிறகு, வடிவைப்பற்றிய எண்ணங்கள்கூடச் சுத்தமாக மறந்துபோனது. ஒரு முறை ஊர் திரும்பியபோது வடிவு குறித்துக் கேள்விப்பட்ட தகவல்கள் எல் லாமே தவறாக இருந்தன.

அன்று வடிவை நான் நடுவப் பண்ணை கிணற்றடியில் சென்று சந்தித்தேன். அதுதான் நானும் வடிவும் தனிமையில் சந்தித்த ஒரே சந்திப்பு. வடிவிடம் என்னை நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கும் எந்தப் பரபரப்பும் இல்லை. சொல்ல வந்ததைச் சொல்லிட்டுப் போ என்பதுபோல இருந்தது அவள் பார்வை.

”ஏன் இப்படி மாறிட்டே?” என்றேன்.

அமைதியாகப் பார்த்தபடி இருந்தவள் என் அருகில் வந்து, ”எல்லா ஆம்பளைங்ககிட்டயும் நான் உன்னைத்தான்டா தேடினேன்” என்றாள். ஒரு குற்றச்சாட்டைப்போல ஒலித்த அந்தக் குரலை எதிர்கொள்ள முடியாமல் அமைதியாகத் தலை குனிந்து நின்றேன். வடிவு என்னைக் கடந்து சென்றாள். அதன் பின் எப்போது வந்தாலும் வடிவைப்பற்றி யாரிடமும் எதுவும் விசாரிப்பதே இல்லை. இந்த முறை, அம்மாவின் கெளுத்தி மீன் வடிவை நினைவுபடுத்திவிட்டது.

சாப்பிட அமர்ந்தபோது அம்மா சொன்ன சொல்தான் இன்னும் உறுத்தலாக இருக்கிறது. ”நல்லாச் சாப்பிடு மக்கா. வரவர கெளுத்தி மீன் அழிமானமாயிட்டு வருது. அடுத்த தடவை நீ வரும்போது கெளுத்தி மீன் சுத்தமா அழிஞ்சு போயிரலாம்.”

– ஏப்ரல் 2010

Print Friendly, PDF & Email

1 thought on “கெளுத்தி மீன்

  1. உண்மை . ஆணின் வீரத்துக்குள் அடங்கிக்கிடக்கும் பெண்தென்றல், அவன் கோழைத்தனத்தால் சூறாவளியாய் சிதைத்தழிக்கும், தன்னையும் சுற்றத்தையும். பெண் சாபம் அழிந்தொழியும் பல கெளுத்தி மீன் குடும்பங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *