காலத்தின் கண்ணாடி…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: March 3, 2013
பார்வையிட்டோர்: 13,351 
 

” காயத்ரி என் கல்யாணத்துக்கு அவசியம் வரனும்..” அலுவலகத்தில் புதிதாய் வேலைக்கு சேர்ந்த ராகவி இன்விடேஷன் வைத்திருந்தாள். பத்திரிக்கையை பிரித்ததும் … ராஜா வெட்ஸ் ராகவி என்ற எழுத்துக்கள் மின்னியது. ‘ராஜா’ என்ற பெயரை பார்த்ததும் தான் காதலித்த ராஜாவை கல்லூரியின் கடைசி நாளன்று சந்தித்து பேசியது காயத்திரிக்கு நினைவலைகளாக இழுத்து கொண்டு வந்தது.

” இப்படியே.. அஞ்சு நிமிஷமா என் முகத்தையே பார்த்திட்டிருந்தா… என்ன அர்த்தம்…ஏதாவது பேசுங்க….”

” அதில்ல…. ரொம்ப நேரம் உத்து பார்த்தா குதிரை கூட கழுதை மாதிரி தெரியும்பாங்க…அதான்… நீ எப்படி தெரியறேன்னு பார்த்திட்டிருக்கேன்….”

” எப்படி இருக்கேனாம்…?”

” குட்டி பிசாசு மாதிரி தெரியற…காயத்ரி எதுக்கும் உன் காலை காட்டு.. நீதானான்னு.. செக்பண்ணிக்கறேன்…”

” உங்களுக்கு எப்பவும் குறும்பு விளையாட்டுதானா…? இனிமே நாம சந்திக்கற வாய்ப்பே கிடையாது.. என் வீட்டுக்கு தெரியாம அடிக்கடி போனில் கூட பேச முடியாது… மனசுக்குள்ள பயமாயிருக்கு…” அவள் கண்களில் கோர்த்த நீரை மெதுவாய் துடைத்துவிட்டு.. கை விரல்களை பற்றிக்கொண்டவன்,

” காயத்ரி எனக்கு மட்டும் அந்த கவலை இருக்காதா என்ன…? இங்கேயே இருந்தாலாவது…நீ எங்காவது வெளியில் வரும்போதாவது பார்ப்பேன்… ரூமை காலி பண்ணியாச்சி..நான் ஊருக்கு போய்த்தான் ஆகனும். நல்ல வேலை தேடிக்கிட்டு.. என் ரெண்டு தங்கச்சிகளுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டா… நம்ம கல்யாணத்துக்கு எந்த தடையும்இல்ல… அதுக்காக நீ ரெண்டு வருஷமாவது காத்துதான் ஆகனும்…”

” நீங்க முறைப்படி வந்து பொண்ணு கேட்கறவரைக்கும் என் காதலை வெளியில் சொல்லமுடியாம மனசுக்குள்ள பூட்டி வச்சிதான் அழ முடியும்….”

” எனக்கு தெரியும் காயத்ரி.. காதல் என்ற வார்த்தையை கூட பேச பயப்படற கண்டிப்பு..கட்டுபாடான குடும்பத்தில் தான் நீ இருக்கே.. என்னை பிடிச்சிருந்தாலும் என் காதலை ஏத்துக்க ரொம்ப தயங்கினே..பயந்தே.. என்னை புரிஞ்சிகிட்டப்பிறகுதான் மனம் திறந்துபேசவே ஆரம்பிச்சே… உன் ஞாபகம் வந்தா பார்த்துக்க உன் போட்டோ இருக்கு எங்கிட்ட..ஆனா என் அடையாளமா எதையும் உன்னால வைச்சிக்க முடியாது… என் மனசை தவிர..இங்க பாரேன்.. உனக்காக ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன்..இதை நீ தினமும் நெத்தியில வைச்சுக்கும்போதெல்லாம்… கண்ணாடியில நான் தெரிவேன்……” விதவிதமாய் ஸ்டிக்கர் பொட்டுக்களை தந்தான்.அவன் குழந்தைத்தனம் அவளுக்கு சிரிப்பை தந்தது.

பொறுமையா.. நல்லவனா இந்தகாலத்தில இப்படியும் ஒருவன் ஆண்களில் இருப்பானா… அவன் தோற்றம் அவனுக்கு எப்போதுமே கர்வத்தை தந்ததில்லை.. சினிமா கதாநாயகன் போல் பெர்சனாலிட்டி.. அவன் பார்வை தன் மீது படாதா என்று காயத்ரியின் தோழிகள் எக்ஸ்ட்ராவாய் மேக்கப் செய்து கொண்டு அவனிடம் வளைய வந்து பேசுவார்கள். இயல்பாய் .. ஆரவாரமற்ற காயத்ரிதான் அவன் மனதுக்குள் நுழைந்தாள்.

“காயத்ரி எதற்கெடுத்தாலும் கோபப்படற எங்கப்பா… சொத்துக்காக சண்டை போடற எங்கண்ணன்கள்… இவங்க நடுவில எங்கம்மா பாவம் தெரியுமா…? என் தங்கச்சிகளுக்கு நாந்தான் நல்லது செய்வேன்னு நம்பிக்கை வச்சிருக்காங்க…என் அம்மா எனக்கு தெய்வம் மாதிரி …. உன்னை பார்க்கிறப்ப.. எனக்கு அம்மாவோட பொறுமை.. பாசம் அப்படியே இருக்கு.. என்பான்.

” காயத்ரி… வீணா கவலைப்படாதே… இரண்டு வருசஷம்கிறது ஈசியா ஓடிடும்.. அதுவரை நீ வேற ஏதாவது கிளாஸ்க்கு போ.. இல்லை வேலைக்கு ட்ரை பண்ணு…” … துறு..துறுன்னுஅழகா இருக்கிற இந்த கண்ணுல எப்பவும் கண்ணீர் வரக்கூடாது… சிரிச்சிகிட்டே அனுப்பு அப்பதான் என்னால அங்கே நிம்மதியா இருக்க முடியும்….”

மூன்று மாதம் ஓடியது…. அதுவரை அவ்வப்போது போன் செய்து பேசியவன்…பிறகு தகவலே இல்லை… இவளாக போன் செய்தாலும் போன் போகவில்லை… என்னபிரச்சினையோ… கடவுளிடம்தான் மனம் விட்டு பேசி அழ முடிந்தது. வீட்டில் கல்யாண பேச்சை தட்டி விட்டு சமாளிப்பதே பெரிய பாடாய் இருந்தது. விளையாட்டு போல் நான்கு வருடம் ஓடிவிட்டது.இனியும் உன் விருப்பபடி விட முடியாது என்று.. அப்பாவரன் தேடுவதில் மும்முரமானார். அம்மா இவளிடம்..” காயத்ரி.. சொந்தக்காரா எல்லாம் பெண்ணுக்கு வயசாயிட்டே போறது… இப்படியே வச்சிட்டுருக்காங்களேன்னு… ஏளனமா பேசறா… கல்யாணம் வேணாம்னு சொல்றதுக்கு என்னதான் காரணம்.. எவனையாவது மனசுல வச்சிட்டுருக்கியா… அப்படி ஏதாவது இருந்தா எங்களை நீ உயிரோடவே பார்க்க முடியாது. நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ராங்க… பெற்றவங்க நல்லதுதான் செய்வாங்க .. நல்ல முடிவா எடு…”

காயத்ரிக்குள் … பெரிய போராட்டமே நடந்தது…. எந்த நம்பிக்கையில் ராஜாவுக்காககாத்திருக்க முடியும்….? ஒரு பெண் அவள் நிலமை எப்படி இருக்கும் என்று கூட புரிந்து கொள்ளாமல்… நான்கு வருடமாய் எந்த தகவலும் இல்லாமல்… அவன் மேல் நம்பிக்கை..குறைந்தது. ஒரு குடும்பம் வாழ தன்னை சாகடித்து கொள்ள துணிந்தாள்.. திருமணமுடிவை அப்பாவிடமே விட்டு விட்டாள்.ஒரு முகூர்த்த நாளில் மகேஷிற்கு மனைவியானாள். மகேஷ் குணத்தை தங்க தராசில் வைக்கலாம். அப்பா .. அம்மா நாங்கள் செய்த புண்ணியம் இத்தனை நல்ல கணவன் என்றார்கள். தன் மனதுக்குள் நினைத்த அந்த முதல் காதலை அவனிடம் சொல்லிவிடலாமா என்று தோன்றியது.. அதற்கான சந்தர்ப்பம் திருமணமான பத்தாவது நாளே அமைந்தது. எல்லாம் முடிந்த பிறகு இவளை தேடி வந்திருக்கிறான் ராஜா…காயத்ரிக்கு திருமணமாகிவிட்டதை கேள்விப்பட்டு மனம் ஒடிந்து துடித்திருக்கிறான்..

அவன் அம்மாவின் இறப்பு.. குடும்ப பிரச்சினைகள் எல்லாம் முடிந்து அவளுக்காக தேக்கிவைத்திருந்த கனவுகளோடு வந்திருக்கிறான்.

“காயத்ரி .. காலம் கடந்தது என் தப்புதான்.. உன் வாழ்க்கையில் குறுக்கிட எனக்கு எந்தஉரிமையும் இல்லை…கடைசியா உன்னை ஒரு தரம் பார்த்துட்டு போக அனுமதிப்பியா.. .”
மகேஷிடம் அத்தனையும் கொட்டிவிட்டாள்… ” இதை நீ முதல்லயே சொல்லி இருந்தா உன்விருப்பத்துக்கு குறுக்கே வந்திருக்கமாட்டேன் இல்ல… படிச்சிருக்கே உன் வாழ்க்கையை பற்றி முடிவெடுக்க என்ன தயக்கம்.. இதை சாக்கா வச்சி உன்னை சந்தேக பட மாட்டேன்.
வீட்டில் இருக்கறவங்களுக்கு என் நண்பர்னு சொல்லிக்கிறேன்… நம்ம வீட்டுக்கு ஒரு நாள் நானே அழைக்கிறேன்…”

ராஜா வந்தானே தவிர… காயத்ரியை ஏறெடுத்து பார்க்கவே முடியாமல் தலை தாழ்ந்தான்.”சார்.. காயத்ரி ரொம்ப நல்லவ.. நாங்க பழகின நாட்கள் களங்கமில்லாதது. நல்லபடியா பார்த்துக்கங்க… ”

“ராஜா காலத்தால் ஆறாத காயம் எதுவும் கிடையாது . நீங்க சிக்கீரமே ஒரு கல்யாணத்தை பண்ணிக்கணும்… நீங்க சந்தோஷமா வாழ்க்கையை அமைச்சுக்கிறதுதான் காயத்ரிக்கு நீங்க தருகிற பரிசு.. ” காயத்ரியை சமைக்க சொல்லி அவனுக்கு சாப்பிட உபசரித்தான். எந்த கணவனும் மனைவியை காதலித்தவனை வரவேற்று உபசரித்து அனுப்பி இருக்க மாட்டான். மகேஷ் அவள் மனதில் மிகவும் உயர்ந்தான்.

ராஜா மௌனமாய் சிரித்து விடைபெற்றான் .

இதோ பத்து வருடங்கள் ஓடிவிட்டது . மகேஷ் சொன்னது சரிதான் . காலம் காயத்திற்கு மருந்து போட்டு ஆற்றி விட்டது . அவளுடைய காதல் எதோ இளமை கால கனவு போல.. வர்ணம் கலைந்த ஓவியம் போல் .. முழுமையாக ராஜாவின் தோற்றம் கூட நினைவில் கொண்டு வர முடியவில்லை .. எப்போதாவது அவன் ஞாபகம் வரும்போது அவர்களின் பேச்சுக்கள் மட்டும் வார்த்தைகள் மடியாமல் காதுக்குள் உணர முடியும்போது
மனசு லேசாய் வலிக்கும். அவன் எங்கு இருக்கிறான் என்பதே தெரியாது .. அவர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு சந்தோஷமாகஇருக்கவேண்டும் ..கடவுளே என்று மனதுக்குள் வேண்டுதலாய் ஒலிக்கும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *