காலங்களில் அவள் வசந்தம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 13, 2020
பார்வையிட்டோர்: 14,365 
 

எனக்கு அருகே இருந்த மேசையில்தான் மலர்ச் செண்டு இருந்தது. மலர் செண்டை அந்தப் பெண் தேடியபோது அதை எடுத்து அந்தப் பெண்ணிடம் நீட்டினேன்.

அதை என்னிடம் வாங்கி, நன்றி சொல்லிக் கொண்டே அருகே நின்ற ‘பிளவகேளிடம்’ கொடுத்தவள், சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

‘நீங்க ராஜேஸ் தானே?’

‘ஆமா, நீங்க.. காயத்திரி தானே?’

‘என்னால் நம்பமுடியவில்லை, எவ்வளவு காலமாச்சு!’

‘எனக்கும்தான். நாங்க மீண்டும் சந்திப்போம் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. அதுவும் இங்கே அவுஸ்ரேலியாவில்!’

அன்று பார்த்த மாதிரியே அவள் இருந்தாள்.

‘காயத்திரி நீ அப்படியேதான் இருக்கிறாய்.’ நான் ஆச்சரியத்தோடு சொன்னேன்.

‘நீங்களும் அப்படியேதான் இருக்கிறீங்க, இது என்னுடைய மகள் சிந்தியா.’

அந்த திருமண வைபவத்தில் பிளவகேளாக நின்ற சிறுமியை அறிமுகப் படுத்தினாள். காயத்திரியின் முகச்சாயல் அப்படியே அவளிடம் இருந்தது.

‘அப்பா படம் எடுக்க உங்களையும் கூப்பிடுறாங்க’ என்னுடைய மூத்தமகள் அகல்யா நினைவுகளைக் கலைத்தாள்.

என்னுடைய மகளை காயத்திரிக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு மணமக்களை நோக்கி நடந்தேன். மணமகனின் நெருங்கிய உறவினர் என்ற முறையில் ஊரில் இருந்து இந்தத் திருமணத்திற்காக வந்திருந்தேன்.

எத்தனை வருடங்கள் கடந்தாலும் நினைவலைகள் பசுமையாய் கூடவே வந்தன.

காயத்திரியை நான் முதன் முதலாக லண்டனில்தான் சந்தித்தேன். புலமைப் பரிசு கிடைத்ததால் நான் அங்கே பொறியியலாளர் பட்டத்திற்காகப் படித்துக் கொண்டிருந்தேன். என்னைப்போலவே தாதியாகப் பயிற்சிபெற அவளும் லண்டனுக்குத் தனியே வந்திருந்தாள். தாதிப்பயிற்சி முடிந்ததும் அங்கே உள்ள ஒரு வைத்தியசாலையில் கடமையுமாற்றினாள்.

ஒருமுறை லயன்ஸ் கிளப்பில் இருந்து இரத்ததானம் செய்வதற்காக வைத்திய சாலைக்குச் சென்றிருந்தபோது அவளைச் சந்திக்க நேர்ந்தது. அவள்தான் எனக்கு இரத்தம் எடுத்தாள். கையிலே ஊசியை வைத்துக் கொண்டு,

‘எங்கே குத்த..?’ என்று கேட்டாள்.
‘கையிலே..!’ என்றேன்.
‘அது தெரியும், எந்தக் கையிலே..?’ என்றாள்.

நான் சிறிது நேரம் யோசித்தேன். அவளது கேள்வி இரண்டு கையிலும் வேறு வேறாய் இரத்தம் ஓடுமோ என்று என்னைச் சந்தேகப்பட வைத்தது.

‘என்ன யோசிக்கிறீங்க..? என்றாள்.

‘உங்களுக்கு எதில குத்த விருப்பமோ அதில குத்தி எடுங்க!’ என்றேன்.

‘அடடா.. என்ன தாராளமனசு’ என்று நினைத்திருக்கலாம், அவளுக்குச் சிரிப்பு வந்திருக்க வேண்டும், காட்டிக் கொள்ளாமல் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டே வலது கையைத் தெரிந்தெடுத்தாள்.

இரத்தநாளத்தைக் கண்டுபிடித்து சரியான இடத்தில் ஊசியைக் குத்த, ஒரு விரலால் தடவித் தேடிக் கொண்டிருந்ததில் இருந்து அவள் சற்றுச் சிரமப்படுவது தெரிந்தது.

இரத்தத்தைக் கண்டால் எனக்கு மயக்கமே வந்துவிடும் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த மென்னையான விரல்களின் வருடலின் சுகத்தை அனுபவித்துக் கொண்டு, எனது கவனத்தை மாற்றுவதற்காக மிகஅருகே இருந்த அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘இன்னும் குத்தவே இல்லை, ஏன் இப்படி தம்பிடிச்சிட்டு இருக்கிறீங்க, சாதாரணமாய் இருங்களேன்’ என்றாள்.

நான் சாதாரணமாய் இருக்கத்தான் முயற்சி செய்தேன். ஏனோ என்னால் முடியவில்லை. அவளது அருகாமையின் தாக்கத்தில், இதமான இயற்கை வாசனை சுவாசத்தை நிறைத்தது.

ஊசி ஏற்றும்போது, ஊ…! என்று என்னை அறியாமலே சத்தம் போட்டேன்.

‘வலிக்குதா..?’ என்றாள் செல்லமாக.

‘ஆமா’ என்று தலையசைத்தேன்.

‘என்ன சின்னப்பிள்ளைகள் மாதிரி..’ என்று சொல்லிச் சிரித்தபடி கண்சிமிட்டினாள்.

மின்னலாய் வெட்டிச் சென்ற அந்தப் பார்வையில் என்னையறியாமலே அவள்பால் ஈர்க்கப்பட்டேன்.

என் வாழ்க்கையில் வசந்தம் குடிபுகுந்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

வசந்த காலம் மறக்க முடியாதது. தென்றலின் குளிர்மை, பட்சிகளின் ஓசை, மலர்களின் வாசம், பரந்து விரிந்த வானம் எல்லாமே எனக்கே எனக்காய்க் காத்திருப்பது போல, எனக்கு என்ன ஆச்சு என்றே புரியவில்லை.

என்னை மறந்து அவள்தான் எல்லாமே என்ற நிலைக்கு என்னை இழுத்துச் சென்றது. இது காதலா அல்லது அவள்மீது கொண்ட ஈர்ப்பா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை.

அவளை அடிக்கடி சந்தித்தேன். அன்று காதலர் தினம். என் காதலைச் சொல்ல ஒற்றை ரோஜாவோடு அவளுக்காகக் காத்திருந்தேன்.

முதலில் சற்றுத் தயங்கினாலும், விழி உயர்த்தி வியப்போடு அதை ஏற்றுக் கொண்டாள்.

‘மாலை ஆறுமணிக்குத்தான் வேலை முடியும், என்னோட டினருக்கு வர்றீங்களா?’

தன்னோடு இரவு விருந்திற்கு வரமுடியுமா என்று கேட்ட போது மகிழ்ச்சியோடு அவளது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன்.

அன்று இரவு உணவு விடுதியில் பல விடையங்களை நாங்கள் பரிமாறிக் கொண்டோம்.

உணவு விடுதிக்கு வந்திருந்த, எங்களைத் தெரிந்தவர்கள் சிலர், எங்களை வாழ்த்தினார்கள். விருந்து முடிந்து இருவரும் நடனமாடினோம். எல்லாமே நல்லபடியாய் நடந்தது. அவளைப் பற்றிய நினைவோடு நான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியபடி இருப்பிடம் நோக்கி மிதந்தேன்.

மறுநாள் மாலை நேரம் அவளை அழைக்க நினைத்தேன். ஆனால் அவளே அவசரமாக என்னை அழைத்தாள். ஊரிலே தனது தாயார் ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், அவசரமாகத் தான் ஊர் திரும்ப வேண்டும் என்றும் அறிவித்தாள்.

அவளுடைய சோகத்தில் முழுமையாகப் பங்குபற்ற முடியாவிட்டாலும், அவள் போவதற்கு வேண்டிய பிரயாண வசதிகளை ஓடியாடிச் செய்து கொடுத்தேன்.

சீக்கிரமே திரும்பி வந்துவிடுவதாக வாக்குக் கொடுத்துப் பிரிந்து சென்றாள். பிரிய முடியாமல்தான் நாங்கள் பிரிந்தோம். காத்திருப்பதில் ஒருவித சுகம் இருந்ததால் அவளது நினைவுகளோடு அவளுக்காகப் பொறுமையோடு காத்திருந்தேன்.

ஆனால் குறிப்பிட்ட தினத்தில் அவள் திரும்பி வரவேயில்லை. பரிதவிப்போடு பல விதமாகவும் அவளுடன் தொடர்பு கொள்ள முயன்றும் பதில் கிடைக்கவில்லை.

ஒரு மாதம் வேகமாக ஓடிச் சென்ற போதுதான் ஒரு உண்மை தெரியவந்தது. தாயாரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தனது முறைப் பையனைத் திருமணம் செய்து கொண்டு அவுஸ்திரேலியாவிற்குப் போய்விட்டதாக செய்தி வந்தது.

மனமுடைந்துபோன நான் விரக்தியின் உச்சக் கட்டத்திற்கே சென்றேன். தனிமை என்னை வாட்டியது. பசியின்றித் தூக்கமின்றித் தவித்தேன். தாடி வளர்த்து எனது சோகத்திற்குத் தீனி போட்டுப் பார்த்தேன். எதுவுமே என்னைப் பழைய நிலைக்குக் கொண்டுவரவில்லை.

லண்டனில் இருக்கப் பிடிக்காததால் திரும்பவும் ஊருக்குச் சென்றேன்.

சோகத்தைக் காலம் கரைத்தது. லண்டன் மாப்பிள்ளை என்று சொத்துப் பத்தோடு வந்த பெண்ணை மனைவியாய் ஏற்றுக் கொண்டேன். மூத்தவள் பெண்ணாகவும், அடுத்தவன் ஆணாகவும் பிறக்கவே இரண்டோடு நிறுத்திக் கொண்டோம்.

இருபத்தைந்து வருடக் கனவுகள் மீண்டும் நிஜமாக மறுபடியும் அதே காயத்திரி!

இரவு விருந்துபசாரத்தின்போது எங்கள் மேசையிலேயே அவளும் கணவரும் இருந்தார்கள். கணவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

சிறிது நேரத்தால் கணவர் எழுந்து நண்பர்களைச் சந்திக்க அடுத்த மேசைக்குச் சென்றார். எனது மகளும் எழுந்து சினேகிதிகளிடம் சென்றாள். நான் எதுவும் பேசவில்லை. குற்ற உணர்வு உள்ளவளாக காயத்திரி தன்னைக் காட்டிக் கொள்ளவில்லை.

‘என்ன யோசனை..?’ என்றாள் திடீரென்று.

‘இல்லை, கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தேன், லண்டன் காதலர் தின நடனத்தை என்னால் மறக்க முடியவில்லை’ என்றேன்.

அவளுக்கும் அந்த நினைவு வந்திருக்க வேண்டும். நினைவுகளை அசைபோட்டு மெல்லச் சிரித்தாள்.

‘ராஜேஸ் அந்தந்த நேரவாழ்க்கையை நினைத்து காலமெல்லாம் ஏங்கிக் கொண்டிருக்கக் கூடாது. எது யதார்த்தமோ அதை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வயதில் ஒவ்வொன்றும் முக்கிமாய்த் தெரியும். அதுதான் வாழ்க்கை என்ற மாயத் தோற்றத்தை அது ஏற்படுத்தும். அதை எல்லாம் தாண்டி யதார்த்த வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை ஏற்றுக் கொள்ளவேணும். அதைத்தான் நான் செய்தேன். இப்போது என்னுடைய கவலை எல்லாம் என்னுடைய குடும்பத்தைப் பற்றியதுதான்.’ என்று குட்டிப் பிரசங்கம் ஒன்று செய்தாள்.

என்னை ஏமாற்றி விட்ட குற்ற உணர்வு கூட இல்லாமல், அவள் எனக்கு உபதேசம் செய்ததை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

உங்களுக்கும் குடும்பம் இருப்பதால் நீங்களுக்கும் உங்கள் குடும்பத்தைப் பற்றிய கவலையோடுதான் இருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். வாழ்க்கை மகிழ்வோடு வாழ்வதற்கே ராஜேஸ், தேவையில்லாத விடயங்களை மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது. இருப்பதைக் கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கப் பழகிக் கொள்வதுதானே நல்லது, உங்களை மீண்டும் சந்தித்ததில் ரொம்பச் சந்தோஷம், வரட்டா..?

எனது பதிலைக்கூட எதிர்பாராமல் அவள் எழுந்து சென்றாள். இவளுக்காகத் தாடி வளர்த்து கொஞ்ச நாட்களாகத் தேவதாசாக மாறிச் சோகத்தில் மூழ்கியிருந்ததை நினைத்து எனக்குள் நானே வெட்கப்பட்டேன்.

யன்னலுக்கால் வானம் தெரிந்தது. தெளிந்த வானத்தில் ஆங்காங்கே மேகக் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு வேகமாக ஓடிக்nhண்டிருப்பது என் பார்வைக்கு வேடிக்கையாய் இருந்தது. இந்த மேகங்கள்கூட எப்போதாவது கார்மேகமாய் மாறி மறைந்து போகலாம். இயற்கையிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே இருக்கின்றது.

வசந்த காலமும் நிலையற்றதுதான் என்பதை இயற்கையின் மாற்றம் காலமெல்லாம் புலப்படுத்தி நின்றாலும் இப்பொழுதுதான் அதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்குள் வந்தது. இயற்கையின் பருவமாற்றங்கள் போல மனித வாழ்க்கையிலும் மாற்றங்கள் இயற்கையானதே!

நான்தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போல, குற்ற உணர்வோடு குறுகிப்போய் அப்படியே உட்கார்ந்திருந்தேன். எதுவுமே நடக்காதது போல, மங்கிய வெளிச்சத்தில் கணவனோடு கைகோர்த்து உதட்டில் புன்னகையோடு அவள் நடனமாடுவது இங்கிருந்தே தெரிந்தது!

Print Friendly, PDF & Email

1 thought on “காலங்களில் அவள் வசந்தம்

  1. ‘இயற்கையிடம் இருந்து கற்றுக் கொள்ள நிறையவே இருக்கின்றது’. என்கிற குரு அரவிந்தன் அவர்களின் தத்துவார்த்தமான வாக்கியம் Nature is a teacher. Nature is the storehouse of wisdom. Nature is always ready to give what you ask. என்ற வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதையை நினைவூட்டியது.
    The Tables Turned
    BY WILLIAM WORDSWORTH
    Up! up! my Friend, and quit your books;
    Or surely you’ll grow double:
    Up! up! my Friend, and clear your looks;
    Why all this toil and trouble?

    The sun above the mountain’s head,
    A freshening lustre mellow
    Through all the long green fields has spread,
    His first sweet evening yellow.

    Books! ’tis a dull and endless strife:
    Come, hear the woodland linnet,
    How sweet his music! on my life,
    There’s more of wisdom in it.

    And hark! how blithe the throstle sings!
    He, too, is no mean preacher:
    Come forth into the light of things,
    Let Nature be your teacher.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    ஜூனியர் தேஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *