காற்றின் அலை…

 

இடைவெளியற்று காற்று வீசினபடி இருந்தது. கங்கா கண்களை இறுக மூடிக்கொண்டாள். அமானுஷ்யம், நேரத்தைக் கடக்கும் கடிகார முள்ளாக அவளைக் கடந்துகொண்டுஇருந்தது. அடர்ந்து பெய்யும் மழை, சிறு திவலைகளாகி உடைந்து பெருக்காய் ஓடிற்று.

‘ஜானி’ படத்தில் ஸ்ரீதேவி பாட, மழையில் ரஜினிகாந்த் நனைந்தபடி ஓடி வருவது ஞாபகம் வர, சட்டென்று ஜன்னல் வழி பார்த்தாள். யாருமில்லை. வனாந்தரத் தனிமையில் வானவில் இவளைச் சுற்றிப் பொதிந்துகொண்டது போல்இருந்தது.

”மழை குறைஞ்சுடுச்சு கங்கா, போலாமா?” செண்பகவல்லி எட்டிப் பார்த்தாள்.

”போற வழியில, ரோட்டோர கடைல சூடா டீ குடிக்கலாமா?” என்றாள் கங்கா.

வராந்தாவில் வானொலி பாடிக்கொண்டு இருந்தது. ‘கண்ணதாசா, கண்ணதாசா, வருவாயா..?’

”நல்லாருக்கில்ல இந்தப் பாட்டு?” என்றாள் செண்பகா.

”ம்…”

”ஏன், மூட் சரியில்லயா கங்கா?”

”அப்படில்லாம் இல்லப்பா! என்னலாமோ மழை ஞாபகப்படுத்துது. ‘ஜானி’ படம். பிரஜித் பிறந்தப்போ காலைல பெஞ்ச மழை…” வார்த்தைகள் உதட்டை விட்டு வழுக்கிற்று. ”ஒரு நிமிஷம் இரு” என்று ஸ்டுடியோ வுக்குள் நுழைந்தாள். கங்கா கண்ணாடி ஜன்னலில் தெளித்த நீர்த் திவலைகளை வெறித்தாள். இறகு போல மழைத் துளி பறந்து சுழற்றி எதிரியைச் சுழன்று அடிப்பது போல, கண்ணாடியில் மோதிச் சிதறியது.

பிரஜித் பிறந்த நாள் அன்று காலை வானம் இப்படித்தான் பொத்துக்கொண்டு பெய்தது. நனைந்த ரோஜாப் பூவாகப் பிறந்தான். கைகள் நனைந்து ஈரமாவது போலிருந்தது கங்காவுக்கு. இறுகக் கட்டின சேலை முந்தியால் இழுத்துப் போர்த்தினாள். கண் செருகித் தூங்கும் பிரஜித்…

”மேடம், உங்களைப் பார்க்க சந்திரன்னு யாரோ வந்திருக்காங்க!” ஆதி சொன்னபோது, ‘நாளைக்கு வரச் சொல்லேன்’ என்று சொல்லத் தோன்றிற்று. யார் அது என்று ஒரு கணம் மூளைக்குள் மின்னல் வந்து போயிற்று.

”ஹேய்… போவோமா?”செண்பகாவின் குரல் காற்றில் அலைந்து, முதுகை வந்து தொட்டது.

”என்னாச்சு கங்கா..?”

”ஒண்ணுமில்ல. வா, போலாம்!”

ஆதி மறுபடியும், ”மேடம், ரிசப்ஷன்ல…” என்று ஆரம்பிக்க, ”கண்டிப்பா பாத்துடுறேன்” என்றாள்.

”ரிசப்ஷன்ல என்னது..?” என்றாள் செண்பகா. வீட்டுக்குக் கிளம்பும்போது தலை சீவியிருந்தாள்.

”யாரோ வந்திருக்காங்களாம்!”

”மழைலயும் உனக்கு விசிறியா? மேம், உங்க குரல் என்னை வசீகரப் படுத்துது… இத்யாதி… இத்யாதி..!” மேடை நாடகப் பாணியில் அவள் கைகளை விரித்துச் சொன்னாள். அவள் கைகளை விரிக்கும்போது கிழிந்த காற்று, நடுவில் புகுந்து அவளை ஆக்கிரமித் தது. ஒரு பறவையைப் போல காற்று, மழை சுமந்த ஈரத்தோடு படர் வது போலிருந்தது.

”ஏன் உம்மணாஞ்சாமியா வர்றே?”

”நீ இழந்ததையே நினைச்சு இன்னும் எவ்ளோ நாள் உம்முனு இருக்கப்போற? உன் ஒவ்வொரு சிரிப்பின் பின்னும் ஒரு கண்ணீர்த் துளி மினுக்குதே’னு கவிதை எழுதுவேன்னு நினைக்கிறியா? ஹா, சான்ஸே இல்லப்பா!”

செண்பகாவின் வார்த்தைகள் உதடுகளிலிருந்து பிரிந்து, காற்றுக்குள் சிக்கலெடுக்கிற நூலிழையைக் கொத்தின பறவையாகப் புகுந்தது.

ரிசப்ஷனில் யாருமில்லை. வெறுமனே ஏ.ஸி. ஓடிக் கொண்டு இருந்தது. அறையெங் கும் குளிர்.

”இந்தக் குளிர்ல சூடா ஒரு கப் இஞ்சி சாயா குடிச்சுட்டு, கனமா போர்த்திட்டுத் தூங்கினா, அப்பப்பா…”

செண்பகாவின் குரலில் இழப்புகள் இல்லை. இழப்புகளையும் அனுபவங்கள் ஆக்கிக்கொள்ள அவளால் முடியும். இதற்கு முன் அவள் பணியாற்றிய அலுவலகத்தில் மேலாளர், தினம் காலையில் தன் அறைக்கு வந்து ‘குட் மார்னிங்’ சொல்லச் சொன்னதற்கு ‘எதிர்த்தாப்ல வந்தாலே உங்களைப் பார்த்து குட் மார்னிங் சொல்ல மனசு வர மாட்டேங்குது. நான் வந்துட்டேனான்னு பார்க்கணும்னா, ரெஜிஸ்டர்ல பாருங்க!’ என்றிருக்கிறாள். நான்கு வருடங்களாகக் காதலித்தவன், அம்மாவின் வற்புறுத்தலால் வேறொரு பெண்ணை மணக்க, ‘நலமாயிரு!’ என்று கண்ணீரில்லாமல் வாழ்த்தியிருக்கிறாள்.

அடைந்த அறையில் பெருஞ்சத்தத்தோடு நிரம்பின இசையின் அவஸ்தை அவளுக்குக் கிடையாது. இருக்க அனுமதித்ததில்லை. இசையின் அளவைக் குறைக்கவோ, தனிமையையும், சிறை உணர்வையும், சத்தத்தின் வீச்சையும் குறைக்கவோ ஜன்னலைத் திறக்கத் தெரிந்திருக்கிறது அவளுக்கு.

”குடை வெச்சிருக்கியா? ஹாங்… யாரோ வந்திருக்காங்கன்னு ஆதி சொன்னார்ல?”

வெளியே ஒரு டாக்ஸி நின்றிருந்தது. குடையை விரித்து நடக்க ஆரம்பித்தபோது டாக்ஸியிலிருந்து இறங்கின ஆள், ”மேடம்” என்று தயங்கிக் கூப்பிட்டான். ”ஒரு நிமிஷங்க. நாங்க செங்கல்பட்டுலேருந்து வர்றோம், சந்திரன்னு உங்ககிட்ட நிகழ்ச்சில பேசுறது…”

”நீங்களா?” என்றாள் கங்கா.

”நான் அவன் அண்ணன் சண்முகம். அவனுக்கு எந்திரிக்க முடியாதுங்க. நரம்புத் தளர்ச்சி. படுத்தாப்லதான் இருப்பான். உங்களைப் பாக்கணும்னு, ‘கார் வெச்சுக் கூட்டிப் போ!’ன்னான். ‘தீபாவளிக்கு டிரெஸ் வேணாம். கார் செலவு பண்ணு அதுக்கு’ன்னான்!”

கண்கள் காற்றைப் போல் அலைந்து காரினுள் துழாவின. பின் இருக்கையில் லேசான சாய்வோடு கழுத்தை ஒருக்களித்துப் படுத்தபடி இருந்த முகத்தில் இவள் கண்கள், கண்ணாடியில் மோதிய மழைத் துளி போல் பட்டுச் சிதறியது. கையை லேசாக மேலெழுப்பி, ”நான்தான் சந்திரன்ங்க” என்ற குரல் ஈரக் காற்றில் புயலடித்து மரக் கிளையிலிருந்து உதிர்ந்த இலையாக இவளை நோக்கி வந்தது. செண்பகா இவள் உள்ளங்கையை அழுத்தமாகப் பற்றினாள்.

கார் கதவு பாதி திறந்திருந்தது. அதை முழுக்கத் திறந்து, ”சந்திரன்… நல்லாயிருக்கீங்களா?” என்றாள்.

”நம்பிக்கையோடு இருக்கேன் மேடம்” என்று ஒரு துளி சலனமோ இழப்பின் வலியோ இல்லாமல் சந்திரன் சிரித்தான். காற்று புகையாக மாறி நால்வருக்குள் கோலம் போடுகிறாற் போல் இருந்தது. ‘ஜானி’ படத்து ரஜினி, மழையைக் கிழித்துக்கொண்டு ஜானகியின் குரலினூடே ஓடி வருவது பிரபஞ்ச மெங்கும் காலடி ஓசையால் காற்றில் கலப்பது போலிருந்தது. ”வர்றேன் மேடம். சந்தோஷம்!” என்று சந்திரன் பிடித்த கைரேகை களிடையே ஓசை நிரம்பி வழிந்தது.

புழுதியில்லாமல் ஒரு வாகனம் கிளம்பிக் கடக்க முடியுமா என்கிற சந்தேகம் வாழ்க்கையில் முதன்முறையாக எழுந்தது. ஆயிரம் மைல் தூரத்திலிருந்து கிளம்பின உலகின் எல்லா மனிதர்களின் பெயர்களைத் தவிர்த்த, செண்பகா, பிரஜித், ஆதி, சண்முகம், சந்திரனைத் தாண்டி, இவள் மேல் விழுந்து சிதறிய மழைத் துளியில் கங்கா என்கிற பெயர் இருந்தது!

- 30th ஜனவரி 2008 

தொடர்புடைய சிறுகதைகள்
நீளமான தலைப்புகளை வாசித்து மூச்சு இரைத்தது போல்தான் உனக்கும் அவனுக்குமான இடைவெளி நீண்டு கிடக்கிறது. உன் வீட்டு வரவேற்பறையில் சினைகொண்டது போல் ஒரு பல்லி ஓர் எறும்பின் பின்னால் போய்க்கொண்டு இருக்கிறது. அலமாரியின் நிழலில் எறும்பைக் காணாமல் திகைத்து நிற்கிறது. எறும்பின் ...
மேலும் கதையை படிக்க...
ஜ‌ன்ன‌ல் வ‌ழியாக‌வே மொத்த‌ காம்பெள‌ன்டும் தெரிகிற‌து முப்பிடாதிக்கு. வேப்ப‌ ம‌ர‌ நிழ‌ல் சியாம‌ளா அக்கா வீட்டு சுவ‌ர் மேல் ப‌ட‌ர்ந்து இருக்கிற‌து. சியாம‌ளா அக்கா தூங்கிக் கொண்டிருப்பாள். ம‌த்தியான‌ம் பால்கார‌ன் வ‌ரும் வ‌ரைக்கும் தூங்கிக் கொண்டிருந்து விட்டு, ம‌ணி ச‌த்த‌ம் கேட்ட‌வுட‌ன் ...
மேலும் கதையை படிக்க...
கோட்டை காவல் நிலையம்
போலீஸ் ஸ்டேஷனுக்கு வெளியே வேப்பம் பூக்கள் சிதறிக் கிடந்தன. சரவணன் அதைக் காலால் நெம்பித் தள்ளி விட்டு வாட்சைப் பார்த்துக்கொண்டான். கையெழுத்து போடுவதற்கு இன்னும் பத்து நிமிஷங்கள்தான் இருந்தன. முன்னதாகப் போனால், எஸ்.ஐ.விநாயகம் கர்புர் என்று கத்துவான். 'கோர்ட்டுல என்னால சொல்லியிருக்கு... பத்து ...
மேலும் கதையை படிக்க...
மணி காலை ஐந்து. மாறித் ஹிப்சன் எழுந்து, தனது பிடரியைத் திருகும்வரை கட்டில் பீடத்திலிருந்து மணி ஐந்து என்பதைச் சொல்லிக்கொண்டேயிருந்தது அந்தச் சிறிய, சதுர வெள்ளை மணிக் கூடு. அது எதிர்பார்த்தது போலவே மூன்று சத்தத்தின்பின் மாறித் ஹிப்சன் அதன் பிடரியைத் திருகி ...
மேலும் கதையை படிக்க...
அன்புள்ள மகனுக்கு, பொலபொலவென வடித்த சாதத்தின் நிர்மலத்துடன் புலர்ந்திருக்கும் காலைப் பொழுதின் நிரம்பிய சந்தோஷங்கள் உன்னை ஞாபகப்படுத்துகின்றன. பால் கட்டின கனத்த மார்பின் வலிகளோடு ஞாபகங்கள் சிதறுகின்றன. நரம்புகள் வழியே ரத்தமும் உயிருமாய் நிரம்பின அவஸ்தைகள் உடலெங்கும் சூடான அமிலமாய் பெருகுகின்றன. இந்த ...
மேலும் கதையை படிக்க...
ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்
க்ருபா சித்தி காலை ஆறரை பஸ்ஸுக்கே வந்து இறங்கியபோது வெளிச்சம் முற்றாக வரவில்லை. பாதி வெளிச்சத்தில் உற்றுப்பார்த்து ''இப்படி மெலிஞ்சிட்டியே ஜெனி... சாப்பிடுதியா, இல்லியா?'' என்றாள்.அறையில் என்னோடு தங்கியிருந்த சத்யா, போர்வையை விலக்கிப் பார்த்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.''எத்தன பேரு இங்ஙன இருக்கியல?''ஊருக்குப் ...
மேலும் கதையை படிக்க...
காற்றில் பரவும் கதைகள்
உள்ளே நுழையும்போதே வத்சலா இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை. ''வந்துருச்சா?' என்றாள். ''என்ன?'' என்றேன். ''அந்த எழவுதான்...' 'வரும்... ஆனா, வராது' என்றபடி சிரித்துக்கொண்டே நைட்டிக்கு மாறினேன். வத்சலா சிரிக்கவில்லை. 'சிந்துக்கா கேட்டுட்டே இருக்காடி' என்றாள். அவள் குரலில் ஒரு கீறல் தென்பட்டது. ''ஏன்... நாப்கின் வாங்கிக் கொடுக்கப் போறாளாமா?' என்றேன். வத்சலா ...
மேலும் கதையை படிக்க...
பீஃப் பிரியாணி
சென்னையின் நெருக்கமான தெருக்கள், எங்களுக்கு மிக அந்நியமாக இருந்தன. நாங்கள் என்பது நான்கு பேர். லோகநாதன், செந்தில், ஜார்ஜ், நான். எங்கள் கம்பெனியின் போர்டு மீட்டீங் சைதாப்பேட்டை ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட இருந்ததால் வந்தோம். பீஃப் பிரியாணி கிண்டியில் ஒரு லாட்ஜில் எங்களுக்கு இரண்டு ...
மேலும் கதையை படிக்க...
வாயெல்லாம் பிளந்து கிடக்க, சிகப்பு நித்துல நாக்கு மட்டும் துருத்திக்கிட்டு கதிர் தூங்குதப் பார்த்ததும் தேனு ஞாபகம்தான் சத்தியமா வருது. "ஆம்பிளைப் பசங்கல்லாம் கோமாளிப்பசங்க'னு அவ அடிக்கடி சொல்லுவா. ஆனாலும் ஆம்பிளைப் பசங்களோடப் பழகுத அவ ஒருநாளும் விடலை. அவளுக்கான கதைகளையும் ...
மேலும் கதையை படிக்க...
அலர்
மழை நாள் ஈரத் துணிகளுக் குன்னே ஒரு வாசனை உண்டு. ஜோதிக்கு அந்த வாசனை ரொம்பப் பிடிக்கும். ஜோதியும் நானும் ஹாஸ்டல்ல இருக்கிறப்ப, வேணும்னே துணி காயப் போடுற இடமா மூக்கை நுணுக்கிட்டுப் போய் நிப்பா. மழைன்னா, அவளுக்கு உசிர். பல்லவன் ...
மேலும் கதையை படிக்க...
தனிமையின் வாசனை
ஜ‌ன்னல்
கோட்டை காவல் நிலையம்
மாறித் ஹிப்சன்
வாக்குமூலம்
ஒரு கனவும் பாதி ஃபலூடாவும்
காற்றில் பரவும் கதைகள்
பீஃப் பிரியாணி
தேனும் ஒரு “கொயர்’ கோல நோட்டும்
அலர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)