காதல் வீரியம்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 14, 2016
பார்வையிட்டோர்: 22,918 
 

வீட்டிலிருந்து பாக்டரிக்குப் போகும் வழியில் அந்த இளநீர் கடையின் முன் என் பென்ஸ் காரை டிரைவர் மாணிக்கம் நிறுத்தினான். கடந்த இரண்டு மாதங்களாக இது தினமும் நடக்கும் ஒரு செயல்.

நான் இறங்கிச் சென்று இரண்டு இளநீர் வெட்டச் சொன்னேன். மாணிக்கம் இளநீருடன் சற்றுத் தள்ளி இருந்த காரினருகே சென்று நின்று கொண்டான். இளநீர் உடம்புக்கு நல்லது என்றாலும் அதை சீவிக் கொடுக்கும் மல்லிகாவின் அழகில், சிரிப்பில், வளப்பமான தேகத்தில் நான் சொக்கிப் போனேன். அதுதான் உண்மை.

எனக்கு வயது 54 . ஆனால் இருபது வயது பையன் மாதிரி ஒரு துள்ளல் எப்போதும் என்னிடம் மனதாலும் உடம்பாலும் இருக்கும். எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஒரு ஈடுபாடு. அதிலும் அழகான பெண்களைப் பார்த்துவிட்டால் என் மனசு உருகிவிடும். தஞ்சாவூரில் ஒரு பெரிய கார்மென்ட் தொழிற்சாலைக்கு நான் உரிமையாளன். உற்பத்தியாகும் பெரும்பாலான துணிகள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. கொழுத்த லாபம். ஏராளமான பணத்தில் சொகுசான அமைதியான வாழ்க்கை. .

அன்பான மனைவி. ஒரே மகள் சுகன்யா தஞ்சாவூர் மெடிகல் காலேஜில் நான்காம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள். தானே காரை ஓட்டிக்கொண்டு கல்லூரிக்குச் சென்று வருவாள்.

டிரைவர் மாணிக்கம் எங்கள் அவுட் ஹவுசில் குடியிருக்கிறான். அமைதியானவன். டிரைவர் என்று பெயரே தவிர, தோட்டத்தையும் கவனிப்பான், ப்ளம்பிங்கிலிருந்து, எலக்ட்ரிகல் வரை சகல வீட்டு வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு ஆர்வமுடன் செய்வான். சிகரெட், குடி என்று ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. தினமும் முகச்சவரம் செய்து நேர்த்தியான உடையில்தான் காணப்படுவான். அவன் பென்ஸ் கார் ஓட்டும் அழகே தனி. என் மனைவி கமலா அவனை ஒரு தாயின் வாஞ்சையுடன் கவனித்துக் கொள்வாள்.

ஆங்… மல்லிகாவைப் பற்றி நான் நிறைய சொல்ல வேண்டும். அவ அழகானவ மட்டுமல்ல, ரொம்ப புத்திசாலியும்கூட. முதன் முறையாக நான் அவளை இளநீர் வெட்டச் சொல்லி சாப்பிட்டவுடன், கனமான அதன் இரண்டு மூடிகளையும் என்னிடமிருந்து வாங்கி, அவைகளை மறுபடியும் அரிவாளால் வெட்டி பிறகு அதற்கென வைத்திருந்த ஒரு பெரிய தொட்டியினுள் வீசி எறிந்தாள்.

எனக்கு அவளின் இந்தச் செய்கை மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“மூடியை எதற்காக மறுபடியும் இரண்டாக வெட்டி எறிந்தாய்?” .

“அப்படியே எறிஞ்சா அதுல மிச்ச தண்ணி கொஞ்சம் இருக்கலாம்… அதுல கொசு வந்து அடையும். சில சமயம் மழ பெஞ்சா தேங்கா மட்டை குழில தண்ணி தேங்கி கொசு தங்க நாமே வழி பண்ண மாதிரி ஆயிடும்….அதான் ரெண்டா வெட்டிடுவேன் சாமி ” என்று தன் சோழிப் பற்களைக் காட்டி என்னைப் பார்த்து வெள்ளந்தியாக சிரித்தாள். .

நான் அசந்து போனேன்.

“உன் பேரென்ன? என்ன படிச்சிருக்க?”

“பேரு மல்லிகா… ப்ளஸ் டூ வரையும் படிச்சேன் அதுக்கு மேல படிக்க புடிக்கல… மார்க்குகள் தொட்டுக்கோ தொடச்சிகோன்னு மென்னிய புடிக்கிற மாதிரி வாங்கி பாஸ் பண்ணி வெளிய வர்றதுக்குள்ள மூச்சு திணறிப் போச்சு சாமி” என்றாள்.

அன்றிலிருந்து மல்லிகாவை எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு. அழகான பெண்கள் என்றால் நான் வலியவந்து பெரிதாக உதவி செய்வேன். ‘இவளுக்கும் ஏதாவது ஒரு நல்லது செய்யணும்… அதுவும் அவ சந்தோஷப் படற மாதிரி பெரிசா இருக்கணும்’ என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

“இன்னும் படிக்கணும்னு உனக்கு ஆசையில்லையா மல்லி?”

“படிப்பே வேணாம்…என் வீட்ல எனக்கு கல்யாணத்துக்கு மாப்ள பாக்க ஆரமிச்சுட்டாங்க சாமி” முகத்தில் ஏராளமான வெட்கத்துடன் சிரித்தாள்.

சட்டென்று எனக்கு அந்த எண்ணம் தோன்றியது. இவளுக்கு நம் மாணிக்கத்தை பார்த்தால் என்ன? நாமே இவர்கள் கல்யாணத்தை நன்கு செலவழித்து முன்னின்று நடத்தி, அவுட் ஹவுஸில் குடி வைத்தால் அடிக்கடி இவளுடன் பேசலாமே ! கமலாவும் சுகன்யாவும் எங்காவது வெளியூர் காரில் சென்றால் என் அருகில் இருந்து இவள் நம்மை கவனித்துக் கொள்வாளே! அட நல்ல ஐடியா…உடனே செயல் படுத்த வேண்டும்….

அன்று ஞாயிற்றுக்கிழமை. கமலாவும், சுகன்யாவும் என்னுடன் வீட்டில் இருந்தபோது மாணிக்கம் உள்ளே வந்தான். “நமக்கு இளநி வெட்டித்தரும் மல்லிகாவைப் பற்றி என்ன நினைக்கிற மாணிக்கம்?” என்றேன்.

“நான் என்ன நினைக்கிறது சார்…..கெட்டிக்காரப் பெண் மாதிரி தெரியுது”.

நான் இயல்பாக சிரித்துக்கொண்டே “உனக்கும் வயசாச்சு…. அவளை நீ கட்டிக்கிறயா மாணிக்கம்? நல்ல பெண்.. அழகாவும் இருக்கா நீ சரீன்னு சொன்னா நாம போய் பேசலாம்” என்றேன்.

“வேணாம் சார்….எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்” என்று அவசரமாக மறுத்தான்.

“சரி மாணிக்கம்…. உன் இஷ்டம்”

அவன் சென்ற பிறகு சுகன்யா என்னிடம் “அப்பா கல்யாணம்கிறது அவங்கவங்க தனிப்பட்ட பர்சனல் மேட்டர்…. நீங்க ஏன்பா மாணிக்கத்த எம்பராஸ் பண்றீங்க?” என்றாள்.

கமலா, “அதனாலென்னடி அவன பத்து வருஷமா நமக்குத் தெரியும்….தவிர நம்ம அவுட் ஹவுஸ்லேயே இருக்கான்… அப்பாவுக்கு அவன் நல்லா இருக்கணும்னு ஆதங்கம் இருக்கக்கூடாதா?” என்று எனக்கு சப்போர்ட் செய்தாள்.

ஆறு மாதங்கள் சென்றன. சுகன்யா கடைசி வருடப் படிப்பில் இருந்தாள்.

அன்று இரவு லாப்டாப்பில் இருந்தபோது திடீரென்று எனக்கு சுகன்யாவிடமிருந்து ஒரு மெயில் வந்தது.

அடுத்த அறையில் படித்துக் கொண்டிருப்பவளிடமிருந்து மெயிலா? ஆர்வத்துடன் படித்தேன்.

“அன்புள்ள அப்பா,

சென்ற வாரம் நீங்களும் அம்மாவும் எனக்கு ஒரு நல்ல பையனைத் தேடி அமர்க்களமாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்க நேரிட்டது. நான் மெடிகல் படித்து மேலும் இரண்டு வருடங்கள் படித்தவுடன்தான் என் திருமணம். நீங்கள் யாரையும் எனக்காகத் தேட வேண்டாம்.

நான் நம் வீட்டு மாணிக்கத்தை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களின் தனி மனித சுதந்திரத்திற்கும், விருப்பத்திற்கும் என்றுமே மரியாதை கொடுப்பவர். உங்களின் ஒரே அன்பு மகளான என் விஷயத்தில் மட்டும் அதை விட்டு விடுவீர்களா என்ன?

அப்பா, நான் உங்களுக்காக நம் வீட்டின் டெரசில் காத்திருக்கிறேன். உடனே வரவும். சுகன்யா.”

ஓ காட்… எனக்கு உடம்பு உதறியது. மல்லிகா இருக்க வேண்டிய இடத்தில் ரத்தத்தின் ரத்தமான என் ஒரே பெண்ணா? ஜாதி, மதம் எனக்கு பெரிதில்லை. ஆனால் ஒரு ஸ்டேட்டஸ் வேண்டாமா? ச்சீ அப்படி என்ன மயிரு காதல்? கோபப் பட்டேன்.

அடுத்த கணம்… வீம்பு வேண்டாம். இன்னமும் இரண்டரை வருடங்கள் இருக்கிறதே. இந்தப் படிக்காத பன்னாடை மாணிக்கத்தை என் பெண்ணிடமிருந்து அவளுக்கே தெரியாமல் கமுக்கமாக பிரித்துவிட வேண்டும். வீரியம் பெரிதல்ல காரியம்தான் முக்கியம். அமைதி….அமைதி என்று என்னை நிதானப்படுத்திக்கொண்டு டெரஸ் சென்றேன்.

குளிர் காற்றில் சுகன்யா காத்திருந்தாள்.

“அப்பா…. மெயில் படிச்சீங்களாப்பா?” என்று குரலில் குழைவுடன் கேட்டாள்.

“இது என்னம்மா பெரிய விஷயம்… கல்யாணம் உனக்கு, எனக்கில்லையே. மாணிக்கம் நல்ல பையன்…உன்னோட சாய்ஸ் எப்படிம்மா தப்பா போகும்?” என்று வாஞ்சையுடன் அவள் தலையை தடவிக் கொடுத்தேன்.

“அவர் ரொம்ப நல்லவர்ப்பா…. அம்மாக்கு இன்னமும் எதுவும் தெரியாதுப்பா.”

“இப்ப அம்மாகிட்ட சொல்லி இத பெரிசு பன்னாதம்மா….முதல்ல உன் படிப்பை நல்ல படியா முடி…அப்புறம் எல்லாம் நல்லபடியா நடக்கும்”

இருவரும் கீழே இறங்கி வந்தோம்.

அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை.

மறுநாள் துபாய் சலீமுக்கு போன் பண்ணி, “சலீம் எனக்கு ஒரு பெரிய உதவி பண்ணனும்…என்னோட டிரைவர் மாணிக்கத்துக்கு ஒரு நல்ல வேலை துபாய்ல ஏற்பாடு செய்ய முடியமா? பென்ஸ், ஆடி என எல்லா பெரிய காரும் நன்றாக ஓட்டுவான். அவனுக்கு ரொம்ப பெரிய குடும்பம்…பாவம் கஷ்டப் படறாங்க….ஆனா நான் உதவி செய்யறதா அவனுக்கு தெரிய வேண்டாம்” என்றேன். .

அடுத்த ஒரு மாதத்தில் எண்ணைக் கிணறு வைத்திருக்கும் ஒரு பெரிய பணக்காரரிடம் வேலை கிடைத்ததும் மாணிக்கம் துபாய் சென்று விட்டான்.

நான் நிம்மதியடைந்தேன். சுகன்யா சற்று வாட்டமாக இருப்பதாகத் தோன்றியது. .

அடுத்த இரண்டு மாதத்தில் சுகன்யாவுடன் மெடிகல் படிக்கும் வினோத் என்பவன் அவுட் ஹவுஸை வாடகைக்கு கேட்டான். இன்னும் இரண்டு வருடங்கள் மேலே படிப்பானாம். நல்ல பையனாக, பொறுப்பானவனாகத் தெரிந்தான்.

நான் உடனே சரியென சொன்னதும் அடுத்த வாரமே தன் தாயாருடன் வந்து விட்டான். சுகன்யா இவனைத் திருமணம் செய்து கொண்டால் நல்லது என்று தோன்றியது.

சுகன்யா அவுட் ஹவுஸிற்கு அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தாள். இருவரும் சேர்ந்தே படித்தார்கள். கல்லூரிக்கு வினோத்தை தன் காரில் அழைத்துச் சென்றாள்.

மாதங்கள் ஓடின….

நடுவில் ஒருநாள் சலீமிடம், “மாணிக்கம் எப்படி இருக்கான்?” என்று கேட்டேன்.

“இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணிக்கம் துபாயிலிருந்து ஷார்ஜா சென்று விட்டதாகச்” சொன்னார்.

ஒழிந்தது சனியன். இனி அவனுக்கும் நமக்கும் எந்த தொடர்பும் இல்லை என நிம்மதியடைந்தேன்.

அடுத்த ஒரு வருடத்தில் சுகன்யா மேல் படிப்பையும் முடித்து விட்டாள்.

வினோத் சென்னை செல்வதாகச் சொல்லி அவுட் ஹவுஸை காலி செய்துவிட்டுச் சென்று விட்டான்.

இதுதான் சரியான தருணம் என்பதால் சுகன்யாவிடம் “என்னம்மா எப்ப கல்யாணம்?” என்றேன்.

அவள் “இன்னும் ஆறு மாசத்துல மாணிக்கம் ஷார்ஜாவிலிருந்து வந்ததும்” என்றாள்.

‘என்னடா இது வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறி விட்டதே’ என்று திகைத்தேன். .

“அப்பா அவரு இப்ப ஷார்ஜா ஷேக் இப்ராஹிடம் பர்சனல் டிரைவராக இருக்கிறார்….லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்” என்று உற்சாகம் பொங்க சொன்னாள்.

உள்ளுக்குள் எனக்கு கடுப்பாக இருந்தது. பேச்சை மாற்ற எண்ணி, “உனக்கு இங்கயே ஒரு பெரிய்ய ஹாஸ்பிட்டல் கட்டித் தரேன்….டாக்டர் சுகன்யான்னா தஞ்சாவூர் முழுவதும் தெரியணும்” என்றேன்.

“வேண்டம்ம்பா… அவரு திரும்பியதும் கல்யாணம் பண்ணிகிட்டு நாங்க திருச்சில செட்டில் ஆகிடுவோம். தில்லை நகர்ல பெரிய இடம் வாங்கிட்டாரு அங்கேயே வீடும் ஹாஸ்பிடலும் அவர் எனக்கு கட்டித் தருவாரு” என்றாள்.

கமலாவுக்கும் சுகன்யாவின் காதல் தெரியவர, “மாணிக்கம் ரொம்ப நல்ல பையன்…நான் பார்த்து வளர்ந்த பிள்ளை” என்றாள்.

அடுத்த ஆறு மாதத்தில் மாணிக்கம் ஷார்ஜாவிலிருந்து திருச்சி சென்றான். எதோ ஆட்டோ ஒர்க்ஸ் புதிதாக ஆரம்பிக்கப் போகிறானாம். ஹாஸ்பிடல் கட்டிக் கொண்டிருக்கிறானாம். அவைகளை மேல்பார்வை செய்வதற்காக சுகன்யா அடிக்கடி திருச்சி சென்று வந்தாள்.

எனக்கு சுகன்யா என்னை விட்டு நழுவிச் செல்வதுபோல் தோன்றியது.

ஒன்பது மாதங்கள் சென்றன….

அன்று சுகன்யா சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தாள்.

ஆட்டோ ஒர்க்ஸ், ஹாஸ்பிடல் இரண்டையும் நான்தான் திருச்சியில் திறந்து வைக்க வேண்டுமாம். அதற்காக என்னை நேரில் அழைக்க வீட்டிற்கு வருகிறானாம்.

காலை பத்து மணிக்கு ஆடி காரில் மாணிக்கம் வீட்டிற்கு வந்தான்.

வளப்பமாக பூசினாற்போல் இருந்தான். என்னையும், கமலாவையும் ஒருசேர நிற்க வைத்து நமஸ்கரித்தான்.

“சார்….ஷார்ஜா ஷேக் இப்ராஹீம் நான் திருச்சிக்கு திரும்பிப் போகிறேன் என்றதும் என்னை சொந்தமாக ஒரு ஆட்டோமொபைல் கடை ஆரம்பிக்கச் சொல்லி அவரது ஏஜென்ட் மூலமாக எனக்கு தில்லை நகரில் நெலம் வாங்கித் தந்து, ஐந்து கோடி பணமும் தந்து உதவினார்” என்றான்.

அவன் கட்டியுள்ள ஹாஸ்பிடல், ஆட்டோ ஒர்க்ஸ் இரண்டையும் நான்தான் திறந்து வைக்க வேண்டுமெனச் சொல்லி ஒரு பெரிய அழைப்பிதழை என்னிடம் நீட்டினான்.

அந்த அழைப்பிதழில், ‘சுகன்யா ஹாஸ்பிடல்…. சுகன்யா ஆட்டோ ஒர்க்ஸ்’ என கோல்டன் கலரில் பெயர்கள் மின்னின.

நான் வாயடைத்துப் போனேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “காதல் வீரியம்

  1. விறு விறுப்பான காதல் கதை. முடிவு மிகப் பிரமாதம்.
    காதலிப்பவர்கள் படிக்க வேண்டிய கதை.
    ஜனனி ராம்நாத், திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *