Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காதல் பரிசு

 

நீங்கள் திருமணமாகாதவரா?

இன்னமும் நீங்கள் யாரையும் காதலிக்கவில்லையா? நீங்கள் மிகப்பெரிய தவறு செய்கிறீர்கள்.

கன்னியரும், காளைகளும் இன்னமும் காதலிக்காமல் இருப்பது மிகப்பெரிய பாவம். காதல் வயப்படாத இளமை குப்பை. வாழ்க்கையில் காதல் அனுபவமே இல்லாமல் வாழ்ந்து மடிவது மிகப் பெரிய சோகம்.

கடந்த எட்டு மாதங்களாக நான் காயத்ரியைக் காதலிக்கிறேன்.

இது எனக்கு ஒரு மிகப்பெரிய சுகானுபவம். எப்போதும் என்னை நினைவில் நிறுத்திக்கொண்டு; எனக்கே எனக்காக ஒரு அழகிய யுவதி காத்திருக்கிறாள் என்கிற நினைப்பே ஏகாந்தம்.

அழுக்குப் பொட்டலமாகக் கிடந்த என்னை, சற்று அழகாக மாற்றியவள் காயத்ரி. தினமும் ஷேவ் பண்ணிக்கொண்டு; தலைமுடியை வகிடு எடுத்து வாரி; மேட்சிங் உடையுடன் நேர்த்தியாக என்னை மாற்றி; மீசையை அழகாக ட்ரிம் பண்ணச்சொல்லி; விரல் நகங்களை சீராக வெட்டச்சொல்லி; சட்டை பட்டன்களை ஒழுங்காகப் போடச்சொல்லி பார்ப்பதற்கு என்னை ஒரு கண்ணியமான ஆணாக மாற்றியதே காயத்ரிதான்.

ஒரு புத்திசாலிப் பெண்ணின் அருகாமையும், அவளின் காதலும் ஒரு ஆணுக்கு யானை பலம்.

காயத்ரியைக் காதலிக்கத் தொடங்கியதிலிருந்து எனக்குள் எப்போதும் ஒரு உற்சாகம் கொப்புளிக்கிறது. மனசெல்லாம் நிரந்தரக் கிளுகிளுப்பு. யாரைப் பார்த்தாலும் ஒரு சினேகமான சிரிப்பு…

இந்த எட்டு மாதக் காதலில் காயத்ரிதான் என் வுட் பி என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

அன்று மாலை எப்போதும்போல் பாலவாக்கம் பீச்சில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.

“நாம் ரெண்டு பேரும் மார்ச் மாதத்தில் இருந்து மீட் பண்ணின்டிருக்கோம்…”

“ஆமா காயப்.”

“இப்போ நவம்பர் வந்தாச்சு…”

“ஆமா… அதுக்கென்ன இப்ப?”

“இந்த நம்மோட எட்டு மாதக் காதல்ல, என்னிக்காவது என்னோட பிறந்தநாள் என்னிக்கின்னு என்னைக் கேட்டதுண்டா நீ.”

“ஆமா. உன்னை நான் கேட்டதில்லைதான்.”

“நெஞ்சுல கை வைத்துச் சொல்லுடா, எட்டு மாதமா பழகிண்டு இருக்கிற வுட்பிகிட்ட என்னிக்கி கண்ணம்மா உன் பர்த்டேன்னு கேக்காம இருக்கிற உனக்கு, காதல் மனசுன்னு ஒண்ணு இருக்கா இல்லையா?”

“உனக்கு என்னைக்கு பர்த்டேன்னு இது நாள் வரைக்கும் உன்னை நான் கேட்டதே கிடையாது என்பது நிஜம்தான் காயப்…”

சில வினாடிகள் மெளனமாக இருந்தேன்.

“சரி, இன்னிக்கி டேட் நவம்பர் பத்துதானே?”

“யெஸ்.”

“நவம்பர் பதினேழு என் வுட்பியோட பர்த்டேயாம்…போதுமா?”

காயத்ரி பிரமித்துப் போனாள். எதிர் பார்த்திராத இந்தப் பிரமிப்பு காயத்ரியின் வாயையே அடைத்து விட்டது. சிறிது நேரத்திற்கு பேச்சு மூச்சையே காணோம்.

“என்ன ஆள் அட்ரஸையே காணோம்… எப்படிரா இவனுக்கு நம்மகிட்ட கேட்காமலேயே நம்மோட பிறந்தநாள் தெரிஞ்சுதுன்னு ஆச்சரியமா இருக்கா? விஷயம் ரொம்ப சிம்பிள். நான் மட்டும் இல்லை காயப்…என்னை மாதிரி எந்தப் பசங்களா இருந்தாலும் சரி; எவளாவது அவனை இம்ப்ரெஸ் பண்ணிட்டான்னு வச்சிக்க; அவ்வளவுதான், அவ யாராக இருந்தாலும் சரி, அவளைப் பத்தின அத்தனை புள்ளி விவரங்களையும் அக்கு வேறா ஆணி வேறா கழட்டிடுவான் கழட்டி! காதல் உத்வேகம் என்கிறது அப்படிப்பட்டது…

“……………………………………”

நான் என்னிக்கி உன்னை பெருமாள் கோவில்ல பார்த்தேனோ அன்னிக்கே தெரியும் உன்னோட பர்த்டே நவம்பர் பதினேழுன்னு. பட் சும்மா தெரிஞ்சுக்காதவன் மாதிரி இருந்தேன். திடீர்ன்னு உன் பிறந்த நாளைக்கு முந்தினநாள் உனக்கு ஒரு அருமையான புடவை வாங்கி பர்த்டே பரிசா குடுத்து உன்னை ஒரு அசத்து அசத்திடனும்னு ப்ளான் போட்டிருந்தேன்… அது தெரியாம நீ உன் பாட்டுக்கு நெஞ்சில் கை வைத்துச் சொல்லு, காதல் மனசு அது இதுன்னு டயலாக்கை எடுத்து விட்டுட்டே… உன்னை விரட்டி விரட்டி கதலிச்சப்புறம், எட்டு மாசமா என்கிட்டே பழகியும் இன்னும் உனக்கு நான் யார்ன்னு தெரியவே இல்லை காயப்.”

“அய்யோ, ஸாரிடா கண்ணா; வெரி ஸாரி…என்கிட்டே நீ டைரக்டா கேட்டதேயில்லை என்கிறதாலே அப்படிச் சொல்லிட்டேன்… ஐயம் ரியலி ஸாரிடா.”

“சரி போனா போகுது, உன் பர்த்டேக்கு நான் ஒரு ஸாரி வாங்கித் தந்தா கட்டிப்பே இல்லையா?”

“உனக்காகக் கண்டிப்பா கட்டிப்பேன்.”

“யார் வாங்கித் தந்ததா வீட்ல சொல்லுவ?”

“அதை நான் யோசிச்சு சொல்லிக்கிறேன்.”

“சரி. என்ன புடவை வேணும்? பட்டுப் புடவையாகவே வாங்கிடட்டுமா?”

“அய்யய்யோ, பட்டெல்லாம் வேண்டாம். கொன்னுடுவா கொன்னு எங்காத்ல. சும்மா சிம்பிளா ஏதாவது வாங்கித்தா போதும். ஏன்னாக்க பிறந்தநாளுக்கு வச்சுக்கோன்னு எங்கப்பா இன்னிக்கி மார்னிங்தான் முன்னூறு ரூபாய் கொடுத்தார். என் கையில் இருக்கிற பணத்தையும் போட்டு நல்ல ஸாரியா வாங்கிண்டேன்னு ஆத்ல சொல்லிப்பேன்…”

“ஸோ நோ ப்ராப்ளம்.”

“நோ ப்ராப்ளம்.”

“அப்ப ஒரு நல்ல மைசூர் சில்க் புடைவையே வாங்கிடறேன். உங்க அப்பாவை சட்டு புட்டுன்னு உங்க அக்காவுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்துக் கரையேத்தச் சொல்லி, லைனை க்ளீயர் பண்ணச் சொல்லு காயப். சும்மா சும்மா இப்படி உன்கூட பேசிட்டு எழுந்து போறதெல்லாம் ரொம்ப நாளைக்குத் தாங்காது எனக்கு…”

“அதேதான் உனக்கும்… உன்னோட பாதர் கிட்டே சொல்லி, உன்னோட தங்கை கல்யாணத்தை சீக்கிரமா முடிக்கச் சொல்லு.”

“சரி சொல்றேன்… பர்த்டேன்னிக்கி நீ ஆபீஸ் போக வேண்டாம். நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலியா ஊர் சுத்தலாம்.”

“ஓகே கண்ணா…”

“புடவை வாங்கப் போறப்ப நீ வரவேணாம். நானே செலக்ட் பண்ணிடறேன்.”

“ஓ யெஸ்.”

வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம், காதல் வயப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் தங்களின் காதல் திருமணத்திற்கு வெகுகாலம் காத்திருப்பதுதான்.

என் வீட்டில் என் தங்கையின் திருமணமும்; காயத்ரி வீட்டில் அவள் அக்காவின் திருமணமும் நடந்து முடிந்த பிறகு; வேறு வேறு ஜாதியைச் சார்ந்த நாங்கள் எங்களுடைய பெற்றோர்கள் சம்மதித்தாலும், சம்மதிக்காமல் போனாலும் சரியானதொரு தருணத்தில் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று காத்திருந்த காலத்தின் சுமை இருக்கிறதே, அப்படியானதொரு சுமையை எங்களின் பரம வைரி கூடச் சுமந்து விடக்கூடாது.

காயத்ரிக்கு வாழைப்பூ நிற மைசூர் சில்க் புடவை வாங்கினேன். நவம்பர் பதினேழு அவளுக்கு பிறந்த நாள். புடவையை அவளிடம் நவம்பர் பதினாறாம் தேதி மாலைதான் கொடுத்தேன்.

அதை அவளிடம் கொடுப்பதற்கு முன்பு, நான்கு நாட்கள் புத்தம் புதிய வாசனையோடு என்னிடம் இருந்த அந்தப் புடவையை, நூறு முறையாவது என் முகத்தில் வைத்து வைத்து முகர்ந்து பார்த்திருப்பேன். என்னைப் பொறுத்த வரையில் அந்த மணம் புடவையின் மணம் இல்லை… அது காயத்ரியின் ஸ்திரி மணம்…!

நவம்பர் 17; மாலை 6 மணி.

நானும் காயத்ரியும் பாலவாக்கம் பீச்சில் அமர்ந்திருந்தோம். சாக்கோபார் வாங்கிச் சாப்பிட்டோம்.

“நான் கூட பயந்துகிட்டுதான் இருந்தேன் கண்ணா. புடவை வாங்கப் போறச்சே என்னை வரவேணாம்னு சொல்லிட்டியே; எப்படி செலக்ட் பண்ணுவியோ என்னவோன்னு கொஞ்சம் ரெஸ்ட்லெஸ்ஸாகவே இருந்தேன். ஆனா நேத்திக்கி புடவையைப் பார்த்ததும்தான் அப்பாடான்னு இருந்தது. வொண்டர்புல் செலக்ஷன் கண்ணா…”

“ஸோ, உன்னோட பிறந்த நாளை ஜாம் ஜாம்னு கொண்டாடிட்டோம். இனி நம்ம கல்யாணத்தையும் உன்னோட அடுத்த பிறந்த நாளைக்குள்ள நடத்தியாச்சுன்னா போதும். உங்கப்பா கிட்டயும் சொல்லி வை… அவர் பாட்டுக்கு ஆகாயத்தைப் பார்த்திட்டு ஜபம் பண்ணிட்டிருக்கப் போறார். சுறு சுறுப்பா மாப்பிள்ளை பார்த்து உன்னோட அக்கா கல்யாணத்தை நடத்தி நமக்கு லைனை க்ளியர் பண்ணச் சொல்லு. நாளும் பொழுதும் சும்மா வேஸ்ட்டா போயிட்டிருக்கு.”

எங்களுடைய நல்ல நேரம் காயத்ரியின் அக்காவுக்கு அடுத்த ஆறு மாதங்களில் நல்ல இடத்தில் திருமணமாயிற்று. காயத்ரி கூப்பிட்டதால் நானும் அந்தக் கல்யாணத்திற்கு போயிருந்தேன். காயத்ரியின் உறவினர்கள் என்னை ஒருமாதிரி பார்த்தார்கள். என்னிடம் யாருமே ஒட்டவில்லை. அவாள் கூட்டத்தில் நான் பிராமணன் இல்லை என்பது எடுப்பாகத் தெரிந்தது. என் காயத்ரிக்காக நான் எதையும் பொறுத்துக் கொள்வேன்.

இரண்டே மாதங்கள்… நல்ல காரியங்கள் நடந்தால் தொடர்ந்து நடக்கும் என்று சொல்வார்கள். என் தங்கையின் திருமணமும் நல்லபடியாக நடந்தது. அதற்கு காயத்ரி வந்தாள். என் உறவினர்கள் அவளை நன்றாக உபசரித்து விழுந்து விழுந்து கவனித்தனர்.

அதன் பிறகு, காயத்ரியுடன் என் திருமணத்திற்கு என் உறவினர்கள் தடையேதும் சொல்லவில்லை. ஆனால் காயத்ரி தன் பெற்றோர்களின் சம்மதம் பெற மிகவும் கஷ்டப்பட்டாள். அவர்களுடன் ஒரு வருடம் ஏகத்துக்கும் போராடி சம்மதம் வாங்கினாள்.

நானும் காயத்ரியும் இப்போது மிகவும் சுதந்திரமான, சந்தோஷமான காதலர்கள்….

ஆம்… எங்களுக்கு 2019 ம் ஆண்டு, வரும் ஏப்ரல் பத்தாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை சென்னை குசலாம்பாள் கல்யாண மண்டபத்தில் திருமணம்.

காதலுக்கு சரியான பரிசு கல்யாணம்தானே?

உங்களுக்கு தனித்தனியாக பத்திரிக்கை அனுப்ப என்னிடம் உங்களின் முகவரி கிடையாது. எனவே தயை கூர்ந்து இதையே அழைப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள்.

என்ன சரியா… நீங்கள் கண்டிப்பாக வருவீர்கள்தானே? 

தொடர்புடைய சிறுகதைகள்
முதலிரவு அறை. கட்டிலில் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள் அமுதா. கதவு திறக்கப்பட சட்டென்று கண்களை துடைத்துக் கொண்டாள். அவளுடைய கணவன் பெருமாள் அருகில் வந்து அமர்ந்தான். “இன்னும் அழுதுகிட்டுதான் இருக்கியா அமுதா? என் மேல உனக்கு இன்னமும் நம்பிக்கை வரல... அப்படித்தானே?” “அப்படீல்லாம் இல்லீங்க மாமா...” பெருமாள் அவள் கண்ணீரைத் ...
மேலும் கதையை படிக்க...
அன்று ஞாயிற்றுக்கிழமை. ராகுகாலத்திற்குப் பிறகு, பாஸ்கரும் அவன் பெற்றோர்களும், மற்றும் அவனது இரண்டு தங்கைகளும் ராதிகாவை பெண்பார்க்கப் புறப்பட்டனர். பாஸ்கருக்கு படபடப்பாக இருந்தது. தன் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு பார்க்கப் போகிறான். இது எவ்வளவு பெரிய தருணம் ! ...
மேலும் கதையை படிக்க...
ராஜாராமன் சென்னையிலுள்ள அந்தப் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ப்ராஜக்ட் மனேஜர். அவன் மனைவி வைகுண்ட ஏகாதசிக்கு பெருமாளை சேவிக்க மூன்று வயதுக் குழந்தையுடன் தன் ஊரான ஸ்ரீரங்கம் சென்றிருந்தாள். மனைவியை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு ஜாலியாக தனிமையில் ...
மேலும் கதையை படிக்க...
(இதற்கு முந்தைய ‘பணக்கார இசக்கி’ கதையை படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது) இசக்கி சேர்த்துவைத்த பணம் நான்கு தலைமுறைகளுக்குப் போதும். அதனால்தான் இசக்கி எல்லா வியாபாரத்தையும் ஒருநாள் நிறுத்தி விட்டான். சும்மா ‘லொங்கு லொங்கு’ன்னு ஓடி ஓடி துட்டு சம்பாரிச்சு என்ன செய்ய? ...
மேலும் கதையை படிக்க...
******************* இது நம்முடைய சிறுகதைகள்.காமில் எனது இருநூறாவது சிறுகதை. இதுகாறும் என்னை ஆதரித்து என் கதைகளை நம் தளத்தில் ஏற்றிவரும் சிறுகதைகள்.காம் ஆசிரியர் குழுமத்திற்கு என் நன்றிகள். எஸ்.கண்ணன். ******************* சேர்ந்தாற்போல் மூன்று நாட்கள் விடுமுறை வந்தது. அப்போது என்னுடன் சென்னையில் ஐடி கம்பெனியில் பணி புரியும் ...
மேலும் கதையை படிக்க...
மனைவியே குடும்பம்
பெண் என்பவள்
பாலியல் பாதைகள்
இசக்கியின் அம்மா
போன ஜென்மத்து மனைவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)