காதல் க்ளைமாக்ஸ்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல் கிரைம்
கதைப்பதிவு: August 24, 2012
பார்வையிட்டோர்: 15,592 
 

“வாங்க அத்தான் ! வாங்க வாங்க !”

கல்யாண சத்திரத்திற்குள் நுழைந்த மகேஷை மணப்பெண் வித்யா ஓடிவந்து வரவேற்றாள்.

மகேஷ் மனதிற்குள் குரூரமாய் சிரித்துக்கொண்டான். “ஆமா வாங்கதான் வந்திருக்கேன், உன் உயிரை!”

சிரமப்பட்டு இயல்பாய் சிரிக்க முயன்றவனிடம் .” என் சொந்த அத்தைமகன் நீங்க.. நாளைக்குக் கல்யாணம்னா இப்படி முதல் நாள் ஜானவாசம் ஆனதும் ராத்திரி பதினொருமணிக்கு வர்ரது நியாயமா?. அப்பா , அதான் உங்க மாமா, உங்களை எதிர்பார்த்திட்டே இருந்தார். இப்போதான் தூங்கப் போனார்” என்றாள் உரிமைகலந்த கோபத்துடன்.

‘நீ கூட தூங்கப்போறே, ஒரேடியா’ மகேஷ் தனது ஷர்ட் பாக்கட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான் அங்கே ‘அது’ பத்திரமாய் இருந்தது.

காலோடுதலை அலங்காரத்துடன் கோயில் சிலைபோல நின்ற வித்யாவை விழுங்கி விடுபவன் போலப் பார்த்தான்.

வித்யா கிராமத்தில் என்வீட்டில்தான் பத்தாவது வரை தங்கி இருந்து படித்தாள் அவள் அப்பா-என் மாமாவிற்கு அப்போது ராணுவத்தில் வடக்கே உத்தியோகம் ,அவள் அண்ணன்கள் இருவரையும் ஹாஸ்டலில் போட்டுவிட்டு இவளை மட்டும் எங்கள் வீட்டில் படிக்க அனுப்பி இருந்தார். அப்பாவை சின்ன வயசுலேயே இழந்து ஒரே மகனா அம்மாகூட கிராமத்துல தனியா இருந்த எனக்கு வித்யாவின் வருகை ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. அவளைவிட நான்கு வயது பெரியவனான என்னிடம் வித்யா மனம்விட்டு பழகுவாள். என்னுடன் மட்டுமே தான் விளையாடுவாள். நான் எவ்வளவோ தடுத்தும் என்னைவிட நீ நாலுவயது பெரியவன் அதனால அத்தான்னுதான் கூப்பிடுவேன்’ னு சொல்லியே என்மனசை பொத்தலாக்கிபோட்டாள். அடிக்கடி ‘அத்தான் என் அத்தான்’ அப்டீன்னு பாடிட்டே சிரிப்பா.. நானும் அவகிட்ட அந்த இளம் வயசுலயே என் மனசை பறி கொடுதேன் .. என் விழில காதலை காமிச்சேன் அவ கண்டுக்கல..

காலேஜ் படிக்க சென்னைக்குப் போனாலும் அடிக்கடி ஊருக்கு திருவிழான்னா ஓடி வந்துடுவா. என்கிட்ட காலேஜ் படிப்புபத்தில்லாம் பேசுவா.. வித்யா ரெண்டாம் வருஷம் டிகிரில இருக்கறப்போ எங்கம்மாவும் இதய நோய்ல இறந்துபோக எனக்கு வேலை பெங்களூர்ல கிடைக்கவும் நான் பெங்களூர் பிடிஎம் லேஅவுட்டுல வீடுபாத்து நாலு பசங்களோட தங்கி வேலைக்குபோக ஆரம்பிச்சேன். அவளும் பட்ட படிப்பை முடிச்சா. காலம் நேரம்வரும் மாமாகிட்டயே சொல்லிடலாம்னு பார்த்தா கடசில ஏதோ வரன் பார்த்து முடிச்சி எனக்குப் பத்திரிகை அனுப்பிட்டாரு மாமா. பெண்களெல்லாம் ஏன் இப்படி எங்களோட குறும்பா சிரிச்சிபேசி அவஸ்தை செஞ்சி காதல் நெருப்பை பத்தவச்சிட்டு அப்புறமா ஓடிப்போறிங்க? முறைப்பையன் நான் இருக்க என்னை ஒரு வார்த்தை கேக்க தோணலையா மாமனுக்கு? இந்த மகேஷை மாங்கா மடையன்னு நினைச்சிட்டாங்க இல்ல, இவங்களுக்குநான் யாருன்னு காட்டப் போறேன்.. வித்யா! நீ கல்யாணம்
செஞ்சிக்கபோறியா கல்யாணம் ? கனவுலகூட உனக்கு இனி அந்த பாக்கியமில்ல அதான் விடியறதுக்கு முன்னாடியே உன் உயிர் போயிடப்போகுதே?’

மகேஷ் உள்ளுக்குள் பொறுமுவது அறியாமல் வித்யா அவனிடம்,

“கைகால் கழுவிட்டு சாப்பிட வாங்க அத்தான் நல்லவேளையா கடைசிபந்தில சாப்பாடு இருக்குது” என்றாள்

“இல்ல வித்யா..பெங்களூர்ல பொறப்படறப்போ பரோட்டா வாங்கி ஹோட்டல்ல தின்னது அப்படியே வயித்துல இருக்குது..நாலுமணிநேரப்பயணத்துல சேலம் வந்ததும் பசி டுக்கலயே?அதனால ஒண்ணும் வேணாம்..”

மகேஷ் ஷர்ட்பைக்குள் அதை மறுபடி தொட்டுப்பார்த்துக் கொண்டான். சின்னகாகிதப் பொட்டலம்தான் அதற்குள் இருப்பது வெளிர்நீலநிற மாத்திரை .அதைப் பாலில் அல்லது நீரில் கலந்து
கொடுத்தால்போதும் எந்தவித உபாதையும் இல்லாமல் உயிர் பறந்துவிடும். நண்பனும் இளம் விஞ்ஞானியுமான சதீஷ் சொன்ன தகவல் இது. அவன் சமீபத்தில் ஜப்பான் போய் வந்ததும் அங்கே சில விஞ்ஞானிகளுடன் சேர்ந்து ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தவரிடமிருந்து வாங்கிகொண்டு வந்ததாகவும் சொல்லி இருந்தான்.

மனிதனுக்கு தொல்லைதரும் விஷபூச்சிகளை ஒழிக்க இது உதவும் என்றும் இன்னும் அதற்கு உரிமைவாங்கி மார்க்கெட்டிற்குக் கொண்டு வரவில்லையென்றும் தெரிவித்திருந்தான் சாம்பிளுக்கு ஒன்றேஒன்று ஜப்பானிலிருந்து எடுத்துவந்ததாகக் காண்பித்த போதே மகேஷ¤க்கு ஒரு திட்டம் தோன்றி விட்டது. உயிரைபறிக்கும் மாத்திரையாமே?

சதீஷ் அயர்ந்த நேரம் அதனை தள்ளிக் கொண்டு வந்துவிட்டான்

ஏலக்காய் பச்சையில் மெரூன்பார்டர்போட்ட பட்டுச்சேலையிலும் தலையில் சூடிய ஜாதிமல்லிகை சரத்தின் அழகிலும் வித்யா தேவதையாய் தெரிய மகேஷ் பல்லைக்கடித்தான்.” ஆ.. நான்
அனுபவிக்க வேண்டிய பேரழகு …இது யாரோ ஒருவனுக்கு சொந்தமாவதா கூடாது, கூடவே கூடாது..”

மகேஷ் பெருமூச்சுவிட்டான்

‘அத்தான் வாங்க டய்ர்டா இருப்பீங்க தூங்குங்க நிம்மதியா தனி ரூம் பெட் எல்லாம் இருக்கு காமிக்கறேன் வாங்க..” வித்யாவின் குரலில் சுதாரித்தவன் அவளைத்தொடர்ந்து அறைக்குள் நுழைந்தான்.

“அத்தான்.. உங்களுக்குன்னே ஸ்பெஷலா தனிரூம் ஏற்பாடு பண்ணிட்டேன் பாருங்க.. என்ன இருந்தாலும் என் அத்தைமகன் இல்லயா நீங்க? அத்தை மகனே அத்தானே..உன் அழகைக்கண்டு நான் பித்தானேன்….” குறும்புச்சிரிப்புடன் பாடினாள்

பாவிபாவி இப்படிச் சிரித்துச் சிரித்துதானேடி என் நெஞ்சச்சிறைல வந்துவந்து விழுந்தே உன்னை கைதியா நான் வச்சிருந்தேன் தப்பிச்சி நீதான் ஓடிப்போயிட்டே..

மகேஷ் வலிய ஒரு புன்னகையை வரவழைத்தபடி அவளை அழைத்தான்.

“வித்யா?”

“என்ன அத்தான்?” என்றாள் அறையைகடக்க இருந்தவள் சட்டென தலையைமட்டும் திருப்பியவளாய்

“இ·ப் யு டோண்ட் மைண்ட் எனக்கு ஒரு க்ளாஸ் பால் கொண்டுவரமுடியுமா?”

“ஷ்யூர் அத்தான்”

போன சுவட்டில் பாலோடுவந்தாள்

“சூடா இருக்கு அத்தான் குடிங்க”

பால் கிளாசை வாங்கி கொண்டவன்,” வித்யா ரொம்ப சூடும்மா ஆத்திக்க இன்னொரு க்ளாஸ் வேணுமே கொண்டுவா ப்ளீஸ்?” என்றதும் வித்யா சிணுங்கினாள். “என்னப்பா என்னை இப்படி வேலை வாங்கறீங்க கல்யாணப்பொண்ணு நான் தெரியுமில்ல? நாலுநாள் முன்னாடிவந்து உதவணும்ணு தோணலயாம் வந்த இடத்துல முறைப்பொண்ணை வேலை வாங்கறாராம். எல்லாம் நேரம்ப்பா நேரம்”

“இன்னிக்கு வாங்கினாத்தான் உண்டு நாளைக்குதான் நீ இருக்கமாட்டியே?

“என்ன?’

“கல்யாணமாகி வேற வீடு போயிடுவே அங்கல்லாம் வந்து உரிமையா இப்படிக் கேக்கமுடியுமா ? அதான் வித்யா..”

“ஒகே ஒக்கே.. பிழைச்சிப் போங்க எடுத்துட்டு வரேன்”

சிரித்தபடி அவள் நகர்ந்ததும் மகேஷ் அவசரவசரமாய் தன் ஷர்ட் பையிலிருந்து அந்தமாத்திரை பொட்டலத்தை எடுத்தான், பிரித்தான், கவனமாய் பாலில் போட்டான். மாத்திரை பாலோடு கலந்து காணாமல்போனது: “இந்தாங்க சூடான பாலை ஆத்திக்கறதுக்கு காலிக்ளாஸ்”

வித்யா கையில் இன்னொரு க்ளாஸோடு வரவும் அவளிடம் மகேஷ்,” வித்யா! நானும் நீயும் சின்ன வயசுல எப்படில்லாம் பேசி விளையாடி இருக்கோம் எது சாப்பிட்டாலும் பங்கு போட்டுக்குவோம் இல்ல?…ஆளுக்கு பாதி பால் குடிக்கலாம் இப்பொ கடைசியா என்ன சொல்றே?’

சற்று யோசித்தவள், “சரி கொடுங்கத்தான் ” என்றாள்.

பாதி ஊற்றுவதுபோல க்ளாசில் பெரும்பகுதியை ஊற்றி அவளிடம் தந்தவன், “குடி..அதிகமானால் அதை நான் குடிச்சிக்கறேன்” என்று திட்டத்தின் முதல் கட்ட செயலில் இறங்கினான்

அதை வாங்கி வாயில் வைக்கப் போனவள், “ஹாய் விது! தூங்கலயா இன்னும்?” என்ற குரல்கேட்டு திரும்பினாள். அடுத்தகணம் பால் க்ளாசை டீப்பாய்மீது வைத்தாள்..குரலுக்குரிய நபரைப்பார்த்து

முகம் மலர்ந்தவளாய். “அட தூங்கலயா நீங்களும்? என்றவள் மகேஷிடம், “அத்தான்! நீங்க என் வருங்காலக் கணவரைப் பார்த்ததில்லையே, இவர்தான் அவர். என்கிட்ட மாட்டிக்கபோற மாப்பிளை!.” என்று சொல்லி அவனிடமும், ‘குமார்! இவர் என் அத்தைமகன், பேர் மகேஷ்.. இவங்க வீட்லதான் நான் சின்னவயசுல இருந்து படிச்சேன் பெங்களூர்ல வேலை பாக்கறார். என் அத்தான் என்பதைவிடவும் ஆத்மார்த்த சினேஹிதன்னே சொல்லலாம் அவ்ளோ க்ளோஸ்!” என அறிமுகப்படுத்திவைத்தாள்

குமார் நல்ல உயரமும் நிறமுமாய் அழகாய்த்தான் தெரிந்தான். அதனாலேயே மகேஷ¤க்கு எரிச்சலானது ‘நான் உயரம் அதிகமில்லை கொஞ்சம் கறுப்புதான் அதான் வித்யாக்கு என்னை புருஷனாக்கிக் கொள்ள தோணலியா?’

“நைஸ் மீட்டிங் யூ!” கை கொடுத்தான் குமார்.

மகேஷக்கு அப்படியே அந்தக் கையை பிடுங்கி வீசி எறியலாம் போல வெறிவந்தது. அடக்கிக் கொண்டு புன்னகையை உதிர்த்தான்

“விது.. தொண்டை என்னவோ செய்யுதுமா.. சூடா பால் குடிக்கலாம்னு மாடிலிருந்து கீழே வந்தேன் எல்லாரும் தூங்கி இருப்பாங்களோனு நினைச்சேன் நல்லவேளை நீயே முழிச்சிட்டு இருக்கே.. விது. .கான் ஐ ஹாவ் எ க்ளாஸ் ஆ·ப் மில்க் ப்ளீஸ்?”

“குமார்…உங்களுக்கில்லாத பாலா ?மாப்பிள்ளை ஆச்சே உங்கள ஒழுங்கா கவனிக்கலேன்னா நாளைக்கு பந்தல்ல சம்மந்தி சண்டை போடு வீங்க உங்கம்மா கிட்ட சொல்லி, அப்பால வம்பாகிவிடும் ஆகவே தப்பாமல் இப்போதே கொண்டுவரேன் பால்”

“திஸ் ஈஸ் டூ மச் விது!”

செல்லமாய் அவள் தோளில் குமார் தட்ட, அவள் அதை ரசிக்க… பற்றிக் கொண்டுவந்தது மகேஷ¤க்கு.

என்ன நடக்குது இங்க? ரண்டுபெரும் பிலிமா காட்றீங்க?

அப்போதுதான் மகேஷிற்கு வித்யாவிற்கு பதிலாய் இவன் உயிரைவாங்கினால் என்ன எனத்தோன்றவும் சட்டென டீபாய் மீதிருந்த பால் க்ளாசை குமாரிடம் நீட்டினான்

“இப்போதான் வித்யா கொண்டுவந்து கொடுத்தா நான் குடிக்கவே இல்ல. இதை நீங்ககுடிங்க” என்றான் அன்பான குரலில்

“உங்களுடையதை நான் எப்படி…?” தயங்கினான் குமார்.

எனக்காகவே பொறந்தவளையே நீ தட்டிகிட்டியாம் அப்றோம் கேவலம் இந்த பாலுக்கு என்னடா ?..என் மனச பறிச்சவளை பழிவாங்க நினச்சேன் அதைவிட அவ மனசை பறிச்ச உன்னை தீர்த்துக்கட்டிட சந்தர்ப்பம் தானா வந்திடிச்சி.. நாளைக்கு நீ காலி! கல்யாணம் நின்னு போகும் வித்யாக்கு புத்தி வரும் என்னைக் கட்டிக்குவா..

“பாலை அவர் கையில் கொடுத்திட்டீங்களா அத்தான்? ஐய்யோ என்னவோ குழப்பறீங்க ரண்டு பேரும் நான் போறேன்பா தூங்க” என்ற வித்யா மகேஷின் கையில் மறுபடி எடுத்துவந்த கிளாஸைக் கொடுத்து விட்டு தூக்கக் கலக்கத்தோடு நகர்ந்தாள்.

சற்று தயங்கிவிட்டு பிறகு குமார் பாலை அப்படியே வாயில் ஊற்றிகுடித்துமுடித்தான்.

“தாங்க்ஸ் குட்நைட் மகேஷ்” என்று சொல்லிவிட்டு மாடிக்குபோய்விட்டான்.அடுத்த அரைமணியில் சிகரெட் குடிக்க வெளியே வருவதுபோலமண்டபத்து வாசலுக்கு வந்த மகேஷ் அப்படியே நழுவினான்.

சாலையில் ஒரு லாரியைபிடித்து ஏறிக் கொண்டான் காலையில் பெங்களூருக்கு வந்தவன் தனது அறையில் மற்ற இரு நண்பர்களோடு சதீஷம் இருக்கவும் திடுக்கிட்டான்.

சதீஷ் இவனைக்கண்டதும்,”உன்னைப்பாக்க நேத்து வந்தேன் சேலத்துக்குக் கல்யாணத்துக்குப் போயிருக்கறதா உன் ரூம்மேட்ஸ் சொன்னாங்க..தங்கி பார்த்துட்டு போகலாம்னுதான் இருந்துட்டேன். அதுசரி கல்யாணம் ஆயிடிச்சா என்ன?’ என்று கேட்டான்

“இல்லடா எனக்கு உடம்பு சரீல்ல அதான் அங்க தங்க பிடிக்காம வந்துட்டேன்…”

“என்ன உடம்புடா ஏதும் மாத்திரை போட்டுக்கயேன்? அதுல பாரேன்…மகேஷ் மாத்திரைன்னதும் நினைவுக்கு வர்துடா…”

சதீஷ் இழுக்கவும் மகேஷிற்கு திக்கென்றது. அனாலும் மாத்திரை இப்போது தன் கைவசம் இல்லாததால் கவலைப்பட அவசியமில்லை என நினைத்தபடி,

“எந்த மாத்திரை எது என்ன?” என்றான் அப்பாவிபோல

“மகேஷ்! அன்னிக்கு நீ மல்லேஸ்வரத்துல என் ரூமுக்கு வந்தப்போ ஒரு மாத்திரைபத்தி சொன்னெனே சாப்பிட்ட நாலுமணி நேரத்துல மெல்ல மெல்ல உயிரை பறிச்சிடும்னு அந்த மாத்திரையைக் காணோம்”

“அப்படியா?”

“ஆமா. தேடித் தேடிப் பாத்து கடைசில அந்த ஜப்பான் சைண்டிஸ்டுகிட்ட இப்படி ஆயிடிச்சி தவறுதலா யாரும் அதை தலைவலி மாத்திரைன்னு சாப்பிட்டுட்டா என்ன செய்யறது பயமாருக்குனு போன் செய்து பேசினேன். அவர் சிரிச்சிட்டே ‘ஒண்ணும் அகாது சதீஷ் ஏன்னா அது நிஜமா உயிருக்கு உலை வைக்கிற மாதிரி மாத்திரை இல்லை தவறுதலா நீங்க கொண்டு போன மாத்திரை வயாகரா டைப் டேப்லெட்…. ..அதுலயே இது கொஞ்சம் வீரியம் அதிகமானது..சாப்பிட்ட 24 மணி நேரத்துல வேலையைக் காட்டும் நல்லாவே’ அப்டீனு சொல்லி நமுட்டு சிரிப்பு சிரிச்சாரு..”

சதீஷ் நிறுத்திவிட்டு தானே சிரிக்கத் தொடங்கினான்.

மகேஷின் முகம்போன போக்கை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்!

– ஜூன் 29, 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *