காதல் ஓய்வதில்லை

 

நாச்சியார் கோவில்.

பெயருக்கேற்ற அழகும், கும்பகோணத்துக் குசும்பும், நிறைந்த வடக்கு அக்ரஹாரம்.. தெரு ஆரம்பத்தில் ஒரு பெருமாள் கோவில், இரண்டு பக்கமும் நெருக்கமான ஓட்டு வீடுகள், ஓட்டினில் சொருகப்பட்ட காய்ந்துப் போன மாங்கொத்துகள், ஒவ்வொரு வீடும், நீளமும் அகலமும் கொண்ட செதுக்கி வைத்த வீடுகள், வீட்டுத் திண்ணகள், அதன் மடிப்புகள், அதில் ஏறி விளையாடும் குழந்தைகள், படுத்துக்கொண்டு கதை அளக்கும் தாத்தாக்கள்.. வாசலில் வில்லு வண்டி, மற்றும் மாடுகள்,
அழகான சானம் தெளித்து இட்டக் கோலங்கள்.

சிறிய பேரூந்து நிலையம், பித்தளைப் பொருட்களை அடிக்கும் னங் னங்… சப்தம்… அங்கே கூவும் காபிகுடி வெற்றிலை கவுளி காலனா! எனும் குரல் … இப்படி பல கற்பனையோடு வந்த ராம நாதனும் அவரது மகனும், நாச்சியார் கோவில் வந்து சேர்ந்துவிட்டது, என கார் டிரைவர் கூற …

அக்ரஹாரம் கேட்டுப் போங்க! என கூறிவிட்டு ..

அப்பா வீடு உனக்கு ஞாபகம் இருக்கா? என்றான்.

வீட்டை விட்டுப் போய் முப்பது வருஷமாச்சு! நடுவில் கிரயம் பண்ண நான் வந்த போது கூட வீட்டை பார்க்கலை! எனப் பேசிக்கொண்டே …
தெருக்குள் நுழைந்து இருந்தனர்.

நிறுத்துப்பா! பெருமாளை தரிசனம் பண்ணி விட்டு போகலாம்.என்றார்.

காரை நிறுத்தி உள்ளே சென்றனர்.

பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி படிக்கும் வயதில் ,தந்தையின் வேலை நிமித்தமாய் டில்லி சென்று தாயைப் பிரிந்து, படித்து முடித்து நல்ல வேளைப் பார்த்து , பொருள் ஈட்டி, திருமணம் செய்து பிள்ளைகளோடு மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்தான். கடந்த ஒரு மாதத்திற்கு முன், அந்த செய்தி கேள்விப்படும் வரை,

மகேஷ் ஒரே பையன், ராமநாதனுக்கு. அவனுக்கும் ஒரே மகன், ஹரீஷ் வயது 18 அமெரிக்காவில் படிக்கின்றான்.

அந்த விஷயத்தை கேள்விப் பட்டதிலிருந்து அவனுக்கு அமெரிக்காவில் இருப்புக் கொள்ளவில்லை, அப்பாவிடம் தயங்கித் தயங்கிச் விஷயம் சொன்னான், அப்பாவும் அதில் ஒன்றும் தப்பில்லை என முடிவு செய்து, அவரது 85 வயதிலும் அவரையும் கூட்டிக் கொண்டு இங்கு வந்து இருக்கிறான்.

அந்த வீட்டின் திண்ணையைப் பார்த்தான். நினைவுகள் அலை அலையாய்..

அழகான மாதம் மார்கழி! அக்ரஹாரம் இன்னும் சிறப்பு. காலை 4.30 மணிக்கே சங்கு ஊதப்படும்,அனைவரும் எழ, ஆண்டவனைத் தொழ,
பஜனை புறப்பாடு, கோவிலில் சுடச்சுட 5.30 மணிக்கெல்லாம் வெண் பொங்கல், அந்த நெய்யும் வறுத்த மிளகும், மீண்டும் மீண்டும் கோவிலுக்கு வரத் தோன்றும்.

இப்படி ஒரு மார்கழியில்தான், மகேஷ்க்கு 17வயது இருக்கும், அரையாண்டுத் தேர்வு, இரவு பனியில் தெரு விளக்கில் அமர்ந்து படித்துவிட்டு திண்ணையிலே உறங்கிவிட்டான். காலில் சில்லென்று ஏதோ உணர திடுக்கிட்டு எழுந்தான். எதுவுமில்லை! யாருமில்லை. எதிர் வீட்டு வாசலில் பெண்கள் கோலமிட்டுக் கொண்டிருந்தார்கள். பஜனை அவன் வீட்டைக் கடந்து போனது. பார்த்து விட்டு, படுத்துக்கொண்டான்.

மறுநாள் ,விடியல் காலை. அதே சில், இந்த முறை இரு கன்னத்தில் இரு உள்ளங்கையை யாரோ வைத்ததை உணர்ந்தான். முழித்துப் பார்க்க, அவன் வீட்டிலிருந்து பாவாடை தாவனியில் எதிர்வீட்டு காயத்ரி ஓட முயன்று தடுக்கி விழுந்து எழுந்து ஓட முயல , இவன் நடந்ததை சுதாரித்து புரிவதற்குள் அவள் சிட்டாய் கோவிலுக்குள் பறந்தாள். பஜனை இவன் வீட்டைக் கடந்து போய்க் கொண்டு இருந்தது.

இவன் நெஞ்சு குழிக்குள் தாளம்.கையில் ஓர் உதறல் என தனி பஜனை நடத்திக் கொண்டு இருந்தான்.

காயத்ரியும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி தான். எதிர் எதிர் வீடுதான் ஒன்றாக விளயாடியவர்கள்தான் ஆனால் அவளுடன் பேசியே நான்கு வருடத்திற்கு மேலானது. அவளோட அம்மா மட்டும்தான்.
அவ வயதுக்கு வந்ததும் வெளியே பழகுவதை தடை செய்தாள்.

இவனின் பள்ளிதான் ஆனால் வேறு செக்‌ஷன். பேசியது,

பழகியது, விளையாடியது எல்லாம் எட்டாம் வகுப்போட நின்று போனது. வீட்டிற்கு வருவாள் அம்மாகிட்டே பேசுவாள், போய்விடுவாள்.

இன்று என்ன அதிசயம் ! என்னிடம் விளையாடிது ஏன்?

இவன் தூக்கம் போனது. அன்று மட்டுமல்ல.

அன்று முதல்…

விடிந்து ,அவள் வழக்கம் போல் நீர் இறைக்கச் சொன்றாள்.

குனிந்த தலை நிமிரவில்லை.

இவனுக்கு மட்டும் இரவு முழுவதும் விடிந்தே இருந்தது .

இவனின் பார்வையோ அவளை விட்டு அகலவே இல்லை.

அவள் நீர் சுமந்து வீட்டிற்குச் சென்றாள். இவனின் கண்கள் அவளைச் சுமந்து வீடு வரைச் சென்றது. ஒரு வழியாக. அரையாண்டுத் தேர்வுகள் முடிந்தன.

போகிப் பண்டிகை அன்று, இருவரும் கோவிலில் சந்தித்தனர்.

பிரகாரம் வலம் வருகையில்,

ஏய் காயத்ரி !
என்ன? , உன் வேலைதானே,
ஏன் அப்படி பண்ணினே? என்றான்.

சிரித்தாள்.
கன்னத்தில் குழி விழ… விழியைப் பார்த்தான்,
கன்னக் குழியில் விழுந்தான்.

அவள், அவனுக்கு பாவாடை சட்டையில் வந்த கோவிலில் குடிக்கொண்ட இளம் வகுள நாச்சியார் போல தெரிந்தாள். இரட்டை ஜடையில், தலை நிறைய டிசம்பர் பூக்கள், ஒற்றை ரோஜா.

எனக்கு உன்னைப் பிடிச்சிருக்குனு அர்த்தம்! எனச் சொல்லி கொலுசு சத்தத்தை ஏற்படுத்தி. ஓடினாள். பிரகாரத்தில்.

காதல் என்ற பெயரில் உடலுக்காக, வெட்கமில்லாமல் உறவை ஒதுக்கி ஊரைவிட்டு ஓடுவதா அழகு |

காதல் ஊடலில் வெட்கப்பட்டு ஓடி ஒளிவது தான் எத்துனை அழகு!

இந்த இளம் காதல் முளைத்து , துளிர் விட்டதுமே நின்றுபோனது.

வீடு நல்ல பராமரிப்புடன் இருந்தது. வாங்கியவரும் அவர்களை உபசரித்து அவர்களுக்கு வேண்டியதை கவனித்து செய்து கொடுத்தார். மகேஷ் வீட்டை சுற்றி வந்தான் ,பழைய ஞாபகங்கள் அவன் முன் வந்து போயின.

ஏன் நீங்க வீட்டை வாங்கின பின்ன இடித்து கட்டலையா?

இல்லைங்க! கட்டலாம்னு நினைத்து தான் வாங்கினேன். ஆனா நான் இதை கட்டிடமா பார்கல! இங்க வந்தப்புறம் உங்க வாழ்க்கை முறையும், வீட்டினை வைத்து இருந்த முறையும் பிடித்துப் போக இதனை இடிக்கும் எண்ணமே எனக்கு இல்லாம போச்சு! என சிலாகித்தார்.

பழைய ஆட்கள் யாராவது இருக்காங்களா? என வினவினர்.

ஒரே ஒரு வீடுதான் அப்படியே இருக்கு! பாக்கி எல்லாம் இடித்துக் கட்டி கைமாறி விட்டது. எதிர் வீட்டு காமாட்சியம்மா வீடு தான் பாக்கி இருக்கு, அதுவும் அவங்க பொன்னுதான் தனியா இருக்காங்கா! மகேஷ் வீட்டைப் பார்த்துக் கொண்டு இருந்தவன் அப்பா பக்கம் திரும்பி நின்றான் ஆச்சரியமாக!

அவங்க பெயர் என்ன?

காயத்ரி! என்றார்.

அவங்க அம்மாவுக்கு என்னாச்சு?

நான் வந்ததிலிருந்து, அந்தப் புள்ள தனியாத்தான் இருக்கு, அவங்க அம்மா இறந்து முப்பது வருடமாச்சு, என்று சொன்னாள்.

இவள் படிக்கும் போதே இறந்துவிட்டாள், தனியே கஷ்டப் பட்டு படித்து பக்கத்துல உள்ள பள்ளியிலே சத்துணவு செய்கிற ஆயாவா வேலை செய்யுது, ஏதோ பெரிய வியாதினு கூட சொல்றாங்க! அதனாலேதான் கல்யாணம் கூட கட்டலையாம். என்று தெரிந்த, தெரியாத அனைத்து விஷயங்களையும் கொட்டினார். இவர்களுக்கு அவளைப்பற்றி அத்துனை விஷயமும் தெரிந்ததுதான். குறிப்பா அவளுக்காகவே இவர்கள் இந்தியா வந்துள்ளனர்.

சாயங்காலம் கல் கருடனை தரிசனம் பண்ணிட்டு அவாளை எனக்குப் பார்க்கனும். என்றார்.ராமநாதன்.

அதெற்கென்ன பார்க்கலாம்! ஐயா!

காயத்ரி தன் காதல் சொன்னவுடன் , மகேஷ்க்கு எல்லாம் புதிதாக தோன்றியது. அவள் ஓடிய பிராகாரம் சுற்றி வர கால்கள் பின்னியது, இதயம் பிசைவதைப் போல், தரையிலே மிதப்பது போல உணர்ந்தான்.

ஒற்றை வார்த்தைக்குத்தான் எத்தனை சக்தி!

தம்மை ஒருவருக்கு பிடித்து இருக்கு என்று ஒருவர் சொல்லி கேட்பதில்தான் எவ்வளவு ரசாயன மாற்றங்கள்!

மறு நாள் பொங்கல் விடுமுறையினால் மூன்று நாட்கள் , இவர்களும் வெளியே சென்று திரும்பியவுடன் மகேஷின் அப்பாவிற்கு டில்லிப் பக்கம் மாற்றலாக இவர்களது வாழ்க்கையும் மாறிப்போனது.

அவளிடம் சொல்லிக் கொண்டு போகலாம் என்று நினைத்து இருந்த வேளையில் அவளின் அம்மா உடல் நிலை மோசமாகி ருத்துவமனையி்ல் சேர்த்து இருந்தார்கள். இருவர் வாழ்க்கையையும் திசை மாற்றி விட்டது அந்த தை மாதம்.

வகுள நாச்சியார், சீனுவாசப் பெருமாள் ,கல் கருட தரிசனம் முடித்து திரும்பி வந்த இவர்கள் மூவரும் காயத்ரி யை சந்திக்க அவள் வீட்டிற்கு சென்றனர்.

காயத்ரி! காயத்ரிஅம்மா! கதவை தட்டினார்.எதிர் வீட்டுக் காரர்.

இவனின் படப்படப்பு எகிறியது. கை வேர்த்து விரல்களை நினைத்தது.

கதவை திறந்தாள். காயத்ரி.

முகம் மட்டுமே அப்படியே இருக்க, கருத்துப்போய், மெலிந்த உடலுடன், அவளின் அம்மா காமாட்சியை நினைவு கூர்ந்தார் ராமநாதன்.

இவனுக்கோ தனது சக மாணவி, முன்னாள் காதலி, பருத்தி புடவை கட்டிய மகா லட்சுமியாய் தெரிந்தாள்.

வங்கோ!

நான் ராமநாதன்! தெரியரதா?

இவன் மகேஷ், என் பையன்.

எதிர் வீட்டில் முப்பது வருடத்திற்கு முன் இருந்தோம்! என ஆரம்பித்து,

நீயும் இவன் நினைப்பினாலே இன்னும் கல்யாணம் கூட செய்யலைனு இவன் நண்பன் மூலமாக தெரிஞ்சுன்டு உன்னைப் பார்க்கனும்னு தான் கருடன் மீதேறி நாச்சியார் கோவில் வந்த சீனிவாச பொருமாள் மாதிரி விமானம் ஏறி புறப்பட்டு இங்க வந்தோம். என நடந்த அத்தனை விஷயங்களையும் செல்லி முடித்தார்.

இதெல்லாம் அவள் காதில் விழவே இல்லை.

முன்னாள் நண்பனோ, காதலனோ , வறுமையில் இருக்கும் போதும், நோய்வாய்ப்பட்டு இருக்கும் போதும், பார்ப்பது எவ்வளவு சங்கடங்களை ஏற்படுத்தும் மனதுக்கு, அன்று இருவரும் உணர்ந்தார்கள்.

அப்பாவே பேசினார், நீ ஏம்மா தனியா இங்க கஷ்டப் படறே! எங்கக் கூட வந்துடும்மா! நாங்க இருக்கோம்..உனக்கு.

இவ்வளவு வருஷமா நான் தனியாத்தானே இருந்தேன்,

அதனால் என்ன ஆச்சு! மாமா!

தனியாத்தான் இருந்தே! சந்தோஷமா இருந்தியா? என்று கேட்டார்.

காதலித்து, அவர் கூட சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் தான் சந்தோஷமான வாழ்க்கையா? மாமா,

ஆண்களின் காதல் என்பது உணர்ச்சியால் எழுவது. பெண்களின் காதல் உணர்வால் எழுவது. பிடித்தவனை மனதில் வைத்து வாழ்வதும் வாழ்க்கை தான், இந்த வாழ்க்கையே எனக்குப் பிடித்துப் போயிடுச்சு மாமா,

என்றைக்கும் அவர் வாழ்க்கையில் வந்து புது குழப்பங்களை ஏற்படுத்த விரும்ப வில்லை என்றாள்!

நான் இங்கேயே இருக்கேன்,அப்பா! என்றால் தீர்க்கமாக.

நான் உங்களை அப்பான்னு கூப்பிடலாம் இல்லையா? என்றாள்.

தாராளமாக! கூப்பிடலாம். நல்லாயிரும்மா! எந்த உதவின்னாலும் தயங்காம கேளும்மா! நாங்க உனக்கு கடமைப் பட்டு இருக்கோம்,. எனக்கூறி , மகேஷ் நீ பேசிட்டு வா, நான் ஆத்துக்கு போறேன். என்று கிளம்பினார்.

சரிப்பா, போங்க நான் வர்றேன்.

ஐயா! நீங்க பழைய வீட்டைத்தான் விற்று விட்டு போனிங்கன்னு நினைச்சேன். தம்பி பழைய காதலையே விட்டுட்டு போயிருக்குன்னு இப்பத்தான் தெரியது. என்றார் எதிர் வீட்டுக்காரர்.

என்னை மன்னிச்சுடு,காயத்ரி! என மனதால் உடைந்தான், என்னால்தான் உன் வாழ்க்கை இப்படி ஆயிட்டுது, நான்தான் முயற்சி செஞ்சு உன்னைத் தேடி வந்து பார்த்து இருக்கனும், விடலைப் பருவக் காதல் தானேனு நினைச்சு படிப்பிலே கவனம் திரும்பி உன்னையை புறக்கனித்ததை பெரிய குற்றமா நினைக்கிறேன். என்னை மன்னிப்பாயா?

ஏன் மன்னிக்கனும்? நான் தான் உன்னிடம் காதல் சொன்னேன், நீ அதை கூட சொல்லலை!

அம்மாவும் தவறிட்டதாலே, எனக்கு என் காதலைச் சொல்லக் கூட உறவிலும் யாருமில்லை. உன் நினைவோடுதான் வாழ்ந்துக் கொண்டு இருக்கேன். என்ன, உன் கூட வாழலை அவ்வளவுதானே!

ஐ லவ் யூ காயத்ரி என்றான்.

ரொம்ப சீக்கிரம் சொல்லிட்டே! அசடு |

உன் மனைவி, பையன் எப்படி இருக்காங்க? விசாரித்ததாய்ச் சொல் எனப் பேச்சை மடைத் திருப்பினாள்.

சரிம்மா! நாங்க கிளம்பறோம்! என கண்ணீருடன் விடைப்பெற்றான்.

அவன் பையன் ஹரிஷ் அலைபேசியில் அழைத்தான்.

டாடீ, ஹவ் யூ?ஐ திங்க் ஐ ம் இன் லவ்! டாட் என்றான்.

வெரி குட், ஐ ஆம் ஹாப்பி டூ ஹியர்டா | என்றார். மகேஷ். 

தொடர்புடைய சிறுகதைகள்
மணி ஓடு, முதலாளி வண்டி மாதிரி இருக்கு,போய் கேட்டைத் திற, ஓடுடா என சத்தம் போட்டுக்கொண்டு இருந்தார் வீனஸ் திரையரங்க மேலாளர் காவலாளி மணியிடம், ஓடிப்போய் திறந்தான் மணி முதலாளிதான் வந்து இருந்தார், தனது திரையரங்கத்திற்கு மாதம் இருமுறை வந்து பார்வையிடுவது அவரது ...
மேலும் கதையை படிக்க...
தாசில்தார் அலுவலகம். காலை, ஐயா,என் பெயர் நாகம்மாள், நான் ஆதரவற்றவங்க,எனக்கு உதவித்தொகை கிடைக்கும்னு எங்க டாக்டர் ஐயா சொன்னாருங்க! ஐயாதான் பார்த்து உதவி செஞ்சு எனக்குப் பணம் கிடைக்க வழி செய்யனும், எடுத்து வந்த ஆவணங்களை அவரிடம் அளித்தார். நாகம்மாள், துணைக்கு யாரும் இல்லாத, வருமானத்திற்குச் சிலர் ...
மேலும் கதையை படிக்க...
யோவ்..இங்க வாய்யா! இதை போட்டுக்க, 202 எண் கொண்ட கைதி உடையை கொடுத்தனர். ஒழுங்கு மரியாதையா நடந்துக்கனும், இருக்கிற இடம் தெரியாம இருந்துக்கனும், அங்கே போ! உடல் பரிசோதனைக்கு டாக்டர் வருவார்! என்று விரட்டினர். மருத்துவர் வந்த பின் அவரது உடல் முழு பரிசோதனை ...
மேலும் கதையை படிக்க...
திருவாரூர் மாவட்டம், வேதபுரி கிராமம்..... மொத்த மாவட்ட காவல் துறையும் அமைச்சர் பாண்டியன் வீட்டில்.... அமைச்சர் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கிடக்க, மோப்ப நாய் சகிதம் காவலர்கள், கட்சித் தொண்டர்கள் ,பொது மக்கள் சைரன் ஒலிக்க வாகனங்கள் என ஏகக் கூட்டம். காவல்துறை மேலதிகாரி ...
மேலும் கதையை படிக்க...
என்னங்க! ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க? முதல் முதலா நேர்முக தேர்விற்குப் போவது போல, சும்மா தைரியமா போங்க, ஐந்து வருடம் குழந்தைங்களை வைது ஆட்டோ ஓட்டியஅனுபவம், இருபது வருடம் இந்த மாநகரப் பேரூந்தில் ஓட்டிய நீங்கள், ஓய்வு பெற்ற பிறகும் ...
மேலும் கதையை படிக்க...
படமா?பாடமா?
ஊழல் ஒழிப்பு
கைதி எண் 202
அச்சம் தவிர்
இடங்கடத்தி

காதல் ஓய்வதில்லை மீது ஒரு கருத்து

  1. Janakiraman says:

    Mr.Ayyasamy,superb. heart rending. good one.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)