Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காதலெனப்படுவது யாதெனின்…

 

ஜானகியைப் பார்ப்பேனென்று நான் நினைக்கவேயில்லை.

அலங்கரிக்கப்பட்ட யானை,கோவில் மரத்திலிருந்து பிடுங்கிய தென்னை மட்டையின் கீற்றுக்களை துதிக்கையால் வளைத்து இழுத்து உடைத்து உண்பதை அவள் காலருகில் இருந்த குழந்தை மிரட்சியுடனும் ஆர்வத்துடனும் கவனித்துக் கொண்டிருந்தது. மாப்பிள்ளை அழைப்புக்கான கார்,ஜெனரேட்டர் பொருத்தப்பட காத்திருந்தது.பட்டுப் புடவைகளில்,மின்னும் நகைகளில், தூக்கலான மேக் அப்களில் நிறைய பெண்கள். அரட்டையடித்தபடி,சிகரெட் பிடித்தபடி ஆண்கள்,வழி கேட்கிற வண்டிகளின் ஹார்ன் சப்தங்கள், அத்தனை பரபரபப்பில்,ஜானகி,ஜானகி ராகவன், நான் பார்ப்பதை அறியாமல்,அருகிலிருந்த பெண்ணிடம் ஏதோ சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.கொண்டிருந்தாள் என்று சொல்லலாமா நண்பனின் முன்னாள் காதலியை?

சந்துருவுக்கும் ஜானகிக்கும் இடையே இருந்த உன்னதமான நேசம்,அண்ணா அண்ணா என்று என் மேல் பொழிந்த நேசம் எல்லாம் சற்றும் எதிர்பாராவிதமாக வற்றிப் போன சோகம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகளாகி விட்டன.

அடர்பனி போல பழைய நினைவுகள் என் மீது படர்ந்தன.

என்னடா ஆச்சு?

ம்..அவங்கப்பாவ கன்வின்ஸ் பண்ண முடியலயாம்.அவங்கம்மா தற்கொலை பண்ணிக்குவேன்னு மிரட்டறாங்களாம்.என்னை மறந்துருங்க.நான் வீட்டுல பாக்கற மாப்பிள்ளையவே கல்யாணம் பண்ணிக்கறேன்னா.சரின்னுட்டேன்.

என்னடா இவ்வளவு சாதாரணமா சொல்ற? அப்ப இவ்வளவு நாள் பழகினதெல்லாம்?

அதையெல்லாம் சொல்லி ப்ளாக் மெயில் பண்ணச் சொல்றயா?

நீ உண்மையிலேயே அவளைக் காதலிக்கலயா?

காதல்ங்கறது அன்பை ஒருத்தர் மேல திணிக்கறது இல்ல.அது வயலன்ஸ்.நான் அவ மேல பிரியமா இருக்கேன்.அவ சந்தோஷமா இருக்கணும்னு ஆசைப்படறேன்.அதனாலதான் சரின்னு சொல்லிட்டேன்.ஏன்னா, நான் அவளை உண்மையிலேயே நேசிக்கிறேன்.

என்னால உன்னை புரிஞ்சுக்க முடியலடா தான் காதலிக்கிற பெண்ணை அடையறதுக்காக உடம்பெல்லாம் கத்தியால கிழிச்சுக்கற சினிமா ஹீரோவப் பாத்து பரவசப்படறவன் நீ.உனக்குப் புரியாதுடா

ஜானகி தன் திருமணப் பத்திரிக்கையைத் தந்து விட்டு தான் எழுதிய கடிதங்களைக் கேட்ட போது தாள முடியாத வேதனையில் அவனது முகம் சுருங்கியது.

கடிதங்கள்,அவளது புகைப்படங்கள்,சின்னச்சின்ன பரிசுப் பொருள்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு விழிகளில் துளிர்த்த நீருடன்,சந்துரு உங்களை நோகடிச்சிருந்தா என்னை மன்னிச்சிருங்க என்ற போது அவன் பதிலேதும் சொல்லவில்லை. அவர்களுடைய நிகழ்ந்த எத்தனையோ அற்புதமான சம்பவங்களுக்கு சாட்சியாய் இருந்ததைப் போலவே அந்தக் கொடுமையான மாலைக்கும் சாட்சியாக இருந்தேன்.

கழுத்து நிறைய மாலையும்,முகம் நிறைய மலர்ச்சியுமாய் இருந்த ஜானகிக்கும் ராகவனுக்கும் வாழ்த்துச் சொல்லி பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டு கீழே அமர்கையில் சொன்னான்

என்னை விட பெட்டர் சாய்ஸ்தான் இல்லையா

வெளியே வந்ததும் கேட்டேன்

உயிருக்குயிரா காதலிச்சவ இப்ப இன்னொருத்தனுக்கு மனைவியா இருக்கறதப் பார்த்தா உனக்கு வருத்தமா இல்லையா?

ஆனால் நாஸ்தென்கா தூய்மையான ஆனந்தமான உன்னுடைய இன்பத்தை நான் துயரத்தின் மேகத்தைக் கொண்டு களங்கப்படத்த மாட்டேன்.மனங்கசிந்து குறை கூறி உன் இதயத்தை துன்புறச் செய்ய மாட்டேன்.அவனுடன் சேர்ந்து நீ மணமேடைக்குச் செல்கையில் உனது கருங்கூந்தலில் நீ சூடியயிருக்கம் அந்த இன்னரும் மலர்களில் ஒன்றையேனும் கசக்கி விழச் செய்ய மாட்டேன்

என்ன இது?

தாஸ்தவேஸ்கி,வெண்ணிற இரவுகளில் நான் பேச வேண்டிய எழுதி வச்சிட்டுப் போயிருக்கான்

ஸோ,நீ ஜானகிய மறந்துட்ட இல்லையா

எதுக்கு மறக்கணும்

இது அசிங்ம் இல்லையா?

எது?

காதலிச்சவள கையாலாகாத்தனமா இழந்துட்டு அவ இன்னொருத்தனுக்கு மனைவியானப்பறம் அவள லவ் பண்றதா சொல்றது?

இடியட் நான் லவ் பண்றது அவ உடம்ப இல்ல.

இவ்வளவு நாள் பழகிட்டு இப்படி பண்ணிட்டாளேன்னு உனக்கு ஜானகி மேல கோபமில்லையா?

கோபமில்ல.ஆனா லெட்டர்ஸ் எல்லாம் திருப்பிக் கேட்டப்ப வேதனையா இருந்து.அவ என்னைப் புரிஞ்சுக்கலையேன்னு

சந்துரு உன்னை மாதிரி எனக்கு தாஸ்தவேஸ்கி எல்லாம் கோட் பணி பேசத் தெரியாது. ஆனா ஒண்ணு மட்டும் தெரியும்.நீ ஒரு இன்டலக்சுவல் இடியட்.

சந்துரு ரொம்ப நேரம் அனுபவித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.

சந்துருவை தேடிப் பிடித்து விஷயத்தைச் சொல்லி கருப்புச்சாமி அண்ணன் கடைக்கு வந்த போது மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கி விட்டிருந்தது.

கீழே கிடந்த எதையோ எடுக்க கையை நீட்டி பாகனின் அதட்டலில் துதிக்கையைப் பின்னிழுத்து, பெரிய காதுகளை அசைத்தபடி முன்னால் வந்து கொண்டிருந்த யானை, சமீபத்திய ஹிட் பாடலை இசைத்தபடி பேண்ட் வாத்தியம்,அந்த இரைச்சலில் முழ்கி விட்ட நாதஸ்வரம்,கியாஸ் லைட்டுகள்,ஏராளமான தட்டுக்களைச் சுமந்த பெண்களுக்குப் பின்னால் ஆண்கள்,குழந்தைகள்,உயரமான இடத்திலெல்லாம் ஏறி படமெடுக்கும் போட்டோகிராபர்,வீடியோ கவரேஜ்,அலங்கரிக்கப்பட்ட வண்டியில் விளக்கு வெளிச்சத்தில் அவஸ்தையயாயய் மாப்பிள்ளை,இவற்றுக்கிடையில் கையில் குழந்தையுடன் ஜானகி.

நாங்கள் நின்று பார்த்துக் கொண்டிருக்க நடந்து அருகில் வந்து என்னையும் சந்துருவையும் பார்த்து எந்தச் சலனமுமில்லாமல் கடந்து போனாள்.அருகிலிருந்த பெண்ணின் பேச்சக்கு சிரித்தவளைப் பார்க்கையில் இரத்தம் சூடாகி உடல் லேசாக அதிர்ந்தது. ஜானகியா இது? ஏன் இப்படி செய்தாள்? அட நின்று பேச வேண்டாம்,ஒரு புன்னகை கூடவா செய்யக் கூடாது.ஏதோ அறிமுகமற்ற ஜந்துக்களைப் பார்ப்பது போல் என்ன பெண் இவள்?

ஜெனரேட்டர் சத்தம் காதுகளை நிறைத்தது.

இப்படிப் பண்ணுவான்னு நினைக்கவே இல்லடா

வேற என்ன பண்ணுவான்னு நினைச்ச? இத்தனை பேருக்கு நடுவிலே கல்யாணமான பொண்ணு ரெண்டு பசங்களோட ரோட்டில நின்னு பேசுவாளா

ஸ்மைல் கூட பண்ணக் கூடாதா?’

சரி விடு நம்ம சுந்தர் கதை மாதிரி ஆகலையேன்னு சந்தோஷப்படு

நான் என்னவென்று கேட்கவில்லை.

நம்ம சுந்தரோட ஆளு.அதுதான் நார்த்ல எங்கயோ மேரேஜ் ஆகிப் போச்சில்ல.அம்மா வீட்டுக்கு வந்துருக்கு.ரோட்ல பாத்து வீட்டுக்கு கூப்பிட்டிருக்கு.நம்மாளு போயிருக்கான்.குழந்தையை கையில வெச்சிக்கிட்டு மாமா உனக்கு மோதிரம் போடுவாரு.மாமா உனக்கு வளையல் போடுவாருன்னு சொல்ல பையன் நொந்து நூலாயிட்டான்.என்னை அண்ணனாக்கிட்டாளேன்னு ஒரே அழுகை.

நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.எத்தனை வார்த்தைகள் எத்தனை கனவுகள்,எல்லவற்றையும் மிதித்து நசுக்கி விட்டு அவள் போகும் போது உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது

ஏன்டா உங்கள எங்கெல்லாம் தேடுறது

திரும்பினோம்.

வா தியாகு,என்ன ரமேஷ் எப்ப திருச்சியிலேர்ந்து வந்த?

காலைலதான்

அப்புறம் என்ன விசேஷம்?

தலைவருக்கு கவர்ன்மென்ட் வேல கெடச்சிருக்கு.கொண்டாட வேணாமா

எங்க?

வீட்ல ஊருக்க போயிருக்கா வர ஒரு வாரமாகும்.

பேண்டு வாத்திய சத்தம் சுத்தமாகத் தேய்ந்துகொண்டிருந்தது.ஏதேதோ பேசியபடி ரமேஷின வீட்டை அடைந்த போது சந்துரு இயல்பாகத்தான் இருந்தான்.என் மனதுதான் ஆறவில்லை. இன்று ஜானகியைப் பார்க்காமல் இருந்திருக்கக் கூடாதா

அர்த்தமற்ற பேச்சுக்களும் வெடிச் சிரிப்புகளுமாய் போய்க் கொண்டிருந்தது பொழுது. பொன்னிற மதுவின் நெடி சூழ்ந்திருந்த அறையெங்கும் கேட்பாரற்று வழிந்து கொண்டிருந்தது ஜேசுதாஸின் குரல்.

பெப்ஸி தீர்ந்துடுச்சு

உள்ளே ப்ரிட்ஜில இருக்கு எடுத்துட்டு வாயேன்.

நான் உள்ளே சென்ற போது என்னடா கீ செயின் புதுசா இருக்கு என்ற சந்துருவின் குரல் கேட்டது.

எடுத்துக் கொண்டு வரும் போது டேய் டேய் சந்துரு என்று அவனை உலுக்கிக் கொண்டிருந்தார்கள்.அவன் குலுங்கிக் குலுங்கி அழுழ கொண்டிருந்தான்.நான் பதறிப் போய் என்னடா ஆச்சு என்றபடி சந்துருவை நிமிர்த்தினேன்.

அவனது இறுகிய கரங்களுக்குள் சாவிக் கொத்து.விரல்களைப் பிரித்து எடுத்தேன்.சாவி வளையத்துடன் இணைக்கப்பட்டிருந்த உலோகத் தகட்டில் ஜானகி என்டர்பிரைசஸ் என்றிருந்தது. 

தொடர்புடைய சிறுகதைகள்
மூடியிருந்த பிரஸ் வாசலில் ராஜா சித்தப்பா உட்கார்ந்திருந்ததை வண்டிக்கு ஸ்டாண்ட் போடும்போது தான் கவனித்தேன். நரைத்த ரோமம் மண்டியிருந்த ஒட்டிப்போன கன்னங்களுக்கு மேலே சாராயம் வழிந்து கொண்டிருந்த பிதுங்கின பெரிய விழிகள் என்னைப் பார்த்ததும் நொடி நேரத்தில் தாழ்ந்து பதுங்கின. ஆர் ஏ ஜே ...
மேலும் கதையை படிக்க...
எல்லோருடைய கண்களும் குழைவாக வடிக்கப்பட்ட சாதம்,காய்கறிகள்,அப்பளம்,இனிப்புகள் இவற்றோடு பாலாடை மிதக்கும் காபி எல்லாம் சேர்த்து கலவையாக படைக்கப்பட்டிருந்த இலையிலும் எதிரே இருந்த வேப்பமரத்திலும் மாறி மாறி பதிந்து மீண்டன. மரணத்தின் காட்டமான நெடி சுவாசங்களில் நிறைந்திருக்க எல்லோருடைய முகங்களிலும் வியர்வை வழிந்து கொண்டிருந்தது. ...
மேலும் கதையை படிக்க...
ஹலோ என்றதும் மறுமுனையில் உற்சாகமாய் வழிந்தது அம்மாவின் குரல். பேத்தி பொறந்திருக்காடா அப்படியே உன்னை உரிச்சு வச்சிருக்கு. சுகப்ரசவம். ஜானகி நல்லாருக்கா நீ உடனே புறப்பட்டு வந்துரு. அப்பாவாகி விட்டேன். கடவுளே நன்றி. பத்து மாத புதிர் அவிழ்ந்து கிடைத்த விடை. ஒரு புதிய ...
மேலும் கதையை படிக்க...
எனக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. இந்த நேரம் ஜனனியும் பாப்பாவும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஜனனி டிவியில் பாடல்கள் கேட்டபடி வேலை செய்து கொண்டிருக்கலாம். பாப்பா ஸ்கூலில் இருப்பாள். பேங்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? சரியாகத் தெரியவில்லை.சுமாராக ஒரு ஐம்பதாயிரம் இருக்கும். ஜனனிக்கு ...
மேலும் கதையை படிக்க...
அவன் ஓடிக்கொண்டிருக்கிறான் காட்டுக் கொடிகளும் செடிகளும் கிழித்து உடலெங்கும் ரத்தமும், வியர்வை வழிய வழிய நா வறண்டு அசுரத்தனமாக ஓடியவன் மர வேரோ எதுவோ தடுக்கி தடுமாறி விழுகிறான்.அய்யோஓஓஓஓஓ…. வனத்தின் அமைதியில் அவனது குரல் எதிரொலிக்கிறது அருகில் இருளை வார்த்தது போல் ...
மேலும் கதையை படிக்க...
ஆர்ஏஜேஏ ராஜா
அம்மா என்றால்…
மகாலட்சுமி
தாகம்
மாயா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)