காதலுக்கு நீங்க எதிரியா?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 13,321 
 

அடுத்த வாரம் ப்ளஸ் டூ பரீட்சை ஆரம்பம். என் எதிரே அமர்ந்திருந்த மாணவிகளைப் பார்த்தேன். வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் இருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் மருத்துவர்களோ, பொறியாளர்களோ, ஆசிரியர்களோ, கணக்கர்களோ?

ஒவ்வொரு மாணவியாக எழுந்து, அவர்களின் கனவு, வாய்ப்பு, மேற்படிப்பு பற்றி சொல்லச் சொன்னேன்.

கடந்த ஒரு வருடமாக இவர்களின் வகுப்பு ஆசிரியையாக இருந்ததால், அனைவரின் பெயரும், குணநலன்களும் எனக்கு அத்துப்படி!

இரண்டாவது வரிசையில் அமர்ந்திருந்த துர்காவின் முறை வந்தபோது, அவள் எழுந்து நின்றாள். தலை குனிந்தபடி இருந்தாள்.

‘‘என்னம்மா துர்கா? நீ மேலே என்ன படிக்கப் போறே?’’ என்று கேட்டேன்.

என்னை நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் நீர். எனக்குள் ‘திடுக்’ என்றது.

‘‘சரி உட்கார்’’ என்று சொல்லிவிட்டு, அடுத்த மாணவியைப் பார்த்தேன்.

வகுப்பு முடியும் சமயம், அனைத்து மாணவிகளுக்கும் வாழ்த்துச் சொல்லிவிட்டு, துர்காவை என் அறைக்கு வரச் சொன்னேன். என் பின்னாலேயே வந்தாள்.

ஆசிரியைகளுக்கான அறையில் இருவரும் நுழைந்தோம். வேறு யாரும் அங்கில்லை.

‘‘சொல்லும்மா’’ என்றேன் பரிவாக.

‘‘மிஸ், எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறாங்களாம். நானும் அழுது, சண்டை போட்டுப் பார்த்துட்டேன். அப்பாவும், அம்மா வும் தங்களோட முடிவில் உறுதியா இருக்காங்க. எம்.ஏ. லிட்டரேச்சர் படிச்சு, கல்லூரி விரிவுரையாளர் ஆகணும்னு எனக்கு ஆசை!’’

விம்மலின் ஊடே சொல்லி முடித்தாள் துர்கா.

அவளைக் கூர்ந்து பார்த்தேன். குழந்தைத்தனம் விலகாத முகம். இவளுக்குப் போய் கல்யாணமா?

‘‘உன் பெற்றோர் எங்கே இருக்காங்க? என்ன செய்றாங்க?’’

பொதுப்படையாக விசாரித்தேன். இவளின் அப்பா, அம்மா இருவருமே நல்ல வேலையில் இருப்பது தெரிந்தது. வீட்டுக்கு ஒரே பெண் என்றும் சொன் னாள். பின் ஏன் இவள் கல்யாணத்துக்கு அவசரப்படுகிறார்கள் இவளைப் பெற்றவர்கள்?

புதிரை விளங்கிக்கொள்ள, அந்த வாரக் கடைசியிலேயே அவள் வீட்டுக்குச் செல்ல முடிவெடுத்தேன். துர்கா மூலம் சொல்லி அனுப்பினேன்.

துர்காவின் வீடு, நகரின் மையப் பகுதியிலேயே, பேருந்தை விட்டு இறங்கியதும், ஐந்து நிமிட நடையில் இருந்தது.

கொஞ்சம் பூ வாங்கிக் கொண்டு அவள் வீட்டுக் குள் நுழைந்தேன். ஊது பத்தி மணத்துடன் வரவேற்றார்கள். வீட்டின் சூழல் மனதுக்கு இதமாக இருந்தது.

உறுத்தாத டிஸ்டெம்பர் சுவர் வர்ணம், பொருத்த மான ஜன்னல் திரைச் சீலைகள், சிரித்த முகத்து டனான வரவேற்பு… பார்த்தால் மிகவும் உலக அனுபவம் வாய்ந்த முதிர்ச்சி தெரிந்தது துர்காவின் பெற்றோரிடம். பின்பு ஏன் மகள் வாழ்க் கையை இப்படி ஒடித்து முடக்க மனசு வந்தது?

பிஸ்கட், காபி உபசாரம் முடிந்த பிறகு, மெல்ல ஆரம்பித்தேன்…

‘‘துர்கா சொன்னதை என்னால நம்பவே முடியலே! இப்ப உங்களைப் பார்த்ததும், அவதான் ஏதோ தவறா புரிஞ்சிட் டிருக்காள்னு தோணுது!’’

துர்காவின் அப்பாவும், அம்மாவும் சங்கடமாக நெளிந்தனர்.

‘‘துர்கா நல்லாப் படிக்கிற பொண்ணு. பின்ன ஏன் அவசரம்? ஏதாவது சொந்தத்துல நெருக்க றாங்களா?’’

இல்லையெனத் தலையசைத்தாள் துர்காவின் அம்மா.

‘‘வேற… காதல், கீதல் ஏதாவது…’’

‘‘சேச்சே, அதெல்லாம் இல்லை!’’

‘‘ஒருவேளை காலேஜுக்கு அனுப்பினால், உங்க பொண்ணு காதல் வலையில் விழுந்துடுவாளோன்னு பயப்படறீங்களா? காதலுக்கு நீங்க எதிரியா?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. காதலுக்கு நாங்க எதிரி இல்லை. எங்க கல்யாணமே காதல் கல்யாணம்தான்’’ என்றார் துர்காவின் அப்பா.

அதற்கு மேல் என்ன கேட்பது என்று தெரியாமல் இருவரையும் பார்த்தேன்.

துர்காவின் அப்பா மெல்லிய, ஆனால் இறுக்கமான தொனியில் சொன்னார்…

‘‘துர்கா மேல இவ்வளவு அக்கறை எடுத்துக்கிட்டு நீங்க வீடு தேடி வந்து கேட்கறதால சொல்றேன். இது எங்களோட பதினெட்டு வருஷ உறுத்தல்.’’

சொல்லிவிட்டுத் தன் மனைவியைப் பார்த்தார். அவளும் தலையசைத்தாள்.

‘‘இவளும் இவங்க பெற்றோருக்கு ஒரே பொண்ணு. ஒரே கல்லூரியில் படிச்சோம். காதல் வந்தது. கூடவே எதிர்ப்பும் வந்தது. என் பெற்றோர் என்னோட சிறுவயசிலேயே இறந்துபோயிட்டாங்க. அண்ணன் தயவுலதான் வாழ்ந்தேன். வளர்ந்தேன். காதல் விவகாரம் தெரிஞ்சதும், ‘போடா’ன்னு கழட்டி விட்டுட்டார் என்னை!’’

அடுத்து ஏதோ கனமான விஷயம் சொல்லப் போவது அவரின் தயக்கத்திலிருந்து தெரிந்தது.

‘‘இவங்க பெற்றோரும் எங்கள் காதலை ஒப்புக்கலே. வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் செஞ்சுக் கிட்டோம். எனக்கு நல்ல வேலை கிடைச்சது. இவளுக்கும் கொஞ்ச நாள்ல ஒரு வேலை கிடைச்சுது. அதனால பொருளாதாரரீதியா பாதிப்பு எதுவும் வரலே. எங்கள் காதலின் பலமே அதுதான்!’’

அவர் சொன்ன விஷயம் எதுவும் எனக்குப் புதிராகவே படவில்லை. என் மனதைப் படித்தவளாக துர்காவின் அம்மா சொன்னாள்…

‘‘உங்க பார்வையிலே இருக்கிற கேள்வி புரியுது. விஷயமே இனி மேல்தான் இருக்கு. எங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு என் பெற்றோர் போயிருக் காங்க. சாப்பிடறப்போ, எங்க அப்பா யதார்த் தமாக ஏதோ குறை சொல்லி இருக்காரு. அப்ப பக்கத்திலே இருந்த ஒருத்தர்…’’ மேலே சொல்ல வராமல் திணறினாள்.

‘‘உங்க வீட்டுல ஃபங்ஷன்னு ஊரைக் கூட்டி, சொந்தபந்தங் களை அழைச்சு சாப் பாடு போட வக்கில்லே. இதுலே அடுத்தவங்க வீட்டுக் கல்யாணச் சாப்பாட்டிலே குறை கண்டுபிடிக்கத் தெரியு தோன்னு ஒருத்தர், இவ அப்பாவைக் கிண்டல் செஞ்சுட்டாராம். அன்னிலேர்ந்து கிட்டத்தட்ட பதினாறு, பதினேழு வரு ஷமாக இவளோட பெற்றோர் யார் வீட்டு விசேஷத்துக்கும் போறதில்லை…’’ என்று சொல்லி முடித்தார் துர்காவின் அப்பா.

விஷயம் ஓரளவு புரிபட ஆரம்பித்தது எனக்கு.

‘‘எங்களாலதானே என் பெற்றோருக்கு இவ்வளவு பெரிய தலைகுனிவுன்னு நினைக்கும்போதெல்லாம் மனசு வலிக்கும். இளமை யிலே எங்களுக்கு எங்க காதல் மட்டும்தான் பெரிசாத் தெரிஞ்சுது. பெத்தவங்க மனசோ, வளர்த்தவங்க வலியோ புரியலே. எங்களுக்குன்னு குழந்தை பிறந்த பிறகுதான் சமூக அமைப்பும், அதன் முக்கியத்துவமும் புரியுது!’’

துர்காவின் அம்மா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்று தலை அசைத்தேன்.

‘‘எங்களால என் பெற்றோருக்கு ஏற் பட்ட தலைக்குனிவை, என் மகள் திருமணம் மூலமாகப் போக் கணும்னு முடிவெடுத் தோம். துர்காவுக்கும் இப்ப பதினேழு வயசு முடிஞ்சு, பதினெட்டு நடக்குது. என் அப்பா, அம்மாவை முன்னி றுத்தி, சொந்த பந்தங்களை அழைச்சு, தடபுடலாக இவ கல்யாணத்தை நடத்தறது மூலமா, என் பெற்றோரின் வனவாசத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கலாம்னு இருக்கோம். இப்ப சொல்லுங்க, எங்க முடிவு சரிதானே?’’

வலுவான காரணம் சொல்லி விட்டதாக எண்ணித் தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க முயலும் அவர்களைப் பார்த்துக் கேட்டேன்…

‘‘அதாவது, உங்க பெற்றோரின் மனதில் இருக்கும் ரணத்தை, உங்கள் மகளின் மனதுக்கு மாற்ற நினைக்கிறீங்க. இது சரியா?’’

என் கேள்வி யினால் இருவரும் ஒரு நிமிடம் ஆடிப்போய் விட்டார்கள்.

‘‘அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி… நீங்க ரெண்டு பேரும் உங்களை முன்னிறுத்தியே பிரச்னைகளைப் பார்க்கிறீங்க. இது நியாயமா?’’

எனது அடுத்த கேள்வியின் முன் அவர்கள் தலைகுனிந்து நின்றார்கள்.

‘‘அன்னிக்கு உங்க காதல் மூலம் உங்களைப் பெற்று வளர்த்தவங் களைக் காயப்படுத்தினீங்க. இன்னிக்கு, அதுக்குப் பரிகாரம் தேடறேன் பேர்வழின்னு உங்க மகள் மனதைக் காயப்படுத்தப் பார்க்கறீங்க. அவ்வளவு தானே வித்தியாசம்? யோசிங்க. உங்க கடமை பெத்தவங்களைத் திருப்திப் படுத்தறதோடு மட்டும் முடியறதில்லை. பெத்த குழந்தைகளோட நியாயமான ஆசைகளை நிறைவேத்திவைக் கிறதுலயும் இருக்கு! யோசிச்சு ஒரு முடிவு எடுங்க!’’ என்று சொல்லிவிட்டு, விடை பெற்று வெளியே வந்தேன்.

தேர்வுகள் எல்லாம் முடிந்தபின் ஒரு நாள் மாலை வேளையில், துர்காவும், அவள் பெற்றோரும் என்னைத் தேடி வந்தனர். கையில் பத்திரிகை.

‘‘என்ன டீச்சர் பார்க்கறீங்க… கல் யாணம்தான். ஆனா, துர்கா வுக்கு இல்லை. வலியை டிரான்ஸ்ஃபர் பண்றதுக்குப் பதிலா, வேற ஒரு திருமணத்தை நடத்திவைக்கப்போறோம். ஆமா, துர்காவோட தாத்தா, பாட்டிக்கு அறுபதாம் கல்யாணம். தடபுடலாக ஊரைக் கூட்டிப் பண்றோம். பிடிங்க பத்திரிகையை. அவசியம் வரணும்!’’

சந்தோஷமாக துர்காவைப் பார்த்தேன். கண்களில் நீர் கசிய, என்னைப் பார்த்துக் கைகுவித்து வணங்கினாள்.

– ஜூன் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *