காதலாவது கத்தரிக்காயாவது?

 

சென்னை மெரீனா கடற்கரையில் கடலைலகளை பார்த்தவாறு உட்கார்ந்திருந்த கணேசின் தோளில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் ரம்யா. அடுத்த வருசம் எனக்கு படிப்பு முடிஞ்சிடும், படிப்பு முடிஞ்சிருச்சின்னா என் கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதுக்குள்ள நீங்க ஒரு ஏற்பாடும் பண்ண மாட்டேங்கறீங்க.

நான் என்ன பண்ணட்டும், கோல்டு மெடல்ல பாஸ் பண்ணியும் எனக்குன்னு சரியான வேலை அமைய மாட்டேங்குதே? பரிதாபமாய் சொன்னான் கணேஷ்.

எங்கப்பா கஷ்டப்பட்டு வாங்கிக்கொடுத்த வேலையிலயும் நிக்க மாட்டேனிட்டீங்க, அதுக்கப்புறம் சேர்ந்த இடத்துலயாவது நின்னீங்களான்னா அதுவும் இல்லை. ஒரு இடத்துல நிலைச்சு நிற்க மாட்டேங்கறீங்க குற்றம் சாட்டும் தோரணையில் சொன்னாள் ரம்யா.

நான் என்ன பண்ணறது, எனக்கு அமையற இடம் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை பண்ணறதாகவே இருக்கு, சலித்துக்கொண்டான் கணேஷ்.

நீங்க என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியாது, அப்பா அம்மாகிட்டே அடுத்த வாரம் வந்து பேசுங்க. கண்டிப்பாய் சொன்னாள் ரம்யா.

சரி பார்க்கலாம், பேச்சில் சுரத்தில்லாமல் சொன்னான், கணேஷ். நமக்கு இப்பொழுது இந்த தலைவலி தேவையா ஒரு கணம் மனம் நினைத்தாலும் சட்டென ரம்யா தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாது என்று கண்டிப்பா இந்த வாரம் வந்து பேசுறேன். குரலில் உற்சாகத்தை காட்டுவது போல சொன்னான்.

சொல்லிவிட்டானே தவிர கணேஷிற்கு அந்தளவிற்கு தைரியம் வரவில்லை. காரணம் இப்பொழுது வேலை செய்யும் கம்பெனியிலும் அவனுக்கு தொடர்ந்து வேலை செய்யும் மன நிலையில் இல்லை. இப்படி தனக்கே வாழ்வுக்கு தடுமாறிக்கொண்டிருக்கும்போது ரம்யாவை போய் பெண் கேட்கும் விசயம் அவனுக்கு ஆயாசமாகப்பட்டது. இன்னும் இரண்டு நாட்களில்
மீண்டும் ரம்யா இதை பற்றி அடம்பிடிப்பாள்.என்ன செய்யலாம்? மனம் தடுமாறியது. ஒரு சரியான வேலை இல்லாமல் ரம்யாவை எப்படி பெண் கேட்பது?

ரம்யாவின் அப்பா “பாங்க் மேனேஜர்” என்ற பெரிய பதவியில் இருந்ததால் இவனை தனது ஊரிலிருந்து சென்னைக்கு வரவழைத்து இவர்கள் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு கம்பெனியில் சேர்த்து விட்டார். இவனுடைய நேரமோ என்னவோ அந்த கம்பெனியில் ஆறு மாதம் கூட வேலை செய்ய முடியவில்லை. அதற்கு பின் நான்கைந்து கம்பெனிகள் மாறிவிட்டான். ஆரம்பத்தில் அவனுக்காக அனுதாபப்பட்ட அவர் அடிக்கடி வேலையை தொலைத்து விட்டு வந்ததால் இவனை கண்டாலே சலிப்பும் கோபமும் கொள்கிறார். இப்பொழுது போய் ரம்யாவை கல்யாணம் செஞ்சு கொடு என்று கேட்டால் அவ்வளவுதான்.

வீட்டுலே பெண் பிள்ளை இருக்கிறது என்ற காரணத்தாலயே உறவுக்கார பையனாய் இருந்தாலும், வேலை வாங்கி கொடுத்த மறு நிமிசம் வெளியே அவனை தங்கிக்கொள்ள சொல்லி விட்டார்.அவ்வளவு கறாராய் நடப்பவரிடம் ஒரு வேலையில் நிரந்தரமாய் இருக்க முடியாதவன் பெண்ணை கேட்டால் என்ன சொல்வார்.

நினைக்கும்போதே மனதில் பயம் வந்து ஒட்டிக்கொண்டது.

சரி இந்த அறிவு ரம்யாவை காதலிக்கும்போதாவது தனக்கு இருந்திருக்கக்கூடாதா? அப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. கல்யாணம் என்று வந்து நிற்கும்போதுதான்
மண்டையிடிக்கிறது.

ஊரிலும் ரம்யா வீட்டாரின் அளவுக்கு தங்களிடம் வசதி இல்லை. மிகுந்த சிரமத்தில் இருந்த்தினால்தான், ஊருக்கு வந்திருந்த ரம்யாவின் அப்பா இவர்கள் நிலைமையை பார்த்து சென்னையில் இவனுக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணிக்கொடுத்தார். ஆனால் இவன் அதை தக்க வைத்துக்கொள்ள வில்லையே?

தக்க வைத்திருந்தாலாவது இந்நேரத்துக்கு தைரியமாக பெண் கேட்டிருக்கலாம்.

நினைக்க நினைக்க இவனுக்கு மண்டையிடித்தது.

இன்னைக்கு வேலைக்கு போகலையா? அந்த பரபரப்பான சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தவனுக்கு திடீரென்று குரல் கேட்கவும் திடுக்கிட்டு பார்த்தான். ரம்யாவின் அப்பாதான் அவன் அருகில் நின்று கொண்டிருந்தார்.

இல்லை, இன்னைக்கு லீவு போட்டிருக்கேன். சமாளித்தான். வெளியில் சொல்ல முடியுமா? நேற்றுத்தான் அந்த கம்பெனியில் இருந்து வெளியே வந்திருந்தான். பக்கத்தில் இருக்கும் கம்பெனிக்கு வேலை கேட்பதற்காகத்தான் சென்று கொண்டிருக்கிறான்.

அதற்குள் இவர் கண்ணில் பட்டு விட்டான். என்ன சொல்வது என்று தெரியாமல் சமாளித்தான்.

ம்..ம்… ஏதோ யோசித்து நின்றவர், எனக்கு தெரிஞ்ச பிரண்டுக்கு ஒரு நம்பிக்கையான ஆள் வேணும்னு கேட்டாரு, உன்னைய கேக்கணும்னு நினைச்சேன். சரி நீதான் வேலைக்கு போயிட்டு இருக்கியே, நான் வேற ஆளை பாத்துக்கறேன், சொல்லிக்கொண்டே அவர் அங்கிருந்து நகர்ந்தார்.

அவ்வளவுதான், சட்டென அங்கிள் ஒரு நிமிசம், நான் வேணா அங்க போறேன்

அவரை வழி மறித்தாற் போல நின்று கொண்டான். நீதான் இப்ப வேலைக்கு போயிட்டிருக்கியே. அடிக்கடி மாறிகிட்டே இருந்தா நல்லா இருக்காது. அவர் சொல்ல இவன் அவசரமாய் நான் நேத்தே அந்த கம்பெனியில இருந்து ரிசைன் பண்ணிட்டேன். இப்பொழுதும் முறைத்தார் அவர். இப்படி அடிக்கடி ரிசைன் பண்ணிகிட்டு இருந்தியின்னா ஒரு இடத்துல கூட இருக்க முடியாது. கறாராய் சொன்னவரிடம், இல்லை கண்டிப்பா நீங்க சொல்ற இடத்துல போய் நிரந்தரமாய் வேலை செய்யறேன்.கெஞ்சுவது போல கேட்டான்.

சரி நாளைக்கு நான் வேலை செய்யற பேங்குக்கு வந்துரு, அவரை நாளைக்கு வர சொல்லியிருக்கேன். வரும்போது உன் சர்ட்டிபிகேட் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடு. இதுலயாவது நிரந்தரமாய் இருக்க பாரு. சலிப்புடன் சொன்னார்.

கணேஷுக்கு கோபம் வந்தாலும் அடக்கிக்கொண்டான். கடவுளாய் பார்த்து உடனே ஒரு வேலை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.அதுவும் ரம்யா அப்பாவின் மூலமே. நாமே
வாயை கொடுத்து கெடுத்துக்கொள்ளக்கூடாது.

மறு நாள் வங்கி அலுவலக நேரத்திற்கு பத்து நிமிடம் முன்னதாகவே போய் நின்று கொண்டான்.

அலுவலகத்துக்கு வந்தவர் இவன் நிற்பதை பார்த்து பத்து நிமிசம் இங்கேயே நில்லு, அவருக்கு போன் பண்ணி வரச்சொல்றேன். சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார்.

கணேஷுக்கு மீண்டும் மெல்லிய கோபம் எட்டி பார்த்தது. என்ன மனுசன், வாசலில் நிற்கிறானே, ஏதாவது சாப்பிட்டியா, உள்ளே வந்து உட்காரு இந்த மாதிரி கேட்டிருக்கலாமில்லை? மனதுக்குள் பெரிய நினைப்பு…

நினைத்துக்கொண்டாலும் வெளியே சொல்லாமல் சிரிப்பை மட்டும் முகத்தில் காட்டினான்.

அரை மணி நேரம் ஆகியது, காத்திருந்து காத்திருந்து சலித்து போனான். சே..என்ன கொடுமையிடா இது, நினைக்கும்போதே வங்கி அலுவலக உதவியாளர் இவனை வெளியில் வந்து கூப்பிட்டார்.

மெல்ல நாகரிகமாக கதவை தட்டி விட்டு பயபக்தியை முகத்தில் காண்பித்துக்கொண்டு அவர் அறைக்குள் நுழைந்தான். எதிரில் உட்கார்ந்திருந்தவர் முதுகு மட்டும் தெரிந்தது. இவனை
நிமிர்ந்து பார்த்தவர், வா..வா, அவனை அழைத்து விட்டு, இந்த பையன்தான், எதிரில் உட்கார்ந்திருந்தவர் திரும்பினார். அறுபது வயது மதிக்கலாம். இவன் தன்னுடைய சான்றிதழ்களை அவர் கையில் கொடுத்தான்.

மேலோட்டமாக பார்த்தவர், அதெல்லாம் வேண்டாம், நீங்க சொல்லிட்டீங்கண்ணா மறு வார்த்தை வேண்டாம், சான்றிதழ்களை அவனிடமே கொடுத்து விட்டு நாளைக்கு இந்த விலாசத்துக்கு வந்துடு. கையில் ஒரு விசிட்டிங் கார்டை கொடுத்தார்.

நன்றிங்க, அவரூக்கு சொல்லிவிட்டு வெளியே வந்தவன், ஐந்து நிமிடங்கள் யோசித்து விட்டு அடடா ரம்யா அப்பாவிடம் சொல்லாமல் வந்து விட்டோமே, மரியாதைக்காவது சொல்லியிருக்கணும், குற்ற உணர்வுடன் மீண்டும் அவர் அறைக்கதவை மெல்ல திறக்க முயற்சிக்க அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததில் இவன் பெயர் அடிபட அப்படியே நின்று காது கொடுத்து கேட்டான்.

பையன் நல்ல பையன்தான், இந்த கம்பெனிக்கு நான் தான் ஓணர்னு அவனுக்கு தெரியக்கூடாது. எனக்கு இன்னும் இரண்டு வருசம்தான் இருக்கு, ரிட்டையர்டு ஆகறதுக்கு, அதுக்குள்ள இவன் கம்பெனியை நல்லா ஓட்டிட்டாண்ணா அதுக்குள்ள பொண்ணு படிப்பை முடிச்சிடுவா, நல்ல வேளை காதல் அது இதுன்னு சொல்லாம இது வரைக்கும் படிச்சிகிட்டு இருக்கா.அடுத்த வருசம் படிப்பை முடிச்சுட்டா, இவனுக்கே கல்யாணத்தை முடிச்சு கம்பெனியையும் கையில கொடுத்துடலாம் என்ன சொல்றே?

நான் சொல்றதுக்கு என்ன இருக்கு, நம்ம பொண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைச்சா போதும், அதுவும் நம்ம பக்கத்துலயே இருந்தா ரொம்ப நல்லது எதிரில் இருப்பவர் சொல்லிக்கொண்டிருந்தார்.

சத்தம் வராமல் கதவை சாத்தியவன் மனம் ஆகாயத்தில் பறந்தது. அப்படியானால் ரம்யா நமக்குத்தான்,அது மட்டுமல்ல இந்த கம்பெனியின் எதிர் கால முதலாளி….ஆஹா…ஆஹா..

மறு நாள் ரம்யாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். இங்க பாரு இந்த காதல், கத்தரிக்காயின்னு,என்னைய பார்க்க வரக்கூடாது. புரிஞ்சுதா? 

தொடர்புடைய சிறுகதைகள்
தலையை விரித்து ஒரு சாதாரண ரப்பர் வளையத்தால் சுற்றி இருந்தது கூட, அழகாகத்தான் இருந்தது,அவளது மெல்லிய மெரூன் கலர் ஜீன்ஸ் பேண்டும் அதற்கு இணையாக அவள் போட்டிருந்த வெளிர் நீலம் கலந்த பனியனும், அவளிடம் இருந்து வந்த மென்மையான நறுமணமும் இவனை அப்படியே ...
மேலும் கதையை படிக்க...
என்னைச் சுற்றிலும் கூட்டமாக உட்கார்ந்திருப்பது எனக்கு தெரிகிறது. ஆனால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை, என் மூச்சு மட்டும் மேலும் கீழும் ஏறி இறங்கி கொண்டிருக்கிறது. பக்கத்தில் இடது புறம் என் மனைவி உட்கார்ந்திருப்பதை உணர முடிகிறது, அருகே நிறைய பெண்கள் ...
மேலும் கதையை படிக்க...
எழுத்தாளர் சங்கர நாராயணனுக்கு அவரது எழுத்து திறமையின் மேல் சந்தேகம் வந்து விட்டது. அன்பு மனைவியின் தங்கை சுமதி ஆசையாய் அவரிடம் ஒரு துப்பறியும் கதை எழுதிக்கொடுங்கள் என்று கேட்டுவிட்டாள், அதற்காக மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறார். கதைதான் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் ...
மேலும் கதையை படிக்க...
தன்னுடைய பர்செனல் வலை தள முகவரியில் வந்திருந்த தகவல்களை அசுவாரசியமாய் பார்த்துக்கொண்டிருந்த பிரபல பணக்காரரான துர்காசேட் சட்டென ஒரு மெசேஜை பார்த்ததும், திடுக்கிட்டார். “You are Watching and Scanning” பின் தன் தோளை குலுக்கிக்கொண்டவர், அந்த மெசேஜை கண்டு கொள்ளாமல் அடுத்த மெசேஜூக்குள் ...
மேலும் கதையை படிக்க...
ழேய்..யார்ராது? குழறிக்கொண்டே எங்கோ பார்த்துக்கொண்டு மிரட்டினான் அன்னாசி.யாரும் அவனுக்கு பதில் கொடுக்காததால் தூ..என்று காற்றை பார்த்து துப்பினான். அவனின் இடுப்பில் இருந்து அவிழ்ந்த வேட்டியை எடுத்து மடிக்க குனிந்தவன் தடுமாற்றம் வந்ததால் பேசாமல் நிமிர்ந்து நின்று மறுபடியும் ழேய்…யார்ராது?தன் குரலை உயர்த்த ...
மேலும் கதையை படிக்க...
மாங்காய்….மாங்காய்…
மீண்டும் வருவேன்
எழுத்தாளர் சங்கர நாராயணன் எழுதிய துப்பறியும் கதை
முகம் அறியா எதிரி
என் வீடு எங்கே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)