Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

காதலர்கள் – ஜாக்கிரதை

 

“இன்னும் எத்தன நாள் தான் இப்படியே இருக்குறதா உத்தேசம்…?” என்று வழக்கம் போல் கேட்டான் ‘திரு’. ஆனால், இந்த விஷயத்திற்கு இன்று ஒரு முடிவு கட்டிவிடவேண்டும் என்ற தீவரம் அவன் குரலில் தொனித்தது..!

“எப்படியே….?” என்று சற்றும் சளைக்காமல் எதிர் கேள்வி கேட்டான் ‘ராஜா’

“எனக்கு என்னவோ இது சரியா படல…. சீக்கிரமா உன் காதல அவகிட்ட சொல்லு….”

“காதல பத்தி உனக்கு என்ன டா தெரியும்…. அதெல்லாம் எடுத்தோம் கவுத்தோம்னு செய்யுற காரியமா என்ன?”

“சரிப்பா ஆற அமர செய்.. அதுக்குள்ள நம்ம ஆயுசே முடிஞ்சுடும்….”

ராஜாவின் முகம் வாடியது..!

“என்ன பா ஆச்சு…?”

“கவலையா இருக்கு திரு.. ”

“ஏன் டா…?”

“மனசு சரி இல்ல….”

“அது தான் ஏன்னு கேட்குறேன்….”

“அவ எனக்கு வேணும் டா…..!”

“உஹ்ஹும்… வேணும்னு சொல்லு.. ஆனா ஸ்டெப் எடுக்காத…. நீயே இவ்வளவு தயங்கும் பொழுது அவ ஒரு பொண்ணு டா…. எவ்வளவு தயக்கம் இருக்கும்…..?”

“என்ன தயக்கம் வேண்டி இருக்கு..? வந்து சொன்னா நான் என்ன மாட்டேன்னா சொல்லப்போறேன்…?”

“ஏன் அதையே அவ நினைச்சு இருக்க கூடாதா…? இங்க பாரு ராஜா நாம எல்லாம் பழக ஆரம்பிச்சு ஒரு வாரம் ஓடிடுச்சு… நீங்க ரெண்டு பேரும் முதல் பார்வையிலேயே மனச பரிமாறிட்டீங்க.. உங்க லவ்வ பத்தி இங்க எல்லாருக்கும் தெரியும்… அப்பறம் என்ன யோசனை…? தைரியமா சொல்ல வேண்டியது தானே…? நாம இருக்கப்போற கொஞ்ச நாளைக்கு நாம ஏன் மத்தவங்களுக்காக வாழணும்… தைரியமா நமக்காக வாழலாமே…?”

” பயமா இருக்கு திரு ”

“என்ன பயம்….?”

“நீ சொல்லுற மாதிரி வாழலாம்.. ஆனா அவ என் ஜாதி இல்லையே…?”

“அடச்சீ… நீயெல்லாம் ஒரு ஜென்மம்.. ஜாதியில என்ன டா இருக்கு… ஏன் நீயும் நானும் கூடத் தான் வேற வேற ஜாதி… ஒத்துமையா இல்ல…? யார் என்ன சொன்னா…?”

“நட்புக்கு ஜாதி முக்கியமில்ல… ஆனா வாழ்க்கைக்கு ..? காதலுக்கு….? முக்கியமாச்சேடா…”

“இங்க பாரு.. அவ உன்ன பாக்குற அந்த பார்வையில காதல் இருக்கு.. அது உனக்கும் தெரியும்… அத வெளிப்படுத்துனு தான் சொல்லுறேன்… இப்ப வந்து ஜாதி அது இதுன்னு… உனக்குள்ள ஜாதி வெறி இருக்கா…?”

“என்ன டா இத்தன நாள் ஒன்னுக்குள்ள ஒன்னா பழகிட்டு, இப்ப வந்து இப்படி கேட்குற…?”

“கேட்குறதுக்கு பதில் சொல்லு….”

“எனக்கு அப்படி ஒரு எண்ணம் எப்பவுமே இருந்தது இல்ல…. அப்படி இருந்திருந்தா அவள எப்படி நான் நேசிச்சு இருப்பேன் ? ”

“சரி அப்படினா…. ஒன்னு செய்யலாம்…. நான் வேணும்னா போய் சொல்லுறேன், உன் காதல அவ கிட்ட….”

“நீயா…..? ஏன் டா இப்படி….?”

“வேற என்ன செய்ய உன் கூட பழகுன பாவத்துக்கு…?”

” அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… ”

“அப்ப.. ஒன்னு செய்… உனக்கு என் மேல உண்மையாவே அன்பு இருந்தா, நீ என்ன உண்மையான பிரண்டா நினைச்சிக்கிட்டு இருந்தா… நீ அவ கிட்ட இன்னிக்கு சொல்லியே ஆகணும் …..”

“………..”

“என்ன பா… பதிலையே காணோம்….? யோசிக்குரீயலோ…?”

“…….”

“ஒய்…. சொல்லு பா.. என் மேல உண்மையா உனக்கு நட்பு இருக்கா? உண்மையாவே என் மேல உனக்கு அன்பு இருக்கா….?”

“சரி… உனக்காக… நான் சொல்லுறேன்… ”

“எனக்காக வேண்டாம்… உனக்காக சொல்லு… உன் வாழ்கைக்காக, உன் காதலுக்காக… உன் இன விருத்திக்காக….” என்று கண் சிமிட்டினான் திரு.

ராஜாவின் கன்னங்களில் ப்ரெஷான ரெட் ஆப்பிள்…!

ராணியும் அவ்வழியே வந்தாள். அவள் கண்கள் மின்னின, ராஜாவைப் பார்த்து காதல் பேசின.. இதழ்கள் மௌனப் புன்னகையை உதிர்த்தன..

“சொல்லு… இப்பவே சொல்லிடு….” என்று திரு ராஜாவைச் சீண்டினான்.

ராஜாவோ, “இன்னிக்கு வேண்டாம்… நாளைக்கு…..” என்றவாறு அசடு வழிந்தான்.

“நாளைக்கு என்ன நல்ல நாளா…..? ”

“இல்ல… நாளைக்கு வேலன்டைன்ஸ் டே…”

“புரிஞ்சிடுச்சு… புரிஞ்சிடுச்சு…. நீ அசத்து…” என்றவாறு திரு நகர்ந்தான்.

ராஜா-ராணி இருவரின் விழிகளும் சந்தித்தன, காதல் மொழி பேசின, மனமும் முகமும் இன்பத்தை அள்ளி வீசின, இருவரின் வயிற்றிலும் சில்லுசில்லாய் பட்டாம்பூச்சிகள்…. இந்த காதல் வார்த்தைகளால் வடிவமைக்க முடியாது, அதை உணர மட்டுமே இயலும். காதல் வயப்படாதவர்களுக்கு அந்த உணர்வின் பெருக்கு புரியாது, வந்தவர்களுக்கோ அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்லி மாளாது. காதல் என்பது ஒரு இன்பம், அது தீண்டத்தீண்ட பெருக்கெடுக்கும். அந்த இன்ப ஊற்றில் எந்த ஒரு உயிருக்கும் சேதமிருக்காது, மாறாக அங்கே தான் பல உயிர்கள் உருவாகும். காதல் என்று ஒன்று இல்லையென்றால் இந்த உலகமும் அதிலுள்ள சிறு சிறு ஜீவ ராசிகளும் பிறத்தல் அரிது, என்னதான் தீவரமாய் வாதம் செய்தாலும் இன்னும் இங்கே இந்த உலகில் காதலை மதியாதோர் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் பற்பல காதல்களை உடைக்கவே செய்கின்றனர். இது தான் காதலின் சாபக்கேடு…!

மறுநாள்,

என்றும் அல்லாமல் அன்று ஏதோ இம்மண்ணில் புதிதாய் அவதரித்ததைப் போல் காட்சியளித்தான் ராஜா. கூடவே என்றும் போல் குதூகலமாய் திரு.

இன்று எப்படியேனும் அவளிடம் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்தான் ராஜா. அதற்கு பல ஒத்திகைகள் வேறு… திக்கித் திணறி… திரு தான் பாவம்…(?)!

அவளும் வந்தாள், என்றும் போல் இனிமையாய் இளமையாய், மெல்லிய புன்முறுவலுடன்…

திரு அவனை உந்தித் தள்ளினான். அவன் அவளை நோக்கி மெல்லமாய் விரைந்தான். அங்கே தயக்கமும் பொறுமையையும் மேலோங்கியது.

இருவரின் மூச்சுக்காற்றும் இருவர் மேலும் இதமாய் பரவ, அந்த சில்லென்ற சூழலிலும் ஒருவிதமான வெதுவெதுப்பு அவர்களுக்குள் பல எண்ணங்களை எழுப்பியது என்று சொன்னால் அது மெய்தான்..!

காதல் என்ற ஒன்று இருந்தாலே அங்கே பிரச்சனை ஏற்படுத்த ஆட்களும் இருப்பர். சில இடங்களில் காதலர்களே பிரச்சனையாய் மலர்வர், வேறு சில இடங்களில் காதலர்கள் அல்லாது அவர்களைச் சார்ந்தவர்களோ, இல்லை அவர்களிடம் நேரடியாக தொடர்பில்லாதவர்களோ முளைப்பர். இங்கேயும் அதே பிரச்சனைத்தான்…. ‘கவிதா அக்காவாள்’ மலர்ந்தது.

திரு உந்தித்தள்ள, மனமோ பிந்தித்தள்ள, மெதுவாக மிக மிக மெதுவாக ராணியை நெருங்கும் பொழுது, இவன் மனதிலே முளைத்த கிலியும், அதை வெளிக்காட்டாமல் முகத்தில் தோன்றிய களிப்பும், அவளை ஒருவாறு யூகிக்கவும் வைத்தது.

வாய் திறந்து சொல்லும் வேளையில்.. யாரோ அவனையும் அவளையும் மரணத்தின் வாயிலை எட்டிப்பார்க்க செய்தனர்.அந்த ‘யாரோ’ யார் என்று அவர்கள் உணர சில நொடிகள் எடுத்தது. அந்த யாரோவுக்கு சொந்தக்காரர் ‘கவிதா அக்கா’.

அவர்களின் நிலை கண்டு திரு கதறியது அவர்களுக்கு மட்டுமே கேட்டது. உயிர்போகும் வலி என்ன என்பதை அவர்கள் அனுபவிக்கத் துவங்கி விட்டனர். முதலில் அவர்களின் தலையில் ஒரு விதமான பாரம் அழுத்தியது, மெல்ல அதை முழுதாய் உணரும் முன் ஒரு வகையான மயக்கம் எத்தனித்தது, பின் மெல்ல மெல்ல சுவாசம் நிற்கத் துவங்கியது, நாசியின் துவாரம் வழியாக சுவாசம் உடைபட, செயற்கையாய் வாயால் சுவாசிக்க துவங்கினார்கள். இதய துடிப்பும் அதிகரிக்கத்துவங்கியது..

லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப் டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப், லப்டப்

இதயத்துடிப்பு இயல்பை விட வேகமாய், இன்னும் வேகமாய், இயல்பாய், மெல்லமாய், மெல்..ல..மாய், மெல்….ல….மெல்..ல..மாய், நிற்கப்போகும் தருவாயில் மீண்டும் இயல்பான இதயத்துடிப்புடன் காணப்பட்டனர்.

பெண்களின் ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்பு என்று சொல்லுவர் மனிதசாதியில், ஆனால் அவர்களின் பிறப்பில், குறுகிய காலங்களில் அவர்கள் இதே போல் பல மறுபிறப்புகளை சந்திகவே செய்கின்றனர். அதுவும் அவர்களின் ஒட்டுமொத்த மறுபிறப்பும் இந்த மனிதர்களால் தான் செயல்படுதப்படுகின்றது.. இந்த முறை அது கவிதா அக்கா என்னும் ஒரு பெண்பாலைச் சேர்ந்த ஒரு மனிதமிருகத்தால் வந்தது..

யாரோ முகம் தெரியாதவர்களுடன் கவிதா அக்கா உரையாடிக்கொண்டிருந்தாள்

“ஒன்னும் இல்லங்க… நீங்க கேட்ட மீன் கூட இந்த மீனும் வந்துடுச்சு… இப்ப இத விட்டுட்டா போச்சு.. நீங்க சொன்ன மீன மட்டும் ஒரு கவர் தண்ணியில போட்டுத் தரேன்”

அடுத்த விநாடி ராஜாவுக்கு மீண்டும் அதே ‘லப்டப்’ போராட்டம். மீண்டும் அவன் அதே பழைய தொட்டிக்குள் செலுத்தப்பட்டான். ராணியை யாரோ ஒரு அப்பாவும் பெண்ணும் எடுத்துக்கொண்டு செல்கின்றனர். ராஜாவின் காதல், வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாமலேயே காற்றில் மிதந்து தண்ணீரில் கரைந்தது. அதன் வெளிப்பாடு தான் அங்கே தண்ணீரிலிருந்து வெளிப்படும் சிறு சிறு முட்டைகள் (பபுல்ஸ்) என்று சொல்லித்தான் புரிய வேண்டுமா என்ன ? திருவின் ஆறுதல்களை ஏற்கும் மனநிலையில் ராஜா இல்லை..

காதலையும் மனதுக்குள் சுமந்து, வெளிப்படுத்தவும் முடியாமல், வெளிப்படும் தருவாயில், காதலனை விட்டே பிரிந்து, தூரதேசம் செல்லும் ராணியின் தவிப்பை வார்த்தைகளால் கோர்த்திட முடியாது.

தண்ணீரில் அழும் மீனின் கண்ணீரை யாரும் அறியமாட்டார்கள். இந்த அற்ப மனிதர்கள் உட்பட… அதற்கு சான்று தான் அதோ அந்த சிறுமியின் பேச்சு,

“அப்பா…. அப்பா…. இந்த மீன பாருங்களேன்… என்னமா குதிச்சு குதிச்சு விளையாடுது….? எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு பா…. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் பா….. என்ன பேரு பா வைக்கலாம் இந்த மீனுக்கு…..?”

அந்த சிறுமிக்கு எப்படித் தெரியும் ‘ராணி’ குதிச்சு விளையாடவில்லை, காதலனை விட்டு பிரியும் சோகத்தில் துடிக்கிறாள் என்பது…?

ஒருவர் சிரிக்க வேண்டும் என்றால் இங்கே மற்றவர் அழ வேண்டும்… இதுவே உலக நியதி.. அதற்கு அந்த ‘ராணி’ மீன் மட்டும் விதிவிளக்கா என்ன….? ஆணானாலும், பெண்ணானாலும் ஏன் மீனானாலும் இதுவே நியதி….!

அந்த தந்தையோ அவர் புதல்வியின் மழலைத் தமிழையும் அதன் பொருளையும் அன்பு கலந்து ரசிக்கின்றார்.. அவர் அவரது அன்பை வெளிப்படுத்திவிட்டார்… ஆனால் ‘ராஜா’ என்னும் அந்த மீன்…..? 

தொடர்புடைய சிறுகதைகள்
நீங்களே சொல்லுங்க.. ஒரு வயசுப் பையனுக்கு என்னலாம் ஆசயிருக்கும்...? அட மத்தத விட்டுடலாம், முதலிரவப்பத்தி எப்படிலாம் ஆசபட்டிருப்பான்..? விவரம் தெரிஞ்ச நாள்லயிருந்து எப்படிலாம் கனவு கண்டிருப்பான்..? அட என்ன விடுங்க, நீங்க கனவு காணலையா...? இல்லன்னு சும்மா ஒரு நாகரீகத்துக்காக சொல்லிடலாம், ...
மேலும் கதையை படிக்க...
மனதில் எந்த ஒரு வன்மமும் புகாமல் சுற்றிக்கொண்டிருந்த சமயம் அது. பொய், சூது, வாது, கள்ளம், கபடம் என்று எதுவும் என்னை அண்டா வயது அது. மனித ஜென்மமும் சில காலங்கள் கடவுளுக்கு அருகில் இருக்கும் பருவம் என்று ஊரார் முழக்கமிடும் ...
மேலும் கதையை படிக்க...
புதிதாக தார் மீட்டிய சாலை அது… வழியெங்கும் மரங்கள், அந்த மரங்களின் வாயிலாக ஆங்காகே எட்டிப் பார்க்கும் குறும்புக்கார வெயில். அந்த சாலையின் நான்கு வழி முனையின் இடது பக்கம் திரும்பினால், ‘பாரதி’ தெரு… அந்த தெருவில் வலதுபுறத்தில் நான்காவதாக இருக்கும் ...
மேலும் கதையை படிக்க...
கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி, நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும்… நான் யார்? என்னோட ‘ஏய்ம்’ என்ன, என்னோட பழக்கவழக்கங்கள் எல்லாமே.. என்ன சொல்லட்டுமா..? என் பெயர் மோகன். மாநிறம், மெலிந்த தேகம், முன்நெற்றி கொஞ்சம் ஏத்தமா இருக்கும், “உன்னோட கண்கள் எப்பவுமே ...
மேலும் கதையை படிக்க...
என்னுரை – ரத்னா: என் பெயர் ரத்னா.. அப்பா ஒரு அரசு ஊழியர். அம்மா இல்லத்தரசி. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நல்ல புரிதல். மொத்த அன்பையும் கொட்டி வளர்க்க ஒரே ஒரு குழந்தையுடன் நிறுத்திவிட்டார்கள்.. பிறந்த ஒன்றும் பெண்.. அப்பாவோட அம்மாவுக்கு, அதாவது என் ...
மேலும் கதையை படிக்க...
முதலிரவு
எதிர்பா(ராத)ர்த்த உறவு
ராமநாதனின் கடைசிப்பக்கங்கள்
கைக்கிளைப்பதுமை…!
காதல் எனப்படுவது யாதெனில்?

காதலர்கள் – ஜாக்கிரதை மீது 5 கருத்துக்கள்

 1. Nithya Venkatesh says:

  பிரமாதம்…

 2. Kumareshan says:

  Very very nice story

  • வசந்தகிருஷ்ணன்.ஆ. says:

   மிக்க நன்றி குமரேசன் ….

 3. வசந்தகிருஷ்ணன்.ஆ. says:

  நன்றி கிருத்திகா…

 4. Kirutika says:

  nice story :)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)