Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

காஞ்சனா

 

நான் என் பதினாறாவது வயதில் முதல் சிகரெட் பிடித்தேன் என்று சொன்னால் நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள். ஆனால் அது தான் எனது கடைசி சிகரெட்டும் கூட என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள். அது என் முக ராசி.

காஞ்சனாவும் நம்பவில்லை என்பது தான் ரொம்ப வருத்தமான விஷயம். திருவல்லிக்கேணியில் நான் குடியிருந்த காலங்களின் ஹைலைட் என்று காஞ்சனாவைச் சொல்லலாம். அவளை நீக்கிவிட்டு என் திருவல்லிக்கேணி நினைவுகளைப் பார்த்தால் ஒரு யானையை உட்கார வைக்கும் அளவுக்கு வெற்றிடம் இருக்கும்.

காஞ்சனாவுக்கு என் வயசு தான். கொஞ்சம் tom boyish. என்று பலர் சொன்னாலும் அதில் கணிசமான ஆண்களின் கண்கள் வேறு கதை சொல்லும். ஆம்பிளைச் ஷர்ட் போட்டுக்கொண்டு அவள் திரிந்ததும் அந்தக் கண்களின் செயலுக்கு ஒரு காரணம்.

நாங்கள் வசித்த தெருவுக்கு நாலு தெரு தள்ளி அவள் குடியிருந்தாள். ஆனால் அவள் போக்கு வரத்து எல்லாம் எங்கள் தெரு வழியாகத்தான். ஐஸ் ஹவுஸ் பஸ் ஸ்டேண்ட் எங்கள் தெரு வழியாகச் சென்றால் பக்கம் என்பதும் ஒரு காரணம்.

எனக்கு அவளைப் பார்பதற்கு அது ஹேதுவாக இருந்தது என்றாலும் அந்த ஏரியா வாலிபர் பட்டாளம் எல்லாம் என் வீட்டுக்கு வெளியே கூடாரமடிப்பது அசௌகர்யமாகவும் இருந்தது. அவளை விட ஒரு வயது குறைந்த சீனாவிலிருந்து அவளை விட ஏழு வயது பெரிய சாரதி வரையில் அந்தப் பட்டாளத்தில் சங்கமம். கொஞ்ச நாள் முன்னால் வந்த வெண்ணிலா கபடிக் குழு போல அது காஞ்சனா ஜொள்ளுக் குழு.

மேகத்தில் நடக்கும் ஒரு தேவதை போல அவள் மிதந்து மிதந்து வருவதைப் பார்க்க வாழ்நாளில் ஒரு ஐந்து வருஷத்தை ரொம்ப சுலபமாக அவள் காலடியில் வைத்து விடலாம். அதுவும் அந்த ஆம்பிளை ஷர்டும் அலட்சியமாக அசையும் முன்பக்கம் விடப்பட்டக் பின்னலும் தமன்னாவிடமும் சமந்தாவிடமும் சரணாகதியான இந்தத் தலைமுறையினர் அறியாத ஒரு ஆனந்தம்.

இப்படிப்பட்டப் பெண் ஒரு நாள் காலையில் அவள் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் ஆஜராவதற்கு முன்னர் என் வீட்டைக் கடக்கையில் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்த அதிர்ச்சியில் நின்றிருந்த நான் கீழே விழாதது இன்றளவும் எனக்கு ஆச்சர்யம் தான்.

அது கனவோ என்று நினைத்தேன். இருந்தாலும் இருக்கட்டும் என்று நானும் பதிலுக்குப் புன்னகைத்தேன். இன்னும் அழுத்தமாகப் புன்னகைத்து கையை ஆட்டினாள். “இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ்” என்று நான் கேட்காமலேயே சொன்னாள். இந்த மூன்று வார்த்தைகளுடன் மலர்ந்த காதல் சரித்திரத்திலேயே எங்களுடையது மட்டும் தான் இருக்கும்.

“எங்கே?”

“ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் தாண்டி கொஞ்சம் உள்ள போகணும். சயின்ஸ் அண்ட் மேத்ஸ். நல்லாச் சொல்லிக் குடுக்கறாங்க”

“ஓ, அப்படியா? இன்னும் ஸ்டுடண்ட்ஸ் சேத்துக்குவாங்களா?”

அவள் புன்னைகையுடன் “ம்ம்ம்… அதனால தான் உன்கிட்ட சொன்னேன்.”

அடுத்த நாள் முதல் நானும் அந்த ஸ்பெஷல் கிளாஸ் ஜாய்ன் பண்ணினேன் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. அவளோடு நடந்து போகும் அந்தத் தருணங்கள் வாழ்க்கையில் மீண்டும் கிடைக்காது. நிறைவேறாவிட்டாலும் கூட முதல் காதல் போல முழுமையானது எதுவும் கிடையாது. விழித்திருக்கும் நேரமெல்லாம் ஒருவர் இன்னொருவர் நினைப்பில் உடம்பில் ஒரு வித ஜுரம் போன்ற கொதிப்புடன் கழிப்பது ஒரு சுகானுபவம். ஒரு ஆனந்த லாகிரி.

முதலில் பாடம் பற்றி மட்டும் பேசிய நாங்கள், நாளடைவில் அதைத் தவிர்த்து எல்லாமும் பேசினோம். போக வர நாங்கள் சேர்ந்த கழித்த ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட கல்யாணமானவர்கள் போல இருந்தோம். ஒரு சராசரி கணவனைப் போல நானும் என் பலவீனங்களை எல்லாம் அவள் பார்வைக்குச் சமர்பித்தேன். அவளும் ஒரு மனைவி போல இது தப்பு இது சரி இதைச் செய்யாதே என்று சொல்லி என்னை ஆக்ரமித்தாள். அப்படி நான் அவள் பார்வைக்கு வைத்த பலவீங்களில் ஒன்றும், கூடவே கூடாது என்று அவள் ரிஜெக்ட் செய்த ஒன்றும் தான் சிகரெட் பிடிப்பது.

எனக்கு சிகரெட் பிடிக்க வேண்டும் ஒரு ஆசை. ரஜினி படம் பார்த்து வளர்ந்த தலைமுறையினரின் சராசரி ஆசைதான். ஆனால் காஞ்சனாவுக்கு அது கட்டோடு பிடிக்கவில்லை. சரி என்று நான் அந்தப் பேச்சை விட்டு விட்டாலும், ஐஸ் ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் தாண்டி உள்பக்கம் இருந்த அந்த சிகரெட் கடையைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதுக்குள் ரஜினி சிரிப்பார்.

ஒரு நாள் காஞ்சனா வரவில்லை. கொஞ்ச நேரம் அவளுக்காக வெயிட் செய்தபின் நான் மட்டும் கிளாசுக்குக் கிளம்பினேன். அந்தக் கடையைத் தாண்டும் போது யாருமே இல்லை. கடைக்காரக் கிழவன் மட்டும் உட்கார்ந்திருந்தான். மனதுக்குள் ஒரு விபரீத, என் வாழ்க்கையை மாற்றி வைத்த, ஆசை ஒன்று எழுந்தது. சரி ஒரு தம் போட்டுவிட்டு அப்படியே ஒரு காப்பி குடித்துவிட்டு பீச்சுப் பக்கம் போய் கொஞ்ச நேரம் கழித்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்று முடிவு செய்தேன்.

அந்தக் கடைக்கு போய் “ஒரு வில்ஸ் பில்டர் கொடுங்க” என்றேன். அந்தக் கிழவன் காசு வாங்கிக்கொண்டு ஒரு வில்ஸ் கொடுத்தான். அதை உதட்டில் பொருத்தி அங்கு வைத்திருந்த ஒரு சின்ன லாந்தர் விளக்கு போன்ற ஒன்றில் கத்தரித்து வைத்திருந்த சிகரெட் பாக்கெட் துண்டு ஒன்று எடுத்து பற்ற வைத்தேன்.

அந்த புகையிலை மணம் என்னோமோ செய்ததது. பிடித்தது போலவும் இருந்தது பிடிக்காதது போலவும் இருந்தது. இரண்டு மூன்று இழுப்பு இழுத்தேன். சரி போதும் கடைசி இழுப்பு இழுக்கலாம் என்று நினைத்தபோது மெயில் ரோட்டில் காஞ்சனா வந்து கொண்டிருந்தாள். நான் அவளைப் பார்த்த அதே கணத்தில் அவளும் என்னைப் பார்த்துவிட்டாள்.

காதல் தெரிந்த கண்களில் கனல் தெறித்தது. ஒன்றும் சொல்லவில்லை. பேசாமல் சென்று விட்டாள்.

அதற்கப்புறம் பல முறை நான் அவளிடம் பேச முயன்று தோற்றேன். அது தான் கடைசி சிகரெட் என்றேன். அவள் நம்பவில்லை. திடீரென்று ஒரு நாள் “என்ன மறந்துடு” என்றாள். அடுத்த நாளில் இருந்து கிளாசுக்கும் வரவில்லை. நானும் கிளாசிலிருந்து நின்று விட்டேன்.

அப்படிப்பட்ட காஞ்சனாவை இன்று சுமார் பதினைந்து வருடம் கழித்துச் சந்திக்கபோகிறேன்.

அவளுடன் நட்பு முறிந்த பிறகு சில மாதங்களிலேயே பள்ளிப் படிப்பும் முடிந்தது. அப்புறம் காலேஜுக்கு நான் கான்பூர் சென்று விட்டேன். அப்புறம் படிப்பு வேலை என்று வட நாட்டிலே சுமார் பத்து வருட வாசம். இன்னமும் அங்கு தான் இருக்கிறோம். இந்தப் பன்மையில் என் மனைவி வேதாவும் மகன் கிருஷ்ணாவும் அடக்கம்.

வேதா குழந்தை பிறந்த பிறகு வேலைக்குப் போகவில்லை. வீட்டில் பொழுது போக விளையாட்டாக முக நூல் பார்க்க ஆரம்பித்தவள், நாளடைவில் அதில் அதிக நேரம் செலவழித்தாள். அவள் மெம்பராயிருந்த ஒரு க்ரூப்பில் காஞ்சனாவும் மெம்பர். பேச்சு பேச்சில் ஆரம்பித்த அவர்கள் நட்பு, நான் வேதாவின் கணவன் என்று தெரிந்ததும் இன்னும் நெருங்கியது. ‘சென்னை வந்தால் கண்டிப்பாக வீட்டுக்கு வர வேண்டும்’ என்று காஞ்சனா சொன்னதன் விளைவு இன்று அவளைச் சந்திக்கப் போகிறோம்.

அடையாரில் வீடு. நல்ல வளமாகத்தான் இருக்கிறாள் போலும். பெல்லை அடித்ததும் கதவை திறந்து வந்த காஞ்சனாவைப் பார்த்து அதிசயித்தேன். அழகாக வயதாகியிருந்தாள். அதே கட்டுக்கோப்பான உடல். சற்று பளபளப்பும் தளதளப்பும் கூடியிருந்தது. இன்றும் அவளுக்கு ஒரு ரசிகர் மன்றம் அமைக்காலம்.

“ஹாய் வேதா! ஹாய் வெங்கட்! வாங்க வாங்க. “

“ஹலோ காஞ்சனா! எப்படி இருக்க?

“நான் நல்லா இருக்கேன். மை காட்! கெழவன் ஆயிட்டே நீ!”

உனக்கேண்டி இன்னும் வயதாகவில்லை என்று நான் கேட்க நினைத்தப் போது அவள் கணவன் உள் ரூமிலிருந்து வெளிப்பட்டான்.

“வெல்கம்! ப்ளீஸ் டூ கம் இன்” என்று வரவேற்று அழைத்துச் சென்றான்.

‘காப்பி எடுத்துக்கிட்டு வரேன்’ என்று சொல்லி உள்ளே சென்ற காஞ்சனாவுடன் வேதாவும் சென்றாள்.

“அப்புறம் நீங்க என்ன சார் செய்யறீங்க?” என்று கேட்டவாறே அவள் கணவன் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட் பாக் எடுத்துத் திறந்து என்னிடம் நீட்டினான்.

“ஐ டோன்ட் ஸ்மோக்” என்றேன். அப்பொழுது காஞ்சனாவும் வேதாவும் காப்பி ஸ்நாக்ஸ் எடுத்துக்கொண்டு வந்தார்கள்.

“ஹே கான்ஸ்! இதக் கேட்டியா? உன் பிரெண்ட் ஸ்மோக் பண்ண மாட்டாராம்! ஐ கான்ட் பிலீவ் இப்படி ஒரு சாது சந்நியாசி இருப்பார்னு” என்றான்.

என்னைப் பார்த்த படியே “ ஐ பிலீவ்” என்றால் காஞ்சனா.

அவள் கண்களில் தெரிந்தது காதலா, பெருமையா இல்லை இழப்பா? 

தொடர்புடைய சிறுகதைகள்
“மணி ஏழாச்சு! இன்னுமா தூக்கம்? எத்தன தடவடி உன்ன எழுப்பறது?” என்று அலமேலுவின் (அம்மா) சுப்ரபாதத்தைக் கேட்டுகொண்டே கண் விழித்தாள் சுஜா. “நாலு கழுதை வயசாறது! போறாக் கொறைக்கு போர்டு எக்ஸாம் வருஷம் வேற! இப்படித் தூங்கி வழிஞ்சா வெளங்கினா மாதிரிதான். பிளஸ் ...
மேலும் கதையை படிக்க...
மென்மையாக ஒலித்த i phone அலாரம் சப்தத்தினால் கண் விழித்த பூங்கொடி, அழகாக சோம்பல் முறித்தாள். அவள் சோம்பல் முறித்த அழகைப் பார்த்திருந்தீர்களானால் செய்துகொண்டிருக்கும் வேலையை ரிசைன் பண்ணிவிட்டு கவிதை எழுத புறப்பட்டு விடுவீர்கள். பூங்கொடிக்கு இன்று பிறந்த நாள்.பதினெட்டு முடிகிறது. கண்டதும் ...
மேலும் கதையை படிக்க...
அவர் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது. தங்கமாமா என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். எனக்கும் அப்படித்தான் தெரியும். வயசு சுமார் 65 இருக்கும். மத்ய ஸர்காரில் பெரிய உத்யோகத்தில் இருந்து ஒய்வு பெற்றவர். அவர் எனக்கு என்ன உறவென்று தெரியாது. Infact உறவா என்றே ...
மேலும் கதையை படிக்க...
நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப்போறேன். நான் யாரு? கதை சொல்றவன்னு வச்சுக்கோங்க. அப்ப நீயும் இதக் கதைல வரியான்னு நீங்க கேட்டா இல்லைங்கறது தான் என் பதில். நான் கதாபாத்திரம் இல்லை ஜஸ்ட் எ ஸ்டோரி டெல்லர். இந்தக் கதைல ரொம்ப ...
மேலும் கதையை படிக்க...
“தலைல அடி பட்டிருக்கு ; அபாயம் தாண்டினாலும் ட்ரீட்மென்டுக்கு கவர்மென்ட் ஆசுபத்திரி சரியில்லை. ப்ரைவேட் தான் போகணும். ஒரு லட்சம் வரைக்கும் செலவாகும்” டாக்டரின் பேச்சு இடி போல இறங்கியது பூங்காவனத்தின் காதுகளில். ஒரு லட்சம்! பணம் என்றதும் சேட் சோஹன்லால் தான் ...
மேலும் கதையை படிக்க...
சுஜா
கூரியரில் வந்த மரணம்
தங்கமாமா
கானல் நீர்
பூங்காவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)