கவிதைகளைச் சுமந்து திரிபவள்

 

பெர்லினில் பத்துக்குமேற்பட்ட தரை அங்காடிகள் உள்ளன. அநேகமாக அவை வாரவிடுமுறைகளிலேயே கூடும், அவற்றின் சிறப்பு என்னவென்றால் ஜெர்மனியர்கள் சிறிதுகாலமே தாம்பாவித்த மிதியுந்து, தையலியந்திரம், விசிறி, கிறைன்டர்/மிக்ஸிபோன்ற வீட்டுமின்சார உபகரணங்களையும், சி.டி பிளேயர்கள், கணினிகளையும். கொண்டுவந்து அங்கே விற்பார்கள். சிலவேளைகளில் மிகமலிவாக அவற்றை வாங்கிக்கொண்டுவிடலாம். சில விலையுயர்ந்த வெண்கலம், Porceline இல் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் ஓவியங்களையும், கிராமபோன், நிறைவைப்பதால் இயங்கும் புராதன சுவர்க்கடிகாரங்கள்போன்ற Antique பொருட்களையும், கமராக்கள், தொலைநோக்கிகள், நிலைக்கண்ணாடிகள், வெள்ளியாபரணங்களையும், குளிராடைகளையும், பயணப்பொதியுறைகள் (Suitcases), இறகுவைத்த தொப்பிகளையுங்கூட அங்கேகொண்டுவந்து விற்பார்கள். எனக்கு அங்கே பொருட்கள் ஏதாவது வாங்கவேண்டுமோ இல்லையோ காலநிலை சுமுகமானதாகவிருந்தால் சும்மாவாகினும் ஒருநடைபோய் என்னவெல்லாம் பொருட்கள் வந்திருக்கின்றனவென்று சுற்றிப் பார்த்துவருவது எனக்கொரு உவப்பான பொழுதுபோக்கு.

அங்கேபோனால் காம்பிங் வகையிலான கரவன் வாகனத்தில் நடமாடும் கடைவைத்திருப்பவரும் எனக்கு எப்போதும் ஸ்நேகமாக முகமன் சொல்லும் ஒரு சமையற்கலைஞரிடம் ஒரு Boulette யும், உருளைகிழங்கு வறுவலும், காப்பியும் சாப்பிடுவது வழக்கம். மேலே படத்திலுள்ள Boulette (Meatball) எனும் உணவு (இதன் மூலம் French) இறைச்சியின் துருவலோடு (மாடு, பன்றி இரண்டிலுமுண்டு) வெங்காயத்துருவல் செல்லறித்துருவல், மிளகு, சிறிதளவில் உருளைக்கிழங்குஅவல் (Flake), முட்டை, பால், றஸ்க்தூள் சேர்த்து மசாலவடைபோலத்தட்டி எண்ணெயுள் அமுக்கிப்பொரித்து அல்லது தணலில் வாட்டுவதால் செய்யப்படும் ஒருவகை உணவு. சூடாக கெட்சப் (Ketchup) / Barbecue Sauce அல்லது கடுகு விழுதுடன் பரிமாறப்படுவது. இரண்டு Boulette களில் 400 கலோரிகள்வரையுண்டாதலால் ஒரு சாப்பாட்டுவேளையைக் கடத்திவிடவல்லது.

இக்கதையொன்றும் Boulette பற்றியதல்ல. சென்ற ஞாயிறன்று பெர்லினில் Wilmersdorf எனும் இடத்திலுள்ள தரை அங்காடிக்குச்சென்று ஒரு வட்டமடித்ததில் சில LED மின்விளக்குகள் மட்டுமே வாங்கமுடிந்தது. களைப்பாக இருக்கவும் எனது சமையற்கலைஞரிடம் எனக்கான Boulette யையும் உருளைக்கிழங்கு வறுவலையும் காப்பியையும் வாங்கிக்கொண்டு அங்கே போடப்பட்டிருந்த வாங்குகளில் அமரலாமென்று வந்தேன். காலியாக இருந்த என் வாடிக்கையான வாங்கில் நான் அமரும் இடத்துக்கு எதிரில் ஒரு பெண்மணி அமர்ந்து ஒருகையில் நூலொன்றைப்பிடித்துச் சுவாரஸியமாக வாசித்தபடி மறு கையால் உருளைக்கிழங்கு வறுவலைக் குத்திச் சாப்பிட்டுக்கொண்டுமிருந்தார். அமருமுன் அவருக்குச் சம்பிரதாய முகமனைக்கூறிவிட்டுச் “இதிலே யாராவது அமரவிருக்கிறார்களா நான் அமரலாந்தானே….” என்று கேட்டேன். “Ja……Natürlich…….” (தாராளமாக) என்றவர் முகம் விகசித்தது. எனக்கு ’Guten appetit’ (Enjoy your meal) என்றார். நானும் பதிலுக்கு Guten appetit சொன்னேன்.

அவரது மேல் முரசின் வெட்டும்பற்கள் முயலினதைப்போல நீக்கலாக இருந்தன. எங்கள் அம்மா அடிக்கடி ’மேல்வாயில் நீக்கல்ப்பற்களுடைய மங்கையர்கள் மகராசிகள், அவர்களுக்கு வாழ்க்கையில் பணக்கஷ்டமே இருக்காது’ என்று சொல்வது ஞாபகத்துக்கு வந்தது. அம்மாது எதிரில் அமர்ந்திருந்தாலும் அவர் புத்தகத்தில் ஆழமாக மூழ்கியிருந்ததால் அவரது முகத்தைப்படிக்க எனக்கு வசதியாக இருந்தது. நாற்பது வயதுக்குள்ளாகத்தானிருக்கும். தளர்வான வெள்ளைநிற பான்டும் அதற்குப்பொருத்தமான கைகளை முழுவதும் மூடும் லேசான சித்திரத்தையல் செய்த மேற்சட்டையும் அணிந்திருந்தார். புத்தகம் வாசிப்பதை நிறுத்திவிட்டு “ Boulette ருசியாக உள்ளதா” என்று என்னை விசாரித்தார்.

“மிகவும் ருசியாகவுள்ளது, எப்போது நான் இங்கே வந்தாலும் இவரது Boulette ஐத்தவறவிடுவதே இல்லை ” என்றேன்.

“என் கணவருக்கும் Boulette மிகவும் பிடிக்கும், ஆனால் அவர் இப்போது என்னோடு இல்லை ” என்றார்.

“உங்களுக்கும் பிடிக்குமா….”

“நன்றாகப்பிடிக்கும்……ஆனால் நான் இப்போது 12 வருடங்களாகத் தீவிர வெஜிடேரியனாக (Vegan) மாறிவிட்டேன்…”

எனக்கு உங்களுடன் கணவர் இல்லாதது அவரது பிரிவாலா அல்லது இறப்பினாலா என்று கேட்கவேணும்போலிருந்தது, ஆனாலும் அப்போதுதான் சந்தித்த ஒருவரிடம் அதையெல்லாம் பேசுவது இங்கிதமல்லவென்று தயக்கமாக இருந்ததால் அதை உசாவவில்லை.

அவர் மீண்டும் வாசிக்கத்தொடங்கவும் அவர் படிக்கும் நாவலின் அட்டையை அவதானித்தேன், அதை எழுதியவர் Richard Pole என்று இருந்தது, என் சாமர்த்தியப்பேசியை எடுத்து Google இல் அந்தப்பெயரை உள்ளிட்டேன். அது முதலில் “….Oops!” என்றது. விட்டுவிடாமல் திரும்பத்திரும்ப அப்பெயரை உள்ளிட்டு நோண்டியதில் அவர் 1525 இல் இத்தாலியுடன் போரிட்டிறந்த மன்னன் Heinrich VII இன் தளபதி என்றது. இவ் எழுத்தாளரும் அமெரிக்கராகவோ ஆங்கிலேயராகவோதான் இருக்கவேண்டும். ஜெர்மன்காரராக இருந்தால் அப்பெயர் Reichelt Pohl என்று எழுதப்பட்டிருக்கும். ஒற்றைக்கேள்வியாக

“இது என்ன ஒரு அமெரிக்க நாவலின் மொழிபெயர்ப்பா” என்றேன்.

அப்போதுதான் பார்ப்பதுபோல நூலைத்திருப்பி அட்டையைப்பார்த்தவர் ” தெரியவில்லை இப்போதுதான் இவ்வங்காடியில்த்தான் வாங்கினேன்,” என்றவர் ஒரு கடையைச் சுட்டிக்காட்டி “ ஒரு இயூரோதான் வலு சுவாரஸியமாக இருக்கிறது,” என்று மென்னகைத்தார்.

“அதற்கிடையில் இத்தனை பக்கங்களை வாசித்துவிட்டீர்களே…நிச்சயம் அது சுவாரஸியமாகத்தான் இருக்கவேண்டும்”

“ஆமாம் 30 பக்கங்கள்வரை வந்துவிட்டேன்…பக்கங்கள் போனதே தெரியவில்லை.”

“உங்களின் வாசிப்பை நான் இடையீடுசெய்யவில்லையென்றால்…படித்தவரையில் நாவல் எதைப்பற்றியதென்று அனுமானிக்கமுடிந்ததா….”

“சொல்கிறேன்…… ஆனால் நீங்கள் என்று என்னைப் பன்மையில் விளிக்க வேண்டியதில்லை, நீ என்றே அழைக்கலாம்……… நாவலின் முதற்பகுதி ஒரு தபுதாரன் (Widower) பாத்திரம் அதுவே தன் புதிய ஸ்நேகிதியிடம் அல்லது ஃபியான்சீயிடம் (மணம்முடிக்க உத்தேசித்திருப்பவரிடம்) பேசுவதைப்போல எழுதப்பட்டிருக்கிறது. வேறெந்தப்பாத்திரமும் இன்னும் வெளிப்படவில்லை. அவர் இழந்துபோன மனைவி தன் மருத்துவச்செவிலிப்பணியிடையே என்மீதும் ஒரு குழந்தையைப்போல் எவ்வளவு அன்பு செலுத்தினாள், எங்கள் வீட்டை எவ்வளவு ஒழுங்காக சுத்தமாக வைத்திருந்தாள், படுக்கைகளையும், என் உடைகளையும் எவ்வளவு நேர்த்தியாகப் பேணினாள், ருசியாகச்சமைத்தாள், தனதொரு பேஷன்டைப்போல் என்னை எப்படியெல்லாம் கவனித்துப் பராமரித்தாள், அதற்கெல்லாம் நான் எந்தப்பிரதியுபாரமும் பண்ணச் சந்தர்ப்பம் அமையவில்லையே என்ற தன் ஆதங்கத்தைப் பச்சாதாபவுணர்வுகளைக் கொட்டிச்செல்கிறார்” என்றவர் நிறுத்தி

”நான்கூட ஒரு விதவைதான்…இந்நாவல்…என்னை அதிகமாக ஈர்ப்பதற்கு அதுகூட ஒருகாரணமாக இருக்கலாம் தெரியவில்லை” என்றுவிட்டு மீண்டும் மென்னகைத்தார், ஆனால் இப்போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. டிஸுவை நாசூக்காக எடுத்துக் கண்களை ஒத்திவிட்டு

“நூலில் இத்தனை ஆர்வங்காட்டுகிறீர்களே…. நீங்களும் நிறைய வாசிப்பீர்களோ” என்றார்.

“கொஞ்சம் வாசிப்பேன், அப்பப்ப கொஞ்சம் கவிதைகளும், கதைகளுங்கூட எழுதுவதுண்டு.”

“வாவ்…என்ன மொழியில் எழுதுவீர்கள்…?”

“நான் ஜெர்மனிலோ, ஆங்கிலத்திலோ எழுதவிழைந்தால் அதற்குள் என் வலிந்த முயற்சி தெரியவரும். எனக்கு எழுத இயல்பானது, லாவகமானது எனது தாய்மொழியான தமிழ்தான்…….. ஆக என் கவிதைக்கிறுக்கல்கள் விளையாட்டுக்கள் எல்லாம் அதிலேதான்.”

“ம்ம்ம்ம் interesting, அடடே…இவ்வளவும் நான் ஒரு கவிஞருடன் / எழுத்தாளருடன் அரட்டையடிக்கிறேன் என்பது தெரியாமற்போச்சே…….” என்றுவிட்டு ஒரு கையை உயர்த்தி எனக்கொரு ’சலாம்’ வைத்தார்.

‘தனக்கு இதுவரை யாருமே தொட்டுப்பாராத புதியவிடயமான ஆணாதிக்கம் மீதான Simone de Beauvoir இன் எழுத்து முறைமையும், Wallace Fowlie இன் பாசாங்கற்ற நேரடியான எளிமையான எழுத்துக்களும் பிடிக்கும்’ என்றார். பாசாங்குகள் எதற்கு….. ‘எனக்கு Wallace Fowlie இன் படைப்புகள்பற்றித் தெரியவில்லை’ என்பதைச்சொன்னேன்.

பிறகு நாங்கள் Hermann Edith, Hermann Hesse பற்றியெல்லாம் பேசினோம்.

“எனக்குள்ளேயும் நிறையக் கவிதைகள் தினந்தினம் ஜனிக்கும். ஆனால் எனக்குத்தான் அவைகளை எப்படிக்கவிதையாகப் பிடித்துவிடுவது, வார்த்தைவயப்படுத்துவதென்று தெரியவில்லை,,…….. மொழியை இலாவகமாக வசைக்கப் பிரயோகிக்கவெல்லாம் நான் இன்னும் அதிகம் படித்திருக்கவேணுமோவென்றுந் தோணுது” என்றார்.

“என் பார்வையில் கவிதையென்பது நுண்ணுணர்வுடன்கூடிய துய்த்தலும், அவ்வனுபவத்தின் பதிவுந்தான், ஒரு கவிதை கடத்தக்கூடிய உணர்வின் கனம் அதன் அழகியலையெல்லாம் எங்கேயோ தள்ளிக்கொண்டுபோய் விட்டுவிடும். அதுக்கெல்லாம் பெரும்படிப்போ, பாண்டித்தியமோ, புலமையோவெல்லாம் வேண்டியதில்லை. நான் ஒரு குழந்தைகளுக்கான எளிமையான பாடலையோ, சுவாரஸியமாக ஒரு இலிகிதத்தையோகூட எழுதவராத பேராசிரியர்களைப் பார்த்திருக்கிறேன், கல்வி ஓரளவுக்குத்தான் படைப்பில்க் கைகொடுக்கும்.”

“நீங்கள் இதில வந்து அமரமுதல்க்கூட எனக்கொரு கவிதை தோன்றிச்சு”.

“சொல்லுங்கோ சொல்லுங்கோ…” என்று அவரை உற்சாகப்படுத்தினேன்.

”அது வேறொன்றுமல்ல நாங்கள் அமர்ந்திருக்கிற இந்த மேசையை ஊன்றிப்பார்த்தபோது வந்ததுதான்”

அதை அவர்பாணியில் இன்னும் விபரிக்கட்டுமேயென்று நான் மௌனம் காத்தேன்.

“இந்த மேசை இருக்கிறதே, இதில காலையிலயிருந்து யாரும் அமர்ந்ததாகத் தெரியவில்லை, சிலர் இந்த சாதாரண மரமேசை அது தாம் அமர லாயக்கில்லையென்பதுமாதிரி அலட்சியமாக விலகிப்போனார்கள். இவ் வசந்தத்தின் மிதமான சூரியஒளியில் காய்ந்துகொண்டு காலியாக இருந்த இம்மேசையில் முதலில் நான்தான் வந்தமர்ந்தேன், பின்னர் நீங்களும் சேர்ந்துகொண்டீர்கள். நாங்கள் நாவல் பற்றிப்பேசினோம், நான் என் வாழ்க்கை பற்றிப்பேசியதால் அதிலும் சிறிய பின்னத்தை இது தெரிந்துகொண்டது. இன்னும் எனக்கு என்ன பெயரென்றோ, உங்களுக்கு என்ன பெயரென்றோ இதுக்குத் தெரியாது, எங்களுக்கு பதிலாக இரண்டு வணிகர் வந்தமர்ந்திருந்தாலோ, இரண்டு மாபியாக்காரர்கள் வந்திருந்தாலோ அவர்கள் அவர்கள் தம் தொழில்பற்றிப் பேசியிருப்பார்கள். சிலரது வியாபாரம் இதன்மேலே பொருந்தி வந்திருக்கும், சிலரது முறிந்துபோயிருக்கும். சிலர் நஷ்டப்பட்டிருப்பார்கள். சிலர் லாபமடந்திருப்பார்கள், ஒரு காதல் ஜோடி வந்தமர்ந்திருந்தால் அவர்கள் பேசிய பொய்கள் அனைத்தையும் இதுவும் கேட்டிருக்கும். ஒரு உதவாக்கரையோ (Punk), பொருட்பெண்ணோகூட அமர்ந்திருக்கலாம், ஒரு நாஜியோ, Illuminati யோகூட அமர்ந்திருக்கலாம். மனிதர்களின் பாரத்தை மட்டுமல்ல அவர்களின் கதைகள் / இரகசியங்கள் / பொய்கள் / கோக்குமாக்குகள் / தகிடு தத்தங்கள் / ஏமாற்றங்கள் / காழ்ப்புகள் / குழிபறிப்புகள் / உபச்சாரங்கள் / அன்பு / கருணை / உல்லாசம் இவற்றையெல்லாம் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நீயும் கேட்டுக்கேட்டுச் சுமப்பாய் என்றெல்லாம் எனக்கு அதைக் கேட்கத்தோன்றுகிறது. இதெல்லாம் கவிதைக்குள் வருமா சொல்லுங்கள் மெஸுயூ…” என்றுவிட்டு என் முகத்தைப் பார்த்தார்.

“அந்த நாவலில் வரும் பாத்திரம் தன் மனைவியப்பற்றிச் சொன்னதைப்போல இந்த மேசையிடம் நீங்கள் கேட்கவிரும்பிய அனைத்தையும் ஒரு பிரியமான நண்பியிடம் கேட்பதைப்போல ஒரு இலிகிதமாக எழுதுங்கள் அற்புதமான கவிதையாக வரும்” என்றபடி எழுந்தேன்.

”உங்களைச் சந்தித்தபிறகுகூட என்னுள் ஒரு கவிதை மாதிரி ஒன்று வந்ததே….”

“எப்படி…”

“அது உங்களுக்குச் சுவாரஸியமாயிருக்குமோ தெரியவில்லை. ஆனால் இப்படித்தான் அது…

தூரத்தில் உங்களை அரஃபாத் சால்வையுடன் கண்டபோது நீங்கள் ஒரு தீவிர அரபிய இஸ்லாமியராக இருப்பீர்களோவென நினைத்தது மனம்.
பின் Boulette வங்கியபோது இல்லை இஸ்லாமியராக இருக்காது என்று மறுத்தது.
இந்த மேசையில் நான்மட்டும் இருப்பதால் நீங்கள் வேறெங்காவது போவீர்களென்று……
நீங்கள் இம்மேசை நோக்கித்திரும்பியபோது என்னைக் கண்டுக்காமல் முகமன் சொல்லாமல் அமர்வீர்களென்று…….
அமர்ந்தபின்னாலும் எதுவும் என்னிடம் எதுவும் பேச மாட்டீர்களென்று……
அப்படித்தான் பேசினாலும் அது சிகரெட்லைட்டரிருக்கா என்பதைப்போலத்தானிருக்குமென்று…….
நிச்சயம் என்ன நூல்படிக்கிறேனென்று விசாரிக்க மாட்டீர்களென்று…
பின் நூலைப்பற்றிப் பேசியபோதினில் ஒரு கவிதைக்காரனாக இருக்கமாட்டீர்களென்று…..
யோசித்த விவேகமற்ற என் தவளை மனமே
உன்னோடுகூடி வாழ்தலரிது

என்றொரு கவிதை எனக்குள் பொறித்தது” என்று புன்னகைத்தார். அவர் பேசிய தோரணையிலும், வார்த்தைகளை உச்சரித்த விதத்திலும் அவரிடம் இன்னும் விடைபெறாத, உலர்ந்துபோகாத ஈரமான ஒரு குழந்தைமையும், ஒரு பித்துமனநிலையும் இருப்பது தெரிந்தது.

ஒரு பித்து மனநிலைதான் படைப்புக்கானது. அதில்த்தான் மாற்றுச் சிந்தனைகளும் கவிதைகளும் ஜனிக்கும்.

“எதையும் எழுத்தில் வடித்தால்த்தான் கவிதையா, வார்த்தை வயப்படாவிட்டாலும், மனசோடு எண்ணங்களாய் வாழ்ந்திருப்பவையும் கவிதைகள்தான்.”

“கூடவே உங்களோடான இன்றைய சந்திப்பின் அனுபவங்களும் நினைவுகளும் மேலும் சில கவிதைகளாகப் பொறிக்கலாம்” என்றார்.

பேச்சின் சுவாரஸியத்திடையே மேகங்களின் மேலிருந்த பொழுது சாய்ந்துவழுக்கத் தொடங்கவும் யாம் விடைபெற்றோம். அங்காடியில் அன்று எனக்குக் கனதியான ஒரு கவிதைநூல் கிடைத்ததைப் போலிருந்தது.

- 28.03.2020 – ஞானம் சஞ்சிகை – இதழ் 264 பெப்ரவரி 2022 

தொடர்புடைய சிறுகதைகள்
சுன்னாகம் பேருந்துத்தரிப்புநிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சாவகச்சேரிக்குப்புறப்படும்வீதி, புத்தூர்க்கிராமத்துள் நுழைந்து நீண்ட வயல்வெளிகளைத்தாண்டி ‘நாவாங்களி’ ‘தனது‘ எனப்படும் இரண்டு கடலேரிகளை இணைக்கும் ஊரணிகண்மாய்மேல் சென்று ஏழெட்டுக்குடியிருப்புக்கள் அடர்த்தியான தென்னைமரங்களும்கொண்டு தனித்த ஒரு தீவைப்போலிருக்கும் அந்திரானைத்திடலையுந் தாண்டித்தொடர்கிறது. ஊரணிக்கண்மாயிலிருந்து வடக்கே பார்க்கும்பொழுது வயல்வெளிகளுக்குப் பின்னால் தனது ...
மேலும் கதையை படிக்க...
இலக்கியச்சந்திப்பொன்றில் ஒருமுறை ஒரு பெண் எழுத்தாளர் (பெண்ணியவாதி) "பொதுவாக இந்த ஆண் எழுத்தாளப் பிசாசுகள் பெண்களை வர்ணித்து மாயிறதிலேயே தங்கள் சக்தியிலே பாதியை விரயம் பண்றாங்கள். நீங்களே பாருங்கள் நாங்கள் ஆண்களையோ இல்லை பெண்களையோ வர்ணித்து எழுதிக்கொண்டா இருக்கிறோம்" என்று எகிறிக்குதித்தார். சபையில் ...
மேலும் கதையை படிக்க...
நேற்று முழுவதும் வந்திருந்து முற்றத்தைத் தேய்த்து ஓராறு கண்ணீர் ஊற்றிவிட்டுப்போன அந்த நடுவயதுத் தம்பதி இன்றும் வந்திருந்து அரற்றினர். “ ஐயோ ஐயா உங்களைத்தான் நம்பியிருக்கிறம். யாரோ நாதாரியள் எங்கட பிள்ளை பார்த்தனன்தான் செம்மியனைப் போட்டவன் என்று கொடுத்த அநியாயத்தகவலால்………. அவனை ...
மேலும் கதையை படிக்க...
இந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான். தரையெங்கும் திட்டுதிட்டாக இரத்தமும், இறைச்சியும், எலும்புத் துகள்களும் பறந்திருந்தன. “ஏன் உள்ள வைச்சுத்தான் வெட்டிறதுக்கென்ன?”என்றேன். “சுவர் பழுதாகிவிடாதா.......?” என்று பதில் கேள்வி ...
மேலும் கதையை படிக்க...
அன்று Herzogin-Luisehaus என்கிற அம் முதியவர்கள் இல்லத்துக்குப் போயிருந்தேன். அவர்களோடு நட்பாகப்பேசி, அவர்களின் குறைகளைக்கேட்டு அவற்றுக்கு ஆவன செய்யவேண்டியதுதான் என் ஊழியம். அவர்களின் பிரச்சனை என் இயலுமைக்கும் மேற்பட்டதென்றால் மேலிடத்துக்குத் தெரிவிக்கவேண்டும். அன்றைய நாளில் நான் கவனிக்க வேண்டியிருந்தவர் எனக்குப் புதியவரல்ல. 72 ...
மேலும் கதையை படிக்க...
அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப் போர்வை தந்த கதகதப்பில்; பாவனி பூனைக்குட்டியைப்போல் பக்கத்தில் முடங்கித் தூங்கிக்கொண்டிருக்கிறாள். படுக்கைஅறை போன் உறுத்தாமல் கூக்காட்டுகிறது. அதற்குள் விடிந்துவிட்டதா என்ற ...
மேலும் கதையை படிக்க...
‘அண்ணே ஜெனிஃபர் உங்களைக்கண்டுதான் பம்முறாள், ஆனால் ஆள் சரியான வியாழி தெரியுமோ……….. தெரியாமல் வாயைக்கொடுத்திட்டால் ஊரே அதிர்றமாதிரிக் கெட்ட கெட்ட பாஷைகளாய் எடுத்துவிடுவாள்’ என்றனர் நண்பர்கள். வியாழியானவர் :> 70, 80களில் கீரிமலையில் தன் ரௌடி குமாரர்களுடன் சாராயவாணிபத்தில் கொழித்திருந்த ஒரு ...
மேலும் கதையை படிக்க...
1. மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள். உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும் பொன்மஞ்சளாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். எம்பாதையில் மண்குளித்து விளையாடிக்கொண்டிருந்த ...
மேலும் கதையை படிக்க...
ஐந்துமணிவரையில் யாழ்நகரை வெதுப்பிக்கொண்டிருந்த வெயிலோன் ஐந்தரையாகவும் இன்றைக்கு ஊழியம்போதுமென்று நினைத்தவன்போல் மரங்கள் கட்டிடங்களின் பின்னால் கடலைநோக்கிச் சரிந்திறங்க ஆரம்பித்திருந்தான், தேய்ந்த ஓவியங்கள்போல வானத்தில் சில ஓவியங்கள் தோன்றத்தொடங்கியவேளை. எனக்குத்தெரிந்த அந்த மனிதர் மின்சாரநிலையவீதியில் வடக்குமுகமாகச் சென்றுகொண்டிருப்பதைக் கண்டேன். நீங்கள் மலையாளப்படங்களுக்கு பரிச்சயமான நடுவயதுக்காரரயிருந்தால் ...
மேலும் கதையை படிக்க...
ஜெகன் ஆகப்பட்ட இந்த இளைஞனுடைய இயற்கையை நெருங்கிப் பார்த்தால் ஒரு சமகாலச் சராசரி இளைஞனின்றும் வேறுபட்ட ஒரு ஆதர்ஸன், இலட்சியன் என்ற வகைக்குள் வரமாட்டான். புதுசுகளில் ஆர்வம், வர்ணங்களால் ஈர்க்கப்படுதல், சினிமாமேல் விமர்சனங்களற்ற கவர்ச்சி, நடிகைகள் ஆராதனை, அவர்களின் அணுக்கத்தில் ஆனந்தபரவசமடைதல், ...
மேலும் கதையை படிக்க...
நிதி சாலசுகமா….?
வடிவான கண்ணுள்ள பெண்
காணாமற்போனவர்கள்
பகையே ஆயினும்…
ஒரு வீட்டுக்கு இரண்டு கிழவிகள் அதிகம்
கதறீனா
பச்சைத்தேவதையின் கொலுசுகள்
பால்வீதி!
பெயர் தெரியாத மனிதன்
ஸோபிதாவுக்கு பெர்லின் காட்டுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)