கரிசல் காட்டு காதல் கதைகள்! – 8

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 9,665 
 

புதுப் பணக்காரங்க!

‘‘ஏலேய் ராசாமணி, உனக்கு இந்த வருசம் கல்யாணத்த முடிச்சிருவோமின்னு ஆத்தாளும், நானும் நெனச்சிருக்கோம். நீ என்னடா சொல்லுதே?’’னு கேட்டதும், ராசாமணி அவசரமா சொன்னான்…

‘‘எய்யா, எனக்கு கல்யாணம் முடிக்க சம்மதம். ஆனா, பொண்ணு, கிண்ணுன்னு யாரயும் பாத்துராதீக. ஏன்னா, நானே எனக்கு பொண்ணு பாத்துக்கிட்டேன்.’’

ராசாமணி இப்படி சொன்னதும் அவனோட அய்யா தன்னிக்கொடிக்கு ஆச்சர்யமா இருந்துது. ‘‘அப்படி யாரடா பாத்து வச்சிட்டே?’’னு கேட்க, அவனும், ‘‘நம்ம கோவிந்தன் மாமா மவ கஸ்தூரி இருக்கால… அவளத்தேன் நானு கட்டிக்கப் போறேன்’’னான்.

அவன் ஆத்தா அலமேலுவால அதுக்கு மேலயும் சும்மா உட்கார்ந்திருக்க முடியல. ஓடி வந்து மகனை ஆசையோடு நெட்டி முறிச்சா. ‘‘நெசமாத்தானா கண்ணு சொல்லுதே? எதுக்கு கேக்கேன்னா, அவுக நம்மளவிட வசதியானவக. அரை குருக்கம் (ஏக்கர்) காடு இருக்கு. மாட்டுக்கு கொட்டம் போட, குப்பை போடன்னு வீட்டுக்கு பெறத்தால கொல்லை இருக்கு. வீடும் ஓடு போட்ட வீடு. நமக்கு பனை ஓலை வேஞ்ச குடிசயத் தவுத்து ஒண்ணுமே இல்லயே. அவ எப்படி உனக்கு வாக்கப்பட சம்மதிச்சா?’’

ராசாமணி அலட்சியமா சொன்னான்… ‘‘போத்தா போ. நானும் அவளும் ஆறு மாசமா பழகிக்கிட்டு இருக்கோம். அவ கஞ்சிய நாங் குடிக்க, எங் கஞ்சிய அவ குடிக்கன்னு உள்ளங்கை, பொறங்கையா பழகிட் டோம் ஆத்தா. அவ அப்பன் என்ன கட்டிக்க வேண் டான்னாலும், அவ உசுர மாச்சாலும் மாய்ப்பாளே தவுத்து… என்ன தவுத்து வேற ஒருத்தனுக்கு கழுத்த நீட்டி தாலிய வாங்க மாட்டா.’’

‘‘அய்யா என் ராசா! எந்தச் சாமி புண்ணியமோ இம்புட்டு செல்வாக்கான பொண்ணு உனக்கு கெடச்சிருக்கு. அவகிட்ட சொல்லி வையி. இந்த மாசம் கடைசிலேயே பூவும் வச்சு கல்யாணத்துக்கு நாளும் குறிச்சிருவோம்!’’னு சொன்னா அலமேலு. அவ முகம் சந்தோசத்துல பூரிச்சு கெடந்துச்சு.

அப்போதான் ராசாமணியோட உறவுக்காரன் காளிமுத்து வந்து நின்னான்.

‘‘என்னடா, எப்ப வந்தே?’’னு அலமேலு கேட்டு முடிக்கறதுக்குள்ள, காளிமுத்து கமறிய குரல்ல சொன்னான்…

‘‘ஆத்தா, உன் மச்சான் செத்துப் போனாரு. அவருக்கு புள்ள, குட்டின்னு எதுவும் இல்லையாங்காட்டி ராசாமணிதேன் கொள்ளி வைக்கணும். அதுக்காவத்தேன் எல்லாரும் காத்துக்கிட்டு இருக்காக.’’

அலமேலு வெடுவெடுத்தாள். ‘‘அவன் எங்களுக்கு ஆவாதவன். எம்புள்ள கொள்ளி வைக்க வர மாட்டான்.’’

‘‘ரொம்ப நல்லதா போச்சி, ஆத்தா! ரெண்டு ஏக்கரு வயலு, நாலு குருக்கம் பிஞ்ச, இருவது முப்பதாயிரம்னு கோடி சொத்து சேத்து வச்சிருக்காரு. நானு கொள்ளி வச்சி அனுபவிச்சிட்டுப் போறேன்!’’னு காளிமுத்து சொல்லவும், பதறிப்போய் புருசனையும், புள்ளையையும் கையோட இழுத்துக்கிட்டு ஊருக்கு கிளம்பிட்டா அலமேலு.

இப்போ ராசாமணி பெரிய பணக்காரனாகிட்டான். அவனுக்கு பொண்ணு கொடுக்க பெரிய இடங்கள்லருந் தெல்லாம் ‘நானு, நீ’னு போட்டி போட்டுக்கிட்டு வந்தாங்க.

அலமேலு சொன்னா… ‘‘எலே ராசா! கஸ்தூரியக் கட்டப் போறேன், கிஸ்தூரியக் கட்டப் போறேன்னு பேவண்ட (பைத்தியம்) தனமா அலையாத. உன் பெரியப்பன் புண்ணியத்துல நாம இப்ப பணக்காரகளா, ஊருக்கே மொதத் தரமா பொழைக்கோம். நம்ம மாதிரி பெரிய பணக்காரக வீட்டுலதேன் பொண்ணு எடுக்கணுமே தவுத்து… எளியவ, எளச்சவ வீட்டுல பொண்ணு எடுக்கக் கூடாது. அய்யா உனக்கு வேற ஒரு பொண்ணப் பாத்துக்கிட்டு இருக்காரு. நீ கஸ்தூரிய உங் கெனாவுலயும் நெனச்சிராதே’’னு சொல்லவும், சந்தோசமா தலையை ஆட்டினான் ராசாமணி.

ராசாமணிக்கு வேற ஒரு பொண்ணு பாக்காகளாம்னு கேள்விப்பட்டதுமே, அண்டா நெருப்பை அடிவயித்துக்கு உள்ள கட்டினதுபோல துடிச்சுப் போனா கஸ்தூரி.

அன்னம், தண்ணியில்லாம தலைவிரி கோலமாக படுக்கையில துவண்டு கிடக்கற மகளைப் பார்த்து பதறிப் போனாரு அவளோட அய்யா கோவிந்தன். பிறகு கெஞ்சி, கெதறி விவரத்தை கேட்டதும் திடுக்கிட்டுப் போனாரு.

கோவிந்தன் தன் மகளுக்காக தன்னிக் கொடிகிட்ட போய் எவ்வளவோ கெஞ்சி கதற, தன்னிக்கொடி கெம்பிதத்தோடு (கர்வம்) சொன்னாரு… ‘‘எம்மவன் ஆயிரம் பேர் கூட பழகுவான். அவளயெல்லாம் எம்மவனுக்கு கட்டி வைக்க முடியுமா?’’

ராசாமணிகிட்ட கெஞ்சினப்ப, அவன் எங்கியோ பார்த்துக்கிட்டு சொன்னான்… ‘‘கஸ்தூரியா? அப்படி ஒரு பேரோட இந்த ஊர்ல ஒரு பொம்பள இருக்காளா? இம்புட்டு நாளும் எனக்கு தெரியவே தெரியாதே!’’

இதுக்குப் பெறவும் அவுக கிட்ட கெஞ்சுறதில எந்த புண்ணியமும் இல்லனு நினைச்ச கஸ்தூரியோட அய்யா, ஊர் நாட்டாமையைத் தேடிப் போனாரு.

ஊர் கூடிடுச்சு. ‘‘என்ன தன்னிக்கொடி, பணம் இன்னிக்கு வரும், நாளைக்குப் போகும். கஸ்தூரி உம் மவன நினச்சி அரச் சீவனா கெடக்கா. ரெண்டு பேரும் ஆறுமாசமா ஒண்ணா, மண்ணா பழகி இருக்காக. கண்ணால பாத்த சாட்சி இருக்கு. பேசாம உம் மவனுக்கு அவளயே கட்டி வய்யி’’னு நாட்டாமை சொன்னதும், புது பணக்கார தோற்றத்துல தன்னிக்கொடி கூட்டத்தை அலட்சியமாகப் பார்த்தாரு. பக்கத்துல காதுல தங்கப் பாம்படம் மின்ன அலமேலு நிக்க, அவ பக்கத்துல ராசாமணி. கையில புது வாட்சு. இடுப்புல பட்டுக் கரை வேட்டி!

‘‘என்ன தன்னிக்கொடி, நான் கேட்டுக்கிட்டு இருக்கேன். நீ உம் பாட்டுக்கு நின்னுக்கிட்டு இருந்தா எப்படி?’’னு நாட்டாமை கேட்டதும், தன்னிக்கொடி சொன்னாரு… ‘‘சரி நீங்கள்ல்லாம் சொல்றதுனால நானு ஒரு முடிவுக்கு வந்துட் டேன்.’’

‘‘என்ன முடிவு? விட்டுச் சொல்லு.’’

‘‘கஸ்தூரி எம்மவனுக்கு வாக்குப்படணுமின்னா அவ இந்த ராக்குலயே ராமாயணக் கதையவும், மகாபாரதக் கதையவும் சொல்லணும். அதுவும் எந் தலைப்பாகைய அவுத்து உசக்க விட்டெறிவேன். அது திரும்பவும் என் கைக்கு வர்றதுக்குள்ள சொல்லணும்’’னு சொன்னதும், நாட்டாமை திகைச்சுப் போய் கஸ்தூரியைப் பார்க்க, அவ சம்மதமா தலையை ஆட்டினா.

தன்னிக்கொடி தலைப்பாகை அவிழ்த்து உசரே எறிஞ்சபோது ‘‘பெண்ணால கெட்டான் ராவணன், மண்ணால கெட்டான் துரியோதனன். நீ புது பணத்தால கெட்டே’’னு படார் படார்னு சொல்லிட்டு கூட்டத்தை விட்டு வெளியே நடந்தா கஸ்தூரி.

– ஏப்ரல் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *