கரிசல் காட்டு காதல் கதைகள்! – 1

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்  
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 12,608 
 

அம்மான் மகன் மகேந்திரன் முடுக்க, கேப்பைக் கருதின் வரப்பினூடே ஓடினாள் செங்கா.

‘‘இந்த சில்லாவில நீ எந்த மூலைக்கு ஓடிருவே?’’ என்று கேட்டவாறே மகேந்திரன் அவளை விரட்டிக்கொண்டு வந்தான். சின்னஞ்சிறுசுகள்! எங்கும் சந்தோஷம் பூத்துக் கிடந்தது. வரப்பின் மேல் தன் கட்டுப்பாட்டை கடந்து ஒரு மொச்சிக் கொடி வீசிக் கிடக்க, கொடி தட்டி செங்கா குப்புற விழுந்தாள். அவளை துரத்தி வந்த மகேந்திரனும் எதிர்பாராமல் விழ, பட்ட பகலிலேயே குளிர்ந்த நிலவு அவர்களை பதிவு செய்து கொண்டது.

பவுனுதாயிக்கு கோபம் அண்டகாரமாக முட்டியது. மகள் செங்காவை எரிச்சலோடு ஏற, இறங்கப் பார்த்தாள்.

‘‘ஏண்டி, நானு கேள்விப்பட்டதெல்லாம் நெசந்தானா?’’

மகேந்திரனின் நினைவுகளில் மூழ்கிக் கிடந்த செங்காவுக்கு அதைவிட எரிச்சல்… ‘‘அப்படி என்னத்ததேன் கேள்விப்பட்டுட்டே?’’

‘‘அந்த மகேந்திரன் கூட சிரிச்சிப் பொரண்டு வெளயாண்டயாமே…’’

செங்காவுக்கு திக்கென்றது. ஆனாலும், ‘‘நீதானத்தா சொல்லுவே… கம்மங்கருதக் கண்டா கையிருக்காது, அம்மான் மவனக் கண்டா வாயிருக்காதுன்னு. அது கணக்காத்தேன் சும்மா எடக்கும், எத்தாளமும் பேசி வெளயாடிக்கிட்டு இருந்தோம்!’’

‘‘இந்தா பாருடி. அம்மான் மவன், அயித்த மவன்னு அவன்கூட ஏதும் தட்டுப் பெறட்டான (தப்பான) உறவு வச்சிக்கிட்டயோ, நானு உன்ன பெத்த மவனுகூடப் பாக்க மாட்டேன். உன் கொதவளய (கழுத்து) முறிச்சி போட்டுருவேன்’’ என்று ஆத்தா சொன்னதைக் கேட்டு, கழுத்து அறுபட்ட கோழியாக துடித்துப் போனாள் செங்கா. வரப்புக் காட்டில் மகேந்திரனோடு திரிந்த நினைவுகள் நெஞ்சில் ரத்தக் கீறலாக வலியை கொடுத்தது.

‘‘ஆத்தா, நீ என்ன சொல்லுதே?’’

‘‘ஆமடி, நானு மூணு அண்ணங்க கூடப் பிறந்தாலும் மூத்தவன்தேன் எனக்கு சம்மந்தக்காரன். அவன் மகன் பரசுக்குத்தேன் உன்னக் கட்டி கொடுக்கப் போறேன். ஏன்னா, என் பொறந்த வீட்டுல நான்தேன் முதல் படி ஏறணும்!’’ என்று பவுனுதாயி சொல்லி முடிக்குமுன்பே,

‘‘என்னத்தா பவுனு. நானும் உன் கூடப் பொறந்தவன்தேன். என்ன மறந்து போயிட்டியா?’’ என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் அவள் இரண்டாவது அண்ணன் பெருமாளு.

பவுனு திகைத்துப் போனாள். ‘‘இல்லண்ணே..’’ என்றதும், குறுக்கிட்டார் பெருமாளு. ‘‘நீ என்ன செய்வயோ, ஏது செய்வயோ எனக்குத் தெரியாது. உம் மவ என் வீட்டுக்குத்தேன் மருமவளா வரா. ஏன்னா எம் மவன் அரி கட்டுனா உம் மவளத்தேன் கட்டுவேன்னு உறுதியா இருக்கான். ஒரு மகள வச்சிக்கிட்டு உன் கூடப் பிறந்த அண்ணந்தம்பிகள வெட்டு, குத்துக்கு ஆளாக்கிராதே’’ என்று சொன்னதும், வெருண்டு நின்றாள் பவுனு.

ஒரு பொண்ணுக்கு மூணு மாப்பிள்ளைகள் போட்டி போட்டார்கள். மூணு பேருமே உரிமை கொண்டவர்கள். மூத்தவன் வீட்டில்தான் சம்மந்தம் பண்ண வேண்டும் என்ற தன் ஆசையை வெளியே சொல்ல முடியாமல் பவுனு தவிக்க, மகேந்திரனை நெஞ்சில் சுமந்தவாறு வாய் பேச முடியாமல் மறுகினாள் செங்கா.

வழக்கம்போல் இந்த விவகாரம் ஊர் மக்களிடமும், ஊர் நாட்டாமையிடமும், போய்ச் சேர, நாட்டாமையே இந்த விஷயத்தில் தீர்ப்பு சொல்ல முடியாமல் திணறித்தான் போனார். ‘இது வாழ்க்கைப் பிரச்னை. சீட்டு எழுதிப் போட்டு தீர்மானிக்க முடியாது’ என்று நினைத்தவர், பவுனின் அண்ணன்கள் மூன்று பேரையும் அழைத்தார். ‘‘இந்தா பாருங்க. நீங்க மூணு பேருமே ஒரு பொண்ணுக்கு ஆசப்படுதீக. இது கொஞ்சம் சிக்கலான வழக்குதேன். அதனால நானு பாம்பும் சாவாம, பாம்ப அடிச்ச கம்பும் ஒடியாம ஒரு தீர்ப்பு சொல்லுதேன். அதுக்கு நீங்க சம்மதிக் கணும்’’ என்றதும் எல்லோரும் சம்மதித்தார்கள்.

‘‘செங்காவ கட்டிக்க ஆசப்படுற மூணு பேரும் ஆளுக்கு ஒரு நகய கொண்டாந்து அவளுக்குப் போடட்டும். ஒரு வருசம் வரைக்கும் அவ அந்த நகய போட்டு இருக்கட்டும். மறு வருசம் இதே நாளு இதே கூட்டத்த இங்கேயே கூட்டுறோம். அப்ப செங்காவுக்கு யாரு மேல பிரியம் இருக்கோ அவுக கொடுத்த நகய போட்டுக் கிட்டு மத்த ரெண்டுபேரு நகயவும் கழட்டிக் கொடுத்திருவா. அப்ப மத்த ரெண்டு பேரும் எந்த சடவும் சடைக்காம ஒத்துமையா இருந்து அவ விரும்புனவனுக்கு அவள கட்டி வைக்கிறீங்க. என்ன நானு சொல்லுறது சரிதானே?!’’ என்று கேட்டபோது, அவர்கள் மட்டுமல்ல… ஊர்க்காரங்களும் அதற்கு சம்மதித்தார்கள்.

பரசு பத்து சவரன் சங்கிலியை கொண்டுவந்து கொடுத்தான். பெருமாளு மகன் அரி தண்டட்டி, முடிச்சி, பாம்படம் என்று கை நிறைய அள்ளிக் கொடுக்க… மகேந்திரனோ தயங்கி, தயங்கி வந்தான். அவன் கையில் ஈயத்திலான மெட்டி இருந்தது.

அவன் குடும்பம் பெரிய குடும்பம். மரத்திலிருந்து விழுந்து முடமாகிப் போன அய்யா. வெள்ளந்தியான ஆத்தா. வயிற்றுப் பசியை போக்குவதற்கே அவன் தினமும் போராட வேண்டி இருந்ததால் அவனால் ஈய மெட்டிதான் வாங்க முடிந்தது.

மறு வருசம் மாயமாக வந்து சேர… அதே இடம், அதே ஊர் நாட்டாமையின் முன்னால் ஊர் மக்கள் கூடி இருக்க, செங்காவும் அவளைச் சேர்ந்தவர்களும் மையமாக நின்றிருந்தார்கள்.

கடந்த ஒரு வருசத்தில், செங்கா செம்மண்ணில் விளைந்த சீனிக்கிழங்கு போல மொழு, மொழுவென்று மாறியிருந்தாள். உடம்பு கூட கொஞ்சமாய் பூரித்து இருந்தது. நாட்டாமை அவளை கூப்பிட்டபோது குனிந்த தலையை நிமிராமலே வந்தாள்.

‘‘இந்தா பாரு செங்கா. போன வருசம் எடுத்த முடிவுக்குக் கட்டுப்பட்டுத்தேன் எல்லாரும் இங்கே வந்திருக்கோம். நீ யாரு மேல ஆசைப்படுறயோ அவுக போட்ட நகய மட்டும் கழட்ட வேண்டாம். மத்தவக போட்டத கழட்டி அவுக, அவுக கையில கொடுத்துரு’’ என்று நாட்டாமை சொன்னபோது, முதலில் கழுத்து சங்கிலியை கழட்டி பரசுவிடம் கொடுத்தாள் செங்கா. காது நகையை கழட்டி அரியிடம் கொடுத்தபோது கூட்டம் திகைத்துப் போனது.

பவுனு அடிக்காத குறையாக மகளிடம் சீறினாள். ‘‘ஏண்டி, உனக்கு மதிகிதி கெட்டுப் போச்சா? கடைசி மாமன் வாக்கிலியங்கெட்டு கிடக்கான். வெள்ளியில மெட்டி வாங்க வக்கத்து, ஈயத்தில வாங்கிக் கொடுத்திருக்கான். அவனுக்கா வாக்கப்படப் போறே?’’ என்றதும், செங்கா தன் செழித்த காலை கூட்டத்தாரிடம் காண்பித்தாள். மகேந்திரன் போட்ட மெட்டி அவனைப் போலவே அவள் விரலுக்குள் பதிந்து கிடந்தது. விரலை வெட்டினால் தவிர மெட்டியை கழட்ட முடியாது.

ஆத்தாளிடம் செங்கா சொன்னாள்… ‘‘ஆத்தா, விரல வெட்டித்தேன் மெட்டியக் கழட்டணும். எனக்கு விரல எழக்க மனசில்ல. அதனால, நானு மகேந்திரனுக்கே வாக்கப்பட்டுக்கிடுதேன்!’’ என்றதும், அங்கே பெண்களின் குலவைச் சத்தம் முழங்கியது.

– ஜனவரி 2006

Print Friendly, PDF & Email

1 thought on “கரிசல் காட்டு காதல் கதைகள்! – 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *