கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 18, 2012
பார்வையிட்டோர்: 15,607 
 

என் காலடியைத் தொடர்ந்த நிழல் பெருத்த உருவமாய் மாறி அப்படியே இருட்டோடு கலக்கத் தொடங்கியிருந்தது. அவ்வளவு தூரம் அந்தப் பொத்தையை நோக்கி நான் நடந்திருப்பேன் என்று நினைக்கவே இல்லை. என்னைச் சுற்றிலும் நினைவுகளின் அடர்த்தி அவ்வளவு திடமானதாகவும் உறைந்ததாகவும் வளர்ந்து இருந்தது. அதை சுய நினைவின்றியும் கவனமின்றியும் கடந்திருக்கிறேன். என்னை ஒரு பெண்ணாய் மட்டுமே நினைக்கச் செய்யும் எதையும் தொட்டுப் பார்ப்பது எனக்குச் சவாலாகவே இருந்தது. இந்தப் பொத்தையும் அப்படித்தான். அதன் திமிர்ந்த உருவம் என்னைத் தீண்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. மெல்லிய வியர்வை உடலின் மூலை முடுக்குகளிலெல்லாம் சுரந்திருந்தது. பொத்தையின் பருத்த காலடியில் ஒரு சிறு புல்லைப் போல் நின்று கொண்டிருந்த என்னை ஒரு மெல்லிய நூலிழைக் காற்று சுழன்று சென்றது. ஆசுவாசம் சில்லிட்டது.

மனோவுடனான உறவு நாளுக்கு நாள் கலவரமாயும் அசெளகரியமாயும் மாறிக் கொண்டிருந்தது. அவன் ஓயாத உளைவுகளுக்கு உள்ளாகி என் சிந்தனையையும் மூளையின் நரம்புகளையும் கூட அவன் கற்பனைகளின் வழியே பின் தொடரத் தொடங்கியிருந்தான். என்னை நிழலாகித் தொடரும் இருளைப்போல. தோப்பின் எல்லையில் இருக்கும் அந்தப் பாழடைந்திருந்த கிணற்றில் நீண்ட நேரம் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் போது இருப்பதைப் போலவே மாறி விட்டிருந்தது அவன் முகம். அந்தக் கிணற்றில் அவன் என்ன பார்க்கிறான் என்று நான் பலமுறை கேட்டதுண்டு. அவன் பாம்பு என்றும் ஆமை என்றும் அதன் அசைவுகள் அவனை வசீகரிக்கின்றன என்றும் கூறுவான். அவன் அந்தத் தோப்பின் மேற்கு மூலையை நோக்கி நகரும் போதெல்லாம் ஒரு நல்ல பாம்பு கனத்த தேகத்துடன் நிதானமான வேகத்துடன் கரையேறி நகர்வதைப் பார்த்தத்தாகக் கூறுவான்.

எங்கள் வீட்டை ஒரு பெரிய தோப்பும் வயலும் சூழ்ந்திருந்தது. வீட்டின் முன்புறம் இருந்த தோப்பு எங்கள் நிலத்தின் எல்லையை மறைத்திருந்தது. பின் பக்கம் இருந்த வயலோ நிலத்தின் எல்லையில் மடிந்து அங்கிருந்து தொடங்கும் மணற் பொத்தையையும் அதன் பரப்பில் ஆங்காங்கே ஒற்றையாய் முளைத்திருக்கும் மரங்களையும் ஓவியமாக்கியது. பின்புறம் நோக்கிய ஜன்னலின் அருகே அமர்ந்து பல மணி நேரங்கள் அசையாமல் அந்தப் பொத்தையையே ஆழமாய் உற்று நோக்கிக் கொண்டிருப்பேன். எப்பொழுதாவது அது ஒரு பெரு மூச்சு வாங்குவதைப்போல தோன்றும். அம்மூச்சின் போது அதன் உயரத்திலிருந்து மணல் சரிந்து விழும். அதன் பின்பு அதை ஒரு பெருங்காற்று சுழன்று வரும். அதன் மீது சூரியன் நடந்து நகரும் போது அதன் சுடுமணலிலிலிருந்து எழும் மூச்சில் நான் காய்ச்சலுறுவதைப் போல இருக்கும். ஜன்னலை சாத்தி விட்டு தோப்பை நோக்கிய வாசலில் வந்தமர்வேன். பொத்தையில் படர்ந்திருக்கும் வெறுமை தோப்பில் இருக்காது. ஆனால் மெளனம் அதன் மீது விழும் ஒளியையெல்லாம் அடக்கி வைக்கும் நிழலாய் பரவி இருக்கும். அங்கே இருக்கும் எல்லா மரங்களின் வளர்ச்சியும் துளிர்ப்பும் எனக்கு அத்துப் படி.

மரமோ செடியோ ஒரு பொழுதும் ஓய்வதில்லை. ஒரு பெரிய ஆலையைப் போல தொடர்ந்து இயங்கிக் கொண்டே தானிருக்கும். சூரியனையும் பூமியையும் தன் உழைப்புக்கு இணங்க வைக்கும். தன் உள்ளோடும் நரம்புகளின் வழியே குழாய்கள் வழியே ஒளியையும் நீரையும் மாறி மாறி உள்ளிழுத்து தன்னைத் தானே வளர்த்தெடுத்துக் கொள்ளும். ஆனால் மிருகங்களைப் போல மனிதர்களைப் போல தங்கள் உழைப்பைப் பட்ட வர்த்தனமாய் தாவரங்கள் காட்டிக் கொள்வதில்லை. அலட்டிக் கொள்வதில்லை. இப்படி நினைக்கும் போதே ஒரு மூர்க்கமான இயக்கத்திற்குக் கட்டுப்பட்டு இயங்கும் தாவரங்களின் குறுக்கு வெட்டுத் தோற்றம் எனக்கு நினைவுக்கு வந்தது. இல்லையெனில் நகக்கணு அளவே இருக்கும் மாம்பூ ஒன்று சில நாட்களிலேயே குழந்தை ஈன்றவளின் முலையைப் போல பருத்தும் கையில் அள்ளிக் கொள்ளவும் படியாகச் சுரந்து வளர்ந்து மதர்த்து நிற்பது எப்படி? நான் ஒரு செடியைப்போலவும் மரத்தைப் போலவும் இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பவளாய் இந்தத் தீராத தவிப்பில் இருக்க நேர்ந்தது ஒரு விந்தையாகவும் துரதிர்ஷ்டமாயும் எனக்குத் தோன்றியது. தோப்பிலிருந்த வேப்ப மரத்தில் இருந்து கிளிகள் பெரிய அளவில் உரையாடிக் கொண்டிருந்தன. நிழலின் குளிர்ச்சியில் அவை உறவாடத் தொடங்கியிருக்க வேண்டும்.

மனோவுடனான முதல் புணர்ச்சி என் தொடைகளின் உட்பகுதிகளில் வழிந்தோடிய உதிரக் கோடுகளாய் நினைவுக்கு வந்தது. புணர்ச்சியின் உச்சத்தில் கருமையான வெளியில் மலர்ந்த ஆயிரக் கணக்கான மல்லிகைகளைப் போல எனக்குள் நட்சத்திரங்கள் தெறித்துச் சிதறின. விடுமுறை நாளின் மதிய வேளையில் திறந்த வாயிற் கதவுகளுடன் அறையின் மத்தியில் விடாது புணர்ந்தோம். குருதி வழிந்தோடுவதற்கான வலியே தெரியாமல் மீண்டும் மீண்டும் நான் முயங்கிக் கிடந்தேன். மாம்பூக்கள் பூத்துக் குலுங்கிய நறுமணம் வீடெங்கும் பரவியிருந்தது. எப்பொழுது அந்த வாசனையை நுகரக் கிடைத்தாலும் ஒரு தீவிரமான புணர்ச்சிக்கான தாகமும் எழுச்சியும் என்னுள் ஊறத் தொடங்கும். பின் காமத்தின் முறுகல் உணர்வு தழைக்கும் வரை அந்த எண்ணத்திலேயே தோய்ந்துக் கிடப்பேன்.

அவன் அசைவுகளை நீங்கள் பார்த்தால் அவன் காமத்தின் போது எப்படி இருப்பான் என்று உங்களால் நம்பவே முடியாது. அந்த அளவுக்கு வெளிப்படையான முகமோ நேரடியாக உரையாடும் தன்மையுடைய முகமோ இல்லை. ஆனால் புணர்ச்சியின் போது அவன் முகத்தை எனக்குப் பிடிப்பதில்லை. ஏதோ ஓர் அவலட்சணமான மிருகம் தலையை வெளிக்காட்டுவதைப் போல கண்கள் அகலமாய்த் திறந்து கொள்ளும். அன்பும் ஈர்ப்பும் கலவாத ஒரு மிருகச் செயல்பாடாய் இருக்கும் போது அடர்ந்த மனக் காட்டுக்குள் ஒளிந்திருக்கும் மிருகங்கள் எல்லாம் தம் இனத்துடன் கண்களின் வழியே ஒன்று சேர்ந்து எட்டிப் பார்ப்பதாகவே தோன்றும். நான் என் கண்களை இறுக மூடிக் கொண்டு அவனைப் புணர்வேன். எனக்குள் என்ன மிருகம் ஒளிந்திருக்கிறது எனத் தேடிச் செல்லும் வேட்டையைப் போன்ற புணர்ச்சியாக அது இருக்கும். நிறைவற்ற ஒரு வேட்டையைப் போல தொடரும். கண்ணைத் திறக்கும் போது மிருகங்களின் புணர்ச்சியின் உச்சத்தில் பாதங்களை ஒடுங்கிக் கொண்டு கிறங்கும் அவன் கால்கள் நினைவிற்கு வரும். நகங்கள் பூமியைக் குத்திட்டு நிற்கும்.

பின்பக்கம் வயலில் ஏதோ அணக்கம் கேட்க எழுந்து சென்று ஜன்னலை திறந்தேன். வெயிலின் திரையினூடே ஒருவன் தன் கையில் குழந்தையை ஏந்திய வண்ணம் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான். மண்ணுடன் கையூன்றியிருந்த ஒரு குத்துச் செடியைப் போல அவன் அசைவு சிறியதாய் இருந்தது. அவன் குழந்தையுடன் ஏதோ பேசிக் கொண்டே வந்தான். இது வரை இப்படியான தனிமையான மதிய வேளைகளில் எவரையும் நான் எதிர் நோக்கியதில்லை. அங்கு காதுக்குக் கேட்கும் எல்லா சப்தங்களையும் அவற்றின் தொடர்புகளையும் நான் துல்லியமாக அறிந்திருந்தேன். ஆடுகளை ஓட்டிச் செல்லும் பெருமாளின் பத்து வயதுப் பையனும், அருகிலுள்ள ஓடையில் இருந்து நீர் ஏந்திச் செல்லும் பக்கத்துக் கிராமத்துப் பெண்கள் ஒவ்வொருவரையும் பெயர் குறிப்பிட்டும், மாட்டு வண்டியில் சந்தைக்குச் செல்லும் பரமசிவம் தாத்தாவையும், பள்ளிக்கு ஒருவரோடு ஒருவர் பந்தயமிட்டு தலை தெறிக்க ஓடிச் செல்லும் சிறுவர் சிறுமியரையும் எனக்கு நன்றாகத் தெரியும். ஏன் பறவைகளையும் வண்டுகளையும் கூட அவற்றின் சப்தங்களை வைத்து நானறிந்திருந்தேன். அணிலின் சப்தம் மெல்லிய விசிலைப் போல ஒலிப்பது எனக்குப் பிடித்தமானது. புறாவின் ஒலி என்னை வேதனைப் படுத்தும், நாயின் ஊளையைப் போல.

யோசித்து முடிப்பதற்குள் அவன் அருகில் வந்திருந்தான். திடுக்கிட்டு அவனை கவனித்தேன். தயக்கத்திற்கான தொனியுடன் அவன் தன் பெயரைக் கூறி, குழந்தைக்குக் குடிக்க பாலோ நீரோ கிடைக்குமா என்று கேட்டான். அவன் குரல் இறகசைவைப் போல் தொண்டையுடன் ஒட்டாமல் இருந்தது. நான் சந்தேகத்துடன் அவ்வப்பொழுது அவன் இருந்த திசையைத் திரும்பிப் பார்த்தவாறே உள்ளே சென்று ஒரு டம்ளரில் பால் எடுத்து வந்தேன். அதை என்னிடமிருந்து வாங்கிக் குழந்தையிடம் கொடுத்தான். குழந்தைக்கு மூன்று வயது இருக்கும். ஒடிசலாயும் திடமான கருத்த நிறத்திலும் இருந்தது. அது மிகுந்த பசியில் இருந்திருக்க வேண்டும். வாங்கி ஒரே மூச்சில் குடித்தது.

‘மன்னிச்சுக்குங்க.. நான் பக்கத்து ஊர்ல இருக்குற பஞ்சாயத்து ஆபிஸுக்கு மாற்றலாகி வந்திருக்கேன். இவங்க அம்மா இறந்துட்டாங்க. எனக்கு மாமியார் வீட்டுல குழந்தைய விட இஷ்டமில்ல. அதான் அம்மா வேலையையும் நானே பாத்துக்குறேன்.’

அவன் கண்களில் நிரந்தரமான ஒரு சிரிப்பும் பூரிப்பும் இருந்தது. சம்பந்தமேயில்லாமல் இறந்து போனவளின் துரதிர்ஷ்டம் பற்றிய சிந்தனை தோன்றியது.

‘தனியா இருக்கீங்களா?… அதான் உங்க முகம் இவ்வளவு கலவரத்தோட இருக்கு. சாரி… ஒங்க தனிமைக்குள்ள நுழையறதுக்கு. என் பெயர் தயா’ என்று சொல்லும் போதே குழந்தை தோப்பிற்குள் ஓடி ஒரு குட்டி நாயைக் கையில் அள்ளிக் கொண்டு நின்றிருந்தது. அதைப் பிசைந்தாற் போலிருந்த அதன் கையில் அந்த நாய்க்குட்டி பிதுங்கிய விழிகளுடன் இருந்தது. என்றாலும் கையிலிருந்து திமிராமல் அந்தக் குழந்தையின் மூஞ்சில் நாவால் கீழிருந்து மேலாய் நக்கி நக்கி எச்சிலாக்கியது. குழந்தைத் திணறி நாய்க் குட்டியைக் கையிலிருந்து நழுவ விட்டாள். பின் நாங்கள் நின்ற இடத்திற்கு ஓடி வந்தாள். நானும் தயா என்ற அந்த புன்னைகை ஓயாத முகமுடைய ஆளும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டோம்.

புதிதாய் சந்திக்கும் ஆட்களுக்கிடையே இருக்கும் அசெளகரியங்களை விரைவாய் அழிக்கும் குணங்கள் அவனிடம் இருப்பதாகப் பட்டது. அவனை திண்னையில் அமரச் சொல்லி விட்டு நீர் மோர் கொண்டு வர உள்ளே சென்றேன். வெளியே வரும் போது திண்ணையில் இருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் தன் குழந்தையைத் தூக்கி முகம் காட்டிக் கொஞ்சிக் கொண்டிருந்தான். நான் வரவும் குழந்தையைத் தரையில் விட்டான். நீர் மோரைக் கையில் வாங்கிக் கொண்டான். நான் வாயிலின் இன்னொரு புறமிருந்த திண்னையில் அமர்ந்து மோரைப் பருகத் தொடங்கினேன். குழந்தை மீண்டும் நாய்க் குட்டியுடன் தரையில் புரண்டு கொண்டிருந்தது.

‘அமுதாவுக்கு நாய்க்குட்டிங்கன்னா இஷ்டம். தெருவுல ஒரு நாய விட மாட்டா..’

நான் குழந்தை விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தென்னை மரக் கிளைகளூடே ஊடுருவிய ஒளிக்கீற்றில் ஒன்று குழந்தையின் மீதும் நாயின் மீதும் விழுந்து ஒரு தெளிவற்ற சித்திரமாய் அவர்கள் மாறியிருந்தனர். குழந்தையின் முகத்தை நாவால் தடவித் தடவி பேணிக்கொண்டிருந்தது நாய்க்குட்டி. ஒளியுடனான நிழலின் விளையாட்டைப் போலிருந்தது. அவன் எனது பக்கவாட்டிலிருந்து என்னை என் அசைவுகளை உன்னிப்பாய் பார்ப்பதாய் உணர்ந்தேன். அது எனக்குள் அவன் புகுந்து கொள்ளும் அவகாசம் போலவும் ஒரு பெண் உடலும் ஓர் ஆணின் உடலும் புதிய சூழலில் முதன் முறையாய் ஈர்க்கப் படுவதாயும் உணர்ந்தேன். எல்லா துளைகளும் மலர்ந்ததையும் உணர்ந்தேன். ஒரு மந்த காசம் பரவியது என் உடலெங்கும். காமம் இளகிய உணர்ச்சி உடலெங்கும் வேகவேகமாய்க் கிளர்ந்தெழுந்தது. ஒரு பெரிய மரமென தழைத்து எழுந்தது. சலசலத்தது. காற்றில் கிளைகள் கீறிக் கூவியது. பேயாட்டம் ஆடியது. ஆனால் பெருத்த வேரால் பூமியில் காலூன்றி நின்றது. என் உடலுக்குள் நான் கட்டுண்டு கிடந்தேன்.

‘அப்ப கிளம்புறோங்க.. ’என்று எழுந்தான்.

அவன் என் கண்களுக்குள் தொலைதூரம் வரை சென்று சேரும் ஒரு பார்வையை செலுத்தினான். நான் என் உணர்ச்சிகள் பட்டவர்த்தனமாய் ஆனதாய்க் கூசி தலையைத் தாழ்த்தினேன். அவன் குழந்தை எனக்கு கையசைத்துச் சென்றது. அவனுடன் என் உடல் தரையில் புரண்டு இழுபட்டதாய் உணர்ந்தேன். ஏன் இப்படி நிகழ்கிறது என்று புரியாத மனநிலையில் நின்ற இடத்திலேயே திண்ணையில் அமர்ந்தேன். ஒரு கனவும் காட்சியும் ஒன்றிசைந்தது போல் இருந்தது. அவன் இருந்த இடத்தில் ஒரு கைக்குட்டையை நழுவ விட்டுச் சென்றிருந்தான். நீல நிறக் கைக்குட்டை. எழுந்து அதை எடுத்து முகர்ந்து பார்த்தேன். மாம்பூக்களின் மணமே மேலோங்கியது.

மனோவிடம் அன்று மாலை தோப்பிற்கு வந்த ஒரு புதிய ஆளின் நுகர்வைப் பகிர்ந்து கொண்டேன். மனோ அதை அத்தனை சுவாரசியத்துடன் கேட்டுக் கொள்ள வில்லை.

’இந்த இடத்தில தான் இருக்கனும்னு பிடிவாதமா இருக்க. இவ்வளவு தனிமையும் அமைதியும் எனக்குப் பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு. அப்படியே இருந்து நீ மோகினியா மாறிடப் போற..’ என்று கிண்டல் செய்தான். குப்புறப்படுத்து உறங்கி விட்டான். அன்று நீண்ட நேரம் வரை இரவில் உறங்கவே இல்லை. வயல் நோக்கிய பின்ஜன்னல் அருகே படுத்திருந்து வானத்தையே பார்த்துக் கிடந்தேன். அடர் நீலத்தில் இருள் தோய்ந்த கருப்பு நிரவியிருந்தது எங்கெங்கும். விடியலில் கண் சொருகியது.

காலை எழுந்ததும் மனோ, ‘யாரது தயா..? தூக்கத்தில பேரச்சொல்லி புலம்புன’ என்று கேட்டு விட்டு என் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பிச் சென்றான். எனக்குள் நீந்தத் தொடங்கிய அந்தக் கண்களின் பெயர், குரலாகி விட்டது எச்சரிக்கை மணியானது. இது சரியில்லை என்றும் அவனை இனி நினைக்கவே கூடாது என்றும் முடிவெடுத்தேன். இதைக் குறித்து மனோ என்ன நினைத்தானோ என்று மனம் திக்கித்தது. அடுத்த நாள் மனோ வேலை அலுவலாக வெளியூர் செல்வதாக இருந்தது. அதற்கான ஏற்பாட்டில் எல்லா சிந்தனைகளையும் மூளையின் பின் ஒளித்து வைத்தேன். துணிகளை மடித்து வைக்கவும் வீட்டை சுத்தம் செய்யவும் என ஈடுபட்டேன். மனம் சுற்றி சுற்றி வந்து தயாவின் கண்களிலேயே நிற்க அந்தத் தேவையிலேயே நிலைத்துப் போனேன். ஏக்கம் துழாவியது. இது வரை இனிமையாக இருந்த தனிமை வெறுமையாகவும் புழுக்கமாகவும் ஏக்கமாகவும் மாறியது. உடலுக்குள் ஒரு பாரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருந்தது.

தயா ஒரு முத்தமேனும் கொடுத்துச் சென்றிருக்கலாம். உள்ளங்கையில். அதை ஒரு பூவை முகர்ந்து பார்ப்பது போலவே முகர்ந்து பார்த்து இன்புற்றிருக்கலாம் என்று தோன்றியது. அவன் என் பிரதேசத்துக்குள் மிகுந்த வேகத்துடனும் துல்லியமாகவும் பிரவேசித்தான். அதே வேகத்தில் அவன் வெளியேறியும் விட்டான். அணையாமல் சூரியனின் வெப்பம் போல் கனன்று கொண்டேயிருந்தது அவனது பிரவேசம். தகிப்பாய் உடலில் கருக்கொண்டு அவ்வப்பொழுது எழுந்தடங்கி என் தனிமைக் கணங்களை இன்னொரு வாழ்க்கையாக்கினான். நான் இரண்டு வாழ்க்கைக்குள்ளும் பருவ காலங்களைப் போல இடம் பெயர்ந்து கொண்டேயிருந்தேன். அவன் கனிவும் விசாலமும் எடுத்து வற்றாச் சுனையாகிக் கொண்டிருந்தான். என்னுடலுக்குள் சுருண்டு கொண்டான் தயா.

பொத்தையைச் சூழ்ந்து இனம் புரியாத ஓர் அச்சத்தின் அலை ஓயாது அடித்துக் கொண்டேயிருந்தது. அது எனக்குள்ளும் நுழைந்து என் இதயத்தில் ஓங்கி ஓங்கி அடித்தது. துடிப்பு அதிகமாகியது. இருள் என்னை உற்று நோக்கத் தொடங்கியிருந்த்து. என் மனதுக்குள் நிகழ்வதையெல்லாம் அதனால் ஒன்று விடாமல் புரிந்து கொள்ளவும் அதைச் செயலூக்கவும் முடியும் என்றும் நம்பினேன். ஆனால் என் மனச் சக்கரம் கட்டற்று சுழலும் கட்டத்தில் இருந்ததால் அந்த இருள் வெளியிலிருந்து தலைதெறிக்க நடந்தேன். உடலின் கனம் அதற்கு மேல் என்னை வேகமாக நடக்க விட வில்லை. மூச்சு இளைத்து அந்தப் பொத்தையில் என் மூச்சு கொடூரமாயும் பெரியதாயும் ஒலித்து என்னையே அச்சுறுத்தியது. இருளில் மறைந்திருக்கும் ஜீவராசிகளுக்கு அது கேட்டு விடக்கூடாது என்று மூச்சின் வேகத்தைக் கட்டுப் படுத்த முயன்று தோற்றுப் போனேன்.

தொடர்ந்த முயற்சியில் வீட்டின் வாயிலுக்கு வந்து நின்றேன். விளக்கு அற்று வீட்டின் முன்பகுதியில் இருள் கொட்டிக் கிடந்தது. தடவி நகர்ந்து சென்று ஸ்விட்சைப் போட்டேன். திண்ணையிலிருந்த நாற்காலியில் மனோ உட்கார்ந்திருந்தான். திடுக்கிடலில் மூச்சே நின்று போனாற் போல இருந்தது.

’எங்க போன? எவ்வளவு நேரம் தேடறது?’, கோபப்பட்டான்.

’வாக்கிங் போனேன்…’

‘சாயங்காலம் வாக்கிங் போக வேனாம்னு எத்தன தடவ சொல்றது. எப்ப பாத்தாலும் கொலை நடந்துக்கிட்டே இருக்கிற ஊரு. ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா எவன் பதில் சொல்றது.’ அவன் குரலும் சொல்லும் இப்பொழுதெல்லாம் என்னோடு ஒட்டுவதில்லை. எனக்குள் உயிர்கள் கிடந்து அல்லாடுவதில் நானும் அவனைப் பொருட்படுத்துவதில்லை.

இரவு தூக்கம் என்னை முந்திக் கொண்டு வந்தது. கனவில் தயா என்னை நோக்கி இரு கைகளையும் நீட்டினான். அவனிடம் நான் காணாத ஒரு பரிதவிப்பு இருந்தது. அவனை நோக்கி நான் ஓடினேன். உடலின் ஒவ்வொரு பகுதியும் அவனோடு பொருந்தியவாறு அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டேன். உடல் முன்னும் பின்னும் அசையத் தொடங்கியது. ஒரு வலி மண்டையிலும் முதுகெலும்பிலும் தோன்றி உடலின் அங்கமெல்லாம் பரவியது. நின்றவாறே புணர்ந்தான். உதிரம் தொடைகளின் வழியே வழியத் தொடங்கியது. புணர்ச்சியின் உச்சம் ஆனந்தமாகியது. மனோ என் கன்னத்தைத் தட்டி எழுப்பினான். கண்களை மிகவும் சிரமப்பட்டுத் திறந்தேன். இமைகளின் திரையில் இன்னும் கனவுகளின் காட்சி ஓடிக் கொண்டிருந்தன.

அவன் கண்களை நோக்க விரும்பாது நான் கண்களை மூடினேன். சில கைகள் என்னை தூக்குவதையும் ஒரு மெத்தையில் படுக்க வைப்பதையும் உணர்ந்தேன். தயா என்னை அவனிடமிருந்து விடுவித்தான். தயாவின் மந்த காசம் பொன்னிற ஒளியுடன் என் முகத்தின் முன்னுள்ள வெளியில் பரவியது. என் ஆனந்தம் பெருகியது. என் காமக் களிப்பும் அதன் உச்சமும் தொடர்ந்து கொண்டிருந்தது. புணர்ச்சியின் உச்சம் போலும் என் கால்களை அடித்து உதைத்தேன். இரு கைகள் என் தொடைகளைப் பிளந்தன. சில நிமிடங்களில் ஒரு சிசுவின் பீறிட்ட குரல் என் இமைகளுக்கு வெளியே கொட்டிக் கிடந்த ஒளியைக் கூசும் வெள்ளொளியாக்கியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *