கதிரேசன்களின் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: August 8, 2012
பார்வையிட்டோர்: 11,339 
 

‘‘ஆட்டோ ஸ்டாண்டாண்ட ஒரு பையன் ப்ளூ கலர் தொப்பி வெச்சுக்கிட்டு நிப்பான். உங்களை அவன் அடையாளம் கண்டுக்குவான். அவனை ஃபாலோ பண்ணிட்டே வீட்டாண்ட வந்துருங்க. லேட் பண்ணிராதீங்கப்பா, அப்புறம் எங்க மாமா வந்துருவாரு…’’ மொபைலில் குழைந்த அந்தக் குரலை ஹனி வாய்ஸ் என்பதா முனி வாய்ஸ் என்பதா..?

கதிரேசன் இருந்த நிலைமைக்கு அந்த எழவெல்லாமா முக்கியம்?

நேற்று இரவு மூன்று குவாட்டர் குடித்துவிட்டு, ‘‘இவளுகள்லாம்.. ந்தா ந்தா இதுக்குச் சமானம்’’ எனத் தன் தலையிலிருந்தே ஒற்றை முடி பிடுங்கிக் காற்றில் ஊதியவன் கதிர்.

அந்தக் கசப்பு இன்னும் தொண்டையிலேயே டாப் படித்து நிற்க, இல்லாத எச்சி லைக் கூட்டிக் கூட்டி ரோட்டில் துப்பிக்கொண்டே இருந்தான். கொஞ்ச நேரம் மூளையென்ற ஒன்றே இல்லாதது போல் தோன்றியது.

தனது பெயரென்ன, என்ன கலர் சட்டை போட்டிருக்கி றோம், எங்கிருந்து வந்தோம், எங்கே இருக்கிறது வீடு, இது எந்த ஏரியா என அடுக்கடுக்காக நினைத்துப் பார்த்து ஒன்றும் தெரியாமல், தலையைத் தாறு மாறாக உதறினான். ‘டேய்… நீ கதிரு, போட்ருக்க சட்டை காபிக் கொட்டைக் கலரு. பொறப்பட்ட இடம் பூங்கா நகரு. போறது பெரம்பூரு. மவனே கண்டமாயிருவ…’ என அவனுக்குள்ளேயே இருக்கிற எதிரி ஒருவன், எதுகை மோனையில் எகிறி அடக்கி வைக்க… கதிருக்குக் கண்கள் கலங்கின. நெஞ்சு முட்டி, தொண்டையில் பஞ்சடைத்து விம்மல் வெடித்தது. ‘யம்மா… யம்மா…’ என யாருமற்ற நிழற் குடையின் கம்பியில் முகம் மூடி அழுதான். நழுவிய கண்ணீர்த் துளிக்குள் சிரித்துச் சிரித்து உதிர்ந்தாள் செண்பகா.

கண்களை மூடினான். அரை யிருட்டு முற்றங்களில் கொலுசு மணிகளால் ‘கதிர் கதிர்’ என அழைத்தபடி களுக்களுக் சிரிப்பைச் சிந்திக்கொண்டே ஓடினாள். அவன் தவித்துத் துரத்துகிறான். சட்டென்று நின்று ‘கதிர், ஐ லவ் யூடா! என்னை மறக்க மாட்டியே…’ என தலை சாய்த்து, கை நீட்டி அழைக்கிறாள். அவன் அவளைத் தாவி அணைக்க… ‘கைமா ஆயிருவடா கஸ்மாலம்… ஒழுங்கா ரோட்டப் பாத்து நட…’ – ஒரு ஆட்டோக்காரரின் தெய்வ வாக்கு நடுரோட்டில் நிலைகுலைந்து நடனமாடிய கதிரைப் பம்படித்து நிறுத்தியது.

‘‘ச்சீய்! இப்ப எதுக்கு அந்த சண்டாளி நெனப்பு? இப்ப மட்டுமா… எப்பப் பார்த்தாலும் அந்தப் பாதகத்திதானே இப்படித் துரத்தித் துரத்தி அடிக்கிறா. அந்த செண்பகா வைச் சாவடிக்கத்தானே தேவியைத் தேடி பெரம்பூர் போறேன். ஆமா, தேவி எப்படி இருப்பா? படத்துல, பத்திரி கைல பார்க்கிற மாதிரி மூஞ்சில முக்கா கோட்டிங் ரோஸ் பவுடர், ஜிவுஜிவுன்னு லிப்ஸ் டிக், மட்டமான சென்ட் வாசனைனு இருந்துரக் கூடாது சாமீ. அன்னிக்கு செந்திலு சொன்னானே, அப்படி குட்கா வாயோட, எஃப்.எம். கேட்டுட்டே ‘ந்தா தொணதொணங் காம சட்டுனு கௌம்பு. ஏட்டு வந்துருவாரு பேமானி’ன்னு சொல்லி ரக் கூடாது. சிகரெட்டெல்லாம் பிடிக்கிறவகிட்டே சிக்கிட்டா அவ்வளவுதான். இப்ப என்ன பெருசா கேட்டுட்டோம். அது எப்படின்னா… பருத்திப் புடவை கட்டியிருந்தா, போதும். மேக்&அப்லாம் வேணாம். பளிச்சுனு ஒரு முகம், கொஞ்சூண்டு பவுடர் வாசம், ரெண்டு இன்ச்சுக்கு மல்லிப் பூ வெச்சிருந்தா போதும். ‘என்னடா கண்ணா, என்னம்மா உனக்குப் பிரச்னை? வாடா செல்லம்’னு என் நெத்தில முத்தம் கொடுக்கணும். அள்ளி அணைச்சுக்கணும். ‘என்ன இது… வயிறெல்லாம் ஒட்டிப்போயி ருக்கு. சாப்பிடலையாடா நீ?’ன்னு ஓடிப் போய் சாதம் பிசைஞ்சு எடுத்துட்டு வரணும். ஸ்கூல் டைம்ல எடுத்த ப்ளாக் அண்ட் வொயிட் குரூப் போட்டோ காட்டி ‘இதுல நான் எங்கே இருக்கேன்னு கண்டுபிடி பார்க்கலாம்?’னு கேட்கணும். அவகிட்டே நான் என் செண்பகாவைப் பத்தி சொல்லி அப்பிடியே அழுவணும். ‘என் றெக்கையைப் புடுங்கிக் காது குடைஞ்சுக்கிட்டே போயிட்டா. எனக்குன்னு ஒரு அன்பு இல்லவே இல்ல தேவி!’ன்னு அழணும். ‘நான் இருக்கேன்டா!’னு எனக்குத் தெரியாம தேவி எனக்காக அழுவாள்ல, அந்த ஒரு துளிக் கண்ணீர்ல முக்கி செண்ப காவை நான் சாவடிச்சிருவேன்…’’ & குறுக்குச் சந்துகளில் குலுங்கிய ஆட்டோவுக்குள் தேவியைப் பற்றிய சித்திரங்களில் மிதந்திருந்தான் கதிரேசன்.

அவனுடைய நண்பன்தான் தேவியின் மொபைல் நம்பரைத் தந்து முன்கூட்டியே பேசியும் உதவினான். செண்பகா அவனை ஏமாற்றிச் சென்று விட்டாள். கருமணி பாப்பாக்களில் உருவத்தைப் பொறித்து, உறக்கத்தைப் பிரித்து… சிரித்துச் சிரித்து சிறகை விரித்துப் பறந்துவிட்டாள். காதலின் மழை ஞாபகங்களில் இப்போது துரோகத்தின் குருதி வழிந்தது. வானுயர்ந்த சோலையில், யாருமற்ற பாதையில் அலைந்த கதிரேசனை நிறுத்தி, மூன்று குவார்ட்டர்களில் மூழ்கடித்து ‘‘டே மச்சான்… சும்மா தினம் தினம் சாவாத. உன்னை ஏமாத்தினவளை நெனைச்சு அழுதா, அப்புறம் நீ என்னடா ஆம்பள? நான் சொல்றதைக் கேளு. ஒரு தடவை போயிட்டு வா… ரிலீஃபா இருக்கும்’’ என நண்பன் வழங்கிய அருளுரையில் ரத்தம் சூடாகி, தேவியைத் தேடி தீர்த்த யாத்திரை!

ரப்பரும் மீனும் கலந்த வாசத்தில் பெரம்பூரின் குறிப்பிட்ட தெரு வந்தது. தெரு முக்கு ஆட்டோ ஸ்டாண்ட் போர்டில் விஜய்யை முந்தியேவிடுவது போல் அஜீத் ஆவேசமாக நடந்தார். ப்ளூ கலர் தொப்பியுடன் ஜூனியர் தேவதூதன் டைகர் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். ஒரு நொடி நின்று கதிர் உற்றுப் பார்க்க, பையன் முகத்தில் ‘வா மாப்ளே’ என்பதாய் சினேக பாவம். ப்ளூ கலர் தொப்பி காற்றில் மிதந்து அவனை வழி நடத்தியது. சட்டென்று ஒரு மின்னல் சொடக்கு மேஜிக்கில் பையன் மறைந்தான். சற்றைக்கெல்லாம் அங்கிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பின் மூன்றாம் மாடி ஜன்னலில் ப்ளூ தொப்பி ஆடியது. சிலப்பதிகாரத்தில் கோவலன் கூடல் நகரில் நுழையும்போது கம்பத்துக் கொடிகள் காற்றிலாடி ‘வாரல் என்பது போல் மறித்துக் கை காட்ட…’ என்பாரே இளங்கோவடிகள், அப்படி ஆடியது தொப்பி.

சாயம் போன குடியிருப்பு. வாசல் மாடத்தின் கம்பிச் சிறைக்குள் மேரி மாதா, பிள்ளை இயேசுவைச் சுமந்து நிற்க, அப்போதுதான் அணைந்த மெழுகின் கரிப்புகை காற்றில் சுடரின் கனவை எழுதிக்கொண்டு இருந்தது. நிலைக்கு மேல் பிள்ளையார் படம். காளி படம். யோகம் வரவழைக்கிற கழுதை படம்.

காலிங் பெல்லை அழுத்தினான் கதிர். ‘க்க்க்கிர்ர்ர்ரீங்’ எனக் காதில் ஆஸிட் அடித்த மாதிரி கதறியது அது. ‘ஐயே… இனிமே வந்தா கதவைத் தட்டுங்ணா’ என்றபடியே கதவைத் திறந்து உள்ளே இழுத்தான் பையன் . சாம்பிராணிப் புகை. சின்ன ஹாலில் பெரிய அழுக்குத் துணி மூட்டை. மார்கோனியின் குரல் ஒலிக்குமோ எனப் பீதியுறவைக்கும் மெகா சைஸ் பழைய ரேடியோ செட். ஒரு புத்தம் புது கலர் டி.வி. செல்ஃபில் வகை தொகையில்லாத சாமிப் படங்கள். எந்த விதிப்படி இந்த வீடு இயங்குகிறது என்று கதிருக்குப் பிடிபடவில்லை. அரையிருட்டில் இருந்த அறையை எட்டிப் பார்த்தவனுக்குப் பகீரென்று இருந்தது. சுவரில் ஒரு மனிதன் நிற்பது போலவே தொப்பி, சட்டை& பேன்ட்டை மாட்டி முகப் பகுதியில் மீசையெல்லாம் வரைந்துவைத்திருந் தார்கள். சுற்றி சோகையாய் மினுங்கும் நாலைந்து சீரியல் லைட்கள். இது வரை அவன் காணாத நிறத்தில் ஒரு வெளிச்சம் அறையை நிறைத்திருந்தது. கிட்டத்தட்ட கோயில் திருவிழா நாடகங்களில் பபூன் வரும்போது மட்டும் ஒரு தனி லைட்டிங் செட் பண்ணுவார்களே, அப்படி ஒரு ஒளியமைப்பு.

கட்டிலில் புன்னகையுடன் அமர்ந் திருந்தாள் தேவி. அது மோனோலிஸா போல் இருந்தது என்றால் லியானர்டோ டாவின்ஸி கடுப்பாகி, சித்ரகுப்தனுக்கு லஞ்சம் கொடுத்து நரகத்தில் கதிரைப் போட்டு வறுக்க ஒரு எண்ணெய் அடுப்பை ரிசர்வ் பண்ணக்கூடும். ஆனால், அவன் பயந்தது போலும் இல்லை. நினைத்த மாதிரியும் இல்லை. சின்ன பவுடர் பூச்சு. மாநிறம். கருவளையமிட்ட கண்களில் ததும்புவது சோகமா, நெடு வழி நிழலுக்கான ஏக்கமா, தெரியவில்லை. ஆரஞ்சு வண்ண சில்க் புடவையில் தேவிக்கு ஒரு தனி அழகு இருந்தது. அவனுக்கு செண்பகா வின் முகம் ஏதேதோ வண்ணங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளாக வந்து வந்து போனது. திடீரெனத் திரும்பி விடலாமா எனத் தோன்றியது.

‘‘ஏன் தாடி வெச்சிருக்கீங்க… லவ் ஃபெயிலியரா..?’’& ஓபனிங்கிலேயே கதிர் இந்த டயலாக்கை எதிர் பார்க்கவில்லை. கலங்கினான். அடிப்பாவி செண்பகா… கண்ணுக்குத் தெரியாத நாமக்கட்டியால் என் மூஞ்சியெல்லாம் உன் பெயரை எழுதிப் போய்விட்டாயாடி, போடி போ!

குழம்பி நின்றவனை தேவி அழைத் தாள். ‘‘அட… இங்க வந்து உக்காருங்க’’ எனக் கரம் பற்றி இழுத்து, வலப் பக்கம் இடம் தந்தாள். கதிருக்கு உடம்பு லேசாக நடுங்கத் தொடங் கியது. ஜன்னல் வழியே தெருவில் தன்னை அழைத்து வந்த பையன் காத்தாடி விட்டுக்கொண்டு இருப்பது தெரிந்தது.

‘‘என்ன, பதிலே சொல்லலை. லவ் ஃபெயிலியரா?’’

‘‘மாமா… மாமா எப்ப வருவாரு?’’

‘‘அதுவா… இதோ இங்க சீரியல் லைட்ல நின்னுக்கினுக்கீதே, இதான் என் மாமா. அது எப்பவோ பூடுச்சு. சிலபேரு குடிச்சுப்புட்டு கண்ட நேரத்துல வந்துருவானுங்க. அதான் மாமா வந்துருவார்னு சொல்லுவேன்’’ & சுவரில் மாட்டியிருந்த சட்டை &பேன்ட்டைக் காட்டிச் சொன்னவள், ‘‘அத்தவுடு… உன் மூஞ்சியே சொல்லுது… என்னவோ பிரச்னைன்னு. அதான் கேக்குறேன்ல…’’

‘‘அதான் சொல்லிட்டியே லவ் ஃபெயிலியர்னு. எப்பிடித் தெரியுமா லவ் பண்ணோம். அது எப்பிடிங்க இந்தப் பொண்ணுங்க மட்டும் தடார்னு தூக்கிப் போட்டுட்டுப் போயிர்றாளுங்க. பேச்சு… சிரிப்பு… தொட்டுக் கட்டிப்பிடிச்சு ‘நீதான்டா நீதான்டா!’ன்னு டயலாக் விட்ட தெல்லாம் என்னாச்சு? நினைப்பே இருக்காதா… இல்ல, தெரியாமதான் கேக்குறேன்…’’& ஏதேதோ பேசிய கதிரேசனின் உடம்பு இன்னும் தடதடக்க, தேவி அவன் தலை கோதினாள். முத்தமிட்டாள். ஆண்டு விழா டிராமாவில் கட்டபொம்மன் வசனத்தைக் கரெக்ட்டாகப் பேசிவிட்ட எல்.கே.ஜி. பையனை கிளாஸ் மிஸ் வாஞ்சையோடு பார்ப்பாளே, அப்படி ஒரு பார்வை.

செண்பகா பற்றி சொல்லத் தொடங்கினான் கதிரேசன். அவள் காதுகளுக்கு இது எத்தனையாவது காதல் கதை என்பதை அவன் அறிய மாட்டான். தனக்கே தனக்கான கடலின் மூச்சைச் சுமந்து வரும் சங்கென செண்பகாவின் காதல் கதையைக் கண்ணீர் மினுங்க கைகளில் ஏந்தி நின்றான் கதிரேசன். செண்பகாவுடனான கடைசி சந்திப் பைச் சொல்லும்போது, கிழிந்த அவனது இதயத்திலிருந்து ஒரு துளி ரத்தம் தேவியின் விரல்களில் தெறித்தது. அவள் உதட்டுச் சுழிப்பில் சிறு புன்னகை எட்டிப் பார்த்தது.

கொலுசுக் கால்களுடன் உள்ளே போய் தண்ணீர் எடுத்து வந்தாள். கூடவே ஒரு புகைப்படம். அது மேடையில் எம்.ஜி.ஆர். கெட்&அப்பில் ஒருவர் செம ஸ்டைலாக ஒரு பெண்ணை அணைத்திருக்கிற படம். படத்தைப் பார்க்கிறபோதே பின்னணியில் டி.எம்.எஸ்&ஸின் குரல் ஒலித்து, வியர்வையும் ரோஸ் பவுடருமான வாசம் வந்து போனது.

‘‘ஐயே… நானுந்தான் லவ் பண்ணேன்…’’ – அந்த போட்டோவைக் காட்டிச் சிரித்தாள். ‘‘இந்தப் பொண்ணு நாந்தாம்பா. மேக்-அப்ல அடை யாளமே தெரியலைல்ல… இவரைத் தான் லவ் பண்ணேன். ரெண்டு வருஷம் இவர்தான் எம்.ஜி.ஆர், நாந்தான் மஞ்சுளா. ஊருக்கு ஊர் டான்ஸாடுறதுதான் அப்போ தொழிலு. ரொம்ப லவ் பண்ணோம்பா. அப்புறம் பிரச்னை… இந்தாளுக்கு வேற பொம்பளையப் புடிச்சுப்போச்சு. கண்ணாலம் பண்ணிட்டுப் பூட்டாரு. போனவரு போய் நல்லாவா இருந் தாரு… கொஞ்ச நாள்லயே நோவுல வுழுந்து ஒரேயடியா பூட்டாரு. அவரு சம்சாரம் பொழப்புக்கு வழியில்லாம நின்னுது. இந்தா உன்னைய இங்க இட்டாந்தானே பையன்… அவங்க பையந்தான். நாந்தான் வளர்க்கிறேன். எல்லாத்தையும் நினைச்சிக்கினேருந்தா வாழவா முடியும்..?’’& தேவி அவன் கைகளைப் பற்றி இழுத்தாள்.

கதிரேசனுக்கு என்னவோ ஆயிற்று. அந்தக் கணம் விழுந்து எழுந்த பேரருவியில் செண்பகா எங்கோ அடித்துச் செல்லப்பட்டாள். மலையுச்சியில் நின்று அவன் ‘ஹோ ஹோ’வென வெற்றிச் சிரிப்பு சிரித்தான். தேவி மேல் அன்பு பொங்கியது. காதலின் பெருந்தகிப்பை உணர்ந்தான். அந்த வெப்பத்தில் அன்பின் பேருருவம் அசையக் கண்டான். துயரத்தை ஈர மணலாக்கி எடுத்துக் கட்டி இறைவனி டமே கொடுத்துவிடுகிற தருணமா இது என நெருக்கி அணைத்து தேவி யின் காதுகளில் சொன்னான், ‘ஐ லவ் யூ தேவி!’

பட்டென்று அவனை எட்டித் தட்டிவிட்டாள் அவள். ‘‘ஐயே! இது வேணாம். எனக்கெல்லாம் ஒரு லவ் ஃபெயிலியர்தாம்பா…’’ – தள்ளி விழுந்த வனைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித் தாள். கடகடவென பெருங்குரலெடுத் துச் சிரித்தாள். அடக்க மாட்டாமல் சிரித்தாள். ஒரு கணம் அதிர்ந்தான். சட்டென்று எழுந்தான். பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து டேபிளில் உதறினான். அவள் கூப்பிடக் கூப்பிட வேக மாய் இறங்கி தெருவில் நடக்க ஆரம்பித்தான். தேவி இன்னும் சிரித்துக் கொண்டு இருப்பதாய் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

வெளியான தேதி: 22 அக்டோபர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *