Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஒரு காதல், மூன்று கடிதங்கள்

 

கடிதம் – 1:

அன்பின் ஷிவ்,

நலம். நலமறிய அவா என்றெல்லாம் தொடங்குவது அவ்வளவு சிறப்பாக இருக்காது. அதிகாலையில் உன்னுடன் அவ்வளவு நேரம் பேசிவிட்டு இப்போது கடித இலக்கணம் கருதி ‘நலமா’ என்று ஆரம்பித்தால் அது நகைப்புக்குரியதாகத் தான் இருக்கும். உன்னைப் போலவோ உனக்குப் பிடித்த வண்ணதாசன் போலவோ கடிதத்தைக் கூட கவிதையாய் எழுதும் கலை எனக்கு அவ்வளவாக கைவராது. அது உனக்கும் தெரியும். தமிழைப் பொருத்தமட்டில் என்னுடைய வாசிப்புப் பழக்கமெல்லாம் வார இதழ்களின் வண்ணப் பக்கங்களோடு நின்று போய்விட்டது.

இருக்கட்டும்.

உன் மனதில் ஓடும் கேள்வி எனக்குப் புரிகிறது. இதுவரையில் இல்லாத புதுப் பழக்கமாய் என்னதிது மின்னஞ்சல் போக்குவரத்து ? இதுதானே. எல்லா விஷயங்களையும் எதிருள்ளவரின் முகம் பார்த்துப் பேசுவது என்பது அவ்வளவு சுலபமில்லை. அதேபோன்றது தான் தொலைபேசி வழி உரையாடுவதும். அதன் பொருட்டே இந்த மின்னஞ்சல். நான் சொல்லப் போகும் செய்தியைக் (ஆம் அது உனக்குச் செய்திதான். வெறும் தகவல்தான் ) கேட்டுவிட்டு நீ அடையும் அதிர்ச்சியை தழைவிக்கும் பொறுமையையோ, அதன் பின் நீ தொடுக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் பக்குவத்தையோ உன் கடவுள் இன்னும் எனக்கு அருளவில்லை.

உனக்கு நினைவிருக்குமானால், நான் ‘டென்வர்’ வந்த மூன்றாம் நாளில், இங்கே இருக்கும் அலுவலகத் நண்பர்களைப் பற்றிக் கூறும் பொழுது ஜாக் என்னும் ஜாகஸ் மெரில் என்ற என் நண்பனைப் பற்றிக் கூறியிருப்பேன். ஆறடி உயரத்தில், எப்போதும் சிரிப்புடன். அலுவல் நிமித்தமாக அயல்தேசம் வந்த எனக்கு அந்த நாளிலிருந்து, இன்று வரை மதிப்பும், தைரியமும், நம்பிக்கையும் கொடுத்து வந்த ஜாக் சென்ற சனிக்கிழமையிலிருந்து என் அறையைப் பகிர்ந்து கொள்கிறான். பதற்றம் வேண்டாம். நாங்கள் இருவரும் வாழ்வையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம்.

திரையில் ஓடும் ஆபாசப் பாடல்களை குடும்பத்தோடு கைதட்டிப் பார்த்து ரசித்துவிட்டு, கடையில் ஒரு காண்டம் வாங்குவதற்கு அத்தனை கூச்சப்படும் தமிழ்ப் பண்பாட்டில் திளைத்துப் போன உனக்கு இந்தச் செய்தி அறுவறுக்கத் தக்கதாகவும், இன்னும் சொல்லப் போனால் ஆபாசமானதாகவும் தான் தோன்றும். அப்படியில்லை என்றால்தான் ஆச்சரியம். இந்நிலையில் எங்களுக்கிடையேயான நேசத்தை விளக்கிச் சொல்லி மட்டும் ஒன்றும் ஆகப் போவதில்லை. புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன். இல்லாவிட்டாலும் நஷ்டமில்லை.

நமக்குத் திருமணமான கடந்த 8 மாதங்களில் நான் உன்னை வேண்டி கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். விவகாரத்து. மேலும், இந்த மின்னஞ்சல் பார்த்தவுடன் அலைபேசியில் என்னை அழைத்து அழவேண்டாம். ஆர்பாட்டம் ஏதும் வேண்டாம். எந்தவித அல்ப ஜாலங்களும் வேண்டவே வேண்டாம். முக்கியமாக உன் அப்பா அம்மாவிடமோ, என் அப்பா அம்மாவிடமோ இதுபற்றி இப்போதைக்கு எதுவும் கூற வேண்டாம்.

இப்போதைக்கு நீ செய்ய வேண்டியதெல்லாம் இதற்கு பதில் எழுதுவது மட்டுமே.

நீங்கா அன்புடன்,
சுச்சி.

* *

கடிதம் – 2:

சுச்சி,

இதோடு பதின்னெட்டாவது முறையாக நீ அனுப்பிய மின்னஞ்சலை வாசித்துவிட்டேன். பரவாயில்லை. கவிதை வராவிட்டாலும் கடிதம் உனக்கு கட்டு குழையாமலே வந்திருக்கிறது. நன்றாக யோசிக்காமல் நீ இந்த முடிவு எடுத்திருக்க வாய்ப்பில்லை என்றே அறிகிறேன். இதன் பின்விளைவுகள் எத்தனை பேர் வாழ்வில் பிரதிபலிக்கக் கூடும் என்பதையும் நீ அறிவாய் என்றே நம்புகிறேன். குறிப்பாக உன் தங்கை மேனகா.

நம் முதலிரவில், நமக்குள் பரஸ்பர புரிதல் வேண்டும் என்று கூறி நீ தள்ளிப் படுத்தபோதுதான் உன் மீதான என் ப்ரியம் பேருருபம் எடுத்தது. ஆனால் அதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. அப்போது என் மனதில் நீ நின்றிருந்த உயரமே வேறு. அதற்கான அருகதை உனக்கு அணு அளவும் இல்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டேன். தாமதம் தான்.

அதன்பின் திருமணமாகி அடுத்த ஐந்தே மாதங்களில் அலுவல் நிமித்தம் அமெரிக்கா செல்ல வேண்டும் என்று நீ கூறிய போது கூட, அது நம் இருவரின் எதிர்கால நலம் போற்றும் நோக்கம் என்பதாகவே புரிந்து கொண்டேன். இப்படி என்னைவிட்டு நீ ஒதுங்கியிருந்த வேளைகளில் எல்லாம் நானாக ஏதேதோ அர்த்தப்படுத்திக் கொண்டேன். ச்ச எத்தனை முட்டாய் இருந்திருக்கிறேன்? என் மீதுதான் எனக்கு வெட்கமாக இருக்கிறது.

அதிகமில்லை. ஒரே ஒரு கேள்விதான். இன்று இதைச் சொல்லும் நீ, ஏன் நாம் முதன்முதலில் சந்தித்த உனக்கு மிகப்பிடித்த அந்த “ரெயின் ஃபாரெஸ்ட்” ரெஸ்டராண்ட்டிலேயே சொல்லியிருக்கக் கூடாது?. போகட்டும்.

பண்டம் மாற்றுவது போல உடல் பிண்டம் மாற்றிக் கொள்ளும் நாகரிகத்தின் உச்சம் தொட்ட நாட்டில் இருக்கும் உனக்கு நம் நாட்டுக் கலாச்சாரம் ஆச்சரியப் படுத்துவது ஒன்றும் ஆச்சரியமில்லை. கட்டிய மனைவியை கண்போல போற்றும் அப்பாவிற்குப் பிறந்த நீ இத்தனை சுலபமாக அமெரிக்கக் கலாச்சாரம் பேசுவதுதான் உண்மையில் ஆச்சரியம். அதுவும் ஐந்தே மாதத்தில். இருந்தாலும் இது உன் சுதந்திரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை.

மேலும் உங்களுக்கிடையேயான அந்த உறவின் உன்னதத்தைக் கேட்டு அறிந்து கொள்வதற்கு இங்கு யாரும் வரிசையில் நிற்கவில்லை.

இதை நான் யாரிடமும் சொல்லப் போவதில்லை. வெட்கக் கேடு. நீயும் ஜாக் பற்றிக் கூறாமல் இருப்பதே அனைவருக்கும் நலம். நம்மிடையே புரிதல் சுகமில்லை என்பதையே விவாகரத்திற்குக் காரணமாகக் கூறிக் கொள்ளலாம். எனக்கு ஆட்சேபணையில்லை. அதே நேரத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, அன்பைப் பிச்சையாகக் கோரும் நிலைக்கு நான் இன்னும் தள்ளப்பட வில்லை. அப்படியொரு நிலைமை வந்தால் கூட உன் முன் வந்து நிற்கும் நிலைக்கு என் கடவுள் என்றும் விடமாட்டார்.

அடுத்து நீ இங்கே வரும் போது உனக்கான விவாகரத்து பத்திரம் தயாராக இருக்கும். அது நம் இதுவரையிலான நட்பிற்கு என்னாலான சிறு காணிக்கை.

என்றும் நட்புடன்,
ஷிவ்.

* *

கடிதம் – 3:

அன்பின் ஷிவ்,

மின்னஞ்சல் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி. எத்தனை கூர்மையான வார்த்தைகள்? என்னைப்பற்றி எந்த அக்கறையும் கொள்ளாத எவரைப் பற்றியும் எனக்கும் அக்கறையில்லை. என்னை நீயாவது புரிந்து கொள்வாய் என்று நினைத்தேன். பரவாயில்லை.

முன்பே சொல்லியிருக்க வேண்டும். தவறு என்னுடையதுதான். மன்னித்துக் கொள். மாற்றிக் கொள்ள முடியும் என்று நினைத்தது என் முட்டாள்தனம்.

தமிழையும், தமிழ் நாட்டையும் ஏதும் சொல்லிவிட்டால் உன்னில் வெளிப்படும் அந்த உக்கிரம் எனக்குப் பிடித்திருக்கிறது. யாரைப்பற்றி யார் என்ன கூறினாலும் நான் என்னவோ அவ்வளவு பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அப்படியே பழகிவிட்டேன்.

ஜாக் உதவியால் இங்கேயே பணி நிரந்தரம் செய்து கொள்ளலாம் என்றிருக்கிறேன். இப்போதைக்கு இந்தியா வரும் எண்ணமேதுமில்லை. வேற்றுக் கிரகவாசி போல என்னைக் கொத்தித் தின்னும் சர்ப்பமொத்த கண்களையுடைய யாரையும் சந்திக்க விருப்பமில்லை. என் அப்பா அம்மா உட்பட.

இங்கு கிடைக்கும் சுதந்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த நாடு என்னை “நானாகவே” ஏற்றுக் கொள்கிறது. இங்கு எந்தவித முகமூடியும் தேவையில்லை. ஏற்று கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை அங்கே போல் எகத்தாளம் செய்யாமலாவது இருக்கிறது. அதற்காக இந்த நாட்டிற்கும், எனதருமை ஜாக்கிற்கும் கடமைப் பட்டிருக்கிறேன்.

பிச்சை என்பதெல்லாம் பெரிய வார்த்தை. உனக்கு விருப்பமிருந்தால் எப்போதும் நம் நட்பைத் தொடரலாம்.

நீங்கா அன்புடன்,
சுச்சி.

* *

பின் குறிப்பு : இந்த மின்னஞ்சல் போக்குவரத்து நடைபெற்று ஆறு மாதங்கள் கழித்து, இந்திய திருமணச் சட்டம் 1976, செக்ஷன் 13 பி- யின் படி, சுச்சி என்ற சுசீந்திரனுக்கும், ஷிவ் என்ற ஷிவ் தர்ஷினிக்கும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் விவாகரத்து வழங்கப் பட்டது. 

தொடர்புடைய சிறுகதைகள்
துளித்துளியாய் வியர்வை கோர்த்து, நெற்றிப் பாறையில் ஒரு குட்டி அருவியாய் ஓடி என் காதுப் பள்ளத்தில் பாய திடுக்கிட்டு எழுந்தேன். தலைக்குப் பின்புறம் இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்த ஏர் கூலர், மின்சாரம் தடைப்பட்டு நின்றிருக்கிறது. காரை பெயர்ந்து விழுந்துவிடும் நிலையிலிருந்த விட்டத்தை சில ...
மேலும் கதையை படிக்க...
மழை அப்போது தான் பெய்யத் தொடங்கியது. ஏ.ஆர்.ரகுமான் இசை போல மென்மையாக ஆரம்பித்து அட்டகாசமாய் அதிரத் தொடங்கியது. எனக்கு எப்போதுமே மழையை ரசிக்க மட்டுமே பிடிக்கும், நனையப் பிடிப்பதில்லை. மழைக்கு முந்திய குளிர்ந்த தென்றலும், மழை பெய்யும் பொழுது எழும் மண்வாசமும், ...
மேலும் கதையை படிக்க...
பெய்யாமல் படுத்தும் மழை அவ்வப்போது பெய்தும் படுத்துவது சென்னை வாங்கி வந்த வரம். புழுக்கமும் புழுதியும் அப்பியிருக்கும் வீதிகள்,சென்னையின் அடையாளக் குறிப்புகள். அப்படியொரு வீதியின் ஓரம் அமைந்திருந்தது அந்த டீக்கடை. அய்யப்பன் டீக்கடை, ராமராசு டீக்கடை என்று டீ போடுபவரின் பெயரால் ...
மேலும் கதையை படிக்க...
மூன்றாவது முறையாக விஷ்ணுவின் மொபைல் ஒலிக்கத் தொடங்கிய போது அவனால் எடுக்காமல் தவிர்க்க இயலவில்லை. அதுவும் அழைத்தது ஸ்ருதியாக இருக்கும் போது. " ஹே... சொல்லுமா.. " " .................. " " இல்ல இல்லடா.. கொஞ்சம் ஒரு சின்ன வேலையா இருந்தேன். அதான்.. அத ...
மேலும் கதையை படிக்க...
யாராவது உனக்குப் பிடித்த மாதம் எதுவென்று கேட்டால், கேள்வி முடியும் முன்னே என்னிடமிருந்து வரும் பதில் 'டிசம்பர்' என்பதாகத்தான் இருக்கும். கார்த்திகை மழையும், மார்கழிக் குளிரும் இணைந்து வரும் இந்த மாதம் தரும் ஏகாந்தம் அலாதியானது. கடந்து போன ஆண்டின் நிறைந்து ...
மேலும் கதையை படிக்க...
வழிப்போக்கன்
மழை
பொதுப் புத்தி
உதயசூரியன்
வேப்பமரத்து வீடு

ஒரு காதல், மூன்று கடிதங்கள் மீது 4 கருத்துக்கள்

  1. nila says:

    நைஸ் ஸ்டோரி . புரிதலின் அடிப்பாதையில் இருவருக்கும் பிரிதல் என்பது தவறானது அல்ல.சரி வராத பட்ஷத்தில் பிரிவது தான் உத்தமம்

  2. Anitha manoharan says:

    அருமையான கதை..எதிர்பாராத முடிவு…இரண்டாம் முறை வாசிக்க தூண்டியது…

  3. Payas Ahamed says:

    brilliant

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)